கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 4 - ஆனந்தி ஆரூரன்

(பகுதி 4) ப்ளாஸ்டிக் புயல்: மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் உலகளாவிய அச்சுறுத்தல்


நவீன உலகம், வசதிகளையும் வளர்ச்சியையும் அள்ளித் தந்தாலும், அது அறியாமலேயே ஒர் கண்ணுக்குத் தெரியாத எதிரியை, நம் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக விதைத்துவிட்டது. அந்த எதிரி மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களாகும். இந்த ப்ளாஸ்டிக் நுண்துகள்கள், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளன. ப்ளாஸ்டிக் பொருட்கள் இயற்கையின் சக்திகளால் சிதைவடையும் பொழுது மைக்ரோ ப்ளாஸ்டிக் எனும் நுண் துகள்கள் உருவாகின்றன. இவை 5 மில்லிமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்டவை. இந்த மிகச் சிறிய மைக்ரோ துகள்கள் மேலும் சிதைவடையும் பொழுதில், நம் கண்ணுக்கே தெரியாத, 1 முதல் 1,000 நானோமீட்டர் வரை விட்டம் கொண்ட நானோ ப்ளாஸ்டிக் நுண்துகள்கள் உருவாகின்றன. இந்த மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் சுற்றுச்சூழலில் நுழைகின்றன. நேரடி நுழைவு என்பது முக ஸ்க்ரப், பற்பசை, மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களில் உள்ள ப்ளாஸ்டிக் நுண்மணிகள் (microbeads), நீர்வழியாக சுற்றுச்சூழலில் சேர்கின்றன. பாலியஸ்டர், நைலான், மற்றும் அக்ரிலிக் போன்ற செயற்கை இழைகள் (synthetic micro fibres) தயாரிப்பின் போதும், துவைக்கும் போதும் முதன்மைப் பொருட்களாக சுற்றுச்சூழலுக்குள் நுழைகின்றன. சிறிய ப்ளாஸ்டிக் பை போன்ற பொருட்கள் முதல், பெரிய ப்ளாஸ்டிக் நிராகரிப்பு கழிவுகள் வரை, சூரிய ஒளி, அலைகள், மற்றும் வெப்பத்தால் அவைகள் சிதையும் பொழுதில், மறைமுகமாக இரண்டாம் நிலைத் துகள்களாக சுற்றுச்சூழலுக்குள் நுழைகின்றன. இப்படியாக நுழைந்த ப்ளாஸ்டிக் நுண்துகள்கள், உலகத்தைச் சுற்றி ப்ளாஸ்டிக் புயலை உருவாக்கியுள்ளது.

                                       
 
இந்த "கண்ணுக்குத் தெரியாத நெருக்கடி" குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. டிஸ்கவரி சேனல் இந்த நுண்ணிய ப்ளாஸ்டிக் துகள்களை "நச்சு டைம்பாம்" (Toxic Timebomb) என்று விவரித்து, அவை மனித திசுக்களில் ஊடுருவி, சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிவியல் ஆய்வுகள் இவை மனித உடலில் - இரத்தம், நுரையீரல், கல்லீரல் , மூளை, குடல், இனப்பெருக்க உறுப்புகள்  ஆகியவற்றில் சேகாரம் ஆகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்கள், உணவு, நீர், காற்று வழியாக உடலில் நுழைகின்றன. இதன் விளைவுகள், முழுமையாக ஆராயப்படவில்லை, ஆனால் உடல்நலம் குறித்த கவலைகள் உள்ளன. இந்த நுண்ணிய துகள்களை கண்டறிந்து அகற்ற, ஃபெரோஃப்ளூயிட்ஸ் (Ferrofluids) மற்றும் மைக்ரோ ரோபோக்கள் (Micro Robots) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்களின் நெருக்கடி தொடங்கிய வரலாறு மற்றும் அதற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளைப் புரிந்துகொள்ள, மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆராய்வது அவசியம். 


1970களில், கடல் சூழலில், மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் கண்டறியப்பட்டாலும், 2004-ல் ரிச்சர்ட் தாம்சன் குழு, 'சயின்ஸ் இதழில்' (Science Magazine) மைக்ரோ ப்ளாஸ்டிக் பரவலை ஆவணப்படுத்திய போதுதான், உலகளவில் கவனிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவில், ப்ளாஸ்டிக் நுண்மணிகள் இல்லாத தண்ணீர் சட்டம்  (Microbead-Free Waters Act) இயற்றப்பட்டது. இந்தச் சட்டம், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் (personal care products) பிளாஸ்டிக் நுண்மணிகள் (plastic microbeads) பயன்பாட்டைத் தடை செய்தது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் ப்ளாஸ்டிக் நுண்மணிகளுக்கு தடை விதித்தன. இந்தத் தடைகளின் விளைவாக, இந்த நாடுகளில் மைக்ரோபீட்களின் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இதன் மூலம், நீர்நிலைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைக்கப்பட்டு, ப்ளாஸ்டிக் மாசுபாடு கட்டுப்படுத்தப்பட்டது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டங்களான 'ஹொரைசன் 2020' (Horizon 2020) மற்றும் 'ஹொரைசன் யூரோப்' (Horizon Europe)  ஆகியவை மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்களின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த நிதியானது, மைக்ரோ ப்ளாஸ்டிக்குகளின் பரவலைப் புரிந்துகொள்ளவும், அவற்றைக் குறைப்பதற்கான புதிய தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது. இதற்கிடையே, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை, மறுசுழற்சி முறைகளை மேம்படுத்துவதன் மூலமும், மற்றும் PLA (பாலிலாக்டிக் அமிலம்) போன்ற உயிர் சிதைவுறும் (biodegradable) பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும் ப்ளாஸ்டிக் கழிவுகளை 30-40% வரை குறைப்பதில் வெற்றி கண்டுள்ளன.

