வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா...’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரளவு அறிந்திருப்போம்.

ஆனால், 'இந்தக் காலத்துப் பசங்க புள்ளைங்களுக்குஇன்னொரு பக்கமும் இருக்கலாம். நாம் ஆச்சரியப்படும் அல்லது அயர்ச்சியுறும் அவர்களின் முகங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னே நாம் அறியாத இன்னொரு பக்கம் இருக்கின்றது. அப்படியானதொரு பக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் ஆங்கிலத்தில் அனுப்பட்ட மடல் இது. நேரடி இணையவழி தமிழாக்கம் என்பதால் சில சொற்கள் வித்தியாசமாகத் தோன்றலாம்.
***
வணக்கம்,
நேற்று உங்கள் அமர்வில் கலந்துகொண்ட பிறகு, என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு சிறிய பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆழமான உந்துதல் ஏற்பட்டது - அது எனக்கு வலிமை, பொறுமை, மற்றும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த ஒரு கதை.

நான் ஒரே பள்ளியில் 14 ஆண்டுகள் படித்தேன், அந்தக் காலகட்டம் முழுவதும் நான் பெரும்பாலும் தனிமையில்தான் இருந்தேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் பெரிதாக இல்லை. என்னைச் சுற்றியிருந்த பலரும் மோசமான, toxic தன்மையுடையவர்களாக இருந்தனர் - நான் அடிக்கடி கேலிக்கும், உடல்ரீதியான அவமதிப்புக்கும் (body shaming) ஆளானேன்.

ஆயினும்கூட, எங்கள் மாவட்டத்தில் அதுதான் சிறந்த பள்ளி என்று என் பெற்றோர் நம்பியதால், நான் அங்கேயே தொடர்ந்தேன். அவர்களுக்குக்  கவலை தரவோ அல்லது அவர்கள் மனம் புண்படவோ கூடாது என்பதற்காக, என் பள்ளி நாட்கள் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நான் ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தின் மத்தியிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து  படித்து, என் பள்ளியில் முதல் 5 மாணவர்களுக்குள்ளேயே இருந்தேன். ஆனால், 12ஆம் வகுப்பின்போது, நான் மனதளவில் மிகவும் சோர்வடைய ஆரம்பித்தேன். குறிப்பாக practical மற்றும் public exam-களுக்கு முன்பு கவனம் செலுத்தவே முடியவில்லை.

வெறும் பத்து நாட்களில் முழுப் பாடத்திட்டத்தையும் படித்து, 600-க்கு 526 மதிப்பெண்களைப் பெற்றேன். நான் JEE Mains தேர்வையும் எழுதினேன், அதில் 93 சதவிகிதம் (percentile) மதிப்பெண் பெற்றேன். ஆனால், அப்போது எதைத் தேர்ந்தெடுப்பது என எனக்குத் தெரியாததால், நான் NIT-யில் சேரவில்லை.
பின்னர், நான் இரண்டு ஆண்டுகள் NEET-க்காகத் தயாரானேன், ஆனால் அந்த கட்டம் மனதளவிலும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் கடினமானதாக இருந்தது - நான் மீண்டும் தோல்விகளையும், தனிமையையும் அதிகம் சந்தித்தேன். 720-க்கு 530 மதிப்பெண்கள் எடுத்தேன், MBBS கிடைப்பதற்கு வெறும் 30 மதிப்பெண்கள் குறைவாக இருந்தது. நிதி நெருக்கடிகள் காரணமாக, நான் பொறியியல் படிக்க முடிவு செய்து இங்கு சேர்ந்தேன்.

இங்கேயும் கூட, என்னால் நம்பகமான நட்புகளை உருவாக்க கடினமாக இருக்கிறது. தனிமை என்னை சில நேரங்களில் தொடர்ந்து துரத்துகிறது. ஆனால் ஐயா, நேற்று நீங்கள் நடத்திய பயிலரங்கு அமர்வு உண்மையிலேயே கண்களைத் திறப்பதாக இருந்தது. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையைப் பற்றி ஆழமான உண்மைகளை தாங்கி வந்தது - அது வெறும் கல்வி அல்லது வெற்றியைப் பற்றியது அல்ல; நாம் யார் என்பதையும், வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியம் என்பதையும் புரிந்துகொள்வது பற்றியதாக இருந்தது.

என் வாழ்க்கை ஒரே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நகர்கிறது - நம் மனநிலைதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது (Our mindset decides our life)” அந்த மனநிலை மட்டுமே என்னை இன்று இங்கே கொண்டு வந்துள்ளது, மேலும் உங்கள் அமர்வு அந்த உண்மையை இன்னும் ஆழமாக வலுப்படுத்தியது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அந்த அமர்வின் போது நான் உங்களுடன் பேச மிகவும் விரும்பினேன், ஆனால் என் introvert nature என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆயினும்கூட, நாம் நமது பயத்தினைக் கடக்கும்போதே வளர்ச்சி தொடங்குகிறது என்பதை உங்கள் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. நான் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. நேற்று முதல், வித்தியாசமாகச் சிந்திக்க, அர்த்தமுள்ளதாக வாழ, மற்றும் தைரியமாக என்னைப் வெளிப்படுத்த, நான் உங்களை என் role model - ஆகக் கருதுகிறேன்.

நேற்று, நான் வெறுமனே ஒரு அமர்வில் கலந்துகொள்ளவில்லை… “நான் யார்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலைக் கண்டுபிடித்தேன்.
***
சமீபத்தில் என்னை நன்கு அறிந்த ஒரு பள்ளியின் முதல்வர், அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் என்னை அறிமுகப்படுத்தும்போது, என்னைக் குறித்த விபரங்கள் லவற்றை விரிவாகத் தெரிவித்துவிட்டு, ”தையெல்லாம் தாண்டி, இந்த நிகழ்விற்கு இவரை அழைக்க ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அது, இவர் எப்போதும் பிள்ளைகளின் பக்கம் மட்டுமே நிற்பார். நாம் பிள்ளைகள் குறித்து ஒரு கவலை அல்லது புகார் உள்ளிட்ட எதைப் பகிர்ந்தாலும், ந்தக் கவலை, புகார் பெற்றோர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி, 'அதெல்லாம் இருக்கட்டும்ங்க, அந்தப் பையன் - பொண்ணு சைடுல எதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம், அதையும் என்னவென்று பார்ப்போம்என்பார்எனக் குறிப்பிட்டார்.

அதைக் கேட்டதும், எனக்கும் 'அட... ஆமாம்தானே...எனத் தோன்றியது. உண்மையில் அப்படியொரு இயல்பு, நிலைப்பாடு என்னிடம் இருப்பதை நானே உணர்ந்த தருணம். அதுவரை எதுவானாலும் பிள்ளைகள் பக்கம் நான் நிற்க விரும்பியதைநானே அவ்வளவாக, தெளிவாக உணர்ந்திருக்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டதில்லை. நம்மிடம் இருக்க வேண்டிய குணம், பண்பு அல்லது நிலைப்பாடு என்பது ஏதோவொரு புள்ளியில் தானாக வந்து நம்மிடம் இணைந்துவிடுகின்றன. சிலவற்றை எப்போது, எதன் நிமித்தம் வந்து சேர்ந்த்து என அடையாளம் கண்டுவிட முடியும். பலவற்றை அப்படி இனம் காண முடிவதிலை.

மேலே இருக்கும் மடல் வந்து சில வாரங்கள் ஆகியிருந்தாலும், பதின்வயதில் பலருக்கும் எளிதாக வாய்க்கும் ஒன்றை எட்ட, எத்தனையெத்தனை தடைகளைத் தாண்டி ஒரு பிள்ளை வர வேண்டியிருந்திருக்கின்றது என்பது மட்டும் மனதில் அலைந்துகொண்டேயிருந்தது. அந்த மடலுக்கு விரிவாக பதில் அனுப்பியிருந்தேன். அடுத்தமுறை அவருடைய கல்லூரிக்குச் செல்லும்போது தேடி, சந்தித்து பேசிவிட்டு வரவேண்டும் எனவும் நினைத்திருக்கிறேன்.

இம்மாதிரியான அவர்களின் இன்னொரு பக்கம்,  இப்படி மடல்களாக நீளும், உரையாடல்களாக எட்டும், சில வேளைகளில் வெறும் ஓரிரு வரிகளிலும்கூட வந்தடையும்.

எது வந்தாலும் பிள்ளைகள் பக்கம் நிற்க விரும்புவதன், நிற்க முற்படுவதன் பின்னே, அவ்வளவு எளிதில் வெளிப்படாத, நம்மால் அவ்வளவாக வாசிக்கப்படாத அந்தப் பக்கங்களில் கனத்திருக்கும் உண்மைகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆழமாக உணர்கிறேன்.  


