2025 ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி என் வாழ்க்கையில் முக்கியமான நாள்! என் நீண்ட நாள் கனவு நிஜமான நாள்! புண்ணியஸ்தலங்களில் முக்கியமான ஒன்றான காசிக்குச் செல்ல வேண்டும் என்று எனக்குள் தோன்றிய நாள்முதல், பயணம் சென்று திரும்பிய நாள் வரையில் எனது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து, உங்களையும் என் எழுத்தின் வழியே காசிக்கு அழைத்துச் செல்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
ஆன்மீகம் பற்றிய நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் தொடங்கும். என்னுடைய பால்ய வயதில், என் பெரியம்மா அடிக்கடி கிராமத்தில் இருக்கும் சின்னண்ணன் பெரியண்ணன் கோவிலுக்கு செல்வது வழக்கம். கோவிலுக்குச் சென்று வந்ததும், அங்கே இருந்த பூசாரிக்கு சாமி அருள் வந்து கத்தி மேல் ஏறி நின்று சாமி சொன்னதாக எங்களிடம் விவரிப்பார். அவரது விவரணை அந்த வயதில் எனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனக்குள் ஏதாவது பயம் ஏற்பட்டாலும் ஏதாவது தேவை என்றால் சின்ணண்ணா, பெரியண்ணா என்று கும்பிட்டு வேண்டுவேன்.
அடுத்து, தங்கை படித்த கிறிஸ்துவப் பள்ளியில் அவர்கள் வழிபாடு செய்த மாதா சிலை என்னை ஈர்த்தது. அவர்களுடன், பள்ளி சுற்றுலாவில் கலந்து கொண்டு வேளாங்கண்ணி சென்றோம். மாதா சிலை ஒன்று வாங்கி வந்து வீட்டின் விளக்கு மாடத்தில் வைத்தேன். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் அப்பாவிடம், மாதாப்படம் குறித்து நகைச்சுவையாகப் பேச, அப்பா என்னை பார்த்து முறைக்க, அடுத்த நாள் தங்கையின் டீச்சருக்கு அந்த சிலையைப் பரிசாகக் கொடுத்து அனுப்பி விட்டேன்.
எட்டாம் வகுப்பு படிக்கு போது மன்னார்குடியில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார பணிக்காக எங்கள் ஊருக்கு வந்த ஜானகி அக்கா பிராமணர். அவர்கள் வீட்டில் செய்யும் பூஜை வழிபாடுகள் என்னை மிகவும் ஈர்த்தது. அவர்களைப் போலவே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும் என்ற ஆவல் துளிர் விட ஆரம்பித்தது. பழனி சென்ற நான் எங்கள் வீட்டில் முருகன், விநாயகன் இணைந்த சிறிய போட்டோ வாங்கி வந்து விளக்கேற்றி வைத்தேன். இதில் அப்பாவுக்கு உடன்பாடில்லை. ‘இதெல்லாம் என்ன புது பழக்கம்’ என்றார். நான் எதுவும் பேசாமல், அந்த படங்களை வைத்து வழிபட ஆரம்பித்து விட்டேன். நான் வழிபடும் தெய்வங்கள் எனக்கு உதவி செய்வதாக நம்ப ஆரம்பித்தேன்.
பதின்ம வயதில் பக்திப் பாடல்களை விரும்பிக் கேட்டதால் வரிகளை மனனம் செய்வது எளிதாக இருந்தது. அப்படி மனப்பாடம் செய்த பாடல்களை சாமி படங்களுக்கு முன் அமர்ந்து ஒவ்வொன்றாக வாய்விட்டுப் பாடுவதும் பிடித்ததாகவும் இருந்தது. அப்புச்சி வாயிலாக முருகக் கடவுள் மீதான பக்தியும் எனக்குள் வரத் தொடங்கி இருந்தது.
திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் சிறுதெய்வ வழிபாட்டு முறை, முருகன் வழிபாடு என பக்தி மார்க்கம் அங்கு அதிகமாக இருந்தது. இதனால் என் இறைவழிபாடு தடங்கலின்றி தொடர்ந்தது. பல நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாசித்ததன் வாயிலாகத் தேவையில்லாத மூடவழக்கங்களை அகற்றி வழிபாடு செய்யப் பழகிக் கொண்டேன். என் கணவரின் உதவியால் நிறைய ஆன்மீகக் கட்டுரைகள் வாசிக்கத் தொடங்கியபின் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு போய் வரவேண்டும் என்ற எண்ணம் என்னையுமறியாமல் ஆழ்மனதில் விதையூன்றியது.
ஆகஸ்ட் மாதம் இரண்டு நாட்கள் லட்சுமி நரசிம்மர், திருநள்ளாறு , திருஆலங்குடி உள்ளிட்ட பல ஆன்மீக தலங்களுக்கு செல்லும் பயணம் வாய்த்தது. நாங்கள் திருப்பாம்புரம் கேது தலத்தில் சாமி கும்பிட்டு வெளியே வரும் போது, ‘காசிக்கு போலாமா’? என்று எங்களை பயணம் அழைத்துச் சென்ற அண்ணாவிடம் பேசினேன்.
