யார் அந்தக் குடிசை வீட்டைக் கடந்து சென்றாலும், இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டே வேகமாகக் கடந்து செல்வர். தப்பித் தவறிக் கூட அந்தக் கிழவியிடம் நின்று பேசிவிட மாட்டார்கள். அந்த அளவிற்கு வசைபாடும் வார்த்தைகள்.
ஓங்கி வளர்ந்த பாதாமி மரங்கள், அகலமான இலைகளுடனும், அடர்த்தியான கிளைகளுடனும், ஆதவனின் வெப்பத்தை அனுமதிக்காமல் படர்ந்திருந்தது. பாதாமி மரங்கள் நிழலைத் தந்தாலும், கீழே விழுந்த இலைகளுக்குள் பூரான், தேள் போன்றவைகளும் ஒளிந்து கொள்ளும். அந்தப் பாதாமி மரங்களின் நிழலைப் போர்த்திய படி, பாசம் ஏறிய சுவற்றுடன் நின்று கொண்டிருந்தது இராமாயிக் கிழவியின் குடிசை வீடு.
எழுபது வயதான இராமாயிக் கிழவி தன் சுயநினைவு மறந்து வருவோர், போவோர்களை எல்லாம் வீண் வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருந்தார். கவனிக்க ஆளின்றி, தானே சமைத்து உண்ணும் அளவிற்கு நினைவு இருந்தது. அதிலும் ஒரு சில நாள் அடுப்பில் வைத்திருக்கும் உணவை மறந்து விட்டால் தீய்ந்து கருகிவிடும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கருகிய வாடையைக் கண்டு அடுப்பை அணைத்து விட்டுச் செல்வர். புதிதாக வரும் நபர்களுக்கு இந்த இராமாயிக் கிழவி பேசுவது கடும் கோபத்தை உண்டு பண்ணும். அந்த அளவிற்குக் குரூரக் வார்த்தைகள்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், கவனிக்க ஆளின்றியும் இந்தக் கிழவியின் பயமும், உடல் நிலையும் சேர்ந்து மனநிலையை இந்த அளவிற்கு மாற்றி இருந்தது. வழியில் போவோரும், வருவோரும் இந்தக் கிழவியின் குரூர வார்த்தைகளைக் கேட்டு கோபத்துடன் கடந்து சென்றாலும், பர்வதம் அம்மாவால் மட்டும் இந்தக் கிழவியின் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.
நாற்பத்தெட்டு வயதான பர்வதம் அம்மாள் நல்ல சிகப்பு நிறத்துடன், சராசரி உயரமும், கூடவே நிதானத்தையும், சமயோசித புத்தியும் கொண்டவர். எழுபதுகளில் பள்ளி இறுதியை முடித்த பெருமைக்கு உரியவர். இவர் தன் இருபத்து ஒன்றாவது வயதில் மாணிக்கத்தின் கரம் பிடித்து இந்த ஊருக்கு வந்திருந்தார்.
கணவர் மாணிக்கம் தொடக்கக்கல்வி ஆசிரியராக இருந்து இப்பொழுது தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பணி ஓய்வுக்காகக் காத்திருப்பவர். இவர்களுக்கு அசோக் என்று இருபத்தெட்டு வயதில் மகன் இருக்கிறான். இருவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இராமாயிக் கிழவியிடம் பண்பான மொழியில் பேசுவதும், அன்பாக அவர் பேசுவதை கேட்பதும், அவருக்குத் தேவையான பழங்கள் வாங்கித் தருவதும் எனச் செய்து கொண்டிருந்தனர்.
"ஏங்க, இந்த வாரம் ராமாயி அக்காவிற்கு சுகர் ஏறாத பழமாப் பார்த்து வாங்கிட்டு வாங்க. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டுப் போய் பார்த்துட்டு வரலாம்" என்றார் பர்வதம் அம்மாள். "ஆமாம், அவரால் தானே இன்று…" என்று தழுதழுத்த நாவில் வார்த்தைகள் வராமல் ஒளிந்து கொண்டது மாணிக்கத்திற்கு.
இந்த இருபத்தெட்டு வருடங்களில் மாணிக்கத்தின் ஓட்டு வீடு கான்கிரீட் வீடாக தன்னைப் புதுப்பித்து இருந்தது. அதுபோல அந்த ஊரில் இருந்த சிறு சிறு பெட்டிக்கடைகளும் பேக்கரிகள், உணவகம் என நாகரிகத்தின் வளர்ச்சியில் தன்னை கொஞ்சம் மிடுக்காக மாற்றி இருந்தது. ஆனால் இராமாயிக் கிழவி மட்டும் கணவர் பிரிந்த பிறகு தன் வீட்டைப் புதுப்பிக்காமல் அதே வீட்டில் வாழ்ந்து வந்தார். வருடம் ஒருமுறை சுவற்றிற்கு வெள்ளை அடிப்பதுடன் சரி. உடல் நிலை பாதிக்கப்பட்ட பின் அதுவும் நின்று போயிருந்தது.