மானிட்டர் - மூர்த்தி, மஞ்சு, கோதை


சேதுராமனுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. ஆச்சரியத்துக்கான காரணம் இன்னைக்கு மானிட்டரக் காணோம்கறதுதான்.  மானிட்டர்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? மானிட்டர்ங்கறது அந்தத் தெருவுல இருக்கற ஒரு நாயோட பேரு. அதுக்கு மானிட்டர்னு ஏன் பேரு வெச்சாங்கன்னுதான யோசிக்கறீங்க? அந்த நாய்க்கு என்னென்னவோ பேர் வெச்சுப் பாத்துட்டாங்க. என்ன பேர் வெச்சுக் கூப்ட்டாலும் கண்டுக்காமயே இருந்துச்சு. மின்னி, டோரினு எந்தப் பேர் வெச்சுக் கூப்ட்டாலும் அது காது கேக்காத மாதிரியே எங்கயோ பாத்துக்கிட்டுப் போச்சு.  
ஒருதடவ குடிமகன் ஒருத்தரு போதையில நெழல்குடைக்குப் பக்கத்துல உழுந்து கெடக்க, அவரு கூடவே  அணைஞ்சு படுத்திருந்துது நாய். அந்த வழில போன சேதுராமனோட  நண்பன் பரந்தாமன் மானிட்டர்னு கூப்ட,  நாய் உடனே தலையத் தூக்கிப் பாத்துது. அதிலருந்து அதுக்குப் பேரு மானிட்டர்னு ஆயிருச்சு.


மானிட்டருக்கும் சேதுராமன் மேல ஏதோ பஞ்சாயத்துப் போல. சேது வர்றப்ப மட்டும் தொரத்தும். ஆரம்பத்துல, "வழில வர்றவங்க போறவங்களையெல்லாம் தொரத்துனா எப்படி வீதில போய்ட்டு வர்றது?" னு நண்பர்கள்ட்டச் சொல்லி, மானிட்டரை தொரத்தியுட யோசன கேட்டுக்கிட்டிருந்தான் சேதுராமன். போகப் போகத்தான் புரிஞ்சுது மானிட்டர் சேதுராமன மட்டுந்தான் தொரத்துதுன்னு.

 "நீ எப்பயாவது மானிட்டரை அடிச்சிருப்ப. அதனாலதான் உன்னைய மட்டும் தொரத்துது" னு சேது வீட்டுக்காரங்க மட்டுமில்லாம எல்லாருமே சொன்னாங்க. ஒருநாளு கூட மானிட்டர தொரத்தனதே இல்லைங்கறது சேதுவுக்கு நல்லா நெனவிருக்குது.

எப்பிடியோ இப்ப மானிட்டர் காணாமப் போயிருச்சு. நிம்மதியா வீட்டுக்குப் போலாம்னு நெனச்சப்பத்தான் அந்தக் காட்சியப் பாத்தான். மானிட்டர் தன்னோட நண்பர்களோட  சேந்துக்கிட்டு அங்கருந்த மீன்கடைக்குப் பக்கத்துல அசைவம் எதாவது கெடைக்கும்கற எதிர்பார்ப்புல வாலச் சுருட்டிக்கிட்டுப் படுத்திருந்துச்சு. சிக்கன், மட்டன் கடைங்கள விட மீன்கடைல நல்ல கூட்டம்‌ இருந்துது.  மீன்கடை காலியாகற வரைலும் மானிட்டர் நம்மை கண்டுக்காதுன்னு நெனச்சிட்டிருக்கும் போதுதான் அந்த விசயம் அவனோட நெனவுக் கதவத் தட்டுச்சு.

அவனோட  அம்மா வீட்டுக்கு வரும்போது வறுத்த மீன்துண்டுகள அந்தப் புகழ்பெற்ற மீன்கடைல வாங்கிட்டு வரச் சொன்னது நெனவுக்கு வந்துச்சு.நல்லவேள மானிட்டரை தேடறப்போ நமக்கு மீன்கடைக் கண்ணுக்குத் தெரிஞ்சுது. இல்லைனா அம்மாகிட்டத் திட்டு வாங்கியிருப்போம்.  தப்பிச்சுட்டோம்னு நெனச்சான் சேதுராமன். மீன்கடைய  நோக்கிப்  போனான். அங்க  நெறையப் பேரு நின்னுக்கிட்டு அங்கயே வாங்கிச் சாப்படறதையும் பார்சல் வாங்கிட்டுப் போறதையும் பாத்தான். அவனுக்கு ஒரு யோசன திடீர்னு தோணுச்சு. 'நாம ஏன்  இந்தத் தொழிலத் தொடங்கக் கூடாது? இதுக்கு எவ்வளவு முதலீடு செய்யணும்? எந்த எடத்துல ஆரம்பிச்சா தொழில் நல்லா சிறந்து,  பேரோட வளர்ச்சி அடையும்? வேலக்காரங்க  எத்தன பேர் தேவப்படுவாங்க?' அப்டின்னு  பலவகைல சிந்தனை செஞ்சான்.  'சாயந்திர நேரத்துல செயல்படற மாதிரி ஒரு உணவகத்த ஏன் நாம தொடங்கக் கூடாது?' ன்னு பலமா யோசிச்சுக்கிட்டே அம்மா சொன்ன வறுத்த மீன்துண்டுகள வீட்டுக்கு வாங்கிட்டுப் போனான். வீட்டுக்குப் போனவுடன  வாங்கிட்டுப் போனத அம்மாகிட்டக் குடுத்துட்டு  அவனுக்குத்  தோணன  மீன்கடை வெக்கலாங்கற ஆசையச் சொன்னான்.

அதுக்கு அவனப் பெத்தவங்க , "யோசிக்கலாம். எந்த ஒரு முடிவையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யக் கூடாது.  நல்லா  ஆராஞ்சு முடிவு பண்ணலாம்" அப்படின்னு சொல்லி  அவனோட  கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வெச்சுட்டாங்க. ஆனா சேதுராமன் அதிலருந்து மீளற மாதிரி தெரியில . அவனுக்குச் சாயங்கால நேர உணவகத்தக் கண்டிப்பாத் தொடங்கியே ஆகணும்னு தீராத ஆச. 'என்ன பண்றது? எப்படிப் பெத்தவங்களச்  சம்மதிக்க வெக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தான். திடீர்னு மானிட்டர நெனச்சான். மானிட்டர் தனக்கு ஒரு நல்ல யோசனைய குடுத்ததுக்கு மனசார நன்றி சொன்னான்.  எப்படி பெத்தவங்ககிட்டச் சம்மதம் வாங்கி இந்தத் தொழிலத் தொடங்கறதுன்னு பலமா யோசிக்க ஆரம்பிச்சான்.

சேதுராமனோட  தம்பி பலராமன் ஒரு மீன் பிரியன். வஞ்சிரம், வெளவா, பாறை, மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி, ஜிலேபி,  இறால், சுறா, திருக்கை, கொடுவா, சங்கரா, கார, கெழங்கா, சுதும்புன்னு எந்த மீனையும் விட்டு வைக்க மாட்டான். பிரபஞ்சன் எழுதின 'மீன்' சிறுகதைல வர்ற மாதிரி அமாவாசை, கிருத்திகை தவிர எல்லா நாள்கள்லயும் மீன் சாப்பிடுவான். மீனுனா அவனுக்கு உசுரு.

அவனக் கைக்குள்ளப் போட்டுக்கிட்டா, உணவகத்தத் தொடங்கிரலான்னு தோணுச்சு சேதுவுக்கு. ஏன்னா, பலராமன் அம்மா செல்லம். அதான்  'டேடி'ஸ் லிட்டில் பிரின்ஸஸ்' இருக்காங்கள்ல, அது மாதிரி  இவன் 'மம்மி'ஸ் லிட்டில் பிரின்ஸ்'னு வெச்சுக்கங்களேன். அடுத்த நாள்லருந்து தம்பிகிட்ட நைச்சியமாப் பேச ஆரம்பிச்சான். அப்படியே அவனுக்குப் பிடிச்சதையெல்லாம் செஞ்சான். கேட்டதையெல்லாம் குடுத்தான்.

கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் சாயந்திரம் பலராமனக் கூட்டிக்கிட்டு, அந்தப் புகழ்பெற்ற மீன்கடைப் பக்கமா எதேச்சையாப் போற மாதிரிப் போனான். மீன் வாசனை பலராமனோட மூக்கத் தொளைச்சு, மண்டைல ஜிவ்வுன்னு ஏறி, நாக்குல எச்சி ஊற வெச்சுது. சேதுராமனோ எதுவுமே தெரியாத மாதிரி, கடையத் தாண்டி நடக்க ஆரம்பிக்க, பலராமனோட கை அண்ணனோட கைய அழுத்தி இழுத்துது. திரும்பிப் பாத்தான் அவன். தம்பியோட கண்கள்ல தெரிஞ்ச கெஞ்சல் அவனுக்குச் சாதகமாத் தெரிய, அடுத்த பத்தாவது நிமிஷம் பலராமனோட கைல வறுத்த வஞ்சிரம்.

