கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 1 - ஆனந்தி ஆரூரன்

குப்பை இல்லா ஈரோடு: உள்ளாட்சி இணையதளம் மூலம் மக்கள் இயக்கமாக மாற்றுவோம்! 

ஈரோடு மாநகரின் பரபரப்பான சந்தைகளிலும், அமைதியான குடியிருப்புப் பகுதிகளிலும், பெருகிவரும் மக்கள்தொகைக்கு இணையாக நாளுக்கு நாள் குவியும் கழிவுகள் ஒரு மௌனமான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. கண்ணுக்குத் தெரியும் குப்பை மேடுகள் மட்டுமல்ல, கண்ணுக்குப் புலப்படாத காற்று மற்றும் நீர் மாசுபாடு எனப் பல்வேறு வடிவங்களில் இவை நம் சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகின்றன. இந்த ஆபத்தான சுழற்சியை உடைத்தெறியவும், வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்லவும், நாம் இன்று அவசரமான மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 


பளபளப்பான நகரங்களின் கவர்ச்சிக்கு பின்னால் இருண்ட உண்மைகள் இருக்கலாம். சில நாடுகள் தங்கள் பரந்த நிலப்பரப்பைப் பயன்படுத்தி குப்பைகளை எளிதில் மறைத்துவிடுகின்றன. இது ஒரு வகையான ஏமாற்று வேலை. அதேபோல், வளர்ந்த நாடுகள் தங்களுடைய தேவையற்ற பொருட்களை, "ஒருவனுடைய குப்பை மற்றவருக்குப் பொக்கிஷம்" என்கிற கருத்தின் போர்வையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்புகின்றன. உண்மையில், அவை மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது தீங்கு விளைவிக்கும் கழிவுகளாக இருக்கலாம். இது ஒரு நவீன காலனித்துவ முறை. சில நாடுகள், கடலை எல்லையற்ற குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது கடினமான பொருட்களைக் கடலில் கொட்டிவிடுகின்றன. பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள அந்தப் பெரிய குப்பைத் திட்டு (The Great Pacific Garbage Patch), நாம் இயற்கைக்குச் செய்யும் துரோகத்தின் சாட்சியாக நிற்கிறது. இந்த போலித்தனமான தூய்மை ஒருபோதும் நீடிக்காது.   

திடக்கழிவு மேலாண்மை என்பது உலகலாவிய பிரச்சினை என்பதை நம்மால் யூகிக்க முடிவதனால், இது  'நம்மால் முடியாது', 'நம் ஊருக்கு சாத்தியம் இல்லை' என்று இந்தச் சவாலை எதிர்கொள்வதிலிருந்து விலகுவதை விட, சாத்தியமான தீர்வுகளைத் தேடி பயணிப்பதே புத்திசாலித்தனம். ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும், வணிக நிறுவனமும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த மலைப் போன்ற பிரச்சினையையும் தூள் தூளாக்க முடியும். கழிவுகளை குறைத்தலில் ஆரம்பித்து,  முறையாகப் பிரிப்பதில் தொடர்ந்து மறுசுழற்சியை ஊக்குவிப்பது, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனப் பல்வேறு வழிகளில் நாம் மாற்றத்தை உருவாக்க முடியும்.  இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆகையால் உள்ளாட்சி அமைப்பின் இணையதளம், தகவல் தொடர்பில் பெரும் பங்கு வகிக்கிறது. முதலில் நாம் செய்ய வேண்டியது நமது ஊரின் உள்ளாட்சி அமைப்பின் இணையதளம் மற்றும் வலைதளத்தில் "திடக்கழிவு மற்றும் மறுசுழற்சி" பற்றிய அதிகப்படியான தகவல்களைத் தர முயல்வது தான்.  SWMRT பெங்களூரு, (Solid Waste Management Round Table, Bengaluru) தன் இணையதளத்தில், அதிகப் படியான தகவல்களை பொது மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பது ஒரு நல்ல முன்னெடுப்பு.  



