கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 3 - ஆனந்தி ஆரூரன்


(பகுதி 3) பிளாஸ்டிக் நெருக்கடி: மறுசுழற்சிக்கு அப்பால் ஒரு ஆழமான பார்வை


நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. உணவுப் பொட்டலங்கள் முதல் குடிநீர் பாட்டில்கள் வரை, அதன் வசதியும் குறைந்த விலையும் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், இந்த வசதியின் பின்னால், ஒரு இருண்ட உண்மை மறைந்துள்ளது, அது நமது சுற்றுச்சூழலையும், உடல்நலத்தையும், எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது. பிளாஸ்டிக் நெருக்கடி இன்று உலகளவில் ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதை எதிர்கொள்ள, மறுசுழற்சி மட்டுமல்லாது, அறிவார்ந்த பயன்பாடு, மாற்று வழிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இந்தப் பயணத்தில், நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் ஒரு பசுமையான நாளையை உருவாக்கும் விதமாக அமைய வேண்டும்.

"பிளானட் ஆர் பிளாஸ்டிக்?" (Planet or Plastic?) பிரச்சாரம் மூலம், நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை உலகிற்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் மறுசுழற்சி சின்னம் இருந்தும் கூட, உலகளவில் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் வெறும் 14% மட்டுமே மறுசுழற்சிக்காகச் சேகரிக்கப்படுகிறது. இது மிகவும் குறைவான விகிதமாகும். அதே சமயம், பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் ஒரு முக்கியமான கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது: தற்போதைய மறுசுழற்சி கட்டமைப்பு மற்றும் அதன் குறைந்த விகிதங்களைக் கொண்டு, நாம் எதிர்கொள்ளும் பிளாஸ்டிக் கழிவு மற்றும் மாசுபாட்டுப் பிரச்சினையிலிருந்து முழுமையாக மீள முடியாது. அதாவது, வெறும் மறுசுழற்சி மட்டும் இந்தப் பெரிய பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மறுசுழற்சிக்கு அப்பால் வேறுபட்ட, விரிவான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.

பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச்சூழல் மீது மட்டுமல்லாமல், மனித உடலையும் நேரடியாகத் தாக்குகின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக் உணவுப் பாத்திரங்களை, சூடான உணவுகளுடன் பயன்படுத்தும்போது, பிஸ்பெனால் ஏ (BPA) மற்றும் தாலேட்டுகள் (Phthalates) போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உணவில் கலக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த நச்சுக்கூறுகள், உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து, இனப்பெருக்கப் பிரச்சனைகள் முதல் புற்றுநோய் வரை பலவிதமான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.

இந்தியச் சூழலில் பார்க்கும்போது, "கறுப்பு பிளாஸ்டிக்" எனப்படும் பிளாஸ்டிக் வகையின் பாதிப்பு மிகக் கடுமையானது. இந்த வகை பல சமயங்களில் மின்சாதனக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்படுவதால், அதில் பல்வேறு கன உலோகங்கள், பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த வகை கறுப்பு பிளாஸ்டிக், உணவு பார்சல் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் போது, குறிப்பாக சூடான அல்லது எண்ணெய் கலந்த உணவுகளுடன் தொடர்பில் இருந்தால், அந்த பாத்திரத்தின் நச்சுகள், உணவில் கலப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஆழமான சுகாதார பாதிப்புகளை உருவாக்கும். சுருக்கமாகச் சொன்னால், கறுப்பு பிளாஸ்டிக்கின் வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம். மேலும், கறுப்பு பிளாஸ்டிக்கை நவீன இயந்திரங்களால் கண்டறிய முடியாததால், அது மறுசுழற்சி செய்யப்படாமல் சுற்றுச்சூழலை மேலும் மாசுபடுத்துகிறது. இந்தியாவில் இதன் பரவலான பயன்பாடும், ஒழுங்குமுறை அமலாக்கச் சிக்கல்களும் இந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்துகின்றன.

மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளில் பாலிஎத்திலீன் உயர் அடர்த்தி (HDPE), பாலிஎத்திலீன் குறைந்த அடர்த்தி (LDPE), பாலிப்ரோப்பிலீன் (PP) ஆகியவை அடங்கும். ஆனால் அவையும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றால், ஆபத்தானதாக மாறும் என்று தேசிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் டயானா ஜுக்கர்மேன், பிபிசி இணையதளத்தில் பிளாஸ்டிக் பற்றிய தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்துப்படி பிளாஸ்டிக்கின் கூறுகள் நிலையானவை அல்ல, அவை காலப்போக்கில் மாறக்கூடியவை என கூறுகிறார். பிளாஸ்டிக் பாத்திரங்கள், மீண்டும் மீண்டும் கழுவப்பட்டு, சூடான சூழ்நிலைக்கு தொடர்ந்து தள்ளப்படும் போது அதன் கூறுகள் சிதைய துவங்குகின்றன. இது இரசாயன கசிவை அதிகரிப்பதோடு, அதன் நச்சுத்தன்மை உணவுடன் சேர்ந்து நம் உடலுக்குள் சென்று தீங்கை விளைவிக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கிறார்.


நவீன வாழ்க்கை முறையில், மைக்ரோவேவ் (microwave) மற்றும் டிஷ் வாஷர் (dish washer) போன்றவற்றில் பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒரு பிளாஸ்டிக் பாத்திரம் "மைக்ரோவேவ் பாதுகாப்பானது" என்று உற்பத்தியாளர் கூறினால், அது உருகாது என்று மட்டுமே அர்த்தம், அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உணவில் கலக்காது என்று அர்த்தமல்ல, என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் டயானா ஜுக்கர்மேன் அறுதியிட்டு கூறுகிறார். டிஷ் வாஷரில் பிளாஸ்டிக் உணவு பாத்திரங்கள் சிதையும் வாய்ப்பையும் அவர் கோடிட்டு காட்டுகிறார். மேலும் அவர் கூறுகையில், மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் எதையும் சூடாக்குவதில்லை என்று குறிப்பிடுகிறார். பிளாஸ்டிக், உணவுப் பாத்திரங்களாக தவிர்க்க வேண்டியவை என்பதை விளக்கும் வேளையில், டாக்டர் ஜுக்கர்மேன் கூறும் ஒரு எளிய நடைமுறை மிகவும் நுணுக்கமானது; உணவைக் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்து, ஒரு தட்டால் மூடி சூடாக்குங்கள். இதில் இரசாயன ஆபத்துகள் இருக்காது என்று பரிந்துரை செய்கிறார்.