இப்படியே பத்து நாளுங்க போனப்பறம், ஒருநாளு தம்பிகிட்ட மீன் கடை வைக்கலாங்கற தன்னோட ஆசையையும், அம்மாவோட மறுதலிப்பையும் மொகத்த ரொம்ப சோகமா இருக்கற மாதிரி வெச்சுக்கிட்டுச் சொன்னான். 'யாமிருக்க பயமேன்' ஸ்டைல்ல அவன் தம்பியும் வலது கைய ஒசத்தி ஆசிர்வாதம் செஞ்சான். வீட்டுக்குப் போனப்பறம் அம்மாகிட்ட அண்ணனுக்காகப் பேசனான். அம்மாவும் அப்பாவும் ஒத்துக்கவே இல்ல. நீண்ட போராட்டத்துக்கப்பறம் அம்மா, "சரி. தேவையானத நான் செஞ்சு தர்றேன். வீட்டுக்கு முன்னாடியே சின்னதா ஒரு கடையப் போட்டு முன்னோட்டம் பாக்கலாம். தொழில் பிச்சுக்கிச்சுன்னா, பெரிய கடையொண்ணப் போட்டர்றலாம்" ன்னு சொன்னாங்க. சந்தோஷம் தாங்கல சேதுவுக்கு. 

நாள் நட்சத்திரம் பாத்துச் சின்னதாக் கடைய ஆரம்பிச்சாங்க. அவங்கம்மா கைப்பக்குவம் ஆஹா ஓஹோன்னு பேசப்பட்டுச்சு. நம்பிக்கையோட நாலு ரோடு சந்திக்கிற எடத்துல ஒரு கடைய வாடகைக்கு எடுத்து மாலை நேர உணவகத்த ஆரம்பிச்சாங்க. வெறும் வறுத்த மீன் மட்டுமில்லாம, கொழம்பு, புட்டு, பஜ்ஜி, சில்லின்னு பட்டையக் கெளப்புச்சு தொழில். தொழில் அமைஞ்ச நேரத்துல யோகம் கூடி வர ஜம்முனு சேதுராமனுக்குக் கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சுது. சந்தோஷந்தான்......

என்ன இழுக்கறேன்னு பாக்குறீங்களா? ம்ம்ம்ம்.... கதைய சப்புன்னு முடிக்க வேண்டியிருக்கேன்னுதான். காரசாரமா முடிக்கலாம்தான்... ஆனா, சேதுராமனோட பொண்டாட்டி  சைவமாச்சே ....

ஆங்... சொல்ல மறந்துட்டேன். இப்பல்லாம் மானிட்டர் சேதுவப் பாத்துத் தொரத்தறதில்ல. கடைக்குக் காவலே அதுதான். கடையோட பேரு என்ன தெரியுமா?

                        "மானிட்டர்"

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி சிறுகதை எழுதுதல் முறையில் மூர்த்தி, மஞ்சு, கோதை  ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)

தோற்றுப்போன காதல்கள் - பிரதீபா




கண்கள் தேடாமல் 
வார்த்தைகள் சீண்டாமல்  
எவ்வூர் எவ்வழி 
இருப்பிடம் அறியாமல்
நினைவுகளின் இடுக்கில் 
உறங்கிக் கொண்டிருக்கும் 

எல்லைச்சாமி கோவிலை
என்றாவது தாண்டும்போதும் 
காவேரி ஆறுநிறைய 
வெள்ளம் ஓடும்போதும்  
கடந்தகாலம் மீறி எதிரொலிக்கும்  
'நீ இல்லைன்னா  
இதோடு போயிருவேன்' 

கட்டிய இடம் கடுசோ  
காடுகழனி வேலையோ
இரண்டு பிள்ளைகளோ
இறுமாப்பு குறையலையோ 
விடைவேண்டாத கேள்விகள்
வெறுமையை நிறைக்கும் 
  
குறையில்லா வாழ்க்கை 
குற்ற உணர்வில்லாத மனசு  
காப்பாத்திக்கோ சாமிஎன 
வேண்டிவிட்டே வழமை திரும்பும் 
தாய்தகப்பன் பிரித்துவைத்த 
தோற்றுப்போன காதல்கள்!

தூரிகையின் துறவறம் - கௌசல்யா ஞானேஸ்வரன்

 

புரியாத புதிராய்
புத்தி தடுமாறி,
மனம் முழுவதையும்
மௌனம் ஆக்கிரமித்தது

இடரின் சூழலில்
இனம்புரியா கலக்கம்
இதழ்களின் இயல்பான
இனிமை தொலைய
காற்றில் மிதந்த சொற்களும் 
காதுகளில் விழாது போயிற்று

சிந்திக்க மறந்து,
சிதறிய எண்ணங்களால்
கவிதை காணாமல் போய்,
கரம் பற்றா காரணத்தால்
தூரிகை துறவறம் கொள்ள
ஸ்பரிசம் படா  ஏக்கத்தில்
வெற்றுக் காகிதம் என்னை
வெறித்துப் பார்த்தது

சிகரங்களைத் தொடும்
எனது இலக்கு
சிதையாமல் இருக்க,
கனவுகளுக்கு விடுப்பு அளிக்காமல்,
கால்களற்ற கற்பனைகளோடு
கட்டாயமாய் பயணம் செய்ய
மன்றாடிய எனது உள்ளம்
இயல்பு நிலைக்காக    
இறைவனிடம் தஞ்சம் புகுந்தது!

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில், எனக்கு அடுத்தடுத்துப் பல அனுபவங்கள் அமைந்தன. ஆனால், அதிலிருந்த சுவாரஸ்யம் அனைத்தும் ஒரே மையப்புள்ளியைக் கொண்ட அனுபவங்கள் என்பதுதான்.

அந்தத் தினத்திலிருந்து, இரண்டு வாரம் கழித்து, “90% கோபம் கம்மி பண்ணிவிட்டேன்” என்று அந்தத் தம்பி அனுப்பிய வாட்சப் தகவல் இப்போதும் மனதிற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது.

90% கோபத்தைக் குறைப்பது அத்தனை எளிதா என்ன? அது அத்தனை எளிதில் வசப்படாத ஒன்றுதான். கோபம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். கோபம் வரும் தருணங்களில் எங்களின் உரையாடல் நினைவில் வந்து போயிருக்கலாம். 

அந்த உரையாடல் அன்று வாய்த்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

சரி... அன்று நடந்தது என்ன...!?


01

அதுவொரு செவ்வாய்க்கிழமை. காலை ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தேன். அன்று அந்த நிகழ்ச்சியில் பேசுவது தவிர்த்து, வேறு எந்தத் திட்டமிடலும் முந்தைய இரவு வரை இருக்கவில்லை.

முந்தைய இரவு, ஒருவர் தொடர்பு கொண்டு, 'நாளைக் காலை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் உரையாட முடியுமா?' எனக் கேட்டார். நாங்கள் அவ்வப்போது ஃபோனில் உரையாடிக் கொள்கிறவர்கள்தான். நேரில் என்றதும் குடும்ப விசயம் குறித்து இருக்கலாம் எனக் கருதினேன். குடும்ப விசயம் குறித்து நேரில் ஒருமுறையும், ஃபோனில் சில முறையும் உரையாடியிருக்கின்றேன். சந்திக்கலாம் என ஒப்புதல் தெரிவித்தேன்.

அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார். நிறைவடையும் வரை காத்திருந்தார். நிகழ்விலிருந்து விடைபெற்ற பிறகு, இடம் தேர்ந்து அவருடன் உரையாடல் தொடங்கினேன். கருதியதுபோல் குடும்ப விசயம்தான். எளிய குடும்ப சிக்கல். ஆனால் முடிச்சு இறுகிக் கொண்டேயிருக்கின்றது. அவர் தனியே நின்று அனைத்தையும் அமைதிப்படுத்தி, சரி செய்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மட்டுமே தனித்து எதுவும் செய்ய முடியாது. அதனால் எப்படி சரி செய்வது என்பதில் பெரும் குழப்பம். காரணம், சரி செய்ய வேண்டியதில் இவருடைய பங்கு குறைவானது. சிக்கலை இறுக்கிக்கொண்டே செல்லும் மற்றவர்கள்தான் அதனை சரி செய்ய வேண்டும்.

முன்பே அது பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர் தீர்வு காண விரும்பினாலும், அவரிடம் மட்டுமே பேசுவதால், எதுவும் நகராது. தொடர்புடையவர்களில் ஒருவரிடம் பேசுவதுதான் முக்கியத் தேவை. ஆனால் அவர்கள் உடன்பட மாட்டார்கள். அனைவருக்குமே தாம் செய்வதுதான் சரியென்றிருக்கலாம் அல்லது தாம் ஒரு சிக்கலில் உள்ளோம், அதற்கான தீர்வை தாம்தான் தேட வேண்டும் எனும் தெளிவில்லாமல் இருக்கலாம்.

