காசி பார்க்கப் போறோம் (பகுதி 4) - யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 4) கயாவில் என்ன செய்தோம்****

அலகாபாத்திலிருந்து கிளம்பி மீண்டும் பேருந்தில் பயணத்தைத் தொடங்கினோம். நேரு பிறந்த இடத்துக்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு அமையவில்லை. அங்குள்ள சாலைகள் பழுது பார்த்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து வசதி இல்லை என்று எங்கள் வழிகாட்டி தெரிவித்தார்.

பேருந்து கயாவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. தேநீர் கடையில் நின்றிருந்த பெண்மணி, “சாயா பாஞ்ச் ரூபே” என்றார். மண் டம்ளரில் தேநீர் ஊற்றித் தந்தார். பிளாஸ்டிக் கப், பேப்பர் கப் போன்றவற்றைத் தவிர்த்திருந்தது பாராட்டுக்குரியது. நம் ஊர் கடைகளிலும் இந்த மண் டம்ளர் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தோன்றியது. இந்தக் கடையில் மட்டும் தேநீர் விலை பத்து ரூபாய். குறைந்த விலையில் சுவையான தேநீர் அருந்திய திருப்தியுடன் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இரவு 11.45 மணிக்கு விடுதிக்குச் சென்று சேர்ந்தோம். அறைக்குச் செல்லும் முன் ஜெயகுமார் சார் எங்களை அழைத்து, “காலையில் பிண்டதானம் கொடுக்கச் செல்கிறோம். அதனால் விரைவில் குளித்து தயாராகி வாருங்கள். காலை உணவை முடித்து கிளம்பலாம்” என்றார்.

அறைகள் வசதியாக இருந்ததால் நாங்களும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டோம். காலை ஏழு மணிக்கு அனைவரும் தயாராகி காலை உணவை முடித்து மீண்டும் பேருந்தில் பயணித்தோம். செல்லும் வழி எங்கும் செங்கல் சுவர்களுடன் கூடிய கட்டிடங்கள், வெளிப்புற சிமெண்டு பூச்சே இல்லாமல் நின்றன. காரணம் என்ன என்று வழிகாட்டியிடம் கேட்டபோது,

“சிமெண்டு பூச்சு பூசினால் வரி கட்ட வேண்டும். கட்டிடம் முழுமை பெற்றால்தான் வரி விதிக்கப்படும். அதனால் மக்கள் கட்டிடங்களை முழுமையாக முடிப்பதில்லை” என்றார். வரி கூட கட்டயியலாத வறுமை நிலையில் அந்த மக்கள் இருக்கிறார்கள்.

இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் விவசாயத்தை விட சுற்றுலாவை அதிகம் சார்ந்துள்ளது. வழியெங்கும் மூங்கில் மரங்கள் தென்பட்டன. தென்னை மரங்கள் ஒன்றையும் காண முடியவில்லை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் சாணி வரட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவர்களில் வரட்டி தட்டிய அடையாளங்களும் காணப்பட்டன. இவ்வாறு வேடிக்கை பார்த்துக்கொண்டே கயாவைச் சென்றடைந்தோம்.

கோயிலுக்கு அருகே பேருந்து செல்ல இயலாததால் அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐந்து முதல் எட்டு பேர் வரை அமர்ந்து செல்லும் வசதியுள்ள ஆட்டோக்கள் அதிகமாக இருந்தன. ஒருவருக்கு கட்டணம் முப்பது ரூபாய், திரும்பி வரவும் அதே தொகை. இதுவே அதிகபட்ச கட்டணம். பெரும்பாலும் பேட்டரி ஆட்டோக்கள்தான் இயங்கின.

தற்போதைய விஷ்ணுபாத் கோயில் கி.பி. 1787-ஆம் ஆண்டு இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் அவர்களால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. கயாசுரன் என்ற அசுரனிடமிருந்து வந்த பெயரே கயா என்றும், விஷ்ணு தன் பாதத்தால் அவனை அடக்கியதால் இந்த இடம் விஷ்ணுபாத் கோயிலாக விளங்குகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

கயாவில் பிண்டதானம் செய்தால் பித்ருக்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நாங்கள் படிக்கட்டுகள் ஏறி சமதளத்தில் நடந்து கோயிலின் உள்ளே நுழைந்தோம். நூறு அடி உயரமுள்ள கோபுரம் பிரம்மாண்டமாகத் தெரிந்தது.

பிண்டதானம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்தவர்களை சடங்குகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்று வரிசையாக அமர வைத்தார்கள். இங்கு சடங்குகளைச் செய்யும் புரோகிதர்கள் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக இந்தப் பணியை செய்து வருகிறார்கள் என்று வழிகாட்டி கூறினார்.

புரோகிதர் மந்திரங்களைத் தெளிவாகச் சொல்லி, கலந்து கொள்பவர்களையும் திரும்பச் சொல்ல வைத்து வழிபாட்டை நடத்தினார். இறந்த முன்னோர்களின் ஆன்மா அமைதியடைய கயாவில் பிண்டதானம் செய்வதன் சிறப்பைச் சொல்லி விளக்கினார்.

இறந்த நெருங்கிய உறவினர்களுக்குத் திதி கொடுக்கும்போது (கணவன், மனைவி, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள்…) ஒவ்வொருவராக வரிசையாகச் சொல்லச் சொல்ல, சிலரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. திதி கொடுத்த பிறகு, நமக்குப் பிடித்த காய்கள், பழங்கள், இலைகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விடச் சொல்லி புரோகிதர் கூறுகிறார். (இந்தப் பிண்டதானத்தில் கலந்து கொள்ளாதவர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களை விட வேண்டியதில்லை.)

அதன் பிறகு பிண்டங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம். அங்கே கல்பாறையின் மீது ஒற்றைக் கால்தடம் பதித்து இருந்த விஷ்ணுவின் பாதத்தில் கொட்டி விட்டு, அவரின் பாதம் தொட்டு வழிபட்டு வெளியே வந்தோம். இங்கு பல கோயில்களில் விஷ்ணுவும் சிவனும் ஒரே வளாகத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிண்டம் செலுத்தி வந்த  பிறகு, வழிபாட்டுக்குப் பயன்படுத்திய நீரையும், பிரசாதமாகக் கொடுத்த வாழைப்பழத்தையும் எடுத்துக்கொண்டு, கோயிலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு செய்து, அந்த நீரை மரத்திற்கு ஊற்றி, வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொன்னார் புரோகிதர்.

பித்ரு பூஜை முடித்து நாங்கள் வணங்கிய ஆலமரம் நித்திய பலன் தருவதாக நம்பப்படுகிறது. அதற்கான ஒரு கதையும் கூறினார்கள்.  ராமாயண காலத்தில் தசரத மஹாராஜா மோட்சத்திற்கு செல்வதற்காக பிண்டம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ராமர், இலக்குவன் அங்கேயில்லை. அவர்கள் வர காலதாமதமாகிறது, தசரதர், சீதையிடம் நீயே எனக்கு பிண்டம் வை, எனக்கு உடனே மோட்சம் போக வேண்டும் என்னால் இங்கே இருக்க முடியவில்லை  என்று கேட்டுக் கொண்டதால், சீதாதேவி, தசரதருக்கு பிண்டம் வைத்து விடுகிறார். தசரதர் மோட்சம் சென்று விடுகிறார். திரும்பி வந்த ராமர், சீதையிடம் நான் வருமுன் நீ ஏன் பிண்டம் வைத்தாய்? என்று கேட்க, சீதாதேவி, தசரதர் கேட்டுக் கொண்டதால் தான் பிண்டம் வைத்தாக கூறுகிறார். அதை நம்ப மறுக்கிறார் ராமர். சீதா அங்கிருந்த துளசி செடியை உதவிக்கு அழைத்துக் கேட்க, நான் பார்க்கலை என்று துளசி செடி பொய் சொல்லி விடுகிறது. பல்குனி நதியிடம் கேட்க அதுவும் நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்லி விடுகிறது. அங்கிருந்த ஆலமரம் மட்டும் நடந்த உண்மைகளை சொல்கிறது. ராமர் சமாதானம் அடைகிறார் என்று விளக்கினார்கள். அதனால்,  கணவரை இழந்த பெண்கள்  தங்கள் கணவருக்கு இங்கே பிண்டதானம் கொடுக்கலாம் என்று கூறினார்கள்.

பொய் சொன்னதால் இந்த ஊரில் துளசி செடி வளர்வதில்லை என்றும், பல்குனி ஆற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் முழங்கால் அளவுக்கு மேல் நீர் உயர்ந்ததில்லை என்றும் வழிகாட்டி கூறினார். இங்கு விஷ்ணுவின் பாதம் மட்டுமே  வழிபடப்படுகிறது. கோயிலின் உள்ளே கைப்பேசி அனுமதி இல்லை.

வழிபாடு முடிந்தபின் அங்கிருந்து கிளம்பி அறைக்கு வந்து மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். அதன் பின்னர், எங்களை 80 அடி உயர புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இந்தச் சிலை Great Buddha என்று அழைக்கப்படுகிறது. 1982-ல் கட்டுமானம் தொடங்கி, 1989-ல் 14-ஆம் தலையங்கமான தலாய் லாமா அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் உயரமான சிலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.

பெரிய புத்தர் சிலை அழகும் அமைதியும் நிறைந்த ஆன்மீக அனுபவத்தை வழங்கியது. புத்தரின் முக்கியமான பத்து சீடர்களின் சிலைகளும் அங்கே நிறுவப்பட்டிருந்தன. கோயிலைச் சுற்றிலும் பசுமையான மரங்கள், செடிகள், கொடிகள் இன்னும் அழகாக காட்சியளித்தன.

கோயிலுக்கு வெளியே வந்ததும் வணிகக் கடைகளில் புத்தர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பாசி மணிமாலைகளும் கிடைத்தன. முதலில் விற்கும் பொருட்களுக்கு அதிக விலை சொல்வார்கள், குறைத்துக் கேட்டாலும் கொடுக்கிறார்கள்.

