அவனது வானம் - ரிஸ்வான்

ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026இல் முதல் பரிசு பெற்ற சிறுகதை

அவனது வானம் - எழுதியவர்: ரிஸ்வான் 

 

அவன் தலையை நிமிர்த்தி  தொலைந்து போன தனது வானத்தைத்  தேடிக் கொண்டிருந்தான்.  வெறும் நீலநிறத்தை வானமாக அவன் மனது ஏற்றுக் கொள்வதே இல்லை. வரண்ட கந்தல் மேகங்களாவது இல்லையென்றால் வாழ்க்கையைத் தேடி அலையும் பறவைக் கூட்டமாமாவது, வழி தவறி விட்ட ஒரு பறவையாவது வானில் அவன் கண்ணில் படும் வரையில் அவன் தொலைந்து போன தனது வானத்தை தேடிக் கொண்டுதான் இருப்பான்.

 அவனுக்கு என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது. “கோவேறு கழுதையே” ,“ஹபஷி நாயே” என்று யார் எப்படி அழைத்தாலும் திரும்பி பார்ப்பான்.  அவனது கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு மனிதர்களுக்கு ஒரு சத்தம் தேவைப்பட்டது.   

ஏழை நாட்டில் அதிலும் ஏழையாகப்  பிறந்தவன்  எரித்திரியா(ஹபஷ் ) மண்ணில் பிறந்த அனாதை ஹபஷி. அவன் வயிறு உணவுக்காகவும் தாகத்திற்கு ஏங்கும் பொழுது அவைகளைத் தேடி அலைவான். மற்றபடி இந்த பூமியில் எதையும் எப்போதும் அக்கறையாக தேடியதில்லை, தேடிய எதுவும் அவனுக்குக் கிடைத்ததுமில்லை. 

அவன் பார்த்து மகிழும் அவனோடு திரியும் வானமும் வெப்ப பாலைவனமும் ஓட்டகங்களும் ஆடுகளும்தான் அவனது சிறிய உலகம். அவனது வானத்தை அவன் மிகவும் நேசித்தான். அவன் போகிற இடங்களுக்கெல்லாம் அதுவும் அவனுடன் முணுமுணுத்துக் கொண்டே வழித் துணைக்கு வருவதாகவும், நடக்கும் போது கூரையாகவும், படுத்து உறங்கும் போது போர்வையாகவும், பாதுகாப்புத்  தருவதாக நினைத்துக் கொள்வான்.

சுலைமான் பதோவிக்கு ஒட்டகங்கள் ஆடுகள் போல் ஹபஸியும் ஒரு கால்நடை, விற்பதற்கும் அடித்து துன்புறுத்துவதற்கும். சுலைமான் பதோவி அரேபியாவின் பது இனத்தை சேர்ந்த காட்டு அரபி.  அவனிடத்தில் முரட்டுமூர்க்க சுபாவத்தை தவிற வேறு எதுவும் இருப்பதில்லை. கிழவன் சுலைமானின் ஆடுகளையும், ஒட்டகங்களையும் பாலைவனத்தில் மேய்க்கும் பொறுப்பாளி அவன்தான்.

ஆடுகள் பாலைவனத்துத்  தைம் புதர்களில் ஊசி இலைகளை முட்கள் குத்தாமல் லாவகமாக  மேய்ந்து கொண்டிருந்தன.  ஸம்ர் மரத்தின் கிளைகளில் நீண்டு காய்த்து தொங்கிக் கொண்டிருக்கும் காய்களையும் இலைகளையும் ஒட்டகங்கள் தங்களது தடித்த மஞ்சள்பூத்த பற்களால்  கவ்விப் பிடித்து இழுத்து ஆவேசமாக வேகவேகமாகத்  தின்று கொண்டிருந்தன. 

 ஒட்டகங்கள் தின்று மிச்சம் வைத்த இலைகளின் நிழல் திட்டுத்திட்டாக கிழிந்த கந்தல் துணியைப் போல்  பாலைவன கந்தக பூமியின்மேல் விரிந்து இருந்தது. ஸம்ர் மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டுதான் அவன் தொலைந்து போகும் தனது வானத்தை எப்பொழுதும் தேடுவான். 

வெப்பசலனக் காலத்து புழுக்கம் அவனது  தடித்த ஒட்டகத் தோலை உரித்து உப்பை தடவிக்கொண்டிருந்தது. வெப்பக் காலத்து புழுக்கத்தில்தான் பேரிச்சைக் குலைகள் சிவந்து பழுக்கும் அறுவடைக்காலம்.  

அவனது தோளில் இருந்து சரேலென்று சரிந்து இறங்கி தொங்கிக் கொண்டிருக்கும் தடித்து, அடர்ந்த  நீண்ட ஜலபியா எனும் அங்கியில் வியர்வை உப்பு கிறுக்கிய வரி ஓவியங்கள் படிந்திருக்கும்.  அந்த அங்கி அவனுடனே பிறந்து அவனுடனே வளர்ந்தது போல் இருக்கும். தோளில் தொங்கி கொண்டிருந்த கர்பா எனும் தோல் பையை எடுத்து அதில் உள்ள தண்ணீரை சரித்து உலர்ந்து உப்பு பூத்துப்போன தனது உதடுகளை நனைத்துக் கொண்டான்..

அரேபிய மண்ணில் ‘பது’ இனத்தவர்தான் பழங்குடியினர், சஹாரா மண்ணுக்கு சொந்தக்காரர்கள். அவர்களின் வாழ்வாதாரமும் இனத்தொழிலும் செல்வமும் ஆடுகளும் ஓட்டகங்களும்தான். சுலைமான் கிழவன் ஒட்டகங்களையும், ஆடுகளையும் ‘மெஹர்’ ஆக (பெண்ணுக்கு ஆண் கொடுக்கும் வரதட்சிணை) கொடுத்து ஏற்கனவே இரண்டு பதுப்பெண்களை திருமணம் முடித்திருந்தான்.   சுலைமானுக்கு ஒட்டகங்களும் ஆடுகளும் பெண்களுக்கான பண்டமாற்று பொருட்கள்.

நீண்நேரத்திற்கு பிறகு அவன் தேடிக் கொண்டிருந்த வானம் அவனுக்கு தென்பட்டது. சில பறவைகள் உஸ் என்ற சப்தத்துடன் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. அவன் பறவைகளைப் பார்த்து மெல்லியதாக சிரித்தான். அவனது வானம் தொலைந்து போய் திரும்பக் கிடைத்த சந்தோஷமாக இருக்கலாம்.  மண்ணில் சாவகாசமாக உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருந்த ஒட்டகத்தின் மீது சாய்ந்து தனது தோளில் மாட்டியிருந்த தண்ணீர் உள்ள  தோல்பை மீது லேசாக தட்டித் தட்டி தனது முரட்டுக் குரலால்  பாட ஆரம்பித்தான். 