மைக்ரோபிளாஸ்டிக் என்பது பிளாஸ்டிக் நெருக்கடியின் மறைமுகமான, ஆனால் மிகச் சிக்கலான மற்றும் தீவிரமான வடிவம். ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் காணப்படும் இந்த நுண்ணிய துகள்கள், பொதுவாக கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் அதன் தாக்கம் சுற்றுச்சூழலிலும், உயிரினங்களிலும் ஆழமாய்ப் பதிந்திருக்கும். பிளாஸ்டிக் பொருட்கள் வெப்பம், ஒளி, காற்றழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் சிதைவடையும் போது, இத்தகைய மைக்ரோபிளாஸ்டிக்குகள் உருவாகின்றன. வசேடா பல்கலைக்கழகத்தைச் (Waseda University) சேர்ந்த பேராசிரியர் ஹிரோஷி ஒகோச்சி மேற்கொண்ட ஆய்வின்படி, தொழிற்சாலைக் கழிவுகள், செயற்கை இழைத் துணிகள், கார் டயர்கள் போன்ற பொருட்கள், மைக்ரோபிளாஸ்டிக்குகளின் முக்கிய மூலங்கள். இத்தகைய துகள்கள் வளிமண்டலத்தில் கலைந்து காற்று வழியாகப் பரவி, நிலம், நீர், உணவுச் சங்கிலி ஆகியவற்றில் ஊடுருவுகின்றன. மனித உடலுக்குள் இவை நுழையும் போது, நீடித்த உள்நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள், மற்றும் உயிரியல் செயல்பாடுகளின் சீர்கேடுகள் போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

மறைமுகமாக மைக்ரோபிளாஸ்டிக் நெருக்கடிக்குக் காரணமாவது, நாம் சுத்தமானது எனக் கருதும் பேப்பர் கப்கள்தான். ஐஐடி காரக்பூர் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளின்படி, இந்தக் கப்களில் சூடான பானங்களை (சுமார் 85-90 டிகிரி செல்சியஸ்) ஊற்றும்போது, அவற்றின் உட்புறத்தில் உள்ள மெல்லிய பாலிஎத்திலீன் பிளாஸ்டிக் பூச்சு 15 நிமிடங்களுக்குள் சிதைந்து, கண்ணுக்குத் தெரியாத மைக்ரோபிளாஸ்டிக் துகள்களையும் மற்றும் நச்சு இரசாயனங்களான பிஎஃப்ஏஎஸ் (PFAS) போன்றவற்றை பானத்தில் வெளியிடுகின்றன. மேலும், இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் பல்லேடியம், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்களையும் தம்மோடு எடுத்துச் செல்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று முறை, சூடான பானங்களை இந்தக் கப்களில் குடிக்கும் ஒருவர், சுமார் 75,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ள நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாளடைவில் ஹார்மோன் சமநிலையின்மை, இனப்பெருக்கக் கோளாறுகள், புற்றுநோய், மற்றும் நரம்பியல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த பேப்பர் கப்புகளுக்கு மாற்று என்னவென்பதை ஒரு இந்தியருக்கு சொல்லத் தேவையில்லை; அவருக்கு எல்லா மாற்றுப் பொருட்களும் அத்துப்படி.

                                          

மைக்ரோபிளாஸ்டிக்குகளைத் தாண்டி, பிளாஸ்டிக் நெருக்கடி பெருங்கடல்களையும் அழிவு நோக்கித் தள்ளுகிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் மாத இதழில் வெளியான "நாம் பிளாஸ்டிக்கைச் சார்ந்து வாழ்கிறோம். இப்போது அதிலேயே மூழ்கிக் கொண்டிருக்கிறோம் ("We Depend on Plastic. Now We're Drowning in It.") என்ற லாரா பார்க்கரின் கட்டுரை, மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதன் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களையும், கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பேரழிவையும், மனித ஆரோக்கியத்திற்கு உருவாகும் ஆபத்துகளையும் வெளிப்படுத்துகிறது. கட்டுரையின் அட்டைப் படத்தில், கடலில் மிதக்கும் ஒரு பிளாஸ்டிக் பை, "பனிப்பாறையின் முனை மட்டுமே" ("Just the tip of the iceberg") என்ற செய்தியுடன், பிளாஸ்டிக் மாசுபாட்டின் உலகளாவிய சின்னமாக மாறியது. இத்தகைய வலுவான காட்சிகளும் எளிமையான தகவல்களும் மக்களைச் சென்றடைய வேண்டும், ஏனெனில் பலர் பிளாஸ்டிக்கைக் குப்பைத் தொட்டியில் போட்டவுடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அந்த பிளாஸ்டிக் மறைந்தும், மாறியும் நம்மைச் சுற்றியே இருக்கிறது - நம் நீர், நிலம், காற்று ஆகியவற்றில் நீக்கமற இருந்து நம்மைப் பாதிக்கிறது.

இந்த உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியை எதிர்கொள்ள, ஐரோப்பிய ஒன்றியம் (EU) முற்போக்கான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது, இவை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், மறுசுழற்சியை ஊக்குவித்தல் (எ.கா., PET பாட்டில்களில் 2025-க்குள் 25%, 2030-க்குள் 30% மறுசுழற்சி பொருட்கள்), பிஎஃப்ஏஎஸ் (PFAS -Forever Chemicals),
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைத் தடைசெய்தல் மற்றும் ஓ.இ.சி.டி (Organization for Economic Co-operation and Development) அல்லாத நாடுகளுக்கு கழிவு ஏற்றுமதியை நிறுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி, சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பில் உலகளாவிய முன்மாதிரியை உருவாக்குகின்றன. 

ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் நிலையில், இந்தியாவும் சில முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 (2021-ல் திருத்தம்) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளைத் தடைசெய்து, உற்பத்தியாளர்களுக்கு கழிவு சேகரிப்பு பொறுப்பை விதிக்கின்றன. இருப்பினும், முறையற்ற அமலாக்கம் மற்றும் முறைசாரா மறுசுழற்சி இந்த முயற்சிகளின் தாக்கத்தை குறைக்கின்றன. இந்த முயற்சிகளை வெறும் ஆரம்ப நிலையோடு நிறுத்திவிடாமல், நிலையான முன்னேற்றமாக மாற்றுவது அவசியம். நம்மிடம் தீர்வுகள் உள்ளன; ஆனால், அவற்றை நிரந்தரமான செயல் திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதே இன்றைய உண்மையான சவால்.
சுருக்கமாக, நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, பிளாஸ்டிக் மறுசுழற்சியின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது. மறுசுழற்சி முக்கியம் என்றாலும், பிளாஸ்டிக் நெருக்கடியைச் சமாளிக்க - பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மற்றும் மேம்பட்ட கழிவு மேலாண்மை எனப் பலதரப்பட்ட அணுகுமுறைகள் அவசியம். அரசின் உறுதியான கொள்கைகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிப்பு, ப்ளாஸ்டிக் மாற்றுப் பொருட்களின் எளிதான கிடைக்கும் தன்மை, மற்றும் அந்த பொருட்களின் விலை குறைப்பு போன்ற காரணிகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க மிகவும் அவசியமானவை.

மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, பிளாஸ்டிக்கின் தீமைகள், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். இதனால், பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்களைப் பயன்படுத்தவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் முயல்கிறார்கள். பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்த பயணம் ஒரு கூட்டு முயற்சி. 

“அறிவும் செயலும் ஒத்துழைக்கின்ற இடத்தில்தான் மாற்றங்கள் துளிர்க்க முடியும்.”