2002-ல் ஃபவுசர் (Fauser) குழு, டயர் தேய்மான துகள்களை (Tyre Wear Particles - TWP), மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்களின் ஆதாரமாக கண்டறிந்தது. ஐரோப்பிய ஒன்றியம் (ISO/TS 21396) தரநிலைகள் மூலம், டயர் தேய்மான துகள்களை கண்காணிக்கிறது. 2020-ல் கலிபோர்னியாவில் டயர் தேய்மான துகள்களில் காணப்படும், '6PPD-குயினோன்' (6PPD-quinone) எனும் ரசாயனம், மீன் இறப்புக்கு காரணமாக கண்டறியப்பட்டது. அதற்காக மாற்று ரசாயன உருவாக்கும் ஆய்வுக்கு 1.5 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டது. இங்கிலாந்தில், சுற்றுச்சூழல் தொழில்நுட்ப தொடக்க நிறுவனமான 'தி டயர் கலெக்டிவ்' (The Tyre Collective), 2021-ல் எலக்ட்ரோஸ்டேடிக் பிளேட்டுகள் (electrostatic plates) மேம்படுத்தப்பட்டு, டயர் தேய்மான துகள்கள் 60% சேகரிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள், டயர் தேய்மானத்தில் இருந்து வரும் நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் (PM2.5, PM10), காற்று மாசுக்கு (11%) பங்களிப்பதை கண்டறிந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் (Directive 2008/50/EC) சுத்தமான காற்று தொடர்பான முக்கியமான சட்டம், மற்றும் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA- Environmental Protection Agency) ஆகியவைகளின் விதிகளின்படி, நெடுஞ்சாலை அருகே இருக்கும் குடியிருப்புகளுக்கு காற்று தர ஆய்வை (Air Quality Analysis/Assessment) கட்டாயமாக்கின. நெதர்லாந்து, ஜெர்மனியில் 50-100 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புகளுக்கு காற்று தர ஆய்வுகள் அவசியமாக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் கனடாவில்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 'ரெயின் கார்டன்கள்' (Rain Gardens) மற்றும், 'பசுமைத் தடைகள்' (Green Barriers),  டயர் தேய்மான துகள்களில் உள்ள 6PPD-குயினோன் ரசாயனத்தை 80-90% வடிகட்டுகின்றன. 2020-ல் ஐரோப்பிய ஒன்றியம் ஒருமுறை பயன்படுத்தும் பைகள், ஸ்ட்ராக்களுக்கு தடை விதித்து, மாற்று பொருட்களுக்கு 500 மில்லியன் யூரோ முதலீடு செய்தது.

2011 ஆம் ஆண்டில், கண்ணுக்குப் புலப்படாத நானோ ப்ளாஸ்டிக் துகள்கள், கடல் மண்ணில் உறுதிப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2018 இல், ஐரோப்பாவின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் புதுமைநிறைந்த நிதியளிப்பு திட்டமான 'ஹொரைசன் யூரோப்', நானோ ப்ளாஸ்டிக் துகள்களைக் கண்டறிய 200 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியது. இந்த நிதி, 'ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி' போன்ற வேதியியல் பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி நானோ ப்ளாஸ்டிக் துகள்களை உயர் துல்லியத்துடன் அடையாளம் காண உதவுகிறது.

நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, 2022 இல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), கலிபோர்னியாவில் உணவுச் சங்கிலியில் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் தொடர்பான ஆய்வுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி, ஒருங்கிணைந்த ஆய்வுகளைத் தொடங்கியது. இது நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் மனித ஆரோக்கிய பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தது. எதிர்காலத் திட்டங்களைப் பொறுத்தவரை, 2025 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் 'வட்ட பொருளாதார செயல் திட்டம்' (Circular Economy Action Plan), நுண் ப்ளாஸ்டிக் துகள்களின் அளவை 50% குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இது ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், மறுசுழற்சியை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கிடையில், கனடாவின் 'ரெயின் கார்டன்கள்' போன்ற புதுமையான தீர்வுகள், டயர் தேய்மானத் துகள்கள் மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் பரவலை 80% வரை குறைக்கின்றன. இத்தகைய உலகளாவிய முயற்சிகள் அனைத்தும், மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் தாக்கத்தை மனித ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் குறைப்பதற்கு முக்கியமான முன்னெடுப்புகளாகும்.

