ஆத்திரத்தில் இழந்தவன்- யாசிதா மணிவண்ணன்

மூவாயிரம் பட்டங்கள் வாங்கிய மனிதனையும் ஆட்டிப் படைக்கும் மூன்று எழுத்து 'சினம்'.

சிடுசிடுவெனத் தமிழ் பேசிக்கொண்டிருக்க, கண்ணன் கேட்டான், "தமிழ், என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்போது நீ கோபமாக இருக்கிறாய்?"

அதற்குத் தமிழ்ச் செல்வி, "கண்ணா, இரவில் இருட்டாக இருக்கும் வானம், காலையில் எப்படி வெளிச்சமாக இருக்க முடியும்?" என்று கேட்டாள்.

"அட! தமிழ், அது இயற்கையின் நியதி. பிறப்பு என்றால் இறப்பு என்று ஒன்று இருப்பதுபோல, இரவு என்றால் பகல் என்று ஒன்று இருக்கும்," என்றான் கண்ணன். மேலும், "உனக்கு எப்படிச் சொல்வது? மனிதன் மட்டும்தான் அதிக நேரம் தூங்குகிறான். பறவைகளோ, விலங்குகளோ அதிக நேரம் தூங்குவதில்லை. நீ, நாய், பூனை போன்றவற்றை நினைத்துப் பார். அவை பகலில் தூங்கும். இரவில் விழித்திருக்கும். இயற்கையில் நிகழும் சில நிகழ்வுகளுக்குப் பல அறிஞர்கள் இயற்பியல் ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் பல சான்றுகள் சொல்லி இருக்கிறார்கள் தமிழ். இதெல்லாம் நீ வளர வளரப் படிப்பாய் தமிழ்ச் செல்வி," என்றான்.

அப்போது அப்பா வீட்டுக்குள் வந்தார். தமிழ்ச் செல்வியும் கண்ணனும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி என்னவென்று கேட்டார். தமிழ்ச் செல்வி உடனே, "அப்பா, அண்ணன் என்னிடம் பொய் சொல்கிறானா என்று தெரியவில்லை. இரவு என்றால் பகல், பிறப்பு என்றால் இறப்பு என்று எதிர்வினைகள் இருப்பதைச் சொல்கிறான்," என்றாள்.

"அட! ஆமாம் தமிழ், இதெல்லாம் உண்மைதான். ஒன்றுக்கு மற்றொன்று எப்பொழுதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்," என்றார் அப்பா.

உடனே தமிழ்ச் செல்வி, "அப்படியானால், நீங்கள் எப்பொழுதுமே கோபப்படுகிறீர்கள். அம்மா எப்பொழுதுமே எங்கள் மீது பாசம் காட்டுகிறார்கள். இதுவும் எதிர்மறையா?" என்று கேட்டாள்.

"இப்படிக்கூட வைத்துக்கொள்ளலாம். இன்பம் இருந்தால் துன்பம் என்று ஒன்று இருக்கும். அதுபோலத்தான்," என்றார் அப்பா. "நம் வீட்டில் இருப்பதுபோல, உனக்கு ஒரு படிப்பு இருக்கிறது; உங்க அண்ணனுக்குப் படிப்பு என்று ஒன்று இல்லை," என்று கண்ணனைக் குறைத்துப் பேசினார். "அவனுக்கு இப்போதெல்லாம் புரியாது. நாளைக்கு அவன் வாழ்க்கையில் என்னைப் போன்ற ஒரு தகப்பனாகும் போதுதான், என்னுடைய வருத்தமும் துன்பமும் அவனுக்குப் புரியும்," என்றார் அப்பா.

உடனே கண்ணன், "அப்பா, உங்களிடம் நான் எத்தனை முறை சொல்லி இருக்கிறேன், என்னை யார் கூடவும் ஒப்பிட்டுப் பேசாதீங்கன்னு," என்றான்.

"ஆமாம்டா, உனக்கு என்ன சொன்னாலும் கோபம் மூக்குக்கு மேல என்ன, மண்டைக்கு மேல கூட வரும்," என்று அப்பா கண்ணனைத் திட்டினார்.

அப்பா, "நான் சொல்வது உண்மைதானே? உன் தங்கச்சி தமிழ் படிக்கும் அளவுக்கு நீ படிக்கிறாயா? உன் வகுப்பில் நீ கடைசி மாணவன்தானே? உன் தங்கை நான்காம் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் வாங்கியவள். அதை முதலில் தெரிந்து கொள்," என்று அவனை மட்டம் தட்டிப் பேசினார்.

அதற்கு உடனே கண்ணன், "அப்பா, நான் மறுபடியும் சொல்கிறேன், என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பேசாதீங்க. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். எனக்குப் படிப்பு மேல் ஆர்வம் இல்லை, அதனால் படிப்பு வரவில்லை. நான் படிக்காதவன் இல்லை. எனக்கு வேறு எதில் அதிகம் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும்தான் அதிகமாக இருக்கிறது. நீங்கள் என்னைப் படி படி என்று சொன்னால் நான் எப்படிப் படிக்க முடியும்?" என்று தந்தையைப் பார்த்து கேட்டான்.

உடனே தமிழ்ச் செல்வி, "ஆமாம் அப்பா, அண்ணனுக்கு விளையாட்டுத் துறையில்தான் சாதிக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் ஏன் அவனைப் படி படி என்று சொல்கிறீர்கள்? மருத்துவர் ஆக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகள்தான் அதுவாக முடியும்," என்று தந்தையிடம் கூறினாள். 

"ஒரு விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று நினைக்கும் கண்ணனை, விளையாட்டு வீரனாகத்தான் ஆக்க வேண்டும். நீங்கள் இப்போது சொன்னீர்களே, ஒன்றுக்கு மற்றொன்று எதிர்மறை என்று, அதுபோலத்தான் அப்பா," என்றாள் தமிழ்.

அதற்கு உடனே அப்பா, "அட தமிழ், நீ சின்னப் பெண். உனக்கு ஒன்றும் தெரியாது. நீ சும்மா உள்ளே போ. போய் படிக்கும் வேலையைப் பார்," என்று தமிழைத் திட்டி அனுப்பினார். 

"அடேய் கண்ணா, இங்க பார். நாளைக்கு நீயும் ஒரு தகப்பனாகி என் நிலை வரும்போதுதான் உனக்கு என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் புரியும்," என்றார் அப்பா. "உன்னை எருமை மாடு மேய்க்க விடணும். அதுக்குப் பதிலாக வருஷமானா உனக்குப் பணம் கட்டிப் படிக்க வைக்கிறேன். என்னைச் சொல்லணும்" என்று புலம்பிக்கொண்டே, "மலர், இங்க வா," என்று அம்மாவை அழைத்தார்.

அதற்கு அம்மா, "என்னங்க, உங்களுக்கு என்ன ஆச்சு? எப்பொழுது பார்த்தாலும் என் பையனைத் திட்டவில்லை என்றால் உங்களுக்குப் பொழுது விடியாதே," என்று அப்பாவைக் குறை கூறினார்.

"மலர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ போய் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வா," என்றார் அப்பா. "தமிழ் நேற்று என்னிடம் கடைத்தெருவுக்குப் போனால், இனிப்புப் பலகாரம் வாங்கிட்டு வரச் சொன்னாள். நான் போகிறேன். அவளுக்கு வாங்கி வருகிறேன்," என்று கூறிவிட்டு, கண்ணனிடம், " கண்ணா, உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம் அப்பா," என்றான் கண்ணன். பிறகு, "அப்பா, எனக்கு நல்ல பந்து ஒன்று வாங்கிட்டு வாங்க," என்றான்.

அதற்கு அப்பா, "ஆமாம்டா, படிக்கிற பையனுக்குப் பந்தா? போய்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கும் வழியைப் பார்," என்றார்.

அப்பா கடைத்தெருவுக்குச் சென்றவுடன், கண்ணன் அம்மாவிடம், "இந்த அப்பா மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? என் வயதுப் பசங்க வீட்ல எல்லாம் போய் பார்க்கச் சொல்லுங்கம்மா. அவனுங்க எந்த அளவுக்குப் பொறுப்பாக வீட்டில் இருக்கிறார்கள் என்று," என்றான்.

அதற்கு உடனே அம்மா, "அட! சும்மா இருடா கண்ணா. நீ இப்படிப் பேசிக்கொண்டிருப்பதை உங்க அப்பா கேட்டால்  அடித்துவிடப் போகிறார்," என்றாள்.

நாட்கள் சென்றன. அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வந்தன. மதிப்பெண் அட்டை வீட்டுக்கு வந்தது. தமிழ் தனது அப்பாவிடம் கொடுத்து, தனது மதிப்பெண்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில், கண்ணன் மட்டைப்பந்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

கண்ணனைப் பார்த்த அப்பா, "இங்கே பார், தமிழின் மதிப்பெண் அட்டையைப் பார். எவ்வளவு நல்ல  மதிப்பெண் வாங்கியிருக்கிறாள். நீயும் வாங்கிருக்கிறாயே, அந்த முட்டைகளை  எல்லாம் சேர்த்து வைத்திருந்தால், நான் ஒரு முட்டைப்பண்ணை வைத்திருக்கலாம்," என்று கோபமாகக் கூறினார்.

அதற்குக் கண்ணன் சற்றும் யோசிக்காமல், "அப்படியானால் உங்களால் அந்த முட்டைகளைச் சேர்த்து வைத்து முட்டைப் பண்ணை வைக்க முடியுமானால், நீங்கள் வையுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது," என்றான்.