பொருட்களை கைகளில், வைத்துக் கொண்டு விற்பனை செய்பவர்கள் விற்பனை இல்லாத சூழலில் “சாப்பிட ஏதாவது கொடுங்கள்” என்று இரந்து கேட்கிறார்கள். அவர்களின் வறுமை  மனதை கனக்க வைத்தது. எங்கள் கையில் இருந்த கடலை மிட்டாயைக் கூட வாங்கிக்கொண்டு ஓடும் சிறுவர்களை நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டே அவ்விடத்தை விட்டு கிளம்பினோம்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் படித்த புத்தர் ஞானம் பெற்ற இடத்தை பார்க்கப் போகும்  ஆவல் எங்களுக்கு அதிகமாக மேலிட்டது. புத்தர் வரலாற்றுப்படி கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் அவர் கயாவிற்கு வந்து ஞானம் பெற்றார் என்று வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அசோகர் காலத்துக்கு முன்பே பௌத்த மதம் தோன்றியிருந்தாலும், அசோகர் காலத்தில் தான் அது அரசு ஆதரவுடன் உலக அளவில் பரவி வளர்ந்தது என்று வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாபோதிக் கோயில் சார்ந்த பகுதிகள் 2002- ல்UNESCO உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பௌத்த வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் இந்த இடம் முக்கிய பங்காற்றுகிறது. நாங்கள் சென்றிருந்த நேரத்தில் உலகெங்கிலும் இருந்து வந்த புத்த பிட்சுகள் அங்கே கூடி இருந்தார்கள்.

மஹாசூத்திர வாசிப்பு மஹாபோதிக் கோயிலில் நடைபெற்று வந்தது. புத்த பாரம்பரிய நூல்கள் முழுவதையும் வாசிக்கும் நிகழ்ச்சி அது. பலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு மைக்கில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான புத்த பிக்குகள் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

நாங்கள் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டே புத்தர் ஞானம் பெற்ற மஹாபோதிக் கோயிலுக்குச் சென்றோம். அங்கே நின்றவர்களின் வரிசையில் நாங்களும் நகர்ந்து கோயிலினுள் நுழைந்தோம். கோயிலின் உயரம் 55 மீட்டர். இது இந்தியாவில் பழமையான முழுமையான செங்கல் கோயில் கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அசோகர் காலத்தில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் சிறிய ஆலயமாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் குப்த பேரரசு காலத்தில் (5–6 ஆம் நூற்றாண்டு) இன்றைய வடிவில் கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. கருப்பு பாசாணக் கல்லில் பால பேரரசுக் காலத்தில் புத்தர் சிலை உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோயிலினுள் நுழையும் போதே மனதுக்குள் அமைதியும் அன்பும் பரவுவதை உணர முடிந்தது. புத்தரின் சிலை தங்கத்தால் வடிக்கப்பட்டது போல் பாதிக் கண்களை மூடிய நிலையில் சாந்த சொரூபமாக இருந்தது. அவரது கண்களில் பேரமைதி பிரதிபலித்தது. சிலையை வணங்கி வெளிச்சுற்றுப் பிரகாரத்தைச் சுற்றினோம். புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் போதிமரம் அங்கே மிகப் பெரியதாக, கிளை பரப்பி தடிமனாக வளர்ந்து நின்றது.

வெளிநாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான புத்த பிட்சுகள் அமர்ந்தும், நின்றும் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பிரகாரம் சுற்றிய இடங்களில் நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நமஸ்காரம் செய்யும்போது கைகளுக்கும் முழங்கால்களுக்கும் துணிகளை வைத்து மீண்டும் மீண்டும் படுத்து எழுந்து வணங்கினார்கள். பலமுறை இவ்வாறு செய்வதால் கைகால்களுக்கு வலி வராமல் இருக்கத் துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். நமஸ்காரம் செய்வதை மரியாதை, கருணை மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வணக்கமாக கருதுகிறார்கள். நாங்களும் போதிமரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தோம்.

இங்கே புத்த பூர்ணிமா, உலக அமைதி பிரார்த்தனை, திபெத்திய பௌத்த விழா, பிக்குகள் தானம் பெறும் நாள் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த விழாக்களில் கலந்து கொள்ள உலகெங்கிலுமிருந்து பௌத்தமதத்தை சார்ந்தவர்கள், துறவிகள் வருகிறார்கள் என்று செய்திகள் பகிர்கின்றன.  இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும்  இங்கே இருக்கும் புத்தர் இருப்பிடம் குறித்த சர்ச்சைகளும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை நாம் செய்திகளில் கேட்டும் வாசித்தும் வருவது நினைவுக்கு வந்தது.

கயாவின் சுற்றுலா அனுபவங்களை நிறைவாகக் கொண்டு அங்கிருந்து கிளம்பி அறைக்கு வந்தோம். இரவு உணவை முடித்துவிட்டு....

இனி நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் காசிக்குப் போகலாமா?

தொடரும்…

காசி பார்க்கப் போறோம் (பகுதி 3) - யசோதா பழனிச்சாமி

****(பகுதி 3) சங்கமக் கூடலில் நீராடல்****

 நாங்கள் இறங்கிய பிரயாக்ராஜ் ரயில் நிலையம் ஈரோடு ரயில் நிலையத்தை விட பெரியதாக இருந்தது. வண்ண மின் விளக்குகளில் ஒளிர்ந்தது. விடியற்காலை நேரம் என்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக இல்லை. எதிரே பார்ப்பவர்கள் எல்லாம் ஸ்வெட்டர் குல்லா அணிந்து உடலின் குளிரைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கிருந்த நீளமான நடைபாதையில்  ட்ராலியை இழுத்துக் கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே  வந்தோம். எங்களை ஏற்றிச் செல்வதற்கு  பேருந்து தயாராக காத்திருந்தது. ரயில் நிலையத்திலிருந்து, எங்கள் அனைவரையும் ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். 

நாங்கள் சென்ற விடியல் நேரத்தில், அந்த மண்டபத்தில்  சாரட் வண்டி ஒன்று அலங்காரத்துடன் நின்றிருந்தது.  நம்ம ஊரில் சாரட் வண்டி கிடையாது என்பதால் ஆச்சரியமாக பார்த்தோம். அருகே நின்றிருந்த மணமக்களின் அலங்காரங்களையும் சிலாகித்து பேசியபடியே  எங்கள் லக்கேஜ்களை இழுத்துக் கொண்டு நடந்தோம். எங்களுக்கு தங்கும் அறை முதல் மாடியில். இரண்டு மணி நேரத்தில்  தயாராகிவிடுங்கள்’ என்று ஜெயகுமார் சார் அறிவித்தார். 

நாங்கள் அறைக்குச் சென்று பல் துலக்கி, கை, கால்கள் கழுவி இரண்டு மணி நேரத்தில் தயாராகி வெளியே வரவும்  சூடான காபி கொடுத்தார்கள். அந்த நேரத்து குளிருக்கு இதம் சேர்த்தது.  காலை உணவாக பொங்கல், வடை, ஒரு ஸ்வீட்டுடன்   உணவை  முடித்து விட்டு,  திரிவேணி சங்கமத்தில் குளிப்பதற்கு வேண்டிய ஒரு செட் டிரஸ் மட்டும் எடுத்து கொண்டோம். போன் எடுத்து வரலாம் என்றார்கள். நமக்கு வரலாறு முக்கியமாச்சே அதனால் மறவாமல் போனை எடுத்துக் கொண்டோம். 

கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்கு புலப்படாத சரஸ்வதி நதி சந்திக்கும் கூடலில் சென்று  மூழ்கி எழுந்து வருவதுதான் இன்றைய திட்டம். நாங்கள் திரிவேணி சங்கமம் சென்றடைந்ததும், அங்கேயிருந்து நதிகள் கூடும் இடத்திற்கு படகில் செல்வதற்கு வாடகை பேசி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

 எங்கள் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக பூ வாங்கிட்டு போங்க என்று தமிழ், மற்றும் இந்தியில் வியாபாரிகள் அழைத்தது நம்ம ஊர்  கோவில் வியாபாரங்களை நினைவு படுத்தியது. விற்பனையாளர்களிடமிருந்து தப்பித்து, படகருகே வந்தோம். சகதியாய் இருந்த கருப்பு நிற மண் வழுக்கி விடாமல் நிதானமாக ஒருவர் கைப்பிடித்து ஒருவராக படகில் ஏறிக் கொண்டோம்.

படகு கிளம்பிச் சென்று சிறிது தூரத்தில் எங்களைச் சுற்றிலும் அழகான பறவைகள் நிறைய பறந்து கொண்டிருந்தன. கால்கள், மூக்கு நீளமாக புறாவை ஒட்டிய வெண்மை நிறத்தில் அந்தப்பறவைகள் காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சீசனில் சைபீரியா, ரஷ்யா, போலாந்து போன்ற நாடுகளிலிருந்து  இனப்பெருக்கத்திற்காக அந்த இடத்திற்கு வரக்கூடிய பறவைகள் என்று அறிந்துகொண்டேன். 

 எங்கள் படகை ஒட்டி வந்த வேறொரு படகிலிருந்தவர் காரச்சேவு அடைத்த பாக்கெட்களை விற்பனை செய்தார். அந்தக் காரச்சேவுகளை வாங்கியவர்கள் கவரைப் பிரித்து காரச்சேவுகளை ஆற்றில் வீசினார்கள்.

கூச்சலிட்டபடியே கூட்டமாக வந்த பறவைகள், தண்ணீரில் மூழ்கி தன் அழகிய கால்களால் காரச்சேவுகளை எடுத்துச் சென்றன. ஆனால், தினமும் இவ்விதமான உணவுகளை வாங்கிப் போட்டால், வேறு இடங்களில் சென்று உணவு தேடும் வழக்கத்தை பறவைகள் மறந்து போகுமே. அதுக்கும் வியாதிகள் வருமே என்ற ஆதங்கம் எனக்குள் மேலிட்டது.

நேரம் செல்லச் செல்ல நாங்கள் அமர்ந்திருந்த படகிற்கு அருகே இன்னும் சில படகுகளும் மிதந்து வந்தன.  இட்லி, சுக்கு காபி, சுண்டல் என்று நமக்குத் தேவையான உணவுகளையும்  படகுகளிலேயே எடுத்து வந்து ஆற்றிலேயே விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் அவர்கள்!  

இந்தக் காட்சிகளையும் ஆற்றின் நீரையும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே கங்கா, யமுனா, சரஸ்வதி என்று மூன்று நதிகளும் சங்கமிக்க கூடிய இடத்தை அடைந்தோம். 

நீராட வருபவர்கள் நீரில் மூழ்க வேண்டிய இடத்தில் இரண்டு பக்கமும் இரண்டு படகுகளை நிறுத்தி நடுவில் ஒரு தடுப்புக் கயிறு கட்டி இருந்தார்கள். அதற்குள் ஒரு சின்ன பலகை இருந்தது. அந்த இடைவெளியில் ஒவ்வொருவராக இறங்கி அந்த பலகையின் மீது நின்று தண்ணீரில் மூழ்கி எழ வேண்டும்.

