நினைவுகளோடு - தாரணி தேவி



தளர்ந்த உடல், காப்புக் காய்த்த கைகள், உருமாறிப் போன முகம், மஞ்சள் பூச மறந்த தாலிக் கயிறு, கடுகுமணி போலத் தோடு, பிறை நிலவைப் போல் வெண்நிறக் கூந்தல், இடைவெளி இல்லாத் தோல் சுருக்கம், இவை அனைத்துக்கும் மத்தியில் பார்த்துப் பழகிய முகம். 

"அட ஈஸ்வரி, நீயா ஆத்தா இது?" என்று சோமசுந்தரம் கேட்க, "ஆமா சோமு... கண்டு புடிச்சுட்டயே..." என்றாள் ஈஸ்வரி.

"ஏரு பூட்டி, சீமைல இருந்து வந்து பொண்ணு கேட்டும், உங்க அப்புச்சி  ஊர் பண்ணாடி பேரனுக்குத் தான் கட்டி‌ கொடுப்பேன்னு ஒத்தக் காலுல நின்னாரே, இன்னிக்கு என்ன ஆத்தா கோலமிது? " என்று நடுநடுங்கும் குரலில் சோமசுந்தரம் கேட்க, அவன் கண்களைப் பார்க்கச் சக்தி இல்லாதவளாய் தொண்டையைத்  தீண்டியபடி,

"ஆமா சோமு, அதே ஊர் பண்ணாடி பேரனக்கட்டுன சீமாட்டி தான். பல சுமைகளோடு அந்தப் பெயரையும்  ‌இறக்கி வைக்க முடியாமல் சுமந்துகிட்டு இருக்கேன்", என்றாள் உழைத்துக் களைத்துப் போன  குரலில்.

சோமசுந்தரம் தன் கண்களை கடிந்து கொண்டான். "கண்ணீரை மட்டும் கொட்டி விடாதே, அவள் நொறுங்கி விடுவாள்... "என்று. 

இரட்டை வடச்சங்கிலி, பச்சைக்கல் அட்டிகை,  வைர மூக்குத்தி, மாணிக்கக் கற்கள் மின்னும் ஜிமிக்கி, மூன்றடுக்கு வெள்ளிக் கொலுசு, பனாரஸ் பட்டுத் தாவணி என வளம் வந்த ஈஸ்வரியை பார்த்துப் பழகிய கண்களாயிற்றே, 
அவன் இட்ட கட்டளையை ஏற்க முடியாமல், தேங்கிய கண்ணீரை மறைக்கத் திணறியது.

பாலூட்டி, சீராட்டி, ஏருபூட்டி, எட்டு மைல்கள்  தாண்டி பள்ளிக்கூடம் அனுப்பி, படிக்க வெச்சு, பட்டணத்து மாப்பிளைக்குக் கட்டி கொடுத்தா, மகள் மாசத்துக்கு ஒருக்கா தான் பார்க்க வருவானு பக்கத்துல, புள்ளையை பத்திரமா பாத்துகிற மாப்பிளை இருந்தா செய்தி கொண்டு வாங்கடானு எண்திசையும் ஆள் அனுப்பினார். "பக்கத்தூரு பண்ணாடி வீட்டுல ஒரு சொக்கத்தங்கம் இருக்குது, அப்புச்சி சொல்ல மீற மாட்டாரு , நம்ம வீட்டுப் பிள்ளைய மகராணி போல வெச்சுப்பாங்க..." என்று சேதி வர, வந்த ஜனமெல்லாம் வாயடச்சுப் போகும்படி  சீருசெனத்தியெல்லாம் தாராளமா செஞ்சு, ஈஸ்வரியை கட்டிக்கொடுத்தாரு  காளியப்ப கவுண்டர்.

அட, காளியப்ப கவுண்டர் மகளுக்குக் கண்ணாலம். வாங்கப்பா, ஒரு எட்டு போய் பாத்திட்டு வருவோம். திருவிழா கணக்கா ஒரு வாரமா நடக்குதப்பானு எட்டுப்பட்டியும் திரண்டு வந்து மனசும், வயிறும் நெறஞ்சு போற அளவுக்கு நடந்தது ஈஸ்வரியின் கல்யாணம். பட்டுச் சேலையில, அந்த குலசாமியே நடந்து வருதப்பானு ஈஸ்வரியை  பார்த்து வியந்தவர்களில் சோமசுந்திரமும் ஒருவன் .

சோமுவின் அப்பா காளியப்ப கவுண்டரின் கணக்குப் பிள்ளை . சோமு தன் வீட்டில் இருந்ததை விட ஈஸ்வரியின் வீட்டில் தான் அதிக நேரம் இருப்பான். 
தாயில்லாப் பிள்ளை என்று அன்போடும், அரவணைப்போடும் தன் சகோதரனைப் போல் சோமசுந்தரத்தைப் பார்த்துக் கொண்டாள் ஈஸ்வரி. 
அவளின் திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து சோமுவின் அப்பா இறந்துவிட , தன் மாமனுடன் இலங்கைக்குச் சென்றுவிட்டான் சோமசுந்தரம்.

பல வருடங்கள் கழித்து ஒரு திருமண விழாவில் இன்று தான் ஈஸ்வரியைப்  பார்கிறான். இத்தனை வருடங்களில் ஈஸ்வரியை இப்படி ஒரு தோற்றத்தில் பார்ப்போம் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை. நினைவுகளில் மாட்டி மீள முடியாமல், பல கேள்விகளுடன் நின்ற சோமசுந்தரத்தின் தோள்களைத் தட்டினாள் ஈஸ்வரி. 

  "சரி சோமு,நேரம் ஆச்சு, பேத்தி  காத்துகிட்டு இருப்பா" என்று சொல்லிவிட்டு இலையில் வைத்திருந்த இனிப்பை தன் முந்தானையில் முடிந்து கொண்டு, சிவந்த கண்களுடன், அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் புறப்பட்டாள் ஈஸ்வரி.

தைரியமும் , தன்மானமும் ஈஸ்வரிக்கு இருக்கற மாதிரி இருக்கனும்னு ஊரே மெச்சும். தோல் சுருங்கினால் மட்டும் அவள் மாறி விடுவாளா என்ன?  பாசத்தையும் தாண்டி அவளது நிலையை தன்னிடம் சொல்ல அவளின் தன்மானம் தடுப்பதைப் புரிந்து கொண்டான் சோமு.  அவள் நிலை தெரியாமல்  உதவி என்னும் பெயரில் அவள் மனதை ஊனமாக்க சோமுவிற்கு தைரியம் வரவில்லை. அவளைப்  பின் தொடர அவன் மனமோ கால்களிடம்  மன்றாடியது. நினைவுகளை நகர்த்தி நிகழ்காலத்திற்குள் சோமசுந்தரம் வரும் முன்பே சட்டென்று மறைந்து போனாள் ஈஸ்வரி.

அவளும் தன் கடந்தகால வாழ்க்கை நினைவுகளில் தொலைந்து போகத் தயாராக இல்லை. என்றாவது ஒரு‌ நாள் மீண்டும் அவளை சந்திக்க மாட்டோமா என்னும் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் பிரியா விடை பெற்றான் சோமசுந்திரம்.

சில எதிர்பாராத சந்திப்புகள் பதிலின்றி மீண்டும் நினைவுகளாகவே நம்மோடு பயணிக்கும். இவர்களின் சந்திப்பைப் போல....



விதைக்கப்படும் துயரங்கள் - ஈரோடு கதிர்



நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத் தேவைகள் கடந்து ஒவ்வொருவரும் நிறைய செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அவசியமானது போக, ஆசைக்கும், ஆடம்பரத்திற்கும், சாகசத்திற்கும் அவரவர் விரும்பிய வகையில் நிறைய செய்கின்றோம். செய்யும் அனைத்துமே இந்த வாழ்வுக்கானதுதான் என ஆழமாக நம்பினாலும், உண்மையில் அனைத்துமே அதற்கானதாக இருந்துவிடுவதில்லை என்பதுதான் அதிலிருக்கும் நகை முரண். அவற்றில் விபத்துகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.

வாழ்வின் தடமெங்கும் விபத்து சார்ந்த இழப்புகளை ஒவ்வொருவரும் சந்தித்தும், கேட்டும், கண்டும் வந்திருப்போம். அவற்றில், சாலை விபத்துகளைத்தான் அதிகம் கேள்விப்படுகின்றோம். பணியிட விபத்துகள், வீட்டில் நிகழும் விபத்துகள், சுற்றுலா விபத்துகள், இயற்கைப் பேரிடர் விபத்துகள்,  நீர்நிலை விபத்துகள்,  விமான விபத்துகள், ரயில் விபத்துகள், படகு, கப்பல் விபத்துகள், விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு விபத்துகள் என விபத்துகளின் களங்கள் நிறைய உண்டு. 

அடிக்கடி புழங்கும் சாலைப் பிரிவில் இரண்டு பேருக்கான அஞ்சலிப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் மத்திம வயதினராகத் தெரிந்தனர். அந்தப் பதாகைகள் இருந்த இடத்திலிருந்து 50 அடி தொலைவில், கனரக  வாகனங்களை கழுவும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. 

அன்றைய தினம் சாயப்பட்டறை ஆசிட் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரி சுத்தம் செய்யப்படுவதற்காக வந்திருக்கிறது. மூடியைத் திறந்து சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நபர் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்திருக்கின்றார். அவரைக் காப்பாற்றுவதற்காக முதலாளியும், இன்னொருவரும் பதட்டத்தில் இறங்க அவர்களுக்கும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்திருக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இறந்துபோன இரண்டு பேர்தான் பதாகைகளில் இருந்தவர்கள். முதலாளியும் இறந்துபோன சூழலில், வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வெறுமையாக மயான அமைதியோடு இருக்கின்றது. எத்தனையோ முறை இதுபோன்ற டேங்கர்களைக் கழுவியதுண்டு எனும் நம்பிக்கையோ, ஆசிட்டின் கொடூரம் குறித்த அறியாமையோ அந்த அரிய உயிர்களைக் கொய்து போயிருக்கலாம்.  

ஒவ்வொரு நாளும் இதுபோன்று எத்தனையோ விபத்துகளைக் கேள்விப்படுகின்றோம். விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது எனும் மனநிலை பலருக்கும் உண்டு. ‘நம்ம கையில் என்ன இருக்கு? தினமும் எத்தனையோ நடந்துட்டுத்தானே இருக்கு!’ என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கடந்து விடுகின்றோம். சற்று சிந்தித்தால், நாம் அறிந்த பல விபத்துகள் ஏறத்தாழ தவிர்த்திருக்கக் கூடியவைதான். 

ஒரு விபத்து மற்றவர்களுக்கு பெட்டிச் செய்தி. ஆனால் உற்றவர்களுக்கு, வாழ்நாள் முழுமைக்குமான மிகப் பெரிய துயரம். அது ஒருபோதும் பாடம் ஆவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. 

விபத்துகளை எளிதாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று தம் கட்டுப்பாட்டில் இருப்பது. மற்றொன்று தம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதிகமாக நிகழ்வது தம் கட்டுப்பாட்டில் இருக்கும் விபத்துகள்தான். அந்த விபத்துகளுக்கான மிக முக்கியமான காரணங்களாக சிலவற்றைப் பட்டியலிடலாம். அதீத நம்பிக்கை, அசட்டுத் தைரியம், விழிப்புணர்வு இல்லாதது, தவிர்க்க வேண்டியதை தவிர்க்காதது, கவனக் குறைவு, அலட்சியம், உடல்நிலை உள்ளிட்டவை அதில் அடங்கும்.

நட்புகளோடு சுற்றுலா செல்லும்போது சூழல் அறியாமல், பலரும் நீர் நிலைகளில் இறங்குவதுண்டு. அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரிந்திருக்கலாம். நீச்சல் பழகிய நீர்நிலைக்கும், அங்கிருக்கும் நீர்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் அனைத்து நீர்நிலைகளும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் தனித்த வடிவங்கள், போக்குகள் மற்றும் தன்மைகள் உண்டு. சிலருக்கு நீர்நிலைகள் குறித்த அனுபவமோ, பழக்கமோ துளியும் இருக்காது. எனினும், நட்புகளுடன் இருக்கும் துள்ளல் மனநிலையில் இறங்கி ஆபத்தை வரவழைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக கோடை விடுமுறைக் காலங்களில், ஆர்வமிகுதியில் நீர்நிலைகளுக்குச் செல்வோர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக் கொள்வதை அதிகமாகக் காண முடியும்.

சரியான வழிகாட்டுதல் இன்றி மலையேற்றம் செல்வோர் வழி தவறி காணாமல் போவதுண்டு. திடீரெனப் பெய்யும் பெருமழைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. உடல்நிலைப் பொருட்படுத்தாது மலை ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொண்டவர்களும் உண்டு. தமிழகத்தையே உலுக்கிய குரங்கனி தீ விபத்தின் பின்னால், அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் மலை குறித்த அறியாமை இருந்தது. எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். முறையான அனுமதி, தொடர்புடைய வழிகாட்டுதல்கள் இல்லாததால் அவர்களுக்கு உதவிகள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

சாகச மனநிலைக்காக, வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, ரீல்ஸ் எடுப்பதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பு அம்சங்களை பாராமல், அணைகளில் ஏறுவது, படகில் பயணிப்பது, பாரா க்ளைடிங்கில் பறப்பது, பைக்கில் சீறிப்பாய்வது, ரேஸ் விடுவது என எத்தனையோ செயல்கள் விபத்துகளாக மாறுவதைக் கண்டுகொண்டேதான் இருக்கின்றோம். இவைகளுக்கு ஈரம் உலராத உதாரணங்கள் நம்மிடையே நிச்சயம் இருக்கும்.

சூழல்கள் பல நேரங்களில் நமக்கு மிகப் பெரும் பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும், அவற்றையெல்லாம் வாழ்வின் பரபரப்பில் எளிதில் மறந்துவிடும் பலவீனம் கொண்டவர்கள்தான் நாம்.

நம்முடைய சாலைப் பயண தேவைகளும், விகிதங்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. ‘சும்மா வெளியில் போய்ட்டு வருவோம்!’ என சில நூறு கிமீ தூரம் கார் ஓட்டிச்செல்வது பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ‘டீ குடிக்க, சாப்பிட’ என நெடுந்தொலைவு சென்று வருவது தொடர்ந்து இயல்பாகிக் கொண்டிருக்கின்றது. ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு, அதனால ஒரு ட்ரைவ் போயிட்டு வந்தேன்!’ என சிலர் சொல்வதுண்டு.  

என்னுடைய பயிலரங்கில் ஒருவர், வீட்டில் கணவருடன் ஏற்பட்ட சிறு சண்டைக்கான எரிச்சலில், வீட்டில் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு சுமார் நூறு கி.மீ தூரம் ஓட்டியபிறகுதான் மனம் ஆறியதாகக் கூறினார். அவர் பயணித்தது மழை பெய்யும் சாத்தியம் கொண்டு ஓர் இரவு நேரத்தில். மிக முக்கியமானது அவருக்கு ஓரளவுதான் கார் ஓட்டத் தெரியும்.