அவர் "அங்கே அழைத்துச் செல்ல எனக்கு தெரியாது. ஆனால், காசி ஆன்மீக பயணக்குழுவிடம் விசாரித்து போக முயற்சி செய்யலாம்" என்று சொன்னார். என்னுடன் வந்த உறவினர்கள் தாங்களும் வருவதாகச் சொன்னார்கள். காசிக்கு செல்ல வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தின் ஆர்வத்தை புரிந்து கொண்ட இறைவன் அங்கேயே காசி செல்ல ஆசியும் வழங்கி விட்டான். ஆம்! எனது தங்கை சுமதியும் அவர்களது உறவினர்களையும் சீரடி அழைத்துச் சென்ற குழுவினர் நவம்பர் மாதம் காசி பயணம் செல்வதாக தங்கை தகவல் அனுப்பினாள்.
அவர்கள் அழைத்துச் செல்லும் பயணம் சிறப்பாக
இருக்கும் நீங்கள் தாரளமாக செல்லலாம் என்று அவர்கள் உறவினர் ரவி என்பவரும் உறுதி கொடுத்தார்.
நான் திருப்பாம்புரத்தில் பேசிய உறவினர்களிடம் காசிக்கு யாரெல்லாம் வறீங்க எனக் கேட்டதில்
இரண்டு பேர் இணைந்தார்கள். மற்றும் இரண்டு உறவினர்களை சேர்த்து சேலம் SSAF குழுவோடு
இணைந்தோம். இந்த நிறுவனத்தினர் எங்களை சீரடி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது
அங்கே உணவு ஏற்பாடுகள், தங்கும் வசதிகள் எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும், காசிக்கு
இவர்களுடன் பயணிக்கலாம் என்று தங்கை சுமதி மீண்டும் முழு உத்தரவாதம் கொடுத்ததின் பேரில், ரயிலில், பயணம்
செல்ல முடிவு செய்தோம். செப்டம்பர் மாதம் எங்கள் அனைவருக்கும் முன் பதிவு கட்டணம் அனுப்பி
வைத்தோம்.
அதன் பிறகு, என்னுடன்
பயணத்தில் இணையும் எங்களுடைய உறவினர்கள் ஒரு குழந்தையின் குதூகலமான மனோநிலைக்கு மாறிவிட்டார்கள்.
என்னென்ன பொருள்கள் வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்தை காட்டினார்கள்.
பத்து நாட்கள் பயணம் என்பதால் வீட்டில்
இருக்கும் டிராவல் பேக் பத்தாது என்று எல்லோரும் புதிய டிராவல் பேக் வாங்க அவரவர் குடும்ப
உறவுகளோடு கடைகடையாக ஏறி இறங்கினோம். தலைக்குல்லா, ஸ்வெட்டர் , பெட்ஷீட், எடுத்துச்
செல்லக்கூடிய ஆடைகள் என திரும்ப திரும்ப மாற்றி டிராவல்பேக்கில் அடுக்கி வைக்கப்பட்டது.
வாயிருந்தால் அது அழுதிருக்கும்- அத்தனை முறை திறந்து மூடப்பட்டது.
ஒரு பொட்டுத் தங்கம் கூட வேண்டாம் என்று டிராவல்ஸ் நிறுவனத்தினர் அறிவுறுத்தி விட்டனர். அறுபது வயதைக் கடந்த அக்காக்கள் சிறு குழந்தைகளாகவே மாறி, பாசிமணிகள், வளையல்கள், தோடு என ஒவ்வொரு நாளும் தேடித்தேடி பொருட்களை வாங்கி வைத்தனர். யார் என்ன வாங்கினோம் அந்த பொருளை அடுத்தவர்கள் வாங்கி விட்டார்களா என அலைபேசி பரிமாற்றம் நடந்தது.
"மாஸ்க் எடுத்து வச்சுட்டியா? எதுக்கும் காதுக்கு பஞ்சு எடுத்து வச்சுக்கோ. ஏ.சி ட்ரெயின் அப்புறம் குளிரும். ஹேண்ட் பேக் வாங்கிடணும்- வெளியே போனா எடுத்துட்டு போறதுக்கு. அப்புறம் மழை வந்தால் என்ன செய்வது? ஹேண்ட்பேக்கில் வைக்கிற மாதிரி சின்ன குடையா வாங்கிடலாம். அப்புறம் அங்கே திருட்டு பயம் வேற அதிகமா இருக்குமாம். பணத்தை எல்லாம் கண்ட பக்கம் வைக்க கூடாது, பணத்தை சேப்டியா எடுத்து வையுங்க. எதுக்கும் மழைக்கோட் வாங்கி வச்சுக்கலாமா? மழை எது பெஞ்சுதுனா போட்டுக்கலாம்".