வெற்றிகரமான உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்கள், பொதுவாக விரிவான மற்றும் பயனர்-நட்பு தகவல்களை வழங்குகின்றன.  அவற்றில் சில முக்கிய அம்சங்கள்: 
  • வீட்டில் உரம் தயாரிக்கும் முறைகள், அதற்கான உபகரணங்களோடும்  மேம்பட்ட மண்புழு உரமாக்கும் முறைகளோடும்,  பயிற்சி வகுப்புகள் அல்லது செயல்முறை விளக்கங்களுக்கான விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட வேண்டும். 
  • அன்றாட வாழ்வில் கழிவுகளை குறைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கலாம். 
  • மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை படங்களுடன் கூடிய விரிவான பட்டியலை வெளியிடுவது.(பிளாஸ்டிக் எண்கள் உட்பட). 
  • ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சிக்கு தயார் செய்யும் முறைக்கான திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் வழங்கும் வரையறைகளை பட்டியலிடுவது. 
  • மறுசுழற்சி செயல் முறைக்கான சேகரிப்பு முதல் புதிய பொருள் உருவாக்கம் வரை எளிய விளக்கங்கள் (படங்கள்/வீடியோக்கள்). மறுசுழற்சியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை விளக்குவது. 
  • உள்ளூர் மறுசுழற்சி மையங்களின் முகவரி, வரைபடம் மற்றும் செயல்பாட்டு நேரங்கள், அங்கு ஏற்றுக் கொள்ளப்படும் பொருட்களின் விவரங்களை எடுத்துரைப்பது. 
  • உள்ளூரில் மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்தி புதிய பொருட்கள் தயாரிக்கும் வணிகங்கள் பற்றிய தகவல்களை தரலாம். அத்தகைய முயற்சிகளுடன் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் இடம்பெறலாம். 
  • உள்ளாட்சி அமைப்பின் மறுசுழற்சி இலக்குகள் மற்றும் இதுவரை அடைந்த முன்னேற்றத்தின் புள்ளிவிவரங்கள், மக்களை ஊக்கப்படுத்துபவை. 
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஈரோடு மாநகராட்சியின் கழிவு மேலாண்மை முயற்சிகளில் முழுமையாக ஈடுபடுத்த, இணையதளம் கல்விப் பொருட்களையும் (PDF, வீடியோக்கள்), விழிப்புணர்வு பிரச்சார விவரங்களையும் பகிரும் ஒரு செயல்முனைப்பு தளமாக மாறுவது அவசியம். இது மாணவர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும். அவர்களை ஊக்குவிக்கும் போட்டிகளை முன்னெடுக்கலாம். 
  • பேட்டரிகள், மின்னணு கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவற்றை அகற்றுவதற்கான சரியான முறைகளுடன், சிறப்பு சேகரிப்பு மையங்களின் விவரங்கள் அவசியம். 
  • திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளில் தன்னார்வலராக சேருவதற்கான வழிகளை வகுப்பதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப் படுத்தலாம். கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான தளங்களை உருவாக்கலாம். 
  • சட்டவிரோத கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மற்றும் தண்டனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய தேவையாயிருக்கிறது. சட்டவிரோத கழிவுகளைப் புகாரளிப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கலாம். 
  • திடக்கழிவு மற்றும் மறுசுழற்சி தொடர்பாக பொதுமக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ) தொகுத்து வழங்கலாம். 
  • திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப் படலாம். 
  • குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறவில்லை அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் (Complaint Redressal): இருந்தால் ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் முறையை எடுத்துரைக்கலாம். 
  • திடக்கழிவு மேலாண்மை தொடர்பான உள்ளாட்சி அமைப்பின் சட்ட விதிகள் (Bye-laws) மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்கள் வழங்கலாம். 
  • திடக்கழிவு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை குறிப்பிடலாம். 
  • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சமூகங்களின் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். 
  • இணையதளங்கள் பொதுமக்கள் புகார்களைப் பதிவு செய்யவும், ஆலோசனைகளை வழங்கவும், மாநகராட்சி திட்டங்கள் குறித்த கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கவும் ஒரு தளமாக அமைய வேண்டும். இதன் மூலம், நகரின் வளர்ச்சிப் பணிகளில் பொதுமக்கள் நேரடியாகப் பங்காற்ற முடியும். 
  • மாநகராட்சியின் பட்ஜெட், செலவினங்கள், திட்ட அறிக்கைகள், டெண்டர் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக வெளியிடுவதன் மூலம், பொதுமக்கள் நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும், பொறுப்புணர்வை நிலைநாட்டவும் உதவும். 
  • தொழில்துறை நகரங்களில் இணையதளம் என்பது ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை அமைப்பை (Integrated Waste Management System) உருவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது தகவல்களை வெளிப்படையாக்கி, செயல்பாடுகளைத் திறம்பட மாற்றி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்தன்மை கொண்ட ஒரு தொழில் நகரத்தை உருவாக்க வழிவகுக்கும். 
  • தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மரம் நடுதல் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு தகவல்களை தொடர்ச்சியாக இணைய தளத்தில் பதிவிட வேண்டும். இது தூய்மை மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்க மக்களை ஊக்குவிக்கும். 
  • பொது சுகாதார அவசரநிலைகள் போன்ற சமயங்களில், உடனடி மற்றும் நம்பகமான தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதற்கான ஒரு முக்கிய கருவியாக இணையதளம் செயல்பட வேண்டும். 
இந்த அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான இணைய மற்றும் வலைத்தள உள்கட்டமைப்பு, ஈரோடு மாநகராட்சியை ஒரு முன்னோடி நிர்வாகமாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் மாற்றியமைக்க உதவும். இதன் மூலம், ஈரோடு ஒரு முன்னுதாரணமான, வளர்ச்சிமிகு நகரமாக திகழ்வதோடு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றும். இது பொதுமக்களுக்கும், மாநகராட்சிக்கும் இடையே ஒரு வலுவான பாலத்தை உருவாக்கி, கூட்டு முயற்சி மூலம் நகரத்தின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க வழிவகுக்கும்.


ஈரோடு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டிருப்பதால், அதன் இணையதளமும், வலைத்தளங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் களஞ்சியமாக மாற வேண்டும். இது பொதுமக்கள் தகவல்களை எளிதாகப் பெற்று, நகர வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பங்கேற்க பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கை. 

அரசாங்கம் மாற வேண்டுமா, அல்லது மக்கள் மாற வேண்டுமா என்று சதா யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு புள்ளியில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவதுதான் முக்கியம். இந்த ஆராய்ச்சியில் காலம் கடத்துவதைவிட, ஒரு சிறிய மாற்றமாக இருந்தாலும், அதை இப்போதே தொடங்கி செயல்படுத்துவதே புத்திசாலித்தனம். காரணம், ஒரு நல்ல மாற்றம் என்பது தானாக நிகழ்வதில்லை; அது எங்கிருந்தாவது தொடங்கப்பட வேண்டும், அது அரசாக இருக்கலாம் அல்லது தனிமனிதனாக இருக்கலாம். நகர்வு அவசியமானது! அதில் முக்கியமானது செயல்பாடுதான்.

(தொடரும்)

சம்பாத்தியம் - கௌசல்யா பாஸ்கர்


"சின்ன உதவி" என்று முருகேசன் அண்ணாச்சி கேட்ட வார்த்தை ஹேமாவின் பதினொரு வருடம் கடந்த வாழ்க்கை முழுவதும் நினைத்துப் பார்க்க தோன்றும் என்று ஹேமா சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் முன்னாள் வைக்கப்பட்டிருந்த அந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை தான் அப்படி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையுடன் ஆழ்ந்திருந்தாள் ஹேமா. ஹேமா, ரமேஷ் என்ற தம்பியதினரின் குடும்ப நண்பர் தான் முருகேசன் அண்ணாச்சி.

