அன்று தில்கேஷ்வர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஆறரை மணிக்கே கிளம்பி தங்கும் விடுதியை விட்டு வெளியே வந்தோம். பேட்டரி ஆட்டோக்கள் வரிசையில் நின்றன. ஓட்டுநர்களிடம் கட்டணம் பேசி பயணத்தை தொடங்கினோம். சாலைகளில் சிலர் கழுதைகள் மீது மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றார்கள். இங்கு பாரம் சுமந்து செல்லும் கழுதைகளை அதிகம் காண முடிந்தது. குறுகலான தெருக்களிலும் குப்பைகள் குவிந்து கிடந்தன. பல சிறிய தெரு இடுக்குகளில் நுழைந்து ஆட்டோ ஓட்டுநர் வேகமாகச் சென்றாலும், பேட்டரி ஆட்டோ என்பதாலோ என்னவோ டீசல் ஆட்டோக்களை விட வேகம் குறைவாக இருந்தது பாதுகாப்பு உணர்வை தந்தது.
காலை நேரத்தில் சாலை நேர உணவுக் கடைகளின் முன் எண்ணெயில் போட்டு எடுத்த கச்சோரியும், சப்ஜியும் பொறித்தெடுக்கப்பட்ட மொறுமொறுப்பான ஜிலேபியும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலையில் தேநீரோடு மொறுமொறு ஜிலேபியை சிலர் சுவைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கடைகளுக்கு முன்பு தமக்கு கச்சோரி கிடைக்குமா என்று ஏக்கத்தோடு தெருநாய்கள் நின்றிருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டே வந்ததில் தில்கேஷ்வர் ஆலயம் வந்து விட்டது.
கோவிலின் வடிவமைப்பு செட்டிநாடு வீடு போன்று இருந்தது. தாழ்வாரத்தில் நின்று பார்த்தால் கோபுரம், சிவலிங்கம், நந்தி —இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும்படி கோவில் கட்டப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் சிறப்பு எனக் கூறினார்கள்.
தில்கேஷ்வர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் தினமும் ஒரு எள் முனை அளவு வளர்ந்து வருவதாகக் கூறுகின்றனர். சிவலிங்க வடிவத்தின் ஒரு புறம் சந்திரன், மற்றொரு புறம் சூரியன் உள்ளது. அந்த சிவலிங்கத்திற்கு நீர் ஊற்றி நாமே அபிஷேகம் செய்யும் வகையில் சிறிய குவளையும் வைத்திருந்தார்கள்.
சிவனை வணங்கி வெளியே வந்தபோது “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை சொல்ல வைத்து, காசிக்கு வந்ததன் பலனை அங்கே இருந்த அர்ச்சகர் விளக்கினார். அதன் பிறகு விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அதே ஆட்டோவில் அறைக்குத் திரும்பினோம்.
அன்று காலை உணவின் போது, ஒரு வாரமாக சமைத்துக் கொடுத்த பணியாளர்களுக்கும் அங்கே இருந்த ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தோம். எங்களால் முடிந்த சிறு தொகையை வழங்கி வாழ்த்துகளுடன் உணவை முடித்தோம்.
அதன்பின், உறவினர்கள் மற்றும் நாகப்பன் தம்பதியருடன் காசி விஸ்வநாதர் கோவில் தரிசனத்திற்கு மீண்டும் கிளம்பினோம். ஆட்டோவில் சென்று பி.டி.ஆர் மாலில் இறங்கி அங்கிருந்து, நந்தி சதுக்கம் வழியாக சிவனை நோக்கி நடந்து சென்றோம். காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் நுழைவாயில் முன்பு பேப்பர் கப்பில் பால் விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்றால் விஸ்வநாதருக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து வரலாம்.
அன்று பொது தரிசன வரிசையில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இணைந்து கொண்டோம். அங்கே வரிசையில் நின்றிருந்த மூன்று வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று இறைவன் நாமத்தை உரக்கச் சொல்லியபடியே நகர்கிறார்கள். நம் மனமும் உள்வாங்கி இறைவனின் நாமத்தை நம்மையறியாமலே உச்சரிக்க ஆரம்பிக்கிறது.