நீண்ட நேரம் அந்த உரையாடலை எடுத்துச் செல்லத் தேவை இருக்கவில்லை. ”உங்க வருத்தம், வலி புரியுது. ஆனா, நீங்க  மட்டுமே  சொல்யூசன் உருவாக்க முடியாது. அவங்களும் உடன்படனும். அவங்கள்ல யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களாகவே ஆதரவோ அல்லது  ஆலோசனையோ தேடும் ஒரு புள்ளி இருக்கும், அதை அவங்க அடையும்போது, ஜஸ்ட் நீங்க தோளைத் தொட்டால் போதும், சரினு சொல்லிடுவாங்க. வரட்டும் பேசிப் பார்ப்போம். எது தேவையோ, யாரிடம் சரி வருமோ, அதற்கு ஏற்பாடு செய்வோம்!” என்று உறுதியளித்தேன்.

அவர் எவ்வளவு தூரம் மனதளவில் திருப்தி அடைந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் சில தீர்வுகளுக்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டும், சில தீர்வுகளுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். சில தீர்வுகளுக்கு அதீத சகிப்புத்தன்மை வேண்டும்.


02

நண்பரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தருணத்தில் அவர் எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்குத் தகுந்த ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் நினைவில் கொண்டிருந்தாலும், அவருடைய அன்றாட வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அவரின் தொடர் ஓட்டத்தில் ஒரு சவால் வந்தது. ஒரு சாதாரண சம்பவம், சரியாகக் கையாளத் தவறியதால், மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருந்தது. தவறியது எந்தவிதத்திலும் குறைபாடு அல்ல. அப்போது அதுதான் சாத்தியப்பட்டிருக்கும். அது சிக்கலாக மாறி, நாட்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, பல மாதங்களாக நீடித்தது. ஒவ்வொரு சந்திப்பிலும் உரையாடலிலும் அதனைச் சரி செய்ய வலியுறுத்தினேன். முடிந்தவரை தொடர்ந்து என் கவனத்தையும், அக்கறையையும் செலுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கும் எல்லைகள் இருந்தன. எல்லைக்கு மறுபக்கமிருந்து கொடுக்கப்பட்டவை பல நேரங்களில் அவ்வளவாகப் பலன் தராது.

பெரும்பாலும் பொருளாதார இழப்புகளை, நெருக்கடிகளை நாம் பேசும் அளவிற்கு, மனதளவிலான நெருக்கடிகளை, இழப்புகளைப் பேசுவதில்லை. நாட்கள் நகர நகர அவருக்கு மன நெருக்கடி கூடிக்கொண்டேயிருந்தது. அந்த நெருக்கடிகள் அவருக்கு வந்திருக்கக் கூடாதவைதான். ஆனாலும், வரத்தான் செய்யும். அதற்கு சில காரணங்கள் இயல்பாக அமைந்துவிடும். அவர் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லாததாக இருந்தன. எதையும் பூசி மெழுகாமல் முடிந்தவரை என்னுடைய கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அதுவே அந்த நட்பிற்கு நான் செய்யும் அறம். ஒவ்வொரு முடிவும் தெரிவிக்கப்படும்போது, ‘அடடா! கொஞ்சம் முன்ன சொல்லியிருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருக்கலாமே எனத் தோன்றும். அதையும் தெரிவிக்கத் தவறவில்லை. ஆனாலும் உணர்ச்சிகள் ஆளும் களம் இப்படித்தான் இருக்கும்.

ஒருகட்டத்தில், எல்லாவற்றையும் சமன் செய்யும், சரி செய்யும் ஒரு புள்ளி வந்தது. அப்படியொரு தருணம் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனதார விரும்பியிருந்தேன். மிக முக்கியமான முடிவினை அவர் எடுக்க வேண்டிய தருணம். என் கவனத்திற்கு வந்தவுடன், தகுந்த ஆலோசனையோடுதான் முடிவெடுக்க வேண்டுமென ஒரு உளவியலாளரைப் பரிந்துரை செய்தேன். தேவைப்பட்டால் நானும் உடன் வருவதாகத் தெரிவித்தேன். அந்தச் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நேரம். 


உளவியலாளரின் ஆலோசனை மிகச் சரியாக அமைந்தது. அவருக்கு பல்வேறு கோணங்களில் நிறைய தெளிவு கிட்டியது. கடந்த காலத்தின் பிழைகளுக்குக் காரணங்கள் புரிந்தன. எடுக்க வேண்டிய முடிவிற்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது. 

திரும்ப வரும் வழியில் காஃபி குடிப்பதற்காக ஒரு உணவகத்தில் நண்பர் வண்டியை நிறுத்தினார். அந்தச் சாலை வழியே நூற்றுக்கணக்கான முறை சென்று வந்திருந்தாலும், நான் அப்படி குறிப்பாக அந்த உணவகத்தில் நிறுத்தியதில்லை. சிற்றுண்டி, காஃபி என உரையாடல் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படும்போது, உணவகத்தின் முன்பிருந்த விளக்குத் தூணை படம் எடுத்து வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தேன். 


03.

அந்தப் படத்தை வைத்து யாரும் அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என நான் கருதவில்லை. அதை ஒரு தம்பி கண்டுபிடித்தார். உணவகத்தின் பெயரைச் சுட்டி அதுதானே எனக் கேட்டார். நான்கு மாவட்டங்கள் தள்ளி இருக்கும் அவர், ஒரு ட்ராவலர் என்பதால் பெரிய ஆச்சரியம் எழவில்லை. ஆனாலும் கண்டுபிடித்ததைப் பாராட்டினேன். அதிலிருந்து உரையாடல் தொடங்கியது.


உடனே அந்த உணவகத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பின்னிரவுப் பொழுதில் சாப்பிடச் சென்றிருக்கிறார். ஒரு மேசையில் அமர, பரிமாறுகிறவர் அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு குடும்பமாக வந்தவர்களை அந்த மேசையில் அமர வைத்திருக்கிறார். சொன்ன விதமும் சரியானதாக இருக்கவில்லை. அதனால் அந்த உணவகம் குறித்து கூகுள் ரிவியூவில் ஒற்றை நட்சத்திரம் அளித்து, புகாரினைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் அதைச் சொன்னபோது என் மனம் கனிந்திருந்தது. ’தம்பி அந்தப் பணியாளார் செய்தது தவறுதான். சில நெடுஞ்சாலை உணவகங்களில் இப்படியான சேவைக் குறைபாடு இருக்கின்றதுதான். அதை இன்னொரு கோணத்தில் பார்த்திருந்தால் உன்னால் கடந்து வந்திருக்க முடியும். அந்த நபர் அன்று எத்தனையாவது மணி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாரோ தெரியாது. அவருக்கென்று எதுவும் இலக்கு இருக்கின்றதா என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காதே. சுமப்பதற்காக நீயாக சில வழிகளை உருவாக்கிக் கொள்ளாதே!’ என்பது போல் தெரிவித்தேன். அவர் ஒற்றை நட்சத்திரம் அளித்ததைத் தவறு என்று சொல்லவில்லை. 

சில நிமிடங்களில் அந்த ஒற்றை நட்சத்திர கருத்துப் பகிர்வை அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதுவரை எங்கெல்லாம் ஒற்றை ஸ்டார் கருத்து / புகார் பதிந்திருந்தாரோ அத்தனையையும் அழித்துவிட்டேன் என்றார். இப்போது நான் என்னவெல்லாம் சொன்னேன் என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் மனதை நெகிழ்த்தும்விதமாக ஏதோ சொல்லியிருக்கின்றேன். 

இரண்டு வாரங்கள் கழித்து, அவராகவே 90% கோபத்தைக் குறைத்துவிட்டேன் என்றார். உண்மையில் அது அத்தனை எளிதல்ல என்றாலும், பல தருணங்களில் அவர் முயற்சி வெற்றி கண்டிருக்கலாம்.

குறை காணும் இடத்திலெல்லாம் ஒற்றை நட்சத்திரம் இட்டு புகார் அல்லது குறையைப் பதிவு செய்வது தவறொன்றுமில்லை. சேவைக் குறைபாடுகளைக் கண்டாலும், தம் கருத்தினைப் பதிவு செய்யாமல் ஒதுங்க வேண்டியதில்லை. ஆனால், நான் பகிர்ந்த படத்தை அவர் அடையாளம் கண்டதும் அவருக்கு என்னிடம் பகிரத் தோன்றியது, அந்த புகார் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் எனக்கு அப்போது முதன்மையாகப்பட்டது.  

அதே நாளில் மேலும் இரண்டு பேருக்காக  தனித்தனியே ஃபோனில் காலையும், மாலையும் உளவியல் தொடர்பாக மட்டுமே உரையாடியிருந்தேன். இருவருமே இளம் வயது. நன்கு வாழ வேண்டிய வயது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு வந்திருக்கக்கூடாது. மீள்வதற்கு மிகப் பெரும் பிரயத்தனம் தேவை. 

