இரவு ஏழரை மணி. மழை கொட்டி அடங்கியிருந்தது. வீடு முழுக்க அமைதி சூழ்ந்திருந்தது. மணியோசை மட்டும் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. பூஜை முடிந்து சுமார் ஒரு மணி நேரம் ஆகி இருந்த போதும் செவிகளுக்குள் அந்த மணி ஓசை மட்டும் குறையவே இல்லை.
அந்த நேரத்தில் வீட்டின் காலிங் பெல் சத்தம். அவசரமாக கதவைத் திறந்தாள் சுபாஷினி. வெளியே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பயத்தில் இதயம் துடிக்க, உடனே கதவைத் தாழிட்டு, கைபேசியில் கணவர் பாலுவை அழைத்து நடந்ததைச் சொன்னாள்.
“மழை பெய்ததால் எலக்ட்ரிக்கல் ஃபால்ட் இருக்கலாம். சில சமயம் பெல் தானாக அடிக்கும். பயப்படாத,” என்று அமைதியாகச் சொன்ன பாலு. “நான் வந்த பிறகு கைபேசியில் அழைக்கிறேன். அதன் பிறகு கதவைத் திற,” என்று சொன்னதும் இயல்பு நிலைக்கு திரும்பிய சுபாஷினி இரவு உணவுக்காக சமையலறையில் சப்பாத்தி செய்ய ஆரம்பித்தாள்.
அதே வேளையில் “டமார்…!” உருட்டும் மாதிரியான சத்தம் கேட்டது.“பூனையா இருக்கும்,” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அவர்கள் வீட்டில் இரண்டு பூனைகள். நடுராத்திரியில் சண்டையிட்டு கத்துவது வழக்கம். “இதே வேலையா போச்சு,” என்று நினைத்தபடியே சப்பாத்தியைத் தொடர்ந்தாள்.
அப்போது ஜன்னல் ஓரம் யாரோ அசைவது போல நிழல். விழிகள் பயத்தால் பெரிதாக விரிந்தன. சுபாஷினியின் உடல் பயத்தில் வியர்த்தது. மெதுவாக ஜன்னல் பக்கம் சென்றாள். முகத்தை ஒட்டி பார்த்தாள். நேராக யாரும் தெரியவில்லை. ஆனாலும் நிழல் மட்டும் அசைந்து கொண்டே இருந்தது.
உடனே பாலுவுக்கு அழைத்தாள். நடந்ததை விவரித்தாள். புகையின் அளவு அதிகரிப்பதையும் சொன்னாள்.“சுபா… கிச்சன்ல நீ என்ன பண்ணிட்டு இருந்த?” என்று கேட்டான் பாலு. “சப்பாத்தி…”
வேகமாகப் பூஜை அறைக்குள் ஓடி, கடவுளை வேண்டி, திருநீறு இட்டு திரும்பியபோது வீட்டுக்குள் புகை. முதலில் மெல்ல, அடுத்த கணங்களில் அதிகமாக! பயம் இன்னும் கூடியது.
“சுபா, பயப்படாம நான் சொல்றதை செய். முதல்ல கிச்சன் லைட் போடு. அடுப்பை நிறுத்தினாயானு பாரு.” அப்போதுதான் உணர்ந்தாள். பயத்தில் பூஜை அறைக்கு ஓடியபோது, அடுப்பை நிறுத்தவே இல்லை. சப்பாத்தி கருகி புகை கிளம்பியிருந்தது. அடுப்பை நிறுத்தியதும் புகை குறைந்தது. அவள் சற்று நிம்மதி அடைந்தாள்.“ஏங்க… ரொம்ப பயந்துடேன்,” என்று குழந்தை போல சொன்னாள்.“சரி. இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன். கைபேசியில் அழைத்தபின் கதவைத் திற,” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
“பாலு வந்திருப்பார்,” என்று நினைத்து, கதவு லென்சிலும் பார்க்காமல் கதவைத் திறந்தாள். வெளியே பாலு இல்லை. அதிர்ச்சியடைந்தாள். கீழே ரோபோ இருந்தது. வீடு சுத்தம் செய்யும் ரோபோ. நீண்ட நாட்களாக அவள் ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டிருந்த அதே ரோபோ. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அதை தொடப்போகும் வேளையில்…
ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.“அதைத் தொடாதே…”அந்தக் குரல் புதிதல்ல. மென்மை இருந்தது. பயமில்லை.. தன் கணவன். பாலு.“எத்தனை தடவை சொல்றது, சுபா? கதவைத் திறக்குறதுக்கு முன்னாடி யாருன்னு பார்த்துத்தான் திறக்கணும்,” என்றான். “சாரிங்க… நீங்கதான் வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டேன்,” என்றாள். “இப்போ ஜாக்கிரதை ரொம்ப முக்கியம். இந்த ஏரியால முகமூடி கொள்ளையர்கள் அதிகம்.”
