காசி பார்க்கப் போறோம் (பகுதி 7) - யசோதா பழனிச்சாமி

 *****(பகுதி 7) சரயு நதி வழிபாடும், பாலகர் ஸ்ரீராமர் தரிசனமும்****

முதல் நாள் இரவு நான் மாத்திரை எடுத்துக் கொண்டதால், மறுநாள் காலையில் காய்ச்சல் எதுவும் இல்லை. காலை ஏழு மணிக்கு பிறகு அயோத்தி புறப்பட்டால் சாலையில் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும் என்பதால், விடியற்காலமே கிளம்பினோம்.

மோடி அவர்களின் வருகை காரணமாக இருபத்தி ஆறாம் தேதி நாங்கள் அயோத்தி செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் 26ஆம் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்ததால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், அயோத்தியில் ஒரு நாள் தங்க வேண்டும் என்ற  திட்டம் மாற்றப்பட்டு, காசியிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அலகாபாத்தில் இருந்து எங்களை  அழைத்து வந்த அதே பேருந்து ஓட்டுநர் தான் இங்கும் வந்திருந்தார். காசியிலிருந்து அயோத்திக்கு செல்ல சுமார் 190 கிலோமீட்டர் என்று கூகுளில் அறிந்தேன்.

சாலைகளில், வழியெங்கும் அடர்த்தியாக நின்றிருந்த ஏழிலைப் பாலை மரங்களில், கொத்துக் கொத்தாக பச்சையும், வெள்ளையுமான பூக்கள் மரம் முழுவதும் பூத்துக் குலுங்கி, இலைகள் தெரியாமல் காட்சியளித்தன. இதன் நறுமணம் காற்றில் கலந்து நாசியைத் தீண்டியது. மாலையில் வாடிய மலர்களிலிருந்து வரும் வாசனை ஒருவித துர்நாற்றம் தரும். கடம்ப மரங்களும் இங்கே அதிகமாகக் காணப்பட்டன. உயரமான கடம்பமரத்தின் பூக்கள் சிறிய பந்து போன்ற வடிவத்தில், மஞ்சள்-ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக தெரிந்தன.. வாசனை மிகுந்த மலர். மதுரையைச் சுற்றி கடம்ப மரங்கள் அதிகமாக இருந்ததால் ‘கடம்பவனம்’ என்பது மதுரையின் பழைய பெயர் என்று கேட்டிருக்கிறேன். சில கோவிலில் தலவிருட்சமாக இருக்கும் இந்த கடம்ப மரம் குறிஞ்சி நிலத்துக்குரியதாக இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. நான் ஒரு முறை சாலையில் கிடந்த கடம்பப் பூவை  எடுத்து பெயர் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது,  வழியில் சென்றவர் ‘இது கடம்ப பூ’ என்று சொல்லிச் சென்றார்.

சாலைகளில் காய்கறிகள் குவிக்கப்பட்டு, பச்சைப் பசேலென கீரைகள் வரிசையில் நிறைந்து இருந்தன. நம்மூரில் பார்க்காத வயலெட் நிறக் காய்கள் வித்தியசமாக இருந்தன.மக்கள் விலை பேசிக் கொண்டிருந்தனர். இவ்வாறாக மக்கள் காலையில் தங்களின் தினசரி பணிகளில் இயல்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

ரேபரேலி ஜங்ஷனில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நாங்கள் வந்த பேருந்து, உணவு விடுதி ஒன்றில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வாடகை டாக்ஸியில் பயணம் செய்தோம். சுமார் 20–25 கிலோமீட்டர் சென்ற பிறகு அயோத்தியில் இறக்கிவிட்டனர். 

அயோத்தி ராமரை தரிசனம் செய்யும் முன்பு சரயு நதிக்குச் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் அரசு நிர்ணயித்த பேட்டரி வாகனங்களில் ஏறினோம்.  இருபது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். கோவில் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு வராமல் தடுக்க இந்த பேட்டரி வாகனங்கள்தான் இயக்கப்படுகிறது.  தமிழகத்திலும் இவ்வாறான பேட்டரி வாகனங்களைப் பயன்படுத்தலாம். பழனிமலை அடிவாரங்களில் பக்தர்கள் வசதிக்காக இப்போது பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மதுரை மீனாட்சி, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் மற்றும் மாமல்லபுரக் கடற்கரை பகுதிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு மட்டும் பேட்டரி வாகனங்கள் இயங்குவதாக தகவல் தெரிவிக்கின்றன.

சீதை, ஸ்ரீ ராமர், இலக்குவன் ஆகியோர் விளையாடி மகிழ்ந்த இடம் சரயு நதி என்று கூறினர். ராமர் தன்னுடைய அவதார வாழ்க்கையை முடித்து சரயு நதியில் ஜலசமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. மோட்சம் தரும் நதி என்று இலக்கியங்கள் பகிர்கின்றன.

பேட்டரி வாகனத்திலிருந்து இறங்கி சரயு நதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அங்குள்ள மக்கள் சாலைகளில் எச்சில் துப்புவதைப் பார்த்து மனம் வருத்தத்துக்குள்ளாகியது. பாசிமணிகள் விற்கும் வியாபாரிகள், கொய்யாப்பழம் விற்பவர்கள், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராமர் படங்களை விற்கும் வியாபாரிகள் என சுற்றுலாவை சார்ந்த வாழ்க்கைச் சுழற்சி அங்கு முழுமையாக இயங்கிக் கொண்டிருந்தது.

வியாபாரிகளைக் கடந்து, மண் தரையைத் தாண்டி கல் பதிக்கப்பட்ட பாதையில் நடந்து, படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி சரயு நதியில் பாதங்களை  நனைத்து நின்றோம். அகக்கண்ணில் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்து, நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு நதியை வணங்கிவிட்டு திரும்பி வந்தோம். வரும் வழியில் நீச்சல் பயிற்சிக்கான குளங்களும் அங்கே அமைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம்.  தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. இதற்கு முன்பு சுற்றுலா வந்தவர்கள், “முன்பு இந்த நதிக்கு வரும் வழித்தடங்கள் இவ்வளவு சுத்தமாக இல்லை” என்றனர்.

மோடி அவர்களின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும், படகு சவாரிக்கான வழித்தடங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. கங்கா ஆரத்தி போலவே சரயு ஆரத்தியும் நடைபெறுகிறது என்ற தகவலும் தெரிவித்தனர். சரயு நதி தரிசனம் முடிந்த பிறகு அயோத்தி ராமரை தரிசிக்கப் புறப்பட்டோம். அதே பேட்டரி வாகனத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து இறங்கினோம். 

