தன்னை உயிர்பிக்க சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருந்த செல்போன் 'வானம் பார்த்து கிடந்தேனே, மழையாய் வந்து விழுந்தாயே, வழித் துணையே வழித் துணையே நீயே. ' என்று டிராகன் படத்தின் பாடலை தன் ரிங்டோனில் வெளியிட, கார்த்தியுடனும் சீனியுடனும் ஆலோசித்துக் கொண்டிருந்த ரோஜா பூ நிறத்தழகி. ரக்க்ஷிதா இதழோரத்து புன்னகையுடன் நிதானமாய் எட்டு வைத்து அதன் அழைப்பை ஏற்று ஹலோ சொன்னாள். அடுத்த நொடி இருதயம் துடிக்க கண்கள் படபடக்க உடம்பு உதறலெடுக்க அப்படியே மயங்கி சரிந்தாள். அதைக் கண்டு இருவருமே துடித்துப் போனார்கள்.
கார்த்தி என்கிற கார்த்திகேயன் ஒரு தொழில் அதிபர். சீனிவாசன் அவரின் தம்பி. இருவரும் மிகுந்த பாசம் உடையவர்கள். இவர்களின் மனைவிகளும் அப்படியே அமைந்தது கண்டு இருவருமே வியப்படைவார்கள்.
கார்த்திகேயனின் மனைவி தேவி அனைவருக்கும் உதவும் குணமுடையவள். சீனிவாசனின் மனைவி ரேவதியும் அனைவரிடத்திலும் மிகப் ப்ரியமாக இருப்பாள். அக்கா தங்கை போலவே இருவரும் இணைந்தே இருப்பார்கள்.
கார்த்திகேயன் தேவி தம்பதியருக்கு ரக்க்ஷிதா என்ற பெண் குழந்தை. சீனி தம்பதியருக்கு இன்னும் குழந்தை இல்லை. அண்ணன் தம்பி இருவருக்கும் வீடும் தொழிலும் ஒன்று என்பதால் அனைவரும் கூட்டுக் குடும்பமாக மிக சந்தோசமாக வாழ்ந்தனர். அனைவருக்கும் ரக்க்ஷிதா மட்டுமே
செல்ல பிள்ளையானாள்.
ரக்க்ஷிதா தற்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். கார்த்திகேயன் தன் தந்தை செய்த தொழிலை இன்றளவும் நேர்மையாகவே செய்து வருகிறார். அண்ணன் தம்பி இருவருக்கும் தன் தந்தையின் மீது தீராத பக்தி உண்டு. கார்த்திகேயனின் தாயார், ரக்க்ஷிதா சிறுபிள்ளையாக இருக்கும்போது உடல் நலக் கோளாறு ஏற்பட்டு எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி உயிர் துறக்க. கார்த்தியும் சீனியும் தன் தந்தை மேல் தீவிர பாசம் கொண்டனர்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்பவே இருவரும் நடந்து கொள்வார்கள். மருமகள்களும் தன் மாமனாரிடம் மிகுந்த மரியாதையுடனும் அதீத அக்கறையுடனும் செயல்படுவார்கள்.
சென்ற வருடத்தில் ஒரு நாள் அனைவரும் தொழில் சார்ந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ரக்க்ஷிதாவின் தாத்தா திடீரென்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட. அவ்வளவு பேரும் அவரை தூக்கி காரில் எடுத்துக் கொண்டு பிரபல மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு நோக்கி ஓடினார்கள். எத்தனையோ நவீனம் வந்த போதிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.
வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அது மற்றவர்களுக்கு நடக்கும்போது விறுவிறுப்பாக இருக்கிறது. நமக்கு நடக்கும் போது நம் மனம் பேதலித்து போய்விடுகிறது.
ஒரு மாத காலம் ஆகியும் யாரும் அவரவர் நிலைக்கு திரும்பவே இல்லை.