 அந்த இரண்டு படகுகளுக்கிடையே இறங்கும் பொழுது தடுமாற்றம் இருந்தது. காரணம் அங்கே இறங்கக்கூடிய இடத்தில் படிக்கட்டுகள் எதுவுமே இல்லை.   நீரில் இறக்கி விடுவதற்கு என இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் கையைப் பிடித்துதான் நாம் நீரின் உள்ளே இறங்க முடிகிறது.  இறங்கி மூழ்கி எழுந்ததும் அவர்களே கைபிடித்து மேலே ஏறவும் உதவி செய்கிறார்கள்.

 கை பிடித்து தூக்கி விடுபவர்களுக்கு தனியாக ரூபாய் வாங்குகிறார்கள்.   கங்கா, யமுனா, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் நீராட வேண்டும் என்ற என் கனவு அன்று நிஜத்தில் நடந்தேறியது. நீரில் இறங்கி அந்த நதிகளின் சங்கமத்தில் மூழ்கி எழும் போது நன்றியைத் தவிர என் மனம் வேறு எதுவும் உரைக்கவில்லை.

 படகிலிருந்து மீண்டும் கரைக்கு வந்தோம். தம்பதிகளாய் வந்திருந்தவர்கள் வேணிதானம் எனும் சடங்கில் கலந்து கொள்ளச்  சென்றார்கள். இந்தச் சடங்கு புரோகிதர் மந்திரம் சொல்ல மூன்று நதிகளின் சாட்சியாக, அங்கு  கணவன், மனைவிக்கு தாலி காட்டுகிறார். இந்த பந்தம் அடுத்தடுத்த பிறவிகளிலும் நீட்டிக்க வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு செய்வதாக கூறினார்கள். இந்த நிகழ்வில் பெண்கள் பூ முடி தானம் தருகிறார்கள். அறுபது வயதைக் கடந்த மணமக்களுக்கு நாங்களும் அட்சதை போட்டு ஆசி பெற்று விட்டு,  அங்கிருந்து பிற இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

நதிகளை ஒட்டியே, பாபர் காலத்தில் கட்டப்பட்ட, பாபர் கோட்டையின் மதில் சுவர்களில் பாசமேறிய செங்கற்கள் பல நூற்றாண்டுகளுக்கு சாட்சியாய் நின்றிருந்தது. சுற்றுலா வந்தவர்களை ஏற்றிச் செல்ல ஒட்டகங்களை அழகு படுத்தி  சவாரிக்காக  ஒட்டக ஓட்டிகள் காத்திருந்தார்கள். பாசிமணிகள்,  குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்,  சுற்றுலா பைகள் என விற்பனை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.

 சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டிற்காக மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய பேக்டரி வாகனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் படகில் சென்ற நதியின் அழகை அருகே நின்று ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில், வேணிதான பூஜை முடிந்தது எல்லோரும் கிளம்புகிறார்கள் நீங்க வாங்க என்று பாப்பாத்திக்கா அலைபேசியில்  அழைத்தார். நாங்கள் அவ்விடத்தை விட்டு நகரும் போது, அங்கே  தள்ளுவண்டியில் வைத்திருந்த கொய்யாபழம்  ஆரஞ்சு பழ சைசில் இருந்தது. பழத்தை பார்த்ததுமே வாங்க வேண்டும் என்ற உணர்வு உந்தியது. உடனே கொய்யாப்பழத்தை வாங்கி, துண்டு போட்டு, மிளகாய் பொடி, உப்பு தூவி வாங்கி கொண்டோம்.  நம்ம ஊரு கொய்யாவின் சுவையை விட ,  அதிகப்படியான சுவையில்  இருந்தது. இன்று வரை அந்தக் கொய்யாப்பழத்தின் சுவை குறித்து சிலாகித்து பேசுகிறோம்.

 அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் பாபருடைய கோட்டைச் சுவற்றை ஒட்டிய பஞ்சவாடி ஆஞ்சநேயர் கோயில். நம் ஊர் கோவில் திருவிழாக்களில் அக்னிச்சட்டி எடுத்தல், தீர்த்தம் செலுத்துதல், காவடி செலுத்துதல் போல், அவர்கள்  ஒரு நீளமான மூங்கில் கம்பில் ஆரஞ்சு நிற ஜிகினா கொடியைச்  சுற்றி,  ஆரேழு பேர் சேர்ந்து, அந்த மூங்கில் கம்பை படுகிடையாக தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் முன்னே மேளதாளத்துடன் ஆண்களும், பெண்களும் பாட்டு பாடி நடனமாடியபடி  வந்தார்கள். அவர்களுடன் வந்திருந்த சிலர் இனிப்புகள் நிரம்பிய பெரிய  பாத்திரத்தை  தலையில் தூக்கி  கொண்டு சென்றார்கள். கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் சிறு அட்டைப்பெட்டியில் இனிப்புடனே வந்தார்கள்.

 ஆடல்,பாடல், ஆர்பரிப்பு என்ற கூட்டத்தோடு நாமும் அவர்களுடன் குதுகலமான மனநிலைக்கு மாறி விடுகிறோம். கோவிலின் கருவறையின் உள்ளே பாதாளத்தில் படுத்தநிலையில்  ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நாம்  படிக்கட்டு வழியாக கீழ் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். ஆஞ்சநேயரை மறைக்கும் அளவுக்கு துளசிமாலையும், நம்ம ஊரில் துலுக்கமல்லிப் பூ என்று சொல்லக்கூடிய  மாலைகளும் நிறைந்து இருந்தன. அவர்கள் கொண்டு வரும்  இனிப்பு வகைகளை  ஆஞ்சநேயர் சிலை அருகே வைத்து கும்பிட்டு எடுத்து வருகிறார்கள். அந்த மூங்கில் கம்புகளை வெளிப்பிரகாரம் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள்.  நாங்களும் பாதாள ஆஞ்சநேயரை மனமுருக  வழிபட்டுவிட்டு வெளியில் வந்தோம். ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமன் என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. 

 ஆஞ்சநேயரை வழிபட்டு பேருந்தில் ஏறி, நாங்கள் தங்கும் விடுதிக்கு வந்தோம். சூடான உணவு, வடை பாயாசம் சாம்பார் என  மதியம் சுவையான உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சக்திதேவி பீடம் கோவிலுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள். 

கோவிலில் உருவவழிபாடு இல்லை டோலி வழிபாடு. நீளமாக மரத்தில் தொங்கவிடப்பட்ட  ஊஞ்சல் இருக்கிறது. அதைத்தான் வழிபடுகின்றனர். பிரகார தெய்வங்களாக ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட சிலைகள் இருந்தன. அங்கே தரிசனம் செய்து முடித்து அறைக்கு வந்தோம். பிறகு, அந்த மண்டபத்தில் இருந்து கிளம்பி கயா செல்ல பயணப்பட்டோம். 

கயாவில் நாங்கள் என்ன செய்தோம்? 

(தொடரும்)


காசி பார்க்கப் போறோம் (பகுதி 2) - யசோதா பழனிச்சாமி

**** (பகுதி 2) எங்கள் குழுவினர் சந்திப்பும் இரயில் பயணமும்****

ஈரோடு ரயில் நிலையத்தில் வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் எங்களோடு  உஷா என்ற பெண்மணியும் இணைந்து கொண்டார். அங்கிருந்து ஜோலார்பேட்டை நிறுத்தத்தில் இறங்கி பெங்களூர் டூ பனாரஸ் ட்ரெயினில் அலகாபாத் என்று சொல்லப்பட்ட பிரயாகைக்கு போய் இறங்குவதுதான் எங்களுடைய பயணத்தின் முதல் திட்டம். 

ஈரோட்டிலிருந்து  நாங்கள் ஆறு பேர் சென்றோம். எங்களைக் காசிக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்கள் சேலத்தில் இருந்தார்கள். ரயில் சேலம் சென்றடைந்தும்  எங்களுடன் பயணிக்க கூடிய மீதமுள்ள 26 பேரும் சேலத்தில் ரயில் ஏறினார்கள். எங்களை அழைத்துச் செல்லும் நிர்வாகி ஜெயக்குமார் சாரை அப்போதுதான் நேரில் சந்திக்கிறோம்.அவருக்கு உதவிக்கரமாக பழனிசாமி, கதிரேசன் என்பவர்கள் இருந்தார்கள்.  

அவர்கள் எங்களிடம் ஒரு மஞ்சள் நிற கட்டைப்பையை வழங்கினார்கள். அதில் மஞ்சள் நிறத் தொப்பி,  கழுத்தில் போடக் கூடிய ஐ.டி கார்டு, சாப்பிடும் தட்டு, 2 லிட்டர் வாட்டர் பாட்டில் இருந்தன. 

“நீங்கள் பயணம் முடித்து  திரும்பும் வரை இந்த பிளேட், தொப்பி, ஐடி கார்டு பத்திரமா வச்சிருங்க. எங்கே போனாலும், உங்க அடையாளக்கார்டை  கழுத்தில் மாட்டாமல் போகக் கூடாது” என்று அறிவுறுத்திச் சென்றார்.


காலை  பதினொரு மணிக்கு பாப்பாத்திக்கா, லட்சுமி அக்கா இருவரும் அவரவர் ப்ளாஸ்க்கில் கொண்டு வந்த ப்ளாக் டீயை கொடுத்தார்கள். ரேவதிக்கா கொண்டு வந்த சுண்டல் அந்த டீயுடன் ஜோடி சேர்ந்து சுவை கூட்டியது. சேலத்தில் ஏறிய உஷாவின் அம்மா தந்திருந்த ஸ்னாக்ஸைப்  பகிர்ந்து கொறித்துக்கொண்டும், எங்களை நாங்களே புகைப்படம் எடுத்து, எங்கள்  உறவுகளுக்கு வாட்சப்பில் அனுப்பிக் கொண்டும் இருந்த நேரத்தில் ரயில் ஜோலார்பேட்டை வந்து சேர்ந்தது. 

ரயிலை விட்டு இறங்கி, அங்கே இருந்த ஆலமரத்தைச்  சுற்றியிருந்த சிமெண்ட் திட்டுகளில் எங்களுடைய உடைமைகளை எல்லாம் வசதியாக வைத்தோம். உடைமைகளை வைத்து விட்டு சற்றே  இளைப்பாறும் நேரத்தில் எங்களுக்கான மதிய உணவு வந்து விட்டது. அவரவர் வசதிகேற்ப அமர்ந்து புதிதாக வந்திருந்த சேலம், நாமக்கல்,  உடுமலைப்பேட்டை, திருச்சிகார்களுடன்  சாப்பிட்டுக் கொண்டே உரையாடத் தொடங்கினோம்.
 