நான் அறிந்த ஒரு ஓட்டுநர், மிகக் கடுமையான உழைப்பாளி, நல்ல மனிதர். தினமும் சென்னைக்கு இரவு முழுக்க லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக ஓட்டுகின்ற, மிகுந்த அனுபவம் மிக்கவர். ஒருநாள் முதலாளியின் குடும்பத்தினருடன் தென்மாவட்டத்திற்குச் செல்ல இவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். இரவு திரும்பி வரும்போது, அவர்களுடைய ஊரை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்ட விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது. அவரும், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணும் அந்த விபத்தில் மரணமடைந்தனர். மிகச் சமீபத்தில் சுமார் 150 கிமீ தொலைவிற்குள், வெவ்வேறு இடங்களில் மூன்று உயர் ரக கார்கள் நொறுங்கி உருக்குலைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் சுங்கவரி செலுத்தும் நெடுஞ்சாலைகளில் விபத்து நடந்த சில மணி நேரங்களில் அவை அப்புறப்படுத்திவிடுவதுண்டு. 

இரவு பகலாக தொலை தூரத்திற்கு லாரி ஓட்டும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநருக்கு, கார் ஓட்டுவது எளிதானதாகத் தெரியலாம். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நீண்ட காலம் ஒன்றில் பழகியவருக்கு, அதையொத்த ஆனால் வேறு வடிவத்தில், வேறு திறன் கொண்டிருப்பது சட்டனெ ஒரு கணத்தில் சவாலானதாக மாறிவிடலாம். அந்த ஒரு கணம் போதாதா!

பல ஆண்டுகளாக ஓட்டுகிறேன், பல லட்சம் கி.மீ தொலைவு ஓட்டியிருக்கின்றேன் என்பதுபோன்ற அதீத நம்பிக்கை மற்றும் பெருமைகளோடு மட்டும் வண்டியை இயக்கிவிடக்கூடாது. எப்போதுமே அதீத நம்பிக்கை யதார்த்தங்களை மறைக்க முயற்சி செய்யும். போதுமான ஓய்வு எடுக்காமல் வாகனம் இயக்குவது, பின்னிரவுகளில் தூக்கம் வந்தாலும் சீக்கிரம் இடம் சென்றடைந்துவிடலாம் என முயற்சிப்பது, சாலை நன்றாக உள்ளது, வண்டி சீறுகின்றது என வேகத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எதைச் செய்தாலும் ஆபத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்றே பொருள். மது போதைப் பயணங்கள் குறித்தெல்லாம் எதுவும் தனியே எழுத வேண்டிய தேவையில்லையென நினைக்கிறேன்.

சாலை விபத்துகள் எண்ணிகையின் பின்னாலும் ஒரு தோராயமான கணக்கு இருக்கத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரம் வண்டிகள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன என்றால், அதில் சுமார் பத்து விபத்துகள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அதன் சராசரியை இரண்டு விதமாகக் கணக்கில் கொள்ளலாம். ஒரு லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் பத்து விபத்துகள் நடக்கலாம் அல்லது 1000 வண்டிக்கு பத்து விபத்துகள் நடக்கலாம். எதற்கெடுத்தாலும் வண்டியை எடுத்துக்கொண்டு, பறக்க முற்படுபவர்களிடம் சொல்வது. ஒரு லட்சம் கிமீ தொலைவிற்குள், 1000 முறை வண்டியை இயக்குவதற்குள் சுமார் பத்து முறை சிறிதாகவோ பெரிதாகவோ, எங்காவது இடிக்கலாம், விபத்துகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் தூரத்தை வெளிநாடுகளில் நேர அளவீட்டில் சொல்வதுண்டு. காரணம் அவர்களின் சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து தன்மை அவ்விதமானது. ஆனால் நம் ஊர்களில் நேர அளவினை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் பயணிப்பது மிகுந்த ஆபத்தானது. காரணம், இங்கு எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எப்போதும் சாலை செப்பனிடப்படும் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் மேப் காட்டும் சராசரி நேரத்தைவிட முன்கூட்டியே சென்றடைவதை ஒருவித வெற்றியாகக் கருதுவோரும் இங்குண்டு. 

நமக்கு அனுபவம் உள்ளது, நமக்கு எதும் நடக்காது, சரி செய்துதான் பார்ப்போமே என்பது போன்ற நம்பிக்கைகள்தான் பல தருணங்களில் பெரும் துயரினைக் கொண்டுவந்துள்ளன. இது சாலை விபத்துகள் முதல் சாகச விபத்துகள் வரைப் பொருந்தும்.

யாருடைய உரையாடல் என்று நினைவில்லை. சமீபத்தில் கேட்டதில் ஆழப்பதிந்த உரையாடல் அது. ”எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. அந்த வாழ்வில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன். ஆனால் ஒருபோதும் சாகசம் என்ற பெயரில் ரிஸ்க் எடுக்கமாட்டேன்!” இது பலருக்குமான பாடம் என்றால் மிகையல்ல.

விபத்துகளினால் உறவு மற்றும் நட்புகளில் இழப்புகளைச் சந்தித்தவர்களை கணிசமாக நாம் அறிந்திருப்போம். அந்தக் குடும்பங்களின் நிலை விபத்துக்கு முன், விபத்துக்குப் பின் என மாறியிருப்பதையும் கண்டிருப்போம். அந்த மாற்றம் ஒருபோதும் கற்பனை செய்திடாதது. விபத்துகள் உயிர்களைக் கொய்திடும்போதே, துயரங்களை விதைத்து விடுகின்றது.

நாம் அறிந்த விபத்துகளின் பட்டியலை எடுத்து அதன் தன்மைகளை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே, அவற்றில் மிகப் பெரும்பான்மையானவை மிக நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எல்லாருக்குமே தாம் செய்யும் தவறு தெரியாமலோ, புரியாமலோ இல்லை. ஆனாலும் அதனைத் தொடர்ந்து செய்வதற்கு, அவர்களிடம் சில காரணங்கள் இருப்பதுண்டு. அவற்றில் மிக முக்கியமான காரணம் ‘நான் அப்படித்தான் செய்வேன்!’ எனும் மனோபாவம். அந்த மனோபாவத்திற்கு ‘நான் இப்படித்தான்!’ என தன்னை தவறாக வரையறுத்துக்கொள்வதும் ஒரு காரணம். சூழலுக்கும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப என்னை தகவமைத்துக்கொள்வேன் என்றில்லாமால், நான் என்றால் இப்படித்தான் என வரையறுத்தல் வெறும் வீம்பு மட்டுமே. வீம்பு செழித்து வாழும் இடங்களில், ஒருபோதும் அறிவு உயிர்ப்புடன் இருப்பதில்லை.

சொல்ல முடியா ரணங்கள் - கௌசல்யா ஞானேஸ்வரன், மூர்த்தி, கௌசல்யா பாஸ்கர்

 


தன்னை உயிர்பிக்க சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருந்த செல்போன் 'வானம் பார்த்து கிடந்தேனே, மழையாய் வந்து விழுந்தாயே, வழித் துணையே வழித் துணையே நீயே. ' என்று டிராகன் படத்தின் பாடலை தன் ரிங்டோனில் வெளியிட, கார்த்தியுடனும் சீனியுடனும் ஆலோசித்துக் கொண்டிருந்த  ரோஜா பூ நிறத்தழகி.  ரக்க்ஷிதா இதழோரத்து புன்னகையுடன் நிதானமாய் எட்டு வைத்து அதன் அழைப்பை  ஏற்று ஹலோ சொன்னாள். அடுத்த நொடி இருதயம் துடிக்க கண்கள் படபடக்க உடம்பு உதறலெடுக்க அப்படியே மயங்கி சரிந்தாள். அதைக் கண்டு இருவருமே துடித்துப் போனார்கள். 

கார்த்தி என்கிற கார்த்திகேயன் ஒரு தொழில் அதிபர். சீனிவாசன் அவரின் தம்பி. இருவரும் மிகுந்த பாசம் உடையவர்கள். இவர்களின் மனைவிகளும் அப்படியே அமைந்தது கண்டு இருவருமே வியப்படைவார்கள்.

கார்த்திகேயனின் மனைவி  தேவி  அனைவருக்கும் உதவும் குணமுடையவள்.    சீனிவாசனின் மனைவி ரேவதியும் அனைவரிடத்திலும் மிகப்  ப்ரியமாக இருப்பாள். அக்கா தங்கை போலவே இருவரும் இணைந்தே இருப்பார்கள்.

கார்த்திகேயன் தேவி தம்பதியருக்கு ரக்க்ஷிதா என்ற பெண் குழந்தை. சீனி தம்பதியருக்கு இன்னும் குழந்தை இல்லை. அண்ணன் தம்பி இருவருக்கும் வீடும் தொழிலும் ஒன்று என்பதால் அனைவரும் கூட்டுக் குடும்பமாக மிக சந்தோசமாக வாழ்ந்தனர். அனைவருக்கும் ரக்க்ஷிதா மட்டுமே 
செல்ல பிள்ளையானாள்.

ரக்க்ஷிதா தற்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். கார்த்திகேயன் தன் தந்தை செய்த தொழிலை இன்றளவும் நேர்மையாகவே செய்து வருகிறார். அண்ணன் தம்பி இருவருக்கும் தன் தந்தையின் மீது தீராத பக்தி உண்டு. கார்த்திகேயனின் தாயார், ரக்க்ஷிதா சிறுபிள்ளையாக இருக்கும்போது உடல் நலக் கோளாறு ஏற்பட்டு எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி உயிர் துறக்க.  கார்த்தியும் சீனியும் தன் தந்தை மேல் தீவிர பாசம் கொண்டனர்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்பவே இருவரும் நடந்து கொள்வார்கள். மருமகள்களும் தன் மாமனாரிடம் மிகுந்த மரியாதையுடனும் அதீத அக்கறையுடனும் செயல்படுவார்கள். 

சென்ற வருடத்தில் ஒரு நாள் அனைவரும் தொழில் சார்ந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ரக்க்ஷிதாவின் தாத்தா திடீரென்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட. அவ்வளவு பேரும் அவரை தூக்கி காரில் எடுத்துக் கொண்டு பிரபல மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு நோக்கி ஓடினார்கள். எத்தனையோ நவீனம் வந்த போதிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அது மற்றவர்களுக்கு நடக்கும்போது விறுவிறுப்பாக இருக்கிறது. நமக்கு நடக்கும் போது நம் மனம் பேதலித்து போய்விடுகிறது.

ஒரு மாத காலம் ஆகியும் யாரும் அவரவர் நிலைக்கு திரும்பவே இல்லை. 

தன்னை சுற்றி இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'அழுது அழுது' அடையாளம் தெரியாம கரைந்து போவதை  ரசிக்காத ரக்க்ஷிதா முதன் முறையாக தன் குரலில் காட்டிக் கொண்டிருந்த பணிவை சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு  குடும்பத்தாரிடம்  தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேச ஆரம்பித்தாள். "தாத்தா நம்பள விட்டுட்டு போயிட்டாங்கன்னு எத்தனை நாளைக்கு இப்படி சோகத்திலேயே மூழ்கிட்டு இருக்க போகிறோம்? தினம் தினம் இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டு தானேப்பா  இருக்கு? வெளியில நடக்கும்போது அதை ஒரு காட்சியாகவும்  சம்பவமாகவும் பார்க்கிறோம். நம்ம வீட்ல நடக்கும்போது அந்த இழப்பை நம்மளால தாங்க முடியல. எல்லோரும் ஒருநாள் போய் தானே ஆகனும். இப்படித்தானே உலகம் பூராவும் நடக்குது. இதில் வருத்தப்படுவதில் எந்த ஒரு தெளிவும் வராது. தாத்தா கட்டி வைத்த மலைக்கோட்டையை நாம் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அவர் சொன்ன வழியில் நடப்பது தானே தாத்தாவுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை" என்று அவள் கம்பீரமாக சொல்ல.  அதுவரை கார்த்தியும் சீனியும் நாம் சிறுபிள்ளை என்று நினைத்திருந்த பிள்ளை இப்படி பேசுகிறாளே என்று விழித்திரை விலகாமல் வியப்பில் ஆழ்ந்து குடும்பமே அவளை கட்டி அணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

ரக்க்ஷிதாவின் பேச்சில் இருந்த உறுதியும் வார்த்தைகளில் இருந்த நேர்மையும் கண்டு தன் பிள்ளையின் மனம் வருந்தாத படி அனைவருமே இயல்புநிலைக்கு திரும்ப.  அதன் பின் அண்ணன் தம்பி இருவருமே தொழில் சார்ந்த பணிக்கும் எந்த ஒரு முக்கிய முடிவுக்கும் ரக்க்ஷிதாவை கலந்தாலோசிக்கவே செய்தார்கள்.

அந்த மாதிரியான ஒரு ஆலோசனையின் போது தான்  ரக்க்ஷிதா மயங்கி சரிய. .கார்த்தியும் சீனியும் பதட்டத்தோடு ரக்க்ஷிதா அருகே ஓடினர். முகத்தில் தண்ணீர் தெளித்த பின்பே கண் திறந்து பார்த்தாள். அருகில் இருந்த ஷோபாவில் இருவரும் உட்கார வைத்தார்கள்.

 "ரக்க்ஷிதா..ரக்க்ஷிதா. என்னாச்சும்மா.." இருவருமே ஒருசேர கேட்டார்கள்.

"தெரியலப்பா..திடீர்னு மயக்கம் வந்திடுச்சு"

"போன்ல யாரு? என்ன சொன்னாங்க" கார்த்தி கேட்டார்.

"ப்ரண்ட் தான் கூப்பிட்டிருந்தா. ஹலோ சொன்னது தான் தெரிஞ்சுது. அப்படியே மயக்கம் வந்திடுச்சு"

"சரி வா..உடனே ஹாஸ்பிட்டல் போலாம்” என்று பரபரக்க. 

"அப்பா..சாதாரண மயக்கத்துக்கெல்லாமா ஹாஸ்பிட்டல் போகணும்?"

"இந்த காலத்துல எதையும் சாதரணமாக எடுத்துக்க கூடாது..எதுவாக இருந்தாலும் ஹாஸ்பிட்டல் போய் க்ளியர் பண்ணிக்கலாம்"

"சரிப்பா..நான் நாளைக்கு காலேஜ் போறப்போ அப்படியே போய் பார்த்துக்கறேன்"

"இன்னைக்கு பசிக்கறதுக்கு நாளைக்கு சாப்பிட முடியுமா?" என்றார் சீனி.

"சித்தப்பா..என்ன நீங்க லாஜிக்கே இல்லாம பேசறீங்க"

"சாதரணமாக பேசிட்டு இருக்குறதுக்கே கரெக்டான லாஜிக் வேணும்னு சொல்லற. ஆனா ஹெல்த் விசயத்துல மட்டும் ஏன் கரெக்டா இருக்கனும்னு நினைக்க மாட்டேங்குற?"

"ப்ளீஷ் சித்தப்பா. நாளைக்கு பார்த்துக்கறேன்..எனக்கு எந்த தொந்தரவும் இல்ல. என்னோட ஹெல்த் கன்டிஷன்ல எனக்கு நம்பிக்கை இருக்கு"என்று கெஞ்சலாகக் சொல்ல

"இது தான் லாஸ்ட் வார்னிங் உனக்கு.. ஏதாவது ஒன்னுனா எங்களால தாங்க முடியாது.  சாக்கு போக்கு சொன்னா நான் பொல்லாதவன் ஆகிடுவேன் பார்த்துக்க" என்றபடி கார்த்திக் எழுந்து சென்றார். ரக்க்ஷிதா எழுந்து சென்ற பின்பே சீனி எழுந்து சென்றார்.

ரக்க்ஷிதா மொபைலில் சற்றுமுன் வந்திருந்த எண்ணிற்கு அழைத்தாள்.
"ஏய் கல்பனா..எனக்கு அன்னைக்கு மாதிரியே திரும்பவும் இன்னைக்கு மயக்கம் வந்திடுச்சுடி"

எதிர்முனையில் இருந்தவள் ரக்க்ஷிதாவின் நெருக்கமான தோழி கல்பனா . 

