பாட்டல் ராதாக்களின் கதை - ஈரோடு கதிர்


கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அடுப்புகளை, பற்ற வைக்காமல் திறந்துவிட்டு, தீப்பெட்டியோடு திரும்புகிறாள். எதிரில் நிற்கும் பிள்ளைகள் முன் மண்டியிடுகிறவள், ”ரெண்டு பேரும் அம்மாகூட வந்துடுறீங்களா!?” எனக்கேட்க ”‘எங்கம்மா, தாத்தா வீட்டுக்கா?” எனக் கேட்கும் மகளையும் மகனையும் அணைத்தபடி கதறுகிறாள். பாட்டல் ராதா திரைப்படத்தில், குடி நோயாளியின் மனைவி தற்கொலைக்கு முனையும் காட்சி இது. 

இன்னொரு தருணத்தில் ”அப்படியே குழந்தைங்களோடு கொளுத்திக்கலானு நினைச்சேன். அப்புறம் உன்னை மாதிரி ஆளுக்காக ஏன் சாகனும்னு தோணுச்சு!” எனும் அஞ்சலம், தாலியை கழற்றி கணவனின் கையில் வைத்துவிட்டு, ”போதுன்ற அளவுக்கு குடி. அப்படியே விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு செத்துடு. நாங்களாவது நிம்மதியா இருப்போம்” என உறுதியான வேறொரு முகம் காட்டுகிறாள். இது சினிமாவில் வரும் அஞ்சலம் முகம் மட்டுமல்ல. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகளின் முகம்.

எதிரிகளின் மரணத்தை ஒருவர் வேண்டுவதைவிட, குடி நோயாளிகளின் மரணம், அவரை மிகவும் நேசித்த குடும்பத்தாரால் மிக அதிகமாக ஒருகட்டத்தில் வேண்டப்படுகின்றது எனும் உண்மை அவ்வளவாக ரசிக்க முடியாதது. ‘செத்து தொலைஞ்சிட்டாக்கூட நாங்க எப்படியாச்சும் நிம்மதியா இருந்துடுவோம்’ என்று பல தருணங்களில் வெகு எளிதாகச் சொல்வதைக் கேட்க முடியும்

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் குடி நோயாளிகளாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அவர்களில் எழுபது லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலையில் உள்ளனர். குடிப்பதால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கின்றது. அது எந்தளவு ஆதாரப்பூர்வமானது எனத் தெரியவில்லை என்றாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

பாட்டல் ராதா, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஒரு குடி நோயாளியின் கதை. படத்தில்  குடி மீட்பு மையம் மற்றும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA-ஏஏ) அமைப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். சமீபத்தில்தான் ஏஏ அமைப்பு குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது

2023 ஆகஸ்ட் 7-ம் தேதி காலை ஆறரை மணி சுமாருக்கு, நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது கல்லூரி நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்று கொண்டிருந்தேன். தேதியும் நேரமும் துல்லியமாக நினைவில் இருக்கக் காரணம், முந்தைய தினம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘வாழ்தல் அறம்’ தலைப்பில் பேசியிருந்தேன். அந்த உரையைக் கேட்டுவிட்டுத்தான் அவர் அழைத்திருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு பேசுகிறோம். உரை குறித்து, தமக்கு நெருக்கமாக உணர்ந்தது குறித்துப் பேசியவர், தன் கடந்த காலக் கதையைச் சொல்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது யாரையும் சந்திப்பதையோ, யாருடனும் உரையாடுவதையோ தவிர்ப்பவன் நான். மனசு முழுக்க நிகழ்ச்சி குறித்த கவனம்தான் இருக்கும். ஆனால் அன்று பேசினேன். அந்த உரையாடல் பின்வரும் நாட்களில் அற்புதங்கள் செய்யப்போவதை அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு ஏறத்தாழ சம வயதுதான். பள்ளிப் படிப்பு, குடும்பச் சூழல், நட்புகள், படிப்பை தொடராமல் வேலைக்குச் சென்றது, தொழில், திருமணம் எனும் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான காலத்தில் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. குடி நோயாளியாகவும் மாறியிருக்கின்றார். சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், இழப்புகள் ஏராளம். எதுவும் அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாதவை.

பலபேர் தனித்தனியே அனுபவிக்க வேண்டிய சவால்கள், வேதனைகள், அவமானங்கள், போராட்டங்களை குடி நோயாளிகள் தனி நபராக அனுபவித்து விடுகின்றனர் என்பது ஒருபோதும் அவர்களுக்குப் புரிவதில்லை. புரியும்போது பலருக்கும் காலம் கடந்து விடுகின்றது.

ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அவருடைய கடந்த காலம் இன்னும் மிச்சம் இருந்தது. நான் கிருஷ்ணகிரி தாண்டியிருந்தேன். மாலை பேசிக்கொள்ளலாம் என அப்போதைக்கு தொடரும் போட்டோம். பாதிக்கப்பட்டதைக் கேட்டாயிற்று, மீண்டது எப்படி எனும் ஆவல் எனக்குள் ஊஞ்சலாடிக்கொண்டேயிருந்தது.

மாலை உரையாடல் தொடங்கியது. பல அனுபவங்களைப் பகிர்ந்து இறுதியாக, குடியின் உக்கிரத்தில் இருந்தபோது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏஏ) கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைக்கப்பட்டு, அதன் வாயிலாக மீண்டதைச் சொன்னார். 

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குறித்து மேலோட்டமாகக் கேள்விப்பட்டதுண்டு. அவர் மூலமாக விரிவாக அறிந்துகொள்கிறேன். ஏஏ குடி நோயிலிருந்து மீண்டவர்கள், மீள விரும்புகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் உலகளாவிய அமைப்பு. அவர்கள் இயங்கும் முறை, யாரெல்லாம் அதில் உறுப்பினர்கள் என்பதுள்ளிட்ட  விபரங்களை அவர் கூறவில்லை. அந்த அமைப்பிற்குள் சென்று, ஒட்டுமொத்தமாக மீண்டு, அதில் தற்போது அவரும் பங்களிப்பதைச் சொன்னார். அவர் சென்றிருந்த எல்லையிலிருந்து, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் முற்றிலும் சிதைந்திருந்த நிலையிலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஏஏ நிகழ்விற்கு நீங்கள் ஒருமுறை வந்து பாருங்கள் என்று  அழைத்தார். ஏறத்தாழ அனைத்து பெரு நகரங்களிலும் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு, குறிப்பாக ஈரோட்டில் அனைத்து நாட்களிலும் கூட்டம் நடைபெறுவதாக் கூறினார். 

சில மாதங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் தம் உறவினர் குடி நோயாளியாக இருப்பதைக் கூறி சைக்கியாட்ரிஸ்ட் யாரையேனும் பரிந்துரை முடியுமா எனக் கேட்க, எனக்கு ஏஏ நினைவுக்கு வந்தது. நண்பரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் நிலைமையைச் சொல்லி, சரி வருமா எனக்கேட்டேன். வரச் சொல்லுங்க சரியாகிவிடுவார் என நம்பிக்கை அளித்தார். 

ஆனால், எனக்கு நம்பிக்கை வரவில்லை. காரணம், அவர் காலையில் நான்கு மணிக்கே குடியைத் தொடங்கிவிடுகிறவர். மாட்டுக் கொட்டகை, மோட்டர் ரூம், குப்பை மேடு, புதர், வாழை, இளம் தென்னை மரங்களின் மட்டைகள் என புழங்கும் இடமெங்கும் பாட்டில்களை பதுக்கி வைத்து குடிப்பவர். குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடினாலும், அவர் தொடர்ந்து வைத்துக் கொண்டேயிருப்பார். நாள் முழுக்க போதையில் இருப்பவர். உறவினரிடம் ஏஏ குறித்து நான் கேள்விப்பட்டதைக் கூறி, கூட்டத்திற்குச் செல்வாரா எனக் கேட்டேன்.