அடுத்து நாங்கள் ஏற வேண்டிய ரயில் மாலை  நாலு மணிக்கு  என்பதால் அதுவரையில் அங்கே இருந்த கல் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்தோம். 
ஆலமரத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த எலி ஒன்று தன் வங்கின் வெளியேயும் உள்ளேயும் சென்று கொண்டிருந்தது. அதைக் கவனிக்கும் செயலில்  இறங்கினேன். மரத்தின் கீழிருந்த வாழையிலைகளை தன் கூரிய பற்களால் கொறித்து எடுத்துச் சென்று தன் வங்கில் வைக்க ஓடிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் எலிகள் குறித்து நான் எழுதிய சில கட்டுரைகள் எனக்கு நினைவுக்குள் வந்தன.

அப்போது ஜெயக்குமார் சார் எங்களை அழைத்து, கயாவில் பிண்டம் வைப்பவர்கள், வேணி தானம் செய்பவர்கள் மற்றும் சிவதர்ப்பணம் செய்ய விருப்பம் இருப்பவர்களின் பெயர்களைக் கணக்கெடுத்து அதற்கான கட்டணங்களையும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனத்தில் வழிபாடு செய்வதற்கான கட்டணங்களையும்  கூறினார். நாங்கள் அதற்குண்டான தொகையை அவரிடம் அளித்தோம். 

"இந்த பயணம் இனிமையாக நடக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின்  முழு ஒத்துழைப்பும் அவசியம் தேவை. நாங்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்கு, நாங்கள்  குறிப்பிடும் நேரத்துக்கு குளித்து தயாராகி வந்து விடுங்கள் அப்போது தான், நாம் செல்லக்கூடிய பயணங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக அமையும்" என்பதை ஜெயக்குமார் சார் வலியுறுத்திக் கூறினார். பயணத்தின் இறுதிவரையில் எல்லாரும் அவர் கூறியதைப் பின்பற்றி சரியான நேரத்துக்கு வந்தது  இந்த பயணத்தினுடைய வெற்றியாக அமைந்தது எனலாம்.

ரயிலில்  எங்கள் மூவருக்கும் கீழ் பர்த். மேல்பர்த்தில் பீகார் ஜென்ட்ஸ். தமிழ் பேசுகிறவர்கள் யாரும் இல்லை. அதுவும் மேல்பர்த்திலிருந்த இருந்த  பீகாரி எங்களை எட்டி எட்டிப் பார்த்தார்.

இரவு ஏழு மணிக்கெல்லாம் எங்களுக்கு உணவுப் பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தார்கள். எங்களுடன் பயணித்த நாகப்பன் சார் எங்களுடன் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு, "எதுனாலும் கூப்பிடுங்க  நானும் என் மனைவியும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் இருக்கை எண் நாற்பது, நாற்பத்தி ஒன்று” என்று சொல்லி விடைபெற்றார்.

நாங்கள் சாப்பிடுவதையும், பேசுவதையும் பீகாரி வேடிக்கை பார்க்க, அவரிடம் தமிழ் தெரியுமா? என்று கேட்டதும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். அதன் பிறகு நாங்கள் சுதாரித்துக்கொண்டு கேலி கிண்டலைக் குறைத்துக்கொண்டோம்.எங்களுடைடைய உறவினர்கள் இருவர்  வேறு பெட்டி என்பதால், அவர்கள் இருவரிடமும் நாங்கள் அடிக்கடி சென்று உரையாடி வந்தோம்.

குளிர்காலம் என்பதால் ஏ.சி அதிக குளிராக இருந்தது. ரயில்வே நிர்வாகம் எழுதி ஒட்டியிருந்த புகார் எண்ணை அலைபேசியில் அழைத்து, ஏ.சியின் அளவைக் குறைக்க வேண்டுமென கேட்க அவர் இந்தியில் பேசினார்.
நான் பீகாரியிடம் உதவி கேட்டேன். அவரும் இந்தியில் அவரிடம் பேசினார்.  ஏ.சியின் அளவை குறைத்தார்களா என்று தெரியவில்லை.

ஸ்லீப்பர் பஸ்களில் தனித்தனி இருக்கைகளுக்குத் தேவையானபடி ஏசி அளவைக் கூட்ட, குறைக்க முடியும். அதுபோலவே ரயிலில் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று தோன்றியது. நிறைய பேருக்கு அந்த ஏசி  குளிர் ரொம்ப அதிகமாக இருந்தது. படுக்கை விரிப்பில் கொடுத்த குல்ட்டையும் இழுத்துப் போர்த்தி காதுக்குப்  பஞ்சு, தலைக்குக் குல்லா,  ஸ்வெட்டர்  எல்லாம் போட்டும் குளிர் எங்களைத் தூங்கவிடாமல் செய்தது. 

திங்கள் மதியம் நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழர் மூலமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள். இரவு உணவு சப்பாத்தியும், மிளகுக் குழம்பும், தக்காளி தொக்கும் குளிருக்கு ஏற்ற வகையில் காரசாரமாக சுவை கூட்டியது.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்த ரயில் பயணம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தது. அந்த பீகாரியும் எங்களுக்கு நண்பராகிவிட்டார். உணவு குறித்துப் பேசும் போது, இட்லியின் சுவையை  தமிழ்நாட்டில் தான் அதிகம் சுவைக்க முடிகிறது என்றார். தன் மகன் திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு பாட்னா செல்வதாக கூறினார். 
 
ட்ரெயினில் மிகுந்த அசௌகரியம் ஏற்படுத்தியது பாத்ரூம் தான்.  அவ்வப்போது தண்ணீர் வராமல் நின்றுவிடும் அந்த சமயங்களில்  நாங்கள் சிரமத்தை எதிர் கொண்டோம்.
 
செவ்வாய் அதிகாலை பிரயாகை ஸ்டேஷன் வந்ததும் நாங்கள் இறங்கத்  தயாரானோம். எங்களுடைய லக்கேஜ்களை எல்லாம் எடுக்க பீகாரி உதவி செய்தார். அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.


இந்தி மொழி நன்றாக தெரிந்து இருந்தால் அவருடன் பேசியிருக்கலாம், கலாச்சாரம், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொண்டிருக்கலாம் என்ற  மனக்குறையோடு பிராயக்கை ரயில் நிலையத்தில்  காலடி வைத்தோம்.
 
 (தொடரும்)
 

மணியோசை - கௌசல்யா ஞானேஸ்வரன், உமா மகேஸ்வரி R

இரவு ஏழரை மணி. மழை கொட்டி அடங்கியிருந்தது. வீடு முழுக்க அமைதி சூழ்ந்திருந்தது. மணியோசை மட்டும் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. பூஜை முடிந்து சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருந்த போதும் செவிகளுக்குள் அந்த மணி ஓசை மட்டும் குறையவே இல்லை.

அந்த நேரத்தில் வீட்டின் காலிங் பெல் சத்தம். அவசரமாக கதவைத் திறந்தாள் சுபாஷினி. வெளியே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பயத்தில் இதயம் துடிக்க, உடனே கதவைத் தாழிட்டு, கைபேசியில் கணவர் பாலுவை அழைத்து நடந்ததைச் சொன்னாள்.

“மழை பெய்ததால் எலக்ட்ரிக்கல் ஃபால்ட் இருக்கலாம். சில சமயம் பெல் தானாக அடிக்கும். பயப்படாத,” என்று அமைதியாகச் சொன்ன பாலு. “நான் வந்த பிறகு கைபேசியில் அழைக்கிறேன். அதன் பிறகு கதவைத் திற,” என்று சொன்னதும் இயல்பு நிலைக்கு திரும்பிய சுபாஷினி இரவு உணவுக்காக சமையலறையில் சப்பாத்தி செய்ய ஆரம்பித்தாள்.

அதே வேளையில் “டமார்…!” உருட்டும் மாதிரியான சத்தம் கேட்டது.“பூனையா இருக்கும்,” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அவர்கள் வீட்டில் இரண்டு பூனைகள். நடுராத்திரியில் சண்டையிட்டு கத்துவது வழக்கம். “இதே வேலையா போச்சு,” என்று நினைத்தபடியே சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.

அப்போது ஜன்னல் ஓரம் யாரோ அசைவது போல நிழல். விழிகள் பயத்தால் பெரிதாக விரிந்தன. சுபாஷினியின் உடல் பயத்தில் வியர்த்தது. மெதுவாக ஜன்னல் பக்கம் சென்றாள். முகத்தை ஒட்டி பார்த்தாள். நேராக யாரும் தெரியவில்லை. ஆனாலும் நிழல் மட்டும் அசைந்து கொண்டே இருந்தது.
உடனே பாலுவுக்கு அழைத்தாள். நடந்ததை விவரித்தாள். புகையின் அளவு அதிகரிப்பதையும் சொன்னாள்.“சுபா… கிச்சன்ல நீ என்ன பண்ணிட்டு இருந்த?” என்று கேட்டான் பாலு. “சப்பாத்தி…”

வேகமாகப்  பூஜை அறைக்குள் ஓடி, கடவுளை வேண்டி, திருநீறு இட்டு திரும்பியபோது வீட்டுக்குள் புகை. முதலில் மெல்ல, அடுத்த கணங்களில் அதிகமாக! பயம் இன்னும் கூடியது.