 “ எங்கே செல்கிறாய் எனது வானமே..
வறண்டுபோன எனது பூமி
தாய்ப்பாலுக்காக ஏங்கி அழும்
சப்தம் உனக்கு கேட்பதில்லையா
தாகத்தால் உப்பு பூத்த 
எனது  பாலைவன பூமியை ஏன்
நிராகரித்து விட்டு செல்கிறாய்
நாங்கள் மரணிக்கும்  முன்
மழைத் தூறல்களில்
ஒரு துளியாவது எங்கள்மீது
தூவி விட்டுப் போ
வறண்டுப்போன
உயிர்களில்  ஈரமான
புன்னகை மலர் ஒன்று பூக்கட்டும்”

 வானத்தில் மேகங்களைப் பார்க்கும் போது பாடப்படும் எரித்ரியா நாட்டு  கிராமிய பாடல் நினைவுக்கு வந்தது. கர்பாவை சாய்த்து சிறிது நீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு  உதடுகளை நாவால் தடவிக் கொடுத்து ஈரமாக்கினான்.

 சூரியனின் நிறம் மஞ்சளாக  மாறத்தொடங்கியது. பசியோடும் தாகத்தோடும் இருப்பவனுக்கு ஒரு ஆரஞ்சுபழத்தை நினைவு படுத்தியது. மாலை நேரத்தில் பறவைகள் தங்களின் கூடுகளுக்கு அமைதியாகத்  திரும்பிக் கொண்டிருந்தன. நிச்சயம் அதன் அலகுகளுக்கு நடுவே கூட்டில் பசியுடன் இருக்கும் குஞ்சுகளுக்கு இரை இருந்திருக்கும்.  அதனால்தான் காலையில் பறந்து செல்லும் பறவைகளைப்போல் சப்தங்கள் இல்லாமல்  மௌனமாக பறந்து சென்று கொண்டிருந்தன. மாலையில் கூடுகளுக்கு திரும்பும் பறவைகள் கூட்டம்தான் தினம் அவனுக்கு அவனது இருப்பிடத்திற்கு திரும்பி போகச் சொல்லி வற்புறுத்திவிட்டுச்  செல்லும்.

அவன் எழுந்து தழைகளை அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்த ஒரு ஒட்டகத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.  அதன் முதுகில் இருந்த பருத்த திமிலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தனது வலதுகாலால் லேசாக வயிற்றில் தட்டினான்.   ஒட்டகம் எழுந்து நின்றது.  எக்காளாமிடுவது போல் வாய்க்கு அருகில் கைகளைக்  குவித்து வைத்து முகத்தை  உயர்த்தி கட்டைக் குரலில்  சப்தமிட்டான்.

தைம்  முட்புதர்களில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளும் ஒட்டகங்களும் அவனைப் பின் தொடர்ந்தன. ஒட்டகக் குழுவினருக்கு வழிகாட்டும் குழு தலைவனாக தன்னை மனதுக்குள் நினைத்து நெஞ்சை நிமிர்த்தி சிரித்துக் கொண்டான்.

அவன் தலைநிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். வானம் அவன் போகும் இடமெல்லாம் அவனுடன் வந்து கொண்டிருந்தது. எப்பொழுதாவது பூக்கும் பாலைவனப் பூவைப்போல மனதுக்குள் ஏதோ சந்தோஷ ஈரம்  கசிந்தது. அவன் தனது கூடாரத்தை நெருங்கும்போது சுலைமான் கிழவன் தனது வாகனத்தின் பின்புறம் இருந்த பெரிய தண்ணீர்த் தொட்டியில் இருந்து ஒட்டகங்கள் தண்ணீர் அருந்தும் தொட்டியில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தான். கிழவனைக் கண்டதும் ஹபஷி பயத்தில் ஓட்டகத்தின் மேலிருந்து கீழே குதித்து முழங்கால்களில் நின்றான். 

தூரத்தில் ஹபஷி ஒட்டகத்தின் மீது  வருவதைக் கண்டு  கோபத்தில் சுலைமான் தலையில் சுற்றிக் கட்டி இருந்த கருப்பு வடக் கயிற்றை கழற்றிக் கொண்டு அவனை அடிக்க ஓடினான்.  

“வேசியின் மகனே” என்று கத்தியபடியே சுலைமான் கிழவன் ஹபஷியின் முகத்திலும் முதுகிலும் வட்டால் ஆத்திரம் தீர மிருகத்தனமாக ஓங்கி ஓங்கி அடித்தான். ஹபஷியின் கன்னங்களும்  உதடுகளும் கிழிந்து ரத்தம் கசிந்தது.  மண்ணில் சுருண்டு கிடந்த ஹபஷியைக்  காலால் எட்டி உதைத்தான். 

 “ நாயின் மூத்திரத்திற்குப் பிறந்தவனே”

சுலைமான்  கிழவன் ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் உணவுக்காக கொண்டு வந்த உலர்ந்து போன பழைய அரேபிய ரொட்டிகள் நிறைந்த மூட்டைகளை வாகனத்தின் பின்னாடி இருந்து நெட்டிக்கீழே தள்ளி விட்டு ஆத்திரத்துடன் விர்ரென்று மணல்மேடுகளில்  புழுதி பறக்க வாகனத்தில் சென்று விட்டான் கோபத்துடன்.  

மண்ணில் சுருண்டு கிடந்த ஹபஷி மல்லாந்து படுத்து தனது வானத்தை தேடினான். வானத்தில் தேய்ந்து உடைந்த சின்ன நிலாத்துண்டும் நட்சத்திர மின்மினிகளும் முளைக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தன அவனுக்காக. 

“நான் துயரப்படும் போதெல்லாம் நீதான் ஒரு தாயைப் போல என்னை அரவணைத்து முத்தமிடுகிறாய் எனது வானமே” அவன் வலியை மறந்து லேசாக வானத்தைப் பார்த்து சிரித்தான்.

ஹபஷி மெதுவாக எழுந்து தனது கூடாரத்தினுள் சென்று படுத்துக் கொண்டு கூடாரத்தின் திறப்பின் வழியாக தெரியும் அவனது வானத்தை பார்த்துக் கொண்டே வலிகளை மறந்து மெதுவாகத் தூங்க முயற்சித்தான்.  நிலவும் நட்சத்திரங்களும்  உலர்ந்த வெள்ளை மேகங்களுமாக அவனது வானம் தொலைந்து போகாமல் விடியும் வரை அவனுடனே தங்கி இருந்ததன. அவன் அமைதியாக உறங்கிப் போனான்.

மறுநாள் சுலைமான் கிழவன் திரும்பவும் வந்தான். ஹபஷி ஒருவேளை கூடாரத்தை விட்டு ஓடிப்போய் இருப்பானோ என்ற சந்தேகமாக இருக்கலாம். ஹபஷி உறங்கிக் கொண்டிருந்தான். 

