மனித வளமும், பயிற்சி வகுப்புகளும் - ஆரூரன் விஸ்வநாதன்

 


குடிசை வீட்டுக் கிழவி - கௌசல்யா பாஸ்கர்


யார் அந்தக் குடிசை வீட்டைக் கடந்து சென்றாலும், இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டே வேகமாகக் கடந்து செல்வர். தப்பித் தவறிக் கூட அந்தக் கிழவியிடம் நின்று பேசிவிட மாட்டார்கள். அந்த அளவிற்கு வசைபாடும் வார்த்தைகள்.

ஓங்கி வளர்ந்த பாதாமி மரங்கள், அகலமான‌ இலைகளுடனும், அடர்த்தியான கிளைகளுடனும், ஆதவனின் வெப்பத்தை அனுமதிக்காமல் படர்ந்திருந்தது. பாதாமி மரங்கள் நிழலைத் தந்தாலும், கீழே விழுந்த இலைகளுக்குள் பூரான், தேள் போன்றவைகளும் ஒளிந்து கொள்ளும். அந்தப் பாதாமி மரங்களின் நிழலைப் போர்த்திய படி, பாசம் ஏறிய சுவற்றுடன் நின்று கொண்டிருந்தது இராமாயிக் கிழவியின் குடிசை வீடு.

எழுபது வயதான இராமாயிக் கிழவி தன் சுயநினைவு மறந்து வருவோர், போவோர்களை எல்லாம் வீண் வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருந்தார். கவனிக்க ஆளின்றி, தானே சமைத்து உண்ணும் அளவிற்கு நினைவு இருந்தது. அதிலும் ஒரு சில நாள் அடுப்பில் வைத்திருக்கும் உணவை மறந்து விட்டால் தீய்ந்து கருகிவிடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கருகிய வாடையைக் கண்டு அடுப்பை அணைத்து விட்டுச் செல்வர். புதிதாக வரும் நபர்களுக்கு இந்த இராமாயிக் கிழவி பேசுவது கடும் கோபத்தை உண்டு பண்ணும். அந்த அளவிற்குக் குரூரக் வார்த்தைகள்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், கவனிக்க ஆளின்றியும் இந்தக் கிழவியின் பயமும், உடல் நிலையும் சேர்ந்து மனநிலையை இந்த அளவிற்கு மாற்றி இருந்தது. வழியில் போவோரும், வருவோரும் இந்தக் கிழவியின் குரூர வார்த்தைகளைக் கேட்டு கோபத்துடன் கடந்து சென்றாலும், பர்வதம் அம்மாவால் மட்டும் இந்தக் கிழவியின் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.

நாற்பத்தெட்டு வயதான பர்வதம் அம்மாள் நல்ல சிகப்பு நிறத்துடன், சராசரி உயரமும், கூடவே நிதானத்தையும், சமயோசித புத்தியும் கொண்டவர். எழுபதுகளில் பள்ளி இறுதியை முடித்த பெருமைக்கு உரியவர். இவர் தன் இருபத்து ஒன்றாவது வயதில் மாணிக்கத்தின் கரம் பிடித்து இந்த ஊருக்கு வந்திருந்தார்.

கணவர் மாணிக்கம் தொடக்கக்கல்வி ஆசிரியராக இருந்து இப்பொழுது தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பணி ஓய்வுக்காகக் காத்திருப்பவர். இவர்களுக்கு அசோக் என்று இருபத்தெட்டு வயதில் மகன் இருக்கிறான். இருவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இராமாயிக் கிழவியிடம் பண்பான மொழியில் பேசுவதும், அன்பாக அவர் பேசுவதை கேட்பதும், அவருக்குத் தேவையான பழங்கள் வாங்கித் தருவதும் எனச் செய்து கொண்டிருந்தனர்.

"ஏங்க, இந்த வாரம் ராமாயி அக்காவிற்கு சுகர் ஏறாத பழமாப் பார்த்து வாங்கிட்டு வாங்க. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டுப் போய் பார்த்துட்டு வரலாம்" என்றார் பர்வதம் அம்மாள். "ஆமாம், அவரால் தானே இன்று…" என்று தழுதழுத்த நாவில் வார்த்தைகள் வராமல் ஒளிந்து கொண்டது மாணிக்கத்திற்கு.

இந்த இருபத்தெட்டு வருடங்களில் மாணிக்கத்தின் ஓட்டு வீடு கான்கிரீட் வீடாக தன்னைப் புதுப்பித்து இருந்தது. அதுபோல அந்த ஊரில் இருந்த சிறு சிறு பெட்டிக்கடைகளும் பேக்கரிகள், உணவகம் என நாகரிகத்தின் வளர்ச்சியில் தன்னை கொஞ்சம் மிடுக்காக மாற்றி இருந்தது. ஆனால் இராமாயிக் கிழவி மட்டும் கணவர் பிரிந்த பிறகு தன் வீட்டைப் புதுப்பிக்காமல் அதே வீட்டில் வாழ்ந்து வந்தார். வருடம் ஒருமுறை சுவற்றிற்கு வெள்ளை அடிப்பதுடன் சரி. உடல் நிலை பாதிக்கப்பட்ட பின் அதுவும் நின்று போயிருந்தது.

ஆம், சுமார் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு இராமாயிக் கிழவிக்கு நாற்பத்து ஐந்து வயது. அசோக் மூன்று வயது குழந்தை. குடியிருப்புகள் அதிகம் இல்லை என்றாலும் கூப்பிடு தூரத்தில் வீடுகள் இருந்தன. இரண்டு பெருநகரங்களை இணைக்கும் சாலை என்பதால் மணிக்கு நான்கைந்து வாகனங்களையாவது பார்க்கும்படி இருந்தது. தை மாதம் கரும்பு லாரிகளும் அவ்வப்போது சென்று கொண்டிருந்தது. 

பொங்கல் முடிந்த அடுத்த நாள் காலையில் இராமாயிக்கிழவி குடிநீர்க் குழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்தாள் பெரும் வாக்குவாதமும் சண்டையும் செய்து கொண்டு. சுற்றி இருப்பவர்கள் இராமாயிடம் சண்டையிட முடியாமல் ஒதுங்கி நின்றனர். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதால் சண்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது. சண்டையிடுவதிலும், எதிரியை நுணுக்கமான வார்த்தைகளால் தாக்குவதும் இராமியின் தனித்திறமை. ஆகையால் அவளிடம் யாரும் பேச்சுக் கொடுக்க பயப்படுவார்கள்.

தண்ணீர்க் குடத்தை இடுப்பில் ஒன்றும், தலையில் சும்மாடு கூட்டி ஒன்றும் வைத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாரானாள் இராமாயி. 

அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தேறியது. மூன்று வயதுக் குழந்தையாக இருந்த அசோக் கரும்பை கையில் வைத்துக்கொண்டே சாலையின் நடுவில் வந்துவிட்டான் லாரி ஒன்று வருவதை கவனிக்காமல். கவனித்தாலும் அச்சிறு வயதில் அவனுக்கு எதுவும் தெரியப் போவதில்லை.

குடத்தை இடுப்பில் வைத்த ராமாயி "அடேய்! கிறுக்கு பயலே" என்று தண்ணீருடன் இரண்டு குடங்களையும் கீழே போட்டுவிட்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று அசோக்கை வாரி அணைத்துக் கொண்டு சாலையின் அந்தப்புரம் ஓடினாள். தண்ணீர்க் குடங்கள்‌ கீழே விழுந்து உடைந்தது ‘பொத்’ என்ற சத்தத்துடன். காலில் கூர்மையான கல் குத்தி ரத்தம் பீறிட்டது. ஆனால் வலி நரம்புகள் யாவும் துண்டிக்கப்படிருந்தது இராமாயிக்கு. "ஏன்டா மவனே, ஊட்டுல எல்லாருக்கும் உன்னப் பாத்துக்கிறத விட என்னடா வேல வேண்டிக் கிடக்கு?" என்றாள் முத்தமழையைப் பொழிந்து கொண்டே. ஆம். குழந்தைப் பேறு இல்லாத இராமாயின் வேதனைகள் அனைத்தும்‌ அசோக்கைக் காப்பாற்றியதில் கரைந்து கொண்டு இருந்தன. அதற்குள் கூடிய கூட்டத்தில் "நூலிழையில் தப்பிச்சுட்டடா பயலே" என்று கூறினர் சிலர். சிலரோ “கடவுளுக்குத் தான் நன்றி சொல்லனும்” என்றனர்.

நடந்த அசம்பாவிதத்தை கேட்டு பர்வதம் அம்மாவும், மாணிக்கமும் ஓடி வந்தனர். அசோக்கை இராமாயிடமிருந்து வாங்கிய பர்வதம் இராமாயின் இரு கரங்களையும் தன் ஒரு கையில் பற்றி கொண்டு "ரொம்ப நன்றி ராமாயிக்கா" என்றார் கண்ணீருடன். "பரவால்ல பருவதம் புள்ளைய பத்திரமா பாத்துக்கோ, அப்புறம் அய்யோனாலும் வராது, அழுது புலம்பினாலும் கிடைக்காது" என்ற படி தன் உடைந்த தண்ணீர் குடங்களை எடுக்கச் சென்றாள் இராமாயி.

எத்தனை சுக துக்கங்களைக் கடந்து வந்திருந்தாலும் அன்றைய நிகழ்வும் இராமாயி தன் உயிரை துச்சமாக நினைத்து அசோக்கைக் காப்பாற்றியதும் இன்று வரை மனதில் அழியாப் பதிவாய் இருந்தது பர்வதம் அம்மாவுக்கும் மாணிக்கத்திற்கும். அந்த நன்றிக் கடனை அடைக்கத் தான் முடியுமா என்ன? இன்று மட்டுமல்ல இராமாயின் முடிவுக் காலம் வரை இப்பயணம் தொடரும் என்று மனதில் நினைத்தார் பர்வதம்.