அதற்கு அப்பா, "இனி உன்னைப் படிக்க வைப்பதில் அர்த்தமே இல்லை. நீ இனிமேல் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திவிட்டு மாடு மேய்க்கிற வழியைப் பார். இரண்டு எருமைமாடுகள் வாங்கித் தருகிறேன். வீட்டில் இருந்து அதை மேய். நல்ல பாலாவது கிடைக்கும்," என்று கோபமாகக் கூறினார்.

இதற்குக் கண்ணன், "அப்பா,  எனக்கும் பேசத் தெரியும். என்னுடைய ஆசைக்கு நீங்கள் சம்மதிப்பீர்கள் என்றுதான் நான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். நாளைக்கு எனக்கு என் வாழ்க்கையை மாற்றக்கூடிய மட்டைப்பந்து இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு நான் நாளை சென்னை போக வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு ₹1,000 கொடுக்க வேண்டும். அதைக் கேட்கத்தான் வந்தேன். தர முடியுமா? முடியாதா?" என்று ஆவேசத்துடன் கேட்டான்.

அதற்கு, "முடியாதுடா!" என்று அவரும் ஆவேசத்துடன் சொன்னார்.

அவர் மேலும் மனம் உடைந்து, "நீ இப்படிப் பேசுவேன்னு தெரிந்திருந்தால், உன்னை நான் இவ்வளவு தூரம் வளர்த்திருக்க மாட்டேன். உனக்குச் சோறு போட்டு வளர்த்ததற்கு நீ திருப்பித் தரும் நன்றியா இது?" என்று கேட்டார்.

உடனே அம்மா கண்ணனைப் பார்த்து, "கண்ணா, என்னடா? அப்பாவிடம்  இப்படி எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்?" என்றாள்.

அதற்குக் கண்ணன், "அம்மா, என் பொறுமை அவ்வளவுதான், சொல்லிட்டேன். நீ சும்மா இரு," என்று அம்மாவின் வாயை மூடினான்.

அம்மா, "கண்ணா, ஆத்திரத்தில் பேசுவதெல்லாம் மூளைக்கு எடுபடாதுடா. கொஞ்ச நேரம் பொறுமையாக இரு," என்றாள்.

கண்ணன், "என்னால் இருக்க முடியாது அம்மா. கொடுத்தால் கொடுங்கள். இல்லையென்றால் வீட்டை விட்டு நான் போகிறேன்," என்றபடி  வெளியேறினான்.

சென்னைக்குப் போகப் பணமில்லாமல், படிப்பையும் விட்டு, விரும்பிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கு பெற முடியாமல் தடுமாறினான் கண்ணன். வாழ்க்கை எங்கு செல்லப் போகிறது என்று தெரியாமல், தனது எதிர்கால வாழ்க்கையை, தனது ஆத்திரத்தால் தொலைத்துவிட்டு, வயிற்றுப் பசியின் காரணமாக, மட்டைப்பந்து வீரனாக வரவேண்டியவன், இன்று ஒரு உணவகத்தில் எச்சில் இலை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறான். ஆத்திரத்தில் வரும் வார்த்தைகள் எல்லாம் ஆபத்தில்தான் கொண்டு முடியும்.

அழகான வாழ்வும் ஆபத்தான வாழ்வும் மனிதனின் எண்ணத்தில்தான் இருக்கிறது.


தெளிவு - மகேஸ்வரி மதன், சண்முகவடிவு, மஞ்சு, லாவண்யா



பூஜா அழகான பெண். குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு. ஈரோட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பூஜா படிப்பில் கெட்டிக்காரி. பள்ளியில் எல்லா வகுப்பிலும் முதலிடத்திலிருந்தாள். அவளின் கல்வி கொடுத்த தைரியம் அவளின் முகத்தில் வெளிப்படும். உயர் கல்வியைத் தொடர அவளுடைய பெற்றோர் எல்லாவற்றையும் செய்தார்கள். அங்கும் சிறந்துவிளங்கினாள் என்று தனியே சொல்ல வேண்டியதில்லை. ஐடி நிறுவனத்தில் படிப்பிற்கேற்ற சிறந்த வேலை கிடைத்தது. வேலையில் சுயமாகச் சம்பாதித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைப் பூஜா விரும்பித் திருமணம் செய்து கொண்டாள். பெற்றோரும் நிறைவாக இருந்தனர்.

பூஜாவும் கணவர், இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். அவளுக்கு வாசிக்கவும் எழுதுவதும் பிடிக்கும். அவளுக்கு எளிதாகக் கைவருவதாகவும் இருந்தது.  பெண்கள் சுயமுன்னேற்றத்தை உறுதியாக நம்புகிறவள். மேலும் அவளுடைய பெண் சகாக்கள், உறவினர்கள், வீட்டு உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பெண்களும் முன்னேறப் பல வழிகளில் உதவுவாள்.

ஒரே நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, பூஜா சில சமயங்களில் வெறுமையாக உணரத்தொடங்கினாள். சில மாதங்களுக்குப் பிறகு தன் கணவரிடமும் பகிர்ந்து கொண்டாள். ஏதாவது செய் என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட, இவள் மனம் மேலும் வெறுமையை உணரத்தொடங்கியது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும் கூடிய ஒரு வேலை அல்லது தொழிலைச் செய்ய விரும்பினாள்.

வேலையில் கவனம் சிதறியது. ஏதோ ஒரு பெரும் குழப்பத்தில் மூழ்கத் துவங்கினாள். பெற்றோர் வேலையை விட்டுவிட்டு மகிழ்வாய் வீட்டில் இருக்கச் சொல்கிறார்கள். கணவர் இவளின் குழப்பத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்து ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள். ஏனோ அனைத்தும் அவளுக்கு அந்நியமாகத் தெரிய ஆரம்பித்தது. தன்னையும் கவனிக்காமல், வேலையையும் கவனிக்க முடியாமல், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் திணறினாள். தனக்குப் பிடித்தவர்களிடமிருந்தும் பிடித்தவற்றிடமிருந்தும் தன்னையும் அறியாமல் தொலைவுபடுத்தியிருந்தாள்.

பூஜாவிற்குப் பள்ளி நாட்களிலிருந்தே மிகவும் நெருக்கமான நட்பாக இருந்தவள் மதிவதனி. பக்கத்துப் பக்கத்து ஊர்களில் வசித்தவர்கள். இரு ஊருக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்த பள்ளி என்பதால் இருவரும் ஒரே பள்ளியில் கல்வி பயின்றனர். படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்த  பூஜாவிற்கும் மதிவதனிக்கும் யார் முதல் ரேங்க் வாங்குவது என்பதில் போட்டி இருந்தாலும், அவர்களின் நட்பை அது என்றுமே பாதித்தது இல்லை. 

அடுத்து கல்லூரியிலும் ஒரே துறையில் சேர்ந்து படிப்பை முடித்து இருவரும் வேறு வேறு ஊர்களுக்கு வேலைக்குப் போகும் வரையிலும் அவர்களின் நட்பு குறையவேயில்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வதும், அவ்வப்போது நேரில் சந்தித்துக் கொள்வதுமாய் நல்லபடியாய்த் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 

ஆனால் இருவருக்கும் திருமணம், குழந்தைகள் என வந்ததில், வேலை, குடும்பம் என இருவரும் அவற்றில் மூழ்கி விட, மெதுமெதுவே இருவருக்கும் இடையிலிருந்த  தொடர்புகள் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாய் நின்றே போனது. 

பூஜா எப்போதாவது தன் தோழிக்குப் பிடித்த உணவைச் சமைக்கையில், அவளுக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கையில், அவளுக்குப் பிடித்த வண்ணத்தில் உடுத்துகையில்,  நினைப்பாள், மதி இப்போது எங்கே இருப்பாள் என்ன செய்து கொண்டிருப்பாள் என. ஆனால் இவளின் வேலைப் பளு, தோழி பற்றிய நினைவைத் தொடர விடாது தடுத்து விடும்.  

இன்று வார இறுதி என்பதால்,  அவள் கணவனும் குழந்தைகளும் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போயிருக்க, யாருமில்லாத தனிமைச் சூழல்  கொஞ்சம் வெறிச்சென்று இருந்தாலும், அவளின் தற்போதைய மனநிலைக்கு ஒரு வகையில் ஏனோ ஆறுதலாகவும் இருந்தது.  பால்கனியில் ஒளிர்ந்து கொண்டிருந்த பவுர்ணமி நிலவும், இதமாய் நாசி நிறைக்கும் தொட்டி மல்லிகையின் மணமும் பூஜாவின் இப்போதைய  மனநிலையை ஆற்றுப்படுத்துவது போல் இருந்தது. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த 'அனல் மேலே பனித்துளி'  பாடல் மனதை என்னவோ செய்ய, அவளை அறியாமல் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. இந்தப் பாடலை அவளும் மதிவதனியுமாய் சேர்ந்து திரும்பத் திரும்பக் கேட்ட பழைய நாட்கள் நினைவுக்கு வந்தது. 

அவளை எப்படி இத்தனை நாள் மறந்திருந்தோம்  என்று லேசாக மனம் உறுத்த, உடனே அவளோடு பேச வேண்டும் போல இருந்தது.  தன் அலைபேசியில் அவளின் எண் இருக்கிறதா எனத் தேட ம்ஹூம்.. காணோம். மனம் சலித்து, கைகளால் முகத்தை மூடியபடி சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் அழுது முடித்ததும், மனம் கொஞ்சம் தெளிவாக, இந்த இண்டர்னெட் யுகத்தில் ஒரு தொலைந்து போன தோழியைத் தேடுவதா கஷ்டம் எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அழுததிலும் மன அழுத்தத்திலும் தலையை வலிக்க, மதியமும் எதுவும் சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வர, சமையலறைக்குச் சென்று காஃபி டிக்காக்‌ஷன் போட்டு வைத்து விட்டு,  ஃப்ரிட்ஜில் இருந்த குழம்பைச் சூடு பண்ணி எடுத்துக் கொண்டு,  இரண்டு தோசையை ஊற்றிச் சாப்பிட்டாள். சூடாக ஒரு காஃபியைப் போட்டு எடுத்துக் கொண்டு, தன் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். படுக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டு, தன் மடிக் கணினியைத் திறந்து வைத்தாள்.  