கோவிலுக்குள் செல்லும் நுழைவாயிலில் மக்கள் வரிசையாக பொதுத் தரிசனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அனைவருக்கும் இலவச தரிசனமே என்பது இங்கு மற்றொரு சிறப்பம்சம். நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனை நடைபெற்றது. கோவிலுக்குள் கைபேசியை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று எங்கள் வழிகாட்டி முன்னரே கூறியதால், கைபேசிகளை வாகனத்திலேயே வைத்து விட்டு வந்திருந்தோம். கோவிலுக்குள்ளேயே பாதுகாப்புப் பெட்டக வசதி இருப்பதும், அங்கு கைபேசிகளையும், உடைமைகளையும் வைத்துவிட்டு பாலராமரை தரிசித்து திரும்பும்போது எடுத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்தோம்.

கோவிலின் நடைபாதையில் நகர்ந்து கொண்டே வரிசையில் செல்ல ஆரம்பித்தோம். கோபுரங்களின் அழகு பிரமிக்கச் செய்தது. மிக உயர்ந்த தரமுடைய பிங்க் சண்ட்ஸ்டோன் கற்களால் கோயில் முழுவதும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மக்ரானா மார்பிள் எனப்படும் ராஜஸ்தான் வெள்ளை நிற பளிங்குக் கல் கருவறையில் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடியவை. கோவிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. பழமையான கல் இணைப்பு முறையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அயோத்தி ராமர் கோயில் வடஇந்திய கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவிலின் கருவறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமரின் சிலை 300 ஆண்டுகள் பழமையான பாறைக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. கோவிலுக்குள் செல்ல மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் லிப்ட் வசதிகள் உள்ளன. நாங்கள் கோவிலின் கிழக்கு திசையில் இருந்து 32 படிகள் ஏறி கோவிலுக்குள் சென்றோம். அங்கே இருந்த ஒவ்வொரு தூணிலும் ராமாயணக் காட்சிகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்தன. தசாவதாரக் காட்சிகளும், சிவன், பார்வதி, விநாயகர் போன்ற தெய்வங்களின் சிற்பங்களும் இடம்பெற்றிருந்தன.

அழகான சிற்பங்களை வடிவமைத்திருக்கும் சிற்பிகளின் திறமையை மனம் நிறைந்து பாராட்டாமல் நகர இயலாது. தூண்களில் செதுக்கப்பட்ட சிவன், விநாயகர் சிற்பங்களைப் பார்க்கும் போது, மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோயிலில் எனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அந்தக் கோவில் அர்ச்சகரிடம் தூணில் செதுக்கப்பட்ட சிற்பத்தைக் காட்டி, “முருகன் மயில் மேல் அமர்ந்து இருக்கும் சிற்பமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “பெருமாள் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்; பெருமாள் கோயிலில் முருகன் சிற்பம் எப்படி இருக்கும்?” என்று கடுமையாகப் பேசியது நினைவுக்கு வந்தது. 

இங்குள்ள ராமர் கோயிலின் தூண்களில் சைவம், வைணவம் என்ற வேறுபாடின்றி அனைத்து தெய்வங்களும் ஒன்றே என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏழு–எட்டு வரிசைகள் நகர்ந்த பிறகு, சுமார் 500 மீட்டர் தூரத்திலிருந்து பார்க்கும் போதே ஸ்ரீ பாலராமர் தங்க கவச அலங்காரத்தில், கருமை நிறக் கண்ணனாக, புன்னகை தவழும் குழந்தை முகத்துடன், கண்களில் குறுஞ்சிரிப்போடு, தோளில் வில்லோடு காணும் காட்சியில் மெய்யுருகிப் போனோம். “ஜெய் ஸ்ரீராம்” என்று மக்கள் குரல் எழுப்பினர். பாலகன் ராமரின் கருணை பொங்கும் பார்வையில் நாமும் பட்டுவிட வேண்டும் என்று அருகே சென்று மக்கள் ஆர்வத்துடன் நின்றுவிட,  “சலோ, சலோ” என்று வேகப்படுத்தும் சீருடையாளர்களின் குரல் கேட்டு ஆனந்தக் கண்ணீருடன் கோயில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தோம்.

ராமர் கோயிலில் நடன மண்டபம், வண்ண மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம், கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்களும்  சூரிய கடவுள், சிவன், தாயார் பார்வதி, விநாயகர் கோயில்களும் உள்ளன. வடக்கில் அன்னபூரணி ஆலயம், தெற்கில் ஹனுமன் ஆலயம், தென்மேற்கு குபேர மூலையில் ஜடாயு சிலை மற்றும் மகரிஷிகள் வால்மீகி, வசிஷ்டர், விசுவாமித்திரர், அகஸ்தியர் மற்றும் நிஷாத அரசன், மாதா சபரி ஆகியோருக்கும் சிறப்பு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘சீதா கோப்’ எனும் கோவில் கிணறும் வளாகத்தில் அமைந்துள்ளது.

ராமர் பிறந்த நாளான ராம நவமி அன்று சூரிய ஒளி நேரடியாக ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிந்தோம். நடைபாதை சுவற்றில் வண்ண ஓவியங்களாக ராமாயணக் கதைகள் வரையப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் இந்தியில் மட்டுமே இருந்தன. ஆங்கிலத்திலும் இருந்திருந்தால் சுற்றுலா பயணிகள் படித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்  என்று தோன்றியது. ராமர் கோயிலுக்கு வெளியே  பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் வாங்கிச் சென்றனர். 

ராம் கோட் என்று நம்பப்படும் பழமையான கட்டிடம் பார்க்க வேண்டிய ஒன்று. இது ராமர் ஆண்ட அரண்மனை என்கிறார்கள். சரியான வரலாறு இல்லை. பைஸபாத் நகரத்தில் மொந்தி மஹால் போன்ற நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் சில உள்ளன. 

கனகபவன் கோவிலில் பட்டாபிஷேகக் கோலத்தில் சீதா, ராமர்–இலட்சுமர் காட்சி தருவதைக்  காணலாம். ராமர்-சீதை திருமணம் முடிந்தவுடன் கைகேயி பரிசளித்த இடம் என்பதாலும்,  தங்கநிறத்தில் ஜொலிப்பதாலும் ‘கனகபவன்’ என்று அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனுமன் கார்கி கோயில் தொன்மையான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இங்கு பால அனுமன் அருள்பாளிக்கிறார். அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் பெற்றபின் அயோத்தி நகரத்தைப் பாதுகாக்க அனுமனுக்கு பொறுப்பு கொடுத்ததாகவும் அதன்படி அனுமன் இத்தலத்திலிருந்து அயோத்தியை காக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயில் பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டதாகவும், 18 ஆம் நூற்றாண்டில் மறுபடியும் கட்டப்பட்டதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன.