ஐந்து விரல்கள் - ரிதன்யா ஷங்கர்

கதையின் தலைப்பு "ஐந்து விரல்கள்" என வைக்கக் காரணம், நம் வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திப்போம். சிலர் நல்ல குணத்துடன் இருப்பார்கள்; சிலர் நல்லதும் கெட்டதும் கலந்திருப்பார்கள்; இன்னும் சிலர் முழுவதுமாகத் தீய குணத்துடன் இருப்பார்கள். சிலரோ தங்களுக்குத் தேவையானவர்களிடம் மட்டும் நல்லவர்களாகவும், மற்றவர்களிடம் தீயவர்களாகவும் நடந்துகொள்வார்கள்.

இந்த "தேவையானவர்கள்" யார் என்று பார்த்தால், அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போடுபவர்கள். உண்மையைச் சொல்லி, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல நினைப்பவர்கள் அவர்களுக்குத் தேவையில்லாதவர்களாகி விடுகிறார்கள்.

நான் சில மாணவர்களிடம் இப்படிப்பட்ட குணங்களைக் கண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி ஒரு கதை மூலம் பார்ப்போம்.

கதைக்குள் செல்வதற்கு முன் தேவதைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். தேவதைகள் வானத்தில் இருந்து வருவார்கள், மாயாஜாலம் செய்வார்கள் என்று பல கற்பனைகள் உண்டு. ஆனால் உண்மையில் தேவதைகள் நம்முடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, ஆசிரியர்களே! ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கத் துடிக்கும் அவர்களின் அன்பு தூய்மையானது.

ஆனால் இந்தக் கதையில் வரும் சில மாணவர்கள், ஆசிரியர்களின் அன்பையும் அவர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு நண்பர் கூட்டத்தை அமைத்துக்கொண்டு, சரி எது தவறு எது என்று சுட்டிக்காட்டக்கூடத் தெரியாமல், எதற்கெடுத்தாலும் ஜால்ரா போடுவார்கள். ஆசிரியரை ஏமாற்றுவதாக நினைத்து, தங்களையே ஏமாற்றிக்கொண்டு, வாழ்க்கையில் உருப்படாமல் போனவர்களே அதிகம். 



மனோஜ் என்றொரு மாணவன் இருந்தான். அவனது பெற்றோர் நன்கு படித்தவர்கள். அதனால் சிறு வயதிலிருந்து பள்ளி முடியும் வரை அவன் ஒரே பள்ளியில்தான் படித்தான். ஐந்தாம் வகுப்பு வரை நல்ல நண்பர்களுடன் பழகி, நல்ல குணத்துடன் நன்கு படித்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆறாம் வகுப்பு வரும்போது, அவனது நண்பர்கள் அதிகக் கட்டணம் காரணமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள்.

மனோஜ் ஆறாம் வகுப்பிற்குச் சென்றான். அங்கு அனைவரும் புது நண்பர்கள். யாருடன் சேர்வது என்று தெரியாமல் பயத்துடன் எப்போதும் முதல் வரிசையில் அமரும் மனோஜ், அன்று கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அங்கு ஏற்கெனவே மூன்று மாணவர்கள் வேறு பள்ளியிலிருந்து குழுவாக வந்திருந்தனர். மனோஜைத் தனியாகப் பார்த்த அந்த மூவரும், "இவன் தனியாக இருக்கிறான். இவனை நம்முடன் சேர்த்துக்கொண்டால் நால்வர் ஆவோம்" என்று நினைத்து, அவனைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள்.

ஆனால் மனோஜுக்கு ஆரம்பத்திலிருந்தே அவர்கள் மீது ஒரு பதற்றம் இருந்தது. 'இவர்கள் நல்ல நண்பர்கள்தானா?' என்று அவனுக்குள் சந்தேகம் எழுந்தது. இருப்பினும் அவர்களுடன் சேர்ந்துவிட்டான்.

அந்த மூவரும் எல்லா ஆசிரியர்களைப் பற்றியும் கேலி கிண்டல் செய்தார்கள். இதைப் பார்த்த மனோஜ், "ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "நீ உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டாய். இப்படிப் பேசினால்தான் மாஸ். அப்போதுதான் எல்லாரும் நம்மை மதிப்பார்கள்" என்று கூறினார்கள்.

முதலில் அவர்களின் கேலி கிண்டலுக்கு மயங்காமல் இருந்த மனோஜ், ஒரு கட்டத்திற்கு மேல் சிரிக்க ஆரம்பித்தான். அதுமட்டுமல்ல, நல்ல மதிப்பெண் வாங்கிக்கொண்டிருந்த அவன், படிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டான். படிக்காமல் இருந்தால்தான் சக மாணவர்களிடையே கெத்தாக இருக்க முடியும் என்று அந்த மூன்று நண்பர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டான்.

பள்ளி ஒரு கோவில் போன்றது; ஆசிரியர்கள் கடவுளைப் போன்றவர்கள். மனிதர்கள் தவறு செய்யும்போது கடவுள் சும்மா இருப்பாரா? அதேபோல் மனோஜின் வகுப்பு ஆசிரியையான சுவாதி, அவன் குறைந்த மதிப்பெண் எடுப்பதைக் கண்டார்.

மனோஜ் நன்கு படிக்கும் மாணவன் என்பது அவருக்குத் தெரியும். எனவே மனோஜை அழைத்து, "ஏன் குறைந்த மதிப்பெண் வாங்குகிறாய்?" என்று கேட்டார். மனோஜ் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். "இனிமேல் நன்கு படிப்பேன்" என்று சொல்லிவிட்டு, தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

அவன் மனதுக்குள் ஒரு போராட்டத்துடன் அமர்ந்திருந்தபோது, திடீரென ஒரு புது மாணவன் அவர்களின் வகுப்புக்கு வந்தான். அவன், மனோஜின் மூன்று நண்பர்களின் நெருங்கிய நண்பன். அந்த மூவரும் அவனை உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.

அந்தப் புது மாணவன் வந்த பிறகு, மனோஜிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். மனோஜே அவர்களிடம் சென்று, "ஏன் என்னுடன் பேச மாட்டீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள் சிரித்துக்கொண்டே, "நாங்கள் ஒற்றைப்படை நண்பர் கூட்டத்தை வைத்திருக்கிறோம். ஒருவர் இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து உன்னைச் சேர்த்துக்கொண்டோம்" என்று கூறினர்.

மனோஜின் மனம் உடைந்து போனது. என்ன செய்வது என்று தெரியாமல் நடந்ததை அவன் பெற்றோரிடம் கூறினான். அவர்கள் கோபப்படாமல், "மனோஜ் செல்லமே, வாழ்க்கையில் தெரியாமல் தவறு செய்வது பொதுவானதுதான். நீ இதை உணர்ந்ததே போதும். இனிமேல் இந்தத் தவறைச் செய்யாமல் நன்கு படி" என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட மனோஜ் தனது தவறை உணர்ந்து, மனம் திருந்தி நன்கு படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றான்.

அன்று அவன் ஒரு முடிவை எடுத்தான்:
"நண்பர்களுடன் சேர்ந்தால் நல்ல நண்பர்களுடன் சேர வேண்டும். இல்லையென்றால் தனியாகவே இருக்கலாம்."

ஆம், அதுதான் உண்மை. நம் கைகளில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. அதில்:
முதல் விரல் – அம்மா,
இரண்டாவது – அப்பா,
மூன்றாவது – ஆசிரியர்,
நான்காவது – கடவுள்,
ஐந்தாவது – நண்பர்கள்.

இவர்கள் ஐந்துபேரும் நம் வாழ்வில் முக்கியமானவர்கள்.

கடவுள் நம் வேலையைச் சுலபமாக்கிவிட்டார். தாய், தந்தை, ஆசிரியர், கடவுள் ஆகியோரை நாம் எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால், ஐந்தாவது விரலான நட்பை நாம் தான் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

மனோஜ் முதலில் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்தான். பிறகு அதை உணர்ந்து, வாழ்க்கையின் லட்சியப் பாதையில் செல்லத் தொடங்கினான். ஆனால் அந்த மூன்று மாணவர்களோ தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு, முன்னேறாமல் போயினர்.

தெளிவு - மூர்த்தி, கௌசல்யா பாஸ்கர், ராதா மனோகரன், ஶ்ரீவீணா


ரு
க்மணி நடக்க துவங்கி அரை மணி நேரம் ஆகியும் எந்த வண்டியும் அந்த வழியே வர வில்லை. ருக்மணியின் ஊருக்கு காலை 8 மணிக்கும் மாலை 5 மணிக்கும் பேருந்து வசதி உள்ளது. ஆனால் அந்த பேருந்து தினமும் சரியான நேரத்துக்கு வந்து விடும் என உறுதியாக சொல்ல முடியாது. சில நாட்கள் பேருந்து வராமலும் போகலாம் என்பதால் ருக்மணி பேருந்தை எதிர்பார்ப்பதில்லை.

சிறு வயதில் அப்பாவுடன் நகரங்களுக்கும், தூரத்தில் உள்ள கோவில்களுக்கும் லாரி பிடித்து செல்லும்போது தான் ருக்மணிக்கு வண்டி பிடித்து போவது அறிமுகம் ஆனது.
அப்போதிருந்தே வண்டி பிடித்து செல்வது ருக்மணிக்கு பழகி விட்டது. சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது தூரத்தில் வாகனம் வரும்போது ஒருமுறை திரும்பி பார்த்தால் போதும், அவர்களாகவே வண்டியை நிறுத்தி  ஏற்றிக்கொண்டு செல்வார்கள்.

ருக்மணி சிறிது நாட்கள்  சித்தாள் வேலைக்கு சென்ற போது முத்து தான் ரெகுலராக அழைத்துச்சென்று கொண்டிருந்தான். ஒரு மாதம் போன பிறகு முத்து  ருக்மணியை காணதது போல் விர்ரென சென்று விடுவான். இரண்டு மாதத்திற்கு பிறகு ருக்மணியும் சித்தாள் வேலையில் நின்று விட்டாள். இப்போது உள்ளூரில் எதாவது கூலி வேலை இருந்தால் போவது இல்லையென்றால் நூறுநாள் வேலைக்கு போவது என உள்ளூரிலேயே வேலை பார்த்துக்கொள்கிறாள்.