“சுபா, பயப்படாம நான் சொல்றதை செய். முதல்ல கிச்சன் லைட் போடு. அடுப்பை நிறுத்தினாயானு பாரு.” அப்போதுதான் உணர்ந்தாள். பயத்தில் பூஜை அறைக்கு ஓடியபோது, அடுப்பை நிறுத்தவே இல்லை. சப்பாத்தி கருகி புகை கிளம்பியிருந்தது. அடுப்பை நிறுத்தியதும் புகை குறைந்தது. அவள் சற்று நிம்மதி அடைந்தாள்.“ஏங்க… ரொம்ப பயந்துடேன்,” என்று குழந்தை போல சொன்னாள்.“சரி. இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன். கைபேசியில் அழைத்தபின் கதவைத் திற,” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

இரவு உணவு தயார் செய்து விட்டு, கை கழுவும் போது சுபாஷினி மீண்டும் ஜன்னலைப் பார்த்தாள். எந்த நிழலும் இல்லை. நிம்மதிப் பெருமூச்சுவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.அப்போது “டிங்… டாங்… டிங்… டாங்…”காலிங் பெல்

“பாலு வந்திருப்பார்,” என்று நினைத்து, கதவு லென்சிலும் பார்க்காமல் கதவைத் திறந்தாள். வெளியே பாலு இல்லை. அதிர்ச்சியடைந்தாள். கீழே ரோபோ இருந்தது. வீடு சுத்தம் செய்யும் ரோபோ. நீண்ட நாட்களாக அவள் ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டிருந்த அதே ரோபோ. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அதை தொடப்போகும் வேளையில்…

ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.“அதைத் தொடாதே…”அந்தக் குரல் புதிதல்ல. மென்மை இருந்தது. பயமில்லை.. தன் கணவன். பாலு.“எத்தனை தடவை சொல்றது, சுபா? கதவைத் திறக்குறதுக்கு முன்னாடி யாருன்னு பார்த்துத்தான் திறக்கணும்,” என்றான். “சாரிங்க… நீங்கதான் வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டேன்,” என்றாள். “இப்போ ஜாக்கிரதை ரொம்ப முக்கியம். இந்த ஏரியால முகமூடி கொள்ளையர்கள் அதிகம்.”

அவள் ரோபோவை ஆசையோடு பார்த்தாள்.“ரோபோ சூப்பரா இருக்குங்க… ரொம்ப நாள் ஆசை.”"உள்ளே வா. ரன் பண்ணிப் பார்க்கலாம்,” என்று பாலு சொல்லிக் கொண்டே உள்ளே நகர்ந்த அதே நொடியில் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை.ஐந்து, ஆறு முகமூடி அணிந்தவர்கள், கதவைத் தள்ளி வீட்டுக்குள் புக முயன்றனர்.சுபாஷினி நடுங்கிப் போனாள். மீண்டும் மணியோசை அவள் செவிக்குள்.

“சுபா… உள்ளே போ…”பாலு அவளை தன் பின்னால் தள்ளிக் கொண்டு கதவை முழுவதுமாக அடைக்க முயன்றான். முகமூடி கொள்ளையர்கள் பலமாக கதவைத் தள்ளினர். ஒருவன் உள்ளே கால் வைக்க முயன்றான்
.
“வின்… வின்…” திடீரென்று இயங்கியது ரோபோ. அது தரையில் சுழன்று கொள்ளையனின் காலில் மோத, அவன் தடுமாற, அந்த ஒரு நொடியில்..பாலு முழுப் பலத்துடன் கதவைத் தள்ளி மூடி, லாக் செய்தான். சுபாஷினியைத் தன் பின்னால் இழுத்துக்  அவளை பூஜை அறைக்குள்  கூட்டிச் சென்றான்.

“நான் வரும்போதே சந்தேகப்பட்டேன். மப்ட்டியில் போலீஸ் நின்று கொண்டிருந்தார்கள். இந்தப் பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் சுற்றுவதாக எச்சரித்தார்கள். அதனால்தான் உன்னை ஜாக்கிரதையா இருக்கச் சொன்னேன். போலீஸ் ரோந்தும் இருக்கு, பயப்படாதே.”என்று சொல்லி அவசர போலீஸ் எண்ணிற்கு அழைப்பதற்காக செல்போனை எடுத்து ஸ்கிரீன் டச் செய்தவுடன் திடீரென ஒரு விளம்பரம்.

"உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா? ‘ஓம் சக்தி’ என்று பதிவிடுங்கள்…”என்ற வாக்கியங்களுடன் மணியோசை ஒலிக்க அம்மனின் உருவம் தெரிந்தது.

அந்த நிமிடங்களில்…சைரன் சத்தத்துடனான போலீஸ் வண்டி வரவும் சரியாக இருந்தது. கொள்ளையர்கள் தப்பிக்க முடியாதபடி வீட்டின் முன்புறமும் பின்புறமும் போலீஸ் சுற்றிவளைத்திருந்தனர். பூஜை அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சுபாஷினி, கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி கூறினாள்.

“அந்த மணியோசை…” அவள் மெதுவாக சொன்னாள்.“எனக்கு எச்சரிக்கையாக உள்ளுணர்வின் அழைப்பு மணியாய் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்திருக்கிறது.” பாலு  சின்னதாகச்  சிரித்தான்.“அதான் சுபா… சில நேரம் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யும்" .

ரோபோ அமைதியாக தன் இடத்தில் நின்றது. வீட்டிலும் அமைதி திரும்பியது.ஆனால் அந்த இரவுக்குப் பிறகு, சுபாஷினி எப்போதும் கதவைத் திறப்பதற்கு முன் ஒரு விநாடி நின்று கவனிக்க பழகிக் கொண்டாள். 

(ஈரோடு வாசல்- படைப்புக் குழுமத்தின் பயிற்சியான தொடர்கதைச் சங்கிலியில் கௌசல்யா ஞானேஸ்வரன், உமா மகேஸ்வரி ஆகியோர் இணைந்து எழுதிய சிறுகதை)

ப்யதஸி - ஆரூரன் விஸ்வநாதன்

மகத நாட்டை கி மு 4 ஆம் நூற்றாண்டில், நந்தர்கள் என்னும் சத்திரிய வம்சத்தைச் சாராத சாதியினர் சிசுநாகர்களிடமிருந்து கைப்பற்றி  ஆட்சி செய்து வந்தனர்.

1. நம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
தங்கலர் வாழி, தோழி!
-மாமூலனார்-அக 251

2. "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்" 
அக-265

போன்ற  அகநானூற்று வரிகள் நந்தர்கள் குறித்துப் பேசுகின்றன.

நந்த வம்சத்தின் கடைசி அரசன் தனநந்தனை,  அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் எனும் பிராமணரின்  துணையோடு, (இவரை சமண ப்ராமணர் என்று சமண நூல்கள் குறிப்பிடுகின்றன.) அழித்து, மகதத்தைத் தலைநகராகக் கொண்டு, மௌரிய அரசை  உருவாக்கி,  கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 320 ஆண்டுகள் முன்பு மாமன்னராக முடிசூடிக் கொண்டார் சந்திரகுப்த மெளரியர்.  

கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆட்சிகாலத்தைப் பேசுகின்ற அகநானூற்றுப் பாடல் எண் 69 

”விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்” 

மற்றும் 

முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,

-அகப்பாடல்-281ம்

ஆகியவையும்  மோரியர் ஆட்சிகுறித்துப் பேசுகின்றன.  (சங்க காலச் செய்யுள்களில் நந்தர்கள் குறித்தும் மவுரியர்கள் குறித்தும் பேசப்பட்டிருப்பது அவர்கள் வாழ்ந்த காலக் கணக்கீட்டை உறுதி செய்து கொள்ள உதவுகின்றன.  சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் போன்ற ஒழுக்க வியல் கருத்தியல்கள், கோட்பாடுகள் எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்று ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. )

இன்றைய பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில், ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது தட்சசீலம். அலெக்ஸாண்டர் தனது இந்தியப் படையெடுப்பின்போது, கி மு  326-ல் இந்நகரைக் கைப்பற்றினார். போரஸ் என்ற புருஷோத்தமரோடு போரிட்டு அவரை வென்ற அலெக்ஸாண்டர், வந்துகொண்டிருக்கிறார் எனும் தகவல் வந்து சேர்ந்ததும், பரிசுப்பொருள்களுடன் கிளம்பி எல்லைக்கே சென்று அவரின் நட்பைப் பெற்றுக்கொண்டார் அரசர் அம்பி.  

அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது வட-மேற்கு இந்தியாவில் இருந்த பல பகுதிகள் அவர் வசம் போனது. கி.மு. 323 ஆம் ஆண்டு அலெக்சாந்தரின் மரணத்திற்கு பிறகு, அந்த பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டனர். இந்தியாவில்  இருந்த கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்கோடர் ஆண்டு கொண்டிருந்தார்.  கிரேக்க-ரோமானிய நூல்கள் சந்திரகுப்தர் கிரேக்க-இந்திய ஆளுநர்களைத் தாக்கினார் என்றும், செலுக்கஸ் நிக்கோடருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றன.  செலுக்கஸ் நிக்கோடரின் உறவுப்பெண் ஒருவரை,  தன்னுடைய முதிர்ந்த வயதில் திருமணம் செய்து கொண்டார் சந்திரகுப்தர் என்ற  சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திரகுப்தர், வாழ்க்கை குறித்த உறுதியான செய்திகள், பெரிதாய் நமக்குக் கிடைக்க வில்லை.  கிடைத்த கொஞ்சமும் சமண நூல்களில் இருந்தும் சமணக் கல்வெட்டுகளில் இருந்தும்  கிடைத்தவையே.  சந்திர குப்தர்,  தன் இறுதி  நாட்களில் சமண மதத்தைத் தழுவி, , துறவியாக வாழ்ந்து, இன்றைய கருநாடக மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவிற்கு அருகில் உள்ள சந்திரகிரியில் பத்திரபாகு முனிவர் உட்பட பலருடன்  சல்லேகனை விரதமிருந்து,   மோட்ச நிலையை அடைந்தார் என்கின்றன  சந்திரகிரி கல்வெட்டுகள்.

மௌரிய அரசின் இரண்டாவது மன்னனான பிந்துசாரன்.  சந்திர குப்த மவுரியரின் மகன்.  இவர்காலத்தில் பெரிதாக போர்கள் இல்லை என்றாலும் கூட இவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல கிரேக்க  நூல்கள்  உறுதுணையாக இருக்கின்றன.   பிந்துசாரன் யவனர்கள் என்று அழைக்கப்பட்ட  கிரேக்கர்களோடு உறவினில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.   கிரேக்க வரலாறுகளில் இவர் பெயர்கள் காணப்படுகின்றன., 

சந்திரகுப்தரின் ஆட்சியின் தொடக்கம் அல்லது இறுதி ஆண்டு தெளிவாக இடம்பெறவில்லை. வரலாற்றாசிரியர்கள் சந்திரகுப்தரின் ஆட்சி கி.மு. 324 தொடங்கி கி.மு. 293 க்கு இடையில் முடிவுற்றதாகவும் கூறுகிறார்கள். புத்த நூல்கள் புத்தரின், பரிநிர்வாணத்தை கி மு 486 என்று குறிப்பிடுகிறது. இதைக் கொண்டு, மவுரிய மன்னர்களின் காலகட்டத்தைக் கணக்கிட்டுப் பார்க்கிறார் ஆய்வாளர் ரொமிலா தாப்பர். கி மு 486-ல் புத்தர் மரணமடைந்திருந்தால், சந்திரகுப்தர் 324-ல் பதவியேற்றிருப்பார், பிந்துசாரர் 272-ல் ஆட்சிக்கு வந்திருப்பார். அவர் 28 ஆண்டுகள் ஆண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்பின், அசோகர் முடிசூடிக்கொள்ள நான்காண்டுகள் ஆயின. அதையும் சேர்த்தால் 269 அல்லது 268-ம் ஆண்டு அவர் முடிசூடியிருக்கலாம். 