நாகேஷ்வர்நாத் கோவில் சரயு நதிக்கரைக்கு அருகில் உள்ள பழமையான சிவன் கோவில். இராமரின் மகன் குஷன் சரயு நதியில் குளிக்கச் சென்ற போது சிவலிங்கம் பொறித்த அவரது கை வளையல் நீரில் விழுந்து விடுகிறது. அதை ஒரு நாகக்கன்னி எடுத்து திருப்பிக் கொடுக்கிறாள். அவள் சிவ பக்தை என்பதால் அவரது பக்தியை மதித்து குஷன் அங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். என்று வாய்வழிக் கதையாகவும், புராணக் கதையாகவும் சொல்லப்படுகிறது.

அயோத்தியில் பல காலகட்டங்களில் ஆட்சியாளர்கள் மாறினாலும், நாகேஷ்வர்நாத் கோவில் மட்டும் எந்த வித இடர்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து வழிபாடு நடைபெற்று வந்ததாகவும், அயோத்தி நகரின் பழமையான அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டில் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நாகபஞ்சமி, சிவராத்திரி சிறப்பான வழிபாடாக செய்யப்படுகின்றது. நாக தோஷம், விஷ நோய்களுக்கு பரிகாரத் தலமாக மக்களால் வழிபடப்படுகின்றது.

இரவு உணவு தயாராகும் வரை ஹோட்டலின் காத்திருப்பு பகுதியில் அமர்ந்து உரையாடினோம். மாலை ஐந்தரை மணியளவில் ராமரின் தரிசனம் மனதை நிறைத்த நிறைவோடு மீண்டும் காசியை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

காசி சென்றால் அவசியம் தரிசனம் செய்து வர வேண்டிய கோயில்கள் என்ன?.. 

(தொடரும்)

 

உளி தாங்கும் கல் - ரிதன்யா ஷங்கர்

 சிற்பி என்பவர் சிலையை செதுக்குவார். தேவையானதை வைத்துவிட்டு, தேவையில்லாதவற்றை செதுக்கி விடுவார். செதுக்கும் பொழுதுதான் சிலை அழகாக மாறுகிறது. பின்னர் அந்த சிலையை கோயிலில் வைப்பார்கள். தினமும் அந்த கடவுள் சிலையை சுத்தம் செய்து, பூஜை செய்து, மனிதர்கள் அதை வணங்குவார்கள். ஆகவே, செதுக்கப்படும் சிலைக்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. இதை ஒரு கதை வழியாக பார்க்கலாம்.

ஒரு ஊரில் தியா என்ற பெண் வளர்ந்தாள். அவளின் தந்தையும் தாயும் கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் இருவரும் கடுமையாக உழைப்பதைப் பார்த்தாலே, அவளுக்கு வெளியே சென்று விளையாட வேண்டும் அல்லது தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. அவள் பள்ளிப் பருவம் தொடங்குவதற்குமுன்பே, “அப்பா-அம்மாவுக்கு நல்ல பெயரை ஈட்ட வேண்டும்” என்ற எண்ணம் அவளது மனதில் நன்கு பதிந்துவிட்டது.

காலங்கள் கடந்தன. அவள் பள்ளி செல்லும் பருவம் வந்தது. பள்ளி சென்றதும் அங்குள்ள சக மாணவர்களுடன் பேசவும், விளையாடவும் தொடங்கினாள். அப்போது அவளுக்கு படிப்பின் முக்கியத்துவம் முழுமையாக புரியவில்லை. ஒரு நாள் பள்ளி முதல்வர், கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது, எவ்வாறு புகழைத் தேடித் தருகிறது என்பதைப் பற்றி உரையாற்றினார். அதை கேட்டதிலிருந்து தியாவிற்கு, எப்படியாவது நன்கு படிக்க வேண்டும், விடாமுயற்சியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவள் ஆறாம் வகுப்பிலிருந்தே நல்ல மதிப்பெண்கள் பெறத் தொடங்கினாள். தொடர்ந்து முதலிடம் பெற்று வந்ததால், அவளுடன் படிக்கும் சில சக மாணவர்கள், “இந்த வயதில் அதிகம் படிக்க வேண்டாம் தியா. இது விளையாட்டு பருவம். ஓரளவுக்கு படித்துவிட்டு நன்றாக விளையாட வேண்டும்” என்று கூறினர். அதை கேட்ட தியா சற்றே மனம் மாறினாள். ஆனால் விளையாடினாலும் முழுமையான மகிழ்ச்சி அவளுக்கு கிடைக்கவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் படிக்கும் தியா, சற்று விளையாட்டுத்தனமாக இருந்தாலும், பெற்றோர்கள் ஒன்றும் சொல்லவில்லை. காரணம், தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் அடுத்த தேர்வில் தியாவின் மதிப்பெண்கள் குறையத் தொடங்கின. இதைக் கண்ட தியாவிற்கு மனம் கேட்கவில்லை; அவள் மிகவும் வருத்தமடைந்தாள். அவளுடன் இருக்கும் சக மாணவர்கள் அவளது வருத்தத்தை சற்றும் பொருட்படுத்தவில்லை; அவர்கள் எப்பொழுதும் போலவே இருந்தனர்.

ஒரு மனிதர் வருத்தமாக இருந்தால், தான் செய்யும் வேலையை குறைவாகவே செய்வார். ஆனால் தியா அப்படியல்ல. செய்ய வேண்டும் என்று எண்ணினால், அதை நூறு சதவீதம் செய்து முடிப்பாள். செய்ய மனம் இல்லாவிட்டாலும் கூட, அதை இருநூறு சதவீதம் செய்வாள். தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நினைத்து மனம் வருந்தினாலும், அதே நாளில் மாலையே வீட்டிற்கு சென்று தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். “நேற்றைவிட இன்று நன்றாக படிக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன் முன்னேறினாள்.

அவளின் கனவு மருத்துவராக ஆக வேண்டும் என்பதே அவளது வாழ்க்கையின் இலட்சியம். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் நெருங்கிக் கொண்டிருந்தது. அதே சமயம் கொரானா போன்ற எதிர்பாராத சூழ்நிலை உலகையே பாதித்தது. ஆன்லைன் வகுப்புகள், இணையத்தில் பிரச்சினைகள், வீட்டிலேயே உடல்நல குறைவு – இவை எல்லாம் ஒன்றாக வந்தது.