“கழுதையே..இன்னுமா உறங்குகிறாய் நாயின் மகனே”  என்று கத்திக் கொண்டே ஆத்திரத்துடன் காலல் எட்டி எட்டி உதைத்தான். ஹபஷி அரண்டு போய் எழுந்து நின்றான்.

ஒட்டகங்களும் ஆடுகளும் தண்ணீர்த் தொட்டியில் நீர் அருந்திக் கொண்டிருந்தன வழக்கமாக விடிவதற்கு முன் மந்தைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விடுவான். இரவு முழுவதும் வலியால் அடிக்கடி உறக்கம் கலைந்து போனதில் விடியலில் தூக்கம் கண்களை அப்பிக்கொண்டது. ஹபஷி என்றுமே தன் பொறுப்பில் உள்ள ஆடுகளையும் ஒட்டகங்களையும் பசியோடு இருக்க விட்டதில்லை. 

சுலைமான் கிழவன் நன்றாகக்  கொழுத்த  செம்மறி ஆடுகளை  வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டான். ஹபஷி  சுலைமான் ஒட்டகங்களுக்காக கொண்டு வந்த உலர்ந்த அரேபிய ரொட்டித் துண்டு ஒன்றை எடுத்து  தின்று விட்டு தண்ணீர்த் தொட்டியில்  ஒட்டகங்களுடன் அவனும் வாயை வைத்து தண்ணீரை உறிஞ்சிக் குடித்தான்.  வழக்கம்போல் மந்தையை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்.  பாலைவனத்து வெப்பக் காற்று உரசி காயங்களுக்கு எரிச்சலூட்டியது.  ஸம்ர் மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு இலைகளையும் காய்களையும் ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டிருந்தன. ஒரு ஒட்டகத்தின் மீது சரிந்து அமர்ந்து கொண்டு ஹபஷி ஓட்டகங்களுடன் பேச ஆரம்பித்தான்.

”எனது வாழ்நாள் முழுக்க உங்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். .நான் மரணிக்கும் முன் மனிதர்களிடம் நிறைய பேச வேண்டும் என்கிற ஆசையுடன் வாழ்கிறேன். மனிதர்கள் என்னையும் ஒரு மனிதனாக மதித்து   நான் பேசுவதை உங்களைப்போல் அமைதியாக அமர்ந்து கேட்க வேண்டும். புதினா தழைகள் மிதக்கும் சுலைமானி தேநீரை சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஊற்றி  உறிஞ்சி குடித்துக் கொண்டே அவர்கள் என்னுடன் பேசி மகிழ வேண்டும் இடையிடையே நான் “ இஸ்மா அன குல்தளக்”  (கேளுங்கள் உங்களிடம் நான் பேசுகிறேன்) என்று நான் இடை மறித்துப் பேச வேண்டும். எனது இடையூறுக்கு அவர்கள் மதிப்பு தந்து அவர்கள் பேசுவதை நிறுத்தி விட்டு எனது பேச்சிற்கு மரியாதை கொடுத்து கவனித்துக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான்  இந்த பூமியில் மனிதர்கள் நிலைக்கு நானும் உயர்ந்து விட்டதாக கருதி மகிழ்வேன்” என்று சொல்லி விட்டு ஹ ஹா என்று ஓட்டகங்களை பார்த்து சிரித்தான்.

அவன் நிமிர்ந்து தனது வானத்தை தேடினான். இப்பொழுதெல்லாம் ஒரு சிறு பறவையாவது வானத்தில் பறந்து சென்று அவனது வானத்தை தொலைந்து விடாமல் பார்த்துக் கொண்டது.  மாலை நெருங்கியதும் ஒட்டகங்களையும் ஆடுகளையும் அழைத்துக் கொண்டு  கூடாரத்தை நோக்கி நடந்தான். ஹபஷி தண்ணீர் தொட்டியில் நீர் பருக அவைகளை  அழைத்து சென்றான். 

கூடாரத்தின் முன்பு சுலைமான் வாகனத்துடன் இன்னொரு வாகனமும் நின்று கொண்டிருந்தது.  சற்றுத் தள்ளி நிற்கும் வாகனத்தில்  ஒரு பெண் கருப்பு அங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். ஹபஷி ஒன்றும் புரியாமல் ஓட்டகங்களை தடவி கொடுத்தபடி  சுலைமான் கிழவனை பார்த்துக் கொண்டிருந்தான்.

 “இங்கே வா  எனது நேச அயா” கிழவன் அடுத்த வண்டியில் அமர்ந்து இருந்த பெண்ணை வரச்சொல்லி அழைத்தான்.

 “உன்னை மணப்பதற்காக நான் தருவதாக வாக்களித்து இருந்த மஹர். நீ விரும்பும் ஓட்டகங்களையும் ஆடுகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்” என்றான்.

அயா ஒவ்வொன்றாக தொட்டுத் தடவிப் பார்த்து கொழுத்த ஐந்து ஓட்டகங்களையும் ஒன்பது ஆடுகளையும் அவள் வந்த வண்டியில் ஏற்றச் சொல்லிவிட்டு சுலைமான் கிழவனிடம் வந்து “உனது மஹரை எனது சகோதரன் முஹசின் சாட்சியாக ஏற்றுக் கொண்டேன் இந்த நிமிடம் முதல் எனது ஆண் துணையாக உன்னை ஏற்கிறேன்”. என்று சொல்லி விட்டு கிழவனின் வண்டியில் ஏறி  அமர்ந்து கொண்டாள்.

சுலைமான் பது ஹபஷியிடம் வந்து “இவள் எனது மூன்றாவது மனைவி அயா” என்று சொல்லிவிட்டு கிழவன் ஒட்டகத்தின் சாயலில் சிரித்தான்.

வண்டியில் இருந்த  இறைச்சி உணவையும் பழங்களையும் எடுத்து ஹபஷியிடம் கொடுத்து விட்டு, ”மாமிச உணவு சாப்பிடு ஹபஷி நாயே எனது புது மனைவியின் வருகையால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றபடியே சுலைமான் கிழவன் தனது மூன்றாவது மனைவி அயாவுடன் புறப்பட்டு சென்றான். வண்டியின் பின்நோக்கு கண்ணாடி வழியாக அயா ஹபஷியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹபஷி கொஞ்சமாக உண்டுவிட்டு மீதமுள்ள உணவையும் பழங்களையும் ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்கும் கொடுத்தான்.

சில நாட்களுக்குப் பிறகு சுலைமான் கிழவனின் போக்குவரத்து குறைந்து போயிருந்தது.  ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்கும் குடிதண்ணீர்  தட்டுப்பாடு வந்தது. அயாவின் சகோதரன் முஹ்ஸின் சுலைமான் கிழவனின் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி விட்டு சென்றான்.

ஒரு நாள் அயா பெரிய  ட்ரக் ஒன்றை கொண்டு வந்து நிறுத்தி ஒட்டகங்களையும் ஆடுகளையும் அதில் ஏற்றிக் கொண்டிருந்தாள். ஹபஷி ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவளது சகோதரன் முஹ்ஸின் உடன் இருந்தான்.