நாள் முழுக்க சந்தித்த, உரையாடிய, உடன் பயணித்த அவர்கள் குறித்து நிறைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் மனச் சமநிலையுடன் இருப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் இந்தத் தம்பி ஒற்றை நட்சத்திரத்தோடு என்னிடம் வந்தார்.  அந்த உரையாடலும் தொடங்கியது. 

உடனே, அதிலிருந்து அவரை வெளியேற்றுவது எனக்கு முதன்மையாகப்பட்டது. அப்படி தோன்றியதற்கு அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த செயல்களும் காரணமாக இருக்கலாம். எனக்குள் மன நலனும், மனிதமும் முதன்மையாக நின்றன. எதன் நிமித்தமாகவும் மனதிற்குள் கடுமைகளைச் சேர்த்து சுமப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.

இரண்டு வார காலத்தில் அவர் கோபத்தைக் குறைத்தது அவருடைய சுய விருப்பம், திறனில் பேரில் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு என் சொற்கள் மட்டுமே காரணம் எனக் கருதவில்லை. அடுத்த நாளே தெரிவித்திருந்தால் இந்தளவு அதனைப் பொருட்படுத்தியிருப்பேனா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எனும் போது அவர் எடுத்த முடிவு செயல்பட்டிருக்கின்றது எனப் புரிந்துகொண்டேன். ’90% கோவம் கம்மி பண்ணிவிட்டேன்' எனப் பகிர்ந்ததும் 90% இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு சதவிகிதம் இருக்குமென மகிழ்ச்சியாக இருந்தது.

மனம் நெகிழ்ந்திருக்கும்போது, மனம் நிறைவாக இருக்கும்போது சொற்களும் நிறைவாகவும், நெகிழ்வாகவுமே வெளிப்படும். அந்த இளகிய சொற்கள் ஒருவேளை 10% நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாலும், 90% பலனைத் தரும் என்பதை அன்று புரிந்து கொண்டேன். 


சாலை மனிதர்கள்2 - உன்னை நானறிவேன் - R.S. பிரபு

பயிற்சியாளராக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பள்ளிக்கு அழைக்கப்படும்போது, அவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் நான் செல்வேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் நிறைய கற்றுக் கொண்டு தான் திரும்புகிறேன் — மாணவர்களிடமிருந்து, ஆசிரியர்களிடமிருந்து, அல்லது அங்கு வேலை செய்பவர்களிடமிருந்தும். செக்யூரிட்டி முதல் செக்ரெட்டரி வரை, பழகும்பொழுது அவர்களின் ஏதாவது ஒரு செயல் நம்மை ஈர்க்கும். அந்த பாதிப்பு சில நாட்கள் நம்முடன் இருக்கும். பின்பு எப்போதாவது மெல்லிய நினைவுகளாய் தோன்றி மறையும்.

அப்படி சேலத்தில் ஒரு ரோட்டரி சங்கம் நடத்திய புதிய உறுப்பினர்களுக்கான ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டேன். பசி நேரத்தில் 40 நிமிடம் அனைவரையும் அங்கும் இங்கும் திரும்பாமல் அமர வைப்பது சவால் — ஆனால் சவாலே சமாளினு முடிச்சாச்சு.

நிகழ்ச்சியின் முடிவில் உறுப்பினர்கள் என்னிடம் வந்து கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். நானும் அந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் என்னிடம் வந்து “எனது பள்ளிக்கு நீங்கள் அவசியம் வர வேண்டும்” என்று தன்னுடைய விசிட்டிங் கார்டையும் என்னிடம் கொடுத்துவிட்டு, “நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன்” என்று கூறிச் சென்று விட்டார்.

ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், பலர் "உங்களை கண்டிப்பாக அழைக்கிறேன்" என்று சொல்வார்கள். ஆனால் ஊருக்குச் சென்ற பிறகு, அவர்களுடைய வேலைப்பளுவில் என் நினைவு இருக்காது. அப்படி என்னை நினைவில் வைத்திருக்கின்ற சிலர் தவறாமல் அவர்கள் ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து விடுவர்.

"பள்ளிக்கு உங்களை அழைக்கிறேன்" என்று கூறிய அந்த ரோட்டரி நண்பர், இரண்டு வாரங்கள் கழித்து ஒரு தேதியை குறிப்பிட்டு 9, 10, 11, 12 படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மோட்டிவேஷன் வேண்டும் என்று அழைத்திருந்தார்.

நான் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்ட உடனே கூகுளில் சென்று, அந்தப் பள்ளியின் புகைப்படம் மற்றும் அந்த நிகழ்ச்சி நடத்துகின்ற அரங்கத்தின் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது வழக்கம். அதே மாதிரி இந்தப் பள்ளியின் பெயரை தேடிப்பார்த்தேன். அது ஒரு சிறிய தனியார் பள்ளியாக இருந்தது.

அதன் பிறகு அதைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அந்த நாளும் வந்தது. பள்ளியின் தாளாளர் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை “எங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு அது கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது.

எதற்கு இத்தனை முறை அழைத்து கேட்கிறார்? ஒருமுறை இந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து விட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமது பள்ளிக்கு வந்து விடுவார் என்பது அவருக்கு தெரியுமே. பின் எதற்காக இப்படி கேட்கிறார் என்று புரியவில்லை.

பள்ளியின் நுழைவுவாசலை  அடைந்ததும், ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவம் நடக்கும். நாம் காரிலே வந்தாலும் சரி, கோட் சூட் அணிந்து வந்தாலும் சரி, செக்யூரிட்டி எப்பொழுதும் முறைத்துக் கொண்டே தான் காருக்கு அருகில் வருவார். எந்தப் பள்ளியிலும் காரைப் பார்த்தவுடன் கேட்டை திறப்பதில்லை — அது பாதுகாப்புக்காக நல்ல விஷயம்தான்.

ஆனால் நம் மனதில் சிறப்பு விருந்தினராக வருகிறோம், வந்தவுடன் கேட் திறக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன நப்பாசை இருக்கும். ஆனால் அது நடக்காது. நடக்கவும் கூடாது.

"யாரைப் பாக்கணும்?"
"இல்லைங்க. இன்னைக்கு பங்க்ஷனுக்கு நான் தான் Chief Guest."
(“சரி அதுக்கு என்ன இப்ப?” னு செக்யூரிட்டி மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாலும்…)
"ஹோ, அப்படிங்களா? சரி வாங்க. அந்த பக்கம் மரத்து நிழலில் காரை நிறுத்திடுங்க."

மீண்டும் ஒரு நப்பாசை....
"ஆஃபீஸ் ரூம் வாசல்ல நிறுத்திகிட்டுங்களா?"
"சார், ஓனரே இங்க தான் நிறுத்தி இருக்காரு."
"அய்யோ, அப்படின்னா சரிங்க. சாரி! நான் இங்கேயே நிறுத்திக்கிறேன்."

பேசாம மரத்து நிழலை நோக்கி திருப்பிட்டேன். (செக்யூரிட்டி மைண்ட் வாய்ஸ்: “ஹ்ம்ம்ம்… அது சரி.”)

பள்ளி அலுவலகத்திற்குள் நுழைகிறேன். ஒரு கோவிலுக்குள் செல்வது போல ஒரு உணர்வு. நவராத்திரி கொலுவுக்காக பொம்மைகளை அடுக்கி இருந்தனர். பழம், தேங்காய், ஊதுபத்தி, மாலைகள், பூக்கள், மற்றும் சாம்பிராணி புகை என அவர்கள் சொல்லாமலேயே காலணிகளை வெளியே விட்டு விட்டு தாளாளர் அறையை நோக்கி நகர்ந்தேன்.

நுழையும் பொழுதே பள்ளி முதல்வர் அன்பாக வரவேற்று புன்சிரிப்புடன் “We are very much privileged to have you here, sir. Thanks for coming.” என்று உபசரித்து உடன் வந்தார். “First impression is the best impression.”

தாளாளர் எங்களை வரவேற்று காபி, பிஸ்கட் கொடுத்து, இந்த பள்ளி துவங்கிய வரலாறு, அதனுடைய வளர்ச்சி, கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தடுமாற்றம், பின்பு சமீபத்தில் இவரது தலைமையின் கீழ் பள்ளி வந்தது, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர இவருடைய உழைப்பு, அந்தப் போராட்டத்தில் சற்றும் தளராத மன உறுதி, மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தாலும் கல்வி வழங்கும் தரத்தின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளும் விதம் — என 15 நிமிட உரையாடலில் மலைக்க வைத்து விட்டார்.