வெகு நேரமாகியும் வண்டி எதுவும் வராததால் நடையின் வேகத்தை கொஞ்சம் கூட்டிய போது பின்னால் ஒரு பைக் வரும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்த போது முத்து தான் வந்துகொண்டிருந்தான். 'இவன் நிற்க மாட்டான்' என நினைக்கொண்டிருக்கும்போதே பைக் வேகம் குறையும் சத்தம் கேட்டது. "அக்கா ஏறுங்க போலாம்" என ஏற்றிக்கொண்டு பைக் கிளம்பியது.

"என்ன முத்து..பார்க்காத மாதிரியே போவ..இன்னைக்கு என்ன அதிசயமா கூட்டிட்டு போற..?"

"இல்லக்கா..இப்போ எல்லாம் வீட்டுல கிளம்பவே நேரமாயிடுது...அடுச்சு புடிச்சு போனா தான் பஸ்ஸ புடிக்க முடியுது...அப்படி போனாலும் கூட சில நாள் பஸ் விட்டுருவேன்..அதான் நிக்கிறது இல்லக்கா..சரி கவுந்தப்பாடில என்ன வேலைக்கா?"

"பேங்க் வரைக்கும் போகோனுஞ்சாமி..புள்ளை ஊர்ல நோம்பி வருது...அழைப்புக்கு வர்றவங்க கிட்ட துணி எடுத்துக்க சொல்லி பணம் கொடுக்கோனுமில்ல..அதான் பேங்க்ல போய் எடுத்துட்டு வரலாம்னு வர்றேன்"

"பேங்ல பணம் நிறைய வச்சிருக்கற போல?"

"ஆமா...எனக்கு இலட்ச இலட்சமா வருமானம் வருது பாரு..எல்லாத்தையும் பேங்க்லயே போட்டு வச்சிருக்கேன். ரோட்டு வேல காசு...மாசம் ஆயிரம் ரூபா வர்றது..இதெல்லாம் தான் இருக்குது..அதை தான் எடுக்கனும்"

"அப்புறம் அந்த வட்டிக்கு கொடுக்கற பணம் எல்லாம்..ஓ..அதெல்லாம் பேங்க்ல போடறதில்லையா...சரிக்கா, சம்பாரிச்சு சம்பாரிச்சு புள்ளைக்கே கொடுக்கறயே..உன்ற மருமக சும்மா உடுமா?"

"அதான் அனாதைனு எழுதி வச்சு பணம் வாங்க வெச்சுட்டாங்கல்ல..அப்புறம் அவங்களுக்கும் எனக்கும் என்ன வேண்டி கிடக்கு" என்றாள் குரலை சற்று உயர்த்தி.

குரலோடு சேர்ந்து சில கவலைகளும் உயர்ந்தது ருக்மணிக்கு... தன்மகள் புவனாவை ஆடம்பர வாழ்க்கை வாழ வைக்க முடியவில்லை என்றாலும்,அத்தியாவசியத்தை பூர்த்தி செய்து அவளை கவனித்துக் கொள்ளும் கணவன் கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்தாள்.
"இந்த புள்ள நல்லா இருக்கோணும்னு தானே கல்லும், மண்ணும் செமந்து கால் வயித்துக் கஞ்சிய குடிச்சாவது படிக்க வெச்சேன். இந்த புள்ள இப்படி குடிகாரனை தான் கண்ணாலம் கட்டுவேனு கட்டி சீரழியறாளே" என்று கண்ணீருடன் புலம்பினாள் ருக்கு.

"அவ கையில நாலு காசு இருந்தா அவ பொழப்பு ஓடிருன்னு நெனச்சு படிக்க வெச்சன்.. இப்ப அந்த நாலு காசும் பிராந்தி கடைக்கு தான் போவுது..இதுல ஆகாத பொம்பளைங்க சவகாசம் வேற..சொந்த பந்தம் ஆரும் இல்லாதனால கேட்கவும் ஆளில்ல" என்று முந்தானை தலைப்பில் கண்ணீரை துடைத்துக்கொண்டே மூக்கை சீந்தினாள் ருக்கு.

"பிராந்தி கடைக்கு போற காசுக்கு நீ ஏன் கஷ்டப்படுற? அவ பண்ண தப்ப அவளே அனுபவிக்கட்டும்னு விட வேண்டியது தானே"

"புள்ள கஷ்டப்படுறதை பாத்துட்டு எப்படி நாம சும்மா இருக்கறது சொல்லு. ஊர்ல எல்லா சிறுசுவளும் புது சட்ட போட்டிருக்கும் போது நம்ம பேரன் பேத்தி மட்டும்
பொக்குனு பார்த்துட்டு ஏங்கிட்டு நிக்கும்.. அதனாலதான் இந்த காசை எடுத்துக்கிட்டு போய் கொடுக்கலாமுன்னு வந்தேன்..."

இடைவெளி விட்டாள் ருக்கு. அந்த இடைவெளியில் பள்ளி வாகனம் ஒன்று அவர்களை கடந்து சென்ற பிறகு மீண்டும் தொடர்ந்தாள்.

"ஆனா என்ற மவன் தங்கராசு இதெல்லாம் கண்டுக்கறது இல்ல. 'கவர்மெண்ட் காசு எல்லாமே சரியா தான் செலவாகுதா?  நீ எப்பவும் யாரையும் கையேந்த வேணாம்'னு சொல்லி அநாதிப் பணத்துக்கு எழுதி வெச்சான்.. எனக்கு என்னமோ பணத்தை விட நாம் அநாதிங்கறது தான் சங்கடமா இருந்துச்சு ஒருவகையில அவஞ் சொல்றதுலையும் நாயம் இருக்கு"

" ஏக்கா இப்படி நீ குடுக்குறியே,  எண்ணிக்காவது உன்ற மவனும் மருமவளும் வந்து கணக்கு கேட்டா என்ன செய்வே?"

"நம்ம புள்ளை சீரழிச்சு கெடுக்குதேனு தான் நாம உசுரோட இருக்கற வரைக்கு நம்ம கைல என்ன ஆகுமோ அதை பண்ணுவோம்னு தான் பண்ணிட்டு இருக்கேன்‌. இதை எப்படி இவங்களுக்கு புரிய வைப்பேனு தெரியலை...நூறு நாள் வேலை முடிச்சதுக்கு அப்புறம் பக்கத்துல ஹோட்டல்ல பாத்திரம் கழுவுற வேலையும் இருக்காம்.. அதை கேட்டு இருக்கேன்..அதுல கிடைக்கற காசை மகனுக்கு கொடுக்க வேண்டியது தான்"

"வேலை வேலைன்னு அலைஞ்சு ஒடம்ப கெடுத்துக்காதக்கா" என்று முத்து கூறவும் பேங்க் வாசலில் பைக் நிற்கவும் சரியாக இருந்தது.. முத்துவிற்கு நன்றி கூறிவிட்டு பேங்கில் நுழைந்தாள் ருக்கு, இரு ஜோடி கண்கள் அவளை எதிரே இருந்து நெருப்பு கணலுடன் கவனிப்பதை அறியாமல்.

கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த போது கவுன்ட்டருக்கு முன்னால் மூன்று பேர் வரிசையில் நின்றார்கள். அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டாள் ருக்கு. ஆனால் மனம் ஓர் இடத்தில் நிற்கவில்லை. தான் பணம் எடுப்பது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மருமகள் வாணிக்கு எக்காரணத்தைக் கொண்டும் தெரிந்துவிடக் கூடாது என்று மனம் அல்லாடியது. மகன் தங்கராசு பெரிய வசதியான வாழ்க்கை இல்லை என்றாலும், தனது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு உள்ளவன். ஆனால் மகளுக்கு கேள்விக்குறியான வாழ்க்கை; குடி, கும்மாளம், சீட்டாட்டம் என அனைத்து கெட்ட பழக்கங்களின் மொத்த உருவமாக இருந்தான் மருமகன் கோவிந்தன். மனதிற்குள் கேள்விகளையும் பதில்களையும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டும் கூறிக்கொண்டும் நகர்ந்தாள் ருக்கு. பாஸ்புக்கை கேசியரிடம் கொடுத்து 1500 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள், வீட்டில் வெடிக்கப் போகும் பூகம்பத்தை அறியாமல்.

பேங்க்கில் இருந்து வெளியே வரும் பொழுதே வியர்த்துக் கொட்டியது ருக்மணிக்கு. சேலை முந்தானையால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டே, வெயிலில் கண்களை சுருக்கி அண்ணாந்து சுட்டெரிக்கும் சூரியனின் திசை பார்த்து மணி 12 இருக்கும் என தோராயமாக கணக்கிட்டாள்.  இந்நேரத்துக்கு பேருந்து வருவதற்கு வாய்ப்பே இல்லை. காலையில் அழைத்து வந்த முத்துவைப் போல் தற்போது அழைத்துச் செல்லவும் யாரும் இல்லை.  நடந்தே தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பொழுது அவளுக்கு மலைப்பாக இருந்தது. அதைவிடவும் அந்த  1500 ரூபாய் பணத்தை பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும்; மகனுக்கும், மருமகளுக்கும் தெரியாமல் டிரங்குப் பெட்டியிலோ, அஞ்சறைப்பெட்டியிலோ பணத்தை பத்திரப் படுத்தி, மகள் அழைப்பிற்கு வரும் பொழுது கொடுத்து அனுப்ப வேண்டும். இவை எல்லாமாக சேர்ந்து  பாரத்தை அவள் உடலில் ஏற்றின.  உடல் பாரம் காலில் இறங்க, ஒருவித வலியை மனதிலும், கால்களிலும் உணர்ந்தவளாக நடக்கத் தொடங்கினாள் ருக்மணி.