"அப்புறம்,
தினம் சாப்பிடுற மருந்து மாத்திரைகளை மறந்திடாம எடுத்துக்கணும்.
சாப்பிடுறதுக்கு அவங்க தட்டு,
மற்றும் தண்ணீர் பாட்டில் கொடுத்துடுவாங்க. ஆனால்,நாம எதுக்கும்
ஒரு சின்ன டம்ளர் எடுத்து வச்சுக்கலாம். அங்க பேப்பர் கப்பில் காஃபி கொடுத்தாங்கன்னா, நம்ம டம்ளரை
யூஸ் பண்ணிக்குவோம். அப்புறம் கெட்டில் இருந்தா எடுத்துக்கலாம். அங்க இப்ப குளிரா இருக்கும்.
சளிகீது பிடிச்சுதுனு வையி ரூம்ல இருக்கறப்ப சுடுதண்ணி வச்சுக்கலாம். ப்ளாஸ்க் எடுத்துகிட்டா
அதில சுடுதண்ணி ஊத்தி வச்சுக்கலாம். அப்புறம் சுக்கு காபி போட்டுக்கலாம். அதனால் சுக்கு
காபி பவுடர் கூட நான் ஒன்னு வாங்கி வச்சுட்டேன்".
"பேஸ்ட் பிரஷ் வாங்கியாச்சா? அதுக்கு பதிலா மவுத்வாஷ் வாங்கிக்
கொடுத்து இருக்காங்க. அது வாங்கிட்டா பல்லு வெளக்க வேண்டியது இல்லையாம். வாய்ல ஊற்றி
வாய் கொப்பளித்துக் கொண்டால் போதுமாம். அட அப்படியா! இருந்தாலும் கண்ணு நாம பிரஷ் எடுத்துக்கலாம்".
"அப்புறம் கங்கையில் குளித்தால், அந்த ஈரத்துணி எல்லாம் போட்டு வைக்கணும்
இல்லையா? அதுக்கு ரெண்டு மூணு பாலிதீன் கவர் எடுத்துக்கோங்க. அப்புறம் நம்ம
காசிக்கு போயிட்டு தீர்த்தம் வாங்கிட்டு வரதுக்கு ஜிப் போட்டு இருக்கிற பையை பார்த்து
எடுத்துக்கோங்க. அப்பதான் நாம வாங்குற சாமானம் எல்லாம் ஓடாம இருக்கும். இல்லனா பை எங்காவது
கீழே விழுந்து, தீர்த்தம் ரயில்ல ஓடிடுச்சுன்னா என்ன பண்றது? அதனால
எதுக்கும் நல்லா சேஃப்டியா ஒரு பை எடுத்து வச்சுக்கோங்க."
"அப்புறம் அக்கா, சுடிதார் வாங்கறாவங்க வாங்கிக்கலாம். ரயில்ல
போறதுக்கு வரதுக்கு கொஞ்சம் சவுரியமா இருக்கும்".
"இல்ல கண்ணு எங்களுக்கெல்லாம் சுடிதார் வேண்டாம் அதை போட்டுட்டு
எங்களுக்கு ஒத்து வராது வேண்டாம் கண்ணு".
"காசி கோவிலுக்கு போகும் போது கட்டுறதுக்கு ரெண்டு புதுப்புடவை நாம
எடுத்துக்கலாமா?"
இப்படியான தொடர் உரையாடல்கள் எங்கள் அனைவரையும்
காசி பயணத்தை எதிர்நோக்கி , புதுவிதமான குதூகலத்தையே தந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பயணம்
நல்லபடியாக முடிந்து திரும்பி வர வேண்டும் என்ற வேண்டுதலும் கூடவே எனக்குள்ளும், மற்றவர்களுக்குள்ளும்
இருந்து கொண்டே இருந்தது.
நான் உடன் அழைத்துச் செல்லும் நால்வரும்
என்னைவிட வயதில் மூத்தவர்கள். அதிலும் ஒரு அக்கா இதுவரை தனியாக குடும்பத்தை விட்டு
வெளியே வந்திராதவர். அதனால் ஊர் வந்து சேரும் வரை உடலும், மனமும்
ஒத்துழைக்க வேண்டும். இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும். சூழலும் ஒத்துழைக்க வேண்டும்.
எல்லாம் சரியாக அமைந்து எங்களுடைய பயணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று தினமும் வாழ்க
வளமுடன் என வாழ்த்துகளுடன் தொடர்ந்தேன்.
நாங்கள் செல்லும் நாளும் வந்தது. எங்களது
உறவினர்கள் கூடி, குடும்பமே வந்து வழி அனுப்பி வைக்க, நாங்கள்
அனைவரும் ஈரோடு இரயில் நிலையத்தில் நவம்பர் 23ஆம் தேதி காலை மிகுந்த மகிழ்வோடு வெஸ்ட்கோஸ்ட் ரயிலில்
ஏறினோம்.
(பயணம் தொடரும்)

No comments:
Post a Comment