பேசும்பொழுது இடையில் அவர், "சார், நான் உங்களிடம் போனில் பேசும் பொழுது, அரிமா சங்கத்தின் மரம் நடும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தேன். நீங்கள் எப்படியும் சரியான நேரத்திற்கு வந்து விடுவீர்கள் என்று தெரியும். அதனால் நீங்கள் வருவதற்குள் வந்து விட வேண்டும் என்று வேகமாக வந்து சேர்ந்தேன்" என்றார்.

ஓ… இதுக்குத்தான் நான் எங்கே வந்து கொண்டிருக்கிறேன் என்று அடிக்கடி அழைத்து கேட்டாரா? நல்லவேளை நான் குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன். இல்லையென்றால் அவர் என் மீது வைத்திருந்த மதிப்பீடு கொஞ்சம் குறைந்திருக்கும். 

நிகழ்ச்சி துவங்கியது. மிகச் சிறப்பான மாணவர்கள். அவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் அதே புத்துணர்ச்சியுடன் பயிற்சி எடுத்துவிட்டு வெளியே வரும் பொழுது, தாளாளர் "சரி, உணவுக்கு செல்லலாம், வாருங்கள்" என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு நாள் முன்னரே நான் சைவமா, அசைவமா என்று கேட்டு தெரிந்து கொண்டார். அதனால் சைவம் தான் இருக்கும். அதுவும் பள்ளியிலேயே சமைத்த உணவு என்பதால் சூடாகவும் சுவையாகவும் இருக்கும் என்கின்ற ஆவலில் சென்று அமர்ந்தேன்.

உணவு பரிமாறும் பொழுது எனக்கு வைத்த சாதத்தின் நிறமும் தாளாளருக்கு வைத்த சாதத்தின் நிறமும் வேறாக இருந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் சாப்பிடத் துவங்கினேன். பின்பு எனக்கு வைத்த பொறியலும் அவருக்கு வைத்த பொறியலும் வேறாக இருந்தது. இதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை.

ஆனால் இதை எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பரிமாறிய பெண்ணிடம் தாளாளர், "ஏமா, அவருக்கும் அந்த பொரியல் கொஞ்சம் வையுங்க" என்றார். இதுதான் சமயம் என்று நான் கேட்டே விட்டேன் "இது என்னங்க சார் பொரியல்?"

அதற்கு அவர், "நான் மதியம் வரும்பொழுது வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து விடுவேன்" என்றார்.
"ஏன் சார்? இங்கேயே இவ்வளவு பிரமாதமாக சமைக்கிறார்களே, ஏன் நீங்கள் வீட்டிலிருந்து எடுத்து வருகிறீர்கள்?"

"சார், இங்க ரொம்ப பிரமாதமாக சமைப்பார்கள், தெரியும். என் பையனும் விடுதியில் தங்கிப் படிக்கிறான். என் மகளும் சென்னையில் விடுதியில் இருக்கிறார். நானும் என் மனைவியுமே இல்லத்தில். நான் மதியம் பள்ளியிலே சாப்பிடுகிறேன் என்று சொன்னால், அவர்கள் தான் ஒருத்திக்கு மட்டும் என்ன சமைப்பது என்று ஒழுங்காக சாப்பிடுவதில்லை. அதனால் வேண்டுமென்றே 'எனக்கும் கொடு மதிய உணவை' என்று கேட்டு அவர்களை செய்ய வைத்து வாங்கி வந்து விடுவேன். அவர்கள் மதிய உணவை மறக்காமல் எடுத்துக் கொள்வார்கள். நான் இங்கே வந்து வீட்டு சாப்பாடு கொஞ்சம், பள்ளிக் கேண்டீன் சாப்பாடு கொஞ்சம் கலந்து சாப்பிட்டுக் கொள்வேன்."

"என்ன சார் பண்றது, வீட்டையும் பாக்கணும் இல்ல!"என்று சிரிப்புடன் சொல்லிமுடித்தார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போனேன். "ஆஹா… எப்படி, ஒரு மனிதன்! பொது வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, தொழில், குடும்பம் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்!" என்று வியந்து போனேன்.

மனைவி மீது பிரியமாய் இருப்பவர்கள் பற்றித் தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் இப்படி ஒன்று இருப்பதை அன்றுதான் உணர்ந்தேன். நிச்சயம் இந்த பள்ளி மென்மேலும் வளர்ச்சியடையும். நல்ல தலைமையின் கீழ் இந்த பள்ளி இயங்குகிறது என்கிற எண்ணத்துடன் மகிழ்ச்சியுடன் விடை பெற்று வந்தேன்.

ஈரோட்டிற்குத் திரும்பி வரும் வழி நெடுக இவரது துபாய் கார்ப்பரேட் வாழ்க்கை, எப்படியாவது சொந்த ஊருக்கு திரும்ப வரவேண்டும் என்கிற எண்ணம், தற்சயலாகக் கல்விப்பணியில் நுழைந்த தருணம், மகன் மகளை வளர்க்கும் விதம், மனைவி மீது வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதை, பள்ளி ஆசிரியர்களை வழிநடத்தும் பண்பு என அனைத்தையும் அசை போட்டு கொண்டே வந்தேன்.

வீடு வந்து சேர்ந்ததும் அந்த நாளின் அயர்ச்சியைக்  கொஞ்சம் திசைதிருப்ப தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன். மனைவி சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழியே வரும் கணவன் அங்கு கிடக்கும் அரிவாள்மனையை பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லும் காட்சி வந்தது. அதனுடன் "உனக்காக பொறந்தேனே எனதழகா..." என்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. 

உடலும் உள்ளமும் நலந்தானா? - ஆனந்தி ஆரூரன்

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் மிளிர வேண்டுமெனில், ஆரோக்கியத்தை வாழ்வின் அடித்தளமாக இணைப்பது இன்றியமையாதது. உண்மையான ஆரோக்கியம், நம் உடலின் மையமாக விளங்கும் மூளையைப் புத்துணர்ச்சியுடன் பேணுவதில் தொடங்குகிறது. ஏனெனில், மூளையின் ஆரோக்கியத்தையும் அறிவாற்றல் திறன்களையும் மேம்படுத்துவது என்பது, முழுமையான அணுகுமுறையால் மட்டுமே சாத்தியம். உடல், மனம், சமூகத் தொடர்புகள், சீரான உணவு, போதுமான ஓய்வு மற்றும் தரமான தூக்கம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் போது மட்டுமே அது சாத்தியமாகும். அப்படி ஒருங்கிணையும் வாழ்க்கை முறையில், மூளையின் நெகிழ்ச்சித்தன்மை (neuroplasticity) வலுவடையும், அறிவாற்றல் செயல்பாடுகள் கூர்மையாகும், சிந்தனை தெளிவடையும். இதன் விளைவாக, ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் உயர்ந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உயிரோட்டமும் உற்சாகமும் நிறைந்ததாக மாறும். 

மூளையைத் தூண்டுவதற்கு, தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். புதிய மொழி கற்பது, இசைக்கருவி வாசிப்பது, ஓவியம் வரைவது, அல்லது புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது போன்ற செயல்பாடுகள், மூளையில் புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்கி, அதன் செயல்திறனையும் நினைவாற்றலையும் கூர்மையாக்குகின்றன. இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகள், மூளையின் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவதோடு, முதுமை காரணமாக ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டைத் தாமதப்படுத்தவும் உதவுகின்றன. கற்றல் திறனுக்கு ஓர் சிறந்த உதாரணமாக, ஒருவர் தினமும் 15 நிமிடங்கள், மொழியை கற்கும் செயலியைப் பயன்படுத்தி (Duolingo) ஸ்பானிஷ் மொழியைக் கற்று, ஒரு வருடத்திற்குள் அடிப்படை உரையாடல்களை எளிதாக நடத்த முடிந்தது. இந்தச் செயல்பாடு அவரது நினைவாற்றலையும், புதிய தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தியது.

