****(பகுதி 3) சங்கமக் கூடலில் நீராடல்****
நாங்கள் இறங்கிய பிரயாக்ராஜ் ரயில் நிலையம் ஈரோடு ரயில்
நிலையத்தை விட பெரியதாக இருந்தது. வண்ண மின் விளக்குகளில் ஒளிர்ந்தது. விடியற்காலை
நேரம் என்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக இல்லை. எதிரே பார்ப்பவர்கள் எல்லாம் ஸ்வெட்டர்
குல்லா அணிந்து உடலின் குளிரைத் தடுத்துக்
கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கிருந்த நீளமான நடைபாதையில் ட்ராலியை இழுத்துக் கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். எங்களை ஏற்றிச் செல்வதற்கு பேருந்து தயாராக காத்திருந்தது. ரயில் நிலையத்திலிருந்து, எங்கள் அனைவரையும் ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச்
சென்றார்கள்.
நாங்கள் சென்ற விடியல் நேரத்தில், அந்த
மண்டபத்தில் சாரட் வண்டி ஒன்று அலங்காரத்துடன்
நின்றிருந்தது. நம்ம ஊரில் சாரட் வண்டி கிடையாது
என்பதால் ஆச்சரியமாக பார்த்தோம். அருகே நின்றிருந்த மணமக்களின் அலங்காரங்களையும் சிலாகித்து
பேசியபடியே எங்கள் லக்கேஜ்களை இழுத்துக் கொண்டு
நடந்தோம். எங்களுக்கு தங்கும் அறை முதல் மாடியில். இரண்டு மணி நேரத்தில் தயாராகிவிடுங்கள்’ என்று ஜெயகுமார் சார் அறிவித்தார்.
நாங்கள் அறைக்குச் சென்று பல் துலக்கி, கை, கால்கள்
கழுவி இரண்டு மணி நேரத்தில் தயாராகி வெளியே வரவும் சூடான காபி கொடுத்தார்கள். அந்த நேரத்து குளிருக்கு
இதம் சேர்த்தது. காலை உணவாக பொங்கல், வடை,
ஒரு ஸ்வீட்டுடன் உணவை முடித்து விட்டு, திரிவேணி சங்கமத்தில் குளிப்பதற்கு வேண்டிய ஒரு
செட் டிரஸ் மட்டும் எடுத்து கொண்டோம். போன் எடுத்து வரலாம் என்றார்கள். நமக்கு வரலாறு
முக்கியமாச்சே அதனால் மறவாமல் போனை எடுத்துக் கொண்டோம்.
கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்கு புலப்படாத சரஸ்வதி
நதி சந்திக்கும் கூடலில் சென்று மூழ்கி எழுந்து
வருவதுதான் இன்றைய திட்டம். நாங்கள் திரிவேணி சங்கமம் சென்றடைந்ததும், அங்கேயிருந்து
நதிகள் கூடும் இடத்திற்கு படகில் செல்வதற்கு வாடகை பேசி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
எங்கள் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக பூ வாங்கிட்டு
போங்க என்று தமிழ், மற்றும் இந்தியில் வியாபாரிகள் அழைத்தது நம்ம ஊர் கோவில் வியாபாரங்களை நினைவு படுத்தியது. விற்பனையாளர்களிடமிருந்து
தப்பித்து, படகருகே வந்தோம். சகதியாய் இருந்த கருப்பு நிற மண் வழுக்கி விடாமல் நிதானமாக
ஒருவர் கைப்பிடித்து ஒருவராக படகில் ஏறிக் கொண்டோம்.
படகு கிளம்பிச் சென்று சிறிது தூரத்தில்
எங்களைச் சுற்றிலும் அழகான பறவைகள் நிறைய பறந்து கொண்டிருந்தன. கால்கள், மூக்கு நீளமாக புறாவை ஒட்டிய வெண்மை நிறத்தில் அந்தப்பறவைகள் காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சீசனில் சைபீரியா, ரஷ்யா, போலாந்து போன்ற நாடுகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக அந்த இடத்திற்கு வரக்கூடிய பறவைகள் என்று அறிந்துகொண்டேன்.
எங்கள் படகை ஒட்டி வந்த வேறொரு படகிலிருந்தவர்
காரச்சேவு அடைத்த பாக்கெட்களை விற்பனை செய்தார். அந்தக் காரச்சேவுகளை
வாங்கியவர்கள் கவரைப் பிரித்து காரச்சேவுகளை ஆற்றில் வீசினார்கள்.
கூச்சலிட்டபடியே கூட்டமாக வந்த பறவைகள்,
தண்ணீரில் மூழ்கி தன் அழகிய கால்களால் காரச்சேவுகளை எடுத்துச் சென்றன. ஆனால்,
தினமும் இவ்விதமான உணவுகளை வாங்கிப் போட்டால், வேறு இடங்களில் சென்று உணவு தேடும் வழக்கத்தை
பறவைகள் மறந்து போகுமே. அதுக்கும் வியாதிகள் வருமே என்ற ஆதங்கம் எனக்குள் மேலிட்டது.
நேரம் செல்லச் செல்ல நாங்கள் அமர்ந்திருந்த படகிற்கு அருகே இன்னும் சில படகுகளும் மிதந்து வந்தன. இட்லி, சுக்கு காபி, சுண்டல் என்று நமக்குத் தேவையான உணவுகளையும் படகுகளிலேயே எடுத்து வந்து ஆற்றிலேயே
விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் அவர்கள்!