பதினொரு வருடங்களுக்கு முன்பு, ஹேமாவிற்கு வரன் தேடும் பணியை சரவணனும், லட்சுமியும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர். குடும்ப பின்னணி (குடும்பப் பழக்கம் தான் பையனுக்கும் வந்திருக்கும்), வரப்போகும் மருமகனின் சம்பாத்தியம் (மகளுக்கு பண கஷ்டம் வந்து விடக்கூடாது), பையனின் பழக்கவழக்கம் (மது பழக்கத்தினால் மகள் பாதிப்படைந்து விடக்கூடாது), வீடு, வாசல், சொத்து, சுகம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து வரப்போகும் மருமகனின் உடல்நலம் முதலாக விசாரணை போய்க் கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஹேமா நமக்காகத்தான் எல்லாம் என்று மனதிற்குள் நினைத்த படியே நாணத்துடன் அவ்விடத்தை கடந்து சென்றாள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சரவணனும், லட்சுமியும் அவர்கள் நினைத்தபடியே மாதம் ஒன்றரை லட்சம் சம்பாத்தியத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு வரனை தேர்வு செய்து மணமுடித்தனர். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கிடைத்துவிட்டது என்ற மனநிறைவுடன். இதுவரை பாதுகாத்து வந்த பொக்கிஷம் இன்று முதல் வேறொருவடையது என்று கண்களில் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர். அந்த பொக்கிஷம் இன்னொருவரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்ற தைரியத்தில்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாக உருண்டோடியது. ஹேமாவிற்கு செய்ய வேண்டிய சீர், சிறப்புகள் எல்லாம் வந்து கொண்டே இருந்து தாய் தந்தையிடம் இருந்து. ஹேமா ஒரு இல்லத்தரசியாக தன் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தாள் தன்னை மறந்து.

ஹேமா, ரமேஷ் இருவருக்கும் ஹர்ஷா என்ற பெண் குழந்தை பத்து வயது எட்டிக் கொண்டிருந்தாள். எத்தனையோ கொடுமைக்கார கணவன்களுக்கு மத்தியில் தான் என்ன கேட்டாலும் மறுப்பேதுமின்றி செய்து கொடுக்கும் கணவர்தான் தனக்கு கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள் ஹேமா.

இந்நிலையில் தான் ஒரு நாள் காலை வேளையில் "ஹேமா, சின்ன உதவி" என்று வீட்டிற்கு வந்திருந்தார் முருகேசன் அண்ணாச்சி. காலையில் உதவி கேட்டு வந்திருக்கிறாரே!! என்ன உதவியாக இருக்கும்? என்ற கேள்விகளை மனதிற்குள் அடுக்கிக் கொண்டே ஆச்சரியம் கலந்த கேள்விக்குறியுடன் அண்ணாச்சியைப் பார்த்தனர் ரமேஷும், ஹேமாவும். ஹேமாவோ நம்மால் ஆக வேண்டிய உதவியா? என்று மனதிற்குள் எண்ணியவாறே சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவரை ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர வைத்தான் ரமேஷ். வழக்கமான நலம் விசாரிப்புகள் தொடர்ந்தன.

அதற்குள் இரண்டு தேநீர் கோப்பைகளுடன் வெளிவந்த ஹேமா அண்ணாச்சியைப் பார்த்து, "சொல்லுங்க அண்ணாச்சி, என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்??" என்று கேட்டாள். அதற்கு அவர் "தான் புதிதாக துவங்கி இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில், பில்லிங் செக்ஷனில் ஆள் இல்லை என்றும், ஒரு மாதம் மட்டும் உதவி செய்யுங்கள் என்றும், அதற்கான சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும்," தரையைப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கோ நன்றாகவும், பொருளாதார பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு குடும்பத் தலைவியை நன்றாகப் படித்திருக்கும் பெண்ணை பில்லிங் வேலைக்கு அழைப்பதில் பெரும் தயக்கம். ஆக, தரையைப் பார்த்துக்கொண்டே தன் இயலாமையை மறைத்துக் கொண்டிருந்தார் தயக்கத்துடன்.

ஆனால் ரமேஷ், தெரிந்த நண்பரின் கடை தானே என்று, "அதனால் என்ன அண்ணாச்சி, கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்" என்றான். இடைமறித்த ஹேமாவோ, "ஒரு மாத காலம் மட்டுமே என்னால் வர இயலும். அதற்கு மேல் கண்டிப்பாக என்னால் வர முடியாது" என்று கூறினாள். அவரோ, "சரி, அதற்குள் நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஹேமா கொடுத்த தேநீரை அருந்திவிட்டு, நன்றி கூறி நகர்ந்தார்.

ஹேமா மறுநாள் காலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு அண்ணாச்சியின் கடைக்குச் செல்வதும், வீட்டிற்கு வந்து தன் பணிகளை கவனிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். இதுவரை பாத்திரம் மட்டுமே துலக்கிக் கொண்டிருந்த கைகள், இன்று பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது. முடியாத பொழுது அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டாள்.

நாள்காட்டி தன் பணிகளைச் செவ்வனே செய்து ஒரு மாத காலத்தை கடத்தி இருந்தது. அதற்குள் அண்ணாச்சியும் எப்படியோ அலைந்து தன் கடைக்கு தேவையான வேலை ஆட்களைப் பணியில் அமர்த்தி இருந்தார்.

அவர் ஹேமாவிடம், நன்றியுடன் ஒரு மாதத்திற்கு உண்டான தொகையை, ஹேமா "வேண்டாம் அண்ணாச்சி, இதற்கு எதற்கு சம்பளம்? இந்த உதவி கூட செய்ய நான் தகுதியற்றவளா?" என்று கூறி மறுத்தும் கேட்காமல், வலுக்கட்டாயமாக கைகளில் திணித்தார். ஹேமாவின் மனமோ சங்கடத்துடன் அதை பெற்றுக் கொண்டாலும், தொகையை எண்ணிப் பார்க்கக் கூட மனம் இன்றி சிறு குழந்தையைப் போல் உலகம் மறந்து துள்ளிக் குதித்தது.

ஆம், திருமணம் முடிந்து பதினொரு வருடங்கள் கடந்து தன் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ஒன்று, சிறு தொகையாய் மடிக்கப்பட்டு அவள் கைகளில் திணிக்கப்பட்டு இருந்தது. "அந்த சிறு தொகையில் தனக்கு பிடித்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை குறைவான விலையில் வாங்கிவிட வேண்டும்" என்று நினைத்திருந்ததால் வந்த சந்தோசம் தான் அது.

"எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் கணவன் ரமேஷ் ஏன் இதை வாங்கி கொடுக்கவில்லை??" என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. ஆமாம்… வாங்கித் தரவில்லை, அவள் ரமேஷிடம் தன் விருப்பத்தைக் கேட்கவும் இல்லை.

தன் குடும்பத்தினரின் தேவைகளையும், குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காகவும், தன் அத்தியாவசிய தேவைகள் என அனைத்தையும் பூர்த்தி செய்யும் தன் கணவன் ரமேஷிடம் இந்த சிறு ஆசையைப் பற்றி அவள் பேசியதில்லை. காரணமும் பெரிதாக இல்லை என்றாலும், தன்னால் ஒரு வீண் செலவு வேண்டாம் என்ற எண்ணமாகவும் இருந்திருக்கலாம். அதுமட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தில் ஹேமா மட்டுமே இசைப்பிரியை, மற்றவர்கள் இதில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள். அதனால், தேவையற்ற வீண் செலவு என்று கூட நினைத்திருக்கலாம்.

இருப்பினும், அந்த தேவையற்ற செலவில் மனம் என்னவோ காற்றில் பறந்து மகிழ்ந்தது உண்மைதான். அந்த ஸ்பீக்கரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹேமா.

ஏதோ யோசனையுடன் எழுந்தவள், தன் மகள் ஹர்ஷாவை பொக்கிஷமாக வளர்ப்பதை விட, உணர்வுகளை சரியான முறையில் கையாள தெரியும் பக்குவம் கொண்டவளாகவே வளர்க்க வேண்டும் என்ற முடிவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


இந்திய அறிவியல் துறையில் தடம் பதித்த பெண் விஞ்ஞானிகள் - வி. அன்புமணி



எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, கூர்ந்து நோக்கும் திறன் பெண்களுக்கு அதிகம் உண்டு. அறிவியல் குறித்தும் பெண்களுக்கு  ஆழமான அறிவு உண்டு. இன்னும் சொல்லப் போனால், பிரசவ காலங்களில் குகைகளில் நீண்ட காலம் தங்கி இருந்த பொழுது சாப்பிட்டுப் போட்ட பழத்தின் கொட்டைகளால் மரம் முளைத்தது கண்டு விவசாயம் செய்யத் துவங்கியவர்கள். பெண்கள் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுபோல குழந்தையை இடது பக்கம் தூக்கி வைத்துக் கொண்டால் அழாமல் அமைதியாக இருப்பதைக் கண்டபோதுதான் இதயம் என்பது இடது புறத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டனர். அதாவது கருப்பையில் இருந்து கேட்ட இதயத்துடிப்பை, பழக்கப்பட்ட ஓசையை மீண்டும் கேட்க தொடங்கியதும் குழந்தை தானாக அழுவதை நிறுத்தி விடுகிறது என்ற புரிதல்.

நாகரீகம் வளர்ந்த பின், கூர்ந்த அறிவை மேலும் விசாலமாக்க விடாது பெண்களை சமூகம் எட்டவே வைத்திருந்தது. கல்வி என்பது எட்டாத கனியாகவே பல நூற்றாண்டுகள் பெண்களுக்கு இருந்தது. இடைக்காலத்திலும் ஏன் நவீன காலத்தில் கூட அவர்களை அறிவுத் தேடலில் இருந்து, அறிவியலில் இருந்து பல காலம் ஒதுக்கித்தான் வைத்திருந்தது உலகம்.

சமூகக் கட்டமைப்புகளைத் தாண்டி, அதன் பழமைவாத சிந்தனையை உடைத்து, அறிவியல் ஆய்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உலகத்திற்கு பல நல்ல கண்டுபிடிப்புகளைத் தந்தவர்கள் பெண்கள். அவர்களது எண்ணிக்கை குறைவு தான். ஆனாலும் அவர்தம் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்றால் மாதவம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள் பற்றித்தான் இந்த கட்டுரை அலசுகிறது.

சுவாமி விவேகானந்தருடன் நடத்திய உரையாடலால் ஈர்க்கப்பட்டு, ஜாம்ஷெட்ஜி டாடாவும், அப்போதைய மைசூரு மகாராஜா கிருஷ்ணராஜ உடையாரும் 1909 ஆம் ஆண்டு ஐஐஎஸ்சி என்ற நிறுவனத்தை நிறுவினர். இந்த நிறுவனம், இன்றுவரை, நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகக் கருதப்படுகிறது. ஆசியாவின் முதல் அறிவியல் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் போன்றவர்கள் இந்த நிறுவனத்தை வளர்த்துள்ளனர்.

இந்த முதன்மையான அறிவியல் நிறுவனத்தின் வரலாறு முழுவதும் பெண்கள் இல்லாதது குறிப்பிடத்தக்கது; உண்மையில், இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பெண் ஆராய்ச்சியாளர்கள் அரிதாகவே உள்ளனர். நூற்றாண்டு பழமையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பெண் டீன்கள் அரிதாகவே இருந்துள்ளனர்; இன்றுவரை, நிறுவனத்தின் முடிவெடுக்கும் அமைப்புகளில் (உதாரணமாக, அதன் உள் நீதிமன்றம் மற்றும் கவுன்சில்) மிகச் சில பெண்கள் மட்டுமே அதிகாரப் பதவிகளை வகித்துள்ளனர்.

இன்றும் பெரும்பாலும் ஆண்களைக் கொண்ட ஒரு நிறுவனம், 1933 ஆம் ஆண்டு அதன் முதல் பெண் அறிஞரை வரவேற்றது. அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி கமலா சோஹோனி, இந்த நிறுவனத்தில் ஒரு மாணவியாக அடியெடுத்து வைத்த முதல் பெண்மணியும் ஆவார். இந்தியாவின் முதல் பெண் வேதியியலாளரான கமலா. 1930-களில் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) பயின்று, புரதங்கள் பற்றிய ஆராய்ச்சியில் பங்களித்தார். டாக்டர் கமலா சோஹோனி IISC-யில் மாணவியான கதை ஒரு வியத்தகு கதை என்றே சொல்ல வேண்டும்.; அறிவியலுக்கும் அவரது ஆராய்ச்சிக்கும் அவர் அளித்த பங்களிப்பைப் போலவே இந்தக் கதையும் சுவாரசியமானது.