மனித ஆரோக்கியத்தில் மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், பல மருத்துவ ஆய்விதழல்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (New England Journal of Medicine - NEJM) குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில், நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான ஓர் முக்கிய ஆய்வு, இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் ப்ளாஸ்டிக் நுண் துகள்களுக்கும், இருதய நோய்களுக்கும் இடையே, நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. கரோடிட் தமனி நோயால் (Carotid Artery Disease) பாதிக்கப்பட்டவர்களின் தமனி பிளேக்குகளில் (arterial plaques), நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ப்ளாஸ்டிக் நுண்துகள்கள், உடலில் இருப்பவர்களுக்கு, மாரடைப்பு போன்ற இருதயப் பிரச்சனைகள், வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதும், உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியானது, நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் மனித உடலில் படிந்து, இருதய நோய்களுக்கான ஒர் புதிய ஆபத்துக் காரணியாக இருக்கலாம் என்பதற்கான மிக முக்கியமான, முதல் ஆதாரமாகக் கருதப்படுகிறது. இதேபோல், 2025 ஆம் ஆண்டில் நேச்சர் மெடிசின் இதழில் (Nature Medicine Magazine) வெளியிடப்பட்ட ஒர் ஆய்வில், மனித மூளை திசுக்களில் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. குறிப்பாக, டிமென்ஷியா (dementia) நோயாளிகளுக்கு, நுண் ப்ளாஸ்டிக் துகள்களின் செறிவுகள் அதிகமாக இருந்தன. நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் நரம்பு அழற்சியையும் (neuro-inflammation) மற்றும் மூளையின் பாதுகாப்பு அரணான மூளை இரத்தத் தடையின் (blood-brain barrier) சீர்குலைவையும் ஏற்படுத்துகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்ட விளைவுகளாகும். இது மூளையின், கழிவு அகற்றல் திறன் சேதமடைவதையும், நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் உடலில் படிந்து, சேகரிக்கப்படுவதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், நியூ மெக்சிகோ பல்கலைக்கழக (UNM) ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் பற்றி நடத்திய ஆய்வில், மனித உடலில், குறிப்பாக மூளையில், இந்த ப்ளாஸ்டிக் நுண்துகள்கள் செறிவு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 2016 முதல் 2024 வரை மூளை திசுக்களில் இந்த செறிவு சுமார் 50% உயர்ந்துள்ளது, பெரும்பாலான துகள்கள் பாலிஎதிலீன் (PE) ப்ளாஸ்டிக்கால் ஆனவை. இந்த செறிவு உயர்வு குறிப்பிட்ட பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது, மற்ற உலகப் பகுதிகளில் இதே விகிதத்தில் செறிவு உயர்ந்திருக்குமா என்பது மேலும் ஆராயப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது மூளையில் குவிவதால் நரம்பியல் பாதிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என ஆய்வு எச்சரிக்கிறது.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. பல ஆய்வுகளின்படி, குழந்தைகள் கருவிலிருக்கும்போதே இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆதாரமாக, குழந்தைகளின் நஞ்சுக்கொடி (placenta) மற்றும் முதல் மலம் (meconium) ஆகியவற்றில் நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்பக் கடிதங்கள் இதழ் (Environmental Science & Technology Letters), 2021 இல் வெளியிட்ட ஓர் ஆய்வில், குழந்தைகளின் மலத்தில் பெரியவர்களை விட 10 மடங்கு அதிக பாலிஎதிலின் டெரேப்தலேட் (PET) சார்ந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு, ப்ளாஸ்டிக் பால் புட்டிகள், பொம்மைகள், செயற்கை இழைத் துணிகள் மற்றும் டயப்பர்கள் போன்ற பல பொருட்கள் காரணமாக இருக்கலாம். மேலும், டயப்பர்களில் பயன்படுத்தப்படும் பாலிப்ரோப்பிலீன் (PP) மற்றும் பாலிஎதிலின் டெரேப்தலேட் (PET) போன்ற ப்ளாஸ்டிக் பொருட்கள் கூட மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களை வெளியிடலாம்.

