**** (பகுதி 2) எங்கள் குழுவினர் சந்திப்பும் இரயில் பயணமும்****
ஈரோடு ரயில் நிலையத்தில் வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் எங்களோடு உஷா என்ற பெண்மணியும் இணைந்து கொண்டார். அங்கிருந்து ஜோலார்பேட்டை நிறுத்தத்தில் இறங்கி பெங்களூர் டூ பனாரஸ் ட்ரெயினில் அலகாபாத் என்று சொல்லப்பட்ட பிரயாகைக்கு போய் இறங்குவதுதான் எங்களுடைய பயணத்தின் முதல் திட்டம்.
ஈரோட்டிலிருந்து நாங்கள் ஆறு பேர் சென்றோம். எங்களைக் காசிக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்கள் சேலத்தில் இருந்தார்கள். ரயில் சேலம் சென்றடைந்தும் எங்களுடன் பயணிக்க கூடிய மீதமுள்ள 26 பேரும் சேலத்தில் ரயில் ஏறினார்கள். எங்களை அழைத்துச் செல்லும் நிர்வாகி ஜெயக்குமார் சாரை அப்போதுதான் நேரில் சந்திக்கிறோம்.அவருக்கு உதவிக்கரமாக பழனிசாமி, கதிரேசன் என்பவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் எங்களிடம் ஒரு மஞ்சள் நிற கட்டைப்பையை வழங்கினார்கள். அதில் மஞ்சள் நிறத் தொப்பி, கழுத்தில் போடக் கூடிய ஐ.டி கார்டு, சாப்பிடும் தட்டு, 2 லிட்டர் வாட்டர் பாட்டில் இருந்தன.
“நீங்கள் பயணம் முடித்து திரும்பும் வரை இந்த பிளேட், தொப்பி, ஐடி கார்டு பத்திரமா வச்சிருங்க. எங்கே போனாலும், உங்க அடையாளக்கார்டை கழுத்தில் மாட்டாமல் போகக் கூடாது” என்று அறிவுறுத்திச் சென்றார்.
காலை பதினொரு மணிக்கு பாப்பாத்திக்கா, லட்சுமி அக்கா இருவரும் அவரவர் ப்ளாஸ்க்கில் கொண்டு வந்த ப்ளாக் டீயை கொடுத்தார்கள். ரேவதிக்கா கொண்டு வந்த சுண்டல் அந்த டீயுடன் ஜோடி சேர்ந்து சுவை கூட்டியது. சேலத்தில் ஏறிய உஷாவின் அம்மா தந்திருந்த ஸ்னாக்ஸைப் பகிர்ந்து கொறித்துக்கொண்டும், எங்களை நாங்களே புகைப்படம் எடுத்து, எங்கள் உறவுகளுக்கு வாட்சப்பில் அனுப்பிக் கொண்டும் இருந்த நேரத்தில் ரயில் ஜோலார்பேட்டை வந்து சேர்ந்தது.
ரயிலை விட்டு இறங்கி, அங்கே இருந்த ஆலமரத்தைச் சுற்றியிருந்த சிமெண்ட் திட்டுகளில் எங்களுடைய உடைமைகளை எல்லாம் வசதியாக வைத்தோம். உடைமைகளை வைத்து விட்டு சற்றே இளைப்பாறும் நேரத்தில் எங்களுக்கான மதிய உணவு வந்து விட்டது. அவரவர் வசதிகேற்ப அமர்ந்து புதிதாக வந்திருந்த சேலம், நாமக்கல், உடுமலைப்பேட்டை, திருச்சிகார்களுடன் சாப்பிட்டுக் கொண்டே உரையாடத் தொடங்கினோம்.
அடுத்து நாங்கள் ஏற வேண்டிய ரயில் மாலை நாலு மணிக்கு என்பதால் அதுவரையில் அங்கே இருந்த கல் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்தோம்.
ஆலமரத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த எலி ஒன்று தன் வங்கின் வெளியேயும் உள்ளேயும் சென்று கொண்டிருந்தது. அதைக் கவனிக்கும் செயலில் இறங்கினேன். மரத்தின் கீழிருந்த வாழையிலைகளை தன் கூரிய பற்களால் கொறித்து எடுத்துச் சென்று தன் வங்கில் வைக்க ஓடிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் எலிகள் குறித்து நான் எழுதிய சில கட்டுரைகள் எனக்கு நினைவுக்குள் வந்தன.
அப்போது ஜெயக்குமார் சார் எங்களை அழைத்து, கயாவில் பிண்டம் வைப்பவர்கள், வேணி தானம் செய்பவர்கள் மற்றும் சிவதர்ப்பணம் செய்ய விருப்பம் இருப்பவர்களின் பெயர்களைக் கணக்கெடுத்து அதற்கான கட்டணங்களையும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனத்தில் வழிபாடு செய்வதற்கான கட்டணங்களையும் கூறினார். நாங்கள் அதற்குண்டான தொகையை அவரிடம் அளித்தோம்.