வீட்டை அடையும் பொழுது பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் மீதம் வைத்து விட்டுப் போன ராகிக்களியைத் தட்டத்தில் போட்டு, கொஞ்சம் பருப்பு சாம்பாரை அதன் மேல் ஊற்றியபோது வெளியே இருந்து "அம்மா" என்ற வார்த்தை கோபமாய் அந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தது. படபடப்பாய் வெளியே வந்து ருக்கு அங்கு நின்ற தங்கராசுவைப் பார்த்து சற்று ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தாள்.

"என்னப்பா இந்த நேரத்துல? எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லையா?" குழப்பத்துடன் கேட்டாள்.

"உன்னோட அக்கறை எல்லாம் இருக்கட்டும்...
இன்னைக்கு எதுக்கு பேங்க்ல போய் பணம் எடுத்துட்டு வந்த? எவ்வளவு எடுத்துட்டு வந்த?"  என்று கோபம் குறையாமல் கேட்டான் தங்கராசு.

 "அது.... அதுவந்து.... மழை காலத்துல வீடு முச்சூடும் ஒழுகுது. இரும்பு கதவு வேற கீழால துருப்புடிச்சு பேந்துக்கிட்டு நிக்குது, அதை எல்லாம் சரி  பண்ணலைனா இந்த மழை காலத்துக்கு இருக்கவே முடியாது. சரி பண்ணியே ஆகணும். அதான் இருந்த காசை எடுத்து வந்தேன்" நாக்கு உலர்ந்தது அவளுக்கு.
 
"அதுதான் எவ்வளவுன்னு கேட்கிறேன்"
அவன் குரலில் இருந்த உக்கிரம் அவனுடையது அல்ல மருமகள் வாணியின் தூபம்  என்பது ருக்மணிக்கு நன்றாகவே தெரியும்.
அவள் பதில் சொல்ல எத்தனிப்பதற்குள்
"அட சண்டாளி, என் தங்கமே...உனக்கு என்னாச்சு?" வாணியின்  அம்மாவின் குரல் கேட்டு வெளியே ஓடி வந்தனர் தங்கராசும், ருக்மணியும். தலையில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தவளுக்கு அருகில் மல்லாந்து விழுந்து கிடந்தாள் வாணி. அவளது தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

தனது தம்பி கொடுத்த தகவலின்படி ருக்மணி பேங்கில் இருந்து பணம் எடுத்து வந்ததை அறிந்த வாணி, கணவனை உசுப்பேத்தி அனுப்பி விட்டு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை உடைந்து தொங்கிக் கொண்டிருந்த மர ஜன்னல் வழியே காதை வைத்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அங்கே வந்தாள் வாணியின் அம்மா. அம்மாவைப் பார்த்ததும் வேகமாக நகர முயன்றவள் வழுக்கி விழுந்திருந்தாள்.

தங்கராசும் ருக்மணியும் வெளியே ஓடி வந்தனர். வாணியை மடியில் கிடத்தி அழுது கொண்டிருந்தாள் அவள் அம்மா. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். கல்லுரியில் படித்துக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு சுந்தர் ஓடி தன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்தான்.
ருக்மணி வீட்டிற்குள் சென்று 1500 ரூபாய் பணத்தை கொண்டு வந்து தங்கராசின் சட்டை பாக்கெட்டில் திணித்து, "ஆஸ்பத்திரி செலவுக்கு வச்சுக்கோ" என்றாள். தங்கராசு தன் தாயை ஏறிட்டான், கண்கள் கலங்கின.  "சீக்கிரம் கூட்டிட்டுப் போ"'என்றாள் ருக்மணி.

வாணியை ஏற்றி தங்கராசு பின்னால் அமர்ந்து அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டான். கவுந்தப்பாடி ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கே அவளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு பிறகு மண்டையில் தையல் போடப்பட்டது. பிறகு ஊசி , மருந்து மாத்திரை என  6700 ரூபாய் செல்வாகிப் போனது. அம்மா கொடுத்த 1500 தன்னிடமிருந்த 5000 எல்லாம் சேர்ந்து 6500 இருந்தது. சுந்தரிடம் 200 வாங்கிக் கொடுத்துவிட்டு தங்கராசு ,வாணி, சுந்தர் மூவரும் வீடு திரும்பினர்.

இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்ற அரை மணி நேரத்துக்குள் மகள் புவனாவும் தன் கணவனுடன் அழைப்புக்காக வந்தாள். ருக்மணி நாளை சாந்தா மணியிடம் கடன் வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்திருந்தாள். அதற்குள் மகளும் மாப்பிள்ளையும் வந்துவிட , என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்தாள். 

"ஏம்மா ஒரு மாதிரி இருக்குற...நான் சந்தோஷமான செய்தி சொல்லலாம்னு வந்தேன்" என்றாள் புவனா.

"அடுத்த புதங்கிழம நோம்பினு தான் தெரியுமே"

 "அதில்லம்மா.  கடந்த மூணு வாரமா இவர் குடிக்கறத நிறுத்திட்டார்மா"

''நெசமாவா"

"ஆமாம்மா. ஒரு மாசத்துக்கு முன்னால் இவர் கூட்டாளி குடிக்கறதுனால ஈரல் கெட்டு மஞ்சக்காமாலை'ல கஷ்டப்பட்டதையும் அதுக்கப்புறம் அவங்க குடும்பம் படற கஷ்டத்தையும் பார்த்து குடிய விட்டுட்டார்"

ருக்மணி யின் மனம் மகிழ்ந்தது. அடுத்த நிமிடமே தன் மருமகளுக்கு என்ன ஆனதோ என கவலையுற்றாள். பின் புவனாவிடம் நடந்த விஷயத்தை சொன்னாள். அவள் பதறினாள். அதற்குள் பைக் சத்தம் கேட்கவே வெளியே வநதனர். தங்கராசு கைத்தாங்கலாக  வாணியை வீட்டிற்கு கூட்டிச்சென்றான்.
புவனா அண்ணனைப் பார்த்து "டாக்டர் என்ன சொன்னாருண்ணா?. இப்போஎப்படி இருக்கு  அண்ணி?" என்றாள்.

 "பயப்பட ஒன்னுமில்ல. தையல் போட்டிருக்காங்க. மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்க. அஞ்சு நாள் கழிச்சு வரச்சொல்லியிருக்காங்க"

 "சரிண்ணா. அடுத்த புதன் நோம்பினு அழைப்பு சொல்ல வந்தேன்..எல்லாரும் நேரமே வந்திடுங்க"

"சரிம்மா வாணி ரெஸ்ட் எடுக்கட்டும். நானும் அம்மாவும் வர்றோம்"

"அப்ப நாங்க கிளம்பறோம்" என்று புவனா கணவனுடன் தன் வீட்டுக்கு கிளம்பினாள். அன்று இரவு வாணி தான் செய்த தவறுக்கு வருந்தி தங்கராசிடம் மன்னிப்புக் கேட்டாள்.
   
புதன்கிழமை நோம்பி அன்று காலையில் தங்கராசும் ருக்மணியும் எட்டு மணி பஸ் பிடித்து கவுந்தப்பாடியில் இறங்கினர். கடைவீதிக்குச் சென்று குழந்தைகளுக்கு துணியும் பலகாரமும் வாங்கித் தன் தாயிடம் கொடுத்தான் தங்கராசு. ருக்மணி உளம் குளிர்ந்து அகம் மகிழ்ந்து தங்கராசுவைப் பார்த்தாள்.

இருவரும் கவுந்தப்பாடி பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போது ஈரோட்டில் இருந்து சக்தி செல்லும் தனியார் பேருந்தும் உள்ளே வந்தது. பேருந்திற்குள் 'எதிர் நீச்சலடி..' என அனிரூத் பாடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த நான்கைந்து பயணிகளோடு இவர்களும் ஏறிக்கொள்ள பேருந்து கிளம்பியது. இப்போது அனிரூத் ஓய்வெடுக்க 'யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்...' என  வருண்பரந்தாமன் பாட தொடங்கினார்.

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி சிறுகதை எழுதுதல் முறையில் மூர்த்தி, கௌசல்யா பாஸ்கர், ராதா மனோகரன், ஶ்ரீவீணா  ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)

தவம் - கௌசல்யா ஞானேஸ்வரன், உமா மகேஸ்வரி R, மஞ்சு , கோதை

காலைப் பொழுதில் புது வாசம் கொடுக்கும் மலர்களைப் பறித்துக் கொண்டிருந்த மலர், அதன் சுகந்த வாசனை மனதை வருடினாலும், தனது மேவிய வயிற்றைத் தடவிக் கொண்டே பதினோராவது முறையாக ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “கிருஷ்ணா…” என்ற திருமந்திரம் அவள் எண்ணங்களில் பரவி இருந்தது.

எல்லா செடிகளையும் ஆசையோடு வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டிருந்தாள். ரோஜா, முல்லை, நித்தியமல்லி, ஜாதிமல்லி, மனோரஞ்சிதம், செண்பகப்பூ, கொடி சம்பங்கி, மகிழம்பூ என அவள் வீட்டைச் சுற்றிலும் செடிகளும் மரங்களும் அழகாகப் பூத்துக் குலுங்கி நிறைந்திருந்தன. ஒவ்வொரு செடியுடனும், பூவுடனும் எப்போதும் அவள் பேசுவாள். ஒவ்வொரு நாளும் ஒரு பூ மலரும் பொழுது, எனக்குள்  எப்போது பூ மலரும் என ஏக்கம் கொண்டிருப்பாள்.

மலர்களைப் பூக்க வைக்கும் நான் என் உடலில் ஒரு உயிரை உருவாக்க முடியாதவளாக இருக்கிறேனே என்ற ஏக்கத்துடனே நீண்ட ஆண்டுகளாக அவள் காத்திருந்தாள். கிருஷ்ணனை மனதில் சுமந்திருந்தாள்.

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் கழித்து,  கர்ப்பமாகி இருக்கிறாள் மலர். கணவன் மனைவி இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, அவர்களின் சோகத்துக்கும் அளவேயில்லை.