தேர்வுக்கு முன்பே தியா கடுமையான வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். முழுமையாக தயாராக முடியவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியவில்லை. அதன் காரணமாக மருத்துவராக ஆகும் கனவு அங்கே முடிந்தது.

பின்னர் அவள் கலைத் துறையைத் தேர்ந்தெடுத்தாள். முன்புபோல் தீவிரமாக இல்லாமல், சற்றே சுமாராகவே படித்தாள். அதற்கேற்றாற்போல் மதிப்பெண்களையும் பெற்றாள். கல்லூரியில் சேர்ந்த பிறகும், அவள் இழந்த மருத்துவர் கனவு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில், கல்லூரியில் ஆசிரியர்கள் அரசு வேலை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்கள். அது மனம் குன்றியிருந்த அவளுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

அந்த நாளிலிருந்து அரசு பணியைப் பற்றி தேடத் தொடங்கினாள். நாம் எதைத் தேடுகிறோமோ, அது நம் கண் முன்னே வருவது போல, அவள் படித்த கல்லூரியிலேயே அரசு தேர்வுகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. கல்லூரி பாடங்களையும், அரசு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் படிக்க வேண்டியிருந்தாலும், அவள் சோர்வடையவில்லை. அதற்குப் பதிலாக ஒரு மந்திரத்தை அவள் பின்பற்றினாள்: “முடியும் போது நூறு சதவீதம் செய்வேன்; கடினமாக மாறும் போது இருநூறு சதவீதம் செய்வேன்.”

வாழ்க்கையில் மருத்துவராக வேண்டும் என்று எண்ணிய அவள், சூழ்நிலை காரணமாக தனது இலட்சியத்தை மாற்றி அரசு ஊழியராக ஆக முடிவு செய்தாள். மருத்துவராக இருந்தாலும் சேவை செய்வதே, அரசு ஊழியராக இருந்தாலும் சேவை செய்வதே என்ற எண்ணத்தால் தன் மனதை ஆறுதல்படுத்திக் கொண்டாள். பல்வேறு பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்தித்தாலும், ஒரு பொழுதும் மனம் குன்றவில்லை. அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் தன்னிடம் கூறிக்கொண்டே முன்னேறினாள்.

இறுதியாக, அவள் வாழ்க்கையில் சந்தித்த அனைத்து பிரச்சனைகளும், கடுமையான நேரங்களும் அவளை செதுக்கி கொண்டே இருந்தது. பல தடைகள் வந்தன. முதல் வாய்ப்பில் தேர்ச்சி ஆகவில்லை. இரண்டாம் வாய்ப்பில் நேர்காணல் வரை சென்றும் தேர்வு ஆகவில்லை.

ஆனால் அவள் கைவிடவில்லை. மூன்றாவது முயற்சியில், அவள் அரசு பணியில் தேர்வு செய்யப்பட்டாள். ஒரு நாள், நியமன உத்தரவு கையில் இருந்தபோது, அவள் நினைத்தாள், "மருத்துவராக ஆகவில்லை. ஆனால் மக்கள் சேவை செய்யும் ஒரு பொறுப்பான அரசு ஊழியராக ஆனேன்". 

அவள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்பமும், தோல்வியும், மாற்றமும் அவளை உடைக்கவில்லை செதுக்கியது. ஒரு சிற்பி தேவையில்லாத கல்லை அகற்றுவது போல, வாழ்க்கை அவளிடம் தேவையில்லாத பயம், குழப்பம், தளர்ச்சி ஆகியவற்றை அகற்றி விட்டது. இப்போது அவள் ஒரு சிலை போல நிமிர்ந்து நிற்கிறாள் – செதுக்கப்பட்டு, உறுதியாக மற்றும் அழகாக.

இளவேனிற் நிலவு - கௌசல்யா ஞானேஸ்வரன்


வெள்ளிக் கொலுசு
மெல்ல சத்தமிட்டு
அழகாய் அடியெடுத்து நீ
தள்ளாடி நடக்கையில்
என்னுள்ளம் சிறகடிக்கும் 

மார்போடு அணைத்துனை 
தாலாட்டு நான் பாட
நிம்மதி என்னைத்  தழுவி
மகிழ்விலே வான்மிதப்பேன்

கண்ணாமூச்சி விளையாடி 
கன்னக்குழி அழகில்  
முத்தங்கள் பதித்து 
களிப்பிலே திளைப்பேனே

இதழ் மூடி புன்னகைத்தாலும் 
இளவேனிற் நிலவு நீ   
இமைக்குள்ளே நின்றாடும்
இனிதான கவிதை நீ

விழிகளில் வித்தை காட்டி
வியப்புறச் செய்பவனே,
வயது ஒன்றைக் கடந்தவனே
இச்சை மொழி பேசி
கொஞ்சும் நாளுக்காய்
நெஞ்சம் ஏங்குதே 
எனது பேரின்ப பேரனே!

காசி பார்க்கப் போறோம் (பகுதி 6) - யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 6) கங்கா ஆரத்தி****

காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சி ஆகிய தெய்வங்களின் தரிசனம் கிடைத்த மனநிறைவோடும் ஆழ்ந்த அமைதியோடும், அந்த ஊர் மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகளையும் பார்த்துக்கொண்டே தங்கும் அறைக்கு வந்து மதிய உணவு முடித்து ஓய்வெடுத்தோம்.

மாலை நான்கு மணிக்கு கங்கா ஆரத்திக்குப் புறப்படலாம் என்று வழிகாட்டி தெரிவித்தார். நான் பார்க்க விரும்பிய கனவுகளில் ஒன்றாக கங்கா ஆரத்தி இருந்தது. அது நிறைவேறும் தருணத்தை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், உடல் மட்டும் சோர்வாக இருந்தது. தொடர்ந்த அலைச்சல், தூக்கமின்மை காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால் கங்கா ஆரத்தி பார்க்க வேண்டும் என்பதால் மாத்திரை எடுத்துக் கொண்டேன்.