தனது மடிகணினியை திறந்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது போட்டோ ஆல்பம் அதில் தனது சிறு வயது முதல் கல்லூரி வரை எடுத்த போட்டோக்களில் தன் எண்ணச் சிந்தனைகளைப் பதித்தாள். முக்கிய குறிக்கோள்களை வரையறுத்து, விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வாங்கிய இந்த சிறப்பான வேலையை 12 வருடங்களுக்குப் பிறகு எதனால் தொடரப்  பிடிக்கவில்லை என்பதை உணரத் தொடங்கினாள். வேலை குடும்பம் மற்றும் குழந்தைகளின் கல்வி என்று ஓடிக்கொண்டே இருந்ததால் அவளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. இதை நாம் எப்படிச் சரி செய்து சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து நமது வாழ்வை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்வது என்று தீவிர யோசனை செய்தாள். தன் தோழியுடன் கல்லூரியில் படிக்கும் போது சில கலந்துரையாடல்களில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய தொழில் முனைவோர் பற்றியும் அவர்களுடைய சுயமரியாதை அங்கீகாரம் பற்றியும் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. நமக்குக் கிடைத்த செல்வம் மற்றும் திறமைகளை வைத்து சுயமாக ஏன் தொழில் செய்யக்கூடாது என்று யோசித்தாள். பிறகு தனது தோழி ஞாபகம் வந்தவுடன் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள். அவளைத் தொடர்பு கொள்வது எப்படி எனப் பல சிந்தனைகளுடன் சமூக வலைத்தளங்களில் அவள் பெயரை வைத்துத் தேடினாள். தேடிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவளுக்குக் கிடைக்கவில்லை. பிறகு என்ன செய்யலாம் யாரைத் தொடர்பு கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு ஒரு போன் வந்தது.

இப்பொழுது இந்த அழைப்பில் மதிவதனி பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் அதுவோ கொரியர் டெலிவரி அழைப்பாக இருந்தது. ஏமாற்றத்துடன் மீண்டும் மடிகணினியை திறந்து தோழியைத் தேட துவங்கினாள். தோல்வியே மிஞ்சியது. அடுத்த நாள் காலை ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்  தனது உறவுமுறை அக்காவைச் சந்திக்கப் போகிறோம் என்ற  மகிழ்ச்சியிலேயே உறங்கிப் போனாள் பூஜா.

அக்காவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தாயிற்று. அக்கா  எப்பொழுது  கண்விழிப்பாள்,  எப்பொழுது தன் மனக்குமுறல்களைக்  கொட்டலாம் என காத்திருந்தாள் பூஜா. அக்கா எழுந்ததும் தன் வாழ்க்கை இயந்திர மயமாகி விட்டதாகவும் தனக்கென யாரும் இல்லை என்றும் கூறினாள். மதிவதினையை தேடும் முயற்சி தோல்வியடைந்ததையும் கூறி கவலைப்பட்டாள். 

பூஜாவின் அக்கா மாயா "மதிவதனியை இத்தனை வருடங்கள் கழித்தும் இவ்வளவு தேடுகிறாயே எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது" என்றாள். பூஜா இதற்காகவே காத்திருந்தவள் போல மதிவதனியின்  பெருமைகளைக் கூறத்  துவங்கினாள். 

"மதிவதினி என்னை மிகவும் ஊக்குவிப்பாள். எனது பிரச்சனைகளை அவள்  மிகுந்த கவனத்துடன் கேட்பாள். ஜட்ஜ்மெண்ட் செய்ததே இல்லை. நான் கீழே விழும்போது என்னைத் தாங்கிப்  பிடித்து  ஒவ்வொரு முறையும் தைரியம் கொடுப்பாள்" என்றெல்லாம் சிலாகித்தாள்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மாயா.

" பூஜா இந்த வாழ்க்கையில் நம்முடன் கடைசி வரை இருக்கப் போவது நாம் தான். நீ இப்பொழுது ஒரு தாய். உன்னைப் பார்த்துத் தான் குழந்தைகள் சிலவற்றை கற்றுக் கொள்வார்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே உனக்கென ஒரு நேரத்தை நீ ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உனக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்ய வேண்டும். உன்னுடைய ஊக்கம் உனக்கு மிகவும் முக்கியமானது. நீ போதுமானவள் என்று நீ என்று திடமாக நம்ப வேண்டும். மற்றவர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் போன்ற எண்ணங்களை விடுத்து நீயே உனக்கு ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும்" என்றாள். 

எழுத்து அவளின் ஆகப்பெரிய பலம் என்பதை அறிந்த மாயா ஒரு ஐடியாவை சொன்னாள். Content Writing அவளுக்கும் சரியாக வருமென உரையாடிய பிறகு தெரிந்தது. நான் துணையாக நிற்பேன், உன் மதிவதனியும் உளமார உனக்குத்  துணையாக நிற்பாள் என்றாள் மாயா. நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த தெளிவும் மகிழ்வும் பூஜாவிடம் மீண்டும் வந்தது. தன் மடிக்கணினியை உயிர்ப்பித்து freelancer வலைத்தளங்களைத் தேடத்துவங்கினாள்.

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் மஹேஸ்வரி மதன், சண்முகவடிவு, மஞ்சு, லாவண்யா ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)

சாலை மனிதர்கள் - சுகமான சுமைகள் - R.S. பிரபு

 
 
வைரமுத்து அவர்கள் எழுதி வெளிவராத ஒரு பாடலின் சரணம் 
"இரவும் பகலும் யோசிக்கிறேன் 
எனையே தினமும் பூசிக்கிறேன் 
சாலை மனிதரை வாசிக்கிறேன்.
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்"

இதில் "சாலை மனிதரை வாசிக்கிறேன்" என்கிற வரி எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நெருக்கமான வரி. 

என் வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்ட குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. வாகனத்தில் செல்லும் பொழுதும், பேருந்தில் செல்லும் பொழுதும்,  ரயிலில் செல்லும் பொழுதும், மனிதர்களை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். அவர்களுடைய முக பாவங்கள் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி அவர்களுடைய நடை உடை பாவனை,  முகத்தில் தெரியும் உணர்வுகள்,  சில நேரங்களில் அவர்கள் முகத்தில் தெரியும் இனம் புரியாத ஒரு சோகம்- இப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமான உணர்வுகள், அதை நான் கவனிக்கும் பொழுது எனக்கு கலவையான உணர்வுகளை ஏற்படுத்தும். சில சமயம் அந்த உணர்வுகள் நமக்கும் தொற்றிக்கொள்ளும். சுமையோடு செல்லும் யாரையாவது பார்க்கும்பொழுது அடடா நாம் இவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்று விடலாமா என்கிற எண்ணமும்,  கணவன் மனைவிக்குள்ளே கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது,  நாம் சென்று விலக்கி விடலாமா என்ற யோசனையும் எழுவதுண்டு.

ஒரு தாய் குழந்தையை கோபத்தில் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஓடிச் சென்று தடுக்கலாமா!? நாலு நண்பர்கள் மகிழ்ந்து உரையாடும்போது ஐந்தாவது ஆளாக சேர்ந்து கொள்ளலாமா!?  இவ்வாறு பலவிதமான காட்சிகளின் எழுப்புகிற உணர்வுகளின் தாக்கத்தில்,  எதையும் செய்ய முடியாமல் கடந்து செல்லும் ஏக்கத்தின் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மனம் தவிக்கும்.

இன்று இரவு கடைய பூட்டிவிட்டு  வீட்டுக்கு திரும்பும்போது ஈரோடு  GH ரவுண்டானாவில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ரவுண்டானாவில் நான் சென்ற போது ஒரு பேருந்து கடந்தவுடன் செல்லலாம் என்றிருந்தேன். அப்போது ஒரு இளைஞன் தன் கர்ப்பிணி மனைவி மற்றும் மாமியாருடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தான். நியாயமாகப்  பார்த்தால் அந்தப் பேருந்து கடந்தவுடன்தான் அவர்கள் செல்ல வேண்டும். ஆனால் திடீரென்று அந்த இளைஞன் அவன் ஒரு கையில் மனைவியின்  கைப்பிடித்து தனது இடது கரத்தை தலைக்கு மேல் உயர்த்திப் பேருந்தை நிறுத்துமாறு கூறிவிட்டு சாலையை கடக்கத் துவங்கினான். 

எனக்கு சற்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. பேருந்தைக் கடந்து எனது வாகனம் அருகே வரும்பொழுதுதான் அவர்கள் முகங்கள் சற்று தெளிவாகத் தெரிந்தது;  
இளம் தம்பதிகள் அவர்கள்; கணவனுக்கு வயது 25 இருக்கலாம். பெண்ணிற்கு இருபது இருக்கலாம். அந்த இளைஞன் மது அருந்தியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இளைஞன் டீ ஷர்ட்டுடன் அரைக்கால் டவுசரும், அந்த பெண் நைட்டியும்  அணிந்திருந்தார்கள். சின்னப்பெண், அவள் முகத்தில் தெரிந்த அந்த பூரிப்பு மற்றும் மெல்லிய படபடப்பு, மற்றும் அந்தக் கலையான முகம்தான் என்னை இதை எழுத வைத்தது. 