கமலா சோஹோனி (Kamala Sohonie):
டாக்டர் கமலா சோஹோனி 1912 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். வேதியியலாளர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், இயற்பியல் மற்றும் வேதியியலைப் படிப்பதன் மூலம் தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்ற அவர், ஐ.ஐ.எஸ்.சி வழங்கும் ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெற முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், அப்போதைய ஐ.ஐ.எஸ்.சி.யின் இயக்குநரான சர் சி.வி. ராமன், அவருக்குத் தேவையான தகுதிகள் இருந்தபோதிலும், அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார். பெண்கள் ஆராய்ச்சி செய்யத் தகுதியானவர்கள் இல்லை என்று அவர் கருதியதே இதன் காரணம். 

பொதுக் கூட்டங்களில் பெண்களுக்கு கல்வி கற்பதன் அவசியம் குறித்துப் பேசும் அதே ராமன்தான் அவரை நிறுவனத்தில் சேர்க்க மறுத்துவிட்டார். டாக்டர் சோஹோனியின் தந்தை நாராயண் பகவத் மற்றும் அவரது மாமா இருவரும் IISC-யின் மாணவர்களாக இருந்தனர்; ராமன் அவர்களின் பேச்சையும் கேட்கவில்லை. இறுதியாக, கமலா ராமனின் அலுவலகத்திற்கு வெளியே சத்தியாகிரகம் செய்து, எழுத்துப்பூர்வமாக சேர்க்கை வழங்காததற்கான காரணங்களைக் கூறுமாறு கோரினார். ராமன் அவரை IISC-யில் மாணவியாக சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் அவ்வாறு செய்தார், அதற்கு அவர் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது: முதலாவதாக, ஒரு மாணவியாக அவருடைய முதல் வருடம் ஒரு தகுதிகாண் காலமாக இருக்க வேண்டும், அதாவது, அவர் ஒரு வழக்கமான மாணவியாகக் கருதப்பட மாட்டார். இரண்டாவதாக, அவருடைய நெறியாளர் கேட்கும் போதெல்லாம், அது எந்த நேரமாக இருந்தாலும், வேலை செய்ய அவள் தயாராக இருக்க வேண்டும். இறுதியாக, அவருடைய இருப்பு மற்ற மாணவர்களின் கவனத்தை சிதறடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு 1933 இல் IISC-யில் உயிர்வேதியியல் துறையில் கமலா சேர்ந்தார்.

பின்னாளில், இந்திய மகளிர் விஞ்ஞானிகள் சங்கத்தின் (IWSA) ஒரு கூட்டத்தில் கமலா சோஹானி பேசிய போது, "ராமன் நிச்சயமாக ஒரு சிறந்த விஞ்ஞானி, ஆனால் அவர் மிகவும் அற்பமானவர். நான் ஒரு பெண்ணாக இருந்ததால் அவர் என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தையும், என் மீதான அவரது அணுகுமுறையையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அவர் என்னை ஒரு வழக்கமான மாணவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னபோது நான் வெட்கப்பட்டேன்; அப்போது பெண்கள் மீதான பாரபட்சம் அப்படித்தான் இருந்தது. நோபல் பரிசு பெற்றவரிடமிருந்தே இது வரும்போது, மற்றவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று குறிப்பிட்டிருந்தார். பின்னாட்களில் கமலாவின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்த பிறகு ராமன் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு அவரின் கீழ் பெண்களை ஆய்வாளராக சேர்த்துக் கொண்டார் என்று தெரிய வருகிறது.

2023 இல் ‘அறிவியலில் பெண்கள்’ என்று கொண்டாடச் சொல்லி இருக்கிறார்கள். அது சமயம் வெளியான கட்டுரைகளைப் படிக்கும்போது இராமன் வழியில் பலர் இன்னும் இருப்பது தெரிகிறது. இப்படித்தான் நாம் உண்ணும் இன்றைய சுவை மிக்க கரும்பை தன் ஆய்வுகளால் உருவாக்கியவர் ஜானகி என்ற விஞ்ஞானி. அவரை சாதியின் பெயரால் அவமதித்த கதை வேறு மாதிரி. 

ஜானகி அம்மாள் (Janaki Ammal): 
04.11.1897-இல், கேரளாவின் தலசேரியில் பிறந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தாவரவியல் படித்து, பின்னர் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் (1920-களில்). இந்தியாவில் சர்க்கரை உற்பத்திக்கு உதவும் வகையில் கரும்பு இனங்களின் மரபியல் ஆராய்ச்சி செய்தார். 

1930-களில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி முக்கியமான தொழிலாக இருந்தது. ஆனால், உள்ளூர் கரும்பு வகைகள் குறைவான இனிப்பையே கொண்டிருந்தன. ஜானகி கரும்பு தாவரங்களின் மரபணுக்களை ஆய்ந்து, பல்வேறு கரும்பு இனங்களை கலப்பு செய்து (Hybridization) புதிய வகைகளை உருவாக்கினார். அவர் "சைட்டோஜெனடிக்ஸ்" (தாவரங்களின் உயிரணு மரபியல்) முறையைப் பயன்படுத்தி, கரும்பு தாவரங்களின் குரோமோசோம்களை ஆராய்ந்தார். இதன் மூலம், அதிக இனிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட கரும்பு வகைகளை உருவாக்கினார். இவரது ஆராய்ச்சி இந்தியாவின் சர்க்கரைத் தொழிலை மேம்படுத்தியது. இன்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல கரும்பு வகைகள் அவரது பங்களிப்பின் அடிப்படையிலேயே உள்ளன. கோவையில் உள்ள சர்க்கரை ஆய்வு மையத்தில் பணி புரிந்த போது பல ஆய்வுகளை மேற்கொண்டார். 

அவரது சாதியை வைத்து அவரை பெருமளவில் அலுவலகத்தில் அனைவரும் அவம்தித்தனர். தினமும் மாலை அவர் அமர்ந்து பணி புரிந்த மேசை, நாற்காலியைக் கழுவி விடுவார்களாம். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய தாவரவியல் துறையில், அவருக்கு ஆரம்பத்தில் ஆராய்ச்சி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அவரது ஆராய்ச்சி முடிவுகள் ஆண் விஞ்ஞானிகளால் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் அவர் தனது சொந்த முயற்சியால் புகழ் பெற்றார். 