இன்று கோகுலாஷ்டமி. கிருஷ்ணரை அலங்கரிப்பது என்றால் அவளுக்குக் கொள்ளைப் பிரியம். திருமணமான நாளிலிருந்து இன்று வரை, நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து, கோகுலாஷ்டமியை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவாள். ஆனால் இன்று  மருத்துவரைப் பார்க்க வேண்டும். கர்ப்பமான நாள் முதல் இந்த டெஸ்ட், அந்தடெஸ்ட் என்று எதையாவது சொல்லிக் கொண்டே அவளை அச்சுறுத்திய மருத்துவர்கள், இன்று என்ன சொல்வார்களோ என்ற பயம் அவளை  வாட்டியது. மனம் கிருஷ்ணரை நினைத்து உருகியது. அவளது கற்பனையில் புதிதாய் உதித்த பாடலை, உருக்கமான குரலில் பாடத் தொடங்கினாள்:

"ஓடிவா கண்ணா ஓடி வா கண்ணா
தத்தித் தத்தி தவழ்ந்து தவழ்ந்து வா வா கண்ணா
தவமாய் நானும் காத்திருக்கேன் ஓடிவா கண்ணா
அழகாக அசைந்தாடி வா வா கண்ணா
அன்போடு நான் இருக்கேன்  ஓடிவா கண்ணா

கால் சதங்கை சத்தமிட வா வா கண்ணா
கண் மூடாமல் காத்திருக்கேன் ஓடிவா கண்ணா
குழலூதும் கண்ணா நீ வா வா கண்ணா
குழந்தையாக உன்னைக் கொஞ்ச வேண்டும்
ஓடி வா கண்ணா
பாதமலர் கொஞ்ச வேண்டும் வா வா கண்ணா
பக்தியோடு வணங்க வேண்டும் ஓடிவா கண்ணா

என் பிள்ளையாய் வரவேண்டும்  கிருஷ்ணா,
உன்னையே எனது வயிற்றில் வளர்த்து வருகிறேன்...."

அவள் மனம் உருகிப் பாடிக் கொண்டிருந்தபோது, பசுமை நிரம்பிய அந்த தோட்டத்தின் நடுவே மயங்கி விழுந்தாள்.

கபிலன் மருத்துவமனைக்கு மலரை அவசரமாக அழைத்துச் சென்றான். அங்கு சென்றவுடன் எமர்ஜென்சி என்பதால் மருத்துவரை உடனடியாகப் பார்க்க அனுமதித்தார்கள். மருத்துவர் மலரை பரிசோதித்து விட்டு மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். அவளுக்கு ரூம் அலாட்மெண்ட் செய்தார்கள். ரூமில் சேர்த்த பிறகு  மருத்துவர் எழுதிக் கொடுத்த பரிந்துரைச் சீட்டைக் கொண்டு வந்து மலரைப் பல பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு மலருக்கு ட்ரிப்ஸ் மூலமாக மெடிசன்ஸ் பரிந்துரைக்கப்பட்டு செலுத்தப்பட்டது. மருத்துவர் ரிசல்ட் வந்த பிறகு மலரைப் பார்த்து,

"பயப்பட வேண்டாம். இந்த ஏழாம் மாதத்தில் பிரசவ காலத்தில் வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு உயர்வு காரணமாக  உடல் மிகவும் சோர்வாகி பலவீனமாக உள்ளது. இது குழந்தையைப் பாதிக்கும். ஆகையால் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதித்து ட்ரீட்மென்ட் தரவேண்டும்" என்று ஆலோசனை கூறினார்.

பிறகு மலருக்கு டயட்டீசியன் உதவியுடன் சில உணவு சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. பழங்களை நேரடியாக சாப்பிடுமாறு கூறினார்கள். பழச் சாறாக எடுத்து சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்ததால், மலரின் உடல் ஆரோக்கியம் படிப்படியாக உயர்ந்தது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.

மருத்துவர் அவள் கணவர் மற்றும் பெற்றோரிடம், "மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுது மலர் பலவீனமாக உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் " என அறிவுறுத்தினார்.

நாட்கள் கடந்தது. மலரும் மிக்க மனமகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக இருந்தாள். திடீரென ஒரு நாள் மலர் "அம்மா!..." என்று கத்தினாள். அவளது அம்மா, "என்ன மலர்?'' என்று கூறிக் கொண்டே ஓடி வந்தார். அவளது அம்மா பயந்து போய் அவளுடைய அப்பாவையும், மாப்பிள்ளையையும் கூப்பிட,  உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவமனையில் மருத்துவர்  மலருக்கு  சில பரிசோதனைகளைச் செய்தவுடன் உடனடியாகக் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற வேண்டும். க்ரிட்டிக்கல் சிட்டுவேஷன் ஆக இருப்பதால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவளை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு சென்றார்கள். அனைவரும் பயத்துடனும்  பதற்றத்துடனும் ஆபரேஷன் தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.

பிரசவ அறையின் உள்ளே படுக்க வைக்கப்பட்ட மலரின் கண்களில் கண்ணீர். வலி தாங்க முடியாமல் உதடுகளை இறுகக் கடித்தாள். உடன் நின்றிருந்த செவிலியின் கைகளை மலரின் நகங்கள் பதம் பார்த்தன.

ஒன்பது மாதமும் ஒரு வாரமும்தானே பிரசவத்துக்கான கணக்கு?! ஏழு மாதங்கள் முடியவிருந்த தருணத்தில் திடீரென ஏற்பட்ட வலியின் தாக்குதலில் மலர் நிலை குலைந்து கிடந்தாள். பிரசவத்திற்கான ஆயத்தங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், மருத்துவர் வேகமாக உள்ளே நுழைந்தார்.

பிரசவம் ஆகும் அறிகுறி அறிய மலரின் வயிற்றை பரிசோதித்த மருத்துவருக்குக் குழந்தை கொடி சுற்றிக் கிடப்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி, குழந்தையின் கால்கள் கீழ்நோக்கி இருப்பதும் புரிந்தது.

ஆபத்தின் வாயிலில் இருக்கும் மலரையும் குழந்தையையும் காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த மருத்துவர், மலரிடம், "ஒன்று, இரண்டு, மூன்று சொல்லு மலர்"  என்று சொல்லியவாறே அவளின் இடது கையில் மயக்க மருந்தைச் செலுத்த ஆரம்பித்தார்.

"ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐ...ந்...து....உஉஉஉ"  மலர் மயக்க நிலைக்குச் சென்றாள்.

தோலில் ஆரம்பித்து அடிவயிறு வரை பயணப்பட்ட கத்தி, கருப்பையைக் கிழிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கவனமாக, மிகக் கவனமாகக் கையாண்ட மருத்துவரின் கைகளில் ரத்தத் துளிகளுடன் மலரின் குழந்தை.

அருகில் காத்துக் கொண்டிருந்த குழந்தை மருத்துவரிடம் ஒப்படைக்கப்படுகிறது குழந்தை. சுத்தம் செய்யப்பட்ட பிறகும் அழாத சிசுவை தலைகீழாகப் பிடிக்க, தன் வருகையை உலகிற்குத் தெரிவிக்கும் விதமாக அழத் தொடங்குகிறது.

அழுகையைக் கண்டு சிரிக்கும் காட்சி அரங்கேறும் இடம் பிரசவ அறையாக மட்டும்தான் இருக்கும்.

அடுத்த அரைமணி நேரத்தில் வேறு அறைக்கு மாற்றப்படுகிறாள் மலர். அவளைச் சுற்றி அவளுடைய அம்மா, அப்பா, கபிலன், உறவினர்கள் என்று நின்று கொண்டிருக்க,
" டாக்டர் வர்றாங்க. யாராவது ரெண்டு பேர் மட்டும் இருங்க. மத்தவங்க எல்லாரும் வெளில இருங்க" என்று கூறியபடியே வந்த செவிலியைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தார் மருத்துவர்.

கால் மயக்கத்தில்  இருந்த மலரிடம், "எப்டிம்மா இருக்க?" என்று கேட்டபடியே மலரை ஒருக்களித்துப் படுக்க வைத்தார்.

"சாப்டறியா?" கேட்டார்.

"ம்ம்ம்ம்" என்றாள் மலர் மெள்ள.

"என்ன சாப்டற?" கேட்டார்.

"பூரி கெழங்கு" சொன்னாள்.

அதைக் கேட்ட அவள் வீட்டின் பெரியவர்கள் வாய் பிளந்து நிற்க,

"வாங்கிக் குடுங்க" சொல்லிவிட்டு வெளியேறினார்.

அடுத்த அரைமணியில் பூரி கிழங்கின் மணம் இடம் நிறைத்தது.

அறையைக் கடந்து சென்ற பெண்ணின் அலைபேசியில் கிருஷ்ண கானம் ஒலிக்க, அறையைப் பார்த்தபடியே அவளின் விரல் பிடித்து நடந்த குழந்தையின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு இழையோடியது.

உள்ளே வந்த கபிலன், குழந்தையை எடுத்து மலரிடம் நீட்ட,  குழந்தையை கைகளில் ஏந்தி, மார்போடு அணைத்து உச்சி முகர, அவளின் முலைக் காம்புகள் கசியத் தொடங்கின. கபிலன் மலரோடு தன் சிசுவை சேர்த்தணைக்க, பதினைந்து வருடத் தவம் பலன் அடைந்தது. 

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் கௌசல்யா ஞானேஸ்வரன், உமா மகேஸ்வரி R, மஞ்சு , கோதை ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)

அழகிய பட்டுலு - கௌசல்யா ஞானேஸ்வரன்

 


அதிகாலை சிவப்பு நிறம் பரவி, சூரியன் தன்னை கிழக்கு வானில் வெளிக்காட்ட, பறவைகளின் இசை மிகுந்த சத்தங்கள் இதயத்தை மகிழ்விக்க, நம்பிக்கையும் புத்துணர்வையும் தரும் காலை பொழுதில், நீண்ட நேரமாகி கண் விழித்த ஆதவின் மனம் மறுநொடியே ஏக்கத்தில் நிரம்பி இருந்தது.