ஒரு 40 நாட்களுக்கு முன் தான் அந்த சம்பவம் நடந்தேறியது. .அதனை ரக்க்ஷிதா வீட்டில் கூறாமல் மறைத்திருந்தாள்.  வில்லிலிருந்து  புறப்படும் குறிவைத்த அம்பு போல ஒரு 'ஈச்சர் வேன்' இருவரும்ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்த போது ரக்க்ஷிதாவை குறி வைத்து வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த கல்பனா 'ஏ ரக்சு' என்று அலறியபடி முடிந்தவரையில் தன் பலத்தை ஒன்று திரட்டி அசுர வேகத்தில் ரக்க்ஷிதாவை ஓரமாக தள்ளிவிட்டு தானும் கீழே விழுந்தாள். வேகமாகச் சென்ற ஈச்சர் வேகமான புயல் காற்றை முகத்தில் அறைந்து விட்டு மறைந்தது.

விதி நடத்தும் பாடத்தை மாற்றி எழுத யாரால் இயலும்?? கீழே கிடந்த கல்லில் ரக்க்ஷிதாவின் பின் தலை மோதியது. கண்ணில் ஏதோ ஒரு மின்னல் வெளிச்சம் போன்ற ஒளி வினாடியில் தோன்றி மறைந்தது. 

கடந்த 10 நிமிடங்கள் நடந்த விஷயங்கள் அனைத்தும் மறந்து போயின ரக்க்ஷிதாவிற்கு.  கல்பனாவின் கை கால்களிலும் சிறுசிறு காயங்கள்.  அருகில் இருப்பவர்கள் உதவியுடன் முதலுதவி செய்து வீட்டிற்கு சென்றனர் இருவரும்.
 
தந்தையர்களின் மனதை நோகடிக்க விரும்பாமல் மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை போட்டுவிட்டு படுத்தாள் ரக்க்ஷிதா.
'4 நாட்கள் வலி இருக்கும். எதற்கும் ஒரு 'எம்ஆர்ஐ' செய்து கொள்ளலாம்' என மருத்துவர் கூறி இருந்ததை ரக்க்ஷிதா மறந்தே போயிருந்தாள்.  அதன் பின்னர் கல்லூரியில் ஒரு முறை திடீரென கண்கள் இருட்டி மயங்கினாள். அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட தன் குடும்ப டாக்டர் பரசுராமிடம் சென்றாள்.

"வா ரக்க்ஷிதா..நீ மட்டும் வந்திருக்க ..அப்பா, சித்தப்பா யாரும் வரலையா? எல்லோரும் ஃபைன் தானே"

"ஃபைன் டாக்டர்.  சின்ன ப்ராப்ளம்.  அதான் டிஸ்கஸ் பண்ண வந்தேன்"
என்று நடந்தவற்றை கூறினாள். கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்த பரசுராம்
"சரி, நீ பயப்பட வேண்டாம். ஆனால் கண்டிப்பாக எம்ஆர்ஐ பார்த்தாக வேண்டும்"
என்று கூறி சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்திருந்தார்.

''தேங்க்யூ சார்'' என்று கூறிய ரக்க்ஷிதா நகர்ந்ததும் தனது நண்பர் கார்த்திகேயன் அதாவது ரக்க்ஷிதாவின் தந்தைக்கு போன் செய்தார்.  அவர் பிஸியாக இருக்கவே அடுத்த நொடி தாமதிக்காமல் சித்தப்பா சீனிவாசனை தொடர்பு கொண்டார். பதட்டத்துடன் சீனிவாசனிடம் "இன்னும் பத்து நாட்களுக்குள் ரக்க்ஷிதாவிற்கு ஒரு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும்.
மற்றதை நேரில் பேசிக் கொள்வோம். சோ ப்ளீஸ் கம் இமிடியட்லிட்லி டு மை கிளினிக்" என்று கூறிவிட்டு போனை வைத்தார்.

இதை கேட்ட சீனிவாசன் உடல் வியர்த்தது. இன்று ரக்க்ஷிதா மயங்கி விழுந்ததற்கு காரணம் இதுதானா என்று மனதில் கேள்வி எழுப்பிக் கொண்டே வெளியில் வந்தார். அதற்குள் கார்த்திகேயனும் வர நமது டாக்டர் பரசுராம் கால் பண்ணி இருக்கார் என்று கூறிக்கொண்டு சீனிவாசனின் அருகில் வந்தார் கார்த்திகேயன்.

"நான் பேசிட்டேன் அண்ணா. பேசிக்கலாம் வாங்க"  என்று சீனிவாசன் கூற இருவரும் அலுவலகம் சென்றனர். அதன் பின் யாரும் இதைப் பற்றி பேசாமல் மறந்தே போயிருந்தனர்.  அடுத்த நான்கு நாட்களில் நடந்த சம்பவம் தான் அனைவரையும் நிலைகுலையவைத்தது. கல்லூரிக்கு அவசரமாக கிளம்பி கொண்டிருந்த ரக்க்ஷிதா கண்கள்  இருட்டி  வாந்தி எடுக்க கை கால்கள் உணர்ச்சியற்ற நிலையில் மயங்கி சரிந்தாள். டாக்டர் பரசுராமிடம் தூக்கிக் கொண்டு ஓடினர்.

"நான் போன வாரமே சொல்லியிருந்தேனே 'சி ஈஸ் இன் க்ரிட்டிகல் ஸ்டேஜ் அப்படினு? நீங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை?"  என்றார் மருத்துவர், கார்த்திகேயனை பார்த்து. கார்த்திகேயனும் தேவியும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்ன டாக்டர் சொல்றீங்க? இதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாதே.  யாரிடம் சொன்னீங்க?"

"உங்கள் தம்பி சீனிவாசனிடம் தான்"

இதை கேட்ட தம்பதியருக்கு அதிர்ச்சியுடன், குழப்பமும் சூழ்ந்து கொண்டது.

"சரி டாக்டர். நடந்தவைகளை விட்டு, உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார் கார்த்திகேயன். 
கார்த்திகேயன்,தேவி இருவருக்கும் தன் மகளின் நிலையை நினைத்து,
உயிர் போகும் வலியுடன் போராடிக் கொண்டிருந்தனர்.
மருத்துவர் சிகிச்சையை இன்றே ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறிச் சென்றார்.

சீனிவாசனும், ரேவதியும் அப்பொழுதுதான் வந்து சேர்ந்தனர். மனதில் கேள்வியுடன் கார்த்திகேயன் சீனிவாசனைப் பார்க்க, "ஆபிஸ் மீட்டிங் முடித்து விட்டு வர நேரம் ஆகிவிட்டது. இப்போ ரக்க்ஷிதா எப்படி இருக்கிறாள்‌?" என  சீனிவாசன்  கேட்கும் பொழுது தான் கார்த்திகேயனுக்கு 'சுரீர்' என்றது..
ஆனால் எதுவும் பேசாமல் "அவள் நன்றாக இருக்கிறாள். அவளுக்கு நடக்கும் ஆப்ரேஷன் அவளை குணமாக்கி பழைய என் மகள் எனக்கு  கிடைப்பாள்"
என்றார் குரலில் கடுமையும் வேதனையும் கலந்து. ஆனால் சீனிவாசனிடம் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு சென்று வருவதாக தேவியிடம் கூறிவிட்டு,
நேராக கல்பனாவிடம் சென்றார். 

கல்பனாவின் அம்மா கதவை திறக்க, பின்னால் வந்த கல்பனாவும் கார்திகேயனைப் பார்த்து,
"வாங்க அங்கிள், ஆண்ட்டி கிட்ட பேசினேன்..அவங்க எல்லாம் சொன்னாங்க..
ரக்க்ஷிதா இப்ப எப்படி இருக்கா?" என்றாள் குரல் தழுதழுக்க..

"கொஞ்சம் சீரியஸ்..ஆனால் பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்கார்மா" என்றார் கண்களில் வரும் நீரை நிறுத்த போராடிக் கொண்டே.

அங்கே ஏதோ ஒரு நிசப்தம், யார் பேசுவது என்ற குழப்பத்தில்..கார்த்திகேயனே அந்த அமைதியை கலைத்தார்..

"என்ன நடந்தது கல்பனா?
ரக்க்ஷிதா வேறு ஏதாவது உன்கிட்ட சொன்னாளா?"

"அங்கிள்.." என்று ஆரம்பித்தவள்..தன் சித்தப்பாவின் ஆதங்கமாய் ரக்க்ஷிதா கூறியதை  சொல்லத் தொடங்கினாள். 'வளைந்து செல்லும் வாழ்க்கையில் நுழைந்து தேடினாலும் நாம் பூக்களை பார்க்க போவதில்லை. வற்றிப்போன மூங்கில் கூட இலை விட்டு பூ பூக்கிறதே. நாம் மழலை மொழி கேட்காமலேயே மடிந்து போயிடுவோம்' என்று சித்தப்பாவும் சித்தியும் மனம் உடைந்து அழுததை அவள் பார்த்ததாகவும் பெற்றால் மட்டுமே பிள்ளையாகாது என்பதை என் சித்தப்பாவுக்கு நிரூபிக்க போகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய கடமை அப்பாவை விட சித்தப்பாவுக்கே அதிகம் சேரும் உலகத்துல யார் என்ன சொன்னாலும் எங்க சித்தப்பா தான் என் உயிர். அவருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று அன்று சொன்னதை முழு மூச்சுடன் கூறி முடித்தாள் கல்பனா. இருவருக்கும் நன்றி கூறிவிட்டு  மருத்துவமனைக்கு சென்றார்.

 'அனைத்து ஜீவராசிகளும் அங்கீகாரத்துக்கு தான் ஆசைப்படுகிறது. நாம சீனியையும் ரேவதியையும் கவனிக்காம விட்டுட்டோமோ அவங்க முகத்தில மலர்ச்சி இல்லைங்கறதே எனக்கு ஏன் தெரியாம போச்சு! இவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள்' என்று உணர்ந்தவர்
சீனிவாசனிடம் சென்றார்.

"ஏன்பா இப்படி பண்ணே" என்றார்.. 
சீனிவாசனோ இதயத்துள் அலைமோதும் உணர்ச்சியை முகத்திலும் கண்ணிலும் காட்டாமல் இருந்தார்.
 
அதில் அமைதி சூழ்ந்தது இருவரிடமும். கார்த்திகேயனே பேச்சைத் துவங்கினார்.
"உனக்குள் தெளிவு இல்லாததால் பயமும் குழப்பமும் சேர்ந்து உன்னையே நீ அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாய் சீனு" என்றார் மென்மையான குரலில்.

"என் மேல வீசப்பட்ட சொல்லாலையும் கல்லாலையும் நான் இப்படி ஆயிட்டேன்"

"ரக்க்ஷிதா உனக்கும் மகள் தானே..
அவள் மேல் இவ்வளவு வன்மம் ஏன்? "

 ரக்க்ஷிதாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது

"ஆமாம்..வன்மம் தான். நம்மளோட சடங்கும்,சமுதாயமும் சொல்லிக் கொடுத்த வன்மம். போகும் இடத்தில் பார்க்கும் ஏளனப் பார்வை, இத்தனை வருஷமா குழந்தை இல்லையாங்குற கேள்வியில்  இருந்து வந்த வன்மம். கூட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட போது வந்த வன்மம். நானும் ரேவதியும் நல்வர்களா, கெட்டவர்களா என்பதை பார்க்காமல் குழந்தை இல்லைங்கறதுக்காக கேலிப் பார்வையை சுமந்து கொண்டு நின்ற வலி எங்களுக்கு மட்டுமே தெரியும் 
ஆனால் நீங்கள் ஒரு நாளும்‌ அதை கவனித்ததில்லை. இந்த சமூகம் ரேவதியை இன்றளவும் ஒதுக்கியேதான் வைத்துள்ளது"
என்று விரக்தியுடன் பேசிகொண்டிருந்தார்.

மீண்டும் கார்த்திகேயனே ஆரம்பித்தார்.
"ரக்க்ஷிதாவிடம் நீ உயிர் கேட்டிருந்தாலும் உடனே கொடுத்திருப்பாள்.
உன் மேல் அவ்வளவு பிரியம்" என்றார்.

கண்களை  இரண்டு வினாடிகள் மூடித்திறந்த சீனிவாசன்
"தவறுதான். அவள் மூலமா வாழ்க்கையை பார்க்கிறதை விட்டுட்டு என் மூலமா வாழ்க்கையை பார்த்துட்டேன். வாழ்க்கையில என் காலுக்கு மட்டும் தான் முள் குத்துது நெனச்சிட்டு இருந்தேன். இப்ப ஒரு முள்காட்டையே சுத்தம் பண்ற விஷயம்னு நான் முடிவுக்கு வந்துட்டேன். வீண் பழிகளை தாங்க முடியாமல் வந்த கோபம் ஏனோ எனக்கென்று இருந்த உறவைக் கூட வெறுத்து ஒதுக்க  
வைத்து விட்டது..ஆனால் வெறுப்புக்கும் எல்லைக் கோடு உண்டென்பதை இப்ப தெரிஞ்சுகிட்டேன்.. ரக்க்ஷிதாவின் இந்த நிலமையை பார்த்து கல்லாக நிற்கும் சக்தி எனக்கில்லை" என்று கதறி அழுதார் சீனிவாசன்.

கார்த்திகேயன் மெதுவாக சீனிவாசனின்  கையை பற்றிக் கொண்டு "உன் மகள் உனக்காக  எதையும் செய்வாள்" என்று சொல்ல.. "அண்ணா என் உயிரே ரக்க்ஷிதா தான். நம்மையெல்லாம் உயிர்ப்பித்த கம்பீரமான ரக்க்ஷிதா எப்போதும் நம்முடன் வேண்டும் அண்ணா.." என்று கண்ணீருடன்  சொல்ல..

அதற்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளிவந்த டாக்டர்,
"ஆப்ரேஷன் முடிந்தது..நீங்கள் ரக்க்ஷிதாவைப் பார்க்கலாம்..யாரும் அவள் முன் அழ வேண்டாம்..மூன்று மாதங்கள் மிகக் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்..மற்றதை பேசிக் கொள்ளலாம்" என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார். 

கார்த்திகேயனும், சீனிவாசனும் வருத்தம் கலந்த நிம்மதியுடன் ரக்க்ஷிதாவின் வார்டை நோக்கி நடந்தனர் !


(ஈரோடு வாசல் - படைப்பு குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் கௌசல்யா ஞானேஸ்வரன், மூர்த்தி, கௌசல்யா பாஸ்கர் ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

மாற்றம் நம் கையில் - அன்புமணி வி.



அப்பாவுடன் சைக்கிள் சவாரி செய்து கொண்டிருந்தாள் மலர். அவளுக்கு மட்டுமல்ல, அப்பா ரவிக்கும் அது மிகவும் பிடித்த பயணம் எப்போதும். தந்தை - மகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பேசித் தீர்ப்பார்கள். 

வீட்டிலும் பேசிக் களிப்பார்கள்தான். ஆனால் அம்மாவிற்கு சலிப்புத் தட்டி விடும். அதனால் மூவருக்கும் பொதுவானதை, பிடித்ததை செய்வார்கள். 

வெளியில் வந்து விட்டால் இருவருக்கும் கொண்டாட்டம்தான். பொதுவாக ஞாயிறு காலையில் இப்படிக் கிளம்புவார்கள். இன்றும் அப்படித்தான். 

"அப்பா! " மலர் அழைத்தாள்.

"என்னடா?"