"சைட்டோஜெனடிக்ஸ்" (தாவரங்களின் உயிரணு மரபியல்) துறையில் முன்னோடியும் இவரே. பல தாவர இனங்களின் மரபணுக்களை ஆராய்ந்தார். குறிப்பாக, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் தாவர அறிவை ஆவணப்படுத்தினார். 

மேலும், ஜானகி அம்மாளின் கத்தரிக்காய் (Brinjal, Solanum melongena) ஆய்வு  முக்கியமாக இந்தியாவில் நடந்தாலும், வெளிநாடுகளில் அவர் செய்த ஆராய்ச்சி இதற்கு அடித்தளமாக அமைந்தது. கத்தரிக்காய் இந்தியாவில் முக்கியமான விவசாய பயிர். ஆனால், பல்வேறு கத்தரிக்காய் இனங்களின் மரபியல் பண்புகள் மற்றும் அவற்றின் பரிணாம உறவுகள் பற்றி அந்தக் காலத்தில் முழுமையான ஆய்வு இல்லை. ஜானகி கத்தரிக்காயின் பல்வேறு உள்ளூர் வகைகளை (Landraces) ஆராய்ந்தார். இதன் மூலம், கத்தரிக்காயின் மரபியல் பன்முகத்தன்மையை அவர் வெளிப்படுத்தினார், இது இந்திய விவசாயத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது. 1977-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை திருமணம் செய்யாமல், ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். 1987-ல், 90 வயதில் மறைந்தார்.

அசிமா சாட்டர்ஜி (Asima Chatterjee): 
1944-ல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். புற்றுநோய் சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்துகள் பற்றி ஆராய்ந்தார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அறிவியல் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அவரது ஆராய்ச்சிக்கு ஆதரவு கிடைப்பது கடினமாக இருந்தது, மேலும் சக ஆண் ஊழியர்களிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கு அதிக முயற்சி தேவைப்பட்டது.

காகபத்ரா மோகன்தாஸ் (Gagandeep Kang):
1962, நவம்பர் 3 இல் ரிஷிகேஷில் பிறந்த இவர், மருத்துவத்தில் பட்டம் பெற்று, பின்னர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜியில் முனைவர் பட்டம் பெற்றார். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டாவைரஸுக்கு எதிரான "ரோட்டாசில்" தடுப்பூசி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இது இந்தியாவில் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியது. தொற்று நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியில் சிறப்பு பெற்றவர். 

2019-ல் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண்ணும் இவரே.. 2020-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியதால், பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படுவது குறைவு. அவரது ஆரம்ப ஆராய்ச்சி முயற்சிகள் ஆண்களால் சந்தேகிக்கப்பட்டன. ஆண் விஞ்ஞானிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், அவரது திட்டங்களுக்கு நிதி கிடைப்பது தாமதமானது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கினார். அவரது பணி உலக அளவில் பாராட்டப்பட்டது. 

ரிது கரிதால் (Ritu Karidhal): 
"ராக்கெட் பெண்மணி" என்று அழைக்கப்படும் ரிது, இஸ்ரோவின் மங்கள்யான் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். விண்வெளி ஆராய்ச்சி ஆண்கள் மையமாக இருந்த துறை. இதில் பெண்கள் நுழைவது அரிதாகவே இருந்தது. ஆண்களின் சந்தேகப் பார்வைகளையும், பெண்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியவர்கள் என்ற மனப்பான்மையையும் மீறி அவர் சாதித்தார்.

டெஸ்ஸி தாமஸ் (Tessy Thomas): 
"ஏவுகணைப் பெண்மணி" என்று அழைக்கப்படுபவர். அக்னி ஏவுகணை திட்டத்தில் முக்கிய பொறியாளராக பணியாற்றினார். பாதுகாப்பு மற்றும் பொறியியல் துறைகள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவை. பெண்கள் இத்தகைய கடினமான துறைகளுக்குப்  பொருத்தமில்லை என்று கருதப்பட்டது. டெஸ்ஸி இந்த மனப்பான்மையை உடைத்து முன்னேறினார்.

பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே என்று ஆண்கள் பல காலமாக நினைத்தனர். அறிவியல் போன்ற "ஆண்களுக்கான" துறைகளில் பெண்கள் நுழைவது எதிர்க்கப்பட்டது. பெண்களுக்கு உயர் கல்வி மறுக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தினர். ஆண் சக ஊழியர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைப்பது கடினம். மேலும், பெண்களின் திறமை சந்தேகிக்கப்பட்டது. திருமணம் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்றவை அவர்களின் ஆராய்ச்சி வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்ட போதும், தங்கள் திறமை, விடாமுயற்சி மற்றும் மன உறுதியால் இந்தப் பெண் விஞ்ஞானிகள் அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு சாதித்தனர். 

இவர்களைப் போலவே பல இந்தியப் பெண்கள் இன்றும் அறிவியலில் பங்களித்து வருகின்றனர். ஆனால் ஆணாதிக்க மனப்பான்மை இன்னும் முழுமையாக மறையவில்லை என்பதே சுட்டெரிக்கும் உண்மை.

காதல் - கௌசல்யா ஞானேஸ்வரன்




தனிமையில் உன்னைத்
தழுவினேன் என்
இமையின் திரை 
மெல்ல விலகியது

இளைப்பாறாமலே
இனிமையாகி
பெருமூச்சின் 
சப்தத்தில் படபடக்கிறாய்

புரட்டப் புரட்ட 
புதுப்புது வார்த்தைகளால் 
மௌனமாய் 
கதைக்கிறாய்

கற்பனையில்
வசீகரிக்க
கதகதப்பாய் 
காட்சியாகிறாய்

உணர்வோடு கலந்து 
உயிரோடு ஊடுருவி 
கண நேரத்தில் 
கவி எழுத வைத்து 
மனதிற்குள் 
மாயம் செய்கிறாய்
 
கவலைகளைத்
துரத்தி
காதலிக்க
கற்றுத்தருகிறாய்

உன்னை நேசித்து
வாசிக்கும் பொழுதெல்லாம்
நான் நானாகிறேன்

அனைத்துலகை ஆளும்
காகித ஜாலம் நீ
அற்புத அதிசய புத்தகமே....!