(தொடரும்)

தனிமையில் ஓர் பயணம் - கௌசல்யா ஞானேஸ்வரன்



கார் சீராக வேகம் எடுத்துக் கொண்டிருந்தது. பயணத்தின் போது மெல்லப் பேசும் என் கற்பனைகள் அன்று ஏனோ அமைதியாக இருந்தன. மும்பை பயணம் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். பயணம் செய்வது எனது விருப்பங்களில் ஒன்று. புதிய இடங்களைப் பார்க்க வேண்டும், புதிய மக்களை சந்திக்க வேண்டும், பல்வேறு அனுபவங்களை சுவைக்க வேண்டும் என்பது எனது ஆசை. புதுப்புது காட்சிகளால் என் மனம் உற்சாகமும், புத்துணர்வும் அடைந்து துள்ளிக் குதிக்கும். அதனால் எனது வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட பயணம் ஒரு சிறந்த வாய்ப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி, சூரியன் விழிக்காத நேரம். அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டிலிருந்து கோவை விமான நிலையம் நோக்கி காரை இயக்கிக் கொண்டிருந்தார் என் கணவர். கார் நிதானமாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. என் இதயம் தான் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. தனிப் பயணம் என் கற்பனைக்குக் கூட எட்டாதது. ஆனால், அது அரங்கேறிய நாள் அது. என் மனம் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக யோசித்தது. ஆங்கிலத்தில் உரையாடத் தெரியாது, ஹிந்தியும் தெரியாது  எப்படி சமாளிப்பேன்? நான் பிறந்து வளர்ந்த ஈரோட்டிலேயே தனியாக எங்கும் சென்றது கிடையாது. தனியாக விமானப் பயணம் மும்பை வரை செல்ல வேண்டும். பயம் பல்கிப் பெருகி கண்களில் தொற்றிக் கொண்டது. விமானப் பயணம் எனக்கு புதிதல்ல. ஆனால் தனியாகச் செல்வது புதிது. குடும்பத்துடன் செல்லும் பொழுது சரியாக எதையும் கவனிக்கவில்லையே? சிறுபிள்ளைத்தனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்து விட்டேனோ? என்று என்னை நானே கடிந்து கொண்டேன்.

நான்கு மணிக்கெல்லாம் கோவை விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். என் கணவர் என்னை இறக்கிவிட்டு, "காலை 6:00 மணிக்கு விமானம். செல்போனை சார்ஜ் குறையாமல் பார்த்துக்கொள். ஹேண்ட் லக்கேஜ் பத்திரமாக வைத்துக்கொள்,” என்று அவர் சொல்ல வேண்டிய அறிவுரைகளை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

டிராலியைக் கூட ஒழுங்காக எனக்கு நகர்த்தத் தெரியவில்லை. நடுக்கத்துடனே விமான நிலையத்திற்குள் நுழைந்தேன். போலீஸ் அதிகாரி எனது ஆதார் கார்டும், பிரிண்ட் அவுட் செய்த போர்டிங் பாஸும் செக் செய்து உள்ளே அனுப்பினார். பின்பு ஒரு அலுவலர் என்னையும், பேக்கையும் செக் செய்து, “ஆறு கிலோ எடை கொண்ட பேக்கில் என்ன இருக்கிறது? ஏதாவது உடையும் பொருள் இருக்கிறதா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்கள். எனக்கு பதில் சொல்லத் தெரியாமல் தவிக்க, அதை புரிந்து கொண்ட பெண் ஒருவர் தாமாகவே முன்வந்து, என்ன இருக்கிறது என்று கேட்டு, பின்னர் அதை ஆங்கிலத்தில் சொல்லி, லக்கேஜில் போட வேண்டிய பேக்கை கொடுத்து, கையில் வைத்துக் கொள்ள வேண்டிய பேக்கையும் ஹேண்ட் பேக்கையும் என்னிடம் கொடுத்து, அடுத்த போர்டிங் பாஸ் ஜன்னல் சீட் கேட்டு வாங்கி, செக்யூரிட்டி செக்கிங் முடித்து கேட் நம்பரில் உட்காரச் சொன்னார்.
“இதுதான் முதல் முறையா?” என்றார்.
“தனியாய் முதல் முறை,” என்றேன்.
“நீங்களும் மும்பையா?” என்றேன்.
“இல்லை, சென்னை. நான் டாக்டர். வாரத்தில் இரண்டு முறை கோவை வருவேன்,” என்று சொல்லி, முதுகைத் தட்டிக்கொடுத்து, “பழகிடும்” என்றார். அவரிடம் நன்றி சொல்லி, என் கண்களில் இருந்து மறையும் வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆறு மணிக்கு என்று சொன்ன விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று அறிவிப்பு வந்தது. எனக்கு அழுகை, என்னையும் மீறி வந்தது. என் மகனிடமும், என் கணவரிடமும் விமானம் தாமதமாகிய செய்தியை சொன்னேன். “பயப்பட வேண்டாம், விமான நிலையம் பாதுகாப்பானது,” என்று கூறினார்கள்.

ஏழு மணியளவில் மீண்டும் “இரண்டு மணி நேரம் தாமதம்” என்ற அறிவிப்பு வந்தது. எனக்கு அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது. எல்லோரும் பார்ப்பார்கள் என்ற ஞானம் சிறிதும் இன்றி அழத் தொடங்கிவிட்டேன். தாமதம் ஆக ஆக எனது அச்சம் அதிகமாகியது. மும்பையில் இறங்கி, லக்கேஜ் எடுத்துக்கொண்டு வெளியே வந்து என் மகனை சந்தித்துவிட்டால் மட்டும் நிம்மதி என்ற காரணமாக, அழுகை என்னை ஆட்கொண்டது. ஒரு அண்ணா என்னிடம் வந்து, “பயப்படாதீர்கள், நாங்களும் மும்பைதான் செல்கிறோம்,” என்று அவருடன் வந்த மற்றொரு அண்ணாவைக் காட்டிச் சொன்னார். வெளி நபர்களிடம் பேசி பழகாத நான் கொஞ்சம் தயங்கினேன். “நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டோம். நீங்கள் விமான நிலையத்திலேயே பாலும் ப்ரட்டும் தருகிறார்கள். அதையாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்,” என்று கூறினார்.

நான் ரெஸ்ட் ரூமிற்கு சென்று என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு உணவருந்த சென்றேன். அங்கு ஒரு இளைஞர் என்னிடம், “நான் கல்லூரி படிக்க துபாய் செல்கிறேன். பிளைட் இங்கே தாமதமாகிவிட்டது. மும்பை சென்ற பின் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, வேறு பிளைட் மாறவேண்டும்,” என்று கூறினார்.

சிறிது நேரத்திலேயே அந்த இளைஞனின் நிலையை அண்ணாக்கள் தெரிந்து கொண்டு அந்த இளைஞனை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று, மும்பையில் இறங்கி துபாய் செல்லும் பிளைட்டை பிடிக்க முடியுமா? அதற்கு ஏதாவது முன்ஏற்பாடு செய்ய வேண்டுமா? என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த இளைஞனிடம், “மும்பையில் இறங்கியவுடன் ஒரு பார்ம் எழுதச் சொல்வார்கள். அதை எப்படி எழுத வேண்டும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிக்  கொடுத்தார்கள்.