அவள் ரோபோவை ஆசையோடு பார்த்தாள்.“ரோபோ சூப்பரா இருக்குங்க… ரொம்ப நாள் ஆசை.”"உள்ளே வா. ரன் பண்ணிப் பார்க்கலாம்,” என்று பாலு சொல்லிக் கொண்டே உள்ளே நகர்ந்த அதே நொடியில் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை.ஐந்து, ஆறு முகமூடி அணிந்தவர்கள், கதவைத் தள்ளி வீட்டுக்குள் புக முயன்றனர்.சுபாஷினி நடுங்கிப் போனாள். மீண்டும் மணியோசை அவள் செவிக்குள்.
“சுபா… உள்ளே போ…”பாலு அவளை தன் பின்னால் தள்ளிக் கொண்டு கதவை முழுவதுமாக அடைக்க முயன்றான். முகமூடி கொள்ளையர்கள் பலமாக கதவைத் தள்ளினர். ஒருவன் உள்ளே கால் வைக்க முயன்றான்
.
“வின்… வின்…” திடீரென்று இயங்கியது ரோபோ. அது தரையில் சுழன்று கொள்ளையனின் காலில் மோத, அவன் தடுமாற, அந்த ஒரு நொடியில்..பாலு முழுப் பலத்துடன் கதவைத் தள்ளி மூடி, லாக் செய்தான். சுபாஷினியைத் தன் பின்னால் இழுத்துக் அவளை பூஜை அறைக்குள் கூட்டிச் சென்றான்.
“நான் வரும்போதே சந்தேகப்பட்டேன். மப்ட்டியில் போலீஸ் நின்று கொண்டிருந்தார்கள். இந்தப் பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் சுற்றுவதாக எச்சரித்தார்கள். அதனால்தான் உன்னை ஜாக்கிரதையா இருக்கச் சொன்னேன். போலீஸ் ரோந்தும் இருக்கு, பயப்படாதே.”என்று சொல்லி அவசர போலீஸ் எண்ணிற்கு அழைப்பதற்காக செல்போனை எடுத்து ஸ்கிரீன் டச் செய்தவுடன் திடீரென ஒரு விளம்பரம்.
"உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா? ‘ஓம் சக்தி’ என்று பதிவிடுங்கள்…”என்ற வாக்கியங்களுடன் மணியோசை ஒலிக்க அம்மனின் உருவம் தெரிந்தது.
அந்த நிமிடங்களில்…சைரன் சத்தத்துடனான போலீஸ் வண்டி வரவும் சரியாக இருந்தது. கொள்ளையர்கள் தப்பிக்க முடியாதபடி வீட்டின் முன்புறமும் பின்புறமும் போலீஸ் சுற்றிவளைத்திருந்தனர். பூஜை அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சுபாஷினி, கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
“அந்த மணியோசை…” அவள் மெதுவாக சொன்னாள்.“எனக்கு எச்சரிக்கையாக உள்ளுணர்வின் அழைப்பு மணியாய் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்திருக்கிறது.” பாலு சின்னதாகச் சிரித்தான்.“அதான் சுபா… சில நேரம் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யும்" .
ரோபோ அமைதியாக தன் இடத்தில் நின்றது. வீட்டிலும் அமைதி திரும்பியது.ஆனால் அந்த இரவுக்குப் பிறகு, சுபாஷினி எப்போதும் கதவைத் திறப்பதற்கு முன் ஒரு விநாடி நின்று கவனிக்க பழகிக் கொண்டாள்.

No comments:
Post a Comment