அவள் சாலை விதிகளை உணரவில்லை. வாகனங்களின் நெரிசல் தெரியவிலை. ஒரு கையில் கணவனின் கரம் மற்றொரு புறம் தான் குழந்தை பெற போகிறோம் என்கிற பூரிப்பில் நிறை மாத கர்ப்பிணியாக அரசு மருத்துவமனையை நோக்கி வேகமான நடை. 

அடடா காலம் ஒரு ஐந்து நிமிடம் நின்று இந்த காட்சியை ரசிக்க விடாதா?? கணவன் முகத்தில் மது தந்த தைரியத்தில் அனைத்து வாகனத்தையும் நிறுத்தி விட்டு என் மனைவிக்கு வழிவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டே போவது போல் தெரிந்தது. பெண்ணின் தாயாருக்கோ பதற்றம். ஆனால் அவளுக்கோ தனது குழந்தையை கையில் ஏந்தும் கனவைத் தவிர எதுவும் நினைவில் இல்லை. 

நான் கண்ட அந்தக்காட்சி  இன்னும் என் மனக் கண்ணை விட்டு அகலவில்லை. உடன் சென்று கூட இருந்து உதவிகள் செய்து ஏதாவது பண்ணனும்னு மனசு அடிச்சுக்குது. ஆனா. இதெல்லாம் சாத்தியமில்லை. அவர்களுக்கும் அது நிச்சயம் தேவைப்படாது தேவைப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அழகு குழந்தையை பெற்றெடுத்து தாயும், சேயும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வேண்டிக்கொள்வோம். 

சாலை மனிதரை வாசிக்கிறேன், இல்லை இல்லை நேசிக்கிறேன்!

மயிறு விடயம் - மகேஸ்வரி மதன்

 

முடி என்பது வெறும் மயிரல்ல; அது என் அடையாளத்தின் ஒரு பகுதி, ஆனால் அதை இழந்தால் என்னவாகும்? இந்தக் கேள்வியுடன் தொடங்கியது தான் என் மொட்டைப் பயணம். 

மூன்று வருடங்களுக்கு முன்னர், ஒரு நன்னாளில் என்ன தோன்றியதோ தெரியவில்லை பழனியில்  மொட்டை அடிக்க வேண்டுதல் வைத்தேன். அதன் பின்பு ஓட்டமும் நடையுமாக வாழ்க்கை ஓடியது. கடந்த ஓராண்டில் முடி கொட்டுதல் பிரச்சனை சாதாரணமாக ஆரம்பித்து பூதாகரமாக மாறியது. எங்கும் முடி எதிலும் முடி எனுமளவு. வேண்டுதலை நிறைவேற்றும் காலமும் வந்துவிட்டது என எண்ணி களத்தில் இறங்கினேன். மொட்டை அடித்தலில் என்ன களம் காண வேண்டி இருக்கிறது சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். வளர்ந்த ஒரு ஆண் மொட்டை அடிப்பதற்கும், பெண் மொட்டை அடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மொட்டை அடித்தேனா இல்லையா என்பது இறுதி பத்தியில்.

பாய்கட் அடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று. இவ்வாசையும் ஏன் எதற்காக உதித்தது என நினைவில்லை, ஆனால் சிறுவயதிலேயே அந்த ஆசை உண்டு. அப்போது அடிக்கவில்லை, இப்போது மொட்டை அடித்து முயற்சிசெய்வோம் என இதைப்பற்றியும் அவ்வப்போது வீட்டில் பேசும்போதெல்லாம், பதிலேதும் சொல்லாமல் சிறு புன்னகையோடு நகர்ந்துவிடுவார்கள். என் முடி, என் உரிமை என்றெல்லாம் பேசமாட்டேன். முடி என்னுடையது என்றாலும், பார்க்கப்போவதும் பிறர் பேசக் கேட்கப்போவதும் அவர்கள் தானே. அதுமட்டுமில்லாமல், என்னை அப்படியே ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆவல். குடும்பத்தில் ஒருநாள் மொட்டை அடித்தல் குறித்து தீவிரமாகப் பேசினேன். மகன் முடியவே முடியாது என்றான். “நல்லா இருக்காது”, “இது தான் நல்லா இருக்கு” என்பது போன்ற வசனங்கள் வந்தன. எப்போது இந்த பேச்சை எடுத்தாலும் இதுவே பதிலாக வரும். பிறந்ததிலிருந்து என்னை இப்படியே பார்த்துவிட்டான், சொந்தம், அவன் நண்பர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொது இடங்கள் என எல்லோரையும் இப்படியே பார்த்து அவனுக்குப் பழகிவிட்டது. மாற்றத்தை ஏற்கப் பயப்படுவது இயல்புதானே? பாய்கட் எனக்கு எப்படி இருக்கும் என்பதும் அவனுக்குப் புரியவில்லை / தெரியவில்லை (எனக்கே தெரியவில்லை, ஏதோ குருட்டுத் தைரியம்). விளையாட்டாகப் புள்ள ஏதோ சொல்கிறாள் என்று நினைத்தார்களோ என்னவோ, பதில் ஏதும் சொல்லாமல் பேரமைதி காத்தனர். அடிக்கடி இது குறித்து வேண்டுமென்றே சீண்டி பார்க்கலானேன். மொட்டை அடிப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினேன். "உனக்கு நல்லா இல்லைனா?", "முடி வராமல் போனால்?", "சொட்டையாக இருந்தால்?", "நரை முடிக்கு இப்போதே கருப்பு ஹென்னா உபயோகித்துக்கொண்டிருக்கும் சூழலில், முழுமையாக வெள்ளையாகிப் போனால்?" என எதிர்பார்த்த / பார்க்காத அத்தனை கேள்விகளும் வந்தன. அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று பதில் சொல்லிவிட்டு சாதாரணமாக இருந்தாலும், தனியே என்னை நானே ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் சொல்வது போல நடக்குமாயின், நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறேனா? என்னை நான் ஒருவிதமாக வடிவமைத்துள்ளேன், மாற்றம் எப்படி இருந்தாலும் ஏற்கும் மனோதிடம் என்னிடம் உள்ளதா எனத் தற்சோதனை செய்யத்தொடங்கினேன்.

முடி வளர்த்தல் குறித்த அறிவியல் தெரியாது என்பதாலும், என் தலைமுடி சார்ந்த பிரச்சனை என்னவென்று உறுதியாகத் தெரியாததாலும் எனக்குக் குழப்பங்கள் வருவதும் போவதுமாக இருந்தது உண்மையே. முன்தலையில் சில இடங்களில் முடி இல்லை. மொட்டை அடித்து வளர்ந்தால் அங்கே வளருமா இல்லை, சுற்றி வளரும் வரை சொட்டையாகத் தெரியுமா என்பது முதல் குழப்பம். கொஞ்சம் நரைமுடி இருந்தபோது மருதாணி பூசி வந்தேன், நிறைய நரை முடி தெரியும்போது, அம்மா தான் அக்கறையோடு Black Henna மாறச் சொன்னார்கள், மாறினேன். கிட்டத்தட்ட கடந்த ஐந்துவருட காலமாக Black ஹென்னா தான். அதும் இயற்கையாய் வீட்டில் தயாரிப்பவர்களிடமிருந்து தான். இப்போது மொட்டை அடித்த பின்னர் முழுவதுமாக வெள்ளையாகிவிட்டால்? இது இரண்டாவது குழப்பம். தலைபின்னும் அளவு வளருமா? இது மூன்றாவது குழப்பம். இவை கேள்விகளாக எழும்போதெல்லாம், இது வெறும் மயிறு தானே. இது மட்டுமே என் அடையாளம் இல்லையே என மீண்டும் மூளை என்னிடம் நினைவுறுத்தியது.

வேண்டுதலை நிறைவேற்றி அப்படியே முடிகொட்டுதல் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்து, நீண்ட நாள் ஆசையான பாய்கட் வைப்போம் என்ற முடிவில் தெளிவாக இருந்தேன். என் வேண்டுதல்கள் எனக்கும் முருகனுக்குமானது. இதற்கு எதிர்வினை வரும் என முன்னரே யூகித்தது தான். என்னவானாலும் இதில் மாற்றம் இல்லை என்று உறுதியாக இருந்தேன்.

வீட்டின் எல்லா இடங்களிலும் முடி இருந்துகொண்டே இருந்ததும், முன் தலையில் சில இடங்களில் முடிகள் இல்லாமல் காணப்படுவதும் மகனுக்கும் கணவருக்கும் நன்கு புரிந்தது. சொட்டை ஆகும் முன்னர் அவளே மொட்டை அடிக்கட்டும் என்று நினைத்தானோ என்னவோ, “வேண்டாம்” எனச் சொல்வதை நிறுத்தினான் மகன். இதுவே நமக்குக் கிடைத்த சமிக்ஞை என்று நினைத்து அடுத்த நிலைக்கு நகர்ந்தேன். அடுத்து என் அம்மாவும் தோழியும். நான் தகவலைச் சொன்னதும், சொல்லிவைத்தாற்போல இருவரும் ஒரே காரணத்தைச் சொன்னார்கள். "கணவர் இருக்கும் பொது பெண்கள் மொட்டை அடிக்கக் கூடாது". இதெல்லாம் என்ன கதை, வேண்டுதல் வைப்பவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள், திருப்பதியில் பழனியில் எல்லாம் அடிக்கிறார்கள் போய் பாருங்கள் என்று என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன், மீண்டும் வேண்டாம் என்ற நேரடி பதிலே வந்தது. மாற்றி வேண்டிக்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள். என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்தினார்கள். அப்போதும் முருகன் நமது பக்கம் என்று எடுத்த முடிவில் தொடர்ந்தேன்.

