இந்திரா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீடு, வாசல் என எல்லா இடங்களிலும் யார் யாரோ நிற்கிறார்கள். பேச்சும் செயலும் நீண்டுகொண்டே இருந்த வீட்டில், இவளுக்கு மட்டும் எதுவுமே கேட்கவில்லை. அவளோடு வீட்டில் இருந்த ஒரே உயிரும் அமைதியாய்க் கிடக்கிறது. எல்லோரும் அவருக்கு சவம் என பெயர் சூட்டிக்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பார்த்துக்கொண்டிருக்க, இவள் மட்டும் எங்கோ பயணித்துக் கொண்டிருந்தாள். நன்றாக வாழ்ந்த காலத்திலும், சரிந்த காலத்திலும் வந்து பார்க்காத எல்லோரும் துக்கம் விசாரிக்க வந்திருக்கின்றனர். எப்படி நடந்ததென விவரிக்க முடியாமல், பித்துப் பிடித்தாற்போல் இருந்தாள். கழுத்துப் பகுதியில் நெறிக் கட்டினாற்போன்ற வலி. யாருக்கும் சொன்னாலும் புரியாது; புரியவைக்கவும் விரும்பவில்லை.
அருகாமையில் இருக்கும் தோழியை சந்தித்துவிட்டு திரும்புகையில், இவர்களின் இருசக்கர வாகனத்தை மறித்து நின்றது ஒரு சிவப்பு கார். காரிலிருந்து இறங்கிய மூவர், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கார்த்தியை இவள் கண் முன்னே கொடூரமாகக் தாக்கினர். கார்த்தி ஒரு நேர்மையான அதிகாரி — வருவாய் ஆய்வாளர். பல முறைகேடுகள் சீராக நடக்கும் இடத்தில், நீதி, நேர்மை, நியாயம், கடமை என்று வாழ்ந்த அதிகாரி. நேரிலும், அலைபேசியில் பல மிரட்டல்கள் வந்த போதும் தன் கொள்கையில் உறுதியாக நின்றவர். சாதாரண மக்களுக்கு நன்மை நடக்கிறது என்பதால், இந்திராவும் இதற்கு முழு ஆதரவு. எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் உடன் நின்றவள்.
சொந்தப் பந்தங்கள் அலுவலக ரீதியான உதவிக்கு வந்த போதும் கூட, இவரின் நேர்மையை அசைக்க முடியாமல் நகர்ந்தனர். சாமானிய மக்கள் இவரை மிக இயல்பாக அணுகினர். எந்தக் கோப்புகளும் தேங்காது, தாமதமாகாது. பிறர் கொடுக்கும் பிரச்சனைகளை விட, தன்னோடு வேலை செய்யும் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் கொடுக்கும் சுமை அதிகம். ஆயினும் எல்லோரையும் மரியாதையாக, நிதானமாகவே அணுகுவார்.
வீட்டில் பார்த்து வைத்த திருமணம்தான். ஆயினும் காதலித்து திருமணம் செய்தது போன்ற புரிதல் இருவருக்கும். வீடு, வீடு சார்ந்த பணிகளில் இந்திரா முழு ஈடுபாட்டோடு செய்வாள். நல்ல வாசகி, கவிதையினி. இவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் தான். ஆனால் நடந்துவிட்டதே!
“ஏன் இப்படி நடந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? நன்மைகளைத்தானே அவர் செய்தார்? யாரையும் ஏமாற்றவில்லை, யாரிடமும் கையூட்டு வாங்கவில்லை, யாரையும் அவமானப்படுத்தவில்லை, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. நேர்மைக்கும் நியாயத்திற்கும் இதுதான் பரிசா?” — இது போன்ற பல கேள்விகளும், இவர்களுக்கிடையே நடந்த நிகழ்வுகளும், உரையாடல்களும் அவளை எங்கோ வெறித்துப் பார்க்க வைத்துக்கொண்டிருந்தது.
எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இந்திராவின் என்ன அலைகள் பள்ளிப் பருவம்,கல்லூரி, கார்த்தியுடன் திருமணம் என எல்லா பாதையிலும் பயணித்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும் அப்பாவிடம் ஜர்னலிசம் படிக்க அனுமதி கேட்டதும் அப்பா பயந்ததும் அவரை சமாதானம் செய்து அவள் படித்து முடித்ததும் அதே சமயம் தூரத்து சொந்தமான கார்த்தியின் பெற்றோர் அவளை பெண் கேட்டு வந்ததும் வருவாய் ஆய்வாளரான கார்த்தியை மணம் முடித்ததும் திரைக்காட்சிகளாக இந்திரா மனதிற்குள் ஓடியது.
திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒரு அழகிய மாலை பொழுதில் தேநீர் அருந்தியவாறு இருவரும் பேசிக் கொண்டிருந்தசமயம், "ஏன் இந்திரா, உனக்குள் கதை கவிதை என எவ்வளவோ திறமைகள் மக்களுக்கான உன்னுடைய சிந்தனைகள் இவையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக உள்ளது.உன் திறமைகளை நான் முடக்கி விட்டேனோ என்று சில சமயம் எனக்கே தோன்றுகிறது" என்று சொன்ன கார்த்தியைப் பார்த்து, "ஏங்க, நான் வெளியில் போய் வேலை செய்தால் தானா?ஏன் உங்கள் பணியில் என்னால் உதவ முடிந்த அளவு உங்களுக்காக நான் உதவுகிறேன்" என்று சொன்ன இந்திராவை நினைத்து கார்த்தி பெருமிதம் கொண்டான்.
"இந்தக் காலத்தில் உங்களைப் போல் ஒரு அதிகாரியை பார்ப்பதே அரிதாக உள்ளது அதிலும் என் எண்ணம் போல் நீங்கள் அமைந்தது கடவுள் எனக்கு கொடுத்த வரமாகவே எண்ணுகிறேன். யாருக்கும் பயப்படாமல் எதற்காகவும் விலை போகாமல் ஏழை எளிய மக்களின் தோழனாக நேர்மையுடன் கடமையாற்றும் உங்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன் " என்றாள் இந்திரா. இதனிடையே சராசரியான வாழ்க்கை போராட்டம்,பெரிய இடத்து மோதல்கள், மிரட்டல்கள், எல்லாம் இருப்பினும் இருவரும் தங்கள் இல்வாழ்வில் சிகரம் தொட்ட போது தான் இப்படி ஒரு பேரிடி விழுந்தது.
திடீரென கேட்ட சத்தத்தால் தன் சுய நிலைமைக்கு திரும்பிய இந்திரா "உங்களுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் நடத்தியது விதி என்றால் சரி தான், ஆனால் சதியல்லவா நடந்து இருக்கிறது. அதனால் தானே நீங்கள் என்னை விட்டு சென்று விட்டீர்கள். இல்லைங்க இத நான் விடப்போறதில்ல உங்களோட இந்த நிலைமைக்கு காரணமானவங்க யாரா இருந்தாலும் சரி அவங்கள சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துவேன். உங்களுக்காக நான் போராடுவது என்று முடிவு பண்ணிட்டேன் உங்களுடைய ஆசி மட்டுமே எனக்கு இருந்தா போதுங்க. உங்கள மாதிரி வாழ்க்கையில உண்மையா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு உங்களோட சாவு ஒரு தப்பான உதாரணமா இருந்திடக்கூடாது.நான் போராடுவது என்று முடிவு பண்ணிட்டேன். கண்டிப்பா உங்க மேல மரியாதை இருக்கிறவங்க நாலு பேராவது என் கூட துணைக்கு வருவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று ஒரு முடிவுடன் எழுந்தாள் இந்திரா. கார்த்தியும் தன் இறுதிப் பயணத்திற்கு தயாரானான்.
கார்த்தியைக் கொலை செய்தவர்களையும் அதற்குக் காரணமானவர்களையும் இந்திரா ஒரு புறம் தீவிரமாய்த் தேடிக் கொண்டிருக்க, போலீஸ் தரப்பிலிருந்து ஒரு தனிக்குழு அமைக்கப் பட்டு, அவர்களும் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
என்னென்னவோ யோசனை செய்தவளாய் கையில் ஒரு கோப்பைத் தேநீருடன் வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் இந்திரா. லேசாக மழை தூறிக் கொண்டிருக்க, செடி கொள்ளாமல் பூத்திருந்த ஜாதி மல்லிகையின் மணம் நாசியைத் துளைத்தது. கண்கள் மூடி ஆழ்ந்து சுவாசிக்க, வழிந்த கண்ணீரில், தேநீரில் உப்புச் சுவையும் கலந்தது.