அவருக்கும் முழு நம்பிக்கை இல்லையென்றாலும், அந்தக் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். எப்படியாவது குடி நிறுத்தப்படவேண்டும் என்பதால், எதையும் செய்யத் தயாராக அவர்கள் இருந்தனர். அவரிடமே ஒப்புதல் வாங்கி ஞாயிறு மாலை செல்லவதாக, முதல் நாள் இரவு தெரிவித்தனர். நான் நண்பரிடம் ஞாயிறு அன்று கூட்டம் நடக்கும் இடம் மற்றும் சந்திக்க வேண்டியவரின் விபரங்கள் பெற்று வழங்கினேன். 

அடுத்த நாள் மாலை செல்லலாம், அவருக்கு நிச்சயம் நல்லது நடக்கும் எனும் மெல்லிய நம்பிக்கையோடு குடும்பம் உறங்கச் சென்றது. ஆனால் விடியல் அவர்களுக்கானதாக இல்லை. காரணம் விடியும் முன்பே அவர் ஆரம்பித்துவிட்டார். குடும்பம் சோர்ந்து போனது. ஏஏ நண்பரை அழைத்து நடந்ததைச் சொன்னேன். சற்றும் சுணங்காமல் அடுத்த கூட்டத்திற்கு வர வையுங்கள் என்றார்.

 குடும்பம் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றது. அவரே என் உறவினரை அழைத்து அடுத்த கூட்டத்திற்கு போகிறேன் என ஒப்புதல் அளித்திருக்கிறார். குடும்பம் அழைத்துச் சென்றது. என்னவோ மாயம் நிகழ்ந்தது. குடியை நிறுத்தி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு மிக நெருங்கிய நட்புகள் அமைந்தன. தினமும் ஃபோனில் பேசுவது, கூட்டங்களுக்கு கொண்டாட்டமாக செல்வது என அவருக்கு புதியதோர் உலகம் அமைந்தது. குடும்பம் மிகப் பெரிய நிம்மதியை அடைந்தது. 

பிறிதொரு தருணத்தில் ‘ஏன் அந்த முதல் ஞாயிற்றுக்கிழமை குடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, ‘எப்படியும் குடியை விடச் சொல்லுவாங்க, கடைசியா ஒருமுறை குடிச்சிட்டு விட்டுடலாம்னு குடிச்சேன்!’ எனச் சிரித்திருக்கிறார். மது இல்லாமல் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் இருக்கிறார்.

இன்னொருவர், ஒரு சாமானியன் சினிமாவில் வெற்றி அடைவதைப்போல் இருபது ஆண்டுகளில் யாரும் கற்பனை செய்ய முடியாத வளர்ச்சியடைந்தவர். அதில் பிற்பாதியில் மதுப்பழக்கம் வளர்ந்தது. அனைத்தும் முதலீடாக இருந்ததால் பொருளாதாரத்தில் சிக்கல் இல்லை. குடும்பத்தில், உறவுகளில் காயம் ஏற்பட்டது. பிள்ளைகள் தவித்தனர். இரண்டு முறை டீ-அடிக்‌ஷன் மையத்திற்குச் சென்றும், குடியை விடமுடியவில்லை.

அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இரவுகளில் அவரின் ஃபோன் அழைப்புகளைக் கண்டு அனைவரும் எரிச்சல் அடைந்தனர், கூடவே கேவலாமாகப் புறக்கணித்தனர். உச்சபட்சமாக பள்ளியில் படிக்கும் மகனோடு மிகக் கடுமையான சண்டை ஏற்பட்டது. உடல் நிலையிலும் கணிசமான அச்சம் ஏற்பட்டது.

எனக்குத் தெரியவந்தபோது, அந்த ஏஏ நண்பர் மூலம் தமிழகத்தின் பெரு நகரம் ஒன்றில் உள்ள ஏஏ ஆர்வலர் ஒருவருடைய தொடர்பைப் பெற்று வழங்கினேன். அவரை சென்று சந்தித்தனர். அவர் அரசு உயர் பதவியில் இருந்தவர், குடியிலிருந்து மீண்டவர். சுமார் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு, கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஒப்புதல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர். 

வரும் வழியில் எதுவும் பேசமால் ஆழ்ந்த யோசனையில் இருந்தவர், அடுத்த நாள் காலை, இனி குடிக்கமாட்டேன் என வீட்டில் அறிவித்திருக்கிறார். அதனைக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரேயொரு உரையாடலில் இப்படி நிறுத்துவது முடியுமா, நிலைக்குமா எனும் சந்தேகம் இருந்தது. ஆச்சரியம் பேராச்சரியமானது. பல மாதங்களாக தொடர்ந்து குடிக்காமல் இருக்கிறார். 

குடி நோயாளியாக இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, ‘குடியை விட்டுடு!’ என அறிவுறுத்தியிருக்கிறார். அவர் ஆச்சரியமாகப் பார்க்க “இதெல்லாம் எப்படி உருவாக்கினேனு உனக்குத் தெரியும். ஒருகட்டத்தில் இது எதுவுமே என் அடையாளமாக இல்ல. குடிகாரன்தான் என் அடையாளமாக இருந்துச்சு. ஊர்ல யார் மதிச்சு, மதிக்காம என்ன, என் பையன் என்னை மதிக்கல. எப்படியாச்சும் நிறுத்தி தொலையனும்னு நினைச்சப்ப, ஒரு கூட்டத்துக்கு வான்னு சொல்லி ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவரு ரெண்டு மணி நேரம் பேசினார். நல்லதுக்குத்தான் பேசினார். பேசினது காதில் விழுந்துச்சு. நான் யாரு, இந்த ஆளெல்லாம் அட்வைஸ் பண்ற நிலையில நான் இருக்கேனேனு மட்டும்தான் மனச அறுத்துச்சு. அப்ப முடிவு பண்ணினேன். நிறுத்திட்டேன். இப்பதான் என் அடையாளம் எனக்கே தெரியுது” என்றிருக்கிறார்.

உடைவதற்கும் உயர்வதற்கும் ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு போதும் எனும் வரிதான் நினைவுக்கு வருகின்றது.

பாட்டல் ராதா படத்தில் ஏஏ கூட்டங்கள், வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டதும், இந்த இரண்டு பேரின் மாற்றங்களுக்கு நினைவுக்கு வந்தன. நான் இதுவரை ஏஏ கூட்டத்தில் கலந்துகொண்டதில்லை. நண்பர் வந்து பார்க்கச் சொல்லி அழைத்துக்கொண்டேயிருக்கிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு பேரின் மாற்றங்களும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. 

தேவையுள்ளோர், அந்தந்தப் பகுதியில் நடக்கும் ஏஏ அமைப்பின் நிகழ்வுகளை விசாரித்து, தங்களுக்கு சரி வரும் என்று உணர்ந்தால், நம்பிக்கையிருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். குடி நோயிலிருந்து மீள்வது சிலருக்கு உடனே நிகழலாம், சிலருக்கு ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

குடியில் சிக்குண்டு தவிப்போரைப் புறந்தள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களாக, நோயாளிகளாகக் கருதி, அவர்களுக்குப் பொருத்தமான, சரியான உதவியைப் பெற்றுக் கொடுத்துவிடுதல் அனைவருக்குமான விடுதலையாக இருக்கும்.