"எனக்கொரு சந்தேகம்"

"என்ன புதுசாய்?"

"போன வாரம் அம்மாயி வீட்டுக்குப் போயிருந்தோம் இல்லையா?"

"ஆமா"

"அப்போ பக்கத்து வீட்டு ஜானகியோட அப்பா திடீர்னு இறந்து போனார் இல்லையா?"

"ஆமாம்மா. அது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது"

"ஆனா, அவங்க அம்மாவுக்கு ஏம்பா எல்லாரும் வெள்ளைப் பொடவை போட்டாங்க? "

"அவங்க புருஷன் இறந்துட்டார் இல்லையா? அதான்"

"ஆனாப்பா…இப்போ எல்லாம் யாரும் வெள்ளைப் பொடவை கட்டறது இல்லைதானே? அம்மாயி கூட கலர் பொடவை கட்டறாங்கதானே? அப்புறம் ஏன்?"

" உண்மைதான் கண்ணு. ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயமுன்னு இருக்கே. அதனால கொஞ்ச நாளைக்காவது அப்படித்தான்."

"போன வருஷம் அப்பத்தா இறந்தப்ப தாத்தாவுக்கு எதுவும் சடங்கு செய்யலியேப்பா, அது ஏன்?"

" ஆம்பளைங்களுக்கு அது மாதிரி இல்லடா"

"அப்போ... பொம்பளைகளுக்கு மட்டும் ஏம்பா?"

"யோசிக்க வேண்டிய விஷயம்தாண்டா. இப்போ காலம் நிறைய மாறிடுச்சு. ஆனா, இன்னும் சிலது மட்டும் மாறலே"

"மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்கணும்னு சொல்லுவீங்க இல்லையாப்பா?"

"ஆமாடா...கண்டிப்பா. காந்தித் தாத்தா சொன்னது அது"

வீடு வந்துவிட இருவரும் உள்ளே நுழைந்தனர். தனது 14 வயது மகளின் பக்குவத்தை எண்ணி  வியந்தார். அவளை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டார்.

சிலைகளை வடித்துக் கொடுக்கும் கலைஞர் ரவி. சென்னையில் இதற்கான படிப்பை விருப்பப்பட்டுப் படித்தார். சொந்த ஊரில் வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார். அனைத்து மதக் கடவுள், தலைவர் எனப் பல்வேறு சிலைகள் வடிப்பார்.  அதனால் அவருக்கு எல்லோரும் சமம். அதையே பெண் குழந்தைக்கும் சொல்லி வளர்த்தார்.

மலருக்கும், மனைவி வள்ளிக்கும் கூடக் கற்றுக் கொடுத்துள்ளார். அதிக ஆர்டர்கள் வரும்போது குடும்பமே உட்கார்ந்து செய்யும். 

அவர் படித்த புத்தகங்கள் அவரை சிறந்த மனிதனாக செதுக்க உதவின. அது போல் தன் மகளையும் அழகான சிற்பமாகச் செதுக்கிக் கொண்டிருந்தார். எதற்கும் தடை விதிப்பது இல்லை. அவளது எதிர்காலம் குறித்து பல கனவுகள் உண்டு அவருக்கு. 

ஒரு மாத காலமாய் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு ஆர்டருக்காய் இரவு பகல் பாராது வேலை செய்து கொண்டிருந்தார். வள்ளியும், மலரும் அவருக்குத் தேவையான உதவிகள் செய்து வந்தனர். அன்று அப்போதுதான் அவர்கள்  இருவரும் தூங்கச் சென்றனர். 

ரவி தானும் சிறிது நேரம்  பணி செய்யும் இடத்தில் இருந்த கட்டிலில் படுத்தார். நடுவில் கண் விழித்து எழுந்தவர் வேலையைத் தொடர்ந்தார். விடிந்த பின்னும் வேலை தொடர்ந்தது. 50 அடி உயரமான சிலையின் கண்களைச் செதுக்குவதில் கவனமாக இருந்தவர், யாரோ அழைக்கவும் திரும்பினார். அதில் அவரது கையில் இருந்த உளி கீழே நழுவ, அதைப் பிடிக்க கையை நீட்டியவர், நிலை தடுமாறி கீழே தலைகுப்புற விழுந்தார். 

தலை தரையில் மோதியதில் பலத்த அடிபட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளிருந்து வள்ளியும், மலரும் ஓடி வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி அவர்களை உலுக்கி விட்டது. அக்கம் பக்கத்தினர் அனைவரும் கூடி விட்டனர். உடனடியாக 108 க்கு தகவல் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துப் போயும் பயனில்லை. அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். உறவினர் எல்லோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மலரும், வள்ளியும் நடந்த விபத்தை நம்ப முடியாமல் வாய் அடைத்துப் போய் இருந்தனர். சடங்கு சம்பிரதாயம் ஆரம்பமாகியது. கடைசியாக அந்த வெள்ளைப் புடவை மாமா கையில் இருந்ததைக் கவனித்தாள் மலர். 

அவ்வளவுதான். விருட்டென எழுந்தாள். மாமாவிடம் சென்றாள்.

"மாமா! இந்த வெள்ளைப் புடவை வேண்டாம்"

"அப்படி சொல்லக்கூடாது பாப்பா. நீ சின்னப் பொண்ணு. உனக்குப் புரியாது"

"ஏன் புரியாமல்? நல்லாத் தெரியும் மாமா. இந்தக் காலத்தில் எதற்கு இதெல்லாம் ?"

"இது சாஸ்திரம் மலர்"

"என் அப்பாவே இதை விரும்ப மாட்டார்."

"கொஞ்ச நாள்தான் மலர். அப்புறம் அம்மா கலர் புடவை கட்டலாம்."

"அப்புறம் எதற்கு மாமா? இப்பவே ஏன் கூடாது? அந்த மாற்றம் இந்த சடங்கை அகற்றுவதில் தொடங்கட்டும். அப்போதுதான் இந்தப் பழக்கத்தை வேரோடு களைய முடியும்."

வள்ளி எதுவும் சொல்லாமல் தனது கணவரின் சாயையாக மாறிய மலரை, மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மலர் எல்லோர் மத்தியிலும் உறுதியாக நின்றாள். "அப்பா எப்போதும் மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பார். எனவே இதை மாற்றியே ஆக வேண்டும்" என்றாள்.

அனைவரும் வேறு வழியின்றி தலை அசைத்தார்கள். ரவியின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச்  செல்லப்பட்டது. அப்பாவின் உடலுக்கு முன்னே  நெருப்புச் சட்டி பிடித்தபடி இடுகாடு நோக்கி செல்லத் துவங்கினாள் மலர்.

நூறு ரூபாய் - தாரணி தேவி


தாயி லட்சுமி, நேரம் ஆச்சு பாரு. இப்போ புறப்பட்டா தானே நேரத்துக்கு போக முடியும் என்ற வெங்கடேஷின் அன்பு அழைப்புக்கு, "இதோ வந்துடனுங்க மச்சான்" என்று காதலோடு, பிள்ளையை ஒரு கையிலும் கூடையை மறு கையிலும் எடுத்துக் கொண்டு வீட்டின் வாசல் கதவின் முன் வந்து நின்றாள் லட்சுமி.

மச்சான், இன்னிக்கு வேலைக்கு வரலனு முதலாளிக்கிட்ட சொன்னீங்களா? என்ற லட்சுமியைப் பார்த்துத், "தாயி, பொழுது கிளம்புனதும் போய்ச் சொல்லிவிட்டு, இந்த மாத சம்பளம் இருநூறு வாங்கிட்டு வந்தேன். நூறு ரூபாயை பொண்ணு படிப்புக்கான சேமிப்பில் போட்டுட்டேன், மீதியை நம்ம செலவுக்கு வச்சிருக்கேன்" என்று முழு விவரத்தையும் சொல்லி முடித்தான்.

"கதவ நல்லா பூட்டு தாயி. வாரதுக்கு பொழுது ஆயிடும்" என்று சொல்லிக்கொண்டே தனது மகள் பொன்னியை வாங்கி, மிதிவண்டியின் முன்னால் அமர வைத்து விட்டு லட்சுமியை பின்னால் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான் வெங்கடேஷ்.

திருமணமாகி இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகிறது. இருந்தும் பாசத்திற்கு பஞ்சமில்லாத வாழ்க்கை. "கிறுக்குப்பய, பொண்டாட்டி முந்தானையில மயங்கிக் கிடக்கானு ஊரே கேலி செய்தாலும், என் தாயி அவ" என்று விட்டுக் கொடுக்காமல் மனைவிக்கு மகுடம் சூட்டும் பெரும் காதலன் அவன்.

"மச்சான், கொஞ்சம் வெரசலா மிதீங்க. வெயில் வந்தா புள்ள கிறங்கிப் போயிடும்" என்றாள் லட்சுமி. "சரி தாயி" என்று வேகத்தை அதிகப்படுத்தினான் வெங்கடேஷ். சரியாக காலை பூஜைக்குக் கோவிலை அடைந்தனர்.

தான் கொண்டு வந்த பூக்கூடையை எடுத்துக் கொண்டு, தன் மகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கோவில்  உள்ளே சென்றனர். பொன்னிக்கு ஏழு வயது. அங்கு இருந்த ராட்டினதைப் பார்த்ததும் விளையாட வேண்டும் என்று தன் அப்பாவிடம் சொன்னாள்.

"சரி தங்கம், சாமி கும்பிட்டு வந்து விளையாடலாம்" என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான். திருமண நாளிற்காக தன் மனைவிக்கும், மகளுக்கும் புதுத் துணி வாங்கிக் கொடுக்க வேண்டும், நல்ல ஹோட்டலில் மதிய உணவு, லட்சுமிக்கு மெட்டி என்று மனதிற்குள் பல கணக்குகளைப் போட்டபடி முன் சென்றான். லட்சுமி பின் தொடர்ந்தாள்.

"மச்சான், எனக்குப் பச்சை கலர் ரிப்பன் வாங்கித் தாங்க" என்று கேட்ட லட்சுமியை பார்த்துச் சிரித்துக்கொண்டே கோவிலின் மூலவர் சன்னதியை அடைந்தனர்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. லட்சுமி பெண்கள் வரிசையில் நின்று கொண்டாள். அவளுக்கு எதிரில், ஆண்கள் வரிசையில் மகளுடன் வெங்கடேஷ் நின்றான். பால், தயிர், இளனி என்று மூலவரை அபிஷேகத்தால் குளிர வைத்து, திருநீறு, சந்தனம், மஞ்சள் பூசி மனம் மகிழ வைத்து, தாமரை மலர்களால் மாலை இட்டு, தங்கம், வெள்ளி என்று அகம் முழுதும் நிரப்பி ஒப்பனை செய்து, அலங்காரம், ஆரத்தி என்ன அனைத்தும் சிறப்பாக முடித்து, அர்ச்சகர் தீபாராதனைத் தட்டுடன் வெளியே வந்தார்.

கூட்ட நெரிசலில் திருநீறு, குங்குமம் வாங்க வரிசையில் நின்ற பக்தர்களை ஒரு நோட்டம் விட்டபின், பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தார். தட்டில் காணிக்கை விழுந்தால், பூ, பழம், திருநீறு என்று அள்ளி வைத்தார். தட்சணை போடாதவர் கையில் திருநீறை மட்டும் கில்லி வைத்தார்.

லட்சுமியிடம் வந்தது தீபாராதனைத் தட்டு. அவள் ஒரு ரூபாய் காணிக்கையை போட, அர்ச்சகருக்கு முகம் முப்பது அடி இழுத்துக் கொண்டது.

"இந்தாமா, இந்த ஒத்த ரூபாய் எல்லாம் அரசாங்கம் கூடிய சீக்கிரம் தடை பண்ணப் போகுது, இன்னும் இதையே வெச்சுட்டு வரீங்களே!" என்று வசை பாடிக்கொண்டே திருநீறை எடுத்து வீசாத குறையாய் கையில் போட்டு விட்டு முனுமுனுத்துக் கொண்டே அடுத்து நகர்ந்தார்.

ஒவ்வொருவராகச் சென்று வெங்கடேஷிடம் தட்டை நீட்டினார். அவன் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு 50 ரூபாய் தாள், இரு 10 ரூபாய் தாள், ஒரு 20 ரூபாய் தாள், இரண்டு 5 ரூபாய் நாணயம் என எடுத்துத் தட்டை நிரப்பினான்.

"இந்த மனுசனுக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சு! இருந்த 100 ரூபாயையும் இப்படி கொடுக்கிறார்" என்று லட்சுமி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஐயருக்கு சிரிக்கத் தெரியும் என்பதே அப்பொழுதுதான் தெரிந்தது.

"அண்ணா, ஷேமமா இருங்கோ! இந்தாங்கோ!" என்று ஒரு ரோஜா மாலையை எடுத்து நீட்ட, "வெங்கடேஷ், லட்சுமியை காட்டி, என் குல சாமிட்ட கொடுத்திடுங்க ஐயரே" என்று சொல்ல, அர்ச்சகரின் முகம் வெளுத்துப் போனது.எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டு கோவிலின் வெளியே வந்தாள் லட்சுமி. எதுவும் பேசவில்லை, வெங்கடேஷிடம் எதுவும் கேட்கவுமில்லை. அவளுக்குப் புரியாதா என்ன அவனின் மனதை?

அவளின் அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத காதல் கணவன். அவளும் சளைத்தவள் அல்ல. தனது முன்தானையில் முடிந்து வைத்த 5 ரூபாயை எடுத்து மகளிடம் கொடுத்து ராட்டினத்திற்கு அனுப்பி வைத்தாள்.

"அய்யோ, மச்சான்! மறந்தே போய்விட்டேன். போன வாரம் சந்தையில்தான் பச்சை ரிப்பன் வாங்கிட்டு வந்தேன்" என்று சொல்லி, "வெயில் அதிகம் ஆகுது, வாங்க போகலாம்" என்று அவனை பேச விடாமல் அழைத்துச் சென்றாள்.

அவசரப்பட்டு பணத்தைத் தூக்கி கொடுத்துவிட்டோம் என்று அவன் சற்றும் எண்ணவில்லை.

"ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்திற்கு கிடைக்கும் மதிப்பு, இரத்தமும் சதையும் உள்ள மனிதனுக்கு இல்லையே?" என்ற ஆதங்கம் அவனுள் பற்றி கொண்டது.

தன் ஆசைகளை இழந்து, தன் மனைவியின் அவமானத்தை துடைக்கும் நிலை, அவன் மனதை கூர்வாளால் துளைப்பது போல் இருந்தது.

"கடவுளின் கருணை வேண்டும் என்றாலும், கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது. காணிக்கைக்காக கடவுளையே விற்கும் மனிதர்கள் மத்தியில், மனிதத்திற்கான மரியாதையை தேடுவது தவறுதான்" என்று அவனுக்கே சமாதானம் சொல்லிக்கொண்டு வீடு திரும்பினான், தன் மனைவி மகளுடன்.

"மச்சான்..." என்ற லட்சுமியின் சத்தம் கேட்டு உறக்கத்தில் இருந்து எழுந்தான் வெங்கடேஷ்.

"நேரம் ஆகுது, கிளம்புங்க! பொன்னி ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கோவிலுக்கு வந்திடுவா. டிரைவர் வந்துட்டாரு. நீங்க ரெடி ஆனதும் கிளம்பிடலாம்" என்று அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லிவிட்டு, சமையல் அறைக்குள் சென்றாள்.