'அம்மா...!' என்ற அழைப்பில் கண் திறந்து பார்க்க, கலக்கமான வெளிறிய முகத்தோடும், பயத்தோடும் நின்றிருந்தாள் அவர்கள் வீட்டுப் பணிப் பெண். "என்னாச்சு சிவகாமி.. ஏன் ரெண்டு நாள் வரலே? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?" எனப் பரிவான குரலில் கேட்க,
உடைந்து அழத் தொடங்கினாள் சிவகாமி.
"என்னன்னு சொல்றதும்மா? உங்க கிட்டே பத்து வருஷமா வேலை பாக்கறேன். பெத்த புள்ளையாட்டம் என் மகனைப் பார்த்துக்கிட்டீங்க. படிப்புச் செலவெல்லாம் ஏத்துக்கிட்டீங்க. நானும் இவன் நல்லாப் படிச்சு, ஒரு பெரிய உத்தியோகத்துக்குப் போவான்னு தான் நெனச்சேன். ஆனா, போன அஞ்சாறு மாசமா அவனோட நடவடிக்கையே சரியில்லம்மா. சேர்க்கையும் சுத்தமா சரியில்லை. அய்யா கிட்டயும் உங்க கிட்டயும் சொல்லுவேன்னு சொன்னா வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்னு மிரட்டுவான். சரி.. வயசுக் கோளாறு, சரியாயிடுவான்னு நெனச்சேன் மா. தப்புப் பண்ணிட்டேன்மா தப்புப் பண்ணிட்டேன். "
மண்டையில் அடித்துக் கொண்டு அழத் துவங்கியவளை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது என்றும் தெரியவில்லை. அதே சமயம் 'இவள் மகன் தான் ஏதாவது..?' என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
"என் மகன் இப்ப ஆஸ்பத்திரியிலே இருக்கறான் மா. தலையிலே அடிபட்டதாலே சுய நினைவு திரும்பவோ உயிர் பொழைக்கவோ வாய்ப்பு ரொம்பக் கம்மின்னு சொல்றாங்கம்மா"
ஒன்றுமே புரியவில்லை இந்திராவுக்கு.
" சரி ரெண்டு நாள் நீ எங்கே போனே? எனக்கு ஏன் போன் கூடப் பண்ணலே?" எனக் கேட்க,
"அம்மா, அவங்க அடிச்சதிலே வலியிலே என்னால எந்திரிக்கக் கூட முடியலே. என் போனை அடிச்சுப் புடுங்கிக்கிட்டாங்க. கையைப் பாருங்க.." என முந்தானையால் மூடியிருந்த தன் இடது கையைக் காட்ட, கையில் பெரிய கட்டுப் போடப் பட்டிருந்ததைப் பார்த்தாள் இந்திரா.
"இங்க பாரு சிவகாமி.. எனக்குத் தலையும் புரியலே காலும் புரியலே... நிதானமா வெவராமா சொல்லு... " எனவும், அருகிலிருந்த தூணில் சரிந்து அமர்ந்தவளாய், சொல்லத் தொடங்கினாள் சிவகாமி.