சாரதிகள் - மகேஸ்வரி மதன்



சமீபத்திய என் சென்னைப் பயணத்தில், இரு cab ஓட்டுனர்களைச் சந்தித்தேன்.நம்மைப் போன்றவர்கள் சென்னையின் எந்தப் பகுதிக்கும் செல்ல, நம்பி ஏறிட உதவும் ஒரு நிகரில்லா சேவை இந்த Cab சேவை. அவர்களுடனான அனுபவம் உங்களுக்காக.

அந்த நாளில் சென்னையில் தோழியின் வீட்டிலிருந்து பல்கலைக்கழகப் பயணம். இணையம் வழியாகப் பதிவு செய்த வாகனத்தில் பயணம் துவங்கியது. 45 நிமிடங்கள் காட்டியது app. முதல் கால்மணி நேரம் வெளியே வேகமாய் நகரும் அனைத்தையும் பார்த்தபடி அமைதியாய் தொடங்கியது. போக்குவரத்து அதிகமாக இருந்ததால், கால தாமதம் ஆகுமென்று நினைத்தபடி ஓட்டுனரிடம் கேட்டேன். சரியான நேரத்திற்குச் சென்றுவிடலாமென சன்னமான குரலில் தண்மையாகச் சொன்னார். அவருக்குப் பின்னால் அமர்ந்தபடி “இந்த ஊருங்களா?” என்றேன். “Yes ma'am” என்றார். மேலும் சில கேள்விகள், அதற்கான பதில்கள்.  ஆங்கிலமும் தமிழும் அழகாக வந்தன. சென்னை வட்டார வழக்கு சற்று அதிரடியாகவே இருக்கும். “ங்க” அதிகம் புழங்கும் எனக்கு  சென்னை வட்டார வழக்கு சற்றே தூரம்தான். இந்த ஓட்டுனருக்கோ அழகான உச்சரிப்பு. சரியான slang என்று அந்த சிறு உரையாடல் உணர்த்தியது. "இங்கே எங்கே?" என்றேன். "வடபழனி" என்றார். உச்சரிப்புத் தெளிவாக இருந்ததைப் பாராட்டி, அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பேரார்வம் எழ, கேட்டுவிட முடிவு செய்தேன். "ஆங்கில உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது. என்ன படித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். இளங்கலை முடித்திருப்பதாகக் கூறினார். அவர் பேச்சில் தெளிவும் நிதானமும் வாகனம் இயக்குவது போல மென்மையாக இருந்தது. மிக நேர்த்தியாக வாகனத்தை வைத்திருப்பதும், அதன் இயக்கமும் சொந்த வாகனம் என்பதைச்  சொல்லாமலே சொன்னது. கேள்வி பதில்கள் உரையாடலாக மாறி இருந்தது. "தொழில் எப்படிப் போகிறது?" என்று கேட்டேன். பெரும்பகுதி commission ஆகப் போவதாகத் தோய்வான குரலில் கூறினார். "ஆங்கிலம் கல்லூரியில் கற்றதா?" என்ற கேள்வி தன்னிச்சையாக வந்தது. அதன்பின் நடந்த உரையாடல் அனுபவத்தின் வெளிப்பாடு. 

சுற்றுலா சார்ந்த சுயதொழிலில் 15 வருட அனுபவம் கொண்டவர். இணையம் இல்லா காலம் முதல், இணையம்தான் எல்லாமும் என்று மாறிய காலம் முன்பு வரை சென்னை சுற்றுலாதான் இவரின் தொழில். வாரத்தில் 3-4 நாட்கள் வெளிநாட்டவர்களோடு பயணம் இருக்குமாம். மீனம்பாக்கத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம் புதுச்சேரி வரை தொடர் பயணம் இருக்கும் என்றும், பல்வேறு நாட்டினர் வந்தாலும், ஆங்கிலம்தான் உரையாடல் மொழியாக இருந்ததாகவும், அதுவே இவரின் ஆங்கில உச்சரிப்பிற்குக் காரணமெனவும் கூறினார். சுற்றுலா என்பது அவர்களைப் போன்றவர்களின் கைகளிலிருந்து நழுவியது குறித்தும், இணையம் ஒரு தொழிலை முழுதாக மாற்றியது பற்றியும், தங்களின் வாழ்வாதாரம் சரிந்தது பற்றியும் விளக்கினார்.

30 வருட அனுபவம் இத்துறை சார்ந்தே இருந்ததாலும், வேறு தொழில் தெரியாது என்பதாலும் cab ஓட்டுனராகத் தொடர்வதாகக் கூறினார். கேள்விகளும் பதில்களுமாக வாழ்க்கை அனுபவத்தையும், சுற்றுலாத் துறை சார்ந்த மாற்றங்களையும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். சரியான நேரத்திற்கு பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தோம். அவரின் உச்சரிப்பிற்கு மீண்டும் வாழ்த்துச் சொல்லி, மலர்ந்த சிரிப்போடு விடைபெற்றோம். 

வேலைகள் முடித்துப் பயணம். மாலை 4 மணிக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து தோழி வீட்டுக்குச் செல்ல மீண்டும் app மூலமாகப் பதிவு செய்தாயிற்று. வாகனமும் வந்தது. காலை ஒரு வாழ்வின் அனுபவம் கிடைத்ததால், இப்போது கூடுதல் உற்சாகம். ஓட்டுனருக்கு 30 வயதிற்குள் இருக்கும். நான் பின்னிருக்கையில் அமர்ந்த பிறகு OTP எனக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். திரும்பிக் கூட பார்க்கவில்லை. புகைப்பிடித்த நெடி வாகனத்தில். ஒழுங்கற்ற ஒரு வாகனம் என்பது பார்த்த நொடியிலேயே தெரிந்தது. பத்து நிமிட வேடிக்கைக்குப் பின்னர் எங்கள் ஓட்டுனர் எழுப்பிய ஹாரன் சத்தத்தில் அதிர்ந்து போனேன். அதுமட்டுமா?... உள்ளேயும் வெளியேயும் ஏக வசனங்கள். இது முற்றிலும் வேறு அனுபவப் பயணம் என்று உணர்ந்தேன். ஓட்டுனரை உற்றுப் பார்த்தேன், இம்மி அளவு கூட  அவர் திரும்பவே இல்லை. சிறிது நேரத்தில் அவர் dashboard ல் இருந்த ஒரு தொடுதிரை அலைபேசியில்  அமைதியாய் ஒரு விளம்பரம் ஓடிக்கொண்டு  இருந்தது. வாகனம் இயக்கும்போது எப்படி காணொளி பார்க்க முடியும் என்று எண்ணினேன். விளம்பரம் முடிந்து ஏதோ ஒரு சீரிஸ் ஓடியது. அதிர்ந்து போனேன். அதைக் கேட்க எத்தனிக்கையில் இன்னொரு அலைபேசியில் அழைப்பு. சாதாரணமாக எடுத்து, காதில் மாட்டி இருந்த Bluetoothல்  பேசத் துவங்கினார். இவ்வளவு நேரமும் அதன் உதவியோடு சீரிஸ் பார்த்து / கேட்டு வாகனத்தையும் இயக்கி இருக்கிறார். அசௌகரியம் சூழ்ந்தது.  ஒருபுறம் பேச்சு, இன்னொரு திரையில் காணொளி, வாகன இயக்கம் என அவர் தன்போக்கில் போய்க்கொண்டே இருந்தார். “தம்பி” என நான் அழைத்தது கேட்கவில்லையா இல்லை பொருட்படுத்தவில்லையா என்ற குழப்பம் எனக்கு வந்தது. கடும் எரிச்சல் கோபமாக மாறியது. மீண்டும் அழைத்தேன். 