ப்யதஸி:

அசோகர் என்றொரு மன்னர் இந்தியாவை ஆண்டார் என்பதை,  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நாம் அறிந்திருக்கவில்லை. வட இந்தியாவின் பல்வேறு பாகங்களில் நிறுத்தப்பட்டிருந்த பெருந்தூண்களை ஏதோ இராட்சர்களின் வேலை என்று அன்றைய  மக்கள் நம்பி வந்தனர். அந்த இராட்ச மனிதர்கள் நமக்குப் புரியாத மந்திர மொழிகளில் ஏதோ எழுதி வைத்துள்ளனர் என்றும் பேசி வந்தார்கள்.

தனது 40 ஆண்டுகால ஆட்சியில், ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர்.. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும்  ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, காந்தஹார் அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது.   

தன் ஆட்சிப் பகுதிகளில் தன் விருப்பத் தேர்வான தம்மம் அல்லது தர்மம் குறித்தும், (இன்றைய நாளில் அறம் என்றும் மொழிபெயர்க்கலாம்)  மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் பெரும்பாறைகளிலும், பெருந்தூண்களிலும் வெட்டி வைத்திருக்கிறார்.  தன் ஆட்சிப் பகுதிகளில் மட்டுமல்லாமல், தம்மம் குறித்த விவரனையை,  ஆசியா முழுமைக்கும், இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பாவிற்கும் கூட எடுத்துச் சென்றிருக்கிறார் என்பது தான் வியப்பான செய்தி.

கி பி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்த சரிதம் காவியத்தில் அஷ்வகோஷ்,  80000 கல்வெட்டுகளை அசோகர் வெட்டிவைத்தார் என்று குறிப்பிடுகிறார்.  இதுவரை அசோகருடைய சாசனங்களில் நமக்கு கிடைத்தது 33 மட்டுமே. அசோகரது கல்வெட்டுகளில் தோராயமாக 4,614 வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன என்கிறார் ஒலிவெல் (ப.63). இந்த வார்த்தைகளைக் கொண்டு மட்டும் அவர் இதைச் சாதிக்கிறார்.

இந்தியாவை ஒரு பெரிய  தேசமாக கட்டமைத்த முதல் ஆட்சியாளர் அசோகர். அதே போல், இந்த உலகத்தில்,  மக்கள் நல அரசை நிறுவிய முதல் அரசரும் அசோகரே என்பார் பேரா. அ.மார்க்ஸ்.

சார்ல்ஸ் எலன் தனது 'Ashoka: The Search for India's Lost Emperor' என்ற நூலில், "இந்தியாவின் ஸ்தாபகத் தந்தை என்று அசோகரை நிச்சயமாக அழைக்கலாம், என்று கூறுகிறார்.

அசோகருக்கும் கிரேக்க மன்னர்களுக்குமான உறவைக் குறிப்பிடும் அசோகர் கல்வெட்டின் காலம் 256 அல்லது 255 ஆக இருக்கலாம். அந்த அடிப்படையில்  கி மு 269 அல்லது 268-ம் ஆண்டு அசோகர் முடிசூடிக்கொண்டார்  என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். 

அசோகனுடைய காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு 270 ஆண்டுகளுக்கு முற்பட்டது.  இந்த காலகட்டத்தில் தான் பியூனிக் போர் நடந்து கொண்டிருந்தது பெர்சியாவில் மிகப்பெரிய ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது.   சீனப் பேரரசர் சீனப் பெருஞ்சுவரை கட்டிக்கொண்டு இருந்தார்.

1834 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நாணய சோதனையாளராக இருந்த ஜேம்ஸ் ப்ரின்ஸெப்பு க்கு கிடைத்த நாணயங்களில் ஒரு பக்கத்தில் கிரேக்க எழுத்துக்களும், மறுபக்கத்தில் அன்றைய இந்தியாவில்  இருந்து  வந்த வேறு ஒரு வகையான எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.   இந்த நாணயங்கள் இந்தியாவில் வடமேற்கு பாகத்தில் கிமு 200 வகை கிபி 100 வரை ஆண்டு வந்த எவன அரசர்களால் அடிக்கப்பட்டது.   யவன, கிரேக்க மொழியிலும் இந்தியாவினுடைய வேறு ஒரு மொழியிலும் இருந்த இந்த நாணயங்களில் அரசர்களின் பெயர்கள் விருதுகள் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தன.  கிரேக்க மொழி அறிந்திருந்த  ப்ரின்ஸெப்,  அதை  வாசித்து அறிந்து கொள்வது எளிதாய் இருந்தது.  நாணயங்களின் மறுபக்கத்தில் எழுதியிருந்த எழுத்துக்கள், விவரங்கள்,  கிரீக்கில் எழுதப்பட்ட விவரங்களாகவே இருக்க வேண்டும்  என்று யூகித்தார். அறியப்படாத இரண்டு எழுத்து வருகையில்,  ஒவ்வொரு எழுத்தையும் மறுபக்கத்தில் உள்ள கிரீக் எழுத்தின்  ஒலிக் குறிப்புகளைக் கொண்டு,  அந்த எழுத்துக்கள் என்னென்ன ஒலிக் குறிப்புகளை கொடுக்கிறது என்றும் பட்டியலிட்டார். இப்படியாக அசோகரின் கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டன.

அசோகருடைய  பாறைக்கல்வெட்டுகளிலும்  ஸ்தூபிக்களிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய காலத்தில், பலருக்கும் பெரும் குழுப்பங்கள் ஏற்பட்டன.  இந்தக் கல்வெட்டுகளை வெட்டியவர்  தேவநாம்பிரிய ப்ரியதஸி  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  .சில இடங்களில் வெரும் ப்யதஸி அல்லது ப்யதஸி ரஜா இவ்வாறு சொல்கிறார் என்று தொடங்கியது.  தேவர்களுக்குப் பிரியமான தேவநாம்ப்ரியன் அல்லது பியதஸி என்ற இருவரும்,  ஒரே மனிதரா அல்லது இரு வேறு மனிதர்களா என்ற கேள்விக்கான பதில் நீண்ட காலம் கிடைக்காமல் இருந்தது. 

அசோகருடைய ஓரிரு கல்வெட்டுகளில், தேவனாம் பிரியன்,- தேவர்களுக்கு பிரியமானவன் என்ற பொருள்  வரும்படி விருது பெயராக உபயோகிக்கப்பட்டு இருந்தது வேறு சில இடங்களில் ப்யதஸி  என்ற பெயருக்கு தேவனாம்ப்ரியன் என்ற பெயர் விருதாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.   தேவனாம் பிரியன் யார்? ப்யதஸி யார்? இருவரும் ஒரே மனிதரா இருவேறு மனிதர்களா? என்பது குழப்பமாக இருந்தது 

1915 ஆம் ஆண்டு  கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகில் உள்ள மாஸ்கி என்ற ஊரிலே கிடைத்த கல்வெட்டில் தான் முதன்முதலாக அசோகன் என்ற பெயர் கிடைத்தது. அதுவரை இவரைப் பற்றிய எந்த தகவல்களையும் யாரும் அறிந்திருக்க வில்லை. மாஸ்கி சிறுபாறைக் கல்வெட்டில் மட்டும் தேவநாம் பிய  பியதஸி அசோக என்றிருந்ததால் அறிய முடிந்தது.

அசோகர் காலத்தில் இரண்டு விதமான மொழிகள் பயன்படுத்தப்பட்டன ஒன்று வழக்கமான இந்திய மொழிகளைப் போன்று இடது பக்கம் தொடங்கி வலது பக்கம் வரை நீளும் பிராமி லிபி என்று சொல்லப்படுகின்ற ஒரு எழுத்துமுறை மற்றொன்று இந்துஸ்தானி போல வலது புறம் தொடங்கி இடது புறம் வரை செல்லும்  கரோஷ்டி லிபி.  இந்த இரண்டு எழுத்து முறைகள்தான் தான் இந்தியாவில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் தாய் என்று சொல்லுவார்கள். 

பெரும்பாலான அசோக சாசனங்கள் மேலே குறிப்பிட்ட இந்த பிராமி எழுத்திலும் கரோஷ்டி எழுத்திலும் மட்டுமே இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்து முறையில் இருந்த செங்குத்தான கோடுகள் மாறி வட்டங்களும் வளைவுகளும் உருவாக்கப்பட்டிருந்தது.  இதிலிருந்து தான் தமிழ் தெலுங்கு கிரந்தம் மலையாளம் கன்னடம் போன்ற தென்மொழிகளின் வட்டெழுத்து  உருவாகி இருக்கலாம் என்று சொல்லுகிறார். கீழடி, சிவகளை போன்ற இடங்களில் கிடைத்த ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழி எழுத்துக்கள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்றும் நம் அறிஞர்கள் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  

கரோஷ்டி லிபி அல்லது கரோஷ்டி எழுத்துமுறை என்பது அசோகர் காலத்திற்கு பின்,  சில நூற்றாண்டுகள் வரை பஞ்சாபிலும் வட மேற்கு மாகாணங்களில் சிந்து பிரதேசத்திலும் பரவி இருந்தது.  மத்திய ஆசியாவில் கோட்டான் வளமையும் நாகரீகமும் மிகுந்த தேசம்.  அங்கே கரோஷ்டி லிபி பொதுவாக பயன்படுத்தப்பட்டிருந்தது.  தற்பொழுது அங்கே பௌத்த மத கிரந்தங்களும் மற்ற கிரந்தங்களும் புதையலா கிடைத்திருக்கின்றன.  ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன.

