இறைவி - தாரணி தேவி

 

"நேற்று இல்லாத மாற்றம் என்னது?" பாடல் இசைக்கத்,
தொடங்கியது மறு ஒரு தினம்.

மாற்றம் எதுவும் இல்லை,
போகும் பாதை புதியதில்லை,
நோட்டமிடும் கண்களோ மாறவில்லை,
ஏளன மொழிகளுக்கும் இடைவேளை இல்லை,
சென்றடையும் இலக்கு வெகுதூரமில்லை,
இருந்தும் தினம் தினம் நீளும் பயணத்திற்கு முடிவில்லை.

பெண்ணாய் பிறந்தமைக்கு வெட்கம் கொண்டு,
நீர் உறைந்த கண்களுடன்,
மறக்க இயலாத நினைவுகளுடன்,
கனத்தோடு முன்னேறின அவளின் கால் தடங்கள்.

அறியாத வயது,
கம்பீரக் கடல் அலைகளோடு கவிதை பாடியவள்,
கிளிஞ்சல் கோர்த்து மாலையாக்கி ரசித்தவள்,
திருவிழாக்களில் தேடித் தேடி பல வண்ணப் பட்டாடை வாங்கிச் சேர்த்தவள்.

புன்னகை பூசிய பூஞ்சோலையாய் பூத்துக் கிடந்தவள்,
கொஞ்சும் இதழ் குவித்து,
குறும்பாய் கோவித்து,
குழந்தையாய் சண்டையிடுபவள்.

குழலீட்டும் இசையாய் தமிழ் மொழிந்து,
காற்றையும் காதல் வயப்படுத்தியவள்,
பட்டாம்பூச்சிகளோடு போட்டியிட்டுச் சிட்டாய் பறந்தவள்,
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை அயராது சுமந்து திரிந்தவள்.

தாயின் ஆர்ப்பரிக்கும் அன்பில் மூழ்கி முத்தெடுத்தவள்,
அவள் முந்தானை கதகதப்பின் தாலாட்டில்
காலம் மறந்து நித்திரை கொள்பவள்,
கள்ளமில்லாத தன் கனவுகளுக்கு
உயிர் ஊட்டக் காத்துக் கிடந்தவள்.

ஆனால், காலம் தந்த பரிசோ வேறு...
அம்மாவின் மறைவில் அவள் கலங்கி நிற்க,
கண்ணீரின் ஈரம் காயும் முன்னே,
கடமையை காரணம் காட்டி,
கல்யாணம் நடத்தி,
கலைந்தது உறவினர் கூட்டம்.

"திருமணம்" என்னும் வார்த்தையை அவள் காகிதத்தில் கூட எழுதிப் பார்த்ததில்லை,
கணவன் மனைவி என்னும் உறவின் நிஜத்தை கனவிலும் கண்டதில்லை.

தடுமாறி எழுந்து,
தன்னிலை புரிந்து — அவள்
வாழ்வின் தொடக்கம் தேட,
காலன் போட்ட கணக்கில் — பாவி அவள்
கரம் பிடித்த விரல்களோ சாம்பலாய் காற்றில் கரைந்தது,
ஆசையாய் தீட்டிய வர்ணக் கோலங்களோ உயிர் அற்றுப் போனது,
இடிந்த கனவுக் கோட்டையின் இடிபாட்டில் சிக்கி இதயம் இறுகிப் போனது.

ஆண்டுகள் உருண்டோடி விட்டது,
நினைவுகள் வடுவாய் நின்றது,
வலியோ நிழலாய் தொடர்ந்தது,
அனைத்தையும் தாங்கிய அவள் மனமோ —
இன்றும், உதடுகள் ஒட்டாத "விதவை" எனும்
முத்திரையை ஜீரணிக்கப் போராடுகிறது.

இதில் என் தவறு என்ன?
துணை இழந்து நிற்கையில் தோள் கொடுக்கத் தயங்குவது ஏன்?
ஏறிட்டுப் பார்த்தால், எரித்து விடும் பார்வை எதற்கு?
எதிரே வந்தால் ஏக வசனங்கள்தான் எதற்கு?
ராசி கெட்டவள் என்னும் பட்டம் தீர்க்குமா எந்தன் பசியை?

வெளுத்த உடையும்,
திலகம் இல்லா வகிடும்,
தாழ்த்திய தலையும்,
முடிந்த கூந்தலும்,
வீட்டின் மூலையும் தான் என் விதியா?

எண்ணற்ற கேள்விப்புயல் புரட்டி எடுக்க,
பால்மணம் மாறாத குழந்தையின் முகம்
கண்முன் வந்தவளாய்...

மீண்டு எழுந்து,
மனதைக் கல்லாக்கி,
விதியோடு போராடிட,
மஞ்சள் நிறச் சேலை உடுத்தி,
மல்லிகை சூடிய கூந்தலோடு,
கால் கொலுசில் இசை மீட்டி,
கொஞ்சும் கண்ணாடி வளையல் பூட்டி,
கனவுகள் தேடி,
துயரம் மறைத்து,
புன்னகை மறந்து,
வலி நிறைந்த கண்ணீர்த் துளிகளின் துணையோடு,
தனிமையில் அன்றைய தினத்தைத் தொடங்கினாள் 
பாரதியும் காண மறந்திட்ட புதுமைப் பெண்!

1 comment:

  1. A single piece of her work is enough to reveal the author’s extraordinary talent and she is truly one of a kind. Few writers can express emotions with such depth and grace, she does so effortlessly. Without a doubt, all of her writings are remarkable. I recommend everyone should read her book, Selfish Colloquy; it’s a testament to her brilliance.

    ReplyDelete