அச்சம்பவம் நடந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தும் திருமணநாள் அன்று‌ அதை அவன் நினைக்காமல் இருந்ததில்லை. அதுவே அவனுள் வெறியாய் மாறி ஓர் நல்ல நிலைக்கு வர வித்திட்டது. இன்று அவனிடத்தில் தன் தேவைக்கேற்ப அனைத்தும் உள்ளது. பொன்னியும் அரசு மருத்துவமனையில் பொது நல மருத்துவர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்று வரை ஒரு முறை கூட‌ இருவரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டதே இல்லை. இருவருக்கும் புரிதல் இருந்தது. 

காதலும், புரிதலும் உறவின் அடித்தளம்; அதில் கணக்குகள் இல்லை, கேள்விகளும் இல்லை. என்றும் அவளுக்காக இவனும்‌, அவனுக்காக இவளும்....

ஆதி தேவி - ராதா மனோகரன், லோகேஸ்வரி & கோதை

 


கதிரவன் பரவலாகப் பிரகாசிக்கத் துடித்துக் கொண்டிருந்த  மிதமான காலை வேளை. தேவியின் நீண்ட கூந்தலின் இறுதியில் இருந்த முடிச்சின் வழியே நீர்த்திவலைகள் சொட்டுச் சொட்டாக  அவளது பூப் போட்ட  இரவிக்கையில் விழுந்து நழுவிக் கொண்டிருந்தன. 

முதன் முதலாக திருவிழாப் பெருவெளியைப் பார்க்கும் குழந்தையைப் போல் அந்தப் பூங்காவில் மரங்களையும், பூக்களையும், செடிகளையும் இரசித்துக் கொண்டே நடந்தாள்  அவள். கூண்டை விட்டு விடுபட்டது போல் இருந்தது 42 வயது தேவிக்கு.

தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் கல் இருக்கையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த அவன் மீது அவள் பார்வை படிந்தது. நரையும் கருமையும் கலந்த சீராக்கப்பட்ட தாடி, கண் கண்ணாடி, சந்தன நிற பைஜாமாவில் ஒரு தீர்க்கமான உருவம்.

அவள் கடந்து செல்வதைக் கவனிக்காமல் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான் அவன். இரண்டாம் நாள் அவள் கடந்து செல்கையில்  அவளது புன்னகைக்குப் பதில் புன்னகை புரிந்தான் அவன். இப்படியாக நான்காம் நாள், ஐந்தாம் நாள் என சினேகப் புன்னகை  சினேகிதமாக மலர்ந்தது. 

தினமும் காலை பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டுச் செல்வது அவர்களின் நடைப் பயணத்தின் நோக்கமானது. அவர்கள் பேச்சு மெதுவாக ஆழமடையத் தொடங்கியது.
 அவனிடம் பேசும் பொழுது தன்னை மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் தேவி.

 "பேசப் பேச  உங்களிடம் ஏற்கனவே பழகிய உணர்வு ஏற்படுகிறது ஆதி" என்றாள் தேவி.  மெதுவாகப் புன்னகைத்து விடை பெற்றான் ஆதி.

அன்றைக்குப் பகலவன் முழுவதுமாக வெளிவராமல் மேகமூட்டத்துடன் இருந்தது வானம். பூங்காவில் தேவியின் கையில் ஒரு டைரியைக் கொடுத்தான் ஆதி. அதை விரித்துப்  பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். சற்றே ஓரம் மடங்கிய  புகைப்படத்தில் இதேபோன்று ஏதோ ஒரு பூங்காவில் ஆதி அமர்ந்திருக்க அவன் தோள்கள் மீது கைகளைப் போட்டு தலையைச் சாய்த்து பூச்செண்டு போல் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் தேவி.
மழை லேசாகத் தூறல் போட்டது.

அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் மழையில் நனைந்தவாறே ஆதியின் கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் ஏதோ ஒன்றை அறிந்தவளாய், அது என்னவென்று சொல்லத் தெரியாதவளாய்.  அப்படியான ஒரு நிலை தேவியிடம். 

"உன் மனதில் இப்பொழுது ஆயிரமாயிரம் கேள்விகள் எழும். அது அனைத்திற்கும் பதில் இந்த டைரியில் உள்ளது. இதை உன்னோடு எடுத்துச் செல். நாளை மாலை இதே வேளையில் இங்கு சந்திப்போம்" என்று கூறிச் சென்று விட்டான். மறுவார்த்தை ஏதும் பேசாமல் நின்ற தேவி, ஆதி கண்களிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றவள் குழப்பத்தோடு வீடு திரும்பினாள்.  

அன்று இரவு உறக்கம் வராமல் தவித்தாள். 'நான் எப்படி அந்தப் புகைப்படத்தில்? அதுவும் ஆதியோடு?!...இது எப்படி நடந்திருக்கும்?' வேறு ஏதேதோ கேள்வி மனதில் எழ அந்த டைரியை வாசிக்கத் துவங்கினாள். 

"நான் நிச்சயம் அறிவேன். இது உனக்குப் புதிய அனுபவமாகத்தான் இருக்கப் போகிறது. உன் கதையை நீயே வாசிக்கப் போகிறாய். உன் பெயர் தேவி. அதை நீ அறிந்திருப்பாய். ஆதியாகிய நான் உன்னுடைய  காதலன்.  இப்படியாக அந்த டைரியில் இருந்ததை வாசிக்கத் துவங்கினாள்.

ஆனால், தேவிக்கு இதைப் படிக்கும் பொழுது முன்னதாக அவனைக் காதலித்ததாக எந்த உணர்வும் அவளுக்குத் தோன்றவில்லை. மீண்டும் பெரிய மனக் குழப்பத்தோடு அந்த டைரியை படிக்கத்  துவங்கினாள். இரவு முழுக்க அந்த டைரியை படித்து முடித்தாள். அப்படியே உறங்கிப் போனாள்.

ஜன்னல் வழியாகக் கதிரவன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை யாரோ தன்னை பார்ப்பதாக உணர்ந்த அவள் திடுக்கென எழுந்தாள். மீண்டும் அந்த டைரியைக் கையில் எடுத்தாள். 'இதில் உள்ள அனைத்தும் உண்மையா?! நான் ஆதியின் மனைவியா?! நாங்கள் இவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோமா?! ஆனால், ஏன் இதில் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை?' ஆனால் ஆதியை எப்பொழுதோ பார்த்தது போலான உணர்வு மட்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. 

இப்படி அவளே கேள்விகளையும் கேட்டுப் பதில்களையும் கூறி மீண்டும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தாள். 

இவை அனைத்திற்கும் விடை ஆதியிடம்தான் உள்ளது. இன்று மாலை நிச்சயம் அவனைச் சந்தித்து தன் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என மாலை வரை காத்திருந்தாள். ஆனால் அன்று மாலை வருவதாகக் கூறியிருந்த ஆதி வரவே இல்லை. காத்திருந்து காத்திருந்து பிறகு ஏமாற்றத்தோடு அங்கிருந்து புறப்பட்டாள்.

ஒரு வாரம் கடந்தது. அவளால் ஆதியைச் சந்திக்கவே முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அந்த எண் உபயோகத்தில் இல்லை.

எழும் கேள்விகள் அத்தனைக்கும் விடை தெரியாமல் குழம்பிப் போனாள். எப்படியாவது இவை அத்தனைக்கும் விடை தெரிந்தாக வேண்டும் என்று அந்த டைரியை முழுவதுமாகப் புரட்டிப் பார்த்தாள். அதில் ஆதியின் விலாசம் இருந்தது. தன் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்ததாய் பெரும் உற்சாகத்தோடு அந்த விலாசத்தை தேடிப் பயணித்தாள்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் அந்த விலாசம் இருந்தது. இவள் இருப்பதோ சென்னையில். அவளுக்கு தொலைவு குறித்தோ, நேரம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லை. எப்படியாவது விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமே இருந்தது. ஒரு வழியாக அந்த விலாசத்தை அடைந்தாள்.  அப்பொழுது நேரம் சரியாக இரவு 9 மணி 30 நிமிடம். கதவைத் தட்டக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இருப்பினும் விடை தெரிந்தாக வேண்டுமே, கதவைத் தட்டினாள். பாதிமுகம் தீக்காயம்பட்டு சுருங்கிய நிலையில் இன்னும் ஆற வேண்டிய பாக்கியுடன் இருந்தது. அந்தக் காயங்கள் முகத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளம் பெண் கதவை திறந்தள். அந்த நேரத்தில் அவளை அப்படி பார்த்ததும் பயத்தில் கண்களை விரித்தபடியே எதற்கு வந்தோம், என்ன பேச வந்தோம், எதற்குக் கதவைத் தட்டினோம் இப்படி எதுவுமே ஞாபகத்தில் இல்லாமல் அவளது முகத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றாள். எதிரில் நின்ற அந்தப் பெண்ணோ ஏதும் பேசாதவளாய் இவள் வருவாள் என ஏற்கனவே அறிந்தவளாய் அவளிடம் ஒரு துண்டுச் சீட்டை மட்டும் கொடுத்துப் பிறகு கதவைச் சாத்திக் கொண்டாள்.

அதில் ஆதியின் பெயர் குறிப்பிட்டு ஒரு விலாசம் இருந்தது. கடற்கரையிலிருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய கிராமம் அந்த விலாசம். 

ஏற்கனவே நேரம் பத்து மணியைக் கடந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல்  நின்று கொண்டிருந்தாள். அந்த நேரம் அவளுக்காகவே வந்தது போல அங்கு  ஒரு ஆட்டோ வந்து நின்றது. அவரிடம் சென்று, "சினேகவல்லிபுரம் போகணும்" என்றாள். 

எந்தக் கேள்வியும் கேட்காமல், "ஏறுங்கம்மா" என்ற ஒற்றைப் பதிலுடன் ஆட்டோவைக் கிளப்பினான் அந்த ஆட்டோ டிரைவர். 

"அண்ணா, இந்த அட்ரஸ்"... என்ற இவளது குரல் காதில் விழுந்தும் விழாதவனாய் அமைதியாய் இருந்தான். சிறிது நேரம் கழித்து, "உங்கள சரியான இடத்துக்கு நான் கூட்டிட்டு போயிருவேன், வாங்க" என்று விலாசத்தை ஏற்கனவே அறிந்தவனாய் சினேகவல்லிபுரத்திற்கு அவளைக் கூட்டிச் சென்றான். 

ஒரு வீட்டிற்குச் சற்றுத் தொலைவிலேயே ஆட்டோவை நிறுத்திவிட்டு,  "ஆதி ஐயா உங்களுக்காக அங்கு காத்திருக்காரு, நீங்க போங்க" என்று சொல்லிவிட்டு காசு கூட ஏதும் வாங்காமல் ஆட்டோவைத்  திருப்பிக் கொண்டு கிளம்பி விட்டான். ஏற்கனவே மனதில் பல கேள்விகளுடன் இருந்த அவளுக்கு இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் எழும்பிக் கொண்டே இருந்தன. 

பெரிய பயமும் பதற்றமும் மனதில் தொற்றிக்கொள்ள இந்த இருட்டு அவளை இன்னும் பயமுறுத்தியது. அந்த வீட்டை நெருங்கச் சென்றவளை எதிர்பாராத விதமாய் இருட்டில் இருந்து ஏதோ ஒரு கை சட்டென இழுத்துக் கொண்டது.

"நான் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது  பதில் தேடாதே. என்னை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், உன்னை நான் நன்றாக அறிவேன். உனக்கு எச்சரிக்கை விடுக்கவே இங்கு வந்தேன். நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பி போய்விடு. நீ எதைத் தெரிந்து கொள்ள நினைக்கிறாயோ அது அவ்வளவு அழகியதல்ல".

"மீண்டு வந்த நீ மீண்டும் வந்திருப்பது எங்கே தெரியுமா? மீள முடியாத  பெரும் துன்பத்தைத் தேடி!""

இப்படியாக அவள் காதுகளுக்குள் உரக்கக் கூறிவிட்டு அந்தக் கை அவளை விடுத்து அங்கிருந்து காணாமல் போனது. 

தூரத்தில் அந்த வீட்டின் கதவு திறப்பது தெரிந்தது. உள்ளிருந்து வெளியே வந்த ஆதி மிகச் சாதாரணமாக "வா தேவி" என அழைத்தான்.

மந்திரம் போல் அழைத்த அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டவளாக கால்களை அந்த வீட்டை நோக்கி நகர்த்தினாள் தேவி. நான்கைந்தடிகள் வைத்திருப்பாள். வலிய கரம் ஒன்று அவள் வாயைப் பொத்தியது. மிரண்ட தேவியின் உடல் முழுவதும் அந்த முரட்டுப் பிடிக்குள் சிக்கியது. ஏதோ ஒரு ஒவ்வாத வாசனை அவள் நினைவை இழக்கச் செய்தது. 

மிகவும் சிரமப்பட்டு இமைகளை விரித்த தேவியின் பார்வையில் எழுதி விவரிக்க இயலாத கொடூரமான இடமும் பலிபீடமும் மங்கலாகத் தெரிந்தன. எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் கால்கள் தள்ளாடின.‌ சற்றே அலங்கோலமான‌ ஆடை அவளுள் பெருங்கவலையை உண்டு பண்ணியது. சுற்றிச் சுழன்ற கண்களில் பளபளவென்று  கூர்மையான நுனியுடன் கூடிய மிகப் பெரிய வாளை ஏந்தி, ஒரே வீச்சில் தலை வேறு முண்டம் வேறாக வெட்டிச் சாய்க்கும் முரட்டு உருவம் இருட்டின் நிறத்தில் நின்று அச்சுறுத்தியது.

சூழ்நிலையின் தீவிரம் புரியத் தொடங்கியபோது மீண்ட நினைவு தப்பத் துவங்கியது. அந்த நிலையிலேயே தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட அவளின் தலை பலிபீடத்தில் பொருத்தப்பட்டது. ஏதேதோ சப்தங்கள், கெக்கலிப்புகள், வினோதமான ஒலிகள் தேவியின் காதில் மோதியது. ஓங்கிய வாள் 'ஹோ' வென்ற சத்தத்துடன் அவளின் கழுத்தில் இறங்கியது.

'ஐயோ! அம்மா!' என்று அலறியபடி கட்டிலிலிருந்து உருண்டு விழுந்த தேவியின் ஆடைகள் வியர்வை வெள்ளத்தில் குளித்திருந்தன. 

தேவியின் அலறல் சத்தம் கேட்டு அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த தேவியின் வேலைக்காரம்மா அஞ்சலை பதறியபடி ஓடி வந்தார். கீழே விழுந்து கிடந்த தேவியை வாரி அணைத்து, பதற்றம் குறையாமல் "என்னம்மா, என்ன ஆச்சு? கனாகினா கண்டியா?" என்று கேட்டபடி முதுகைத் தடவிக் கொடுத்தார்.

நடுங்கிக் கொண்டிருந்த தேவியின் மனமும் உடலும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட நேரம் எடுத்துக் கொண்டன. இயல்பு நிலைக்குத் திரும்பிய அவள், தான் கண்ட கனவையும், ஆதியுடனான சந்திப்பையும் பற்றி அவரிடம் கூறினாள். 

"என்ன?! ஆதியா?!... இங்க வந்திருந்தாரா?! என்னம்மா சொல்ற?" என்று இன்பம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்ட அவரை ஆச்சரியத்துடன் ஏறிட்டு நோக்கினாள்.

"அம்மா, ஆதியை ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா?" திகைப்புடன் கேட்டாள்.

" ம்ம்... தெரியும்மா. ஆதி உன்னோட கணவர்" என்று அமைதியாகக் கூறினார்.