“என்ன madam?” என்றார். தொடுதிரையில் காணொளி பற்றிக் கேட்டேன். சீரிஸ் என்றார். "வாகனம் இயக்கும் போது இது எப்படிச் செய்யலாம்?" என்றேன். பதில் இல்லை. காது கேளாதவர் போல அமர்ந்திருந்தார். மீண்டும் கேள்வி எழுப்பினேன். காணொளியை நிறுத்தினார். எப்போது வீடு வருமென appஐ எட்டிப் பார்த்தேன். 10 நிமிடம் காட்டியது. உள்ளே இருந்த கோபத்தைக் காட்ட முடியா இயலாமையில் அமைதியாய் இருந்தேன். இறங்கி, பணம் செலுத்தி, அவர் முகம் பார்த்தேன். திரும்பாமல், கடமையை முடித்தார். வாகனம் நகர்ந்ததும் முதல் வேலையாக app மூலம் poor rating இட்டு, குறிப்பினை எழுதி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் சென்றேன். அவரிடம் சொல்ல முடியா எல்லாவற்றையும் கேள்வியாக்கி தோழியின் பிள்ளைகளிடம் முறையிட்டேன், என்னைக் கலாய்த்துவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.

இவ்விரு cab ஓட்டுனர்களும் ஒரே வேலையைத்தான் செய்தார்கள். ஆனால், இருவரும் வெவ்வேறு திசையானவர்கள். ஒருவர் தன் வேலையை விரும்பி, பயணிப்பவர்களின் சௌகரியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்தார். இன்னொருவரோ, பயத்தை உருவாக்கினார். திறமையான ஓட்டுனர் என்பவர், பயணிக்குப் பயம் வராமல் பார்த்துக் கொள்பவரே. 

ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை நினைவுக்கு வருகிறார். பயணிக்கு என்ன தேவை இருக்கும் என்பதை யோசித்து, அத்துணையையும் தன் ஆட்டோவில் வைத்தார். மற்றவர்களிடமிருந்து தனித்த சேவைகள் கொடுத்து, பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, சேவை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோலையும் கொடுத்திருக்கிறார். பயணிகளின் நிறைவான பயணத்தை அவர்கள் மீது காட்டும் அக்கறையால் அறிந்துகொள்ள முடியும். பயணிகள் நீண்ட கால வாடிக்கையாளராக மாற வாய்ப்புகளும் அதிகம். ஓட்டுனர்கள் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடப்பதும்,  அணுகக்கூடியவராகவும் இருத்தல் அவசியம். பயணிகளின் விருப்பங்களைப் புரிந்துகொள்வதும், கூர்ந்து கேட்பதும், மேலும் விவரங்களைக் கொடுப்பதும், தேவை எனில் வழிகாட்டிடச் செய்வதும், சிறந்த சேவையாக இருக்கும். எச்சூழ்நிலைகளையும்  அமைதியாகக் கையாள்வது மிகவும் அவசியம். 

வாழ்விற்கும்  வாழ்க்கை முறைக்காகவும் ஓடும் இந்த ஓட்டம்தான் எத்தகைய நகர்வுகளைக் கொண்டது?!. ஓட்டுனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் ஒரே நாளில் பதில் கிடைத்தது.


நிகழ்காலத்தின் புன்னகை - ஈரோடு கதிர்

 


ஒவ்வொருவருக்கும் நட்பும் உண்டு பகையும் உண்டு. சில நட்புகள் எப்படி உருவானது என்றே தெரியாது, அதேபோல்தான் சில பகைகளும். ஏன், எப்படி, எதற்காக உருவானது எனத் தெரியாமலே அதன் போக்கில் வளர்ந்து நிற்கும். பகை என்றதும் நாடுகளுக்கு இடையில் நிகழும் யுத்தம், மனித உறவுகளுக்கு இடையில் உருவாகும் பிரிவு என்றெல்லாம் எளிதாகத் தோன்றிவிடலாம். இது அம்மாதிரியான பகை குறித்து அல்ல. தம்முடன் மற்றும் தமக்குள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பகை குறித்தே.

தமக்குள் பகையா எனும் கேள்வி வரலாம். ஒருவர் நினைப்பதற்கும் - செய்வதற்கும், விரும்புவதற்கும் - அடைவதற்கும், இருப்பதற்கும்- வாழ்வதற்கும் இடையே இயல்பாக ஏற்படும் முரண், தொடர்ந்து வளரத் தொடங்கினால் அது வேர் விட்டு வளர்ந்து பகையென கிளை பரப்பிவிடும்.

சற்று சிந்தித்துப் பார்த்தால், நமக்குள் ஏற்பட்ட முரண்கள், முரண்களாக மட்டுமே இருக்கின்றனவா அல்லது பகைகளாக மாறிவிட்டவனா என்பது புரிந்துவிடும். பலர் என்னிடம் உரையாடும்போது, அவர்களை அறியாமல் வெளிப்படுத்துவது, அவர்களுக்கு அவர்களோடு இருக்கும் பகை குறித்துதான். தாம் வளர்த்து வைத்திருப்பது தம்முடனான பகை என்பதை அறியாமலே பலரும் இருப்பதுண்டு. 

உரையாடும் எல்லாரிடமும், அதனை வெளிப்படையாகப் புரியும்படி உணர்த்திவிட முடிவதில்லை. காரணம், அதனைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை என்பதாகவே உணர்த்துவார்கள். நேரம் இல்லை என்பது மிக எளியதொரு தப்பித்தல். புரிந்துகொள்ள முடியாதது என்பது பெரும்பாலும் நேரம் தொடர்பானது கிடையாது. மனம், அறிவு மற்றும் தேடல் தொடர்பானது.

சமீபத்தில் ஒரு மாலை நேரம், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றினை முடித்துவிட்டு, வாகனத்திற்கு வந்தேன். வாகனத்தை இயக்கும் முன், சில மணி நேரமாக அணைத்து வைத்திருந்த இணையத்தை உயிர்ப்பித்தேன். இடைப்பட்ட நேரத்தில் அனுப்பப்பட்டு காத்திருப்பில்  இருந்த சொற்கள் வந்து விழத் தொடங்கின. சொற்கள் என்பவை செய்திகள், தகவல்கள், விசாரிப்புகள், கேள்விகள் மற்றும் பதில்கள் என பல வடிவம் கொண்டவை. அவற்றில் தேவையில்லாதவை சில. ஆனாலும் அவை நம்மை வந்து சேரத்தானே செய்யும். அப்படி வந்து சேர்வதை எந்த மட்டத்தில் நிறுத்துவது என்பது அவரவர் தெரிவு. வந்திருந்தவற்றை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டவைகளில் ஏறத்தாழ எல்லாமே வீட்டை அடைந்த பிறகு, வாசித்தால் போதும். ஆனால் ஒன்று மட்டும் கவனத்தை ஈர்த்தது. அது சில வாரங்களுக்கு முன்பு உரையாடல் தொடங்கியவரிடமிருந்து வந்திருந்தது. திறந்தேன்.

”சார் கொஞ்சம் நாளா பல நேரங்களில் வாழ்க்கையே தோல்வி அடைந்துவிட்டது அப்படின்னு பயமா இருக்கு சார். இந்த எண்ணம் போவதற்கு என்ன செய்வது சார்!”