இதேபோல், கண் நோயால் பாதிக்கப்பட்ட 49 நோயாளிகளின் விட்ரியஸ் ஹ்யூமர் (கண்ணின் உள்ளே உள்ள திரவம்) மாதிரிகளில், 50 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவுள்ள 1745 நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மனித உடலின் மிக நுட்பமான பகுதிகளிலும் நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் ஊடுருவியுள்ளதைக் காட்டுகிறது. ஆய்வுகளின்படி, இனப்பெருக்க மண்டலமும் நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் படிவதற்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண் இனப்பெருக்க உறுப்புகளான விரைகள் (testes), விந்து மற்றும் புரோஸ்டேட் சுரப்பி ஆகியவற்றிலும், அதேபோல் எண்டோமெட்ரியம் (endometrium), மயோமெட்ரியம் (myometrium) உள்ளிட்ட பெண் இனப்பெருக்க திசுக்களிலும், தாய்ப்பாலிலும் நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது, இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மீது, நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான எதிர்மறை விளைவுகள் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள், பூமியின் சுற்றுச்சூழலுக்கு ஓர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இவை நமது கடல்கள், மலைகள், துருவப் பகுதிகள், மண், காற்று என எங்கும் பரவியுள்ளன. இந்த நுண்துகள்கள் உணவுச் சங்கிலிக்குள் நுழைந்து, விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடலுக்குள்ளும் சென்று, செரிமானப் பிரச்சனைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உள்உறுப்புப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மனித ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் இவற்றின் தாக்கம் குறித்த ஆய்வுகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அவற்றின் நீண்டகால விளைவுகள் பெரும் கவலையை அளிக்கின்றன. மேலும், இந்த ப்ளாஸ்டிக் நுண்துகள்கள் பாக்டீரியா, வைரஸ்கள், மற்றும் பிபிஏ (BPA), தாலேட்ஸ் (Phthalates) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களைத் தங்கள் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு செல்லும் தன்மை கொண்டவை. இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்களின் மீது உருவாகும் நுண்ணுயிரிப் படலங்கள் (biofilms), 
"ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிராக சகிப்புத்தன்மை வளர்த்துக் கொண்டுள்ள பாக்டீரியாக்கள்" (antibiotic-resistant bacteria) பரவுவதற்கு ஒரு ஊடகமாகச் செயல்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, சாலையோரக் கையேந்தி பவன்கள் போன்ற பொது சுகாதாரக் குறைபாடுகள் உள்ள சூழல்களில், நோய் கிருமிகள் அல்லது நச்சு ரசாயனங்களால், மாசுபட்ட இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்கள், ஒரு புதிய வகை சுகாதார ஆபத்தை உருவாக்கக்கூடும்.

மனித உடலில் நுழையும் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களின் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் சாத்தியமான சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை உடலில் இருந்து எப்படி அகற்றுவது என்பது ஒர் பெரிய ஆராய்ச்சிக் கேள்வியாக உள்ளது. தற்போது, இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை மனித உடலில் இருந்து அகற்றுவதற்கான உணவு சார்ந்த முறைகள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும், நம்பிக்கையின் கீற்று தெரிகிறது. Environmental Science & Technology [2023] இதழில் வெளியான ஒரு ஆய்வு, ஆப்பிளில் காணப்படும் பெக்டின் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து, நுண் ப்ளாஸ்டிக் துகள்களை குடலில் பிணைத்து, மலத்துடன் வெளியேற்றுவதை எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறிந்தது. Journal of Hazardous Materials [2022] இதழில், லாக்டோபாசிலஸ் ஆசிடோபிலஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் பிஃபிடம் (Lactobacillus acidophilus and Bifidobacterium bifidum) போன்ற புரோபயாடிக்குகள் (probiotics), பாலிஎதிலீன், பாலிஸ்டைரீன் நுண் ப்ளாஸ்டிக் துகள்களை, குடலால் உறிஞ்சப்படுவதை குறைத்ததாக, மீன்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டது. Environmental Health Perspectives [2023] மற்றும் Science of The Total Environment [2024] இதழ்களில், பாலிஃபினால்கள் நிறைந்த உணவுகளும் (பெர்ரி, பச்சை தேநீர்), ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளும் (மீன், ஆளி விதைகள்) நுண் ப்ளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸைக் (oxidative stress) குறைப்பதாக விலங்கு மாதிரிகளில் கண்டறியப்பட்டது. மஞ்சளில் உள்ள குர்குமின் [Journal of Agricultural and Food Chemistry, 2023] மற்றும் குளோரெல்லா எனும் நன்னீர் பச்சை பாசி (Chlorella) [Marine Pollution Bulletin, 2022] ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸைக் குறைக்கலாம் என்பதை கண்டறிந்துள்ளன. இவை அனைத்தும் எலிகள், மீன்கள் மற்றும் விலங்கு மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. மனிதர்களில் இந்த முறைகளின் செயல்திறனை உறுதிப்படுத்துவதற்கு விரிவான ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது. Nature Reviews Gastroenterology & Hepatology [2024] இதழ், மனிதர்களில் இதற்கான ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், முழுமையான தீர்வாக இந்த முறைகளை நம்புவது முன்கூட்டிய முடிவாக இருக்கலாம் என்றும் வலியுறுத்துகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், புரோபயாடிக்குகள், மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் மறைமுகமாக உதவலாம் என்றாலும், இவை மனிதர்களில் நுண் ப்ளாஸ்டிக் துகள்களை அகற்றுவதற்கு முழுமையான தீர்வாக இல்லை என்பதே தற்போதைய அறிவியல் ஆதாரங்களின் நிலை.

மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள், இயற்கையின் கார்பன் சுழற்சியின் பல்வேறு நிலைகளில் ஊடுருவி, அதன் செயல்திறனைப் பாதிக்கின்றன. சதுப்பு நிலங்களில், இந்தத் துகள்கள் நியூமடோஃபோர் வேர்களை அடைத்து ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைக் குறைப்பதால், மரங்களின் கார்பன் உறிஞ்சும் திறன் பலவீனமடைகிறது. கடல்களில், பைட்டோபிளாங்க்டன்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் உயிரியல் கார்பன் சேமிப்பு செயல்முறைகள் நுண் ப்ளாஸ்டிக் துகள்களால் தடைபடுகின்றன. மண்ணில் இருக்கும் இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்கள், அங்குள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகளையும், மண்ணின் ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றுகின்றன. இதன் காரணமாக, மண்ணின் கார்பன் சேமிப்புத் திறன் பாதிக்கப்பட்டு, சீர்குலைகிறது. காடுகளில், இலைகளில் படியும் நுண் ப்ளாஸ்டிக் துகள்கள், மரங்களின் ஒளிச்சேர்க்கை திறனைக் குறைக்கின்றன. மேலும், இந்தத் துகள்கள் வேர்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்றுவதால், மரங்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
இவை அனைத்தும், உலகளவில் கார்பன் உறிஞ்சும் அமைப்புகளின் செயல்திறனைக் குறைத்து, கார்பன் சேமிப்பு விகிதத்தைப் பலவீனப்படுத்துகின்றன. இதனால், வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான கரியமில வாயு வெப்பத்தைப் பிடித்து வைத்து, உள்ளூர் அளவில் வெப்பநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மேலும் தீவிரமடைகின்றன.


மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள், காற்று மற்றும் கடல் நீரோட்டங்கள் மூலம், ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் உள்ள பனி மற்றும் பனிக்கட்டிகளின் மேல் படிந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, தூய பனியானது, சூரிய ஒளியைப் பிரதிபலித்து பூமியைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆனால், இந்த நுண் ப்ளாஸ்டிக் துகள்கள் பனியில் படிவதால், அவை சூரிய ஒளியை அதிகமாக உறிஞ்சி, பனியின் பிரதிபலிப்புத் தன்மையைக் குறைக்கின்றன. இதனால் பனி உருகும் வேகம் 5-10% வரை அதிகரிக்கிறது. இது துருவப் பகுதிகளுக்கு ஒரு தீவிர சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, தற்போது மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, பல நவீன தொழில்நுட்பங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. அவற்றில் உயிரி கரி (biochar), எலக்ட்ரோஸ்பன் மைக்ரோ/நானோ ஃபைபர் கூட்டமைப்புகள் (electrospun micro/nanofibrous assemblies), மற்றும் ஏரோஜெல்கள் (aerogels) ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள், உயிரி கரி (biochar) சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. இது மரம் அல்லது விவசாயக் கழிவுகளை ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் அதிக வெப்பத்தில் எரித்து (pyrolysis) உருவாக்கப்படும், நுண்ணிய கரி போன்ற ஒரு பொருள். பலவகையான பயன்பாடுகளை உயிரி கரி (biochar) கொண்டிருந்தாலும், மண்ணில் கலந்துள்ள மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களை திறம்பட உறிஞ்சி, அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்துகிறது. 2023-ல் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இதழில் (Environmental Science & Technology magazine) வெளியான ஒரு முக்கிய ஆய்வு, குறிப்பிட்ட நிபந்தனையில், உயிரி கரி (biochar) மண்ணில் உள்ள நுண் ப்ளாஸ்டிக் துகள்களின் அளவை 30-40% குறைப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. . விவசாய நிலங்கள் ப்ளாஸ்டிக் நுண் துகள்களால் பாதிக்கப் படும் போது பயிர் விளைச்சல் குறையக்கூடும். உயிரி கரி (biochar) பயன்படுத்தப்படும் போது இது மண்ணின் வளத்தை மேம்படுத்தி, விவசாய விளச்சலையும் அதிகரிக்கிறது.இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நுண் ப்ளாஸ்டிக் துகள்களின் தாக்கத்தை குறைப்பதற்கு ஒர் முக்கிய படியாக இருக்கின்றன.

மைக்ரோ மற்றும் நானோ ப்ளாஸ்டிக் துகள்களின் முழு தாக்கமும் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. என்றாலும் நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையின் ஆணிவேரை கண்டறிந்துள்ளோம். ஏனெனில், ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முதல்படி, அதைத் தெளிவாக அடையாளம் காண்பதுதான். இந்த நுட்பமான சவாலை எதிர்கொள்ள, உலகளாவிய, அவசர நடவடிக்கைகள், வலுவான கொள்கை மற்றும் சட்ட அமலாக்கம், தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆழமான புரிதல், பரவலான பொது விழிப்புணர்வு, அத்துடன் நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளில் மாற்றங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காலச் சூழலில் இருக்கிறோம். மேலும் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மிகவும் முக்கியமான, முதன்மையான தடுப்பு நடவடிக்கையாக உள்ளது. மனிதகுல வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு சவாலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், சமூக மாற்றங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. எந்தவொரு சவாலையும் சந்தித்து, அதனைத் திறம்பட சமாளிக்கும் மனிதனின் தனித்துவமான ஆற்றல்தான், நம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். "மனித குலத்தின் உயிர்வாழ்வின் மிகப் பெரிய ரகசியம், சவால்களை வெற்றிகரமாகக் கடக்கும்போது வெளிப்படுகிறது. ஏனெனில், சவால் என்பது ஒரு முடிவின் அடையாளமல்ல; மாறாக, அது புதியதோர் தொடக்கத்தின் அழைப்பு. அறிவும் அனுபவமும் ஒருங்கிணையும்போது, மனிதன் இயற்கையுடன் இணைந்து நம்பிக்கையின் புதிய பாதையை வகுக்கிறான்.