"என்ன சொல்றீங்க? ஆதி... ஆதி... ஆதி என்னோட கணவரா?" என்று ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகக் கேட்ட தேவி, "தயவுசெஞ்சு என்ன நடந்துதுன்னு விளக்கமா சொல்லுங்க, எனக்கு ஒண்ணுமே புரியல" என்று கதறினாள்.

"சொல்றேம்மா சொல்றேன். உனக்கும் ஆதிக்கும் கல்யாணமாகி ஒரு வயசுல ஒரு பெண் குழந்தையும் இருந்துது. உங்க வாழ்க்கையும் நல்லா மகிழ்ச்சியாப் போய்ட்டிருந்துது. 2004 ல வந்த சுனாமி உன்னோட வாழ்க்கையையே பொரட்டிப் போட்ருச்சு. 

நீ, ஆதி, கொழந்த, உன்னோட அம்மா எல்லாரும் சுனாமி வந்த அன்னிக்கு பூம்புகார் போயிருந்தீங்க. களிப்பும் கொண்டாட்டமுமா நீங்க இருந்த நேரத்துல திடீர்னு எதிர்பாராம வந்த ஆழிப் பேரலைல சிக்கித் திணறின கூட்டத்துல நீங்களும் தத்தளிச்சிங்க. கோரத்தாண்டவம் ஆடன ஆழிப் பேரலை உங்க எல்லாரையும் திக்குக்கு ஒருத்தராத் தூக்கி வீசிருச்சு. அலை ஆடி அடங்கனப்பறம் கரையொதுங்கிக் கெடந்தவங்கள ஊருக்குள்ள கொண்டு வந்து சேத்தாங்க. மீனவக் குடும்பத்தச் சேந்த நானும் அங்க இருந்தேன். நீயும் உங்கம்மாவும் உயிர் பொழச்சதே பெரிய விஷயமா இருந்துது. உங்க ரெண்டு பேரையும் என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். 

உன் கொழந்தையும் ஆதியும் என்ன ஆனாங்கன்னே தெரியல. அந்த அதிர்ச்சில உனக்கு நினைவு தப்பிப் போச்சு. திரும்ப நினைவு வந்தும் யாரையும் உனக்குத் தெரியல. ஓரளவு குணமான உன்னோட அம்மா, என்னையும் கூட்டிக்கிட்டு உங்க ஊருக்கே வந்துட்டாங்க. அப்பத்தான் உன்னப் பத்தின எல்லா விஷயங்களையும் எங்கிட்ட சொன்னாங்க. உன்ன நெனச்சு நெனச்சே படுத்த படுக்கையா ஆய்ட்டாங்க. அவங்க இறக்கற தருவாயில நீங்கதான் இனி இவளுக்கு எல்லாம்னு சொல்லி உன்னைய எங்கிட்ட ஒப்படைச்சாங்க. அனாதையான எனக்கும் உறவா நீ வாய்ச்ச" என்று சொல்லி கேவிக்கேவி அழுதார்.

என்ன சொல்வது, செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் இருந்த தேவி அப்படியே உறங்கியும் விட்டாள்.

மறுநாள் காலை மணி ஒன்பது. வீடு முழுவதும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் மணக்க, காஃபியுடன் வந்து எழுப்பினார் அஞ்சலை. "எந்திரிச்சு குளிச்சுட்டு வாம்மா சாப்பிடலாம்" என்றார்.

குளித்து முடித்து உடை மாற்றி, பொட்டிட்டுப் பூ வைத்து, முன்னறைக்கு வந்தவள் ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றாள். அறையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் 21 வயது மதிக்கத்தக்க அழகும் அறிவும் ஒருங்கே மிளிரும் இளம் பெண்ணும், அவள் அருகில் ஆதியும் அமர்ந்திருந்தனர்.  இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். வார்த்தைகள் ஊமையாகிப் போயின. பேரமைதி மௌனம் காத்தது. அங்கே வந்த அஞ்சலையின் சிரிப்பில் பொதிந்து கிடந்தன ஆயிரம் அர்த்தங்கள். தேவியின் கண்களில் நீரும் நன்றியும் வழிந்தன. தன் பெண்ணை நெருங்கிச் சென்று அணைத்து நெற்றியில் இதழிட, அவள் கரம் கோர்த்தான் ஆதி. 

"வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் 
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு 
உருண்டையும் உருளுதடி"

தூரத்தில் 'உன்னி கிருஷ்ணன்'  பாடிக் கொண்டிருந்தார்.

(ஈரோடு வாசல் - படைப்பு குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் ராதா மனோகரன், லோகேஸ்வரி & கோதை ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

முதியதோர் உலகு - ஈரோடு கதிர்



அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி வரும் வழியில் அமர்ந்திருந்தார். அவரைக் கடக்கும்போது கவனித்தேன். அவரும் என்னைப் பார்த்த நொடியில் புன்னகைத்தார். புன்னகையை எப்படிப் புறந்தள்ள முடியும். நானும் புன்னகைத்தேன். 

அந்தப் புன்னகைக்குக் காத்திருந்தவர்போல் எழுந்தார். ஏதோ கேட்க, சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. என் வேகத்தைக் குறைத்தேன். சிரித்த முகம். சிலருக்குத்தான் அப்படி இயல்பாக வாய்க்கும். சிலர் தன்னை அப்படி அமைத்துக் கொண்டதும் உண்டு. அவர் ஏதோ பேசத் தொடங்கியிருந்தார். காதில் இருந்த இயர்பட்ஸில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ‘சொல்லுங்க!’ என்றேன்.

”உங்களை அடிக்கடி பார்க்கிறேன். பேசனும்னு நினைப்பேன். காதில் அதைப் போட்டுட்டு வேகமாப் போவீங்க. தொந்தரவா இருக்குமோனு பேசாம போய்டுவேன். இன்னிக்குத்தான் பேச முடிஞ்சிருக்கு!” என்றபடி என்னோடு நடையில் இணைகிறார்.

அவரைக் கவனித்திருக்கிறேனா? உண்மையில் நினைவில்லை. கவனித்திருக்கலாம், மனதில் பதிந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் அப்படி யாரிடமும் பேசத் தோன்றியதில்லை. ஓரிரு தலையசைப்புகள் எப்போதாவது உண்டு. மற்றபடி காலை நடை என்பது எனக்கான தவ வேளை. பெரும்பாலும் ஏதாவது கேட்டபடி, எனக்குள் உரையாடியபடி நடப்பேன். 

“அப்டீங்ளா.... ஸாரி நான் கவனிச்சதில்ல... சொல்லுங்க!”

எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டார். அப்படியான கேள்விகளை விரும்புவதில்லை. அங்கே என திசையை மட்டும் காட்டினேன். தம் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். சாலையின் முடிவில் நான் திரும்பும் திசைக்கு எதிர்பக்கம் அவரின் பகுதி. 

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிறைவு செய்திருக்கிறார். மகன் மருத்துவர். மகள் பட்டயக் கணக்காளர். பிள்ளைகளின் வயது சொல்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சமீப ஆண்டுகளில் படிப்பு முடித்து பணிக்கு சென்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவரே சொல்லிக்கொண்டிருக்க, முடிவாக என்ன சொல்ல வருகிறார் என என்னால் இனம் காண முடியவில்லை. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

“சரிங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்!” என நடையை வேகப்படுத்தியிருக்க முடியும். சரி என்னதான் சொல்ல வருகிறார் எனும் சிந்தனையோடு அவருடன் தொடர்கிறேன். என்னைவிட சற்று உயரம் குறைவானர் மற்றும் வயதானவர் என்பதால் என் நடை வேகத்திற்கு அவர் சிரமப்படுவது புரிந்தது. வேகத்தைக் குறைக்கிறேன். 

அவர் குறித்த அறிமுகம் நிறைவடைந்த நிலையில், நான் என்ன செய்கிறேன் எனக்கேட்கிறார். மேலோட்டமாகச் சொன்னதும், ”நீங்க வெளியில் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போக முடியுமா? நானும் அதில் எதுவும் செய்ய முடியுமா?” 

இத்தனைக்கும் நான் செய்வதாகச் சொன்னதில், பள்ளி எனக் குறிப்பிடவும் இல்லை இல்லை. பேசத் துவங்கி சில நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? என வரிசையாகக் கேள்விகள் துளிர்க்க, கட்டுப்படுத்திக்கொண்டு, “எதுக்காக நீங்க வர நினைக்கிறீங்க?” என்கிறேன்.

”வந்தா எதாவது அடிஷனல் இன்கம் கிடைக்குமேனு!” என்றார். ஆச்சரியத்தைவிட சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“பென்சன் இருக்குமே உங்களுக்கு, மகனும் மகளும் நல்ல நிலையில் இருக்கிறதாச் சொன்னீங்கதானே!?”

“பென்சன் வருது. ஆனா ரொம்ப செலவு பண்ணி பழகிட்டோம். முன்ன சம்பளம் வந்தப்ப நிறைய வெளியே போறது, போன இடத்தில் காஸ்ட்லியா தங்குறது, பெருசா செலவு செய்றதுனு பழக்கமாகிடுச்சு. இப்பவும் அப்படியேதான் செலவாகுது. அதில்லாம வீட்டு லோன் போய்ட்டு இருக்கு. எதிலுமே செலவைக் குறைக்க முடியல”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு பெரிதாக யோசிக்க மனம் வரவில்லை. அவர் சொன்னதை கேட்க மட்டுமே செய்தேன். 

“எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கம். ஃபர்ஸ்ட் போஸ்டிங் திருவண்ணாமலைல, அங்க இங்கனு சுத்தி கடைசியா இங்கே வந்துட்டோம். வொய்ஃப்க்கு இந்தப் பக்கம்தான் நேட்டிவ். முன்ன ஸ்கூல், வேலைனு எப்பவும் வெளியே போய்ட்டேன் பிரச்சனையில்ல. எனக்கும் அவங்களுக்கும் 13 வருட வித்தியாசம். முன்னெல்லாம் நல்லாதான் இருந்தாங்க. இப்ப வீட்லையே இருக்கிறதால, ரொம்ப திட்டிட்டே இருக்காங்க. இன்கமும் பாதியாகிடுச்சு. அதான் எதாச்சும் செய்யனும்னு பார்க்கிறேன்”

“என்ன வயசு உங்க ரெண்டு பேருக்கும்?”

“எனக்கு 66, அவங்களுக்கு என்னைவிட 13 வயசு குறைவு. நல்லாப் படிச்சிருக்காங்க. நான்தான் வேலைக்கெல்லாம் போக வேணாம்னு சொல்லிட்டேன். எதாச்சும் செய்யனும்னு இப்ப சொல்லிட்டே இருக்காங்க. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாதிரி சிலதெல்லாம் ட்ரை பண்ணினாங்க. எல்லாம் ஃபெயிலியர் ஆகிட்டு. அதில நிறைய பணம் போயிடுச்சு”

வேறு என்னவெல்லாம் செய்தார்கள் எனக் கேட்கவில்லை. தம்மால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா எனத் தெரியாமல் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர் பலர் உண்டு. தடாலடியாக முடிவெடுப்பார்கள், எவரையும் நம்புவார்கள், எடுத்துக்கொண்ட ஒன்றை மிகைப்படுத்தி புகழ்வார்கள், அதைச் செய்யும் அறிவும், திறனும் உண்டா என்று சிந்திக்க மாட்டார்கள். எதையாவதைச் செய்து பலர் சிறிதாகவும், சிலர் பெரிதாகவும் இழப்பினைச் சந்திப்பதுண்டு. 

“எது சரி வருமோ, பார்த்து செய்ங்க!”

“நீங்க போறபக்கம் என்னையும்....” என இழுத்தார். நறுக்கென கத்தரித்துவிட்டு நான் நகர்ந்திருக்கலாம். ‘நிதானமா இரு!’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

”போகும்போது சொல்றேனு உங்ககிட்ட பொய் சொல்லிட்டுப் போய்டலாம். அதெல்லாம் சரி வராதுங்க. என்னையும் உங்களுக்குத் தெரியாது. யார் எது செய்தாலும், அது இன்னொருவருக்கு சரியா வரனும்னு இல்லை. முதல்ல உங்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதைத் சரி செய்யப் பாருங்க. உங்க மகன், மகள்கிட்ட பேசுங்க. அவங்ககிட்ட இத எப்படி சொல்றது, ஆலோசனை கேட்கிறதுனு நினைக்காதீங்க. படிச்சிருக்காங்க. புரிஞ்சுக்குவாங்க. உங்க வைஃப் எதுக்கு திட்டுறாங்கனு அமைதியா யோசிங்க. அவங்க மனசுல என்ன இருக்குனு கேளுங்க. படிச்சிருந்தும் அவங்க வேலைக்குப் போகாதது, சொந்தக் காலில் நிற்கமுடியாததுகூட மனக்குறையா இருக்கலாம். மற்றபடி செலவு செய்றது, மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நீங்க நாலு பேரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். பார்த்துக்கோங்க” என்றபடி சற்று வலுக்கட்டாயமாகத்தான் விடை பெற்றேன்.

அவர் என்னைப்போல் பலரிடமும், முன்பின் அறியாதவர்களிடமும்கூட இதுபோல் கேட்டிருக்கலாம். உண்மையான தேவைக்காக கேட்கிறாரா அல்லது ஏதேனும் உளவியல் சவால் இருந்து அதைக் கையாளத் தெரியாமல் இப்படி வெளிப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. இனியொருமுறை நான் அவரை சந்திக்காமல் போகலாம். சந்தித்தாலும் தலையசைப்போடு கடந்து, காலப்போக்கில் அதுவும் தேய்ந்து போகலாம். 

நான் அவரை மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனமாகியிருக்க வேண்டும். ஆனால் மனதின் ஏதோவொரு ஓரத்தில் அவர் மெல்ல நடந்து கொண்டேயிருந்தார். அது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு இல்லை. ஏன் ஒரு மனிதர் இப்படியாகிறார் எனும் என்னுடைய புரிதலுக்கான அலசல்தான்.

படித்து ஆசிரியர் ஆனவர். பல ஆண்டுகள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர். திறக்கப்படாத பல கதவுகளைத் திறப்பதுதானே கல்வியின் நோக்கம்.  நன்கு படித்த மனைவிக்கு திறக்கப்பட்டிருக்க வேண்டிய கதவுகளை, திறக்க உதவி செய்யாதது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தக் கதவுகளை இவரே அடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் ஒரு பெண் கோபப்பட்டால், ஏன் கோபம் வருகின்றது என ஆராயப்படுவதேயில்லை. படித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாத மற்றும் 13 வயது குறைவான மனைவியின் மனப்போராட்டத்தை, அவருடைய நிலையிலிருந்து புரிந்துகொள்ள மறுத்து,  நான் வீட்டில் இருப்பதால், வேலையில்லாமல் இருப்பதால், வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டதால் சண்டை வருகிறது எனக் கருதிக்கொள்வது சிக்கலை மேலும் பெரிதாக்கவே செய்யும். 