வரிசையில் நகர்ந்து விஸ்வநாதர் அருகில் சென்றபோது, லிங்கத்தை பெரிய குழாய் மூலம் நீர் பாய்ச்சி தூய்மை செய்து கொண்டிருந்தனர். அங்கே பொருத்தப்பட்ட பெரிய திரைகளில் ஏற்கனவே எடுத்திருந்த விஸ்வநாதர் தரிசனக் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இறைவனின் சிரசில் நாம் கொண்டு சென்ற பால், இளநீர் ஆகியவற்றை நாமே ஊற்றலாம். அந்த இடத்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், பணம் அளித்தவர்கள் அருகில் சென்று தொட்டு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு பெற்றனர். பணம் அளிக்காதவர்கள் தள்ளி நின்று இறைவனின் நாமத்தை உரக்கச் சொல்லி வெளியே வந்தனர்.
எங்களுடன் வந்த நாகப்பன் தம்பதியர் அன்னபூரணி அம்மன் கோவில் செல்லலாம் என்றனர். நாமும் செல்வோமா என உறவினர்களுடன் யோசித்துக் கொண்டிருக்கையில் தம்பதியர்கள்களை விட்டு பிரிந்து வழித்தடம் மாறிவிட்டோம். எது வழி என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. எங்களுடன் வந்த பாட்டியம்மாவையும் அழைத்துக் கொண்டு ஒருவழியாகத் தேடி ஆலயத்தைக் கண்டடைந்தோம்.
ஆலயத்திற்குள் சென்ற நேரத்தில் அன்னபூரணி தாயாருக்கு சிறப்பான தீபாராதனை நடந்தது. மனமுருக வழிபட்டு, பிரசாதமாக வழங்கிய லட்டுவை வாங்கி கொண்டு வெளியே வந்தோம். கோவிலிருந்து திரும்பி வரும் வழியெங்கும் பாசி மணிகளை கையில் வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்கள். பத்து ரூபாய்க்கே பாசிகள் கிடைத்தன. திருட்டுப் பயம் இருக்கும் சூழலில் இலகுவாக வாங்கி அணியலாம்.
எங்களுடன் வந்த பாட்டி, “அன்னபூரணி சிலை வேண்டும். புடவை, மற்றும் தோடு வாங்கிக் கொடுங்கள்” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தார். அவரை அழைத்துச் சென்று தேவையானவற்றை சாந்தி அக்கா வாங்கிக் கொடுத்தார். அவர் வாங்கிய புடவை, கவரிங் நகைகள் அனைத்தும் தன் ஊரிலுள்ள அம்மனுக்காக என்றார். அவரின் பக்தி எங்களை ஆச்சரியப்பட வைத்தது. ஒன்றரை மணிக்குள் அறையை காலி செய்ய வேண்டியிருந்ததால் விரைவில் திரும்பினோம்.
மதிய உணவு முடித்து, எங்கள் பொருட்களை இரண்டு அறைகளில் சேர்த்தோம். மாலை வேளையில் சிலர் மீண்டும் தரிசனத்திற்குச் சென்றனர். நாங்கள் கடைவீதிக்குச் சென்றோம். கடைவீதியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. சாலையோரங்களில் வியாபரிகள் பொருட்களைப் பரப்பி விற்றனர். காவல்துறை வாகனம் வருகிறது என்ற செய்தி பரவ ஆரம்பித்ததும் விற்பனையாளர்கள் பொருட்களைச் சுருட்டிக் கொண்டு ஓடினார்கள். காவல்துறை வாகனம் கடந்ததும் மீண்டும் வந்து கடை அமைத்தனர். காவல் துறை அதிகாரிகள் வந்துட்டு போயிட்டார்கள் இனி வரமாட்டார்கள் என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பரவுவதை பார்க்க முடிந்தது.