“எங்க ஏரியா பக்கம் எங்க சாதிக்காரங்க வந்து கூட்டம் போடறது வழக்கம். அவனுக்கு அங்க என்ன புடிச்சதோ தெரியல, அவங்க எதுக்கு கூப்பிட்டாலும், எங்க கூப்பிட்டாலும் போய்டுறான். எனக்கு அதுல சுத்தமா விருப்பமில்லை. இத்தனை வருஷம் நான் என் புருஷன் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கேன். ஒரு நாதியும் வந்து நிக்கல, ஆனா இவங்க கூட்ற சாதி கூட்டத்துக்கு என் பையன் எதுக்கு அப்படி என்கிற கேள்விதான் எனக்குள்ள இருந்தது. நானும் என்னென்னவோ சொல்லி பார்த்தேன், ஆனா என் பையனுக்கு அங்க போறதுல ஒரு போதை. அந்த கூட்டம், அவங்க பேச்சு எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டான். அவன் மனசுல இவங்க என்னத்தை விதைச்சாங்களோ தெரியலம்மா, கூட படிக்கிற பையன் கிட்ட சாதி சாதினு தான் இவன் பேசிகிட்டு இருப்பான் போல. ஏன்னா இவன மாதிரியே இன்னொரு கூட்டமும் அவன் பள்ளிக்கூடத்துல, அவன் வகுப்பிலேயே இருக்கு. என்ன ஆகப்போகுதோங்குற பயம் எனக்கு அன்னைக்கே இருந்துச்சு மா. நான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இவன வேற எங்கேயாவது கூட்டிட்டு போய் இருக்கணும், அப்படியே விட்டது தான் தப்பா போச்சு. நட்பா பழகிட்டு இருந்த பசங்க இன்னைக்கு என் ஜாதி தான் பெருசுன்னு அடிச்சுகிட்டு சாவுறானுங்க. இன்னொரு கொடுமை என்னன்னா வாத்தியார் கூட சில பேர் இப்படித்தாமா இருக்கிறாங்க. பசங்கள மட்டும் சொல்லி என்னத்த பண்றது. இவங்க வாத்தியாரு இவன கூட்டு சேர்த்துக்கிட்டு நீ நம்மாளுன்னு உசுப்பேத்தி இருக்காரு. அந்த தைரியத்துல கூடப்படிக்கிற பையனப் போட்டு அந்த அடி அடிச்சிருக்கான். அவங்க சும்மா விடுவாங்களா? பெரிய கூட்டத்தையே கூட்டிட்டு வந்து பெரிய பிரச்சனை ஆயிடுச்சு மா. அதுல அடிப்பட்டு தான் இப்ப இப்படி கெடக்கிறான். நான் ஒரு வாரம் வேலைக்கு வர முடியாதுமா. அவன் எழுந்து நடந்தா தான் எனக்கு நிம்மதி. அதான் ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன். உடனே இந்திரா சிவகாமியிடம் “நீ மொதல்ல உன் பையன பாரு, அவன் சரியான அப்புறம் வா, பணம் ஏதாவது உதவி தேவை இருந்தா சொல்லு, நானும் அவன் கிட்ட வந்து பேசுறேன்” என ஆறுதலான வார்த்தைகளை சொல்லி சிறிதளவு பணமும் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாள். நம்ம இந்த பையன பத்தி நினைச்சது தப்பா போச்சு என மனதுக்குள் பேசிக்கொண்டாள் . மனரீதியான பாதிப்பு எல்லாரையும் சந்தேகப்படும் போல என இப்படி தனக்கு தானே பேசிக்கொண்டாள். பிறகு நாட்கள் நகர்ந்தது கார்த்திக் கொலை வழக்குல இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லைங்கிறத புரிஞ்சுகிட்ட இந்திரா, எஸ்பி ஆபிஸ்க்கு போனாள்.
“என் புருஷன் கொலை வழக்குல ஏன் எந்த அக்கறையும் காட்டறது இல்ல? எதனால இந்த மெத்தனம்?” என கேள்விகளை அடுக்கத் தொடங்கினாள். அங்கிருந்த உயர் அதிகாரியான ராஜசேகரன், “இந்திரா அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீங்க. இந்த கேஸ் அப்படியே விட்டுடறது தான் உங்களுக்கும் நல்லது, எல்லாருக்குமே நல்லது” அப்படின்னு கொஞ்சம் அழுத்தமா இந்திரா கிட்ட சொன்னாரு. அங்கிருந்த இன்ஸ்பெக்டர் குமரனைப் பார்த்து, இந்திராவுக்கு புரியவை என்பதை ஒற்றைப்பார்வையில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
“என்ன சொல்றீங்க? ஒரு நல்ல அதிகாரியை நம்ம இழந்துட்டு நிக்கிறோம் இதுல என்ன சார் உங்களுக்கு நல்லது இருக்கு?”.
“இருக்கு மேடம். நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் இங்க நீங்க சத்தம் போட்டதுனால எதுவும் நடக்க போறது இல்ல” அப்படின்னு சொல்லி வெளியில் இருந்த கேன்டீனுக்கு இந்திராவை அழைச்சிட்டு போனார் குமரன்.
“நான் சொல்றத நீங்க சரியா உள்வாங்கிக்க முயற்சி பண்ணுங்க. ஒரு பக்கத்துல இருந்து மட்டும் யோசிச்சு எந்த முடிவுக்கு வராதீங்க. நீங்க நினைக்கிற மாதிரி உங்க புருஷன் கார்த்திக் அவ்வளவு நல்லவர் இல்லை”.