பிள்ளைகளுக்கு என்ன தெரியும் எனும் பிற்போக்குத்தனம் பல பெற்றோர்களிடம் உண்டு. ‘பிள்ளைகளுக்கு நிறையத் தெரியும். அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல. நம் காலம் போன்று அவர்கள் காலம் இல்லை!’ என்பதனை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் ஏற்படும் பிணக்குகளுக்கு, சிக்கல்களுக்கு, முரண்பாடுகளுக்கு அவர்களிடம் அப்பா-அம்மா எனும் அதிகாரத்தைச் செலுத்தாமல், உன்னை மதிக்கின்றேன் என்பதை உணர்த்தி அவர்களின் கருத்தைக் கேட்டால் பெரு ஆச்சரியங்கள் நிகழும். ‘இதுல எப்படிண்ணே எரியும்!’ என பெட்ரமாக்ஸ் லைட் மேண்டிலை செந்தில் உடைப்பதுபோல, ‘இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க!’ என பெரியவர்களின் குழப்பத்தை பொசுக்கென உடைத்துவிடும் திறன் வாய்ந்தவர்கள் இந்தத் தலைமுறையினர். அவர்களிடம் தீர்வுகள் தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

சம்பளம் வாங்கிய காலத்தில் இருபது முப்பது ஆண்டுகாலம் பெரிய அளவில் செலவு செய்து பழகிவிட்டால், பென்சன் வாங்கும் காலத்தில் வருமானம் பாதியாக குறையும் சூழலில் செலவுகளை எப்படிக் குறைக்க முடியும்? வயது முதிரும் காலத்தில் மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள், பிள்ளைகளுக்கான செலவுகள் என்று கூடத்தானே செய்யும். நிதி குறித்த அடிப்படை புரிதல் மற்றும் நிதி மேலாண்மையில்லாத பலரும் ஏதோவொரு தருணத்தில் பொருளாதார நெருக்கடியில் எளிதாக ஆட்பட்டுவிடுவதுண்டு.

எது சிக்கனம், எது கஞ்சத்தனம், எது அவசியமான செலவு, எது ஆடம்பரமான செலவு, எது ஊதாரித்தனம் என ஒவ்வொருவரும் தெளிவடைதல் முக்கியம். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்வதை பண சுழற்சிக்கு நல்லது என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதுண்டு. ஒருவர் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர, தாமும் அதுபோல் செய்யலாம் என நினைத்தால், என்றேனும் ஒருநாள் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும்.

பணி ஓய்வு பெறுகின்றவர்களுக்கென சில உளவியல் சவால்கள் உண்டு. உண்மையில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இருபது முப்பது ஆண்டு காலம் ஒரே மாதிரியான வேலையைச் செய்தவர்கள், அதிகாரம் செலுத்தியவர்கள், பல்வேறு பலன்களை அனுபவித்தவர்கள், திடீரென ஒருநாள் அங்கிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு, ஓய்வு காலம் எனும் நிர்பந்தத்தில் ஆட்படுத்தப்படுகின்றனர். வெகு எளிதாக தனித்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதை அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வீடுதானென்றாலும், அதன்பிறகு அது புதிய சூழல்தான். பொருத்திக்கொள்வது மிகச் சவாலானது. அந்த நிலையில் அவர்கள் தம்முடனே முரண்படுவர், அதைவிட மோசமானது குடும்பத்தில் இருக்கும் அனைவருடனும் ஏற்படும் முரண்கள். இதில் யாரையும் தனித்து குறை சொல்ல முடியாது. அறியாமைதான் காரணம். ஓய்வுகாலம் எனும் சூழலுக்கு தயார்படுத்துவது இருதரப்பிலும் மிகவும் முக்கியம். 

வாழ்வின் பயண வழித்தடமெங்கும் சேகரிக்கும் அனுபவங்கள் முதுமையில் உதவுவதாக இருக்க வேண்டும். எந்த அனுபவங்களையும் சேகரிக்காத, அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாதோர் முதுமை மிகவும் பலவீனமாகவே அமையும். பலவீனமான தருணங்களில் தெளிவாக சிந்திக்கவியலாது. முதுமை உடலை வேண்டுமானால் பலவீனப்படுத்தலாம். ஆனால், அறிவு மற்றும் மனதை எந்தவகையிலும் பலவீனப்படுத்தக்கூடாது.

வாழ்தல் என்பது முதுமைக்கும் தன்னை தயார்படுத்துவதுதான். தன்னைப் பாதுகாத்தல் என்பதும் தன்னை நேசித்தலின் ஓர் அங்கம். 

காதல் என்பது யாதெனில்… - அன்புமணி, உமா மகேஸ்வரி R, மகேஸ்வரி மதன்



பார்க்கிங் ஏரியாவிலிருந்து அவசரமாகத் தனது வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தவன்,  “மோகன்!”,  என்று தன்னை அழைத்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் சொந்தக்காரர் திலகராஜனை ஒரு அமைதியான புன்னகையுடன் எதிர்கொண்டான். 

“வாங்க சார். வணக்கம். சொல்லுங்க. என்ன விஷயம்?”, என்றான்.

“என்னப்பா? அவசரமா கிளம்பிட்டு இருக்கியா? சமையலுக்கு காய் வாங்கப் போறியா? இல்லாட்டி உன்னோட பாட்டு கிளாசுக்குப் போறியா? ஆனாலும் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்பா. ஆபீஸ் டென்ஷன் இல்ல பாரு. இல்லத்தரசன் என்று கொஞ்சம் கூட ரோஷம் இல்லாம ஜாலியாக இருக்க.. பொண்டாட்டி வேற உன்னை உள்ளங்கைல வச்சுத் தாங்கறா”, என்றார் நக்கலாக.

இது போல் கடந்த ஏழு வருடங்களில் பல முறை பல பேர் வாயிலிருந்து கேட்டதுதான் என்பதால் அவன் புதிதாகக் காயப்பட ஏதும் இருக்கவில்லை..

“ஆமாங்க சார். கண்டிப்பாக. நீங்க எதுக்குக் கூப்பிட்டீங்கன்னு இன்னும் சொல்லவில்லையே”, என்றான் புன்னகை மாறாமல் நாற்பது வயதுக்குரிய பக்குவத்துடன்.

“நீ கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தால் தண்ணீர் மோட்டார் ஓட மாட்டேங்குது.. ரிப்பேர் பார்க்கிறாயா என்று தான் கேட்ட வந்தேன்”, என்றார்.

“இப்போ கொஞ்சம் அவசரமாகப் போகிறேன் சார். மதியம் வந்து பார்த்துத் தருகிறேன்”, என்று விட்டு பைக்கைக் கிளப்பினான்.

கோவையின் மிகப் பெரிய குடியிருப்புப் பகுதியான சாய்பாபா காலனியில் தான் அவனது அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு மனைவி ரேகாவின் வேலை காரணமாக மாற்றலாகி  வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன் அவர்கள் சென்னையில் 
வசித்து வந்தார்கள். 

மோகனுக்கும் ரேகாவிற்கும் திருமணமாகி 15 வருடங்களாகின்றன. 14 வயதில் ஒரே மகள் மதிமலர் இருக்கிறாள். அருகில் உள்ள அவிலா கான்வென்ட்டில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள். ரேகாவின் பெற்றோர் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் காலமானார்கள். அதை மறக்கத்தான் இந்தப் பணி மாற்றலே. கேட்டுப் பெற்றதுதான்.

மோகனின் பெற்றோர் மதுரை அருகே கிராமத்தில் இருக்கிறார்கள். குடும்பத்தில் அவன்தான் முதல் தலைமுறை பட்டதாரி. அதுவும் பொறியியல் பட்டதாரி. பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவனைப் படிக்க வைத்தார்கள். அவனும் அதை உணர்ந்து நன்றாகப் படித்து நல்ல வேலையில், உயர் பதவியில் அமர்ந்தான். கை நிறைய சம்பளம் வாங்கினான். 

பெற்றோர் பார்த்து தேர்வு செய்த பெண் தான் ரேகா. மென்பொருள் பட்டதாரியான அவள் தமிழ்நாட்டின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிக நல்ல பதவியை வகித்து வருகிறாள். இருவரும் மனமொத்த தம்பதியர். திருமணமான அடுத்த வருடமே மகள் மதியும் பிறக்க எந்தவிதக் குறையும் இல்லாமல் அவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. 

எல்லாம் இருந்தும் அவனது மனதில் நிறைவு என்ற ஓர் உணர்வு ஏற்படவே இல்லை. அதற்குக் காரணமும் இருந்தது. சிறு வயது முதல் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்த காரணத்தினால் படிப்பு ஒன்றுதான் தன்னையும் தன் குடும்பத்தையும் உயர்த்தும் என மனதை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்து, கருமமே கண்ணாகப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தான் மோகன். 

திருமண வாழ்க்கையிலும் வேறு எந்த சிக்கல்களும் இல்லாததால் வாழ்க்கை மிகவும் தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் சிறு வயதில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் மோகனுக்கு நிறையவே இருந்தது. அதில் ஒன்றுதான் பாட்டு கற்றுக் கொண்டு பாடகனாக வேண்டும் என்பது. நிறைவேறாத ஒரு லட்சியம் என்று கூட சொல்லலாம். 

ஒரு முறை கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அதைப்பற்றி ரேகாவிடம் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தான் என்று சொல்வதை விட அவனது ஆதங்கத்தை எல்லாம் அவளிடம் அந்தத் தருணத்தில் கொட்டியிருந்தான் என்று சொல்லலாம்.

அதன் பின் ஒரு வாரம் கடந்து போனது.  ஒரு நாள் மாலை, ரேகா, அவனை அலுவலகத்தில் இருந்து நேரே சென்னையில் உள்ள பிரபல கர்நாடக இசைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். மிகப் பெரிய இசை மேதையின் பள்ளி அது. அவரது செயலரைத்தான் அன்று அவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

ஏற்கனவே அவரிடம் வகுப்பு தொடர்பாக பேசி இருப்பாள் போலத் தெரிந்தது. அவரும் அவனிடம் சில விஷயங்களைக் கலந்து பேசினார். முறையாகக் கர்நாடக இசையை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முழு நேரமாக வந்து கற்றுக் கொண்டால் இயலும் என்றார்.

அது தொடர்பாக அவனது எந்த சந்தேகத்தையும், கேள்வியையும்  கேட்பதற்கான சந்தர்ப்பத்தையே ரேகா வழங்கவில்லை. அவன் கைகளை அழுத்திவிட்டு நல்ல நாள் பார்த்து விரைவில் வந்து வகுப்பில் இணைந்து கொள்வதாகத் தெரிவித்து விட்டு அவனுடன் வெளியே வந்தாள்.

அதற்குப்பின் மளமளவென அனைத்தும் நடந்தேறின. அவனது வாழ்வின் இலட்சியத்தை, கனவை நிறைவேற்றியே தீருவேன் என்று விடாப்பிடியாக நின்றாள் ரேகா. 

“உற்றார், உறவினர் யார் என்ன சொன்னாலும் சரி. உங்களின் வெற்றி அவர்களது வாயை எல்லாம் அடைத்து விடும். அதனால் யார் என்ன சொன்னாலும் அதுவரை பொறுமையாக இருப்போம். குடும்பத்தை நடத்துவதற்கான ஊதியத்தை எனது வேலை தரும். அதுவே போதும். உங்கள் வேலையை விட்டு விட்டு உங்கள் கனவை நோக்கிய பயணத்தைத் தொடங்குங்கள். இனி உங்கள் கனவை நனவாக்குவது மட்டுமே எனது லட்சியம்”, என்று உறுதியாக சொல்லி விட்டாள் அவனது இணையாள். 

அவனது வாழ்வின் மிக முக்கியமான அந்த முடிவை அவனுக்காக அவளே எடுத்தாள். ஐந்து வருடங்கள் தொடர்ந்து அந்த இசை மேதையிடம் அவன் இசையை கற்றுக்கொள்ளத் தொடங்கினான். இசைத்தவம் இருந்தான் என்று கூடச் சொல்லலாம். அப்போதுதான் இருவருக்கும் உற்ற துணையாக இருந்த ரேகாவின் பெற்றோர் விபத்தில் காலமானார்கள். எதற்கும் மனம் தளராத ரேகாவால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவளது நிலை புரிந்து அவன்தான் கட்டாயமாக அவளை பணி மாற்றல் வாங்க வைத்தான். அவனது இசைத் தவத்திற்கு சிறிது தடங்கல் ஏற்பட்டது என்றாலும் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு ரேகாவை இழப்பிலிருந்து மீட்டெடுப்பது ஒன்றே குறிக்கோளாக இருந்தது.

கோவைக்கு வந்து இந்த இரண்டு வருடங்களாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாள். கடந்த இரண்டு வருடங்களில், ஒரு இல்லத்தரசனாக வீட்டுக்குத் தேவையான அனைத்தையும், மகளின் தேவை அனைத்தையும், காதல் மனைவியையும் அவனே பார்த்துக் கொள்ளத் துவங்கினான்.  கடந்த சில மாதங்களாகத்தான் முழு நேரம் என முடியா விட்டாலும் முடிந்த வரை தனது சங்கீத வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்கிக் கொண்டு போய் வருகிறான். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து சங்கீதத்தைத் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறான். சங்கீத வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

கடந்த ஏழு வருடங்களில் கடும் முயற்சி மற்றும் பயிற்சியினால் இசையில் ஓரளவு நல்ல தேர்ச்சி பெற்று விட்டான் என்று சொல்லலாம். ஒரு சில மேடைக் கச்சேரிகளில் பாட வாய்ப்பும் கிடைத்தது. தனது கனவை நிறைவேற்ற, அதன் அடுத்த நகர்விற்கான முயற்சியில் தான் கோவையில் உள்ள ஆவாஸ் ஸ்டூடியோவில் சென்று பாட அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது தான் திலகராஜன் அவனை நிறுத்திப் பேசினார்.

நினைவலைகளில் மிதந்தபடி காந்திபுரம் வந்து சேர்ந்ததை வாகன ஓசைகளிலிருந்து புரிந்து நிகழ்காலத்திற்கு மீண்டான் மோகன்.

நிகழ்காலத்திற்கு வந்த மோகன் 11 மணிக்குள் ஆவாஸ் ஸ்டுடியோவில்  இருக்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்தான். சற்றே வாகன நெரிசல் குறைவதை உணர்ந்த அவன் தனது பைக்கை சிறிது வேகமாக ஓட்டி ஸ்டுடியோ வந்தடைந்தான். கச்சேரிகளில் பாடிய அனுபவம் இருந்தாலும் திரைப்படத்திற்கு பாடுவது இது தான் அவனுக்கு முதல் முறை.

உள்ளே சென்று ரிசப்ஷனில்....”மேடம்! நான் மோகன். இங்கு வெற்றிவேல் சாரைப் பார்க்கணும்”, என்றான்.

“அங்க உட்காருங்க சார். கூப்பிட்றேன்”, என்றாள் அந்தப் பெண்.

மோகன் எதிரில் இருந்த சோஃபாவில் அமர அவன் பக்கத்தில் இன்னும் மூன்று பேர் அமர்ந்திருப்பதைக் கண்டு முகம் வேர்த்தது. எழுந்து அந்த ரிசப்ஷன் பெண்ணிடம், “எக்ஸ்கியூஸ் மீ. வேர் இஸ் த வாஷ்ரூம்?” என்று கேட்டுச் சென்றான். கண்ணாடியைப் பார்த்து, கண்களை மூடி, நன்றாக மூன்று முறை மூச்சு இழுத்து விட்டு தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான். 

“உன்னால் முடியும்டா மோகா.. உன்னால் முடியும்”,  என்று கண்ணாடியைப் பார்த்து தனக்குத் தானே தைரியம் சொல்லி தனது தலை முடியை வாரி விட்டுக் கொண்டு வெளியே வந்து ரிசப்ஷனை நோக்கி நடந்தான். எதிரே வெற்றிவேல் சார் வந்தார். 

“மோகன்! சரியான நேரத்திற்கு வந்து விட்டாய். உள்ளே ஆடிஷன் தொடங்கி விட்டது. தயாராக இரு”, என்று சொல்லி விட்டு ஆடிஷன் ரூமிற்குள் சென்றார்.