ஆட்டுச்சந்தையில் ஆடுகளும் ஒட்டகங்களும் ஏலத்தில் நல்ல விலை போயின. ரியால்களை கட்டாக எண்ணிக் கட்டிக்கொண்டாள்.

பழைய காலத்து அரேபிய வீடு. வீட்டின் முன் அடர்த்தியான இலைகளுடன் இலந்தை மரங்கள்  இருந்தன. அயா சாவியைக் கொண்டு முன் கதவைத் திறந்தாள். முஹ்சின் வீட்டிற்குள் நுழைந்து திண்டின் மீது அமர்ந்து கொண்டான்.  ஹபஷி வெளியே நின்று கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் இருந்து கிழவன் பலமாக இருமிய படி அயாவிடம் ஏதோ சத்தமிட்டுக் கத்திக் கொண்டிருந்தான். கொஞ்சநேரம் கழித்து அயா ஹபஷியை உள்ளே அழைத்து சென்றாள். சுலைமான் பதோவி உடலுக்கு முடியாமல் கட்டிலில் படுத்து இருந்தான். படுக்கையில் கழிவுகளின் நாற்றம் எடுத்தது.

“ஹபஷி நாயே சீக்கிரம் சுலைமான் கிழவனை சுத்தம் செய்” என்று கத்தினாள் அயா.

 ஹபஷி மெதுவாகக்  கிழவனை படுக்கையில் இருந்து தூக்கிச்சென்று குளியல் அறையில் கழுவி சுத்தம் செய்து ஆடைகளை மாற்றிப்  படுக்க வைத்தான்.

“சுலைமான் கிழவனை பராமரிப்பதுதான் இனி உன்வேலை” என்று அதிகாரமாக சொல்லி விட்டு ஹபசியை சுர்ரென்று ஒரு பார்வையால் முறைத்து விட்டு முஹ்ஸினுடன் சென்று விட்டாள். மனிதர்களுடன் பேசுவதற்கும் வாழ்வதற்கும் இன்னொரு உலகம் கிடைத்து விட்டதாக ஹபஷி நினைத்து மகிழ்ந்து கொண்டான்.

அயாவின் பார்வை சுரீர் என்று இறங்கி அவனுக்குள் எதையோ தேடியது. நரம்புகளில் வெப்ப சலனக் காலத்து குமைச்சல். இப்பொழுதெல்லாம் ஹபஷி தனது வானத்தை தேடுவதில் அக்கறை எடுத்துகொள்வதில்லை. வானத்தின் நினைவு வரும்போதெல்லாம் அயாவின் கண்களின் சுரீர் என்ற மின்னல் வெளிச்சம் அவனது வானத்தை மறைத்து மூடிக்கொள்கிறது.  இதுவரையில் அவன் உணராத உணர்வு. ஆதாம் ஏவாளைத் தேடவைத்த உணர்வாக அல்லது ஈரப்பாக இருக்கலாம்.

அயா அம்மாவின் வீட்டில் தங்குவதும் சுலைமான் கிழவனை வந்து பார்ப்பதுமாக இருந்தாள். அயா வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஹபஷி வீட்டிற்கு வெளியே இலந்தை மரநிழலில் வந்து அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பான்.

சுலைமான் கிழவனை சுத்தப்படுத்திப் படுக்கை விரிப்புகளை மாற்றும் பொழுது அயாவும் உடனிருப்பாள். ஹபசியின் மனதுக்குள் தீப்பிடிக்க ஆரம்பித்தது. அடிக்கடி அயாவும் இரவு நேரங்களில் சுலைமான் பதோவியின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தாள். ஹபசி இலந்தை மரத்தின் கீழே படுத்து கிடப்பான். 

சுலைமான் கிழவன் கட்டிலில் சாய்ந்து உட்காரும் நிலைக்குத் தேறினான். இப்பொழுதெல்லாம் அயா ஹபஷியை அதிகாரம் செய்வதில்லை. அவனைப் பார்த்து மெல்லியதாக சிரிக்க ஆரம்பித்தாள்.  அவன் மனதுக்குள் இதமாக பூக்கள் பூத்தன.

ஒருநாள் வழக்கம் போல் அயா அம்மா விட்டிலிருந்து வந்திருந்தாள். சுலைமான் பதோவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அயா மெதுவாக வெளியே வந்தாள். ஹபஷி முழங்காலுக்கு மேல் கைகளை கட்டிக் கொண்டு நிமிர்ந்த படியே இலந்தை மரத்தின் இல்லைகளுக்கு நடுவே கந்தல் கந்தலாக தெரிந்த வானத்தைப் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“வீட்டுக்குள் வா கோவேறு கழுதையே” என்று அயா ஹபஷியை செல்லமாக அழைத்தாள்.

சுலைமான் கிழவனுக்கு உதவி தேவையாக இருக்கும் என்று நினைத்து ஹபசி ஒன்றும் விளங்காமல் அயாவின் பின்னால்  சென்றான். அயா  அவனை உள்ளே அழைத்து சென்று கதவைத் தாழிட்டாள். திண்டில் சாய்ந்து கொண்டு ஹபஷியை அருகில் அமரும்படி சொன்னாள். ஹபஷி தயங்கி தயங்கி நின்றான். அயாவின் வாசனை அவனுக்குள் சென்று அவனை நிலைதடுமாற வைத்தது.

 “உன்னுடைய உண்மையான பெயர் என்ன?”

 அவன் நெடுநேரமாக தயங்கினான்.

 “தயங்காதே கருப்பு நாயே, பேசு!”

 “நீ ஆடோ, ஒட்டகமோ இல்லையே உடனே உன்னுடன் பேசுவதற்கு.  நான் அவைகளுடன் தான் நிறையப் பேசிப்பழகி இருக்கிறேன்.  எப்பொழுதாவதுதான் மனிதர்களிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி இருக்கிறேன். அதிலும் அவர்கள் தான் அதிகமாக பேசுவார்கள். அதில் கோபத்தை தவிற வேறு ஒன்றும் இருக்காது.”

 “உன் பெயர் என்ன சொல்”

 அவன் மிகவும் யோசித்தான். நிஜப்பெயர் நினைவுக்குள் சிக்கவில்லை.  சிறிது நேரத்திற்கு பின் “துர்ஷி” என்றான் மெதுவாக.

 “துர்ஷி…(ஊறுகாய்)? வெள்ளரிக்காய் ஊறுகாயா…அது என்னப் பெயர்..?”

அவள் சிரித்தபடியே அவனை ஏளனமாக ஊடுருவிப் பார்த்தாள்.

“ம்ம்ம். எனது ஏழ்மையான கிராமத்தில் நல்ல உணவுகளை உண்ணவோ கண்ணால் பார்பதோ எளிதானதல்ல.  அதனால் பிடித்த உணவு வகைகளின் பெயர்களை எங்கள் பெயர்களோடு இணைத்து இட்டு கட்டி அழைப்பார்கள்”  அவன் தடுமாறித் தடுமாறி ஒவ்வொரு வார்த்தையாக சிரமப்பட்டு கொச்சையான உச்சரிப்பில் பேசினான்.