என்னிடமும், “நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள். "என் மகன் பொறியாளராக உள்ளான். நவிமும்பையில் உள்ள நெருல் என்ற பகுதியில் அவன் இருக்கிறான் அங்கு செல்ல வேண்டும். விமான நிலையத்திற்கு வந்து விடுகிறேன் என்று கூறியிருந்தான். காலதாமதம் ஆகியதால், என்னை அவன் பிக்கப் செய்து கொள்ள முடியுமா என்று பயமாக இருக்கிறது, விமானத்திலிருந்து இறங்கி வெளியில் செல்லுவது கூட எப்படி என்று தெரியவில்லை,” என்றும் சொன்னேன். "கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். அடிக்கடி பிசினஸ் விஷயமாக மும்பைக்கு செல்வோம். ஒரு நாள் மட்டுமே வேலை. இரவே திரும்பிவிடுவோம். ஆனால் இன்று விமானம் தாமதமாகியதால், எங்களுக்கும் எப்படி வேலையை முடிக்க முடியும் என்று தெரியவில்லை,” என்றார்கள்.

ஒருவழியாக, விமானம் 9:15 மணியளவில் புறப்பட்டது. அந்த அண்ணாக்களின் இருக்கையை என்னிடம் காட்டிவிட்டு, “ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கூறுங்கள்,” என்றும் சொன்னார்கள்.

ஜன்னலோர இருக்கையில் நான். மிதக்கும் வெண்மேகங்களுக்கிடையில் பயணிப்பது போல் இருந்தது. அந்த அழகிய காட்சியை காணும்போது என் கண்களுக்குள்ளும் உற்சாகம் பிறந்தது. பயம் என்னை ஆட்கொண்ட போதும், ஆனந்த பெருமூச்சு விட்டேன். நடந்த சில நிகழ்வுகளும், அதன் நினைவுகளும் அழியாமல் என்றும் நிலைக்கும் என்றும் தெரிந்து கொண்டேன். மேலிருந்து கீழே சிறியதாக தெரியும் நிலப்பரப்புகளை பார்த்து மகிழ்ந்தேன். "நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின் கீழே" என்ற பாடலை என் நெஞ்சம் பாடத் துவங்க, பக், பக், என்று இருந்தாலும் என் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கவே செய்தது.

மும்பை விமான நிலையம் வந்தடைந்தோம். அண்ணாக்கள் இருவரும் அந்த இளைஞனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்து, எனக்காக லக்கேஜ் எடுக்கும் இடத்திற்கு வந்து, எனது ட்ராலியையும், பேக்கையும் அவர்கள் தான் சுமந்து வந்தார்கள். என் மகனிடம் இருந்து அழைப்பு வந்தது: “மீட்டிங்கில் இருந்து வெளிவர முடியவில்லை. எனவே கேப் புக் செய்யும் இடத்திற்கு சென்று செல்போனை அவர்களிடம் தாருங்கள். நான் அட்ரஸ் சொல்லிவிடுகிறேன். ஒன்றும் பயமில்லை, ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட டாக்ஸி தான்,” என்று கூறினான்.

எனக்கு வழிகாட்டியாய் வந்த அண்ணாக்கள் இருவரும், கேப் புக் செய்த பின்னரும், அவர்களுக்கு காலதாமதம் ஆனாலும், எனது பாதுகாப்பிற்காக, என் மொபைலில் வந்த ஓட்டுநர் பெயர், மொபைல் எண் மற்றும் கார் எண் ஆகியவற்றை கொண்ட எஸ்.எம்.எஸ். பார்த்து, “இந்த கார்” என்று அடையாளம் காட்டி, என்னை ஏறச்சொல்லி என் லக்கேஜ் அனைத்தையும் ஏற்றி, “பத்திரமாக செல்லுங்கள்,” என்று ஒரு தங்கையை வழி அனுப்புவது போல் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் என் இரு கரங்களை குவித்து மனப்பூர்வமான நன்றிகளை மட்டுமே கூறினேன். அவர்களின் பெயர் முகவரி எதுவும் தெரியாது – “கோவை அவர்கள் ஊர்” என்ற விவரம் மட்டுமே தெரியும்.

டாக்ஸியில் ஏறியபின், “ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு உங்களை கண்காணிக்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில் இந்த எண்ணிற்கு அழைக்கவும்,” என்று எனக்கு மெசேஜ் வந்தது. என் மகனும் என்னை, எங்கு வந்து கொண்டிருக்கிறேன் என்பதை கண்காணித்துக் கொண்டிருந்தான்.

பயணத்தின் மீதான எனது ஆர்வம், வேடிக்கை பார்ப்பது, தனிமையான தருணங்களிலும் அந்த அற்புதமான தருணங்களை அவ்வப்போது அனுபவித்தேன். சில அனுபவங்கள் புதிய தகவல்களை தெரிந்துகொள்ள உதவின. எனது கண்ணோட்டம் கொஞ்சம் விரிவடைந்தது. என் மகனின் இருப்பிடத்திற்கு சரியாக வந்து விட்டேன். அவன் எனக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்த பிறகே நிம்மதி பெருமூச்சாய் வெளிப்பட்டது.

பயணத்தின் விளைவாக நான் வளர்த்துக் கொண்ட குணம்
தன்னம்பிக்கை. மற்றும் தனியாகப் பயணம் செய்வதால், எனது பொருட்களைப் பொறுப்பாகப் பாதுகாக்கும் திறனும் வந்தது. புதியவர்களிடம் பேச எப்போதும் தயங்குவேன், அந்த தயக்கத்தை இந்தப் பயணம் முற்றிலும் உடைத்தெறிந்தது. தேவைப்படும் பொழுது உதவி கேட்கவும் கற்றுக் கொண்டேன். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் பயணம் எனக்குக் கொடுத்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

முகம் மறந்த முகவரி தெரியாத சகோதர்களுக்கு நன்றி கூறும் வகையில் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 2 - ஆனந்தி ஆரூரன்


பகுதி (2) - பிளாஸ்டிக்: ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம்



இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தொடர் சுழற்சியைக் கொண்டிருந்தாலும், மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் அதற்கு முற்றிலும் முரணாகச் செயல்படுகிறது. இயற்கையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் 'ப்ளாஸ்டிக்' சிதையாமல் நீடிப்பதால், அது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் பல வழிகளில் கேடு விளைவிக்கிறது. ஆகவே மனிதன் உருவாக்கிய ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுப்பேற்று சரிசெய்ய அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று, எங்கும் எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை, நம்மை ஒரு "பிளாஸ்டிக் யுகத்திற்குள்" இட்டுச் சென்றுள்ளது. இது நம் நவீன நாகரிகத்தின் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது. பிளாஸ்டிக்கின் பரவலான பயன்பாடு இக்கால மனித செயல்பாட்டின் பிரதிபலிப்பாகும். எதிர்காலத்தில், நாம் தற்போது பயன்படுத்தும் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கும் கலைப்பொருட்களாக மாறி, நம் தலைமுறையின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1900-களின் தொடக்கத்தில், நகரங்கள் பெரிதாக வளர்ந்தன. மக்கள்தொகை அதிகரித்தது, தொழிற்சாலைகளும் பெருகின. இயற்கை வளங்களின் தேவை அதிகரித்ததால், அது எல்லோர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான், பேக்கலைட் போன்ற பிளாஸ்டிக்குகள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தின. இது உறுதியானது, வெப்பத்தைத் தாங்கும், மின்சாரத்தைக் கடத்தாது போன்ற சிறப்பம்சங்கள் கொண்டதால், மரம் மற்றும் பிற இயற்கை பொருட்களுக்குச் சிறந்த மாற்றாகக் கருதப்பட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