ஆதவின் அம்மா திவ்யா, "தங்க குட்டி, பட்டுக்குட்டி!" என்று கொஞ்சிக்கொண்டே, "இன்று உனக்குப் பிடித்த டிபன்!" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் ஆதவோ, பக்கத்து வீட்டு நிமலன் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தான்.

அழகிய பளபளப்பான கன்னம் கொண்ட ஆதவ் குட்டி, எட்டு வயது சிறுவன். இண்டர்நேஷனல் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கிறான். அவனைப் பார்க்கும் கண்கள் முத்தமிட ஆர்வத்துடன் காத்திருக்கும். விழிகள் விரிந்த புத்திக்கூர்மையுடன், உற்சாகமாய் அவன் பேசும் மழலைச் சொல்லை கேட்டால், கேட்பவரின் மனம் உருகித்தான் போகும்.

இப்போது கோடை விடுமுறை ஆனாலும், பக்கத்து வீட்டில் இருக்கும் நிமலனை நினைத்தாலே, ஆதவிற்கு இனம் புரியாத கோபம் வந்துவிடுகிறது.

"அவனைப் பார்க்கக்கூடாது. பார்த்தால்கூட பேசக்கூடாது!" என முடிவெடுத்து அறையில் இருந்து வெளியே வரவும், "ஆதவ்!" என்று கத்திக்கொண்டே நிமலன் வரவும் சரியாக இருந்தது.

"ஆதவ்! நாங்க நேற்று டூர் போனோம். பட்டுலு குட்டியை கூட்டிட்டு போயிருந்தோம். இங்க பாரு, போட்டோ கூட எடுத்திருக்கோம்!" என்று பெருமையாக காண்பித்தான். வேண்டா வெறுப்பாக பார்த்த ஆதவுக்கும், சிரித்துக் கொண்டிருந்த பட்டுலு குட்டியை மிகவும் பிடித்துப் போனது. இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். நிமலன் அவன் தங்கை பட்டுலு குட்டியைப் பற்றி கதை கதையாய் பேசுவான்.

முன்பு, பட்டுலு குட்டி பிறக்குமுன், ஆதவும் நிமலனும் ஒன்றாகவே இவர்கள் வீட்டிலும், அவர்கள் வீட்டிலும் மாறிமாறி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நிமலனுக்கு தங்கை பிறந்ததும், அந்த குட்டி பாப்பா செய்யும் செயல்களை முதலில் ரசித்த ஆதவுக்கு, பின்னர் ஏதோ இழந்த உணர்வு மனதில் வந்து, தனக்கு தங்கை இல்லை என்பதே இனம் புரியாத ஏக்கமாக உள்ளத்தில் படர ஆரம்பித்தது.

நிமலன் தனது தங்கை பட்டுலு குட்டியை கொஞ்சிக் கொண்டு, "இது என்னோட பட்டுலு குட்டி!" என்று பெருமையாகச் சொல்வான். அது ஏனோ ஆதவுக்கு பிடிக்கவில்லை. தன் மனதுக்குள், "எனக்கும் தங்கை இருந்தால், நானும் இப்படி பெருமையாகக் கூறுவேன்…" என்ற வருத்தம் தோன்ற ஆரம்பித்தது. நிமலன் சென்றபின், "எனக்கும் பட்டுலு இருந்தா, நானும் எல்லாருக்குக் காட்டுவேன்…" என்று ஆதவ் மனதுக்குள் வருத்தமடைந்தான்.

ஆதவ் உணர்ச்சிகள் அவன் கண்களில் தெரிய, வாடிய முகத்தை கண்ட திவ்யாவும் ராகவ்வும், "ஏன் டா செல்லம்? என்னாச்சு? நாமும் டூர் போகலாமா? குட்டி கார் வேணுமா?" என கேட்டார்கள். ஆனால் ஆதவ் உடனே, "எனக்கு குட்டி பாப்பா வேணும்! எனக்கும் பட்டுலு பாப்பா இப்பவே வேணும்!" என்று அழத் தொடங்கிவிட்டான். அவனை சமாதானப்படுத்தினாலும் முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதவாறே தூங்கிவிட்டான்.

இவ்வளவு நாட்களாக, ஆதவின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனித்த திவ்யாவும் ராகவுவும் ஓர் முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால் அதைக் குழந்தை ஏற்றுக்கொள்வானா என்பது அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் மனமும் கடல் போல் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.

கண் விழித்த ஆதவ், பக்கத்தில் படுத்திருந்த ஒரு அழகிய பட்டுலு குட்டியைப் பார்த்தான். அவளை அழகாய் முத்தமிட்டான். அந்த பிஞ்சு குழந்தை கை, கால்களை ஆட்டிக்கொண்டு, அவனைப் பார்த்து கண் சிமிட்டி, அவன் முகங்களை வருடி மகிழ்ந்தது. 

நிமலன், அவன் பட்டுலு பாப்பாவுக்கு சொல்லிக் கொடுத்த பாடலை நினைவில் வைத்துக்கொண்டு, ஆதவ்வும் அந்தக் குழந்தைக்கு பாடல் சொல்லிக் கொடுத்தான்.
"ஒந்து ஒந்து காசு, யாரு குடுத்த காசு? மாமா குடுத்த காசு, மாயமா போச்சு!"

பின்னர் அவன், அந்த குட்டி விரல்களை ஒவ்வொன்றாக விரித்து, "பப்பு, காய், பூவா, ரசம், தயிர்…" என்று ஒவ்வொரு விரலாகச் சொல்லி, "குமாய குமாய கடைந்து, உனக்கொரு வாய், அண்ணாவுக்கு ஒரு வாய், அம்மாவுக்கும், அப்பாவுக்கும்…" என்று ஊட்டி, குழந்தையை கிச்சு கிச்சு செய்து சிரிக்க வைத்தான். அந்த பொக்கைவாய் சிரிப்பை காணும் ஆதவிற்கு அளவில்லா மகிழ்ச்சி!

தன் கைகளால் தன்கண்களை மூடியவண்ணம், "அண்ணாவை காணோம்! கண்டுபிடி!" என்று ஆதவ் சொல்ல, பட்டுலு பாப்பாவும் தனது பிஞ்சு விரல்கள் கொண்டு ஆதவ் விரல்களை எடுத்து, "அடடா! அண்ணாவை அழகா கண்டுபிடிச்சிட்டியே!" என்று கொஞ்சிக் கொண்டே.

"அம்மா, சீக்கிரம் பட்டுலு பாப்பாவை செல்போன்ல போட்டோ எடுங்க! நானும் நிமலனுக்கு காண்பிக்கணும்!" எனச் சத்தமாக கூச்சலிட்டவாறே… கண்விழித்தான். விழித்தவுடன், பக்கத்தில் படுத்திருந்த பட்டுலு குட்டி காணாமல் போயிருந்தது!

அவள் காணாமல் போனதும், வீடு முழுக்க ஓடிச் சென்று, "பட்டுலு குட்டி! உன்னை விட்டுட்டு அண்ணாவால் இருக்க முடியாது!" என அழ ஆரம்பித்தான். கனவு என்று தீர்மானிக்க முடியாமல் உணர்வுகள் குழம்பி, ஒருவிதப் பதற்ற நிலைக்கு ஆளானான்.

கனவு நிலையை நனவு நிலை என்று நினைத்த ஆதவின் நிலையைக் கவனித்த திவ்யா, "அதுவா? அவளை நம்ம பாட்டியும் தாத்தாவும் விளையாட ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போனாங்களே! நீயும் புறப்படு, நாம கூட்டிட்டு வந்துரலாம். அழ வேண்டாம்!" என்று சமாதானம் செய்தாள்.

ராகவ், "குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து முறைப்படி தத்து எடுப்பது எப்படி?" என்று தனது நண்பன் ஆனந்திடம் விசாரித்திருந்தான். அதன்படி ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தான். அதன்படி, ஆதவை அந்த ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்ற ராகவ், "உன் பட்டுலு குட்டி உள்ளே எல்லா பாப்பாக்களோட விளையாடிக்கிட்டு இருக்கா. நீயே போய் கூட்டிக்கொண்டு வா!" என்றார்.

மிக வேகமாக ஓடிய ஆதவ், அங்கு தவழ்ந்து கொண்டிருந்த அந்த அழகிய குழந்தையை தூக்கிக்கொண்டான். முத்துப்போல் பளீர் என்ற முகத்துடன், மின்னும் விழிகளுடன், புதிதாய் பூத்த பூப்போல மென்மையான அந்த பிஞ்சு, அவன் கன்னத்தை வருடி, கண் சிமிட்டி, பொக்கைவாய் சிரிப்புடன் சிரித்தாள்.

அந்தக் காட்சியை பார்த்த திவ்யாவிற்கும் ராகவ்விற்கும், மனம் நிறைந்து, தொண்டை குழிக்குள் நுறைக்குமிழி ஒன்று, இதயத்திற்குள் முட்டி மோதி மெல்ல வெடிக்க, கட்டுப்பாடுகள் தளர்ந்து விம்மி விட்டார்கள். நிறைந்த மனதின் பூரிப்பு உடல் முழுவதும் பரவ, குளிர்ந்த மழைச்சாரலாய் கண்ணில் நீர்வழிய சந்தோஷத்தில் மெய்சிலிர்த்தார்கள். 

பிறப்பால் வருவதல்ல பாசம். நேசத்தின் ஆழத்தில் அழகாய் மலரும் அன்பின் உறவு இது. இல்லம் தேடிய மழலை, மழலை தேடிய இதயம் இரத்தத்தால் இணையாத பந்தம் இதயத்தில் இணையும் இனிய தருணம். அன்பை அர்ப்பணிக்கும் உறுதியான உள்ளம் கொண்ட உண்மை குடும்பம். மனித நேயத்தின் மாபெரும் தொடக்கம்.

கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 5 - ஆனந்தி ஆரூரன்

(பகுதி 5) பிளாஸ்டிக் ஒப்பந்தப் போர்: அறிவியல் எச்சரிக்கை முதல் உலக அரசியல் வரை

20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், மனித வரலாறு பிளாஸ்டிக்கைத் தழுவியது. 1907-ல் பெல்ஜிய வேதியியலாளர் லியோ பேக்லாண்ட் கண்டுபிடித்த பேக்கலைட் (Bakelite), தொழிற்புரட்சிக்கு அடுத்த, மிகப்பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டது. விலை மலிவு, குறைந்த எடை, மற்றும் நீடித்த தன்மை காரணமாக, 1950-களிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்தி அபரிமிதமாக அதிகரித்தது. உணவுப் பொட்டலங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், வாகன உதிரிபாகங்கள் எனப் பலவற்றிலும் பிளாஸ்டிக் ஒரு முக்கியப் பொருளாக மாறியது. 1960-ல், 15 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி, 2020-ல் 367 மில்லியன் டன்களைத் தாண்டியது. ஆனால், இந்த வேகமான வளர்ச்சி ஒரு அமைதியான பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தது—கடல்களில் மிதக்கும் நுண் துகள்கள், உயிரினங்களின் உணவுச் சங்கிலியை சீரழிக்கும் அச்சுறுத்தல், மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் நச்சுத்தன்மை.

ஆரம்பத்தில், பிளாஸ்டிக் மாசுபாடு ஒரு சில விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக மட்டுமே இருந்தது. 1972-ல் வெளியான ஆய்வுகள், கடல்களில் மிதக்கும் நுண்பிளாஸ்டிக் துகள்கள் (microplastics) கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என எச்சரித்தன. 1980களில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளின் சுற்றுச்சூழல் இயக்கங்கள், பிளாஸ்டிக் கழிவுகளின் தீமைகளை விவாதிக்கத் தொடங்கின. இருப்பினும், உலக அரசியலில், இது ஒரு "சிறிய பிரச்சினை"யாகவே பார்க்கப்பட்டது. குப்பை மேலாண்மையை மேம்படுத்தினால் போதும் என்ற புரிதல் நிலவியது. ஆனால், 1990களின் இறுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உணவுச் சங்கிலியையே (food chain) பாதிக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கின. 


1997இல் கடலியலாளர் சார்லஸ் மூர் (Charles Moore), பசிபிக் பெருங்கடலில் "கிரேட் பசிபிக் கார்பேஜ் பேட்ச் (Great Pacific Garbage Patch)" எனப்படும் மிகப்பெரிய பிளாஸ்டிக் குப்பை மண்டலத்தை கண்டுபிடித்தார். பின்னர், அவர் இதைப் பற்றி 1999-ல் Marine Pollution Bulletin இதழில் வெளியிட்டார். “Great Pacific Garbage Patch” என்கிற பெயர், ஊடகங்களில் 2000களின் தொடக்கத்தில் பிரபலமானது. (2018 ஆய்வின்படி, இது 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது என்று உறுதி படுத்தப் பட்டது. இது பிரான்ஸ் நாட்டின் மூன்று மடங்குக்குச் சமமாகும்.) இந்தக் கண்டுபிடிப்பு 2000களில் ஊடகச் செய்திகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் பிரச்சினை இனி "குப்பை மேலாண்மைச் சிக்கல்" (waste management issue) என்ற எல்லைக்குள் அடங்காமல், உலக அளவில் பரவியுள்ள ஒரு சுற்றுச்சூழல் நெருக்கடியாகப் பேசப்பட்டது. 2010ன் நடுப்பகுதிக்குப் பிறகு, பிளாஸ்டிக் மாசுபாடு உலக அரசியலின் மையப் பிரச்சினையாகத் தீவிரமடைந்தது --இது வெறும் அறிவியல் அறிக்கை அல்ல, உலகளாவிய உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கான போராட்டம் என்கிற புரிதலை கொடுத்தது.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP - United Nations Environment Programme) வெளியிட்ட "கடல் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் நுண்பிளாஸ்டிக் துகள்கள்" (Marine Plastic Debris and Microplastics) அறிக்கை, கடல் சூழலியல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் ஆழமான பாதிப்புகளை வெளிப்படுத்திய, முக்கிய கொள்கை ஆவணமாக அமைந்தது (UNEP, 2016). இந்த அறிக்கை கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் பரவல், நுண்பிளாஸ்டிக் துகள்களின் (microplastics) தாக்கம், மற்றும் இவை கடல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தும் அபாயங்களை விரிவாக ஆராய்ந்தது. கடல் உணவுச் சங்கிலியில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் நுழைவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் நச்சுத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை இது வலியுறுத்தியது.


இதே காலகட்டத்தில், பிபிசி (BBC) தயாரித்த ‘ப்ளூ பிளானட் II’ (Blue Planet II) ஆவணப்படம் (2017) உலகளவில் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த ஆவணப்படம் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படும் கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், கடல் பறவைகள் போன்ற உயிரினங்களின், இதயத்தை உலுக்கும் காட்சிகளை வெளிப்படுத்தியது. உதாரணமாக, மனிதர்களால் கடலில் கைவிடப்பட்ட பிளாஸ்டிக் வலைகளில் சிக்கிப் போராடும் ஆமைகள், மற்றும் பிளாஸ்டிக் துண்டுகளை உணவாக உட்கொண்டு இறந்த பறவைகளின் காட்சிகள், உலக மக்களிடையே பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை ஆழமாக உணர்த்தியது — இது வெறும் திரைக்காட்சி அல்ல, நமது கடல்களின் உண்மையான அழுகையாக எதிரொலித்தது. 


இந்த விழிப்புணர்வின் விளைவாக, 2017 டிசம்பரில் கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டில் (UNEA-3 - United Nations Environment Assembly) பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள ஒரு சர்வதேச சட்டப்பூர்வ ஒப்பந்தம் (legally binding treaty) தேவை என தீர்மானம் (Resolution 3/7) ஏற்றுக்கொள்ளப்பட்டது (UNEP, 2017). 
இந்த கூட்டமே பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள, சர்வதேச சட்டபூர்வ ஒப்பந்தம் (Legally Binding Treaty) ஏற்படுவதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இது பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் உலகளாவிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த தீர்மானம், பிளாஸ்டிக்கின் வடிவமைப்பு, உற்பத்தி, பயன்பாடு, மறுசுழற்சி, மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு உலக நாடுகளை ஒருங்கிணைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

2021ஆம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்ட அறிக்கையின் படி, உலகக் கடல்களில், 75 முதல் 199 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு குவிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது (UNEP, 2021). இதனுடன் தொடர்ந்து, ஆண்டுதோறும் 19 முதல் 23 மில்லியன் டன் பிளாஸ்டிக் நீர்நிலைகளில் (aquatic ecosystems) குவிகின்றன என UNEP மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆய்வுகள் தெரிவிக்கின்றன (UNEP, 2021; OECD, 2022). இதனால், ஆண்டுதோறும் 1–2 மில்லியன் டன் பிளாஸ்டிக் நேரடியாக கடல்களில் குவிகின்றன. 

                                          

இந்தத் தரவுகள், கடல் மாசுபாட்டின் அளவை மட்டுமல்லாமல், அது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தன. இவை உலக அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் மேலும் கவனம் செலுத்த வைத்தன. உதாரணமாக, இந்த தரவுகள் கடல் உயிரினங்களின் இழப்பு, மீன்பிடித்தொழில் பாதிப்பு, மற்றும் கடற்கரைகளின் அழகியல் சீர்கேடு ஆகியவற்றை வெளிப்படுத்தின. இது நமது உணவுத் தட்டில் கூட பிளாஸ்டிக் நுண்துகள்களை கொண்டுவரும் அபாயத்தை நினைவூட்டியது.

இந்த காலகட்டத்தில் சமூக ஊடகங்கள், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தன. #BreakFreeFromPlastic, #BeatPlasticPollution, #PlanetOrPlastic போன்ற ஹாஷ்டேக்குகள் (hashtags) கோடிக்கணக்கான மக்களிடையே பரவி, தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது குறித்த விவாதங்களைத் தூண்டின. இந்த பிரச்சாரங்கள் மக்களை மறுபயன்பாட்டு பைகள் (reusable bags), எஃகு குடிநீர் பாட்டில்கள் (stainless steel bottles) மற்றும் பிளாஸ்டிக் இல்லாத மாற்று பொருட்களை பயன்படுத்த ஊக்குவித்தன. பள்ளிகளில் மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தனர், நகரங்களில் பிளாஸ்டிக் இல்லாத சந்தைகள் (plastic-free markets) உருவாகின, மேலும் இந்தியா, கென்யா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல நாடுகள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தன. இந்த சமூக அலை அரசியல் அழுத்தமாக மாறி, உலக அரசுகளை சட்டரீதியான நடவடிக்கைகளை பரிசீலிக்க வைத்தது. இது தனிப்பட்ட தேர்வுகளிலிருந்து, உலகளாவிய கொள்கை மாற்றத்திற்கு மாறும், உணர்ச்சிகரமான பயணமாக இருந்தது.