 “உன்னை துர்ஷி என்றே அழைக்கவா?”

 அவன் தலை குனிந்தபடி “ம்ம்” என்றான்.

அயா தனது கருப்பு அங்கியைத் தளர்த்தினாள். முதல் முறையாக ஒரு பெண்ணின் மர்ம தேசம். துர்ஷி நிலை தடுமாறினான். துர்ஷியை இழுத்து தன்மீது சரித்துக் கொண்டாள்.

அயா பரவசத்தால் கண்களை மூடித்திறக்கும் போது, சுலைமான் பதோவி தட்டுத் தடுமாறி கையில் இருந்த ஊன்று கோலால் அயாவையும், துர்ஷியையும் வெறியோடு தாக்கினான். இருவருக்கும் தலையிலும் முகத்திலும் காயம் பட்டு ரத்தம் கசிந்தது. அயா ஆத்திரத்துடன் எழுந்து சுலைமான் பதோவியை நெட்டித் தள்ளினாள்.

 “கிழட்டு மிருகமே”

சுலைமான் கிழவன் நிலைத் தடுமாறி கீழே விழுந்தான். துர்ஷி ஒன்றும் விளங்காமல் அசந்துபோய் நின்று கொண்டிருந்தான். அயா சுலைமான் பதோவியை உசுப்பினாள். சுலைமான் பதோவி இறந்து கிடந்தான். நிலைமையை உணர்ந்த அயா அரைகுறை ஆடையுடன் வாசலுக்கு வந்து சத்தம் போட்டு அலறினாள். ஹபஷி ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான்.  

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கூட்டம் கூடி நின்றது. சரசரவென்று நுழைந்த போலீஸ் அயாவையும்.துர்ஷியையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சைரன் அலறலுடன் பறந்தது.  தன்னை துன்புறுத்தி உறவு கொண்டதாகவும், காப்பாற்ற வந்த தனது கணவனைக் கொன்றதாகவும் அயா நீதி மன்றத்தில் கூறினாள். துர்ஷி அமைதியாகத் தலையைக் குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான். அயாவின் இனிமையான வாசனையும் மென்மையும் அவனுக்குள் இன்னும் நிரம்பிக் கிடந்தன.

அயா உலர்ந்து போன அவனது பூமியின் மீது முதன்முதலில் விழுந்த சிறுபனித்துளி. துர்ஷி மறுப்பு இல்லாமல் குற்றத்தை ஏற்றுக் கொண்டான்.

ஃகைசுமா பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே கூட்டம் சேர்ந்தது. பின்பக்கம் கைகள் கட்டப்பட்டு கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் போலீசார் துர்ஷியை கைபிடித்து அழைத்து வந்து நான்கு சாலைகள் கூடும் இடத்தின் நடுவில் முழங்கால் இட்டு அமரச்செய்தனர்.

“துர்ஷி எனப்படும் ஹபஸ் நாட்டை சேர்ந்த இவன் சுலைமான் பதோவியின் மனைவியுடன் வன்முறை உறவு கொண்டதாலும் தடுக்க வந்த பதோவியை உயிர் சேதம் செய்ததாலும் இவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது.” என்று மெகா போனில் அறிவிப்பு செய்தனர்.

கையில் நீண்ட உறைவாளுடன் இருந்த அரபி ஒருவன் உரையிலிருந்து வாளை உருவினான். ஒருவன் தூர்ஷியின் அருகில் சென்று அவனது தலையைக் குனிய வைத்து வெட்டுவதற்குத் தோதாக கழுத்துக்கு கீழே துர்ஷியின் ஆடையை முதுகு தெரியும் வரை சுருட்டி வைத்தான்.

துர்ஷி “உங்களிடம்தான் பேசுகிறேன் சகோதரர்களே கேளுங்கள்” என்று சத்தமிட்டுக் கத்தினான்.

கச்சக் எனும் சத்தத்துடன் கழுத்து வெட்டப்பட்ட உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு அடிக்க மண்ணில் சாய்ந்தான் துர்ஷி எனும் ஹபஷி.

கடைசி நேரத்தில் ஹபஷி மனிதர்களிடம் பேச வேண்டும் என்கிற ஆசையில் அழைத்தானா அல்லது “எனது கண்களை திறந்து விடுங்கள்.மரணத்திற்கு முன் எனது வானத்தை தேட வேண்டும் “ என்று சொல்ல நினைத்திருந்தானா..

துர்ஷிக்காக வானத்தை  நிமிர்ந்துப் பார்த்தேன். அது தொலைந்து போயிருந்தது.

வாழ்க்கையை உயர்த்தும் புத்தகம் - ரிதன்யா ஷங்கர்



நிமிர்ந்து பார்
சகமனிதனை
பணிந்து போ
உன் இலக்கிடம்

வளர்ந்து செல்
வாழ்க்கையில்
மலர்ந்து வா
நல் எண்ணங்களில்

ஒரு முறை கூர்ந்து பார்
உலகம் வியக்க  வளர வைப்பேன்!
நான் உன் கையில் இருக்கும் அலைபேசி அல்ல..
உன் அறிவை அரியாசனத்தில் அமர்த்தத் துடிக்கும்
புத்தகம் பேசுகிறேன்!

அமிழ்ந்து கிடக்காதே 
அலைபேசித் திரையில்..
ஆழ்ந்து தேடு உன் வாழ்வை 
புத்தக ஆலயத்தில்,

வாசிப்பை மெருகேற்றும் 
வீட்டிற்கோர் புத்தகச்சாலை
அறியாமையின் இருள்நீக்கி 
ஒளியேற்றும் எதிர்காலம் 

காலத்தே பயிர் செய்,
தவறாமல் நற்பெயர் செய்,
அதை இப்போதே- இன்றே செய்
அறிவே அகத்தின் மெய்!

"நாளை பார்ப்போம்" 
என்பவன் காலத்தின் அடிமை,
எதையும் இன்றே தொடங்குபவனே
 வரலாற்றின் மாவீரன்!

ஈரோடு வாசல் சிறுகதைப் போட்டி 2026- வெற்றியாளர்கள்

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026 முடிவுகள் இன்று நடைபெற்ற  ஆட்சிக்குழு பதவியேற்பு விழாவில் வெளியிடப்பட்டது.  8 பேர் கொண்ட குழு அமைத்து, 283 கதைகளோடு தொடங்கி, நான்கு சுற்றுகளில் மொத்தம் 19 நடுவர்களின் அயராத பங்களிப்பில் தேடிக்கிடைத்த 3 வெற்றியாளர்கள் + 3 ஆறுதல் பரிசுக்குரியவர்கள் விவரங்களை இங்கே பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ் எழுத்துலகில்  உங்கள் பங்களிப்பு மென்மேலும் தொடரட்டும்.  