பல்வேறு வகைமை புத்தகங்களை (different genre) வாசிப்பது ஒருவருக்கு மனதளவிலும், மூளையின் செயல்பாட்டிலும் புத்துணர்ச்சி அளிக்கும் செயல். புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள் என எதுவாக இருந்தாலும், தொடர்ந்து வாசிக்கும் போது அது மனதை ஒருமுகப்படுத்தி, புரிதல் மற்றும் விமர்சன சிந்தனையை (critical thinking) வளர்க்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக (Stanford University) உள்ளிட்ட நரம்பியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள், இலக்கியப் படைப்புகளை நுணுக்கமாக வாசிப்பது மூளையின் பல சிக்கலான அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு (complex cognitive functions) தீவிரப் பயிற்சி அளிப்பதையும், உணர்வுபூர்வ வாசிப்பு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புத்துணர்ச்சி அளிப்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

அதுவே ஒருவர் சிந்தனையுடன் எழுதும்போது, அது மூளையின் பல்வேறு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் தூண்டுகிறது. இது வாசிப்பைப் போலவே பல எண்ணப் பாதைகளையும், நுணுக்கமான பகுதிகளையும் இயக்கினாலும், எழுதுதலில் கூடுதல் ஆழமான செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. எழுத்து என்பது வெறும் வார்த்தைகளை உருவாக்குவது அல்ல; ஒரு எண்ணத்தைத் தெளிவாக வடிவமைப்பது முதல், அதை அழகியலோடு வெளிப்படுத்துவது வரை, மூளை பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. இது மனதில் சிதறிக்கிடக்கும் எண்ணங்களை வடிகட்டி, கூர்மைப்படுத்தி, அவற்றை வாசகனுக்குப் புரியும்படி கட்டமைத்து வெளிப்படுத்தும் நுண்ணிய கலை ஆகிறது. தினமும் எழுதும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை, உணர்வுபூர்வமாக அணுகுவதோடு, சிக்கலான விஷயங்களைப் பகுத்தறியும் திறனையும் வளர்த்துக் கொள்கிறார்கள். அறிவியல்பூர்வமாக, வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகிய இரண்டும், மூளையில் 'சினாப்டிக் நெகிழ்வு தன்மையை' (synaptic plasticity) எனப்படும் நிகழ்வை ஊக்குவித்து, நரம்பியல் அணுக்களின் (neurons) புதிய தொடர்புகளை ஏற்படுத்த உதவுகின்றன. 

கல்வி சார்ந்த பாட்காஸ்ட்கள் (podcasts) மற்றும் ஆடியோ புத்தகங்கள் செவிவழி கற்றலை தூண்டுகின்றன. மூளையின் 'செவிப்புலன் புறணியை' (Auditory cortex) தூண்டி, உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் மையங்களை இணைத்து, நினைவாற்றலை வலுப்படுத்துகின்றன. உரையாடல் பாணியும், கதைசொல்லல் முறையும் சிக்கலான கருத்துகளை எளிமையாக்கி, பயணம் அல்லது வேலைகளின்போது மன அழுத்தமில்லாத கற்றலை உருவாக்குகின்றன. குரல் தொனி மற்றும் இடைநிறுத்தங்கள் கவனத்தை மையப்படுத்தி, தகவலை நீண்ட நேரம் மனதில் தக்கவைக்கின்றன. தமிழ் பாட்காஸ்ட்கள், சொற்களையும் உச்சரிப்பையும் கற்பிக்க, ஆங்கில ஆடியோ புத்தகங்கள் மொழி புலமையை மேம்படுத்துகின்றன. நேரத்தை திறம்பட பயன்படுத்தி, மனதை புத்துணர்ச்சியாக வைத்து, விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கின்றன.

குறுக்கெழுத்துப் புதிர்கள் மற்றும் செஸ் போன்ற மூளை விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் அறிவாற்றல் திறன்களில் தனித்துவமான மேம்பாடுகளை உணர்கிறார்கள். குறுக்கெழுத்து விளையாடுபவர்கள், தங்கள் சொற்களஞ்சியம் விரிவடைவதையும், மறைமுகமான தடயங்களிலிருந்து துல்லியமான வார்த்தைகளைக் கண்டறியும் வேகம் அதிகரிப்பதையும் தெளிவாக உணர்கிறார்கள். இது அன்றாட உரையாடலிலும், எழுத்திலும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. மறுபுறம், செஸ் விளையாடுபவர்கள், தங்கள் தர்க்கரீதியான சிந்தனை கூர்மையடைவதையும், ஒரு முடிவெடுப்பதற்கு முன் அதன் பல சாத்தியமான விளைவுகளை முன்னரே கணிக்கும் திறனையும் உணர்கிறார்கள். இது சிக்கலான சூழ்நிலைகளில் சிறந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது. .

பொதுப் பேச்சு மற்றும் விவாதங்களில் பங்கேற்பது, மனதை ஒரு புதிய பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு மூளையின் செயல்பாடுகள் வியத்தகு மாற்றங்களை அனுபவிக்கின்றன. இந்த செயல்பாடுகள் மூளையின் முன்மூளைப் புறணி (prefrontal cortex) மற்றும் உணர்ச்சி மையங்களை (emotional centers) தூண்டி, சிந்தனையின் தெளிவையும், உணர்வின் ஆழத்தையும் ஒருங்கிணைக்கின்றன. ஒருவர் தங்கள் கருத்துகளைத் தர்க்கரீதியாகவும், தெளிவாகவும் தொகுத்து வெளிப்படுத்தக் கற்றுக்கொள்கிறார், இது சொல்வளத்தை வளப்படுத்துவதோடு, சிந்தனையின் வேகத்தையும், நுண்ணறிவையும் மேம்படுத்துகிறது. விவாதங்களில், எதிராளியின் கருத்துகளை உடனடியாகப் புரிந்து, பதிலளிக்கும் திறன், மூளையின் பகுப்பாய்வு ஆற்றலையும் (analytical processing), உடனடி முடிவெடுக்கும் திறனையும் (real-time decision-making) கூர்மைப்படுத்துகிறது. இந்தச் செயல்பாடு, மூளையின் நெகிழ்வுத்தன்மையை (neuroplasticity) வளர்த்து, மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.

'சமூகத் தொடர்புகள்', மனித மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. நேர்மறையான தொடர்புகளில் ஈடுபடும் போது, மூளை நம்பிக்கை மற்றும் பிணைப்பை ஊக்குவிக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோனையும், மகிழ்ச்சியைத் தூண்டும் டோபமைனையும் வெளியிடுகிறது. இதனால், மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் குறைந்து, புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. 

அன்றாட நடைப்பயிற்சியிலிருந்து தீவிரமான உடற்பயிற்சிகள் வரை, அனைத்து விதமான உடல் செயல்பாடுகளும் டோபமைன், செரோடோனின் மற்றும் எண்டோர்பின்கள் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையை உடனடியாக மூளைக்குள் பாய்ச்சுகின்றன. இது ஒரு உடனடி "மகிழ்ச்சி வேதிப்பொருள் குமிழி குளியலை" (Neurochemical Bubble Bath) உருவாக்கி, மனநிலையை உயர்த்தி, பதட்டத்தைக் குறைத்து, இயற்கையான புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும், மன ஆரோக்கியத்திற்கான நேரடித் தீர்வாகச் செயல்படுகிறது. மேலும், உடற்பயிற்சியானது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நியூரோஜெனிசிஸ் (Neurogenesis) எனப்படும் புதிய நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது மனச்சோர்வின் அபாயத்தை 30% வரை குறைப்பதுடன், மூளையின் சுற்றுகளை மாற்றியமைத்து மனத்திறன், கவனம், மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. குறிப்பாக, உயர் தீவிர இடைவெளிப் பயிற்சி ((High-Intensity Interval Training-HIIT), நினைவாற்றலையும் கவனத்தையும் கூர்மைப்படுத்தும் BDNF (Brain-Derived Neurotrophic Factor) என்ற புரதத்தின் அளவை கணிசமாக உயர்த்துவதன் மூலம், மூளையின் உகந்த செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அற்புதமான மருந்தாகவே அமைகிறது.

இவற்றோடு, வழக்கமான பழக்கவழக்கங்களை மாற்றுவது மூளையைத் தூண்டி, எச்சரிக்கையாக வைத்திருக்க உதவுகிறது. உதாரணமாக, அதிகம் பயன்படுத்தாத கையால் பல் துலக்குவது அல்லது வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் நடப்பது போன்ற சிறிய மாற்றங்கள், மூளையை புதிய நரம்புப் பாதைகளை உருவாக்கத் தூண்டி, அறிவாற்றல் நெகிழ்ச்சித்தன்மையை வளர்க்கின்றன. அதேபோல், இயற்கையில் நேரம் செலவிடுவது, மனதிற்கு ஒரு மந்திரத் தொடுதலை அளிக்கிறது. ஒரு பசுமையான பூங்காவில் 20 நிமிட நடைபயிற்சி செய்யும்போது, மரங்களின் மென்மையான அசைவும், பறவைகளின் இனிய ஒலியும் மன அழுத்தத்தைக் கரைத்து, கவனத்தை கூர்மைப்படுத்துகின்றன. இதனால், மனம் புத்துணர்ச்சி பெறுவதோடு, மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடும், உணர்ச்சி சமநிலையும் (emotional equilibrium) கணிசமாக மேம்படுகின்றன. இவ்வாறு, இயற்கையின் அரவணைப்பும், பழக்கவழக்கங்களின் மாற்றமும் மன ஆரோக்கியத்தை வளர்த்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உற்சாகத்துடன் அனுபவிக்க வழிவகுக்கின்றன

மன அழுத்தமோ அல்லது சோர்வையோ ஒருவர் உணரும்போது, குளிப்பது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். உதாரணமாக, ஒரு நீண்ட வேலை நாள் அல்லது கடும் தேர்வு நெருக்கடிக்குப் பிறகு ஏற்படும் உடல் மற்றும் மனச் சோர்வு, உடலில் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய சூழலில், வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது, நீரின் இதமான வெப்பம் பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தைத் (parasympathetic nervous system) தூண்டி, தசைகளில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் உடனடி அமைதி உணர்வை ஏற்படுத்துகிறது. 