அம்மாவிடம் மேலும் கேட்க முடியாது. மகளுக்கு என்றதும் அந்தத் தயக்கம் வருவது இயல்புதானே. அதும் பூ போன்ற மென்மையான முடியைச் சிறிதிலிருந்து பாங்கு பார்த்து வளர்த்தவராயிற்றே! என் தோழி தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவள்; “இரண்டுபேரும் ஒன்னாதானடி படிச்சோம், எங்கிருந்து இப்படி நீ யோசிக்கிறாய்” எனச் சொல்லியே விட்டேன். “தினமும் பலரையும் நேரடியாகப் பார்க்கும் வேலை, நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி என புதுமுகங்களைச் சந்திப்பவள், இப்படியான உன்னைப் பார்த்து வந்தவர்கள், முடி இல்லாமல் போய் நின்றால் எப்படி இருக்கும், மீண்டும் உன்னை அப்படியே பார்க்க முடியுமா அவர்களால்?” என்ற நியாயமான காரணங்களையும் சொன்னாள். அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். என் தலைமுடி மட்டுமே என் அடையாளம் அல்லவே. என் அடையாளம் என்பது என் சிரிப்பு, என் எண்ணங்கள், பிறரிடம் நடந்துகொள்ளும் பாங்கு, கற்றல், வெளிப்படுத்துதல், என் மனப்பாங்கு, என் அறிவு, ஆற்றல், செயல், அதன் தாக்கம்  இவைதான் நான் என அவளுக்கும் புரியவைத்தேன். இந்த பெயரும், என் ஆதார் எண் போன்றவையும் கூட என்னை அடையாளப்படுத்தச் சுற்றத்தார் கொடுத்தது தானே!

சென்னையிலிருந்து விடுமுறைக்கு நம் வீடு வந்த தோழி, நேரடியாக அம்மாவோடு இதைப் பேசியேவிட்டாள். இருவரும் என்னை வினோதமாகப் பார்க்க, அப்போதும் என் முடிவில் உறுதியாக இருப்பதாகச் சொன்னேன். இவை வெறும் இறுமாப்பில் சொன்ன வார்த்தைகள் அல்ல. கேள்விகளும் பதில்களுமாக என் சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.

சில நட்புகளின் தைரிய வார்த்தைகளும், சமூக வலைத்தளங்களில் மருத்துவர்களின் உரையாடல்களையும் பார்த்து, எல்லாவற்றையும் முருகனிடம் ஒப்படைத்து மொட்டை அடிக்க நானே தேதி பார்த்தேன். ஆனி மாதம் ஒன்றாம் தேதி, ஞாயிறு, கல்லூரி விடுமுறை. மூன்றே நாள் இருந்தது. அம்மா அப்பா மகன் தோழி எல்லோருக்கும் சொல்லிவந்தேன். அடுத்த இரண்டு நாட்களில் வீடு சுத்தம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற ஆயத்தமானேன். Studio சென்று புகைப்படம் எடுத்தேன்; புது துணி உடுத்த ஆசை வரப் பின்னிரவு சென்று எடுத்து வந்தோம். எல்லாம் கைகூடி வர மூன்றாம் நாள் பழனி புறப்பட்டோம்.

சில விஷயங்களில் நம் குழப்பங்கள், அதன் பின்னர் வரும் தெளிவு இவை மிகவும் அவசியம். குழப்பங்கள் என்னளவில் கேள்விகளாக என் மனதில் தோன்றி, என் சிந்தனை அதற்கான பதிலைத் தரும்போது, நானே எனக்கு சபாஷ் சொல்லிப் பாராட்டிக்கொண்டேன். குழப்பங்களோ சந்தேகங்களோ வராமலே தடுக்க முடியுமா? முடியலாம். ஆயினும் குழப்பும் எந்த ஒரு விஷயத்தையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து, உண்மை நிலையைக் கண்டறிய உதவுவதோடு, வாழ்வின் இறுதிவரை நம் கொள்கையாக வரும் வாய்ப்பை தருகிறது. பகுத்து அறிதல் தானே எல்லாமும்!

மொட்டை அடிப்பவரிடம் சீட்டை கொடுத்தேன். கணவரைப் பார்த்து "உட்காருங்கள்" என்றார். எனக்குத் தான் மொட்டை என்றேன். "உட்காருங்க மா" என்று பொறுமையாக ஆரம்பித்தார். சிறிது சிறிதாகத் தலைக்கு மேலிருந்து பாரம் யாவும் குறைந்து போனது. இப்படியாக ஆனி மாதம் ஒன்றாம் தேதி பழனியில் காலை 3.30 மணிக்கு வேண்டுதலை நிறைவேற்றி, குளித்து, அறையிலிருந்த இருந்த கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது முன்பைவிடக் கூடுதல் அழகாக நிறைவாகத் தெரிந்தேன். விடுமுறை நாளென்பதால் பழனியில் பெரும் கூட்டம். மொத்த பெண்களில் நான் மட்டுமே மொட்டை. புதிய அடையாளத்தோடும், மனநிறைவோடும் படியேறி முருகனைத் தரிசித்துக் கிளம்பினோம்.

மாகாளியும் மாதங்கியும் - ஷண்முக வடிவு, கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன்


அது ஒரு அழகான அடர்வனம். விதவிதமான பறவைகளின் குரலோசையும், காற்றின் அசைவில்  மரக் கிளைகள் உண்டாக்கும் ஒரு ரம்மியமான சலசலப்பும், காடு விரும்பிகளான அந்த மாணாக்கக் குழுமத்துக்கு மனதிற்கு இதமான சூழலாய் இருந்ததில் அலுப்பே தெரியாமல் , கண்டு  ரசித்து, அந்தச் சுத்தமான வனக்காற்றை ஆழ்ந்து சுவாசித்து அனுபவித்தவாறே நடந்து கொண்டிருந்தனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியில் பெருவிருப்பம் கொண்டிருந்த அந்த மாணாக்கர் குழு தேர்ந்தெடுத்தது, அந்த அடர்வனத்தின் உள்ளே அமைந்திருந்த ஒரு பழங்காலக் காளி கோயில். கோவிலுக்கு அருகிலேயே அவர்கள்  ஒரு பத்து நாட்கள் பத்திரமாகத் தங்கவும், அவர்கள் உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர் அங்கே பதியில் வாழும் ஆதிவாசிக் குடும்பத்தினர். காட்டுக்குள்ளே வழி தவறி விட வேண்டாம் என்பதற்காக அங்கே தங்கியிருக்கும் ஆதிவாசிகளில் ஒருவரை இவர்களோடு துணைக்கு அனுப்பியிருந்தது வனத்துறை.

வெகு நேரம் நடந்த களைப்போடு கூடவே பசியும் சேர்ந்து விட, அமர்ந்து உணவருந்தி சற்றே ஆசுவசிக்க இடம் தேடத் தொடங்கினர். அவர்களோடு வந்த ரங்கன், 
"இன்னும் கொஞ்சம் நடந்தா, ஒரு சின்ன ஓடை வரும். பக்கத்திலேயே பெரிய ஆலமரமும் இருக்கு. அதுக்கு அடியிலே ஒரு காட்டு முனியப்ப சாமி இருக்கறதாலே, தெனமும் கூட்டிப் பெருக்கி, பூசை பண்றதாலே எடமும் நல்லா சுத்தமா இருக்கும்.  அங்கே போயிடலாம்" 
எனச் சொல்லி அந்த இடத்துக்கு வழிகாட்டி நடக்க, பின் தொடர்ந்தனர் நம் மாணாக்கர்கள்.

பூலோக சொர்க்கமாய் இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும், மடமடவென ஓடையில் இறங்கி அந்தச் சில்லென்ற தண்ணீரில் முகம் கை கால் கழுவி விட்டு, அவரவர் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்தனர். உண்டு முடித்து அந்த காகிதங்களை எல்லாம் தங்கள் பையிலேயே போட்டுக் கொண்டு, கால் நீட்டிப் படுத்தனர் சிலர். அங்கிருந்த பாறையில் அமர்ந்து, தண்ணீரில் கால்களை அளவியபடி நீரோடையின் ஜில்லிப்பை அனுபவித்தனர் சிலர். லேசாகக் கருமேகங்கள் சூழ்ந்து, அந்த வனத்துக்கு இன்னும் கொஞ்சம் அழகையும் அந்த மெல்லிருள் லேசான ஒரு பயத்தையும் கூட்ட,  மிதமான பூந்தூரலாய் விசிறிக் கொண்டிருந்தது மழைச் சாரல்.

எல்லாக் கூட்டத்திலும் சொல் பேச்சுக் கேளா சுந்தரியோ சுந்தரனோ இருப்பார்களே, அப்படிப்பட்ட ஒரு சுந்தரி மாதங்கி.