இந்தத் தொடர் முன்னேற்றத்தின் உச்சமாக, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம், கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் (United Nations Environment Assembly - UNEA 5.2) ஐந்தாவது அமர்வில், உலக நாடுகள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தன. 175 நாடுகள் ஒருமித்து, 'தீர்மானம் 5/14' (Resolution 5/14) ஐ ஏற்றன. இதன் முதன்மை நோக்கம், உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை, குறிப்பாக கடல் மாசுபாட்டை, முடிவுக்குக் கொண்டுவர, உலகளாவிய சட்டப்பூர்வமான பிணைப்பு ஒப்பந்தத்தை (International Legally Binding Instrument - ILBI) உருவாக்குவதாகும். இந்த தீர்மானம், சுற்றுச்சூழல் வரலாற்றில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கு அடுத்தபடியாக மிக முக்கியமான பன்னாட்டு முயற்சியாகக் கருதப்படுகிறது. இது பிளாஸ்டிக்கின் முழு வாழ்க்கை சுழற்சியையும், அதாவது வடிவமைப்பு, உற்பத்தி, பயன்பாடு, மறுசுழற்சி, கழிவு மேலாண்மை, மற்றும் நச்சு இரசாயனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையை முன்மொழிகிறது. இந்நோக்கத்தை அடைய, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர, அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக் குழு (INC - Intergovernmental Negotiating Committee - on Plastic Pollution) உருவாக்கப்பட்டு, 2022 இறுதியில் தனது முதல் கூட்டத்தை (INC-1) தொடங்கியது. 2022 முதல் 2025 வரை, INC-1 முதல் INC-5.2 வரை கூட்டங்கள் நடைபெற்று, உலகளாவிய ஒப்பந்தத்தின் அடித்தளத்தை உருவாக்க முயற்சிக்கப்பட்டன. ஆயினும், பிளாஸ்டிக் உற்பத்தி வரம்புகள், நிதி ஒதுக்கீடு, நச்சு இரசாயனக் கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஒப்பந்தம் இறுதி நிலைக்கு செல்லவில்லை.

ஐ.என்.சி.-1 (INC-1) கூட்டம் 2022 நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை, உருகுவேயின் புன்டா டெல் எஸ்டே (Punta del Este, Uruguay) நகரில் நடைபெற்றது. இந்த முதல் அமர்வு, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச சட்டப்பூர்வமாக பிணைப்பு வலுவுடைய ஒப்பந்தத்தின் (International Legally Binding Instrument - ILBI) முக்கிய நோக்கங்கள் மற்றும் கட்டமைப்பை வரையறுப்பதற்கு அடித்தளமாக அமைந்தது. பிளாஸ்டிக் உற்பத்தி, நுகர்வு, மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விரிவான அணுகுமுறை அவசியம் என பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில், ஒப்பந்தத்தின் பரந்த நோக்கங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான முதல் வரைவு (Preliminary Framework) உருவாக்கப்பட்டதுடன், உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த பல பங்குதாரர் மன்றம் (Multi-Stakeholder Forum) நிறுவப்பட்டது. இவ்வமைச்சரவை, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ளும் உலகளாவிய முயற்சிகளுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்து, பன்னாட்டு கவனத்தை ஈர்த்தது.

ஐ.என்.சி.-2 (INC-2) கூட்டம் 2023 மே 29 முதல் ஜூன் 2 வரை, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் (Paris, France) நடைபெற்றது. இந்த அமர்வு, ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளை மேலும் தெளிவுபடுத்தி செம்மைப்படுத்திய ஒரு முக்கிய மைல்கல்லாகும். பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு முறைகளை மேம்படுத்துவது, மற்றும் நச்சு இரசாயனங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. வளரும் நாடுகளுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வலியுறுத்திய இந்த அமர்வு, உலகளாவிய சுற்றுச்சூழல் நீதி நிலைநிறுத்துவதில் அவசியமானதாகக் கருதப்பட்டது. ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ கட்டமைப்பு மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உற்பத்தி வரம்புகள் மற்றும் நிதி பொறுப்பு (Financial Responsibility) குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் புதிய கட்டத்தை நோக்கிச் சென்றன. இங்கு, வளரும் நாடுகளின் குரல்கள் மேலும் தீவிரமடைந்து, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் செல்வாக்குக்கு எதிராக உணர்ச்சிகரமான எதிர்ப்புகள் எழுந்தன.

ஐ.என்.சி.-3 (INC-3) கூட்டம் 2023 நவம்பர் 13 முதல் 19 வரை, கென்யாவின் நைரோபியில் (Nairobi, Kenya) நடைபெற்றது. இங்கு, ஒப்பந்தத்தின் முதல் வரைவு உரை (Draft Text) உருவாக்கப்பட்டு, உலகளாவிய முயற்சிகளுக்கு புதிய பாதையை திறந்தது. இது உலகளாவிய ஒப்பந்தத்தின் உருவாக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிளாஸ்டிக் உற்பத்தி வரம்புகள், மாற்று பொருட்களை ஊக்குவிப்பது, மற்றும் கழிவு மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது போன்ற மைய தலைப்புகள் ஆழமாக விவாதிக்கப்பட்டன. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே உற்பத்தி குறைப்பு மற்றும் நிதி பொறுப்பு (Financial Responsibility) குறித்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன, ஆனால் இந்த அமர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை மேலும் தெளிவுபடுத்தி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தது. அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகள் காட்டிய தலைமைத்துவம், பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட உள்ளூர் சமூகங்களின் குரல்களை உலக மேடையில் ஒலிக்கச் செய்து, விவாதங்களை உணர்ச்சி பூர்வமாகக் கூர்மைப்படுத்தியது.

ஐ.என்.சி.-4 (INC-4) கூட்டம் 2024 ஏப்ரல் 23 முதல் 29 வரை, கனடாவின் ஒட்டாவாவில் (Ottawa, Canada) நடைபெற்றது. இந்த அமர்வு, ஒப்பந்தத்தின் வரைவு உரையை (Draft Text) மேலும் செம்மைப்படுத்தி, சட்டப்பூர்வமான வடிவம் மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்து விரிவான விவாதங்களை முன்னெடுத்தது. பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பதற்கான உலகளாவிய இலக்குகள், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு முறைகளை ஊக்குவிப்பது, மற்றும் உலகளாவிய கண்காணிப்பு முறைமைகள் (Global Monitoring Systems) அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கனடா ஃபெடரல் பிளாஸ்டிக் ரெஜிஸ்ட்ரி (Federal Plastics Registry) என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியது, இது பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாடு, மற்றும் நச்சு பிளாஸ்டிக்குகளை (Toxic Plastics) கண்காணிக்க உதவும் என்று பரவலாக விவாதிக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது. மேலும், கனடா உருவாக்கிய ஹோஸ்ட் கன்ட்ரி அலையன்ஸ் (Host Country Alliance) உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. இருப்பினும், நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தன. இந்த அமர்வு, வட அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டக் கதைகளை இணைத்து, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் செல்வாக்குக்கு எதிரான உணர்ச்சிகரமான போர்க்காட்சியாக மாறியது.

ஐ.என்.சி.-5 (INC-5) கூட்டம் 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை, தென் கொரியாவின் புசானில் (Busan, South Korea) நடைபெற்றது. இந்த அமர்வு, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியமான இறுதிக் கட்டமாக அமைந்தது. உலகளாவிய இலக்குகள், நிதி ஆதாரங்கள், மற்றும் சட்டப்பூர்வமாக பிணைப்பு வலுவுடைய வழிமுறைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. பிளாஸ்டிக் உற்பத்தி குறைப்பு, மாற்று பொருட்கள் , மற்றும் உலகளாவிய கண்காணிப்பு முறைமைகள் (Global Monitoring Systems) ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு பகிர்வு குறித்து விவாதங்கள் தீவிரமடைந்தன. ஆயினும், பெட்ரோகெமிக்கல் உற்பத்தியாளர்களின் எதிர்ப்புகள் மற்றும் உற்பத்தி வரம்புகள் குறித்த மோதல்கள் காரணமாக, ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை; அமர்வு தோல்வியுடன் முடிந்து, அடுத்த கட்டத்திற்கு (INC-5.2) ஒத்திவைக்கப்பட்டது. 


ஐ.என்.சி.-5.2 (INC-5.2) கூட்டம் 2025 ஆகஸ்ட் 5 முதல் 15 வரை, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த அமர்வு, தலைவரின் திருத்தப்பட்ட வரைவு உரை உள்ளிட்ட ஆவணங்களை விவாதித்து, பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சித்தது. உற்பத்தி வரம்புகள், நிதி உதவி, மற்றும் நச்சு இரசாயனங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற மைய பிரச்சினைகளில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. ஆயினும், நாடுகளுக்கு இடையேயான ஆழமான மோதல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக பெட்ரோகெமிக்கல் தொழில்களின் செல்வாக்கு காரணமாக, ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை; அமர்வு தோல்வியுடன் முடிந்து, மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு (அநேகமாக INC-6) வழிவகுத்தது. இந்த தோல்வி, உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கங்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது, 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டில் (UNEA-3) விதைக்கப்பட்ட விதைகள், UNEA-5.2 இல் உருவான கட்டமைப்புகள் மற்றும் ஐ.என்.சி. கூட்டங்களில் நடந்த கடுமையான விவாதங்கள் அனைத்தும், பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒரு உலகளாவிய சட்டரீதியான கட்டுப்பாட்டு அமைப்பு நோக்கி நகர்த்தியுள்ளன. ஆயினும், இந்த பயணம் இன்னும் முடிவடையவில்லை; தோல்விகள் இருந்தாலும், விஞ்ஞான எச்சரிக்கைகள், ஊடக அதிர்வுகள், மக்கள் இயக்கங்கள், மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஒருங்கிணைந்த போராட்டம் தொடர்கிறது. இது பிளாஸ்டிக் மாசுபாட்டை “தனிநபர் பழக்கவழக்க” பிரச்சினையிலிருந்து “உலகளாவிய சட்டரீதியான கட்டுப்பாட்டு அமைப்பு” நோக்கி நகர்த்திய வரலாற்று பாதையை வெளிப்படுத்துகிறது—ஆனால், இந்த போரில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை, அது நமது தொடர்ச்சியான உழைப்பையும் உணர்ச்சியையும் கோருகிறது.



பிளாஸ்டிக் மாசுபாட்டின் நெருக்கடி என்பது நுகர்வோர் எதை வாங்குகிறார்கள் என்பதைக் கடந்தது; இது தவறான அரசுக் கொள்கைகள், குறைபாடுகள் நிறைந்த தயாரிப்பு வடிவமைப்புகள், மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறுப்பற்ற அணுகுமுறையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. தனிநபர் செயல் என்பது ஒரு அலை போல; ஆனால் அரசாங்கமும் வணிக நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், அது சுனாமி போல ஒரு மாற்றத்தை உருவாக்கும்.