நான்கு மணிக்குக் கிளம்பி ஆட்டோ பேசினோம். ஐந்து பேர், எட்டு பேர் அமரும் வகையில் இருந்த ஐந்து ஆட்டோக்களில் ஏறி, சிவா காட் அருகில் இறக்கிவிடச் சொல்லி வழிகாட்டி இந்தியில் பேசினார். எங்களுக்கு முன் மூன்று ஆட்டோக்கள் சென்றுவிட்டன. எங்கள் இரண்டு ஆட்டோக்கள் மட்டும் பின்தங்கின. ஒரு ஓட்டுநருக்கு சரியான வழி தெரியவில்லை. அவர் இந்தியில் பேச, நாங்கள் தமிழில் பேச, ஒரு நகைச்சுவையான சூழல் அங்கே உருவானது. அங்கே உள்ள ஆட்டோக்களில் ஓட்டுநரின் அருகில், பயணி ஒருவருக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது.

பின்னர் எங்கள் வழிகாட்டி அலைபேசியில் அழைத்து ஓட்டுநரிடம் பாதையை விளக்கினார். அப்போதும் புரியாத ஓட்டுநர், எதிர்வந்த எட்டு வயது சிறுவனிடம் கேட்டபோது, அவன் மிக அழகாக வழி சொன்னான். இந்த குழப்பத்தில் நான் எடுத்துச் சென்ற சால்வையை ஆட்டோவில் மறந்து விட்டு சிறிது தூரம் கடந்து வந்தோம். அந்த ஓட்டுநர் “திதி, திதி” என்று அழைத்து சால்வையை எடுத்துக் கொடுத்தார். “தேங்க்யூ பையா” என்று சொன்னபோது, அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எங்கள் மனதையும் நெகிழ வைத்தது. அவரது நேர்மை எங்களுக்குப் பிடித்தது.

காசி போன்ற சுற்றுலா தலங்களில் பேட்டரி வாகனங்களே அதிகமாக இயங்குகின்றன. குறுகிய சந்துகளில் செல்ல வசதியாகவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இவ்வாகனங்கள் பயன்படுகின்றன. ஆட்டோ வாடகையும்  குறைவாக இருப்பதால் மனநிறைவுடன் பயணிக்க முடிந்தது. ஆனால், அங்கே ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களிடம் பிடிக்காத ஒரு செயல் - விடாமல் பாக்கு போட்டுக் கொள்வதும், வழியிலேயே எச்சிலைத் துப்புவதும்! இப்படியான ஆட்களைத் தவிர்க்கவும் முடியாமல்  சகித்துக் கொள்ளவும் முடியாமல் சங்கடமான மனநிலையில் பயணம் செய்தோம்.


ஒரு வழியாக சிவா காட் வந்து சேர்ந்தோம். அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாங்கள் அனைவரும் ஒரே படகில் ஏறினோம். படகு கிளம்பியது, கண்கள் எல்லாத் திசைகளையும நோக்கியது. கங்கைக் கரையின் அருகே மிக உயரமான நெருக்கமான கட்டிடங்களை பல நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று வியப்பாக இருந்தது. மின் விளக்குகளில் கங்கைக் கரை அழகாக ஒளிர்ந்தது. அந்த ஒளி ஆற்றின் நீரிலும் பிரதிபலித்தது அழகான காட்சி.

கங்கா ஆரத்தி நடைபெறும் படித்துறைக்கு தசாஷ்வமேத காட் என்று பெயர். கங்கையைத் தெய்வமாக மதித்து வழிபடும் மரபு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தாலும், இன்று நாம் காணும் இந்தப் பெரும் முறைப்படியான கங்கா ஆரத்தி 1990களில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

வரும் வழியில் மணிகர்ணிகா காட்டில் சடலம் எரிந்துகொண்டிருந்தது. அதனைத் தாண்டி ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
படகின் இரைச்சலைக் கடந்து “ஓம் நம சிவாய”, “ஹர ஹர மகாதேவா” என்ற பக்தி முழக்கங்கள் தொடர்ந்து காதில் விழுந்துகொண்டே இருந்தன. மாலை நேரத்தின் அழகோடு எங்கள் படகை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார்கள்.

கங்கா ஆரத்தியைப் பார்க்க மக்களை அழைத்து வரும் படகோட்டிகள், தங்கள் பயணிகளை முன்நிலையில் நிறுத்துவதில் போட்டியிட்டனர். அமைதியான கங்கை நீரின் மௌனத்தை கலைத்தபடி எங்களுக்கு முன் சென்ற இரண்டடுக்கு மின் படகுகளில் இதயவடிவ பலூன்கள்  மின் விளக்கு அலங்காரத்தோடு சென்றது. மின் அலங்காரம்  கங்கை நீரில் அற்புதமாக பிரதிபலித்ததை கண்கொள்ளாக் காட்சியென்பேன். அந்தப்  படகின் மேலடுக்கில் நாற்காலியில் அமர்ந்து இருந்த தம்பதியினர் தங்கள் குடும்பத்தாருடன் பிறந்தநாள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியபடியே கங்கை ஆரத்தியை தரிசனம் செய்ய வந்தார்கள். 

சிலர் படகுகளில் அமர்ந்து கித்தார் இசையோடு கங்கையின் இரவு நேர அழகின்  மௌனத்தை ரசித்தபடி பயணம் செய்தனர். இன்னும் சில படகுகளில் பூக்கள் அலங்காரங்கள். கோரஸாக பாடல்களின் ஒலியுடன் பயணிகள் என அனைத்தும் ரசனைக்குரிய காட்சிகள்.

நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் படகைச் சுற்றிலும் பல மின்படகுகள் சூழ்ந்து விட்டன. ஒன்றோடொன்று மோதுவது போல இருந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. அனைவரும் ஆரத்தி நடைபெறும் இடத்திற்கு அருகில் தங்கள் படகுகளை நிறுத்த முயன்றனர். இனம், மொழி கடந்து பக்திமயத்தோடு கங்கா ஆரத்தி காண்பதற்கு வந்திருந்த  ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருந்த படிகட்டுகளில் அமர்ந்திருந்தனர். 


கங்கா ஆரத்தி தொடங்கியது. முதலில் தூப ஆராதனை நடைபெற்றது. அந்த தூபத்தின் மணம் அனைத்து இடங்களிலும் பரவி மனதை பக்திலயத்துக்கு இட்டுச் சென்றது. ஒரே சீருடையில் வரிசையில் நிற்கும் பண்டிதர்கள், ஒரே சீரான அசைவுகளில் பெரிய தீபங்களை ஏந்தி கங்கைக்கு ஆரத்தி செய்தார்கள். வேத மந்திரங்கள், சங்கொலி, மணி ஒலி, தபேலா இசை ஆகியவை சூழலை பக்திப்பரவசத்தில் மெய்மறக்கச் செய்தன. முதலில் கங்காதாயாருக்கு மலர், தூபம், தீபம், நெய் விளக்குகள் அர்ப்பணிக்கப்பட்ட பின்னர், பக்தர்களின் தீபங்கள் கங்கையில் மிதக்க விடப்பட்டன.