"இந்த பயணம் இனிமையாக நடக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பும் அவசியம் தேவை. நாங்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்கு, நாங்கள் குறிப்பிடும் நேரத்துக்கு குளித்து தயாராகி வந்து விடுங்கள் அப்போது தான், நாம் செல்லக்கூடிய பயணங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக அமையும்" என்பதை ஜெயக்குமார் சார் வலியுறுத்திக் கூறினார். பயணத்தின் இறுதிவரையில் எல்லாரும் அவர் கூறியதைப் பின்பற்றி சரியான நேரத்துக்கு வந்தது இந்த பயணத்தினுடைய வெற்றியாக அமைந்தது எனலாம்.
ரயிலில் எங்கள் மூவருக்கும் கீழ் பர்த். மேல்பர்த்தில் பீகார் ஜென்ட்ஸ். தமிழ் பேசுகிறவர்கள் யாரும் இல்லை. அதுவும் மேல்பர்த்திலிருந்த இருந்த பீகாரி எங்களை எட்டி எட்டிப் பார்த்தார்.
இரவு ஏழு மணிக்கெல்லாம் எங்களுக்கு உணவுப் பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தார்கள். எங்களுடன் பயணித்த நாகப்பன் சார் எங்களுடன் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு, "எதுனாலும் கூப்பிடுங்க நானும் என் மனைவியும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் இருக்கை எண் நாற்பது, நாற்பத்தி ஒன்று” என்று சொல்லி விடைபெற்றார்.
நாங்கள் சாப்பிடுவதையும், பேசுவதையும் பீகாரி வேடிக்கை பார்க்க, அவரிடம் தமிழ் தெரியுமா? என்று கேட்டதும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். அதன் பிறகு நாங்கள் சுதாரித்துக்கொண்டு கேலி கிண்டலைக் குறைத்துக்கொண்டோம்.எங்களுடைடைய உறவினர்கள் இருவர் வேறு பெட்டி என்பதால், அவர்கள் இருவரிடமும் நாங்கள் அடிக்கடி சென்று உரையாடி வந்தோம்.
குளிர்காலம் என்பதால் ஏ.சி அதிக குளிராக இருந்தது. ரயில்வே நிர்வாகம் எழுதி ஒட்டியிருந்த புகார் எண்ணை அலைபேசியில் அழைத்து, ஏ.சியின் அளவைக் குறைக்க வேண்டுமென கேட்க அவர் இந்தியில் பேசினார்.
நான் பீகாரியிடம் உதவி கேட்டேன். அவரும் இந்தியில் அவரிடம் பேசினார். ஏ.சியின் அளவை குறைத்தார்களா என்று தெரியவில்லை.
ஸ்லீப்பர் பஸ்களில் தனித்தனி இருக்கைகளுக்குத் தேவையானபடி ஏசி அளவைக் கூட்ட, குறைக்க முடியும். அதுபோலவே ரயிலில் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று தோன்றியது. நிறைய பேருக்கு அந்த ஏசி குளிர் ரொம்ப அதிகமாக இருந்தது. படுக்கை விரிப்பில் கொடுத்த குல்ட்டையும் இழுத்துப் போர்த்தி காதுக்குப் பஞ்சு, தலைக்குக் குல்லா, ஸ்வெட்டர் எல்லாம் போட்டும் குளிர் எங்களைத் தூங்கவிடாமல் செய்தது.
திங்கள் மதியம் நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழர் மூலமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள். இரவு உணவு சப்பாத்தியும், மிளகுக் குழம்பும், தக்காளி தொக்கும் குளிருக்கு ஏற்ற வகையில் காரசாரமாக சுவை கூட்டியது.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்த ரயில் பயணம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தது. அந்த பீகாரியும் எங்களுக்கு நண்பராகிவிட்டார். உணவு குறித்துப் பேசும் போது, இட்லியின் சுவையை தமிழ்நாட்டில் தான் அதிகம் சுவைக்க முடிகிறது என்றார். தன் மகன் திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு பாட்னா செல்வதாக கூறினார்.
ட்ரெயினில் மிகுந்த அசௌகரியம் ஏற்படுத்தியது பாத்ரூம் தான். அவ்வப்போது தண்ணீர் வராமல் நின்றுவிடும் அந்த சமயங்களில் நாங்கள் சிரமத்தை எதிர் கொண்டோம்.
செவ்வாய் அதிகாலை பிரயாகை ஸ்டேஷன் வந்ததும் நாங்கள் இறங்கத் தயாரானோம். எங்களுடைய லக்கேஜ்களை எல்லாம் எடுக்க பீகாரி உதவி செய்தார். அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.
இந்தி மொழி நன்றாக தெரிந்து இருந்தால் அவருடன் பேசியிருக்கலாம், கலாச்சாரம், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொண்டிருக்கலாம் என்ற மனக்குறையோடு பிராயக்கை ரயில் நிலையத்தில் காலடி வைத்தோம்.
(தொடரும்)
(தொடரும்)


No comments:
Post a Comment