தன்னை சுற்றி இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'அழுது அழுது' அடையாளம் தெரியாம கரைந்து போவதை ரசிக்காத ரக்க்ஷிதா முதன் முறையாக தன் குரலில் காட்டிக் கொண்டிருந்த பணிவை சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு குடும்பத்தாரிடம் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேச ஆரம்பித்தாள். "தாத்தா நம்பள விட்டுட்டு போயிட்டாங்கன்னு எத்தனை நாளைக்கு இப்படி சோகத்திலேயே மூழ்கிட்டு இருக்க போகிறோம்? தினம் தினம் இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டு தானேப்பா இருக்கு? வெளியில நடக்கும்போது அதை ஒரு காட்சியாகவும் சம்பவமாகவும் பார்க்கிறோம். நம்ம வீட்ல நடக்கும்போது அந்த இழப்பை நம்மளால தாங்க முடியல. எல்லோரும் ஒருநாள் போய் தானே ஆகனும். இப்படித்தானே உலகம் பூராவும் நடக்குது. இதில் வருத்தப்படுவதில் எந்த ஒரு தெளிவும் வராது. தாத்தா கட்டி வைத்த மலைக்கோட்டையை நாம் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அவர் சொன்ன வழியில் நடப்பது தானே தாத்தாவுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை" என்று அவள் கம்பீரமாக சொல்ல. அதுவரை கார்த்தியும் சீனியும் நாம் சிறுபிள்ளை என்று நினைத்திருந்த பிள்ளை இப்படி பேசுகிறாளே என்று விழித்திரை விலகாமல் வியப்பில் ஆழ்ந்து குடும்பமே அவளை கட்டி அணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
ரக்க்ஷிதாவின் பேச்சில் இருந்த உறுதியும் வார்த்தைகளில் இருந்த நேர்மையும் கண்டு தன் பிள்ளையின் மனம் வருந்தாத படி அனைவருமே இயல்புநிலைக்கு திரும்ப. அதன் பின் அண்ணன் தம்பி இருவருமே தொழில் சார்ந்த பணிக்கும் எந்த ஒரு முக்கிய முடிவுக்கும் ரக்க்ஷிதாவை கலந்தாலோசிக்கவே செய்தார்கள்.
அந்த மாதிரியான ஒரு ஆலோசனையின் போது தான் ரக்க்ஷிதா மயங்கி சரிய. .கார்த்தியும் சீனியும் பதட்டத்தோடு ரக்க்ஷிதா அருகே ஓடினர். முகத்தில் தண்ணீர் தெளித்த பின்பே கண் திறந்து பார்த்தாள். அருகில் இருந்த ஷோபாவில் இருவரும் உட்கார வைத்தார்கள்.
"ரக்க்ஷிதா..ரக்க்ஷிதா. என்னாச்சும்மா.." இருவருமே ஒருசேர கேட்டார்கள்.
"தெரியலப்பா..திடீர்னு மயக்கம் வந்திடுச்சு"
"போன்ல யாரு? என்ன சொன்னாங்க" கார்த்தி கேட்டார்.
"ப்ரண்ட் தான் கூப்பிட்டிருந்தா. ஹலோ சொன்னது தான் தெரிஞ்சுது. அப்படியே மயக்கம் வந்திடுச்சு"
"சரி வா..உடனே ஹாஸ்பிட்டல் போலாம்” என்று பரபரக்க.
"அப்பா..சாதாரண மயக்கத்துக்கெல்லாமா ஹாஸ்பிட்டல் போகணும்?"
"இந்த காலத்துல எதையும் சாதரணமாக எடுத்துக்க கூடாது..எதுவாக இருந்தாலும் ஹாஸ்பிட்டல் போய் க்ளியர் பண்ணிக்கலாம்"
"சரிப்பா..நான் நாளைக்கு காலேஜ் போறப்போ அப்படியே போய் பார்த்துக்கறேன்"
"இன்னைக்கு பசிக்கறதுக்கு நாளைக்கு சாப்பிட முடியுமா?" என்றார் சீனி.