தீபங்களை ஏந்திய பண்டிதர்கள் ஒரே நேரத்தில் பித்தளை விளக்கில் ஏற்றப்பட்ட சரவிளக்கின் திரியில் ஜோதியை ஏற்றும் அந்த நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தியின் ஜோதி மட்டுமே நம் கண்களுக்கு தெரிந்து உடலுக்குள் ஊடுருவிகிறது. இந்தக் காட்சியை காண கண்கோடி இருக்கக் கூடாதா என்று நெஞ்சம் விம்முவதை உணர்கிறோம். “ஹரஹர மகாதோவா” என்ற ஒலி கங்கையின் பகுதியில் எதிரொலிக்கிறது. ஆரத்தி முடிந்ததும் மின் விளக்குகள் போடப்படுகின்றன. 

முதல் ஆரத்தி மாலை ஆறு மணிக்கும், இரண்டாவது ஆரத்தி இரவு எட்டு மணிக்கும் நடைபெறுகிறது. நாங்கள் முதல் ஆரத்தியில் கலந்து கொண்டோம். கங்கா மாதாவின் முன் தீப ஆராதனையும், “ஹர ஹர மகாதேவா” என்ற முழக்கங்களும் மனதை முழுவதும் பக்தியால் நிரப்பின.

காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து கங்கை வரை நேரடி நடைபாதை அமைக்கும் காசி கங்கை காரிடார் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உருவானது என்று கூறினார்கள். திறந்த முற்றங்கள், ஓய்வு இடங்கள், யாத்திரிகர் வசதிகள் — குடிநீர், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள், பழமையான சிறு கோயில்கள் மறுசீரமைப்பு ஆகியவை இதில் அடங்கும். 

இப்போது கங்கை நதி பெருமளவில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. சில சிறிய குறைபாடுகள் இருந்தாலும், மனநிறைவளிக்கும் சூழல் நிலவுகிறது. அந்த மனநிறைவோடு படித்துறையை விட்டு இறங்கி மீண்டும் ஆட்டோவில் ஏறி தங்கும் அறைக்கு வந்தோம். வந்த பிறகே எங்கள் குழுவினர் ஒருவரின் பாக்கெட்டில் பிளேடு போடப்பட்டிருந்ததை அறிந்தோம். நல்லவேளையாக பணம் எடுக்கப்படவில்லை. காசியில் கூட்ட நெரிசலில் எங்கு சென்றாலும் நம் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தெளிவான பாடமாக இருந்தது.

இரவில் காய்ச்சல் அதிகரித்ததால்,  காய்ச்சல் மாத்திரை எடுத்துக் கொண்டேன். புராணங்களில் சொல்லப்படும் உலக பிரசித்தி பெற்ற நகரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு உறக்கம் கண்களைத் தழுவியது.

(தொடரும்)


முற்றத்துக்கு ஓர் விடுகதை - சச்சிதானந்தம்

 


அலைபாய்ந்தது என் மனம்
அந்தி வேளையதில் 
முற்றத்தின் திறந்த வட்டத்தை 
அண்ணாந்து பார்த்தபடி
எண்ணமும் எழுத்தும் நர்த்தனமிடும் ஆடலரங்கமோ 
கதைகள் கவி பாடும் கலாசாலையோ 
கவிதைகள் கதை சொல்லும் பயிலரங்கமோ
பயணங்கள் நடை பயிலும் நடைபாதையோ
வள்ளுவன் குறள் தீட்டும் குறலோவியமோ
கருத்துக்கள் பரிமாறும் கருத்தரங்கமோ 
வட்டத்து விடுகதைக்கு விடையென்ன
கதை எழுதி கதை படிக்கும்
முற்றத்து விருந்தினரே !

காசி பார்க்கப் போறோம் (பகுதி 5) - யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 5) கங்கையில் நீராடலும் – காசி விஸ்வநாதர்  வழிபாடும்****

கயாவிலிருந்து கிளம்பி நாங்கள் காசிக்கு வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. ‘காலையில் ஆறு மணிக்கு குளித்து தயாராகுங்கள், கங்கை சென்று நீராடி, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மண்ணை ஆற்றில் கரைத்து விட்டு வழிபாடு செய்து வருகிறோம்” என்றார் நிறுவனர் ஜெயக்குமார் சார். அவர் ஏற்கனவே ராமேஸ்வரத் தீர்த்தமும், மண்ணையும் எங்களிடம் கொடுத்திருந்தார்.

நாங்களும் விடியற்காலையில் எழுந்து குளித்துத் தயாராகிவிட்டோம். தங்கும் அறையிலிருந்து ஆட்டோ பிடித்து கங்கை ஆற்றை நோக்கிப் பயணித்தோம். கங்கை நதிக்கு அருகில் வாகனங்கள் செல்ல வசதி இல்லாததால் அரை கிலோமீட்டர் முன்பே இறங்கிக் கொண்டோம்.

 “இங்கே 3,400 சந்துகள் இருக்கின்றன. ஒரு சந்து மாறினாலும், நீங்கள் வழி தவறி விடுவீர்கள் அதனால், எங்களைப் பின்தொடர்ந்து கவனமாக வாருங்கள்” என்று வழிகாட்டி அறிவுறுத்திக் கொண்டே வந்தார். அவர் கூறியபடியே வழிநெடுகவே குழம்பும்படியான பல சந்துகள்! அதுமட்டுமில்லாமல் அங்கு திரும்பிய பக்கமெல்லாம் மாடுகள் அலைந்து திரிந்தன. இதனால் சாணங்கள் வழிநெடுக கிடந்தன. கவனமாக நடந்து பல சந்துகளை கடந்து கங்கைக் கரையை அடைந்தோம்.

காலை சூரியன் உதிக்கும் தருணம், நதியின் நீர் மக்களின் ஆரவாரமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. பனிக்காலம் என்பதால் நீரில் கால் வைத்ததும்  சில்லென உடல் சிலிர்த்து, பற்கள் தந்தியடிக்க ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டோம். கங்கையில் நீராட வாய்ப்புத் தந்த இறைவனுக்கு எங்கள் மனங்களிலிருந்து “நன்றி” என்ற சொல் ஒலித்துக் கொண்டிருக்க மூழ்கி எழுந்தோம். கங்கையில் நாங்கள் நீராடிய இடத்திற்கருகே உடை மாற்ற வசதி இல்லாதது பெண்களுக்குப்  பெரும் அவதியாக இருந்தது.