இறைவி - தாரணி தேவி

 

"நேற்று இல்லாத மாற்றம் என்னது?" பாடல் இசைக்கத்,
தொடங்கியது மறு ஒரு தினம்.

மாற்றம் எதுவும் இல்லை,
போகும் பாதை புதியதில்லை,
நோட்டமிடும் கண்களோ மாறவில்லை,
ஏளன மொழிகளுக்கும் இடைவேளை இல்லை,
சென்றடையும் இலக்கு வெகுதூரமில்லை,
இருந்தும் தினம் தினம் நீளும் பயணத்திற்கு முடிவில்லை.

பெண்ணாய் பிறந்தமைக்கு வெட்கம் கொண்டு,
நீர் உறைந்த கண்களுடன்,
மறக்க இயலாத நினைவுகளுடன்,
கனத்தோடு முன்னேறின அவளின் கால் தடங்கள்.

அறியாத வயது,
கம்பீரக் கடல் அலைகளோடு கவிதை பாடியவள்,
கிளிஞ்சல் கோர்த்து மாலையாக்கி ரசித்தவள்,
திருவிழாக்களில் தேடித் தேடி பல வண்ணப் பட்டாடை வாங்கிச் சேர்த்தவள்.

புன்னகை பூசிய பூஞ்சோலையாய் பூத்துக் கிடந்தவள்,
கொஞ்சும் இதழ் குவித்து,
குறும்பாய் கோவித்து,
குழந்தையாய் சண்டையிடுபவள்.

குழலீட்டும் இசையாய் தமிழ் மொழிந்து,
காற்றையும் காதல் வயப்படுத்தியவள்,
பட்டாம்பூச்சிகளோடு போட்டியிட்டுச் சிட்டாய் பறந்தவள்,
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை அயராது சுமந்து திரிந்தவள்.

தாயின் ஆர்ப்பரிக்கும் அன்பில் மூழ்கி முத்தெடுத்தவள்,
அவள் முந்தானை கதகதப்பின் தாலாட்டில்
காலம் மறந்து நித்திரை கொள்பவள்,
கள்ளமில்லாத தன் கனவுகளுக்கு
உயிர் ஊட்டக் காத்துக் கிடந்தவள்.

ஆனால், காலம் தந்த பரிசோ வேறு...
அம்மாவின் மறைவில் அவள் கலங்கி நிற்க,
கண்ணீரின் ஈரம் காயும் முன்னே,
கடமையை காரணம் காட்டி,
கல்யாணம் நடத்தி,
கலைந்தது உறவினர் கூட்டம்.

"திருமணம்" என்னும் வார்த்தையை அவள் காகிதத்தில் கூட எழுதிப் பார்த்ததில்லை,
கணவன் மனைவி என்னும் உறவின் நிஜத்தை கனவிலும் கண்டதில்லை.

தடுமாறி எழுந்து,
தன்னிலை புரிந்து — அவள்
வாழ்வின் தொடக்கம் தேட,
காலன் போட்ட கணக்கில் — பாவி அவள்
கரம் பிடித்த விரல்களோ சாம்பலாய் காற்றில் கரைந்தது,
ஆசையாய் தீட்டிய வர்ணக் கோலங்களோ உயிர் அற்றுப் போனது,
இடிந்த கனவுக் கோட்டையின் இடிபாட்டில் சிக்கி இதயம் இறுகிப் போனது.

ஆண்டுகள் உருண்டோடி விட்டது,
நினைவுகள் வடுவாய் நின்றது,
வலியோ நிழலாய் தொடர்ந்தது,
அனைத்தையும் தாங்கிய அவள் மனமோ —
இன்றும், உதடுகள் ஒட்டாத "விதவை" எனும்
முத்திரையை ஜீரணிக்கப் போராடுகிறது.

இதில் என் தவறு என்ன?
துணை இழந்து நிற்கையில் தோள் கொடுக்கத் தயங்குவது ஏன்?
ஏறிட்டுப் பார்த்தால், எரித்து விடும் பார்வை எதற்கு?
எதிரே வந்தால் ஏக வசனங்கள்தான் எதற்கு?
ராசி கெட்டவள் என்னும் பட்டம் தீர்க்குமா எந்தன் பசியை?

வெளுத்த உடையும்,
திலகம் இல்லா வகிடும்,
தாழ்த்திய தலையும்,
முடிந்த கூந்தலும்,
வீட்டின் மூலையும் தான் என் விதியா?

எண்ணற்ற கேள்விப்புயல் புரட்டி எடுக்க,
பால்மணம் மாறாத குழந்தையின் முகம்
கண்முன் வந்தவளாய்...