இரண்டாம் உலகப் போர் (1939) வெடித்ததும், நீடித்த மற்றும் மலிவான பொருட்களுக்கான தேவை கடுமையாக அதிகரித்தது. இது, பாலிஸ்டிரீன் (Polystyrene), PVC, பாலிஎதிலீன் (Polyethylene) மற்றும் நைலான் (Nylon) போன்ற புதிய பிளாஸ்டிக்குகள் உருவாக வழிவகுத்தது.  போர்க்காலத்தில் பாராசூட்களுக்கும், போர்வீரர்களின் ஆடைகளுக்கும், நைலான் பயன்படுத்தப்பட்டது. கூடாரங்கள், சீருடைகள், வெடிபொருட்கள் செய்ய PVC உதவியது. வண்டிகளில் சூட்டைக் குறைக்கவும், அதிர்வுகளைத் தாங்கவும் பாலிஸ்டிரீன் நுரை பயன்பட்டது. விமான பாகங்கள், டயர்கள், ஹெல்மெட் உள்ளே இருக்கும் பாகங்கள், அணுகுண்டு பாகங்கள் கூட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டன.

அமெரிக்கா, போரின் தேவைக்காக பிளாஸ்டிக் உற்பத்தியில் அதிக முதலீடு செய்திருந்தது. உலகப் போர் முடிவடைந்ததும், அமெரிக்காவிடம் பிளாஸ்டிக் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் இருந்தன. இந்தப் போர் தொழிற்சாலைகளைப் பயன்படுத்தவும், மக்களைக் கவரவும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வீட்டுப் பொருட்களை நிறைய உற்பத்தி செய்தனர். இந்தப் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பத்திரிகைகளில் தீவிரமாக விளம்பரம் செய்தனர்.

"குட் ஹவுஸ் கீப்பிங்" (Good Housekeeping), "ஹவுஸ் பியூட்டிஃபுல்" (House Beautiful) போன்ற பத்திரிகைகள் பிளாஸ்டிக் பொருட்களின் கதைகளை வெளியிட்டன. அம்மாக்கள் பிளாஸ்டிக்கில் உணவை பதப்படுத்துவது, மகள்கள் பிளாஸ்டிக் உறைகளில் மிட்டாய்களை வைப்பது போன்ற அதன் பயன்பாடுகள் விளம்பரங்களாக வந்தன. 1948 ஆம் ஆண்டில் டப்பர்வேர் (Tupperware) அறிமுகமாகி இல்லத்தரசிகளின் விருப்பமான பொருளாக மாறியது. 1940களின் பிற்பகுதியில் பிளாஸ்டிக் வீட்டு அலங்காரப் பொருட்கள், ஃபார்மிகா மேசைகள், வினைல் நாற்காலிகள் வரத் தொடங்கின. 1946 முதல் 1960 வரை பிளாஸ்டிக் தொழில் 15% க்கும் அதிகமாக வளர்ந்தது. 1960களில் பிளாஸ்டிக் உற்பத்தி, அலுமினியத்தை மிஞ்சியது. 1960-70களில் பிளாஸ்டிக் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது. இன்ஜெக்ஷன் மோல்டிங் (injection molding), தெர்மோஃபாமிங் (Thermoforming) போன்ற முறைகளால் ப்ளாஸ்டிக் பொருட்களை மலிவாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்ய முடிந்தது. ஷாம்பு, சோடா பாட்டில்கள் கண்ணாடிக்குப் பதிலாக பிளாஸ்டிக்கில் வந்தன. காகிதப் பைகளுக்கு பதில் பிளாஸ்டிக் பைகள், உணவு பேக்கேஜிங்கிற்கு பாலிஸ்டிரீன் நுரை என ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் பிரபலமாகின. இலகுவான, மலிவான மற்றும் வசதியான பிளாஸ்டிக் பொருட்கள் 1976 வாக்கில் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக மாறியது. இப்படியாக, இரண்டாம் உலகப் போரின் கண்டுபிடிப்புகள் பிளாஸ்டிக்கின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முதன்முதலில் 1940-களில் மெதுவாகத் துவங்கியது. இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தாலும், உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களாலும், இறக்குமதி செய்யப்பட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாயின. பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் 1957-ல் எட்டப்பட்டது. அப்போதுதான் பாலிஸ்டிரின் (Polystyrene) உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது. இது உள்நாட்டிலேயே பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. 1960 மற்றும் 1970களில், பிளாஸ்டிக்கின் பயன்பாடு வெகுவாக விரிவடைந்தது. அதன் நீடித்து உழைக்கும் தன்மை, குறைந்த உற்பத்திச் செலவு மற்றும் பல்வேறு வடிவங்களில் மாற்றியமைக்கக்கூடிய திறன் போன்ற காரணங்களால், பிளாஸ்டிக் அன்றாட நுகர்வோர் பொருட்களுக்கான ஒரு முக்கியத் தேர்வாக மாறியது. வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், பேக்கேஜிங் பொருட்கள் எனப் பலவற்றிலும் பிளாஸ்டிக் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இது பொதுமக்களிடையே பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை வெகுஜன சந்தையில் கொண்டு சேர்த்தது. இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் விளைவாக, 20-ஆம் நூற்றாண்டின் முடிவில், இந்தியா உலக அளவில் ஒரு முக்கிய பிளாஸ்டிக் உற்பத்தி நாடாக உருவெடுத்தது.

பிளாஸ்டிக், இன்றைய நவீன வாழ்க்கையின் ஓர் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. இது நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணற்ற பொருட்களில் இடம்பிடித்து, அன்றாட வேலைகளை எளிதாக்கி, இணையற்ற வசதிகளை வழங்குகிறது.  அதன் இலகுவான எடை, நீடித்து உழைக்கும் தன்மை, மற்றும் பல்வேறு வடிவங்களில் மாற்றியமைக்கக்கூடிய திறன் ஆகியவை இதன் பரவலான பயன்பாட்டிற்குக் காரணங்களாகும்.

பிளாஸ்டிக்கின் மறுபக்கத்தைப் புரட்டினால், அதன் மறுசுழற்சி குறித்த கசப்பான உண்மைகள் வெளிப்படுகின்றன. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) தரவுகளின்படி, தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் சுமார் 32% நேரடியாகச் சுற்றுச்சூழலில் குப்பையாகக் கலக்கிறது. இது ஆறுகள், கடல்கள், காடுகள் எனப் பல இடங்களிலும் குவிந்து, இயற்கைச் சூழலைச் சீரழிக்கிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடையும்போது உருவாகும் மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச் சிறிய துகள்கள், நீர்நிலைகளிலும், மண்ணிலும் கலந்து, உணவுச் சங்கிலிக்குள் நுழைந்து, மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

மேலும், 40% பிளாஸ்டிக் குப்பை மேடுகளில் (landfills) கொட்டப்படுகிறது. அங்கு இது பல நூறு ஆண்டுகளுக்கு சிதையாமல், நிலத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. சுமார் 14% பிளாஸ்டிக் எரிக்கப்படுகிறது. இந்த எரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை (dioxins, furans) மற்றும் கன உலோகங்கள் கலந்த சாம்பல் ஆகியவை காற்று மற்றும் நில மாசுபாட்டை ஏற்படுத்தி, மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பெரும் சுகாதார அச்சுறுத்தலை உருவாக்குகின்றன.