“போதும் நிறுத்துங்க குமரன். இதுக்கு மேல நீங்க எதுவும் பேச வேண்டாம். உங்க கையாலாக தனத்துக்கு என் புருஷன் பெயரை கெடுக்கிறீங்களா?”.
“அதுக்கு என்ன மேடம் அவசியம் இருக்கு? நீங்க ஒரு ஜோர்னலிஸ்ட். நீங்களே ஒரு தலைப்பட்சமா ஒரு கேஸ் அணுகுவது சரின்னு நினைக்கிறீங்களா? உண்மையில கார்த்திக்கு இரண்டு முகம் இருக்கு. உங்ககிட்டயும் சொசைட்டிகிட்டையும் ஒரு முகம். ஆனா பெண்கள் விஷயத்துல அவர் அப்படி இல்ல. சொல்லப்போனால் உங்க புருஷன் கிட்டத்தட்ட ஒரு மன்மதன்னு சொல்லலாம்”.
“வார்த்தைகள்ல கவனம் இருக்கட்டும் குமரன்”
“மேடம் நான் இப்ப எது சொன்னாலும் உங்களுக்கு அவரை நான் தப்பு சொல்றதா தான் தோணும். ஏன்னா நீங்க அவர் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சுருக்கீங்க, ஆனா உண்மையில அவர் அப்படியான ஆள் கிடையாது. உங்க புருஷனை கொன்னவனும் இப்போ உயிரோட இல்ல காரணம் அவங்க குடும்பத்தோட சூசைட் பண்ணிட்டாங்க. உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன். கார்த்திக்கு பல பெண்களோடு தொடர்பு இருக்கு அதற்கு நிறைய எவிடன்ஸ் எங்ககிட்ட இருக்கு, ஆனா மக்கள் மத்தியிலயும் உங்ககிட்டையும் அவர் எடுத்திருக்கிற பெயரும் புகழும் நாங்க எவ்வளவு ப்ரூப் கொண்டு வந்து கொடுத்தாலும் யாரு நம்பாத அளவுக்கு அவரு ரொம்பவே அழகா எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணி இருக்காரு. நீங்க சொல்றதுல ஒரு பெரிய உண்மை இருக்கு. உங்க ஹஸ்பண்ட் லஞ்சம் வாங்காதவர் நேர்மையான அதிகாரி. அதுல எந்த குழப்பமும் இல்லை, ஆனால் அவர் கண்டிப்பா ஒழுக்கமே இல்லாத மனுஷன், அதை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பேமிலி சூசைட் பண்ணி இருக்காங்க. இது எல்லாமே உங்க புருஷனோட மொபைல்ல அவர் வச்சிருந்த இன்னொரு நம்பர்ல இருந்து எங்களுக்கு கிடைச்ச இன்ஃபர்மேஷன். டேட்டாசும் இதோ இந்த ப்ரூப் எல்லாமே நான் உங்ககிட்ட கொடுக்கிறேன். நீங்க ஒரு ஜர்னலிஸ்ட் உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்ல. உண்மைய சொல்லப்போனால் நாங்க உங்களுக்கு ஃபேவர்தான் பண்ணி இருக்கோம் மேம். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்”
சில பேப்பர்களையும் எவிடன்சையும் இந்திரா கிட்ட கொடுத்துட்டு குமரன் கிளம்பினார். கார்த்திக் இறந்தப்ப உடைந்ததை விட, உண்மையிலே இப்பதான் மிகவும் உடைந்து காணப்பட்டாள்.
அதுக்கப்புறம் அந்த பட்டியலில் இருந்த பெண்களையெல்லாம் தேடி போனாள். அவங்களுக்கு தன்னை யாரு என அறிமுகப்படுத்தாமல், அவர்கள் வாழ்க்கையில தற்போது என்ன நிலைமையில் இருக்காங்க, அவங்க அடுத்த கட்டத்துக்கு மேம்பட என்ன செய்ய வேண்டுமென யோசித்து, செயல்படத் துவங்கினாள்.
(ஈரோடு வாசல்- படைப்புக் குழுமத்தின் பயிற்சியான தொடர்கதைச் சங்கிலியில் மகேஸ்வரி மதன், சரஸ்வதி, சண்முகவடிவு, லோகேஸ்வரி ஆகியோர் இணைந்து எழுதிய சிறுகதை)