மீண்டு எழுந்து,
மனதைக் கல்லாக்கி,
விதியோடு போராடிட,
மஞ்சள் நிறச் சேலை உடுத்தி,
மல்லிகை சூடிய கூந்தலோடு,
கால் கொலுசில் இசை மீட்டி,
கொஞ்சும் கண்ணாடி வளையல் பூட்டி,
கனவுகள் தேடி,
துயரம் மறைத்து,
புன்னகை மறந்து,
வலி நிறைந்த கண்ணீர்த் துளிகளின் துணையோடு,
தனிமையில் அன்றைய தினத்தைத் தொடங்கினாள் 
பாரதியும் காண மறந்திட்ட புதுமைப் பெண்!

ஐயம் களைவோம் - ரிதன்யா ஷங்கர்


நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அந்தக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சிலர் வைராக்கியத்துடன் இருப்பார்கள். அவ்வாறு குறிக்கோளை அடையும் அளவுக்குத் திறமை இருந்தும், நேர்மறையான எண்ணங்கள் இருந்தும், அதற்காக உழைத்தாலும் சிலரால் அதை அடைய முடியாமல் போகும். காரணம் என்னவென்று ஒரு கதை மூலம் பார்ப்போம். 

ரவிக்கு, சிறு வயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்பது கனவு. ஆனால், தாய், தந்தையரோ படிக்காதவர்கள். இதையே காரணம் காட்டி ரவியின் தாத்தாவும், பாட்டியும் ரவியின் குடும்பத்தில் எல்லா முடிவுகளிலும் தலையிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். பொதுவாகத் தாத்தா, பாட்டி என்றால் அன்பாகவும், அக்கறையுடனும் இருப்பார்கள். ஆனால், இவர்கள் அவ்வாறு கிடையாது. அவர்களின் எண்ணம் – அவர்களின் மகன், மகனின் மனைவி, மகனின் பையன் (ரவி) என்று மூவரும் எப்பொழுதும் அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதும், எப்பொழுதும் இவர்களுக்குக் கீழ்படிந்தே இருக்க வேண்டும் என்பதும்தான்.

ரவி ஒரு நாள் தன் வீட்டில் உள்ளவர்களிடம் தான் ஓர் ஆசிரியராக வேண்டும் என்று கூறினான். அன்றிலிருந்தே அவனது தாத்தாவும், பாட்டியும் எதிர்மறையாகப் பேச ஆரம்பித்தனர். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, தினமும் அவ்வாறே பேசினர். முதலில் அதை கண்டு கொள்ளாமல் தனது இலட்சியத்தின் மீதே கவனம் செலுத்தி கொண்டிருந்தான். ஆனால் ஒருவர் எதை அதிகமாக காதில் கேட்கிறார்களோ அதையே யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்; ரவியும் அதையே செய்தான், அவர்களின் சொற்களை நம்ப ஆரம்பித்தான். தனது ஆற்றல் மேலேயே சந்தேகம் கொள்ள ஆரம்பித்தான்.

"என்னால் ஒன்றும் செய்ய இயலாது! நான் தாத்தா, பாட்டி கூறுவது போல் தண்டம் தான்!" என்று ஒவ்வொரு நானும் யோசிக்கையில் ஆழ்மனதில் தன்னைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகள் அவனை அறியாமல் வளர்ந்துகொண்டிருந்தது. ஆசிரியர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், சந்தேகத்திலும் அவநம்பிக்கையிலும் மூழ்கி வீழ்ந்து விட்டான்.ஒருவரின் எண்ணமே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. தாத்தா,பாட்டியின் பேச்சை கேட்டு கொண்ட கொள்கையில் உறுதியாக இல்லாமல், அது தொடர்பான விடாமுயற்சியை மேற்கொள்ளாமல் அவன் வாழ்க்கை தொடங்கும் முன்பே திசைமாறியது. அவனைப் பற்றி நன்கு அறிந்த ஆசிரியர்களும், நண்பர்களும் அவனுக்கான வாய்ப்புகளைத் தேடி அவனைப் பங்கேற்க வைக்க பெரும்பாடுபட்டார்கள்.  அவனோ தனக்குள்ளே ஒரு சிறு வட்டத்தை போட்டு கொண்டு தன்னால் ஒன்றும் இயலாது என்று தவறாக புரிந்து கொண்டான். கடைசியில், அவனால் தன் இலட்சியத்தை அடைய முடியவில்லை. பிடித்த வேலையைப் பார்க்காமல், கிடைத்த வேலையைப் பார்த்தான்.

வாழ்க்கையில் முன்னேற எண்ணும் போது நம் மீது கற்கள் வீசப்படும்தான். அதன் பெயர் "திசை திருப்பும் கற்கள்". அந்தக் கற்களுக்குக் கவனம் கொடுத்தால் தன்னம்பிக்கை இழந்து நம் மீதே ஐயம் கொள்ள ஆரம்பிப்போம். அதேபோல், வெற்றிப் பாதையில் கீழே இறங்கி வர ஆரம்பிப்போம். 