பிளாஸ்டிக்கை ஏன் முழுமையாக மறுசுழற்சி செய்ய முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, அதன் முக்கிய வகைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு வகை பிளாஸ்டிக்கையும் மறுசுழற்சி செய்ய வெவ்வேறு முறைகள் தேவைப்படுகின்றன.



சந்தையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஏழு முக்கிய வகை பிளாஸ்டிக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளின் அடியிலும் ஒரு முக்கோண அடையாளத்திற்குள் 1 முதல் 7 வரையிலான எண்கள் இருக்கும். இது அதன் வகையைக் குறிக்கிறது. 
  1. பெட் PET (PETE - Polyethylene Terephthalate): நீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், உணவு ஜாடிகள், துணிகளில் பயன்படுகிறது. ஓரளவு பாதுகாப்பானது, பரவலாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  2. எச்டிபி HDPE (High-Density Polyethylene): பால் புட்டிகள், சோப்பு டப்பாக்கள், சில பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. பாதுகாப்பானது, பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  3. பிவிசி PVC (Polyvinyl Chloride): குழாய்கள், ஜன்னல் சட்டங்கள், தரைவிரிப்புகள், சில பொம்மைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடலாம், குறைந்த பாதுகாப்பு. மறுசுழற்சி செய்வதும் கடினம்.
  4. எல்டிபி LDPE (Low-Density Polyethylene): பிளாஸ்டிக் பைகள், உணவுப் பொட்டலங்கள், அமுக்கி எடுக்கக்கூடிய பாட்டில்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மறுசுழற்சி செய்வது கடினம், ஆனால் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது.
  5. பிபி PP (Polypropylene): உணவு கொள்கலன்கள், மருந்து பாட்டில்கள், கார் பாகங்கள், கயிறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. வெப்பத்தைத் தாங்கும், ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது. சில சமயங்களில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  6. பிஎஸ்-PS (Polystyrene styrofoam): காபி கப்புகள், உணவு கொள்கலன்கள், பாதுகாப்பு உறைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. உடையக்கூடியது, சூடான அல்லது எண்ணெய் பசையுள்ள உணவுகளுடன் தொடர்பு கொள்ளும்போது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடலாம். மறுசுழற்சி செய்வது கடினம்.
  7. பல்கலவை பிளாஸ்டிக் (Others): மற்ற அனைத்து பிளாஸ்டிக்குகளையும் உள்ளடக்கியது (எ.கா: பாலிகார்பனேட் (PC), பயோபிளாஸ்டிக்ஸ், கலப்பு பிளாஸ்டிக்குகள்). இவை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன, அவற்றின் மறுசுழற்சித் திறன் மாறுபடும். சிலவற்றில் பிஸ்பெனால் ஏ (BPA) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கலாம்.
பிளாஸ்டிக் மறுசுழற்சியை மட்டுப்படுத்தும் சில காரணங்கள்:
  • வெவ்வேறு வகையான பாலிமர்கள்: ஒவ்வொரு பாலிமரும் வெவ்வேறு வெப்பநிலையில் உருகும். வெவ்வேறு வகைகளை ஒன்றாக உருக்க முயற்சித்தால் தரம் குறைந்துவிடும். மறுசுழற்சி செய்வதற்கு முன் ஒவ்வொரு வகை பிளாஸ்டிக்கையும் தனித்தனியாகப் பிரிப்பது அவசியம், இது நேரத்தையும், செலவையும் அதிகரிக்கும்.
  • மாசுக்கள்: பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவு, திரவங்கள் அல்லது பிற பொருட்களால் மாசுபட்டிருக்கும். இந்த மாசுக்கள் மறுசுழற்சி செயல்முறையின் தரத்தைக் குறைத்துவிடும்.
  • சேர்க்கைகள்: பிளாஸ்டிக்கின் பண்புகளை மேம்படுத்த சேர்க்கப்படும் நிறமிகள்(colours), நிலைப்படுத்திகள் (stabilizers) போன்ற இரசாயனங்கள் மறுசுழற்சி செயல்முறையை சிக்கலாக்குகின்றன.
  • தரமிறக்கம்(down cycling): பல வகையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும்போது, அவற்றின் தரம் ஒவ்வொரு முறையும் குறைகிறது. அதாவது, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் அதே தரமான பொருளாக உருவாக்க முடியாது; அவை துணிகள் அல்லது பிளாஸ்டிக் அறைகலன்கள் (furniture) போன்ற குறைந்த தரமான பொருட்களாக மாற்றப்படுகின்றன. இந்த "தரமிறக்கம்" பிளாஸ்டிக் மறுசுழற்சியின் மதிப்பைக் குறைக்கிறது.
  • பொருளாதார சிக்கல்கள்: சில வகையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான செலவு, புதிய பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான செலவை விட அதிகமாக இருக்கலாம். இதனால், பல மறுசுழற்சி நிலையங்கள் இத்தகைய பிளாஸ்டிக்குகளை ஏற்றுக்கொள்வதில்லை.
  • பல அடுக்கு ப்ளாஸ்டிக்: சிப்ஸ் பேக்கட் போன்ற உணவுப் பொட்டலங்கள்  வெவ்வேறு வகையான பிளாஸ்டிக் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த அடுக்குகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம்.
இந்தக் காரணங்களால்தான் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஒரு சிக்கலான மற்றும் சவாலான செயல்முறையாக உள்ளது. அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளையும் திறம்பட மறுசுழற்சி செய்ய மேம்பட்ட தொழில்நுட்பங்களும், முறையான சேகரிப்பு மற்றும் பிரித்தெடுக்கும் கட்டமைப்புகளும் தேவைப்படுகின்றன.

சுருக்கமாகக் கூறினால், இந்த ஏழு வகையான பிளாஸ்டிக்கையும் தனித்தனியாகச் சேகரித்து சுத்தம் செய்து மறுசுழற்சி செய்ய முயற்சியை மேற்கொண்டாலும், அதைக் கொண்டு முதல் தரமான ப்ளாஸ்டிக் உருவாக்கத்தைப் பெற முடியாது. குறை சுழற்சியே (Downcycling) சாத்தியப்படும். பிளாஸ்டிக்கின் இந்த சவால்களை நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

(தொடரும்)









ப்ளாக்கி திரும்பி வந்துட்டா - யசோதா பழனிச்சாமி


முதன் முதலில் அவளை நான் பார்த்த நேரம் அதிகாலை ஐந்து மணி இருக்கும். அன்று அதிகாலை முன்வாசல் பெருக்கிக் கொண்டு இருந்த போது, கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று என் அருகில் ஊர்ந்து வருவது என் கண்களுக்கு தெரிந்ததும், நான் கையிலிருந்த விளக்குமாற்றோடு சற்று அச்சத்தோடு நகர்ந்து உற்றுப் பார்த்தேன்.