ஈரோடு வாசல் சிறுகதைப் போட்டி 2026- இறுதிச்சுற்றுக்குத் தேர்வான கதைகள்

ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி மூன்றாம் சுற்றில் பங்கேற்ற 39 கதைகளும் வெவ்வேறு களங்களில் நல்ல படைப்புகளாக இருந்தது. அதிலிருந்து நடுவர் குழுவினரால்  இறுதிச்சுற்றுக்குத் தகுதியானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் பட்டியலை அதன் ஆசிரியரின் புகைப்படத்தோடு  வெளியிடுவதில் ஈரோடு வாசல் - தமிழ்முற்றம் மகிழ்ச்சி கொள்கிறது.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

நிறைவுக்கட்டத்தை எட்டியிருக்கும் போட்டியில் வெற்றிப்பரிசுகளைத் தட்டிச்செல்பவர்கள் யார் யார்? அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில்...
























கவிஞர் ஈரோடு தமிழன்பன் - நினைவஞ்சலி - கௌசல்யா ஞானேஸ்வரன்

தமிழின் ஒவ்வொரு சொல்லிலும், உணர்விலும், சுவாசத்திலும் கலந்து வாழ்ந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை மரியாதையுடன் நினைவுகூரும் இந்தத் தருணம், என் வாழ்க்கையில் மறக்கவியலாத நிகழ்வு. தமிழ்ச் சமூகத்திற்கு இவர் தந்த படைப்புகள்  மிகவும் சக்தி வாய்ந்தவை.  ஈரோட்டிற்கும்  பெயரையும் புகழையும் தந்த பன்முக ஆளுமை படைத்த தமிழன்பன் அவர்கள், காலத்தால் நம்மை விட்டு நீங்கினாலும் தமிழ்ச் சொற்களில் கலந்துவிட்டவர். எளிமையான வார்த்தைகளால் சாமானிய மக்களும் தமிழை நேசிக்கவும், ரசிக்கவும் வைத்தவர்.

"காம்புக்கு வேறென்ன கௌரவம் வேண்டும்? தாங்கிக் கொண்டிருக்க ஒரு ரோஜா பூ இருந்தால் போதாதா?” என்று அழகாய் கவி பாடியவர்.

இயற்கையையும், பருவ காலங்களையும் ரசிக்கக் கற்றுத் தந்த கவிஞர் அவர். “குடை பிடித்து கொண்டாட வந்ததல்ல மழைக்காலம்; கதவடைத்து கொண்டாட வந்ததல்ல நிலாக்காலம்,”என்று மழையையும், நிலாவையும் அனுபவித்து கொண்டாடச் சொன்னவர்.

மக்களின் வாழ்வியலில் ஆழமாக ஊறிக்கிடக்கும் வறுமையை, “தாலியின் பெருமை கணவனுக்கு தெரியும்; கணவனை விடவும் மனைவிக்கு தெரியும்; இந்த இருவரை விடவும் மார்வாடிக்கு தெரியும்,”என்று ஒரு வரியிலேயே உணர்த்தியவர்.

புத்தகம் வாசிப்பின் அவசியத்தையும் அவர் இடையறாது வலியுறுத்தினார். “அரிசி, பருப்பு வாங்குவது போல வாரம் ஒரு முறை ஒரு புத்தகம் வாங்க வேண்டாமா?”என்று கேள்வி கேட்டவர். "விளக்கேற்றி புத்தகம் படிப்பது, வெளிச்சத்தைக் கொண்டு வெளிச்சத்தைப் பிடிப்பது போல!”என்றும், “பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோராவது புத்தகமாகப் படிக்கப்படுவீர்கள்” என்றும் வாசிப்பை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற சொன்னவர்.

அவரது கவிதைகள் கேள்விகளாகவும், வினாக்களாகவும்  தொடர்ந்து சிந்திக்க வைக்கும்.

“ரோஜாப்பூ உடம்புக்கு நோய் என்றால், காத்து நின்ற முட்களின் மனநிலை என்னவாக இருக்கும்?”
“வானத்தோடு பேசுவதற்கு மரம், பூமியில் இருந்து எதை கற்றுக்கொள்கிறது?”என்று புதுமையான சிந்தனைகளை முன்வைத்தவர்.

தமிழுக்கு உலகக் கவிதைகளையும், உலகிற்கு தமிழ் கவிதைகளையும் அறிமுகப்படுத்தியவர் அவர். “என் கவிதையில் நனைந்த மழைக்கு வருத்தம் — என் கையில் குடை,”என்று சொல்லும் போது, கவிஞரின் மென்மையும், மனிதநேயமும் ஒருசேர வெளிப்படுகிறது.

வயது என்பது வெறும் எண்ணிக்கை என்பதில் அவர் உறுதியானவர். “முகத்தின் சுருக்கத்தில் நீ படித்த புத்தகங்களின் வரிகள் இருக்கட்டும்,” என்று கூறி, “முதுமை என்பது வாழ்க்கையின் ஓரம் அல்ல; வாழ்க்கையின் சாரம். மரணத்தின் மார்பில் பால் குடிக்கும் பருவம்  முதுமை.” என்று முதுமையையும் அழகாக வர்ணித்தவர்.

“வாழ்க்கை எனக்குப் பின்னரும் தொடரும். அதன் தொடர்ச்சிக்கு என் பண்புகளும், படைப்புகளும் உதவும். கவிதையே என் அடையாளம்,” என்று தனது வாழ்க்கையின் அர்த்தத்தை சுருக்கமாகச் சொன்னவர்.

தோல்வி கண்டு துவண்டு விடாமல் இருக்க  தாயின் பரிவோடு அவர் சொன்ன வரிகள் ,“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டு சொன்னது பூமி ‘ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ!’”என்று  மீண்டு எழுவதற்கு உற்சாகப்படுத்தியவர்.

கவிதை குறித்து, அவர் கூறியது "கவிதை என்றால் என்ன என்று கேட்காத போது தெரியும்; கேட்டுவிட்டால் தெரிவது கடினம்,”என்று சொல்லி, எதுகை மோனை தெரியாத தாய்மார்களின் தாலாட்டுக்கும் கவிதை சொன்னவர். “எதற்கப்பா எதுகை மோனை மின்னலை பிடித்து வைக்கவா சட்டி பானை?” என்று கவிதையை இயல்பாக்கியவர்.

விண்மீன்கள்,  வானம் என அவரது கற்பனைகள் எண்ணிலடங்காதவை. குறிப்பாக எனக்கு மிக பிடித்த மீன் கவிதைகளில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் இயற்கையின் நுணுக்கங்களையும் மனித உணர்வுகளையும்  ஒன்றாக்கி விண்மீன்களை கனவுகளாக வும், சிந்தனைகளாகவும், கவிதைபடுத்தி இருப்பது ரசிக்க தகுந்தது. அதில் சில வரிகள்:

“வானம் எழுதிய காதல் வரிகளின் அச்சுக் குலைந்த எழுத்துச் சிதறல், விண்மீன்களாம்"

”மேக மெத்தை மேல் மின்னும் கன்னிகள்" என்று நட்சத்திரத்தை வர்ணிப்பதும் அழகு.