பல்பணி (multitasking) செய்வதைக் குறைப்பது, அல்லது தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பது (binge-watching) போன்ற செயல்களைத் தவிர்ப்பது மன ஆற்றலைப் பாதுகாக்கிறது. ஒரு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது (single-tasking) அல்லது ஆழ்ந்த வேலை (deep work) மனதை ஒருமுகப்படுத்தி, செயல்திறனை உயர்த்துகிறது. இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறை, மூளையின் முன்மூளைப் புறணியை (prefrontal cortex) தூண்டி, கவனத்தை கூர்மைப்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது.

குறுகிய வீடியோக்களை (Shorts/Reels) தொடர்ந்து பார்ப்பது, உங்கள் மூளையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனித மூளை இயல்பாகவே புதுமையை விரும்புகிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்க்ரோல் செய்து புதிய வீடியோ பார்க்கும் போது, மூளையில் 'டோபமைன்' எனப்படும் மகிழ்ச்சி அளிக்கும் நரம்புக் கடத்தி சுரக்கிறது. இதனால் உடனடி திருப்தி கிடைத்த உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இந்த “சிறு வெகுமதி உணர்வு” அடிக்கடி நிகழ்ந்தால், மூளை அதற்கு பழகி விடுகிறது. அதன் விளைவாக கவனச் சிதறல் அதிகரிக்கலாம்; நீண்ட நேரம் ஆழமாக சிந்திக்க முடியாமல் போகலாம்.
எப்போதும் உடனடி திருப்தி தரும் விஷயங்களைத் தேடும் பழக்கம் வளரலாம். மேலும், முடிவெடுத்தல், கோபத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துதல் போன்ற முக்கியமான செயல்களுக்குப் பொறுப்பான மூளையின் முன் பகுதி (prefrontal cortex) இந்தத் தொடர் பழக்கத்தால் பலவீனமடையலாம் என்று நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

தரமான தூக்கம் மூளையின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக அமைகிறது, ஏனெனில் இரவில் 7–9 மணி நேர தூக்கம் கிடைக்கும் போது, நினைவாற்றல் ஒழுங்குபடுத்தப்பட்டு கற்றறிந்தவை உறுதியாகச் சேமிக்கப்படுகின்றன. தூக்கத்தின் ஆழமான கட்டங்களில், கிளிம்பாடிக் மண்டலம் (glymphatic system) செயல்பட்டு, மூளையில் தேங்கும் நச்சுகள் மற்றும் அமிலாய்டு-பீட்டா (Amyloid-β) போன்ற தீங்கு விளைவிக்கும் புரதங்களை நீக்குகிறது. இந்த சுத்திகரிப்பு, மூளையின் ஆரோக்கியத்தை பராமரித்து, அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதுடன், நரம்பு சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது; தினமும் நிலையான நேரத்தில் தூங்குவதும், படுக்கைக்கு முன் திரைகளைத் தவிர்ப்பதும் ஆழ்ந்த தூக்கத்தை உறுதிசெய்கிறது. உணவு 
மற்றும் ஊட்டச்சத்து, மூளையின் செயல்பாட்டுக்கு முக்கியமானது; 
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீன், ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்ற உணவுகள்; பெர்ரி பழங்கள்; அடர் பச்சை இலைக் காய்கறிகள்; முட்டைகள் (Choline); மஞ்சள் (curcumin) மற்றும் டார்க் சாக்லேட் (flavonoids) போன்ற உணவுகள், மூளையின் ஆரோக்கியத்தையும் நரம்பு செல்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றன. 

மூளைக்கும் குடலுக்கும் இடையேயான இருவழித் தொடர்பு பொதுவாக ‘மூளை-குடல் இணைப்பு’ (Brain-Gut Axis) என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பின் மையத்தில், குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் தொகுப்பான மைக்ரோபயோம்கள் (Microbiome) முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதிய அறிவியல் தரவுகளின்படி, இந்த நுண்ணுயிரிகள் வெறும் செரிமானச் செயல்பாட்டிற்குத் துணை புரிவது மட்டுமல்லாமல், செரோடோனின், டோபமைன் போன்ற மனநிலையை ஒழுங்குபடுத்தும் நரம்புக் கடத்திகளை (Neurotransmitters) உற்பத்தி செய்வதன் மூலம் நம்மை ஆளுகின்றன. இதன் நேரடி விளைவாக, மைக்ரோபயோம்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனை (Stress Resilience) மேம்படுத்துகின்றன. மேலும், கவனம், நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை உள்ளிட்ட அனைத்து அறிவாற்றல் அம்சங்களையும் உறுதிப்படுத்துவதிலும் அவை இன்றியமையாத பங்களிப்பை வழங்குகின்றன.


நுண்ணுயிர்களின் தொகுப்பின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரோபயோடிக்ஸ் (probiotics) மற்றும் ப்ரீபயோடிக்ஸ் (prebiotics) இரண்டும் இன்றியமையாதவை. புரோபயோடிக்ஸ் என்பது உடலில் நேரடியாக சேர்க்கப்படும் உயிருள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகள். இவை குடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடக்கி, செரிமானத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகின்றன. தயிர், கெஃபிர், கிம்ச்சி போன்ற நொதித்த உணவுகளில் இவை நிறைந்துள்ளன. இதற்கு மாறாக ப்ரீபயோடிக்ஸ் என்பது நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு உணவாக விளங்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள். வெங்காயம், பூண்டு, காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், வெந்தயம் போன்ற உணவுகளில் இவை கிடைக்கின்றன. ஒருவேளை புரோபயோடிக்ஸ் குடலுக்குள் நல்ல பாக்டீரியாக்களை நேரடியாக கொண்டு வருமானால், ப்ரீபயோடிக்ஸ் அவற்றிற்கு ஊட்டமளித்து வளரவைக்கின்றன. இரண்டும் இணைந்து செயல்படும் போது, அதனை சின்பயாடிக்ஸ் (symbiotics) என அழைக்கின்றனர்; இது குடல் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்தி, மனநிலையையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் ஒருங்கிணைக்கிறது. இதன் எதிர்ப்புறமாக, அதிகச் சர்க்கரை மற்றும் செயற்கை சேர்மங்கள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மைக்ரோபயோம்களின் சமநிலையை சிதைத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன என்பதும் ஆய்வுகள் காட்டுகின்றன.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் செயல்பாட்டிற்கும் மிக அவசியம். நீரிழப்பு (dehydration) ஏற்படும்போது, அது கவனம் செலுத்தும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் நேரடியாகப் பாதிக்கிறது. நீரிழப்பின் முக்கிய அறிகுறிகளாக தலைவலி, சோர்வு, மனக்குழப்பம் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம். சரியான அளவு தண்ணீர் குடிப்பது, இந்த அறிகுறிகளைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்தி, அன்றாடப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.

புத்துணர்ச்சியான வாழ்வின் ரகசியம், நாம் எந்த நினைவுகளைத் தேர்ந்தெடுத்து உள்ளுக்குள் சேமிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. மன அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்மறை உணர்வுகளுக்கு மாறாக, மகிழ்ச்சி, நன்றியுணர்வு போன்ற நேர்மறை எண்ணங்கள் நிறைந்த நினைவுகள் நமக்கு சிறந்த உடல் மற்றும் மன நலத்தையும் நீடித்த புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன.

மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது என்பது ஒரு நாள் வேலை அல்ல; அது ஒவ்வொரு நாளும் சிந்தனையால், செயலால், உணர்வால், உணவால், உறவால், ஓய்வால் நிரம்பும் ஒரு பயணம். அறிவைத் தூண்டும் வாசிப்பும், எண்ணங்களை விடுவிக்கும் எழுத்தும், உற்சாகத்தை ஊட்டும் உடற்பயிற்சியும், அமைதியைத் தரும் தியானமும்—இவை அனைத்தும் மனதின் ஒளியை ஒவ்வொரு நாளும் மீண்டும் ஒளிரச் செய்கின்றன. புத்துணர்ச்சி என்பது உடலின் சுறுசுறுப்பில் மட்டும் இல்லை; அது மனதின் நுண்ணுணர்விலும், உள்ளத்தின் அமைதியிலும் வாழ்கிறது. ஒரு சிறிய பசுமைத் தாவரத்திற்கு நீர் ஊற்றுவது, ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்வது, ஒரு பழமொழியில் புதுமை காண்பது போன்ற சிறிய தருணங்கள்கூட புத்துணர்ச்சியின் விதைகள். புத்துணர்ச்சி என்பது ஒரு நிலை அல்ல; அது நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு மனநிலை.