எந்தத் தருணத்திலும் அதற்கு இடம் கொடுக்காமல், உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் உங்கள் மீது வீசப்படுபவை கற்கள் அல்ல, உங்களைப் பாராட்டும் பூக்கள் என்று உணர்வீர்கள் . எனவே, நம்மை நம் குறிக்கோளிடமிருந்து தள்ளி வைப்பது நம் ஆற்றல் மீதான சந்தேகங்களே. வாழ்க்கையில் ஒன்றை சாதிக்க வேண்டும் என்றால் குறுகிய மனப்பான்மையோடு இருந்தால் சாதிக்க முடியாது, தொடர்ந்து முன்னேறிச் சென்றாலே சாதிக்க முடியும்.  நேற்றை விட ஒரு படி மேலே செல்ல வேண்டும்,கீழே செல்ல கூடாது என்பதை நம் மனதில் தெளிவு படுத்தி கொள்ளவேண்டும். விடாமுயற்சியும் சுயநம்பிக்கையும் எப்போதும் படிக்கட்டுகளாக, உங்கள் இலட்சியத்தை அடைந்து பிரகாசமான வாழ்க்கையை வாழுங்கள் !

வாழ்க்கை செல்லும் பாதை - ரிதன்யா ஷங்கர்

                                



"வாழ்க்கை எங்கே செல்கிறது?" - இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அனைவரின் மனதில் தோன்றுவது தனிப்பட்ட வாழ்க்கையா அல்லது சமூக வாழ்க்கையா என்பதுதான். வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை என்றும் சமூக வாழ்க்கை என்றும் ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்? தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் செய்யும் சில செயல்கள் சமூக வாழ்க்கையைப் பாதிக்கும். அதேபோல், சமூக வாழ்க்கையில் நாம் செய்யும் சில செயல்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, அதை இரண்டு பிரிவாகப் பிரிக்காமல், ஒன்றாகவே கருத வேண்டும். நமது பண்பாடு, பேச்சு, நாம் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தும் எப்போதும் ஒருமித்து இருக்க வேண்டும். மனிதர்களிடத்தில் வேறுபாடு காட்டாமல், அனைவரிடத்திலும் சமமாகவே நடந்துகொள்ள வேண்டும்.
இதைப் படிப்போரின் மனதில் "இதைச் சொல்வது எளிது, செய்வது கடினம்" என்ற எண்ணம் தோன்றும் என்பது எனக்குப் புரிகிறது. நாம் சிறு வயதிலிருந்தே நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்றும், தீய செயல்கள் செய்யக் கூடாது என்றும் கற்றுக்கொண்டோம். அதனுடன் ஒரு வாக்கியத்தையும் சேர்த்துக்கொண்டோம்: "நல்ல செயல்களைச் சொல்வது எளிது, ஆனால் அதைக் கடைப்பிடிப்பது கடினம்". இதனால்தான், நல்ல குணமும் தீய குணமும் கலந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

குணமும் எண்ணங்களும் மன அமைதிக்கான வழி
எண்ணங்கள் இரண்டு வகைப்படுகின்றன;  தேவையான எண்ணங்கள் மற்றும் தேவையில்லாத எண்ணங்கள். தேவையான எண்ணங்கள் என்பவை நாம் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயலுக்கு அவசியமான எண்ணங்கள். மற்றவை தேவையில்லாத எண்ணங்கள். ஒருவர் ஒரு காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், தன் மனதை 5 நிமிடம் அமைதியாக வைத்திருந்தால் வெற்றி நிச்சயம். இந்தக் கூற்று எவ்வளவு பேர் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துள்ளார்கள்? எனவே, நாம் வாழ்க்கை முழுவதும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, தேவையானவற்றுக்கு மட்டும் நம் மனதைப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

வாழ்வின் நோக்கம் - மகிழ்ச்சி
நாம் இந்தப் பூமியில் கால் வைத்ததற்குக் காரணம் நாம் மகிழ்ச்சியாகவும், பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். நாம் அதை மறந்துவிட்டு, நமது குழந்தை போன்ற மனதில் அன்பையும், மகிழ்ச்சியையும் நிரப்பாமல், கோபத்தையும், எரிச்சலையும், பொறாமையையும் நிரப்பியுள்ளோம். சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3000 எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன. அவற்றில், மகிழ்ச்சியான எண்ணங்களைத் தவிர தேவையில்லாத எண்ணங்களையே மனிதர்கள் அதிகம் யோசிக்கிறார்கள். இவ்வாறு எண்ணினால் எவ்வாறு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும்?

வாழ்க்கை வாழ்வதற்கே !
"வாழ்க்கை கிடைத்துவிட்டது" என்று கடமைக்காக வாழ்பவர் பலர்;  "கிடைத்ததே இந்த ஒரு வாழ்க்கை" என்று ஒவ்வொரு கணத்தையும் அழகான மலைகளினூடே செல்லும் சாலைப்பயணம் போல ரசித்து, உணர்ந்து வாழ்பவர் வெகுசிலர்.  என்றும் நம் மனதை நேர்மறையான சிந்தனைகளால் நிரப்பி, மலரைப் போன்று சிரித்த முகத்துடன் வாழ்ந்துவிடில், செல்லும் வழியெங்கும் சந்தோஷமே !