அவருக்கு சவால் மற்றும் தோல்வி இருப்பது உண்மைதான். முதல் வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். நேரம் இருந்தால் பேசலாம் என்று பதிலளித்துவிட்டு புறப்பட்டேன். சில நிமிடங்களில் அழைப்பில் வந்தார். அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், சொல்லாமல் பொதுவான உரையாடலாக ஆரம்பித்தேன்.

அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், பொதுவான என்னுடைய கேள்விகளும், , அதற்கு வந்த பதில்களுமென உரையாடல் தொடர்ந்தது. தாம் அனுப்பியது குறித்து நான் நேரடியாக எதுவும் கேட்கவில்லையே என்ற சிந்தனை அவருக்குள் இருந்திருக்கலாம். அதை உரையாடுவதுதான் என் நோக்கமாக இருந்தாலும், அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்தவாறு, அதனைத் தொடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். சில காலமாக அவரைக் கவனித்த வரையில் இரண்டு செயல்களை நான் உணர்ந்திருந்தேன். 

ஒன்று, தன்னை தொடர்ந்து கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குள் புதைத்துக்கொள்வது. குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவம். இன்று வாழும் சூழல் அந்தக் குழந்தைப் பருவத்திற்கு முற்றிலும் நேரெதிரானது. இது அவருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானதுதான். இந்த நிகழ்காலம் அவருக்கு அவ்வளவாக பிடிக்காமலும் இருக்கலாம். என்னிடம் பகிர்ந்தவரையில் அவரின் நிகழ்காலத்தில் சில இயலாமைகள், தோல்விகள் மற்றும் காயங்கள் உண்டு. சொல்லப்படாதவை இன்னும்கூட இருக்கலாம். 

அப்படியான காரணங்களால், நிகழ்காலத்தில் இயங்குவதைவிட, நிகழ்காலத்தை எதிர்கொள்வதைவிட, ஏதோ ஒருவகையில் கடந்த காலத்தின் அவருக்குப் பிடித்ததொரு தருணத்தில் புதைத்துக்கொள்வது சற்றே சமாதானத்தைக் கொடுத்திருக்கலாம். இம்மாதிரியான சமாதானம், ஆசுவாசங்களுக்காக செய்ய வேண்டாத பலவற்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்து வருவோம்.

அவரிடம் நான் அறிந்த இன்னொன்று, தன்னுடைய நிகழ்காலத்தை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள். அவற்றில் ஒருவித இயலாமை, சோகம், இறுக்கம், புதிர் தன்மை, தெளிவற்ற நிலை, இருண்மை தனித்தோ பிணைந்தோ இருப்பதுண்டு. பெரும்பாலும் வலிக்குள் அமிழ்த்தி, இருளைக் கயிறாக்கி இழுக்க முயற்சிப்பதுபோல் இருக்கும். அங்கிருந்து அடையாளமற்ற ஏதோ ஒன்றுக்கு தகவல் பகிரும், சவால் விடும் முனைப்பிருக்கும்.

அவரின் அந்த இரண்டு இயல்புகளையும் தொடாமல், உரையாடலைத் தொடர்கிறேன். உரையாடல் என் வசம் நீடிக்க, சிறிது நகைச்சுவை மற்றும் கேள்விகளைக் கொண்டு நகர்த்துகிறேன். உரையாடல் பலம் அடைந்ததும், அவர் எதிர்பாராத கணத்தில் நிகழ்காலத்தைவிட கடந்த காலத்தில் உழல்வதில், ஒருவித இருண்மைக்குள் தன்னை அடைப்பதில் இருக்கும் வசதிகள் யாதென கேட்டேன். சரியாக நாடி பிடித்துக்கேட்டது, சற்றே வியப்பினையோ, மெல்லிய அதிர்ச்சியையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

எதிர்பார்த்தவிதமாகவே பதில்கள் வந்தன. எதிர்பார்த்த விதமாக ஒன்று அமைகின்றதென்றால் அலைவரிசை இசைவாகிறது என்றுதானே பொருள். பதில்களிலிருந்து கவனமாக, ஆங்காங்கே கேள்விகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். சரியான கேள்விகளை இனம் கண்டடைவது உரையாடல் கலையில் முக்கியமானது.

வாழும் காலம் எத்தகையதெனினும், அதனை முற்றிலுமாகப் புறக்கணித்து விடாமல், எவ்வகையிலேனும் எதிர்கொள்வதே சரி என உணர்த்துவதே என் நோக்கம். காரணம் நிகழ்காலம் என்பது பூரணமான உண்மை. ஓர் உண்மை நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அதனை மறைப்பது, புறக்கணிப்பது மற்றும் இகழ்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. 

அந்த பிடிக்காத உண்மைக்கு எதிர்காலம் சார்ந்த கனவின் வர்ணங்களை சிலர் மட்டுமே பூசுவதுண்டு. பெரும்பாலானோர் நிகழ்காலத்தின் மீது கடந்த காலத்தினை ஒப்பனைகளாகவும், முகமூடிகளாகவும்  அணிவித்து ஒருவிதமாக ஆசுவாசம் அடைந்து விடுவதுண்டு. எதிர்காலத்தின் வர்ணம் பூசுவதுகூட சில நல்ல விளைவுகளுக்கு வாய்ப்பாக அமைவதுண்டு. ஆனால் கடந்த காலத்தில் திருப்தியடைவது நிகழ்காலத்தையும் சிதைக்கும், எதிர்காலத்தையும் நோய்மையானதாக்கும்.

ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும்போது சிந்தனைகள் படபடக்கும். அது சிந்தனைக் கொந்தளிப்பாகவும் மாறும் ஆபத்துண்டு. ஏதோவொன்றை செய்யத்துடிக்கும். அதன் காரணமாக, நிகழ்காலத்தை சொற்களாக்கி, அதன்மீது ஏற்கனவே இருக்கும் ஒவ்வாமையை இருளாக்கி வர்ணமாகப் பூசும்போது, நிகழ்காலம் எளிதாக இருண்மையடைந்துவிடும். இயல்பாகவே அவற்றிலிருந்து இயலாமையும், சோகமும், பரிதாபமும் துர்நாற்றமாக வீசத் துவங்கிவிடும். அதனை நுகர்வதில் நம்மையறியாமல் ஒரு குரூர பிடிப்பு உருவாகிவிடும். நாம் நாமாக இல்லாமல் வேறொன்றாக மாறியிருப்போம். அப்படி வேறொன்றாக மாறுவதை நம்மோடு நாம் பகையில் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

மெல்ல அவருடைய குழந்தைப் பருவ முகமூடியையும், சோக இழையோடும் சொல் வங்கியையும் மாற்றி மாற்றித் தொடுகிறேன். ஒருவேளை அப்படியில்லாமல் வேறு மாதிரியாக இருக்க வேண்டுமென்றால், ‘எப்படி இருந்தால் சரியாக இருக்கும்!’ எனும் கேள்விகளைத் தொடுக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் தந்துவிட முடியாது. நீண்ட பதில்கள் அளிக்கும்போது அந்தப் பதில்களை உள்ளுக்குள் ஒருமுறை நிகழ்த்துவது அல்லது பயிற்சி செய்வது நிகழும். அந்த நிகழ்த்தலும், பயிற்சியும் அந்தந்த கணங்களில்  ஒருவித வாழ்தல்தான்.