மோகனின் சங்கீத வகுப்பில் வெற்றிவேலின் மகள் பயில்கிறாள். வெற்றிவேல் ஒரு வயலின் கலைஞர். பல திரைப்படப் பாடல்களுக்கு அவர் வாசித்திருக்கிறார். தற்போது வளர்ந்து வரும் ஒரு பிரபல இசையமைப்பாளருடன் இசைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஆடிஷனுக்குத் தான் மோகனும் வந்திருக்கிறான். 

முன்னர் இருந்த மூவரும் பாடி முடித்து விட்டனர். மோகன் இப்போது பாட வேண்டும். சிறப்பாகப் பாடியும் முடித்தான். அங்கிருந்த அனைவரும் அவனைப் பாராட்டினர். இசையமைப்பாளர் உட்பட. மோகனுக்கு சந்தோஷத்தில்  குதிக்க வேண்டும் போல் இருந்தாலும் இடம் பொருள் உணர்ந்து அவன் அடக்கமாய் இருந்தான். வெற்றிவேலிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 
 
வெளியே வந்து கைக்கடிகாரத்தை பார்க்க, “அச்சோ! குட்டிமாக்கு ஸ்கூல் விட அரைமணி நேரந்தானே இருக்கு”, என்று பதறியபடி பைக்கை எடுத்து பள்ளிக்கு விரைந்தான். சரியாக நான்கு மணிக்கு பள்ளி மணி ஒலித்தது. சிறிது நேரத்தில் மதியும் வெளியே வந்து, “அப்பா” என்றாள். 

“என்னப்பா, முகத்தில சந்தோஷம் டான்ஸ் ஆடுது. ப்ராஜக்ட் சக்ஸஸா?”, என்றாள். 

“ஆமாம் குட்டிமா. என் கனவு நனவாகிற மாதிரி இருக்கு. நாளைக்குள்ள ரிசல்ட் தெரிஞ்சிரும். சரி, வா போகலாம்”, என்று பைக்கில் ஏறி இருவரும் அங்கிருந்து கிளம்பினர். தினமும் மோகன் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு போகும் வழியில் காந்திபுரத்தில் ஒரு சிற்றுண்டிக் கடையில் சாப்பிடுவது வழக்கம். அன்றும் அதே போல் இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். போகும் போது இருவரும் அன்றைய நாள் கழிந்த விதம் பற்றி பகிர்ந்து கொண்டனர். 

அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து பைக்கை நிறுத்தும் போது திலகராஜன் எதிரே வந்தார். “மோகன்! பொண்ண ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வந்துட்டீங்களா..அப்புறம் அந்த மோட்டரக் கொஞ்சம் பாக்குறீங்களா?” என்றார்.

“நாளைக்குக் காலைல பார்க்கறேன் சார்”, என்று கூறி அங்கிருந்து நழுவினான் மோகன்.

இரவு 7 மணிக்கு ரேகா வந்தாள். 

“என்ன ரேகா இன்னிக்கு வேலை ரொம்ப அதிகமா..லேட்டா வந்து இருக்க”,  என்று மோகன் கேட்க. உற்சாகமாக ரேகா, “ஆமாம்”, என்றாள்.

“அம்மா! அப்பா இன்னிக்கு ரொம்ப ஹேப்பி, அந்த மியூசிக் டைரக்டரே அப்பாவைப் பாராட்டினாராம்”, என்றாள் மதி. 

அம்மாவும் மகளும் மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருக்க இந்த இடைவெளியில் மோகன் ரேகாவிற்கு சூடாக காஃபி போட்டுக் கொண்டு வந்தான். காஃபி குடித்துவிட்டு,  “என்னங்க! நானும் ஒரு சந்தோஷமான செய்தி சொல்லணும்” என்றாள் ரேகா.

“எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்குங்க. அதுவும் ஜெர்மனி போகவும் வாய்ப்பு கெடச்சிருக்குங்க”, என்றாள்.

“வாவ்! கங்கிராஜுலேஷன்ஸ்!, என்று மோகன் சொல்ல, “இது நல்ல ஆப்பர்ச்சுனிட்டி”, என்றாள் ரேகா.

“அம்மா, நாம எல்லாரும் போறோமாம்மா? எனக்கு ஆசையா இருக்குமா’ என்றாள் மதி.

ரேகாவுக்கு இந்த விஷயம் எவ்வளவு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது என்பதை உணர்ந்தான் மோகன். சொல்லப் போனால் ரேகா இவ்வளவு சந்தோஷமாக இருப்பது இரண்டு வருடத்திற்குப் பிறகு இப்பொழுது தான். அதற்குள் ரேகா எழுந்து சென்று கிச்சன் வேலைகளைப் பார்க்கத் துவங்கினாள்.

மறுநாள் அவரவர் தங்கள் வேலைகளுக்குக் கிளம்பினர். காலை பத்து மணிக்கு திலகராஜனுக்கு ஃபோன் செய்து, “மோட்டர் பாக்கலாமா சார்”, என்றான் மோகன். 

பின்னர் பார்க்கிங்கில் இருக்கும் மோட்டரின் பழுதைக் கண்டறிந்து சரி செய்தான். “பலே ஆள்பா நீ. எல்லா வேலையும் தெரிஞ்சி வச்சிருக்க”, என்று திலகராஜன் சிலாகிக்க, “சின்ன வயதில் கஷ்டப்பட்டு வளர்ந்ததால இப்படி வீட்டு வேலைகளைக் கத்துக்கிட்டேன் சார்” என்றான் மோகன். 

சுமார் மணி 12 இருக்கும் . மோகனின் அலைபேசி ட்ரிங்... ட்ரிங்... என்றழைக்க, ஃபோனை எடுத்து அழைத்த நபர் யார் என்று கூடப் பார்க்காமல், “ஹலோ!” என்றான் மோகன்.

“நான் வெற்றிவேல் பேசுறேன். உன் வாய்ஸ்தான்பா செலக்ட் பண்ணி இருக்காரு மியூஸிக் டைரக்டரு. கங்கராஜுலேஷன்ஸ்”, என்ற வெற்றிக்கு “தேங்க் யூ சோ மச் சார், உங்களை மாலையில் வந்து பார்க்கிறேன்”, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

அருகில் இருந்த திலகராஜன், “என்னப்பா...என்ன விஷயம்? ஏதும் மகிழ்ச்சியான செய்தியா?” என்று வினவினார்.

“ஆமாம் சார்”, என்றவன் அவரிடம் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பகிர்ந்தான். பின் மனைவிக்குக் கிடைத்த பிரமோஷன் பற்றியும் கூறினான்.

“பலே! ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பு கெடச்சிருக்கு. வாழ்த்துக்கள்பா” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் திலகராஜன். 

மோகன் வீட்டிற்குச் சென்று நேரம் போவதே தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தான். இருவரது கனவும் மெய்ப்பட நல்ல சூழல் உருவாகியுள்ளது. ஆனால் ஒருவர் கனவே மெய்ப்பட சாத்தியம். இதில் யார் விட்டுக் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். மதியை அழைத்து வரும் நேரம் ஆனதால் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அலுவலகத்தில் இருந்த ரேகா மனதில் ஏதோ இனம் புரியா குழப்பம். தன் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டும் கணவன். நிறைவானதொரு குடும்ப வாழ்க்கை. தன் கனவு நிறைவேறும் தருணத்தில், கணவனின் கனவும் நிறைவேற வாய்ப்பு வந்துள்ளது. என்ன செய்வது? இப்படி இருந்தால் என்னவாகும், அப்படி முடிவு செய்தால் என்னவாகும் என்று தன் மனதில் எழும் கேள்விகளுக்குப் பதில் ஏதும் கூறமுடியாமல் தவித்தாள். அவளுக்கு வேலை ஓடவே இல்லை. மற்றவர்களோடு இயல்பாய் இருக்க முடியவில்லை.

மகள் மதிமலருக்கோ ஜெர்மனி போகவும் ஆசை, அப்பாவைப் பாடகராகப் பார்க்கவும் ஆசை. அம்மா அப்பா இருவரும் என்ன முடிவெடுப்பார்கள், ஆளுக்கு ஒரு திசையிலிருந்து விடுவோமோ என்ற பயமும் வந்தது. இருவரையும் விட்டு, அவளால் இருக்கவே முடியாது. அப்பா மோகனின் சொந்த ஊருக்குப் போனாலும் கூட, தாத்தா பாட்டி இருந்தாலும், அவளுக்கு அப்பா, அம்மா இருவரும் தூங்கும் போது அருகில் இருக்க வேண்டும். இல்லையெனில்  தூக்கம் வரவில்லை என யாரையும் தூங்க விடமாட்டாள்.

மாலை மதிமலரை அழைத்துச் செல்ல முற்படும் போது, மோகனின் முகம் வாடி இருந்ததை வண்டியின் கண்ணாடி காட்டியது. என்ன செய்வதென்று தெரியாமல், குழம்பிப்போய் இருந்தான். உற்சாகத்தைப் பிரயத்தனப்பட்டு வரவழைத்துக்கொண்டு கிளம்பினான். 

மதிமலர் மோகனின் முகத்தை உற்றுப்பார்த்தாள். “என்ன அப்படி பார்க்கிற?” என்று கேட்டு, “வா போகலாம்.. பசிக்குது..” என்று அவளை வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். எப்போதும் சாப்பிடும் சிற்றுண்டிக் கடையை அடைந்ததும், வழக்கம் போல பள்ளியில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் மதிமலர். செயற்கை உற்சாகம் இன்னும் மோகன் முகத்தில் இருந்தாலும், கேள்விகள் ஏதும் கேட்காமல் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்னப்பா தோணுது?” என்றாள்.

கேள்வி எதைப் பற்றியது என்று தெரிந்தாலும், அதுதானா என்ற குழப்பத்தில் புருவம் சுருக்கிப் பார்த்தான். 

“ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பு வந்திருக்கு. என்ன பண்ணப் போகிறோம்?” என்று உடைத்துக் கேட்டாள் மதி. 

மகள் இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாளா என்ற கேள்வி தான் எழுந்தது அவனுக்கு. பதில் சொல்லாமல் கேள்வியைத் தவிர்க்கப் புன்னகைத்து, பேச்சை மாற்றினான்.

மாலை ஏழு மணி. அலுலகத்தில் இருந்து வரும்போதே ரேகா சூடாக டாமினோஸ் பீசா வாங்கி வந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்ன செய்வதென்று குழம்பி இருந்த ரேகா ஒரு வழியாக ஒட்டு மொத்தக் குடும்பமும் ஆசுவாசமாய் இருக்க, தான் எடுத்த முடிவுதான் சரி என்றெண்ணினாள். 

குளித்து உடைமாற்றி இருவர் முன்னும் வந்து நின்றாள். தொலைக்காட்சி முன்பு எல்லாம் தயாராக வைத்திருந்தான் மோகன். சூழ்நிலையைச் சகஜமாக்க, “திரைப்படம் பார்க்கப் போகலாமா”, எனக் கேட்டாள். 

“வேண்டாம்”, என்றாள் மதிமலர். 

மூவரும் செய்திச் சானல்களைப் பார்க்க ஆரம்பித்தனர்.

“அம்மா.. என்ன பண்ணப் போறோம்?” கேள்வியை  இப்போது அம்மாவை நோக்கிக் கேட்டாள் மகள்.

“எதுக்கு மதி?” கேள்வி புரிந்தும் புரியாதது போலக் கேட்டாள்.

“எப்படித்தான் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களோ” என்று சொல்லிவிட்டு  நெற்றியில் அடித்துக் கொண்டாள் மகள். 

“மோகன், என்ன ஓடுது மனசுல?”

“ஒன்னும் இல்ல ரேகா, நீ விசா பிராசஸ் ஆரம்பி”
 
“பாட்டு ரெக்கார்டிங் எப்போ?”
 
“இன்னும் ஒரு மாதம் ஆகுமுன்னு சொன்னாங்க”
  
நீள் மௌனம் வீட்டை அசௌகரியம் ஆக்கியது. ரேகா பேசத் துவங்கினாள். “மோகன்.! உங்களைப் பாடகராகப் பார்க்க நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஆசைப்படுகிறோம். என் ஆன்சைட் பத்தி யோசிச்சு குழப்பிக்காதீங்க. பார்த்துக்கலாம். மதிமலருக்கு இன்னும் நாலு மாசம் ஸ்கூல்  இருக்கும். ஏப்ரலுக்கு மேல் சென்னை போகலாம். ரெக்கார்டிங் ஸ்டுடியோ  எல்லாம் சென்னையில் அதிகம். வாய்ப்புகள் வரும்போது நாம அங்கே இருப்பது அவசியம். எனவே மீண்டும் சென்னைக்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்”, என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் ரேகா.
 
“என்ன ரேகா சொல்லற? நீ ரொம்ப நாளாகக் காத்திருந்த ஒரு வாய்ப்பு. நாம் எல்லோரும் விரும்பிய ஒரு தருணமும் கூட. மதி அங்கே படிக்கனும்ன்னு நாம ஆசைப்பட்டோம். எனக்காக ஏதும் மாற வேண்டாம். லெட்ஸ் மூவ் அஸ் ஃபேமிலி”. 

“நமக்காகத் தான் எல்லாமே. இங்கே உங்க ஆசை நிறைவேறுச்சா, இல்லை என் விருப்பம் நிறைவேறுச்சா என்பது விசயம் இல்லை. நாம ரெண்டு பேரும் மேல வரலாம். உங்க முதல் வாய்ப்பு நல்லபடியா கிடைக்கட்டும். தொடர் வாய்ப்புகள் வரும் போது அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம். ஆன்சைட் வாய்ப்பு வராமலே போகாது. இட்ஸ் எ மேட்டர் ஆஃப் இயர்ஸ். அவ்வளவு தான். ஏதும் குழப்பிக் கொள்ளாமல் பாட்டில் கவனம் செலுத்துங்க. மேலும், உங்கள் கனவுதான் இனி என் லட்சியம் என்று முன்பே சொல்லி இருந்தேனே. எனவே, நம் இருவரின் கனவும் லட்சியமும் நிறைவேறப் போகுது என்பது தான் உண்மை. அப்புறம், நீங்க பெரிய பாடகர் ஆகி விட்டால் கண்டிப்பாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்யத்தான் போகிறோம். மதியையும் மேற்படிப்பிற்கு அனுப்பி வைக்க முடியுமே. அப்புறம் என்ன?” என்றாள் தன்னை முன்னிலைப்படுத்தாமல்.

மதிமலர் அம்மாவை வியந்து பார்த்தாள். 

“என்னடி அப்படி பார்க்கிற?” என்று கேட்டு, செல்லமாய் அவள் தலையைத் தட்டினாள். 

மதியோ அப்பாவைப்   பார்த்தாள். அவனது கண்களோ காதல் மனைவி ரேகாவின் மீதே இருந்தது. 

“ஏற்கனவே நிறையச் செய்திட்ட ரேகா..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,  அவன் வாயைத் தன் கைகளால் மூடி மீண்டும் சொன்னாள், “இன்னும் நிறைய இருக்கு”.

மோகன் எழுந்து வந்து கட்டிக் கொண்டான் அவளை. பெற்றோர் இருவரையும் மிகுந்த பெருமையுடன் மகிழ்ச்சி பொங்க நெகிழ்ச்சியுடன் கட்டி அணைத்துக் கொண்டாள் மதி.

(ஈரோடு வாசல் - படைப்பு குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் அன்புமணி, உமா மகேஸ்வரி R,மகேஸ்வரி மதன் ஆகியோர் மூவரும் சேர்ந்து வெளியிட்ட சிறுகதை)