"இங்கே காட்டுக்குள்ளே திசை தெரியாது. எல்லா ஒத்தையடி வழியும் ஒண்ணு போலவே இருக்கும். தனிச்சு யாரும் போயிடாதீங்க..காணாம போயிடுவீங்க. இங்கே போன் எல்லாம் வேலை செய்யாது" என எவ்வளவோ எச்சரித்திருந்தும், சற்று தூரத்தில் தென்பட்ட மயில் கூட்டமும் அவைகளின் அழகு நடனமும் மாதங்கியை ஈர்க்க, யார் கண்ணிலும் படாமல் மெதுவாக நடக்கத் தொடங்கினாள். பின்னால் வரப் போகும் ஆபத்தை உணராதவளாக.
மயிலின் நடனத்தைக் கண்டு தன்னை மறந்த மாதங்கியும், மயில் போல அழகிய பெண்தான். மௌனித்து கிடக்கும் அடர்வனமும் அவள் அழகை மெல்ல ரசித்து, ஆசை கரம் நீட்டி அவள் வருகையை எதிர்கொண்டது. புதிதாய்ப் பூத்த பூப்போன்ற பூவையவளின் அழகு தோற்றத்தில் மட்டுமல்லாது, அனைத்து ஜீவராசிகளிடமும் காட்டும் பரிவிலும், பாசத்திலும் மிகுந்து இருந்தது.

தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய அடர்வனத்திற்கு மாதங்கி வந்ததே ஒரு பெரிய கதை. தன் அப்பா, அம்மாவிற்கு ஒரே செல்ல பிள்ளையான அவள், எதற்கும் மறுப்பு சொல்லாத பெற்றோரிடம், “பழங்கால காளி கோவில் ஒன்று இருக்கிறது. அதை ஆராய்ச்சி செய்யும் விதமாக பத்து நாட்கள் அடர்வனத்தில் தங்க இருக்கிறோம்  எங்கள் மாணாக்கர்களுடன்,” என்று கூறியதும், அவள் பெற்றோர்கள் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

மாதங்கியின் அப்பா சுதாரித்துக் கொண்டு, “அந்த இடம் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. ஆதலால் நீ அங்கு போக வேண்டாம்,” என்று சொன்னார். அவள் அம்மாவோ அழத் தொடங்கினாள். மாதங்கிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக மறுக்கிறார்கள் என்பது புரியாமல், சிறு பிள்ளைத்தனமாக கோபம் கொண்டு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் அம்மாவும், “சாப்பிடுடா,” என்று கண்ணீருடன் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, “மாதங்கி, உன்னோட அறிவு கூர்மையும், திறமையும், ஆராய்ச்சி செய்யும் புலமையும் கண்டு நான் எப்போதும் வியப்பேன். ஆனால் அந்த காளி கோவிலுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்க மாட்டேன். எப்பொழுதும் உன்னிடம் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காத நாங்கள் இதைச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கும்,” என்று தீர்மானமாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் கண்களில் ஒரு பயம் தெரிந்தது.

அதை கவனித்த மாதங்கி, “அப்பா, எதற்காக அச்சம் கொள்கிறீர்கள்? என்னை தைரியமான பெண்ணாக வளர்த்திருக்கிறீர்கள். கவலை கொள்ள வேண்டாம். காரணத்தைச் சொல்லுங்கள்,” என்று பிடிவாதமாகக் கேட்டாள். அவரும் சொல்லத் தொடங்கினார்.

“இத்தனை நாளும் ஒரு உண்மையை உன்னிடம் சொல்லாமல் மறைத்தேனடா. அதைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கூறும்போதே, அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“உனக்கு ஒரு அத்தை இருந்தார். அவளும் உன்னை போலவே தான் இருப்பாள். ஒரே தங்கை. அளவுகடந்த பாசம் வைத்திருப்பாள். நான் என்றால் அவளுக்கு உயிர். எனக்கும் அப்படித்தான். அவளும் மிகச் சிறந்த ஞானம் உள்ளவள். பழங்கால கோவில்களை ஆராய்ச்சி செய்வது அவளுக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு முறை இப்போது நீ பயணம் செய்ய விரும்பும் பழங்கால காளி கோவிலுக்கு அவள் தன் தோழிகளுடன் சென்றாள். ஆனால் திரும்பி வரவே இல்லை. அதுபோல் உனக்கும் ஏதாவது நடந்து விட்டால்? உன்னை இழக்க நாங்கள் தயாராக இல்லை,” என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

தன் தந்தையின் அழுகையை இதுவரை பார்த்திடாத மாதங்கி, மிகவும் திகைத்து, “அழாதீங்கப்பா,” என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினாள். அவள் கண்களிலும் கண்ணீர்  துளிர்த்தது. கொஞ்சம் நிதானித்து பின்பு அவரே பேசினார்.

 “நீ சொல்கிற அந்த பழங்கால காளி கோவில் ஒரு மந்திரக் கோவிலாம். அதை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் யாராவது வந்தால், அவர்கள் என்ன ஆவார்கள் என்பது யாருக்கும் தெரியாதாம். அந்த மாதிரிதான் உன் அத்தையும் அங்கு சென்றார். திரும்பி வரவே இல்லை. அவருடன் சென்ற ஐந்து பேரும் திரும்பவில்லை. நாங்களும் எல்லா உயர் வனத்துறை அதிகாரிகளிடம் சொல்லி, எல்லா முயற்சியும் செய்து பார்த்தோம். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அந்த வருத்தத்தில் தான் உன் தாத்தாவும் பாட்டியும் காலமானார்கள்.” 

கலங்கிய முகத்துடன் அவர் சொல்வதைக் கண்ட மாதங்கி இத்தனை துயரம் இருந்தும் அதை ஒரு நாளும் வெளிக்காட்டியதே இல்லை,” என்று எண்ணினாள். அதற்குக் காரணம், தன் மேல் பெற்றோர் வைத்திருக்கும் பாசம். அவர்களை தவிக்க விடக்கூடாது என்று முடிவு செய்த மாதங்கிக்கு, அந்தப் பழங்கால காளி கோவிலுக்கு செல்லும் ஆசையும் தீவிரமாக எழுந்தது.

“அப்பா, பயப்படாதீர்கள். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்ணாக நீங்கள் என்னை வளர்த்திருக்கிறீர்கள். 20 வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை நினைத்து பயப்படுகிறீர்கள். ஆனால் இப்போது பாதுகாப்பு அதிகம். அங்கு ஆதிவாசி மக்கள் வசித்து கொண்டிருக்கிறார்கள். நம் குல குருவை சந்தித்து ஆலோசனை பெறலாம்,” என்று கூற, ஒரு வழியாக ஏற்றுக்கொண்டு, அவரின் ஆலோசனைப்படி மாதங்கியின் தாய் ஒரு மண்டல விரதம் இருந்து, பூஜை அனுஷ்டிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி, மாதங்கி இந்த இடத்திற்கு வந்திருந்தாள்.

ஆனால் இவை அனைத்தையும் மறந்தவளாக, தனித்து வந்தவள், கால் இடறி சரிந்து விழுந்து, பள்ளத்தில் உருண்டோடினாள். பள்ளத்தில் உருண்ட மாதங்கி, வலியில் நெக்குருகி மெல்ல விழித்தாள். கண்ணைத் திறந்தவுடன் முன்னே தெரிந்தது மரங்களால் முற்றிலும் மூடப்பட்ட வெளிச்சமற்ற அடர்ந்த காடு. சில்வென்ற காற்றில் பிசுபிசுப்பாக காது கிழிக்கும் ஓசைகள். நிச்சயம் அது பறவைகளின் குரல் அல்ல.

அவள் எழுந்து நிற்க முயன்றபோது, இடுப்பில் சற்று வலித்தது. கைகளால் தரையைத் தொட்டபடி மெதுவாக எழுந்தாள். திசை தெரியாமல் நின்றவளுக்கு அந்த இடம் மர்மத் தோற்றத்தை ஏற்படுத்தியது.

"நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லையே... என்னுடைய ஆசிரியரும் நண்பர்களும் என்னை எங்கு தேடுவார்களோ. என் பெற்றோர்கள் நினைத்தது போலவே நடந்து விடுமோ"   உடல் முழுக்க பரவிய திகில் உணர்வினால் அரற்றிக் கொண்டிருந்தாள் மாதங்கி.
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. கண்கள் செருகின. தண்ணீராவது குடித்தால் தேவலாம் போல இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சங்கின் ஓசை  காதில் விழுந்தது. அது இசையோ, அழைப்போ தெரியவில்லை. அந்த ஓசை அவளை உள்ளுக்குள் இழுத்தது போல உணர்ந்தாள். பயமும், ஈர்ப்பும் கலந்த ஒரு வலிமை அவளை அந்த ஓசை வந்த திசையை நோக்கி நடக்க வைத்தது.

மரங்களைத் தாண்டி செடிகள் பிளந்து முன்னால் தோன்றியது ஒரு பழமையான கோவில். உயர்ந்த கோபுரம், அகன்ற தூண்கள், பிளவுபட்ட கற்கள், பசுமை பூண்ட வாசல் கொண்ட அந்த கோவிலில் ஒரு உயிர்ப்பு இருப்பது போல் உணர்ந்தாள்.  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்சம் அருகே சென்றாள்.  கோவிலின் வலது புறம் ஒரு சிறிய ஓடை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அருகே சென்று அமர்ந்து ஓடைக்குள் கை வைத்தாள். அவள் கைகள் உறைந்து போகும் அளவுக்கு தண்ணீர்  குளிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் அவளின் தாகம்  அந்த குளிர்ந்த நீரைப் பருக வைத்தது. பசி கொஞ்சம் அடங்கியது போல் உணர்ந்தாள்.

முன்னே இருந்த கல் சிலையின் கண்கள்  பிரகாசமாகத் தெரிந்தன. அந்தக் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றாள் மாதங்கி. காற்றின் ஓசை திடீரென நிலை குத்தியது. அசைந்த மரக்கிளைகள் அமைதி கொண்டன. மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு கல் தூண் தெரிந்தது.