அவரின் கடந்த கால நிலைத்தல் மற்றும் சோக இழையோடும் சொல் வங்கி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிகழ்காலம் எனும் உண்மையை திடமாக, நேர்மையாக எதிர்கொள்வது ஏன் சிறந்தது என்பதை உணர்த்துகிறேன். தாமே தம்மோடு பகைத்திருந்ததை எளிய சொற்களில் ஒப்புக்கொள்கிறார். சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் பயண நேரத்திற்குள் அந்த உரையாடல் நிறைவடைந்து விடுகின்றது.

ஒற்றை உரையாடலின் வாயிலாக ஒருவர் முற்றிலும் மாறிவிடுவார் என்று மட்டுமே நான் நம்பி விடுவதில்லை. மாற முடியும் என்பதற்கான விடை மட்டும் ’பளிச்’ என பல நேரங்களில் கிடைத்துவிடும்.  

வேதியியல் பரிசோதனையில் வேதிப்பொருட்களின் அளவை, வர்ணச் சேர்க்கையில் வர்ணங்களின் அளவை ஒவ்வொருமுறை மாற்றும் போதும் ஒவ்வொரு விதமான விளைவு, நிறம் கிடைக்கும். அவை நமக்கு சரியானதாகவும் இருக்கலாம், சரியற்றதாகவும் இருக்கலாம். எந்தவொன்றைச் செய்தாலும், நிச்சயம் அதற்கென்று ஒரு விளைவு இருக்கும். 

பிறரிடமோ, தம்மிடமோ பகை கொள்தல் எளிது, களைதல் கடினம். ஆனால் இயலாதது அல்ல. சற்றே விழித்துக்கொண்டால், சரியான நபரை, தேவையான நேரத்தில் துணை கொண்டால் வாழ்வின் போக்கை ஓரளவு தீர்மானிக்க முடியும்.

உரையாடல் நிறைவடைந்த சில நிமிடங்களில் அவரிடமிருந்து, செய்தி ஒன்று வருகின்றது. திறக்கிறேன். ”சார் கொஞ்சம் நாளா வாழ்க்கை சரியாக போய்க் கொண்டிருக்கிறது சார். இன்னும் மென்மேலும் முன்னேறும் என்று நம்புகிறேன்!”

நிகழ்காலம் புன்னகைத்தது. அந்த நாள் அர்த்தமுள்ளதாக மாறியது.

மறதி என்னும் மாத்திரை - கௌசல்யா ஞானேஸ்வரன்


உள்ளத்தின் 
ரணங்கள்
உள்ளுக்குள்ளே 
புதைக்கப்பட்டு 
ஆறாத் தழும்புகளாய்த் 
ததும்ப
விதியென்று
விடியல் பாராது 
வீட்டுக்குள்ளே முடங்க
உணர்ச்சிகள் 
உயிரோட்டம் இன்றி 
உருவம் வாட
மறதி மட்டுமே 
மாத்திரையாகி 
தோன்றிய சோகம் 
சொல்லாமல் போக
மொட்டு விட்ட
ஆசையெல்லாம் 
மெல்ல வந்து 
எட்டிப் பார்த்து
மலர்ந்து சிரிக்க 
மனம் மத்தளம் கொட்டி 
மத்தாப்பாய் 
ஜொலி ஜொலிக்கும்....!

கொஞ்சுமொழி அமுதே! - "கள்ளூறப் பார்க்கும் பார்வை" - உதயபாஸ்கர் நாச்சிமுத்து



(ஓவியம் : உதயபாஸ்கர் நாச்சிமுத்து)


தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு [குறள் எண்:1103]


இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது, மலேசியாவில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் “கண்ட இடத்தில் கடவுளைப்பற்றிப் பேசாதே!” என்று பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. பலர் இதைக் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்கள் கேட்டு மகிழ: 


==========

https://www.youtube.com/watch?v=tvWncCJopZo

(Transcript from 27:37 to 28:56)


சும்மா கடவுளைக் கூப்பிடக்கூடாது! எனக்கு அது பிடிக்காது!


இவன் ஏழடி உயரம் இருப்பான். ஆறடி வாசக்கால் வச்சு வூடு கட்டுவான். உள்ளே போகும்போது இடிச்சுக்குவான். 


"ஆஆ.... கடவுளே..."


என்னடா கடவுள்?! ஏன்டா முட்டாளே! கூட ஓரடி தூக்கி வச்சுக் கட்டுனா சரியாப்போச்சு! சும்மா போய் "கடவுளே ... கடவுளே ..."-ன்னு நோண்டுறியே?! 


ஏன்னா, கடவுளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, நாம! ரொம்ப ராங்! ஒருநேரந்தான் மனிதன் கடவுளை நினைக்கலாம். அந்த வழிபாடு ... எடுத்துக்கொண்டால் நாம் உயர்ந்த அறிவாளிகள் ஆகிவிடுவோம் - என்பதை (தமிழ்நாட்டில்) எடுத்துக் காட்டுவேன் அவ்வளவுதான்! 


கடவுளைப்பத்தி எங்கே ... எந்த இடத்துலே சொல்றது ... “கடவுளே”? ... காலம்பற பாத்ரூமுக்குப் போவான். உட்காரும்போதே ... "கடவுளே...", "ஐயோ ... ஆண்டவனே!" - கடவுளப்போயி அங்க வுடுறான், பாருங்க இவன் வேலைய! இந்த மாதிரியெல்லாம் கடவுளைப்பற்றிப் பேசக்கூடாது - என்று அங்கே (தமிழ்நாட்டில்) சொல்லுவேன். 


கடவுள் உண்டு! அவரைத் தொழு! கண்ட இடத்தில் கடவுளைப்பற்றிப் பேசாதே!

==========


சின்னஞ்சிறுசுகள் காதலில் திளைத்திருக்கும்போது கடவுளைப் பற்றியா நினைப்பு வரும்? கடவுளை நினைப்பதற்கு ஒரு நேரங்காலமில்லையா? 


+++++


களவியல், கற்பியல் என்று காமத்துப்பால் இருவகைப்படும். பையனும் பெண்ணும் ஊராருக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து, கொஞ்சிப் பேசி, காதலில் திளைப்பதைக் களவியல் பேசுகிறது. மணமான பின்பு, திண்மையான வாழ்க்கை வாழ்வதைக் கற்பியல் பேசுகிறது. 


தாமரைக் கண்ணான் உலகு” என்று முடியும் இந்தக் குறள் களவியலில் வருகிறது. களவுக்கான பருவம் ஏறத்தாழ 13 முதல் 19 வயது வரை. இந்தப் பருவத்தில்தான் காதல் (Infatuation) மலரும். கண்ணொடு கண் பேசும். மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும். காதலில் வாடும் மனம் நிலைகொள்ளாமால் தத்தளிக்கும். காணாத பொழுதில்,


மயங்கினேன் … சொல்லத் தயங்கினேன் …

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ? 


என்று  ஏக்கம் வாட்டியெடுக்க, மனசு தவியாகத் தவித்திருக்கும்!


+++++


சின்னஞ்சிறுசுகள் பித்துப் பிடித்து சுற்றும் மனநிலையை, வள்ளுவர் காதல் சொட்டச்சொட்ட செதுக்கியிருக்கும் பகுதி களவியல். குறிப்பாக, இந்தக் குறள் இடம்பெறும் “புணர்ச்சி மகிழ்தல்” அதிகாரம், காதலன் தன் காதலியைப் பற்றி உருகியுருகிப் பாடுவதுபோல் அமைந்துள்ள அதிகாரம். இந்த அதிகாரத்தில்  “தாமரைக் கண்ணான்” என்று கடவுளைப் பற்றி எழுத வள்ளுவருக்கு என்ன தேவை இருந்திருக்கப் போகிறது?