"சித்தப்பா..என்ன நீங்க லாஜிக்கே இல்லாம பேசறீங்க"
"சாதரணமாக பேசிட்டு இருக்குறதுக்கே கரெக்டான லாஜிக் வேணும்னு சொல்லற. ஆனா ஹெல்த் விசயத்துல மட்டும் ஏன் கரெக்டா இருக்கனும்னு நினைக்க மாட்டேங்குற?"
"ப்ளீஷ் சித்தப்பா. நாளைக்கு பார்த்துக்கறேன்..எனக்கு எந்த தொந்தரவும் இல்ல. என்னோட ஹெல்த் கன்டிஷன்ல எனக்கு நம்பிக்கை இருக்கு"என்று கெஞ்சலாகக் சொல்ல
"இது தான் லாஸ்ட் வார்னிங் உனக்கு.. ஏதாவது ஒன்னுனா எங்களால தாங்க முடியாது. சாக்கு போக்கு சொன்னா நான் பொல்லாதவன் ஆகிடுவேன் பார்த்துக்க" என்றபடி கார்த்திக் எழுந்து சென்றார். ரக்க்ஷிதா எழுந்து சென்ற பின்பே சீனி எழுந்து சென்றார்.
ரக்க்ஷிதா மொபைலில் சற்றுமுன் வந்திருந்த எண்ணிற்கு அழைத்தாள்.
"ஏய் கல்பனா..எனக்கு அன்னைக்கு மாதிரியே திரும்பவும் இன்னைக்கு மயக்கம் வந்திடுச்சுடி"
எதிர்முனையில் இருந்தவள் ரக்க்ஷிதாவின் நெருக்கமான தோழி கல்பனா .
ஒரு 40 நாட்களுக்கு முன் தான் அந்த சம்பவம் நடந்தேறியது. .அதனை ரக்க்ஷிதா வீட்டில் கூறாமல் மறைத்திருந்தாள். வில்லிலிருந்து புறப்படும் குறிவைத்த அம்பு போல ஒரு 'ஈச்சர் வேன்' இருவரும்ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்த போது ரக்க்ஷிதாவை குறி வைத்து வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த கல்பனா 'ஏ ரக்சு' என்று அலறியபடி முடிந்தவரையில் தன் பலத்தை ஒன்று திரட்டி அசுர வேகத்தில் ரக்க்ஷிதாவை ஓரமாக தள்ளிவிட்டு தானும் கீழே விழுந்தாள். வேகமாகச் சென்ற ஈச்சர் வேகமான புயல் காற்றை முகத்தில் அறைந்து விட்டு மறைந்தது.
விதி நடத்தும் பாடத்தை மாற்றி எழுத யாரால் இயலும்?? கீழே கிடந்த கல்லில் ரக்க்ஷிதாவின் பின் தலை மோதியது. கண்ணில் ஏதோ ஒரு மின்னல் வெளிச்சம் போன்ற ஒளி வினாடியில் தோன்றி மறைந்தது.
கடந்த 10 நிமிடங்கள் நடந்த விஷயங்கள் அனைத்தும் மறந்து போயின ரக்க்ஷிதாவிற்கு. கல்பனாவின் கை கால்களிலும் சிறுசிறு காயங்கள். அருகில் இருப்பவர்கள் உதவியுடன் முதலுதவி செய்து வீட்டிற்கு சென்றனர் இருவரும்.
தந்தையர்களின் மனதை நோகடிக்க விரும்பாமல் மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை போட்டுவிட்டு படுத்தாள் ரக்க்ஷிதா.
'4 நாட்கள் வலி இருக்கும். எதற்கும் ஒரு 'எம்ஆர்ஐ' செய்து கொள்ளலாம்' என மருத்துவர் கூறி இருந்ததை ரக்க்ஷிதா மறந்தே போயிருந்தாள். அதன் பின்னர் கல்லூரியில் ஒரு முறை திடீரென கண்கள் இருட்டி மயங்கினாள். அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட தன் குடும்ப டாக்டர் பரசுராமிடம் சென்றாள்.