உறவுகள் - கௌசல்யா ஞானேஸ்வரன்



அந்தி சாயும் நேரம் அடிவானம் தன் நீல நிற வண்ணங்களை மாற்றி செந்நிற ஆடை உடுத்திக் கொண்டது. வெண்மேகம் மெல்ல நகர்ந்து காற்றில் மரங்கள் அசைந்தாடி சில்லென்ற காற்று சிந்தையை கவர்ந்தது. கூடு செல்லும் பறவைகள் விதவிதமாய் ஒலி எழுப்பியபடி சென்று கொண்டு இருக்க, ரசிக்கும்‌ ரம்யமான நேரம் மயக்கும் மாலைப் பொழுதோ என  நினைத்தபடியே அவள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள். அவளின் நினைவுகளும் ஆனந்தமாய் அசைந்தாடியது.

காலை 8 மணி குளியல் அறையில் இருந்து "அம்மா" என சத்தமிட்டாள்.
அவள் அம்மா கோமதி பதட்டத்துடன் என்னமோ ஏதோ என்று  பயந்து கொண்டே "என்னாச்சு கண்ணு" ? என வாஞ்சையாக கேட்க, பூங்குழலி தான்  'பெரிய மனுஷி' ஆகிய விவரத்தை தெரிந்தும் தெரியாமலும் இருந்த பருவத்தில் விவரிக்க,  அவள் அம்மாவோ "இரு உன் அத்தையை வரச் சொல்கிறேன் அத்தையிடம் பேசிக்கொள்"  என்ற ஒற்றை வரியில் பதில் சொல்ல அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவள் அம்மா கோமதி சந்தோசமும், பதட்டமும் ஒன்று சேர அவள் அத்தைக்கு கைபேசியில் செய்தி சொன்னாள். பூங்குழலியின் வீட்டிற்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்தது. அத்தை கவிதா, அவர் கணவர் ரவியுடன் சிரித்த முகத்துடனும், பூரிப்புடனும் தன் அண்ணன் மகள்  'பூப்பெய்திய நற்செய்தி'' கேட்டு ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிட்டாள். பூங்குழலி மேல் மிகுந்த அன்பும் பாசமும் உடையவள்.

"குழலி குட்டி ஒன்னும் பயப்படாதே டா.அத்தை வந்துட்டேன் உன்னைய நல்லா பார்த்துக்கிறேன்" என்று அனைத்து விபரங்களையும் புரியும்  படி சொல்லத் தொடங்கினாள். "மனதையும் உடலையும் தயார்படுத்திக் கொள்ள சத்தான உணவுகளான பழங்கள்,முளைகட்டிய பயிர்,கீரை, எள்ளுருண்டை  போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் அப்போது உனக்குள் இருக்கும் வலி நீங்கி வலிமை மிகும்" என்பதை பக்குவமாய் கூறி அன்போடு, ஆதரவாய் தலை வருடினாள். அறியாமையினால் அலைக்கழிக்கப்படும் பொழுதெல்லாம் அணைத்து ஆசுவாசப்படுத்துவது மிகப்பெரிய சுகம். உரிமை உள்ள உறவுகளின் புரிதல் அதீத சுகம் அதை பூங்குழலி அனுபவித்தாள். 

பூங்குழலி அப்பா ஆனந்த் என்ன செய்வது என்று தெரியாது மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க, கவிதாவும் கோமதியும் அவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று ஒரு 'பெரிய கிளாஸ்' எடுக்க தொடங்கியிருந்தார்கள். தாய் மாமா, அத்தை மற்றும் அனைத்து உறவுகள் கூடவும் வீடு விழாக்கோலம் ஆனது. 

பூங்குழலிக்கு சுற்றங்கள் புடைசூழ இருப்பது மிகப் பிடித்தமான விஷயம். அவள் அப்பாவும்,அம்மாவும் நம் முன்னோர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற சொத்து நம் சொந்தங்கள் என்று அடிக்கடி சொல்லுவதாலோ  என்னவோ மட்டிலா மகிழ்ச்சியடைவாள். 

விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள்வர பூங்குழலி அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. தன் அம்மா நான் பெரியவள் ஆனதும் என்னிடம் எந்த விவரத்தையும் கேட்காமல், சொல்லித் தராமல், அத்தையை ஏன் அழைத்தாள் என்ற கேள்வி.

பூங்குழலி நன்றாக படிக்கக் கூடியவள். அப்பா, அம்மாவின் பேச்சைக் கேட்டு நடக்கும் அன்பான பெண். எல்லா உறவுகளிடம் மிகுந்த பாசமாக இருப்பாள் அத்தையிடம் கொஞ்சம் கூடுதல் பாசம். மேற்படிப்பு படிக்க, யாரிடமும் கேட்க தயங்குகிற விஷயத்தை அவள் அத்தையிடம் பகிர்ந்து கொள்வாள். அவள் அத்தையும் பருவத்தில் வரக்கூடிய சந்தேகங்களான 'காதல்' பற்றி அழகாய் கூறுவாள். 'இருவர் சேர்ந்து ஒருவருக்காய் செய்யும் உயிர்த்தியாகம் காதல்' என்பார். காதல் கற்பனை செய்ய முடியாத தூரத்தில் இல்லை அது நம்முடன் தான் பயணம் செய்கிறது. ஆனால் அது ஆற்றல் தருகிறதா, அல்லது நம்மைத்  தடுமாற வைக்கிறதா, என்று கவனித்து கடிவாளம் இட்டு அடக்கக் கற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்' என்பார்.

"அறிவு ஆளும் போது தெளிவு பிறக்கும்ண்டா. இந்த வயசுல சில பேர் நம்ம மேல தப்பா பார்த்தாங்கன்னா அதை நாம கண்டுக்காம விட்டுட்டு நம்ம வேலையை பார்க்கணும். கொஞ்சம் அதிகப்படியா நமக்கு தொந்தரவுனு தெரிஞ்சதுனா நம்ம அப்பாகிட்ட பயப்படாம சொல்லணும்'.என்று சொல்லி நம்பிக்கையூட்டுவாள்.