”நிலா விளக்கருகில் படிக்கும் வான வகுப்பு மாணவர்கள்"  என்றும்

"இருட்டுப் பைக்குள் எடுத்துப் போடா சில்லறை செம்பொற்காசுகள்" என்றும்

"பகலில் உருண்ட கதிரோன் உகுத்துச் சென்ற வியர்வைத் துளிகள் விண்மீன்கள்" என்று வர்ணிப்பது என்ன ஒரு அழகான கற்பனை!

"பரந்த வெளியில் நடனம் புரியும் இரவு மயிலின் தோகை விழிகள்"  

"பகலோன் தழுவிய விண்ணின் உடலில் நகக்குறி செய்த ஒளிவடுக்கள்"

"மெருகிட்டு மேகம் துடைத்து வைக்கும் வானக்கடையின் வைரத் துண்டுகள்" 

"இரவு பெண்ணால் நிலா பானையில் கடைந்த தயிரின் சிதறல் துளிகள்" என்றெல்லாம்
அவரது கற்பனைகள் வானத்தில் மின்னும் விண்மீன்கள் போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கின்றன.

இத்தகைய அற்புதமான படைப்புகளையும், ஆழமான சிந்தனைகளையும் தமிழுக்கு அளித்த சாதனையாளர், தமிழின் பெருமைமிகுந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன். அவரது கவிதை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. ரசிக்கவும், வியக்கவும் வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

காசி பார்க்கப் போறோம் (பகுதி 9) - யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 9) காசி தரிசனம் நிறைவு பெற்ற நாளில்.. ****

அன்று தில்கேஷ்வர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஆறரை மணிக்கே கிளம்பி தங்கும் விடுதியை விட்டு வெளியே வந்தோம். பேட்டரி ஆட்டோக்கள்  வரிசையில் நின்றன.  ஓட்டுநர்களிடம் கட்டணம் பேசி  பயணத்தை தொடங்கினோம். சாலைகளில் சிலர் கழுதைகள் மீது மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.  இங்கு பாரம் சுமந்து செல்லும் கழுதைகளை அதிகம் காண முடிந்தது. குறுகலான தெருக்களிலும் குப்பைகள் குவிந்து கிடந்தன. பல சிறிய தெரு இடுக்குகளில் நுழைந்து ஆட்டோ ஓட்டுநர் வேகமாகச் சென்றாலும், பேட்டரி ஆட்டோ என்பதாலோ என்னவோ டீசல் ஆட்டோக்களை விட வேகம் குறைவாக இருந்தது பாதுகாப்பு உணர்வை தந்தது.

காலை நேரத்தில் சாலை நேர உணவுக் கடைகளின் முன் எண்ணெயில் போட்டு எடுத்த கச்சோரியும், சப்ஜியும் பொறித்தெடுக்கப்பட்ட மொறுமொறுப்பான ஜிலேபியும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  காலையில் தேநீரோடு மொறுமொறு ஜிலேபியை சிலர் சுவைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கடைகளுக்கு முன்பு  தமக்கு கச்சோரி கிடைக்குமா என்று ஏக்கத்தோடு தெருநாய்கள் நின்றிருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டே வந்ததில் தில்கேஷ்வர் ஆலயம் வந்து விட்டது.

கோவிலின் வடிவமைப்பு  செட்டிநாடு வீடு போன்று இருந்தது. தாழ்வாரத்தில் நின்று பார்த்தால் கோபுரம், சிவலிங்கம், நந்தி —இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும்படி கோவில் கட்டப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் சிறப்பு எனக் கூறினார்கள்.


தில்கேஷ்வர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் தினமும் ஒரு எள் முனை அளவு வளர்ந்து வருவதாகக்  கூறுகின்றனர். சிவலிங்க வடிவத்தின் ஒரு புறம் சந்திரன், மற்றொரு புறம் சூரியன் உள்ளது. அந்த சிவலிங்கத்திற்கு நீர் ஊற்றி நாமே அபிஷேகம் செய்யும் வகையில் சிறிய குவளையும் வைத்திருந்தார்கள்.

சிவனை வணங்கி வெளியே வந்தபோது “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை சொல்ல வைத்து, காசிக்கு வந்ததன் பலனை அங்கே இருந்த அர்ச்சகர் விளக்கினார். அதன் பிறகு விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அதே ஆட்டோவில் அறைக்குத் திரும்பினோம்.

அன்று காலை உணவின் போது,  ஒரு வாரமாக சமைத்துக் கொடுத்த பணியாளர்களுக்கும் அங்கே இருந்த ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தோம். எங்களால் முடிந்த சிறு தொகையை வழங்கி வாழ்த்துகளுடன் உணவை முடித்தோம்.

அதன்பின், உறவினர்கள் மற்றும் நாகப்பன் தம்பதியருடன் காசி விஸ்வநாதர் கோவில் தரிசனத்திற்கு மீண்டும் கிளம்பினோம். ஆட்டோவில் சென்று பி.டி.ஆர் மாலில் இறங்கி அங்கிருந்து, நந்தி சதுக்கம் வழியாக சிவனை நோக்கி நடந்து சென்றோம். காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் நுழைவாயில் முன்பு பேப்பர் கப்பில் பால் விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்றால் விஸ்வநாதருக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து வரலாம்.

அன்று பொது தரிசன வரிசையில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இணைந்து கொண்டோம். அங்கே வரிசையில் நின்றிருந்த மூன்று வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று இறைவன் நாமத்தை உரக்கச் சொல்லியபடியே நகர்கிறார்கள். நம் மனமும் உள்வாங்கி இறைவனின் நாமத்தை  நம்மையறியாமலே உச்சரிக்க ஆரம்பிக்கிறது.

வரிசையில் நகர்ந்து விஸ்வநாதர் அருகில் சென்றபோது,  லிங்கத்தை பெரிய குழாய் மூலம் நீர் பாய்ச்சி தூய்மை செய்து கொண்டிருந்தனர். அங்கே பொருத்தப்பட்ட பெரிய திரைகளில் ஏற்கனவே எடுத்திருந்த விஸ்வநாதர் தரிசனக் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இறைவனின் சிரசில் நாம் கொண்டு சென்ற பால், இளநீர் ஆகியவற்றை நாமே ஊற்றலாம். அந்த இடத்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், பணம் அளித்தவர்கள் அருகில் சென்று தொட்டு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு பெற்றனர். பணம் அளிக்காதவர்கள் தள்ளி நின்று இறைவனின் நாமத்தை உரக்கச் சொல்லி வெளியே வந்தனர்.