“யாரும் அழைத்தால் வராதவள், எவரையும் அழைக்காமல் வர வைப்பவள், வந்தாரை வாழ வைப்பவள் எங்கள் காளி" அந்தக் கல் தூணில்  தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

மாதங்கியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அந்தப் பழமையான காளி கோவிலின் கதைகள் வெறும் புராணமில்லை. அவள்  இடறி விழுந்தது ஒரு வகை அழைப்பு என்று நம்பத் துவங்கினாள் மாதங்கி. இப்பொழுது தைரியமாக கோவிலுக்குள் கால் வைத்தாள். அவள்  கோயிலுக்குள் கால்வைத்தவுடனே, பின் வாயில் தானாக மூடியது.

மாதங்கி இருட்டுக்குள் நின்றாள். தீப ஒளி மட்டும் அவள் முன்னே பிரகாசமாய். அடுத்த நிமிடத்தில்,  அதை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கோயிலின் உள் கற்பகிரகத்துக்குள் இருந்த காளியின் உருவம் கையில் வாள் ஏந்தி,கழுத்தில் கபால மாலையோடு ஒளி பொருந்தும் கண்களோடு உயிரோடு இருப்பது போல்  நின்றிருந்தது. ஆனால் அந்தப் பார்வையில் கோபம் இல்லை. அன்பு மட்டுமே நிறைந்து வழிந்தது. மாதங்கி மௌனமாகக் கண்ணீருடன் தரையில் விழுந்தாள். தன்னையறியாமல், அவளது வாய் மந்திரங்களை  சொல்லத் தொடங்கியது.

ஓம் ஸ்ரீம்  ஹ்ரீம் க்ரீம் காளி காயை நமஹ.
ஓம் காளி காயை வித் மஹே 
சம்சான வாசின்யை தீமஹி
தன்னோ கோர பிரசோத்யாத்
ஓம் காளி நம
ஓம் கபாலினே நமஹ
ஓம் காந்தாய நம 

தவத்தில் ஆழ்ந்தபடி இருந்த மாதங்கியின் நாவிலிருந்து அழகான மந்திர உச்சாடனங்கள்.

அதே சமயம் ஆதிவாசிகள் மந்திரவாதியைப் போன்ற ஒருவனைப் பிடித்து இழுத்து வந்து காளிதேவியின் சிலையின் முன்னால் தள்ளினார்கள். கதறிக்கொண்டு விழுந்த அவன் "ஐயோ என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள், தாயே என்னை மன்னித்துவிடம்மா" என்று கைகூப்பினான். இத்தனை நாளும் கோவிலைத் தேடி  வருபவர்களை அவன்தான் நரபலி கொடுத்திருக்கிறான் என்பதை ஆதிவாசிகள் கண்டுபிடித்து இருந்தனர். 

ஆதிவாசிகளின் கோபகே குரல்கள் அடங்கவும், காணாமல் போனவளைத் தேடி எல்லா இடங்களிலும் அலைந்த குழுமம் காளி கோவிலை வந்தடையவும்  சரியாக இருந்தது. அனைவரும் கோயிலுக்குள் முகம் நிறைய தேஜஸுடன், தாண்டவம் தணிந்த சக்தியாய் நின்றிருந்த மாதங்கியைக் கண்டு அவர்களையும் அறியாமல் இருகரம் கூப்பினர். காளிதேவியின் கண்கள் மெதுவாகக் மூடியது.  

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் ஷண்முக வடிவு, கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன் ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

இரண்டாவது இன்னிங்ஸ் - மூர்த்தி, கௌசல்யா ஞானேஸ்வரன், லோகேஸ்வரி


தன்னாசி டீ'யின் இரண்டாவது மடக்கை உறிஞ்சவும் கழுதை போஸ்டரை கடித்து இழுக்கவும் சரியாக இருந்தது. டீயோடு கையில் இருந்த டம்ளரை வலது கையில் பிடித்துக்கொண்டே 'ஆய்...ஆய்...' என சத்தம் போட்டுக்கொண்டே சைக்கிள் அருகே ஓடினார். ஓடும் போது கைக்கு குச்சி போன்று ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என தேடினார். எதுவும் கிடைக்கவில்லை. கழுதையின் அருகே சென்று வெறும் கையையே குச்சி போல் பாவித்து ஓங்கி ஓங்கி விரட்டினார். கழுதை, தன்னாசியை கண்டும் காணததுமாக மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது. கழுதையை பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் தன்னாசி டீயை உறிஞ்சிக்கொண்டே கழுதையை பார்த்துக்கொண்டிருந்தார். 

தன்னாசி 15 வயதில் முருகன் தியேட்டரில் வேலைக்குச் சேர்ந்தார். தியேட்டரில் படம் மாற்றினால் சுற்று வட்டாரங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டுவது தான் தன்னாசியின் முக்கிய பணி. அதிகாலை 4 மணிக்கெல்லாம் பக்கெட்டில் பசையை ஊற்றி சைக்கிள் கேரியரில் வைத்து போஸ்டர்களை தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவார். போஸ்டர் ஒட்டிய பின் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது, லேட்டாக  வருபவர்களுக்கு சீட் தேட டார்ச் அடிப்பது போன்ற சிறு சிறு வேலைகளை செய்வார். மற்ற தியேட்டர்களை போல முருகன் தியேட்டரும் மூடு விழா கண்டதால் வெவ்வேறு வேலைகளுக்கு சென்று பார்த்தார். 30 வருடங்களாக மைதாவில் காய்ச்சிய பசையுடனும் போஸ்டர் பேப்பர்களுடனுமே இருந்தவர். அவற்றின் வாசனை அவருக்கு ஒரு வித போதையை தந்தது என்றும் கூட வைத்துக்கொள்ளலாம். தன்னாசியால் மற்ற வேலைகளை செய்ய முடியவில்லை எனினும் வயிற்று பிழைப்புக்காக எதோ கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்தார். 

இப்போது தன்னாசிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் என்றே சொல்லலாம். தமிழகத்தின் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் இறந்த பிறகு நிறைய அரசியல் கட்சிகள் தோன்றின. ஒரே கட்சிக்குள் நிறைய அணிகள் தோன்றின. அந்த கட்சிகளும், அணிகளும் அடிக்கடி எதாவது போஸ்டர் அடித்துக்கொண்டே இருந்தன. போஸ்டர் என்றால் கட்சி பாகுபாடு இன்றி அனைவரது நினைவுக்கும் வருபவர் தன்னாசி தான். எனவே எந்த கட்சி அல்லது அணி போஸ்டர் அடித்தாலும் அவற்றை ஊர் முழுக்க ஒட்டும் பொறுப்பு தன்னாசியிடம் தான் வரும். ஆரம்பத்தில் ஆர்வ கோளாறில் அந்தந்த அணிகளை சார்ந்தவர்களே போஸ்டர்களை ஒட்டிக்கொண்டு இருந்தனர். பின் போஸ்டர் ஓட்டுவதால் தங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என நினைத்தார்களோ என்னவோ தன்னாசியிடமே போஸ்டர் ஒட்டும் வேலையை கொடுத்து விட்டார்கள்.

இன்று ஒட்டுவதற்காக எடுத்து வந்திருக்கும் போஸ்டர் கூட அடுத்த வாரம் ஆரம்பிக்கப்போகும் ஒரு புதிய கட்சியின் போஸ்டர்கள் தான். காலை நான்கு மணிக்கு ஆரம்பித்தவர் ஏழு மணி வரை ஒட்டிவிட்டு தேநீர் இடைவெளிக்காக டீ கடைக்கு வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாகவே போஸ்டர் ஒட்டும் வேலையை காலை நான்கு மணிக்கு ஆரம்பித்து எட்டு மணிக்குள் முடித்து விட்டு ஒன்பது மணிக்கெல்லாம் பந்தல் போடுவது, லைட் கட்டுவது,  பெயிண்ட் அடிப்பது என வேறு வேலைகளுக்குச் சென்று விடுகிறார். இப்படி ஒருவாரமாக தன்னாசி அரக்கபரக்க வேலைக்கு செல்ல காரணம் உள்ளது.

தன்னாசி உயிருக்கு உயிராக நேசிக்கும்  தன் ஒரே மகள் ரம்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை சேகரோடு திருமண ஏற்பாடு செய்து இருந்தார். தன் மகளின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மாப்பிள்ளை வீட்டார் கூறியபடி பத்து பவுன் நகையும், சீர் வரிசையுமாக எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே தன்னாசியின் குறிக்கோள். அதற்காக எந்த நேரத்திலும், யார் என்ன வேலை சொன்னாலும் செய்யக் கூடிய நிலையில் தன்னாசி இருந்தார்.

ஆனால் பிழைகள் நிறைந்த தன் வாழ்க்கையை நினைத்து, தன்னாசி மிகுந்த கவலையில் அவ்வப்பொழுது ஆழ்ந்து விடுவது உண்டு. குடிப்பழக்கத்தால் பணத்தை சேமிக்க முடியாமல், மனைவியை அடித்து வேதனைப்படுத்தியதை நினைத்து, இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவரை அவரே நொந்து கொள்வார். “30 வருஷமா வேலை செய்கிறேன். மதுவுக்கு அடிமையாகி சில வருஷம் சம்பாதிச்ச பணம் எல்லாம வீணாக, திருந்திய பின்பும் வேலை சரியாக கிடைக்கலையே!" என்ற எண்ணம் அவரின் மனதை வாட்டவே செய்தது.