"வா ரக்க்ஷிதா..நீ மட்டும் வந்திருக்க ..அப்பா, சித்தப்பா யாரும் வரலையா? எல்லோரும் ஃபைன் தானே"
"ஃபைன் டாக்டர். சின்ன ப்ராப்ளம். அதான் டிஸ்கஸ் பண்ண வந்தேன்"
என்று நடந்தவற்றை கூறினாள். கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்த பரசுராம்
"சரி, நீ பயப்பட வேண்டாம். ஆனால் கண்டிப்பாக எம்ஆர்ஐ பார்த்தாக வேண்டும்"
என்று கூறி சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்திருந்தார்.
''தேங்க்யூ சார்'' என்று கூறிய ரக்க்ஷிதா நகர்ந்ததும் தனது நண்பர் கார்த்திகேயன் அதாவது ரக்க்ஷிதாவின் தந்தைக்கு போன் செய்தார். அவர் பிஸியாக இருக்கவே அடுத்த நொடி தாமதிக்காமல் சித்தப்பா சீனிவாசனை தொடர்பு கொண்டார். பதட்டத்துடன் சீனிவாசனிடம் "இன்னும் பத்து நாட்களுக்குள் ரக்க்ஷிதாவிற்கு ஒரு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும்.
மற்றதை நேரில் பேசிக் கொள்வோம். சோ ப்ளீஸ் கம் இமிடியட்லிட்லி டு மை கிளினிக்" என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
இதை கேட்ட சீனிவாசன் உடல் வியர்த்தது. இன்று ரக்க்ஷிதா மயங்கி விழுந்ததற்கு காரணம் இதுதானா என்று மனதில் கேள்வி எழுப்பிக் கொண்டே வெளியில் வந்தார். அதற்குள் கார்த்திகேயனும் வர நமது டாக்டர் பரசுராம் கால் பண்ணி இருக்கார் என்று கூறிக்கொண்டு சீனிவாசனின் அருகில் வந்தார் கார்த்திகேயன்.
"நான் பேசிட்டேன் அண்ணா. பேசிக்கலாம் வாங்க" என்று சீனிவாசன் கூற இருவரும் அலுவலகம் சென்றனர். அதன் பின் யாரும் இதைப் பற்றி பேசாமல் மறந்தே போயிருந்தனர். அடுத்த நான்கு நாட்களில் நடந்த சம்பவம் தான் அனைவரையும் நிலைகுலையவைத்தது. கல்லூரிக்கு அவசரமாக கிளம்பி கொண்டிருந்த ரக்க்ஷிதா கண்கள் இருட்டி வாந்தி எடுக்க கை கால்கள் உணர்ச்சியற்ற நிலையில் மயங்கி சரிந்தாள். டாக்டர் பரசுராமிடம் தூக்கிக் கொண்டு ஓடினர்.
"நான் போன வாரமே சொல்லியிருந்தேனே 'சி ஈஸ் இன் க்ரிட்டிகல் ஸ்டேஜ் அப்படினு? நீங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை?" என்றார் மருத்துவர், கார்த்திகேயனை பார்த்து. கார்த்திகேயனும் தேவியும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"என்ன டாக்டர் சொல்றீங்க? இதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாதே. யாரிடம் சொன்னீங்க?"
"உங்கள் தம்பி சீனிவாசனிடம் தான்"
இதை கேட்ட தம்பதியருக்கு அதிர்ச்சியுடன், குழப்பமும் சூழ்ந்து கொண்டது.
"சரி டாக்டர். நடந்தவைகளை விட்டு, உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார் கார்த்திகேயன்.
கார்த்திகேயன்,தேவி இருவருக்கும் தன் மகளின் நிலையை நினைத்து,
உயிர் போகும் வலியுடன் போராடிக் கொண்டிருந்தனர்.
மருத்துவர் சிகிச்சையை இன்றே ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறிச் சென்றார்.
சீனிவாசனும், ரேவதியும் அப்பொழுதுதான் வந்து சேர்ந்தனர். மனதில் கேள்வியுடன் கார்த்திகேயன் சீனிவாசனைப் பார்க்க, "ஆபிஸ் மீட்டிங் முடித்து விட்டு வர நேரம் ஆகிவிட்டது. இப்போ ரக்க்ஷிதா எப்படி இருக்கிறாள்?" என சீனிவாசன் கேட்கும் பொழுது தான் கார்த்திகேயனுக்கு 'சுரீர்' என்றது..