தெளிவான பெண்ணான பூங்குழலி. தன் கல்லூரி மேற்படிப்புகளை முடிக்கவும் நல்ல வரன் அமையவும் சரியாக இருந்தது. திருமண பேச்சு எடுத்த உடன் இப்போதே எனக்கு திருமணமா 'கொஞ்ச நாள் ஆகட்டுமே' என்று சொல்ல.. அவள் அப்பாவும் அம்மாவும் எத்தனையோ விளக்கம் கொடுத்தாலும், அவள் அத்தை, பூங்குழலிக்கு கொடுத்த விளக்கம்-  "விடியல் அறியாமலா சேவல் கூவும். அப்பா அம்மாவுக்கு உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அல்லவா? விதைகள் செடியாகி மரமாகும். பின்பு பூக்கள் பூத்து, பிஞ்சாகி,காயாகி கனியாகும்.எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருப்பது போல திருமணத்திற்கான காலம் இது" என்று பொறுமையாய் எடுத்துரைக்க, அளவீடுகள் இல்லா ஆத்மார்த்தமான அன்பில் அடிபணிந்தாள் பூங்குழலி.

அழகிய பண்பாளன் ஆகாஷ் பூங்குழலி திருமணம் இனிதே நடந்தது. அப்போதும் மணப்பெண்ணின் தோழி அத்தைதான். புகுந்த வீட்டிற்கு சென்ற பூங்குழலி தன் மாமனார் மாமியாரிடம் மிக இயல்பாக அத்தை, மாமா என்று உறவாட அவர்களும் தங்களுக்கு பெண் பிள்ளை இல்லை என்ற ஏக்கம் பூங்குழலியால் தீர்ந்தது என்று கொண்டாடி மகிழ, சகஜமாக அவர்களோடு ஐக்கியமானாள் பூங்குழலி. அவள் கருவுற்ற செய்தியை கேட்டு அனைவரும் அளவளாவிய சந்தோசம் அடைந்தார்கள்.

ஏழாம் மாதம் வளைகாப்பு மிக விமர்சையாக நடந்து தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட பூங்குழலிக்கு. அவள் அம்மாவும் அவள் மனம் வாடாத படி பார்த்துக்கொள்ள ஆகாஷ் ஆதரவாக இருந்தாலும் அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.

அவள் அத்தை உடல் வலுப்பெற சத்தான திட்டமிட்ட உணவையும், மனோபலம் வலுப்பெற ஒவ்வொரு உயிரினங்களும் தன் பரம்பரை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியை அழகாய் விவரிக்க, பூங்குழலி கூர்மையானாள்.
அந்த அழகிய நாளும் வந்தது சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அனைவரும் ஆனந்தம் அடைந்தார்கள்.

தன்னுள் உறங்கிய உணர்வுகள் உயிர் கொண்டு புதிதாய் பூத்ததோ என பூங்குழலி அகம் மகிழ்ந்து அள்ளியணைத்தாள் மழலையை. ஆகாஷின் கரங்கள் இணக்கமாய் அவளை தழுவிக் கொண்டது.

"அம்மா................... அம்மா" 

பூங்குழலியின் ஐந்து வயது மகள் இதழிகா அவளை அழைக்க, தன் நினைவுகளில் இருந்து மீண்ட பூங்குழலி  "இதழிகா குட்டி வாடா, வா வா.. பாட்டி தாத்தாவிடம் விளையாடி முடித்து விட்டாயா" என்று கேட்டுக்கொண்டே அவளைத் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

தன் அம்மா அத்தையிடம் ஏன் பொறுப்பை ஒப்படைத்தாள் என்ற கேள்விகளுக்கு  ஓராயிரம் விடை கிடைக்கப்பெற்றதாக நினைத்தாள்.
தன் அம்மா, தன்னை அத்தையிடம் பழக வைத்தது தான் புகுந்த வீட்டிலும் சிரமம் இல்லாமல் இருக்கத்தானோ? சிறு வயது முதலே பக்குவப்பட தன்னை பழக்கப்படுத்திய அம்மாவை நினைத்து பெருமைப்பட்டாள் பூங்குழலி.

உறவுகள் மிகப்பெரிய வரம். உறவுகளோடு  வாழப் பழகாத பெண்கள்  இறுக்கம் கூடி வாழ்வின் ஞானம் இல்லாமலேயே  வாழ்வை வாழத் தெரியாதவர்கள் ஆகிறார்கள். உறவுகள் இல்லா வாழ்க்கை அமைதி தான், ஆனால் இடுகாட்டின் அமைதி. பூ என்பது காம்பையும் சேர்த்து தான்.  நாள் என்பது இரவு, பகல் இரண்டும் தான். வாழ்க்கை என்பது சிரிப்பு, அழுகை  பாசம் பகைமை, எல்லாம் கலந்த கலவை தான்.  அந்த உறவுகள் இல்லாத குடும்பங்கள் அழுத்தம் மிகுந்து இறுதியில் சிதிலமடைகிறது. 

எண்ண ஓட்டங்களில் அமிழ்ந்திருந்த பூங்குழலியின் கவனத்தை இதழிகா குட்டியின் கரங்கள் கடிவாளம் போட்டது. வாஞ்சையாய் அம்மாவின் முகம் பார்த்த இதழிகா குட்டியை ரசித்து "உனக்கு ஒரு அத்தை இல்லையே" என்று பூங்குழலி அங்கலாய்த்தாள். இதைக்கேட்டபடியே அப்போதுதான் வேலை முடித்து வந்த அவள் அன்பு கணவன் ஆகாஷ்  "அத்தை இல்லேன்னா என்ன , இதழிகா குட்டியை அக்கா ஆக்கிடுவோமா" என்று சிரித்தபடியே கண் சிமிட்டினான். பூங்குழலி கன்னம் சிவக்க, குழந்தையின் கன்னத்தில் இருவரும் முத்தத்தைப் பரிசளித்தார்கள். வாழ்க்கை அவர்களைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தது.