எங்களுடன் வந்த நாகப்பன் தம்பதியர் அன்னபூரணி அம்மன் கோவில் செல்லலாம் என்றனர். நாமும் செல்வோமா என உறவினர்களுடன் யோசித்துக் கொண்டிருக்கையில் தம்பதியர்கள்களை விட்டு பிரிந்து வழித்தடம் மாறிவிட்டோம். எது வழி என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. எங்களுடன் வந்த பாட்டியம்மாவையும் அழைத்துக் கொண்டு ஒருவழியாகத் தேடி ஆலயத்தைக்  கண்டடைந்தோம்.

ஆலயத்திற்குள் சென்ற நேரத்தில் அன்னபூரணி தாயாருக்கு சிறப்பான தீபாராதனை நடந்தது. மனமுருக வழிபட்டு, பிரசாதமாக வழங்கிய லட்டுவை வாங்கி கொண்டு வெளியே வந்தோம். கோவிலிருந்து திரும்பி வரும் வழியெங்கும் பாசி மணிகளை கையில் வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்கள். பத்து ரூபாய்க்கே பாசிகள் கிடைத்தன. திருட்டுப் பயம் இருக்கும் சூழலில் இலகுவாக வாங்கி அணியலாம்.

எங்களுடன் வந்த பாட்டி, “அன்னபூரணி சிலை வேண்டும். புடவை, மற்றும் தோடு வாங்கிக் கொடுங்கள்” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தார்.  அவரை அழைத்துச் சென்று தேவையானவற்றை சாந்தி அக்கா வாங்கிக் கொடுத்தார். அவர் வாங்கிய புடவை, கவரிங் நகைகள் அனைத்தும் தன் ஊரிலுள்ள அம்மனுக்காக என்றார். அவரின் பக்தி எங்களை ஆச்சரியப்பட வைத்தது. ஒன்றரை மணிக்குள் அறையை காலி செய்ய வேண்டியிருந்ததால் விரைவில் திரும்பினோம்.

மதிய உணவு முடித்து, எங்கள் பொருட்களை இரண்டு அறைகளில் சேர்த்தோம். மாலை வேளையில் சிலர் மீண்டும் தரிசனத்திற்குச் சென்றனர். நாங்கள் கடைவீதிக்குச் சென்றோம். கடைவீதியில்  கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. சாலையோரங்களில் வியாபரிகள் பொருட்களைப் பரப்பி விற்றனர். காவல்துறை வாகனம் வருகிறது என்ற செய்தி பரவ ஆரம்பித்ததும் விற்பனையாளர்கள் பொருட்களைச் சுருட்டிக் கொண்டு ஓடினார்கள். காவல்துறை வாகனம் கடந்ததும் மீண்டும் வந்து கடை அமைத்தனர்.  காவல் துறை அதிகாரிகள்  வந்துட்டு போயிட்டார்கள் இனி வரமாட்டார்கள் என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பரவுவதை பார்க்க முடிந்தது.

கவரிங் நகை, பாத்திரங்கள், பொம்மை, ஜவுளிகடைகள்  ஸ்வெட்டர், குல்லா,  என பலவகை விற்பனை பொருள்களின் கடைகள் நிறைந்து இருந்தன. சாலையோரங்களில் பொருள்களை விற்பவர்களிடம் விலை குறைவாக பேரம் பேசி வாங்கலாம். பெண்களுக்கான சுடிதார் பேண்ட், டாப் வகைகளையும் கைகளில் வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்கள். அவர்களிடமும்  பேரம் பேசி வாங்கலாம். கடைத்தெருக்களில் உள்ள சில உணவுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கே  லஸ்ஸி நன்றாக இருக்கும் என்றார்கள். பால், பாதாம், மசாலா கலந்த பானத்திற்கு தண்டாய் என்றும் பெயர் சொன்னார்கள்.

பொருட்கள், உணவுகள் தவிர வண்ணமயமான மிட்டாய்களும் கடைகளில் குவிக்கப்பட்டிருந்தன. வாங்கிய சில மிட்டாய்களில் வண்ணங்கள் வேறாக இருந்தாலும் அதை உண்ணும் போது இலந்த வடையின் சுவை இருந்தது. இந்தி தெரிந்து இருந்தால் பேரம் பேச வசதியாக இருக்கும். தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரிகளும்  இந்தியில் பேசவே விரும்பினர். வீட்டிலுள்ள குழந்தைகள், பிள்ளைகளுக்கான சில பொருட்களை வாங்கிக் கொண்டோம்.

அறைக்குத் திரும்பி இரவு ஏழு மணிக்குள் உணவு முடித்து, இரண்டு வாகனங்களில் பண்டிட் தீனதயாளன் உபாத்யாய ஜங்ஷன் நோக்கி கிளம்பினோம். சுமார் 15 கி.மீ தூரம். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். வழியெங்கும் திருமண ஊர்வலங்கள், பட்டாசுகள், மின் அலங்காரங்கள் கண்களைக் கவர்ந்தன. உத்தரப் பிரதேசம் பெரிய மாநிலம், அதில் நாம் பார்த்தது ஒரு துளி மட்டுமே.

ரயில்நிலையம் சென்று இறங்கிய பிறகு,  லக்கேஜ்களை எடுத்துச் செல்ல எங்களுடன் வந்த பழனிசாமி அவர்கள் உதவினார். அறிமுகம் தெரியாத நண்பர்களோடும், தோழிகளோடும் உருவான நட்பு, பயணத்தை இன்னும் இனிமையாக்கியது. எங்களுடன் பயணத்தில் இணைந்திருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் மகிழ்வைப் பரிமாறிக் கொண்டு மனநிறைவோடு விடைபெற்றோம். 

11:30க்கு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் வந்தது. எங்கள் ஐந்து பேருக்கும் ஒரே கோச் என்பதால், சென்று வந்த பயண அனுபவங்களை  இரண்டு நாட்கள் பேசி ஓய்வு எடுத்துக் கொண்டு, இரண்டு நாள் ரயில் பயணத்தை சுமூகமாக முடித்தோம். காட்பாடியில் இறங்கி ரயில் மாற்றி,  ஆன்மீகத் தலமான காசிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறிய மனநிறைவோடு இரவு 7.30 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தோம்.

பயணிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, உணவு ஏற்பாடுகளையும், தங்கும் விடுதியையும் சிறப்பாக ஏற்பாடு செய்து,  பயணத்தை இனிமையாக அமைத்துக் கொடுத்த ஜெயக்குமார் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் இருந்து உதவிகள் செய்த நண்பர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

இந்தக் கட்டுரை வழியாக உங்களையும்,  திரிவேணி சங்கமம், கயா, காசி விஸ்வநாதர் கோவில், கங்கா ஆரத்தி, அயோத்தி ராமர் கோவில் என தரிசனம் செய்த புண்ணியத் தலங்களை, என் எழுத்தின் வழியாக உங்களையும் தரிசிக்க வைத்திருப்பேன் என்ற மகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும் ஈசனருள் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்.