அசோகர் குறித்தான கதைகளை கிபி 5 ஆம் நூற்றாண்டில் மதுராவில் வாழ்ந்த புத்த பிட்சுகள் பலர்  சேர்ந்து எழுதிய நூல் ”அசோகவதனம்” பேசுகிறது. இலங்கையின் புத்த நூல்களான   மஹாவம்சம், தீப வம்சம் போன்றவையும் பேசுகின்றன. ஆனால் இவை சொல்லும்  பெரும்பாண்மையான செய்திகள் புனைவாகளாகவோ புத்த மத பெருமை பேசுபவையாகவோ தோன்றுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அசோகனுடைய இளமைப் பருவங்கள் அவருடைய திருமணம் அவருடைய குழந்தைகள் போன்ற எந்த செய்திகளும் எந்த விதமான கல்வெட்டுகளிலும் நமக்கு கிடைக்கவில்லை..  சமணர்களையும், ஆசிவகர்களை கொலை செய்தார் என்றும் தன்னை உருவக் கேலி செய்தார்கள் என்பதற்காக, அரண்மனை அந்தப்புர மகளீர் அனைவரையும் தீவைத்துக் கொளுத்தினார், நரகத்துக்கு நிகரான ஒரு இடத்தை உருவாக்கி, மக்களை சித்தரவதை செய்து பொழுது போக்கினார்  போன்ற கதைகள்  சமண பௌத்த நூல்களிலே பதிவாக இருக்கின்றன.

திறமை வாய்ந்த ஆட்சியாளராக இருந்ததாலே தன் சகோதரர்கள் 99பேரை கொன்றுவிட்டு தானே அரசராக பதிவேற்றிக் கொண்டதாக பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. . மத நூல்களில் பெரும்பாலும் இப்படியான செய்திகள் பதிவு செய்யப்பட்டதற்கான காரணம், அந்த மதம் குறித்தான  பெருமிதங்களை வெளிக் கொணர உதவியிருக்கலாம்.    மிக மோசமான குரூரமான ஒரு மனிதர் பௌத்தத்தை பின்பற்றிய பிறகு அல்லது புத்தருடைய போதனைகளை கேட்க தொடங்கிய பின்பு அவர் ஒரு நல்ல மனிதராக மாறிவிட்டார் என்று சொல்வதன் மூலம் அந்த மதத்தை பெறுமைப் படுத்துவதற்காக இது போன்ற செய்திகளை எல்லாம் பரப்பி இருக்கலாம் என்று பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். இவை எல்லாமே அசோகர் மறைந்து, 2 நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவையே.

வழக்கமாக மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நாள் அவர்களுடைய ஆண்டின் துவக்க நாளாக குறிப்பிடுவது வழக்கம் அதேபோல ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட தினத்தை கொண்டாடுவதும் அன்று மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதும் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம். அதன்படி அசோகர்  இளவரசனாக இருந்து நான்கு வருடம் ஆட்சி செய்த பிறகு தன்னை அரசனாக அறிவித்துக் கொள்கிறார்.  தன் பிறந்த நாளில் மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கிறார்.   தண்டனைக் கைதிகளுக்கும், நீண்ட கால சிறைவாசிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை அளிக்கிறார்.  (இன்றும் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் நீண்ட நாட் கைதிகளுக்கு விடுதலை அளித்துவருவதன் தொடர்ச்சியைக் காணமுடியும்)

அசோகர் உடைய சரித்திரத்திலே கலிங்க யுத்தம் மிக முக்கியமான ஒன்று. அவர் அரசனாக பதவியேற்ற ஒன்பதாவது ஆண்டில் கலிங்கத்தை நோக்கி படையெடுத்துச் செல்கிறார் அந்த காலகட்டத்தில் கலிங்கம் மட்டுமே அவருடைய ஆட்சியின் கீழ் இல்லாமல் இருந்தது. 

பாட்ரிக் ஒலிவெல் எழுதிய 'Ashoka: Portrait of a Philosopher King' என்ற நூலில்

"கலிங்கத்தின் அப்போதைய மக்கள் தொகை 9.75 லட்சம் என்று வரலாற்று ஆசிரியர் சுமித் குஹா குறிப்பிடுகிறார். மக்கள் தொகையை 10 லட்சம் என்று வைத்துக்கொண்டாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 20%. மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால், மொத்த மக்கள் தொகையில் 35% பேர் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டனர். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதை ‘மாபெரும் அழித்தொழிப்பு’ என்று சொல்வது தவறாக இருக்காது,” என்று இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.

அந்தப் போர்ச்சூழல் அவரை துயரத்துக்கு உள்ளாக்குகிறது.  போர் முடிந்த பின்பு அங்கிருந்த மலைவாழ் மக்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தேவையான பாதுகாப்புகளும் உதவிகளும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார்.  அதே நேரத்தில் எந்தக் கலிங்க மண்ணில் அவர் நடத்திய போரழிவுகள் அவருக்கு இந்தப் பாடங்களைக் கற்பித்ததோ அந்த மண்ணில் அவரது இந்தக் கருத்துக்களைச் சாசனமாக்கி அம்மக்களிடம் மன்னிப்புக் கோர மனமில்லாத வகையில் அவர் ஒரு மன்னராகவும் இருந்தார் என்கிறார் பேரா. அ. மார்க்ஸ்.

அசோகர் பாடலிபுத்திரத்தில் நரகத்தின் சாயலில் ஒரு சிறைச்சாலை கட்டினார்; அப்பாவிகளை அடைத்துவைத்து வதைத்தார்; தன் 99 சகோதரர்களைக் கொன்றார் என்றெல்லாம் கதை பேசிய பவுத்தப் பதிவுகள், கலிங்கம் பற்றியோ கலிங்கப் போர் குறித்தோ எதுவும் பேசவில்லை.   . அசோகரை உருமாற்றிய போர் குறித்து ஒரு சொல்கூட எங்கும் இல்லை என்கிறார் ரொமிலா தாப்பர். 

பவுத்தர்கள் மட்டுமல்ல பிறரும்கூட கலிங்கத்தைக் குறிப்பிடவில்லை. போருக்குப் பிறகும் யாரும் நினைவுகூரவில்லை. நம்மிடம் உள்ள ஒரே தரப்பு, அசோகர் மட்டுமே. ஒரு பெரும் அழிவின் கதையை,  அதை இழைத்தவர் மட்டுமே விவரிக்கிறார். அவர் குரலில் மட்டுமே கலிங்கத்தின் கதையை நாம் கேட்கிறோம். இதன் பொருள் அசோகர் சொல்லியிருக்காவிட்டால், அப்படியொரு போர் நடந்ததே நமக்குத் தெரியாமல் போயிருக்கும் என்பதுதான்.

அசோகர் தன் வாழ்நாளில் சந்தித்த முதல் மற்றும் கடைசிப் போர் கலிங்கப் போர்தான் என்பது ஆச்சரியமான தகவல்.   

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்,  இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னாவை தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்த மாமன்னர் அசோகரைக் கொண்டாட வேண்டுயதும், அவர் வார்த்தைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலும், இன்று நாம் இருக்கிறோம் என்பதை விளக்கத்தான் இந்தக் கட்டுரைகள்.

காசி பார்க்கப் போறோம் (பகுதி 1) - யசோதா பழனிச்சாமி

2025 ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி என் வாழ்க்கையில் முக்கியமான நாள்! என் நீண்ட நாள் கனவு நிஜமான நாள்! புண்ணியஸ்தலங்களில் முக்கியமான ஒன்றான காசிக்குச் செல்ல வேண்டும் என்று எனக்குள் தோன்றிய நாள்முதல், பயணம் சென்று திரும்பிய நாள் வரையில்  எனது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து, உங்களையும் என் எழுத்தின் வழியே காசிக்கு அழைத்துச் செல்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆன்மீகம் பற்றிய நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தொடங்கும். என்னுடைய பால்ய வயதில், என் பெரியம்மா அடிக்கடி கிராமத்தில் இருக்கும் சின்னண்ணன் பெரியண்ணன் கோவிலுக்கு செல்வது வழக்கம். கோவிலுக்குச் சென்று  வந்ததும், அங்கே இருந்த பூசாரிக்கு சாமி அருள் வந்து கத்தி மேல் ஏறி நின்று சாமி சொன்னதாக எங்களிடம் விவரிப்பார். அவரது விவரணை அந்த வயதில் எனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனக்குள் ஏதாவது பயம் ஏற்பட்டாலும் ஏதாவது தேவை என்றால்  சின்ணண்ணா, பெரியண்ணா என்று கும்பிட்டு வேண்டுவேன். 

அடுத்து, தங்கை படித்த கிறிஸ்துவப் பள்ளியில் அவர்கள் வழிபாடு செய்த மாதா சிலை என்னை ஈர்த்தது. அவர்களுடன், பள்ளி சுற்றுலாவில் கலந்து கொண்டு வேளாங்கண்ணி சென்றோம்.  மாதா சிலை ஒன்று வாங்கி வந்து வீட்டின் விளக்கு மாடத்தில் வைத்தேன். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் அப்பாவிடம், மாதாப்படம் குறித்து நகைச்சுவையாகப் பேச, அப்பா என்னை பார்த்து முறைக்க, அடுத்த நாள் தங்கையின் டீச்சருக்கு அந்த சிலையைப்  பரிசாகக் கொடுத்து அனுப்பி விட்டேன். 

எட்டாம் வகுப்பு படிக்கு போது மன்னார்குடியில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார பணிக்காக எங்கள் ஊருக்கு வந்த ஜானகி அக்கா பிராமணர். அவர்கள்  வீட்டில் செய்யும் பூஜை வழிபாடுகள் என்னை மிகவும் ஈர்த்தது. அவர்களைப் போலவே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் துளிர் விட ஆரம்பித்தது. பழனி சென்ற நான் எங்கள் வீட்டில் முருகன், விநாயகன் இணைந்த சிறிய போட்டோ வாங்கி வந்து விளக்கேற்றி வைத்தேன். இதில் அப்பாவுக்கு உடன்பாடில்லை. ‘இதெல்லாம் என்ன புது பழக்கம்’ என்றார். நான்  எதுவும் பேசாமல், அந்த படங்களை வைத்து வழிபட ஆரம்பித்து விட்டேன். நான் வழிபடும் தெய்வங்கள் எனக்கு உதவி செய்வதாக நம்ப ஆரம்பித்தேன்.

பதின்ம வயதில் பக்திப் பாடல்களை விரும்பிக் கேட்டதால் வரிகளை மனனம் செய்வது எளிதாக இருந்தது. அப்படி மனப்பாடம் செய்த பாடல்களை சாமி படங்களுக்கு முன் அமர்ந்து ஒவ்வொன்றாக வாய்விட்டுப் பாடுவதும் பிடித்ததாகவும்  இருந்தது. அப்புச்சி வாயிலாக முருகக் கடவுள் மீதான பக்தியும் எனக்குள் வரத் தொடங்கி இருந்தது. 

திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் சிறுதெய்வ வழிபாட்டு முறை, முருகன் வழிபாடு என பக்தி மார்க்கம் அங்கு அதிகமாக இருந்தது. இதனால் என் இறைவழிபாடு தடங்கலின்றி தொடர்ந்தது. பல நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாசித்தன் வாயிலாகத் தேவையில்லாத மூடவழக்கங்களை அகற்றி வழிபாடு செய்யப் பழகிக் கொண்டேன். என் கணவரின் உதவியால்  நிறைய ஆன்மீகக் கட்டுரைகள் வாசிக்கத் தொடங்கியபின் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு போய் வரவேண்டும் என்ற எண்ணம் என்னையுமறியாமல் ஆழ்மனதில் விதையூன்றியது. 

ஆகஸ்ட் மாதம் இரண்டு நாட்கள் லட்சுமி நரசிம்மர், திருநள்ளாறு , திருஆலங்குடி உள்ளிட்ட பல ஆன்மீக தலங்களுக்கு செல்லும்  பயணம் வாய்த்தது. நாங்கள் திருப்பாம்புரம் கேது தலத்தில் சாமி கும்பிட்டு வெளியே வரும் போது, ‘காசிக்கு போலாமா’? என்று எங்களை பயணம் அழைத்துச் சென்ற அண்ணாவிடம் பேசினேன். 

அவர் "அங்கே அழைத்துச் செல்ல எனக்கு தெரியாது. ஆனால், காசி ஆன்மீக பயணக்குழுவிடம் விசாரித்து போக முயற்சி செய்யலாம்" என்று சொன்னார்.  என்னுடன் வந்த உறவினர்கள் தாங்களும் வருவதாகச் சொன்னார்கள். காசிக்கு செல்ல வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தின் ஆர்வத்தை புரிந்து கொண்ட இறைவன் அங்கேயே  காசி செல்ல ஆசியும் வழங்கி விட்டான். ஆம்! எனது தங்கை சுமதியும் அவர்களது உறவினர்களையும் சீரடி அழைத்துச் சென்ற குழுவினர் நவம்பர் மாதம் காசி பயணம் செல்வதாக தங்கை தகவல் அனுப்பினாள். 

அவர்கள் அழைத்துச் செல்லும் பயணம் சிறப்பாக இருக்கும் நீங்கள் தாரளமாக செல்லலாம் என்று அவர்கள் உறவினர் ரவி என்பவரும் உறுதி கொடுத்தார். நான் திருப்பாம்புரத்தில் பேசிய உறவினர்களிடம் காசிக்கு யாரெல்லாம் வறீங்க எனக்  கேட்டதில் இரண்டு பேர் இணைந்தார்கள். மற்றும் இரண்டு உறவினர்களை சேர்த்து சேலம் SSAF குழுவோடு இணைந்தோம். இந்த நிறுவனத்தினர் எங்களை சீரடி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது அங்கே உணவு ஏற்பாடுகள், தங்கும் வசதிகள் எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும், காசிக்கு இவர்களுடன் பயணிக்கலாம் என்று தங்கை சுமதி மீண்டும் முழு உத்தரவாதம் கொடுத்ததின் பேரில்ரயிலில், பயணம் செல்ல முடிவு செய்தோம். செப்டம்பர் மாதம் எங்கள் அனைவருக்கும் முன் பதிவு கட்டணம் அனுப்பி வைத்தோம்.

அதன் பிறகு, என்னுடன் பயணத்தில் இணையும் எங்களுடைய உறவினர்கள் ஒரு குழந்தையின் குதூகலமான மனோநிலைக்கு மாறிவிட்டார்கள். என்னென்ன பொருள்கள் வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்தை காட்டினார்கள்.

பத்து நாட்கள் பயணம் என்பதால் வீட்டில் இருக்கும் டிராவல் பேக் பத்தாது என்று எல்லோரும் புதிய டிராவல் பேக் வாங்க அவரவர் குடும்ப உறவுகளோடு கடைகடையாக ஏறி இறங்கினோம். தலைக்குல்லா, ஸ்வெட்டர் , பெட்ஷீட்எடுத்துச் செல்லக்கூடிய ஆடைகள் என திரும்ப திரும்ப மாற்றி டிராவல்பேக்கில் அடுக்கி வைக்கப்பட்டது. வாயிருந்தால் அது அழுதிருக்கும்- அத்தனை முறை திறந்து மூடப்பட்டது. 

ஒரு பொட்டுத் தங்கம் கூட வேண்டாம் என்று டிராவல்ஸ் நிறுவனத்தினர் அறிவுறுத்தி விட்டனர். அறுபது வயதைக் கடந்த அக்காக்கள் சிறு குழந்தைகளாகவே மாறி, பாசிமணிகள், வளையல்கள், தோடு என ஒவ்வொரு நாளும் தேடித்தேடி  பொருட்களை வாங்கி வைத்தனர். யார் என்ன வாங்கினோம் அந்த பொருளை அடுத்தவர்கள் வாங்கி விட்டார்களா என அலைபேசி பரிமாற்றம் நடந்தது.  

"மாஸ்க் எடுத்து வச்சுட்டியா? எதுக்கும் காதுக்கு பஞ்சு எடுத்து வச்சுக்கோ. ஏ.சி ட்ரெயின் அப்புறம் குளிரும். ஹேண்ட் பேக் வாங்கிடணும்- வெளியே போனா எடுத்துட்டு போறதுக்கு. அப்புறம் மழை வந்தால் என்ன செய்வது? ஹேண்ட்பேக்கில் வைக்கிற மாதிரி சின்ன குடையா வாங்கிடலாம்.  அப்புறம் அங்கே திருட்டு பயம் வேற அதிகமா இருக்குமாம். பணத்தை எல்லாம் கண்ட பக்கம் வைக்க கூடாது, பணத்தை சேப்டியா எடுத்து வையுங்க. எதுக்கும் மழைக்கோட் வாங்கி வச்சுக்கலாமா? மழை எது பெஞ்சுதுனா போட்டுக்கலாம்".

"அப்புறம்தினம் சாப்பிடுற மருந்து மாத்திரைகளை மறந்திடாம எடுத்துக்கணும். சாப்பிடுறதுக்கு அவங்க தட்டு, மற்றும் தண்ணீர் பாட்டில் கொடுத்துடுவாங்க. ஆனால்,நாம எதுக்கும் ஒரு சின்ன டம்ளர் எடுத்து வச்சுக்கலாம். அங்க பேப்பர் கப்பில் காஃபி கொடுத்தாங்கன்னா, நம்ம டம்ளரை யூஸ் பண்ணிக்குவோம். அப்புறம் கெட்டில் இருந்தா எடுத்துக்கலாம். அங்க இப்ப குளிரா இருக்கும். சளிகீது பிடிச்சுதுனு வையி ரூம்ல இருக்கறப்ப சுடுதண்ணி வச்சுக்கலாம். ப்ளாஸ்க் எடுத்துகிட்டா அதில சுடுதண்ணி ஊத்தி வச்சுக்கலாம். அப்புறம் சுக்கு காபி போட்டுக்கலாம். அதனால் சுக்கு காபி பவுடர் கூட நான் ஒன்னு வாங்கி வச்சுட்டேன்".

"பேஸ்ட் பிரஷ் வாங்கியாச்சா? அதுக்கு பதிலா மவுத்வாஷ்  வாங்கிக் கொடுத்து இருக்காங்க. அது வாங்கிட்டா பல்லு வெளக்க வேண்டியது இல்லையாம். வாய்ல ஊற்றி வாய் கொப்பளித்துக் கொண்டால் போதுமாம். அட அப்படியா! இருந்தாலும் கண்ணு நாம பிரஷ் எடுத்துக்கலாம்".

"அப்புறம் கங்கையில் குளித்தால், அந்த ஈரத்துணி எல்லாம் போட்டு வைக்கணும் இல்லையா? அதுக்கு ரெண்டு மூணு பாலிதீன் கவர் எடுத்துக்கோங்க. அப்புறம் நம்ம காசிக்கு போயிட்டு தீர்த்தம் வாங்கிட்டு வரதுக்கு ஜிப் போட்டு இருக்கிற பையை பார்த்து எடுத்துக்கோங்க. அப்பதான் நாம வாங்குற சாமானம் எல்லாம் ஓடாம இருக்கும். இல்லனா பை எங்காவது கீழே விழுந்து, தீர்த்தம் ரயில்ல ஓடிடுச்சுன்னா என்ன பண்றது? அதனால எதுக்கும் நல்லா சேஃப்டியா ஒரு பை எடுத்து வச்சுக்கோங்க."

"அப்புறம் அக்கா, சுடிதார் வாங்கறாவங்க வாங்கிக்கலாம். ரயில்ல போறதுக்கு வரதுக்கு கொஞ்சம் சவுரியமா இருக்கும்".  

"இல்ல கண்ணு எங்களுக்கெல்லாம் சுடிதார் வேண்டாம் அதை போட்டுட்டு எங்களுக்கு ஒத்து வராது  வேண்டாம் கண்ணு". 

"காசி கோவிலுக்கு போகும் போது கட்டுறதுக்கு ரெண்டு புதுப்புடவை நாம எடுத்துக்கலாமா?" 

இப்படியான தொடர் உரையாடல்கள் எங்கள் அனைவரையும் காசி பயணத்தை எதிர்நோக்கி , புதுவிதமான குதூகலத்தையே தந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பயணம் நல்லபடியாக  முடிந்து திரும்பி வர வேண்டும் என்ற வேண்டுதலும் கூடவே எனக்குள்ளும், மற்றவர்களுக்குள்ளும் இருந்து கொண்டே இருந்தது.

நான் உடன் அழைத்துச் செல்லும் நால்வரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள். அதிலும் ஒரு அக்கா இதுவரை தனியாக குடும்பத்தை விட்டு வெளியே வந்திராதவர். அதனால் ஊர் வந்து சேரும் வரை உடலும், மனமும் ஒத்துழைக்க வேண்டும். இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும். சூழலும் ஒத்துழைக்க வேண்டும். எல்லாம் சரியாக அமைந்து எங்களுடைய பயணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று தினமும் வாழ்க வளமுடன் என வாழ்த்துகளுடன் தொடர்ந்தேன். 

நாங்கள் செல்லும் நாளும் வந்தது. எங்களது உறவினர்கள் கூடி, குடும்பமே வந்து வழி அனுப்பி வைக்க, நாங்கள் அனைவரும் ஈரோடு இரயில் நிலையத்தில் நவம்பர் 23ஆம் தேதி காலை மிகுந்த மகிழ்வோடு வெஸ்ட்கோஸ்ட்  ரயிலில் ஏறினோம்.

(பயணம் தொடரும்)