‘ங்கே ங்கே’ என முனகியபடி என் காலருகில் நகர்ந்து வந்த அதை நான் சற்றே விலகி நின்று எட்டிப் பார்த்தேன். அட! அது நாய் குட்டி. இது எங்கேயிருந்து வந்தது? அடச்சே போ! என விரட்டி விட்டு, நான் வீட்டுக்குள் நுழையும் போது, அந்த நாய்க்குட்டியின் ‘ங்கே ங்கே’ முனகல் சற்று ஓங்கி கதறலாக ஒலித்தது. மீண்டும் கேட்டருகே சென்றேன். அங்கே சற்று நேரத்துக்கு முன்னால் என் காலை நாக்க வந்த அந்த நாய்க்குட்டிதான் சாக்கடையில் விழுந்து மேலே வரத் தெரியாமல் கத்திக் கொண்டு இருந்தது. மனம் பதறி அடக் கடவுளே! என்று முணுமுணுத்துக் கொண்டே சாக்கடைக்குள் விழுந்த நாய்க் குட்டியை மேலே தூக்கி விட்டேன்.

மேல தூக்கி விட்ட, சற்று நேரத்தில் சாலையில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. நன்றாக விடிந்ததும் நாய் வந்த கதையை, நான் எல்லோரிடமும் வினவுவதற்குள் அந்த தெருவில் இருக்கக்கூடிய எல்லா மழலைகளும் நாய்க் குட்டியை சூழ்ந்து கொண்டு “ஐ, நாய்க்குட்டி அழகா இருக்கு” என தொட்டுப் பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். நாய் குட்டியாக இருந்தாலே அழகுதானே!. அது தெருநாயாக இருந்தால் என்ன? வீட்டு நாயாக இருந்தால் என்ன? அந்த நாய்க்குட்டி குழந்தைகளுக்கு விளையாடும் பொம்மையாக மாறிப் போனது.

எல்லாரும் அந்த நாய்க்குட்டியை த்தா..த்தா..சூச்சூ.. மணி மணினு கூப்பிட ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு குட்டீஸ் எல்லாம் சேர்ந்து அந்த நாய்க்குட்டி கருப்பா இருந்ததுனால ப்ளாக்கி என்று பேர் வைத்து கூப்பிட ப்ளாக்கியாயிட்டா. அந்த ப்ளாக்கியைச் சுற்றி ஒரு மழலை ரசிகர் வட்டம் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருந்தது. நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாக குழந்தைகள் உண்ணும் உணவுகளின் மீதங்களை கொட்டி வைக்க, அவள் அதை வாலாட்டிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். உண்ட வீடுகளுக்கு நன்றி காட்ட நினைத்ததோ என்னவோ ப்ளாக்கி அந்த தெருவிலேயே ஒன்றி விட்டாள். ஒவ்வொரு வீட்டுக்கு முன் நின்று பிச்சைக் கேட்பது போல் தினமும் குரைப்பாள். சத்தம் கேட்டு வெளியில வந்து எட்டிப் பார்ப்பவர்கள் அதுக்கு பிஸ்கட்டோ, உணவோ கொண்டு வந்து போடுவதுண்டு. சிலர் ‘அடப்போ உனக்கு இதே வேலையாப் போச்சு’ என கதவை திறவாமலே கத்துவதும் உண்டு. இப்படியாக பல வீட்டுச் சாப்பாட்டினால் ஒரு நாலைந்து மாதங்களில் நல்ல கொழு கொழுன்னு புஸ்டியாக மாறிவிட்டாள்.

அதன்பிறகு அவளைச் சுற்றி குழந்தைகள் விளையாடுவதில்லை. ஜொள்ளு விட்டு வரும் ரோமியோக்களாக ஆண் நாய்கள் வலம் வர ஆரம்பித்தன. புள்ள தளதளன்னு இருக்காளே இவ நமக்கு கிடைப்பாளா என்ற ஏக்கத்தோடு நிறைய ரோமியோக்களின் கண்கள் அவளை சுத்தி வட்டமிட்டு கொண்டே இருந்தன. அவளும் உணர்வு மிக்கவள் தானே! அவளுக்கும் ஆசை பொங்கியது. அவளும் உடல் இச்சைகளை தணிக்கத் தனக்கேயுரியவனை தேர்ந்தெடுத்தாள்.

அப்புறம் என்ன கரு கூடி வளர்ந்தது. அவள் குட்டிகளை போட்ட பிறகுதான் அவ வயிற்றில் குட்டிகள் தொட்டிலாடின விஷயம் அந்த தெருவுக்குள் பரவியது. ஏழு குட்டிகளை ஈன்றாள். எல்லாக் குட்டிகளையும் தன்மேலேயே கிடத்தி பாலூட்டி வளர்த்தாள். ஓரிரு மாதங்களில் நாய்க் குட்டிகளை வளர்க்க சிலர் எடுத்துச் சென்றார்கள். ஒன்றிரண்டு குட்டிகள் அடிபட்டு இறந்தன. இப்படியாக எல்லா குட்டிகளும் போய்விட எஞ்சியது ஒன்று மட்டுமே.

அந்த தெருவில் புதியதாக குடி வந்த ஒருவர் நாய்களை வளர்க்கும் ப்ரியர். அதனால் அந்த வீட்டினர் பிளாக்கிக்கு நேரத்திற்கு சாப்பாடு போட்டு வந்தார்கள். அந்த வீட்டினர் சொந்த நாய் மாதிரி எந்தவித அறுவெறுப்பும் இல்லாமல் தூக்கி கொஞ்சினார்கள். அந்த ப்ளாக்கியோட எஞ்சிய குட்டிக்கு “ப்ரௌவுன்” எனப் பேர் சூட்டினார்கள். ப்ரௌவுனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் மருந்துவம் பார்த்து விடுவார்கள். இப்படியாக அவர்களுடன் ப்ரௌவுன், ப்ளாக்கியின் பிணைப்பு அதிகமானது. ப்ளாக்கியால் வந்த இடையூறு நிறைய ஆண் நாய்கள் ப்ளாக்கியைத் தேடி தெருவுக்குள் வர ஆரம்பித்தன. இவர்கள் உணவு போடுவதால் தான் இந்த நாய் தெருவை விட்டுப் போகவில்லை என்று உணவு போடுபவர்களிடம் சிலர் முரண்பட்டார்கள்.