ஆம், சுமார் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு இராமாயிக் கிழவிக்கு நாற்பத்து ஐந்து வயது. அசோக் மூன்று வயது குழந்தை. குடியிருப்புகள் அதிகம் இல்லை என்றாலும் கூப்பிடு தூரத்தில் வீடுகள் இருந்தன. இரண்டு பெருநகரங்களை இணைக்கும் சாலை என்பதால் மணிக்கு நான்கைந்து வாகனங்களையாவது பார்க்கும்படி இருந்தது. தை மாதம் கரும்பு லாரிகளும் அவ்வப்போது சென்று கொண்டிருந்தது.
பொங்கல் முடிந்த அடுத்த நாள் காலையில் இராமாயிக்கிழவி குடிநீர்க் குழாயில் நீர் பிடித்துக் கொண்டிருந்தாள் பெரும் வாக்குவாதமும் சண்டையும் செய்து கொண்டு. சுற்றி இருப்பவர்கள் இராமாயிடம் சண்டையிட முடியாமல் ஒதுங்கி நின்றனர். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதால் சண்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது. சண்டையிடுவதிலும், எதிரியை நுணுக்கமான வார்த்தைகளால் தாக்குவதும் இராமியின் தனித்திறமை. ஆகையால் அவளிடம் யாரும் பேச்சுக் கொடுக்க பயப்படுவார்கள்.
குடத்தை இடுப்பில் வைத்த ராமாயி "அடேய்! கிறுக்கு பயலே" என்று தண்ணீருடன் இரண்டு குடங்களையும் கீழே போட்டுவிட்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று அசோக்கை வாரி அணைத்துக் கொண்டு சாலையின் அந்தப்புரம் ஓடினாள். தண்ணீர்க் குடங்கள் கீழே விழுந்து உடைந்தது ‘பொத்’ என்ற சத்தத்துடன். காலில் கூர்மையான கல் குத்தி ரத்தம் பீறிட்டது. ஆனால் வலி நரம்புகள் யாவும் துண்டிக்கப்படிருந்தது இராமாயிக்கு. "ஏன்டா மவனே, ஊட்டுல எல்லாருக்கும் உன்னப் பாத்துக்கிறத விட என்னடா வேல வேண்டிக் கிடக்கு?" என்றாள் முத்தமழையைப் பொழிந்து கொண்டே. ஆம். குழந்தைப் பேறு இல்லாத இராமாயின் வேதனைகள் அனைத்தும் அசோக்கைக் காப்பாற்றியதில் கரைந்து கொண்டு இருந்தன. அதற்குள் கூடிய கூட்டத்தில் "நூலிழையில் தப்பிச்சுட்டடா பயலே" என்று கூறினர் சிலர். சிலரோ “கடவுளுக்குத் தான் நன்றி சொல்லனும்” என்றனர்.
நடந்த அசம்பாவிதத்தை கேட்டு பர்வதம் அம்மாவும், மாணிக்கமும் ஓடி வந்தனர். அசோக்கை இராமாயிடமிருந்து வாங்கிய பர்வதம் இராமாயின் இரு கரங்களையும் தன் ஒரு கையில் பற்றி கொண்டு "ரொம்ப நன்றி ராமாயிக்கா" என்றார் கண்ணீருடன். "பரவால்ல பருவதம் புள்ளைய பத்திரமா பாத்துக்கோ, அப்புறம் அய்யோனாலும் வராது, அழுது புலம்பினாலும் கிடைக்காது" என்ற படி தன் உடைந்த தண்ணீர் குடங்களை எடுக்கச் சென்றாள் இராமாயி.
எத்தனை சுக துக்கங்களைக் கடந்து வந்திருந்தாலும் அன்றைய நிகழ்வும் இராமாயி தன் உயிரை துச்சமாக நினைத்து அசோக்கைக் காப்பாற்றியதும் இன்று வரை மனதில் அழியாப் பதிவாய் இருந்தது பர்வதம் அம்மாவுக்கும் மாணிக்கத்திற்கும். அந்த நன்றிக் கடனை அடைக்கத் தான் முடியுமா என்ன? இன்று மட்டுமல்ல இராமாயின் முடிவுக் காலம் வரை இப்பயணம் தொடரும் என்று மனதில் நினைத்தார் பர்வதம்.

No comments:
Post a Comment