ஆனால் எதுவும் பேசாமல் "அவள் நன்றாக இருக்கிறாள். அவளுக்கு நடக்கும் ஆப்ரேஷன் அவளை குணமாக்கி பழைய என் மகள் எனக்கு கிடைப்பாள்"
என்றார் குரலில் கடுமையும் வேதனையும் கலந்து. ஆனால் சீனிவாசனிடம் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு சென்று வருவதாக தேவியிடம் கூறிவிட்டு,
நேராக கல்பனாவிடம் சென்றார்.
கல்பனாவின் அம்மா கதவை திறக்க, பின்னால் வந்த கல்பனாவும் கார்திகேயனைப் பார்த்து,
"வாங்க அங்கிள், ஆண்ட்டி கிட்ட பேசினேன்..அவங்க எல்லாம் சொன்னாங்க..
ரக்க்ஷிதா இப்ப எப்படி இருக்கா?" என்றாள் குரல் தழுதழுக்க..
"கொஞ்சம் சீரியஸ்..ஆனால் பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்கார்மா" என்றார் கண்களில் வரும் நீரை நிறுத்த போராடிக் கொண்டே.
அங்கே ஏதோ ஒரு நிசப்தம், யார் பேசுவது என்ற குழப்பத்தில்..கார்த்திகேயனே அந்த அமைதியை கலைத்தார்..
"என்ன நடந்தது கல்பனா?
ரக்க்ஷிதா வேறு ஏதாவது உன்கிட்ட சொன்னாளா?"
"அங்கிள்.." என்று ஆரம்பித்தவள்..தன் சித்தப்பாவின் ஆதங்கமாய் ரக்க்ஷிதா கூறியதை சொல்லத் தொடங்கினாள். 'வளைந்து செல்லும் வாழ்க்கையில் நுழைந்து தேடினாலும் நாம் பூக்களை பார்க்க போவதில்லை. வற்றிப்போன மூங்கில் கூட இலை விட்டு பூ பூக்கிறதே. நாம் மழலை மொழி கேட்காமலேயே மடிந்து போயிடுவோம்' என்று சித்தப்பாவும் சித்தியும் மனம் உடைந்து அழுததை அவள் பார்த்ததாகவும் பெற்றால் மட்டுமே பிள்ளையாகாது என்பதை என் சித்தப்பாவுக்கு நிரூபிக்க போகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய கடமை அப்பாவை விட சித்தப்பாவுக்கே அதிகம் சேரும் உலகத்துல யார் என்ன சொன்னாலும் எங்க சித்தப்பா தான் என் உயிர். அவருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று அன்று சொன்னதை முழு மூச்சுடன் கூறி முடித்தாள் கல்பனா. இருவருக்கும் நன்றி கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
'அனைத்து ஜீவராசிகளும் அங்கீகாரத்துக்கு தான் ஆசைப்படுகிறது. நாம சீனியையும் ரேவதியையும் கவனிக்காம விட்டுட்டோமோ அவங்க முகத்தில மலர்ச்சி இல்லைங்கறதே எனக்கு ஏன் தெரியாம போச்சு! இவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள்' என்று உணர்ந்தவர்
சீனிவாசனிடம் சென்றார்.
"ஏன்பா இப்படி பண்ணே" என்றார்..
சீனிவாசனோ இதயத்துள் அலைமோதும் உணர்ச்சியை முகத்திலும் கண்ணிலும் காட்டாமல் இருந்தார்.
அதில் அமைதி சூழ்ந்தது இருவரிடமும். கார்த்திகேயனே பேச்சைத் துவங்கினார்.
"உனக்குள் தெளிவு இல்லாததால் பயமும் குழப்பமும் சேர்ந்து உன்னையே நீ அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாய் சீனு" என்றார் மென்மையான குரலில்.