கவரிங் நகை, பாத்திரங்கள், பொம்மை, ஜவுளிகடைகள் ஸ்வெட்டர், குல்லா, என பலவகை விற்பனை பொருள்களின் கடைகள் நிறைந்து இருந்தன. சாலையோரங்களில் பொருள்களை விற்பவர்களிடம் விலை குறைவாக பேரம் பேசி வாங்கலாம். பெண்களுக்கான சுடிதார் பேண்ட், டாப் வகைகளையும் கைகளில் வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்கள். அவர்களிடமும் பேரம் பேசி வாங்கலாம். கடைத்தெருக்களில் உள்ள சில உணவுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கே லஸ்ஸி நன்றாக இருக்கும் என்றார்கள். பால், பாதாம், மசாலா கலந்த பானத்திற்கு தண்டாய் என்றும் பெயர் சொன்னார்கள்.
பொருட்கள், உணவுகள் தவிர வண்ணமயமான மிட்டாய்களும் கடைகளில் குவிக்கப்பட்டிருந்தன. வாங்கிய சில மிட்டாய்களில் வண்ணங்கள் வேறாக இருந்தாலும் அதை உண்ணும் போது இலந்த வடையின் சுவை இருந்தது. இந்தி தெரிந்து இருந்தால் பேரம் பேச வசதியாக இருக்கும். தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் இந்தியில் பேசவே விரும்பினர். வீட்டிலுள்ள குழந்தைகள், பிள்ளைகளுக்கான சில பொருட்களை வாங்கிக் கொண்டோம்.
அறைக்குத் திரும்பி இரவு ஏழு மணிக்குள் உணவு முடித்து, இரண்டு வாகனங்களில் பண்டிட் தீனதயாளன் உபாத்யாய ஜங்ஷன் நோக்கி கிளம்பினோம். சுமார் 15 கி.மீ தூரம். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். வழியெங்கும் திருமண ஊர்வலங்கள், பட்டாசுகள், மின் அலங்காரங்கள் கண்களைக் கவர்ந்தன. உத்தரப் பிரதேசம் பெரிய மாநிலம், அதில் நாம் பார்த்தது ஒரு துளி மட்டுமே.
ரயில்நிலையம் சென்று இறங்கிய பிறகு, லக்கேஜ்களை எடுத்துச் செல்ல எங்களுடன் வந்த பழனிசாமி அவர்கள் உதவினார். அறிமுகம் தெரியாத நண்பர்களோடும், தோழிகளோடும் உருவான நட்பு, பயணத்தை இன்னும் இனிமையாக்கியது. எங்களுடன் பயணத்தில் இணைந்திருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் மகிழ்வைப் பரிமாறிக் கொண்டு மனநிறைவோடு விடைபெற்றோம்.
11:30க்கு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் வந்தது. எங்கள் ஐந்து பேருக்கும் ஒரே கோச் என்பதால், சென்று வந்த பயண அனுபவங்களை இரண்டு நாட்கள் பேசி ஓய்வு எடுத்துக் கொண்டு, இரண்டு நாள் ரயில் பயணத்தை சுமூகமாக முடித்தோம். காட்பாடியில் இறங்கி ரயில் மாற்றி, ஆன்மீகத் தலமான காசிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறிய மனநிறைவோடு இரவு 7.30 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தோம்.
பயணிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, உணவு ஏற்பாடுகளையும், தங்கும் விடுதியையும் சிறப்பாக ஏற்பாடு செய்து, பயணத்தை இனிமையாக அமைத்துக் கொடுத்த ஜெயக்குமார் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் இருந்து உதவிகள் செய்த நண்பர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!
இந்தக் கட்டுரை வழியாக உங்களையும், திரிவேணி சங்கமம், கயா, காசி விஸ்வநாதர் கோவில், கங்கா ஆரத்தி, அயோத்தி ராமர் கோவில் என தரிசனம் செய்த புண்ணியத் தலங்களை, என் எழுத்தின் வழியாக உங்களையும் தரிசிக்க வைத்திருப்பேன் என்ற மகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் ஈசனருள் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்.