ஹரிச்சந்திரா காட் பிணங்களை எரியூட்டும் இடம். தன் குடும்பம், சொத்து அனைத்தையும் இழந்தபின்னும் பொய் பேசாமல் தர்மத்தைக் காத்த ஹரிசந்திரன் குறித்து படித்து இருக்கிறோம். அவர்  இந்த இடத்தில் தான் வெட்டியானாக வேலை செய்ததாகவும் அதனால் இந்த இடத்திற்கு அவர் பெயர்கொண்டு அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகின்றன. அங்கு  விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் அனாதைப் பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. சில நாட்களில் விடிய விடியப் பிணங்கள் எரிப்பார்களாம். அந்த இடத்தில் காலடி வைத்தபோது வெப்பத்தை  நன்றாக  உணர்ந்தோம். 



நாங்களும் எடுத்துச் சென்ற ராமேஸ்வர தீர்த்தத்தை அளித்து, “தென்னாடுடைய சிவனே போற்றி, என் நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று மனமுருக வழிபட்டு வெளியே வந்தோம். நான்கு திசைகளிலிருந்தும் வரிசையில் நின்று தரிசிக்கும் வகையில் கோவிலின் அமைப்பு இருந்தது. கோவில் கோபுரத்தின் மேல் உள்ள தங்க கலசமும், கோபுரமும் தனி சிறப்பு பெற்றவை. இவை மகாராஜா ரஞ்சித் சிங் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆடைகளை மாற்றிய பின் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மண்ணைக் கையில் எடுத்துக் கொண்டோம். ஒரு புரோகிதர் வந்து மந்திரங்களும், வேதங்களும் சொல்லி அனைவரையும் திரும்பச் சொல்ல வைத்தார். பிறகு அந்த மண்ணை இரு கைகளிலும் நிரப்பி கங்கை நீரில் கரைத்தோம். ராமர் ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கி வந்ததாகக் கூறப்படும் ஐதீகத்தின் அடிப்படையில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இதை தெற்கும், வடக்கும் ஒன்று சேரும் நல்லிணக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அதன்பின் ஜெயக்குமார் சார் எங்களை அங்கேயிருந்த கேதார்நாத் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.. நாங்கள் சென்ற வழிகாட்டி இது கேதார் காட், அது ஹரிச்சந்திரா காட், அங்கே தெரிவது மணிகர்ணிகா காட்” என்று வழியில் விளக்கிக் கொண்டே நடந்தார். காசியில் மொத்தம் 84 படித்துறைகள் இருக்கிறது என்று நான் படித்த செய்தி நினைவுக்கு வந்தது.

மணிகர்ணிகா காட்டில் காசியைச் சுற்றியுள்ள 437 கிராமங்களில் வசிக்கும் மக்கள் இறந்தால் அங்கே கொண்டு வந்து எரியூட்டுவார்கள் எனவும், ஒரு நாளைக்கு குறைந்தது 100 முதல் 140  பிணங்கள் எரியூட்டப்படுகின்றன என்று வழிகாட்டி சுரேஷ் கூறினார். மணிகர்ணிகா காட், ஹரிச்சந்திர காட்டில் கொண்டு வந்து உடலை தகனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் மறுபிறவி கிடையாது என்பதும் இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நாம் எங்காவது இறந்த வீட்டுக்குச் சென்று வந்தால், குளிக்காமல் வீட்டுக்குள் செல்ல மாட்டோம். இங்கேயோ, எரியூட்டப்பட்ட இடத்தின் மீது நடந்து சென்றுதான் கேதார் படித்துறையில் இருந்த கேதார் லிங்கத்தை தரிசிக்கச் சென்றோம். உயரமான 20–25 படிக்கட்டுகள் ஏறி கோவிலுக்குள் சென்றோம். கையிலாயத்தில் இருக்கும் கேதார் லிங்கத்தை தரிசனம் செய்ய இயலாதவர்கள் இங்கே உள்ள லிங்கத்தை வழிபட்டால் அதே பலன் கிடைக்கும் என்று ஜெயக்குமார் சார் கூறினார்.

கோவிலின் கருவறை சதுர வடிவில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கமாக அமையப்பெற்றது.   சிவலிங்கத்திற்கு மேல், சுமார் ஐந்தடி உயரத்திலிருந்து ஒரு  செம்பு குவளையின் வழியாக, அபிஷேகப் பால் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சில பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

அங்கிருந்து வெளியே வந்தபோது மணிகர்ணிகா காட்டில் ஒரு சடலம் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் அதை பார்த்து விட்டு கங்கை நதிக்கு வரும் போது சிவதர்ப்பண பூசையில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பூசையை முடித்துக் கொண்டார்கள். (சிவதர்பண பூசை என்பது சிவபெருமானை சாட்சியாக வைத்து, கங்கை நீரை அர்ப்பணித்து பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெறவும், குடும்ப நலன் வளம் பெருகவும் செய்யப்படும் சிறப்பு தர்ப்பண வழிபாடு)

கடந்த ஐந்து–ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காசிக்கு வந்தவர்கள் கங்கையில் மூழ்கி எழும் போது சடலங்கள் மோதியதாக சொன்னதைக் கேட்டிருக்கிறேன். இப்போது அப்படி எதுவும் இல்லாமல் நீர் தூய்மையாக இருந்தது. பிரதமர் மோடி அவர்கள் காசிக்கு வந்த பிறகு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வழிகாட்டி கூறினார்.

கங்கைக்கு நீராட செல்லும் போதே, “இங்கே பாரதியார் தங்கிய வீடு இருக்கிறதா? பார்க்க முடியுமா?” என்று வழிகாட்டியிடம் கேட்டிருந்தேன். “இங்கே 3,400 சந்துகள் இருக்கின்றன. நீங்கள் தனியாகச் சென்றால் எங்கே போய் எந்த வழியில் வருவீர்கள் என்று தெரியாது” என்று அவர் கூறிவிட்டார். என்னுடைய விருப்பம் முண்டாசுக் கவிக்கு எட்டியதோ என்னவோ, திரும்பும் வழியில் பாரதியார் தங்கி இருந்த அவரது அத்தை வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே செல்ல அனுமதி ஒன்பது மணிக்கு மேல் என்றார்கள். “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. பரவாயில்லை என்று அந்த வீட்டின் முன் நின்று ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

தந்தைப் பெரியார் 1904 ல் ஆன்மீகத் தேடல் கொண்டு காசி பயணம் வந்ததாகவும், மடம் ஒன்றில் உணவு கேட்ட போது, அவர் சூத்திரன் என்பதால் உணவு கொடுக்க மறுத்ததாகவும், தீண்டாமை குறித்து இங்கே பல இன்னல்களை அனுபவித்து வந்த பிறகுதான் பகுத்தறிவாளராக மாறினார் என்றும் செய்தியில் படித்த நினைவு வந்தது. அங்கிருந்து அறைக்கு வந்து உணவு சாப்பிட்டு, காசி விஸ்வநாதரைத் தரிசிக்க ஆட்டோவில் கிளம்பினோம்.