இடையில் இரண்டு முறை ப்ளாக்கி கருவுற்று மீண்டும் குட்டிகளை ஈன்றெடுத்தாள். ஒவ்வொரு முறை குட்டி போடும் போதெல்லாம் ‘அச்சச்சோ நிறைய நாய் பெருகிடும் போல இருக்கே’னு தெருவாசிகளின் புலம்பல்களும் அதிகரித்தன. ஆனால், ஒரு குட்டிகள் கூட தங்கவில்லை. அவர்களிடம் நாயிக்கு சோறு போடாதீங்க என்று சொல்ல அந்த வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் ஹவுஸ் ஓனருக்கு புகார்கள் சென்றன. அவர்களை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒரு தெருநாய்க்கு சோறு போடும் உரிமை கூட இல்லை என்பது அவர்களுக்குள் பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. மாதமாதம் வாடகை பணம் கொடுத்து விட்டுத்தானே இருக்கிறோம். என்ற அவர்களின் கேள்விக்கு பதில் இல்லை. நாய்க்கு  சோறு போடக் கூடாது என்று சொல்லும் அதிகாரத்தை சொந்த வீட்டுக்காரருக்கு யார் கொடுத்தார்கள்? எனும் கேள்விக்குள் நான் முடங்கிப் போனேன். அதன் பிறகு நீண்ட நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இருந்தவர்கள் உடனடி தேடுதலில் ஈடுபட்டு, சொந்த வீடு வாங்கிச் சென்று விட்டார்கள்.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்த அரசாங்கம் இனப்பெருக்கத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். அந்தப் பகுதிகளிலும் தெருவில் சுற்றும் நாய்களை வேனில் அழைத்துச் சென்று இனப்பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து விட்டு வந்து அதே தெருவில் விட்டார்கள்.

அவர்கள் அந்த தெருவுக்குள் வந்த சமயம் பிளாக்கி பிடிபடாமல் தப்பி விட்டாள். அதன் பிறகு பிளாக்கி மூன்று நான்கு குட்டிகளை போட்டுவிட்டாள். இது என்னடா இதே தொந்தரவா போயிடுச்சுன்னு அங்கிருந்தவர்கள் எல்லோரும் புலம்பல்களை புலம் பெயர்த்தார்கள். திடீர் என்று ஒரு நாள் காலையில் ஒரு வேன் உறுமும் சத்தம். ப்ளாக்கி “க்கே க்கேனு” ஊளையிட்டு வள்வள் என்று வேகமாக குரைத்தாள்.

என்னாச்சு என்று வெளியே எட்டிப் பார்த்தால், நாய் புடிச்சுட்டு போகிற வேன். ஒரு பெரிய மீன் வலை போல எடுத்து வந்திருந்த ஒருவர் அதை தூக்கி எறிந்து ப்ளாக்கி மேலே தூக்கிப் போட்டார். இந்த தடவை ப்ளாக்கி வலைக்குள் வசமாக மாட்டிக் கொண்டாள். அதுக்குப்பிறகு அவளை வேனில் ஏற்றிக் கொண்டனர். அந்த வேனில் ஏற்கனவே இன்னும் சில நாய்கள் வேனுக்குள் அடைக்கப்பட்டு காரணம் புரியாமல் பரிதவித்து நின்றன. ப்ளாக்கி போனதுக்குப் பிறகு அந்த தெருவே அமைதியானது போல் ஒரு உணர்வு எனக்குள்.

பாவம் அந்த ப்ரௌவுன் தன் அம்மாவைக் காணாததால் அடிக்கடி குரைத்து கத்த ஆரம்பித்தான். விடிய விடியத் தூங்காமல் ஊளையிட்டே இருந்தான். வெளியில் செல்பவர்கள் மீது தாவி தாவி குதிக்க ஆரம்பித்தான். தன் அம்மாவைக் காணோம் என்கிற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திச் சொல்ல முடியாமல் பரிதவித்தான்.

ப்ரௌவுன் அந்தத் தெருவைத்தாண்டி ஒத்தையில போகும் போது மற்ற நாய்கள் இவனை விடாமல் துரத்திக் கடித்தன. ப்ரௌவுனைப் பார்க்கும் போது, கூடி மகிழ்ந்த உறவுகள், பிரிந்து போன நிலையில் இருக்கும் ஒருவனை மற்ற உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒதுக்கியது போல் தோன்றியது. அதன் பிறகு அந்த தெருவை விட்டு ப்ரௌவுன் வெளியே போகவே அஞ்சினான். அவன் அம்மா இருந்தவரை இருவரும் சேர்ந்து தெருவுக்குள் வரும் புதிய நாய்களை உள்ளே வர விடாமல் எதிர்த்து நின்று சமாளிப்பார்கள். அதனால், அந்த தெருவுக்குள் வேறு எந்த புதிய நாய்களும் எளிதில் நுழைய முடியாது. இப்போது ப்ரௌவுன் தனியாக இருப்பதால் வேறு நாய்கள் உள்ளே நுழைந்தன. ப்ரௌவுன் அவைகளை விரட்ட தனியாளாக மிகவும் பரிதவித்து இருந்தான். அவனைப் பார்க்கும் பொழுது அடடா! இந்த பிளாக்கி வந்துட்டா நல்லா இருக்குமே என்று ப்ளாக்கியை நினைத்து என் மனதுக்குள் ஒரு தேடுதல் வர ஆரம்பித்தது.

பத்து நாட்கள் கடந்தும் ப்ளாக்கி திரும்பி வந்தபாடில்லை. என்னாச்சு எல்லா நாய்களையும் பிடித்த இடத்தில் விட்டுவிடுவதாகச் தான் சொன்னார்களே ஆனால் ப்ளாக்கி வரலையே. மனதில் ப்ளாக்கியின் நினைவு அதிகரித்தது. யாராவது ஒரு வீட்டின் வெளிகேட்டின் முன் வாலாட்டிக் கொண்டு படுத்திருக்கும் ப்ரௌவுன் அவன் அம்மாவை பிரிந்த தன் மன வலியை தெரிவிக்க அடிக்கடி ஊளையிட ஆரம்பித்தான்.

தெருவில் சிலர் நாய் ஊளையிடுவது ஆகாது என்றார்கள். அது தன் பிரிவுத்துயர் தாங்காமல் கத்துது என்று சொன்னாலும் யாருக்கும் நம்பிக்கை வரலை. காரணம் நாய்களின் கண்களுக்கு அமானுஷ்யம் தெரியும் என்று சொல்லி வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையின் பிடியில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. கூகுளைத் தேடினேன். வலியின் மிகுதியாலும் நாய் ஊளையிடும். ஓநாய் வழித் தோன்றல் என்பதால் ஓநாயின் ஊளையிடும் குணத்தின் வாயிலாக நாய் எப்பவாவது ஊளையிடும் என்று வாசித்தேன்.

ஒரு பத்து நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் காலையில் அந்த வேன் வந்து நின்றது. வேனின் கதவை திறந்து விட, ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு வந்த ப்ளாக்கி குதித்து வெளியே ஓடினாள். ஆம்! ப்ளாக்கி வந்துட்டா!

தெரு நாய்தான் என்றாலும், கடந்த நான்கைந்தாண்டுகளாக எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த ப்ளாக்கியின் ஒரு பிரிவு இடைவெளி அதன் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தியது.

ப்ளாக்கியும், ப்ரௌவுனும் இதோ எப்போதும் போல் கேட்டின் முன். “அடச்சே எந்திரிச்சுப் போங்க.. எந்நேரமும் இங்கேயே படுத்துகிட்டு கிடக்கறீங்க” என்ற அதட்டல்கள் தொடர்கிறது.