"என் மேல வீசப்பட்ட சொல்லாலையும் கல்லாலையும் நான் இப்படி ஆயிட்டேன்"
"ரக்க்ஷிதா உனக்கும் மகள் தானே..
அவள் மேல் இவ்வளவு வன்மம் ஏன்? "
ரக்க்ஷிதாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது
"ஆமாம்..வன்மம் தான். நம்மளோட சடங்கும்,சமுதாயமும் சொல்லிக் கொடுத்த வன்மம். போகும் இடத்தில் பார்க்கும் ஏளனப் பார்வை, இத்தனை வருஷமா குழந்தை இல்லையாங்குற கேள்வியில் இருந்து வந்த வன்மம். கூட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட போது வந்த வன்மம். நானும் ரேவதியும் நல்வர்களா, கெட்டவர்களா என்பதை பார்க்காமல் குழந்தை இல்லைங்கறதுக்காக கேலிப் பார்வையை சுமந்து கொண்டு நின்ற வலி எங்களுக்கு மட்டுமே தெரியும்
ஆனால் நீங்கள் ஒரு நாளும் அதை கவனித்ததில்லை. இந்த சமூகம் ரேவதியை இன்றளவும் ஒதுக்கியேதான் வைத்துள்ளது"
என்று விரக்தியுடன் பேசிகொண்டிருந்தார்.
மீண்டும் கார்த்திகேயனே ஆரம்பித்தார்.
"ரக்க்ஷிதாவிடம் நீ உயிர் கேட்டிருந்தாலும் உடனே கொடுத்திருப்பாள்.
உன் மேல் அவ்வளவு பிரியம்" என்றார்.
கண்களை இரண்டு வினாடிகள் மூடித்திறந்த சீனிவாசன்
"தவறுதான். அவள் மூலமா வாழ்க்கையை பார்க்கிறதை விட்டுட்டு என் மூலமா வாழ்க்கையை பார்த்துட்டேன். வாழ்க்கையில என் காலுக்கு மட்டும் தான் முள் குத்துது நெனச்சிட்டு இருந்தேன். இப்ப ஒரு முள்காட்டையே சுத்தம் பண்ற விஷயம்னு நான் முடிவுக்கு வந்துட்டேன். வீண் பழிகளை தாங்க முடியாமல் வந்த கோபம் ஏனோ எனக்கென்று இருந்த உறவைக் கூட வெறுத்து ஒதுக்க
வைத்து விட்டது..ஆனால் வெறுப்புக்கும் எல்லைக் கோடு உண்டென்பதை இப்ப தெரிஞ்சுகிட்டேன்.. ரக்க்ஷிதாவின் இந்த நிலமையை பார்த்து கல்லாக நிற்கும் சக்தி எனக்கில்லை" என்று கதறி அழுதார் சீனிவாசன்.
கார்த்திகேயன் மெதுவாக சீனிவாசனின் கையை பற்றிக் கொண்டு "உன் மகள் உனக்காக எதையும் செய்வாள்" என்று சொல்ல.. "அண்ணா என் உயிரே ரக்க்ஷிதா தான். நம்மையெல்லாம் உயிர்ப்பித்த கம்பீரமான ரக்க்ஷிதா எப்போதும் நம்முடன் வேண்டும் அண்ணா.." என்று கண்ணீருடன் சொல்ல..
அதற்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளிவந்த டாக்டர்,
"ஆப்ரேஷன் முடிந்தது..நீங்கள் ரக்க்ஷிதாவைப் பார்க்கலாம்..யாரும் அவள் முன் அழ வேண்டாம்..மூன்று மாதங்கள் மிகக் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்..மற்றதை பேசிக் கொள்ளலாம்" என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.
கார்த்திகேயனும், சீனிவாசனும் வருத்தம் கலந்த நிம்மதியுடன் ரக்க்ஷிதாவின் வார்டை நோக்கி நடந்தனர் !
(ஈரோடு வாசல் - படைப்பு குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் கௌசல்யா ஞானேஸ்வரன், மூர்த்தி, கௌசல்யா பாஸ்கர் ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

No comments:
Post a Comment