தன்னாசியின் வாழ்க்கையை திசை திருப்பியவள் – அவரின் அன்பு மகள் ரம்யா. ரம்யா பிறந்த பிறகே தன்னாசி கொஞ்சம், கொஞ்சமாக குடியை விட்டு விலகினார். மகளின் சிரிப்பு, தன்னாசியை விட்டு விலகாத அவளின் நெருக்கமான பாசம், நேசம் அனைத்தும் அவரை மெதுவாக மாற்றியது. தன்னாசியின் மனைவி சித்ரா மறைந்தபின் ரம்யா மட்டுமே வாழ்க்கையின் மிக முக்கியத்துவம் நிறைந்தவளாக மாறி இருந்தாள்.

ரம்யா அரசு பள்ளியில் படித்து, தன் முயற்சியால் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடித்து இருந்தாள்.  ஒரு வருடமாக மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஒரு பெண்ணாக, தன் அப்பாவை வாழ்வில் திருத்திய பெருமை அவளுக்கே உரித்தானது.

தன்னாசி தன் பிள்ளை பெரியவள் ஆக, ஆக மறைந்த மனைவி சித்ராவை நினைத்து அவரை அவரே சபித்துக் கொள்வார். அவளிடம் செய்த தவறுகள், கொடுத்த காயங்கள் ஒவ்வொன்றையும் தினமும் நினைத்துப் பார்த்துக் புலம்பிக் கொண்டே இருப்பார். 'நான் என் மனைவிக்கு இப்படி கொடுமையை செய்தேன், என் மகளுக்கு யாராவது இப்படிச் செய்தால்?' என்ற பயம் அவரை பாடாய்படுத்தியது. ரம்யா பத்து வயதாக இருக்கும்போதே அவள் அம்மா சித்ரா இறந்து விட,  அப்போது இருந்தே அவளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தவர் தன்னாசிதான்.

ரம்யா, தன்னைக் கண் போல காத்துக்கொள்ளும் அப்பாவை விட்டு விலகவே மாட்டாள். கல்யாணம் பற்றி பேசும்போதும், "நான் கல்யாணம் ஆகி போய்ட்டா உங்களை யார் பார்த்துக்குவாங்க? நாம கடைசி வரை இப்படியே இருக்கலாம்ப்பா" என்று கூறுவாள்.

ஆனால் தன்னாசி “நான் எத்தனை நாளைக்கு உன்னை பார்த்துக்க முடியும்?. உன்ன நல்ல மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கக்கணும். உன் அம்மாவை நான் கஷ்டப்படுத்துன மாதிரி உன்னை யாரிடமும் அப்படிக் கஷ்டப்பட விட மாட்டேன்” என்று சொல்லி ஒவ்வொரு நாளும் சாமியைவேண்டிக் கொண்டே இருப்பார்.

தன்னாசியின் சிந்தனையெல்லாம் அவரின் மகளை குறித்தே இருக்க, அவரின் வாழ்நாளில்  செய்த தவறுகளை குறித்து  தன் மகளிடம் தினமும் பகிர்ந்து கொள்வார். மதுவின் பிடியில் சிக்கிய ஏராளமான குடும்பங்களைப் பார்த்து “நான் அதிலிருந்து தப்பிச்சேன். மகாலட்சுமி மாதிரி நீ என் பிள்ளையா பொறந்ததால் தான்” என சொல்லிக் கொண்டே இருப்பார். அதே பிழை மீண்டும் நிகழாமல் இருப்பதில் முழு கவனமாக இருந்தார்.

போஸ்டர் ஒட்டும் வேலையை முடித்த பின் வேறொரு கட்சியினர் கொடுத்திருந்த கொடிகள் கட்டும் வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு வந்து சேர்ந்தார் தன்னாசி. 

சிறு வீடாக இருந்தாலும் நேர்த்தியாக வைத்திருப்பாள் ரம்யா. அவளின் பேச்சும், செயலும், உடை அணியும் விதமும் நேர்த்தியானதாகத்தான் இருக்கும். தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மகளுடன் சற்று நேரம் பேசினால் தான் தன்னாசிக்கு அந்த நாள் முழுமையடைந்தது போல் இருக்கும். இன்றும் வழக்கம் போல தனது புலம்பலை ஆரம்பித்த தன்னாசியை இடைமறித்து  "நீங்கள் திருந்தி வந்துட்டீங்க. உங்கள மாதிரி இருக்கறவங்கள நீங்க மாத்திடனும்" என ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து கைபேசி அழைப்பு வர, எடுத்துப் பேசிய தன்னாசிக்கு  வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

அப்பாவின் முகம் மாறியதையும் அவருக்கு வியர்த்துக்  கொட்டியதையும் கவனித்த ரம்யா, "அப்பா யார் போன்ல? என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள். 

"அது ஒன்னும் இல்லமா..மாப்பிள்ளை வீட்ல இருந்து..." என்று இழுத்தார். 

"என்ன சொன்னாங்க அப்பா?" என்று ரம்யா திரும்ப அழுத்தமாக கேட்டாள். எதையோ மூடி மறைப்பது போல.

"அது ஒன்னும் இல்லம்மா. நான் பார்த்துக்கிறேன். நீ போய் வேலையை பாரு" என்று எதையும் சொல்லாமல் தவிர்க்க முற்பட்டதை உணர்ந்த ரம்யா, 

"இல்ல ஏதோ இருக்கு. என்னன்னு இப்பவே சொல்லுங்க" என்று அதட்டினாள்.

தன்னாசி எதுவும் பேசாமல் இருந்தார். மௌனம் காத்த தந்தையிடம்,

"இப்ப சொல்றீங்களா இல்லையா?" என கோபத்தோடு கேட்டாள்.

"சரி மா நான் சொல்றேன் ஆனா நீ..."

" முதல்ல சொல்லுங்கப்பா" என்றாள் ரம்யா.

"மாப்பிளையோட அப்பாவுக்கு திடீர்னு காலையில நெஞ்சுவலியாம்"

"அச்சச்சோ இப்ப எப்படி இருக்கார்? எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்?"

"இல்லம்மா அது சாதாரண நெஞ்சு வலி தானாம். வீட்டுக்கு வந்துட்டாங்களாம். ஆனா 'கல்யாணம் இப்ப வேண்டாம்' அப்படின்னு சொல்றாங்கம்மா"

"இப்ப வேண்டாமா..இல்ல இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்றாங்களா?"

"எனக்கும் அதுதாம்மா ஒன்னும் புரியல"

"நம்ம நேர்ல போய் பார்த்து பேசிட்டு வருவோம்ப்பா"

"நீ வர வேண்டாம்மா. நான் காலைல போய் பார்த்து பேசிட்டு வரேன்"

"இல்லப்பா. நான் உங்கள தனியா அனுப்ப தயாரா இல்லை. நானும் வரேன். இப்பவே போகலாம் வாங்க"

என்ன செய்வதென்று புரியாத குழப்பத்துடன் ரம்யாவுடன் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றார் தன்னாசி.

வீட்டு வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து யூ டியூப் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த சம்பந்தி இவர்கள் வரவை எதிர்பார்க்கவில்லை. இவர்களை பார்த்ததும் யோசனை கலந்த முகத்தோடு தனது மனைவியை அழைத்தார். 

"ஓ நீங்களா‌..அதான் நான் போன்ல சொல்ல வேண்டியதை சொல்லிட்டேனே" என்றார் சம்மந்தியம்மா. உடனே ரம்யா அப்பாவை கோபத்தோடு பார்த்துவிட்டு "சரி தாங்க..நாங்க சொல்ல வேண்டியதை சொல்லிரனும் இல்லையா..இங்க பாருங்க..நேத்து துணி தைக்கும் போது என் கையில ஊசி குத்திருச்சு. அதனால எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் இதை சகுன தடையா நினைக்கிறேன்.  அடுத்தது பெண் வீட்டு காச வச்சு பொழப்பு நடத்த நினைக்கிற உங்க குடும்பத்துல நான் வாழ விரும்பல. எவன் ஒருத்தன் அவன் உழைப்பை நம்பி 'ரெண்டு பேரும் உழைச்சு முன்னேறலாம்' அப்படின்னு நினைக்கிறவரை , பெரியவங்க சொன்னா தலையாட்டனுங்குற தேவை இல்லாம பகுத்தறிவோட நடந்துக்கிற ஆம்பளைய நான் தேடிக்கிட்டு இருக்கேன். அப்படி ஒருத்தரை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். அதனால எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்".

மாப்பிள்ளை வீட்டார் எதுவும் பேசாமல் அமைதி காக்க ரம்யா தொடர்ந்தாள்.

"நீங்க உங்க பையன வேற எங்காவது 20 பவுனுக்கோ, இல்ல 30 பவுனுக்கோ, இல்ல ரொக்கத்துக்கோ, இல்ல ஒரு புது பைக்குக்கோ, ஒரு காருக்கோ விக்கிறதுக்கு முயற்சி செய்யுங்க. நான் பொருள் இல்ல. என்ன வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது".

இப்படி கட கட கடவென பேசி முடித்தவளை கண்கள் விரிய விரிய பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தி வீட்டு அம்மா 'நல்லவேளை. இப்படி வாய் பேசுறவ என் வீட்டுக்கு வரல' என்று ஏதோ சாதித்ததாய் நினைத்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டு வீட்டில் நுழைந்தார்.

"வாங்கப்பா போகலாம்" என்று தன் தந்தையை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள் ரம்யா.

கல்யாணம் நின்று போனதை நினைத்து ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் தன் மகள் அவளுக்காக அவளே பேசியதை நினைத்து பெருமிதத்தோடு அவள் கையைப் பிடித்து தன்னாசி நடக்கத் தொடங்கினார். தெரு முனையில் தன்னாசி ஒட்டிய போஸ்டரையே பார்த்துக்கொண்டு நின்றது ஒரு கழுதை.

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் மூர்த்தி, கௌசல்யா ஞானேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)