தாமரைக் கண்ணான்” என்பதில் வரும் “ஆன்” விகுதி ஆண்பாலைக் குறிப்பதாகவே உரையாசிரியர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். அதற்கு, பரிபாடலில் வரும் “புவ்வத் தாமரை புரையும் கண்ணன் (தாமரைப்பூவை ஒத்த கண்ணை உடையவன்)” என்று திருமாலைப் பற்றிய குறிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், “தாம்வீழ்வார்” என்பதை “எதனால் தாம்வீழ்வார்” என்று எந்த உரையாசிரியரும் விளக்கவில்லை! 


ஒரு பெண்ணிடம் தன் இதயத்தைத் தொலைத்த ஒரு பையன் இப்படித்தானே வீழ்ந்திருப்பான்?: 


கண்ணிலே காந்தம் வைத்த 

கவிதையைப் பாடுதே

அன்பே... இன்பம்… சொல்ல வா…

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில் 


+++++


வள்ளுவருக்கும் உரையாசிரியர்களுக்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டு இடைவெளி! “தாமரைக் கண்ணான் உலகு” என்பது மணக்குடவர் சொல்வதுபோல் “இந்திரனது சுவர்க்கம்” என்றோ, பரிமேலழகர் சொல்வதுபோல் “தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம் (சிவந்த கண்களையுடைய திருமாலின் உலகம்)” என்றோ பொருள்பட வள்ளுவர் எழுதியிருக்கிறார் என்றால், அதை எழுதுவதற்கு காதல் பெருக்கெடுத்து ஓடும் களவியலா கிடைத்தது? 


+++++


ஆன்” என்னும் விகுதி ஆண்பாலைக் குறிப்பதாகப் பொருள் கொள்வதால், வேறுவழியில்லாமல் காதலுக்குள் கடவுளை உரையாசிரியர்கள் இழுக்கின்றனர். ஒருவேளை “ஆன் (ஆல்)” என்பதை மூன்றாம் வேற்றுமை உருபாகப் பார்த்திருந்தால் …? விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையிலேயே “ஆன் (ஆல்)” என்னும் மூன்றாம் வேற்றுமையுருபை “அறத்தான்(ல்) வருவதே இன்பம்” என்று வள்ளுவர் பாயிரத்திலேயே கையாண்டிருக்கிறார். 


இந்தக் குறளிலும் அவ்வாறே கையாண்டிருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணால், உலகு அல்லது “தாமரைக் கண்ணால் தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், உலகு? என்று குறளின் பொருள் மாறிவிடும். இன்றைய தமிழில் இதன் பொருள், “(தன் காதலியின்) தாமரைக் கண்ணால் தாம்வீழ்வாருக்கு, (அவளின்) மென்தோள் (சாய்ந்து உறங்கும்) துயிலைவிட இனிதானதோ உலகு?


காதல் வயப்பட்டவனின் மனம்,


ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

ஓடம் போலே ஆடலாம், ஆடலாம்

ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்டு

பாடல் நூறு பாடலாம் பாடலாம்


சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்

பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்

சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்

அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் 


என்றுதானே காதல் மயக்கத்தில் ஆடிக் கொண்டிருக்கும்? மாறாக, பஜகோவிந்தமா பாடிக் கொண்டிருக்கும்?


+++++


தாமரைபோல மலர்ந்திருக்கும் காதலியின் விழியம்புதான் விடலைகளை வீழ்த்தும்! “மலரன்ன கண்ணாள்” என்று காதலியைக் காதலன் புகழ்ந்து பாடுவதாக வள்ளுவரே எழுதியிருக்கிறார்!


காதலில் கண்ணால் பேசுவதற்குத் தனியிடம் உண்டு! அதை, அன்றிலிருந்து இன்றுவரை எல்லாக் கவிஞர்களும் விதவிதமாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்!


இருநோக்கு இவள் உண்கண் (மைதீட்டிய விழியில்) உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து - வள்ளுவர் 


அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - கம்பன் 


கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்  - பாவேந்தர் பாரதிதாசன் 


பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?... 

பேசாத கண்ணும் பேசுமா?... 

பெண் வேண்டுமா, பார்வை போதுமா?- கண்ணதாசன் 


விழியில் விழுந்து, 

இதயம் நுழைந்து, 

உயிரில் கலந்த உறவே! - வைரமுத்து 


கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை; 

காத்திருந்தால் பெண் கனிவதில்லை;  

ஒரு முகம் மறைய, மறு முகம் தெரிய, 

கண்ணாடி இதயம் இல்லை! 

கடல், கை மூடி மறைவதில்லை! - நா. முத்துக்குமார்.


எனவே, காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞன் தன் காதலியின் தோள் சாய்ந்து துஞ்சும் இன்பத்தைப் பாடும்போது, “தாமரைக் கண்ணான்” என்று கடவுளை நினைத்துக் கொண்டிருப்பதாக வள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பேயில்லை!

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல - R.S. பிரபு

 


நேரங்கெட்ட நேரத்தில் நமக்கு தெரிந்த அல்லது உறவினரிடமிருந்து போன் அழைப்பு வந்தால், எப்பேர்பட்ட மனிதனும் ஒரு நொடி ஆடிப்போய் விடுவான். போனை எடுத்து, ஒன்னுமில்லை சும்மா தான் கூப்பிட்டேன் என்று சொன்ன பிறகுதான் மூச்சே வரும். அநேகமாக அனைவருக்கும் இப்படி ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கும். எனக்கும் ஒரு நாள் இரவு 10:30 மணி அளவில் அப்படி ஒரு போன் அழைப்பு என் உடன் பிறந்த தம்பியிடமிருந்து. 

" என்னடா.. இந்நேரத்துக்கு?" 
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல.. நீ எங்கிருக்க?" 
"வீட்லதான்.சொல்லு " 
" நான் நைட் வாக்கிங் போனேன்.. வர வழியில...." 
" வர வழியில.?? சொல்லித் தொலடா" 
" NGGO காலனி முக்குல....." 
" முக்குல..?" 
" முக்குல நெறைய நாய் நிக்குது. எனக்கு பயமா இருக்கு, வரியா.? * 
" ஏண்டா. இப்படி ஏழு கழுத வயசாகியும் நாய்கெல்லாமா பயப்படுற.?" 
" டேய் வாடா... பிளீஸ்." 
" வர்ர்ரேன்.. வை.". 

அங்க போயி பாக்கறேன், பூட்டிய ஒரு கடையின் ஷட்டரின் கீழ் பயந்து போயி உக்காந்துருக்கான் என் தம்பி. அவனுக்கு முன்னே தெரு நாய்கள். ஒன்னும் பண்ணல. ஆனா அவன பாத்த மாதிரியே நிக்குது எல்லாம். உஸ்சுனு எல்லாத்தையும் விரட்டிட்டு டேய் ச்சீ.. வாடானு பைக்ல கூட்டிட்டு வந்துட்டேன். சின்ன வயசுல எல்லோருமே இதை கடந்து வந்திருப்போம்.  ஆனா இப்போ நெனச்சா சிரிப்பா இருக்குது. இதுக்கா இப்படி பயந்தோம். இப்பெல்லாம் ரோட்டுல் எத்தன நாய்கள் இருந்தாலும் கவனிப்பது கூட இல்லை. ஆனால் நம் குழந்தைகளைத் தனியா அனுப்புவதில் இன்னும் பயம் இருக்கு. நடக்கும் சம்பவங்கள் அப்படி!. அதெல்லாம் சரி. ஆனா காலேஜ் படிக்கிற வயசுல பையன் இருந்தும் என் தம்பி இன்னும் தெரு நாய்களுக்கு பயப்படுவது, வேடிக்கையான  வினோதம். 