                                    

பி.டி.ஆர். மால் வரை ஆட்டோ சென்றது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்க எடுத்துக் கொண்டு, மனதில் உற்சாகத்தோடு நடந்தோம். எங்கள் அடையாளமான மஞ்சள் தொப்பி கூட்டம் மிகுந்த இடங்களில் குழுவினரைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. கோவிலுக்குள் அலைபேசி அனுமதி இல்லாததால் யாரும் எடுத்துச் செல்லவில்லை.

இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் முக்தி தரும் தலங்கள் 7. அவற்றுள் முக்கியமானது காசி விஸ்வநாதர் ஆலயம்.  தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காசியை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் நுழைவாயிலை நாங்கள் அடைந்தோம்.

கோவிலினுள்  நுழையும் போது உடலில் ஒரு சிலிர்ப்பு. பல வருடக் கனவு நனவாகும் அந்தத் தருணத்தில் கோடான கோடி நன்றிகளை மனம் செலுத்தத் தொடங்கியது. சிறப்பு தரிசன டிக்கெட் ரூ 300 செலுத்தி வரிசையில்  காத்திருந்தோம். அரை மணி நேரத்தில் விஸ்வநாதர் தரிசனம் கிட்டியது. காசி விஸ்வநாதர் லிங்க வடிவில் வெள்ளியிலான தொட்டி போன்ற அமைப்புக்குள் இருந்து அருள்பாலிக்கிறார். தாங்கள் கொண்டுவரும் அபிஷேக நீர், பால்,  தயிர், இளநீ போன்ற பொருள்களை மக்களே இதன் வழியாக விஸ்வநாதருக்கு விட்டு அபிஷேகம் செய்யலாம். இந்த சிறப்பான வழிபாட்டு முறை தென்னகத்தில் எங்கும்  கிடையாது.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். பக்தர்கள் லிங்கத்தை தொட்டு வணங்குவதால் தெரிந்தோ தெரியாமலோ, தவறிழைத்திருந்தால் மூலவரின்  புனிதத்தன்மை குறையாமல் இருப்பதற்காக இரவு 7 மணி அளவில் கருவறையை தூய்மை செய்து விட்டு, சப்தரிஷி பூஜை மற்றும் ஆரத்தி செய்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தோம்.

நந்தி, சிவனுக்கு நேராக இல்லாமல் ஞானவாபி மசூதியை நோக்கி இருந்தது. மசூதிக்கும் விஸ்வநாதர் ஆலயத்திற்கும் நடுவில் ஒரு தடுப்புச் சுவர் மட்டுமே இருந்தது. ஔரங்கசீப் காலத்தில் விஸ்வநாதர் கோயில், இப்போது மசூதி இருக்கும் இடத்தில் இருந்து  இடிக்கப்பட்டுள்ளது. அங்கே இருந்த லிங்கத்தை எடுத்துச் சென்று உள்ளார்கள்.  மீண்டும் அகல்யாபாய் ஹோக்கரால் 18 ஆம் நூற்றாண்டில் இப்போது இருக்கும் விஸ்வநாதர் ஆலயம் அமைக்கப்பட்டது என்றாலும், சிவன் அங்கே இருந்தற்கு  சாட்சியாக நந்தி மசூதியைப் பார்த்த நிலையில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவில் வளாகத்திற்குள் விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், விநாயகர் (துண்டி ராஜ கணபதி, அவிமுக்த விநாயகர்), அவிமுக்தேஸ்வர் சிவலிங்கம், விஷ்ணு, சனீஸ்வரர், விரூபாக்ஷ கௌரி, சௌபாக்ய கௌரி, சிருங்கார கௌரி ஆகிய பல தெய்வங்களின் சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

அனைத்தையும் வழிபட்டு, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றோம். தங்க நிறத்தில் ஒரு கையில் அன்னக்கரண்டி மறு கையில் பாத்திரம் ஏந்திய கோலத்தில் அமர்ந்திருந்த தாயாரின் தரிசனம் எங்கள் கண்களை பனிக்க வைத்தது. அன்னபூரணி தாயாரின் தங்கத்திலான சிலை ஒன்று இருப்பதாகவும் முக்கியத் திருவிழா அன்று மட்டும் அந்த சிலை  பக்தர்களின் தரிசனத்திற்கு  வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்னபூரணி ஆலயத்திற்கு ஸ்ரீ ஆதிசங்கரர் வருகை தந்த போது அன்னபூர்ணா துதியை இயற்றினார் என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர் பிரகார தெய்வங்களை வணங்கி, காசி விசாலாட்சி ஆலயத்திற்குச்  சென்றோம்.

மராத்திய அரசியார் அகில்யாபாய் ஹோல்கர் காசி விஸ்வநாதர் ஆலயத்தை திருப்பணி செய்தவர் என்றாலும் விசாலாட்சி அம்மன் ஆலயத்தின் முழு கட்டுமானமும் நிர்வாகமும் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கே உரியது என்பது வரலாற்று செய்தி. அவர்களே ஆலய பூசைகளை நடத்துகிறார்கள். தமிழ் மொழியை அங்கு கேட்க முடிந்தது மனத்திற்கு மகிழ்ச்சி அளித்தது. நாங்கள் சென்ற நேரத்தில் பிரகார தெய்வங்கள் வைத்து அதற்கு கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வெளியே வந்தோம்.

கோவில்களுக்குச் செல்லும் வழிகள் மிகவும் குறுகிய சந்துகளாக இருந்தன. எதிரே ஒருவர் வந்தால் இடித்துக் கொள்ளும் அளவிற்கு சுருங்கிய பாதைகள். அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடங்களை எப்படிக்  கட்டியிருப்பார்கள் என்ற வியப்போடு அறைக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்து நாங்கள் பார்த்தது காணக் கண் கோடி வேண்டுமே என்று நெஞ்சம் உருகி நெகிழ்ந்து நின்ற தரிசனம். அது குறித்து அடுத்த பாகத்தில் 

(தொடரும்)