சென்ற ஆண்டு ஒரு புதிய விஷயம் துவங்குவதற்காக ஜோசியம் பார்க்க என் மனைவியுடன் சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை தெளிவாக எடுத்துக் கூறிய ஜோசியர், கிளம்பும் முன்,

" உங்கள ஒருதடவையாவது நாய் கடிச்சிருக்கணுமே ? "  
என்ன.............து !!!!!!! நாய் கடிச்சிருக்கணுமா?? அப்படியே இருந்தாலும்.. அதுக்கும் என் வாழ்க்கை பயணத்திற்கும், என் புதிய முயற்சிகளுக்கும், இப்போ நான் வந்ததுக்கும் என்னையா சம்மந்தம்.!?
" இல்ல சார் . கடிச்சதில்ல. " 
" நல்லா யோசிச்சுப் பாருங்க." 
" இல்ல சார். எனக்குத் தெரியாதா.? இதுவரைக்கும் நாய் என்ன கடிச்சதே இல்ல. " 
" இல்லையே என் ஜாதகக்  கணிப்பு பொய் சொல்லாதே" 

என் மனைவியிடம் திரும்பி, "ஏன் கோகிலா! உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கா? 24 வருஷமா கூட இருக்காங்க. கொசு கடிச்சா கூட அவங்களுக்கு தெரியும். நாய் கடிச்சா தெரியாதா? "

"இல்லைங்க .. அப்படி எதுவும் கடிச்சதில்லைங்க" என்று அவளும் தன்பங்குக்கு ஜோசியரிடம் கூற, அவர் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கிவிட்டு. பின் கம்ப்யூட்டர் திரையை பார்க்கிறார். என் கட்டங்களை மீண்டும் ஒரு முறை உற்று நோக்குகின்றார். எனக்கு ஒன்னும் புரியல. நானே பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஜோசியம் பார்ப்பேன். அதுவும் முடிவெடுக்க முடியாத அளவுக்கு ஏதாவது இருந்தால் மட்டும். இப்பவும் நான் கேக்க வந்தது புதிய தொழில் துவங்குவது பற்றி. எதுக்குய்யா இந்த நாய் பிரச்சினை? இல்ல இல்ல. நாயோட பிரச்சினை? அது ஓரமா ரோட்டுல படுத்துட்டு இருந்துட்டு போகுது. எனக்கு மனதில் குழப்பங்கள் ஒடிகிட்டே இருக்கு.  

ஜோசியர் ஒரு வழியாகக் கட்டங்களை விட்டு என்னை நிமிர்ந்து பார்த்து, " சரிங்க பிரபு.! நான் இவ்வளவு தூரம் சொல்றேன் நாய் உங்கள ஒரு தடவையாவது கடிச்சுருக்கும்னு. ஆனா நீங்க இல்லவே இல்லைங்கனு சொல்றீங்க. ஹ்ம்ம்....!? ஓகே. இப்ப சொல்றேன், உங்களை நாய் கடிக்க வாய்ப்பிருக்கு, ஜாக்கிரதையா இருங்க " 

அடக்கடவுளே! இப்போ நான் இதை கேக்கவா வந்தேன். சரி, நடக்கும்போது பாத்துக்கலாம் என்று நினைத்துகொண்டு மற்ற விஷயங்களையெல்லாம் தெளிவாக சொன்னதுக்கு ஜோசியருக்கு நன்றி சொல்லிட்டு கெளம்பிட்டோம். அடுத்த நாள்லருந்து வெளிய போகும்போது, தெருவுல ஓரமா படுத்துருக்குற நாய் கூட என் திருட்டு முழியப் பாத்துட்டு துரத்த ஆரம்பிச்சுருது. டேய்.. டேய்.. நான் என் தம்பிய நாய்கள்ட்ட இருந்து காப்பத்துனவன்டா.. இப்படி என்னை பயந்து பொலம்ப வெச்சுட்டீங்களே  ஜோஸியரு சாரு! 

மாதங்கள் கடந்தன. அப்படியே மெல்ல இந்த விஷயத்தை மறக்க துவங்கினேன். நல்லபடியா அந்த புதிய திட்டத்தைத் தொடங்கி அது திறப்பு விழாவிற்கு தயாரானது. ஜோஸியருக்கு மனதுக்குள் நன்றி கூறிவிட்டு, பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்தோம். அப்போ ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அழுத்த, வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தவுடன், ஒரு நாய் முதலில் எங்களை நோக்கி ஓடி வந்தது. இதே தான், இதே தான், இதே நாய் தான்னு நெனச்சுகிட்டு,

" ஏங்க.. நாயக் கட்டி போடுங்க . அப்பத்தான் உள்ள வருவேன்"
 "ஹா ஹ ஹா . மாப்ள கடிக்காது வாங்க" 
" இல்லைங்க எனக்கு பயமா இருக்கு. நீங்க கட்டிப் போடுங்க வரேன். " 
" மாப்ள இது குட்டி நாயி.. இதுவரைக்கும் யாரையும் கடிச்சதில்ல .. வாங்க" 
(என்னைய கடிக்கும்யா.. ஏனா.. என் கட்டம் அப்புடி ) 
" ப்ளீஸ் நாயக் கட்டுங்க"  
" இன்னும் இதுக்கு கயிறு கூட வாங்கல மாப்ள. சரி விடுங்க" னு சொல்லி , அந்த நாய உடனே  கையில எடுத்து வெச்சுக்கிட்டாரு. 

ஹப்பாடானு ஒரு வழியா பத்திரிக்கையக் கொடுத்துட்டு வெளிய வந்தோம். அந்த வீட்டுகாரங்களும், இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியானு சிரிச்சுகிட்டே வழியனுப்பி வெச்சாங்க. 
"நான் பயந்தவனா?? நானெல்லாம் என் தம்பியவே... தெரு நாய்கள்ட்ட இருந்து..." என்றபடியே  கார்ல ஏறி உட்கார, என் மனைவி தலையில அடிச்சுகிட்டே 

"ஏங்க இப்படி போற பக்கமெல்லாம் மானத்தை வாங்குறீங்க?"

"ஏய் உனக்கு என்ன? ஜோசியர் உன்னையவா நாய் கடிக்கும்னு சொன்னாரு? என்னைத்தானே சொன்னாரு?" 

"சரிங்க அவரு எந்த நாய் கடிக்கும்னு சொன்னாரா? நீங்க பேசாம அந்த வீட்டுக்குள்ள போயிருந்தா.., அது ஒரு குட்டி நாய், அந்த குட்டி நாய்கிட்ட கடி வாங்கி அதோட இந்த நாய்க்கடி பிரச்சனைய முடிச்சுருக்கலாம்ல? இப்போ எந்தத் தெருவுல இருந்து எந்த நாய் கடிக்கப் போகுதோ போங்க." 

அட...ஆமா...இது தோனலையே எனக்கு! என்னைக் கடிக்கப் போகும் அந்த நாய் இந்நேரம் எந்தத் தெருவுல படுத்துருக்கோ... இதுக்கு பேரு நாய் படும்பாடு அல்ல, நாயால் படும் பாடு, மன நோயால் படும் பாடு. யார் வீட்லயாவது குட்டி நாய் இருந்தா அட்ரஸ் ப்ளீஸ்