இந்தக் காட்சிகளையும் ஆற்றின் நீரையும் பிரமிப்புடன் பார்த்துக்
கொண்டே கங்கா, யமுனா, சரஸ்வதி என்று மூன்று நதிகளும் சங்கமிக்க
கூடிய இடத்தை அடைந்தோம்.
நீராட வருபவர்கள் நீரில் மூழ்க வேண்டிய இடத்தில் இரண்டு
பக்கமும் இரண்டு படகுகளை நிறுத்தி நடுவில் ஒரு தடுப்புக் கயிறு கட்டி இருந்தார்கள்.
அதற்குள் ஒரு சின்ன பலகை இருந்தது. அந்த இடைவெளியில் ஒவ்வொருவராக இறங்கி அந்த பலகையின்
மீது நின்று தண்ணீரில் மூழ்கி எழ வேண்டும்.
அந்த இரண்டு படகுகளுக்கிடையே இறங்கும் பொழுது தடுமாற்றம்
இருந்தது. காரணம் அங்கே இறங்கக்கூடிய இடத்தில் படிக்கட்டுகள்
எதுவுமே இல்லை. நீரில் இறக்கி விடுவதற்கு
என இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் கையைப் பிடித்துதான் நாம் நீரின் உள்ளே இறங்க முடிகிறது. இறங்கி மூழ்கி எழுந்ததும் அவர்களே கைபிடித்து மேலே
ஏறவும் உதவி செய்கிறார்கள்.
கை பிடித்து தூக்கி விடுபவர்களுக்கு தனியாக ரூபாய்
வாங்குகிறார்கள். கங்கா, யமுனா, சரஸ்வதி மூன்று
நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் நீராட வேண்டும் என்ற என் கனவு அன்று நிஜத்தில் நடந்தேறியது.
நீரில் இறங்கி அந்த நதிகளின் சங்கமத்தில் மூழ்கி எழும் போது நன்றியைத் தவிர என் மனம்
வேறு எதுவும் உரைக்கவில்லை.
படகிலிருந்து மீண்டும் கரைக்கு வந்தோம். தம்பதிகளாய் வந்திருந்தவர்கள் வேணிதானம் எனும் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார்கள். இந்தச் சடங்கு புரோகிதர் மந்திரம்
சொல்ல மூன்று நதிகளின் சாட்சியாக, அங்கு கணவன்,
மனைவிக்கு தாலி காட்டுகிறார். இந்த பந்தம் அடுத்தடுத்த பிறவிகளிலும் நீட்டிக்க வேண்டும்
என்பதற்காக இந்த சடங்கு செய்வதாக கூறினார்கள். இந்த நிகழ்வில் பெண்கள் பூ முடி தானம்
தருகிறார்கள். அறுபது வயதைக் கடந்த மணமக்களுக்கு நாங்களும் அட்சதை போட்டு ஆசி பெற்று
விட்டு, அங்கிருந்து பிற இடங்களை சுற்றிப்
பார்க்க கிளம்பினோம்.
நதிகளை ஒட்டியே, பாபர் காலத்தில் கட்டப்பட்ட, பாபர் கோட்டையின் மதில் சுவர்களில்
பாசமேறிய செங்கற்கள் பல நூற்றாண்டுகளுக்கு சாட்சியாய் நின்றிருந்தது. சுற்றுலா
வந்தவர்களை ஏற்றிச் செல்ல ஒட்டகங்களை அழகு படுத்தி சவாரிக்காக
ஒட்டக ஓட்டிகள் காத்திருந்தார்கள். பாசிமணிகள், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள், சுற்றுலா பைகள் என விற்பனை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.
சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டிற்காக மக்களை ஏற்றிச்
செல்லக்கூடிய பேக்டரி வாகனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் படகில் சென்ற நதியின்
அழகை அருகே நின்று ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில், வேணிதான பூஜை முடிந்தது எல்லோரும்
கிளம்புகிறார்கள் நீங்க வாங்க என்று பாப்பாத்திக்கா அலைபேசியில் அழைத்தார். நாங்கள் அவ்விடத்தை விட்டு நகரும் போது,
அங்கே தள்ளுவண்டியில் வைத்திருந்த கொய்யாபழம் ஆரஞ்சு பழ சைசில் இருந்தது. பழத்தை பார்த்ததுமே
வாங்க வேண்டும் என்ற உணர்வு உந்தியது. உடனே கொய்யாப்பழத்தை வாங்கி, துண்டு போட்டு,
மிளகாய் பொடி, உப்பு தூவி வாங்கி கொண்டோம்.
நம்ம ஊரு கொய்யாவின் சுவையை விட , அதிகப்படியான
சுவையில் இருந்தது. இன்று வரை அந்தக் கொய்யாப்பழத்தின்
சுவை குறித்து சிலாகித்து பேசுகிறோம்.
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் பாபருடைய கோட்டைச் சுவற்றை ஒட்டிய பஞ்சவாடி ஆஞ்சநேயர் கோயில். நம்
ஊர் கோவில் திருவிழாக்களில் அக்னிச்சட்டி எடுத்தல், தீர்த்தம் செலுத்துதல், காவடி செலுத்துதல்
போல், அவர்கள் ஒரு நீளமான மூங்கில் கம்பில்
ஆரஞ்சு நிற ஜிகினா கொடியைச் சுற்றி, ஆரேழு பேர் சேர்ந்து, அந்த மூங்கில் கம்பை படுகிடையாக
தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் முன்னே மேளதாளத்துடன் ஆண்களும், பெண்களும்
பாட்டு பாடி நடனமாடியபடி வந்தார்கள். அவர்களுடன்
வந்திருந்த சிலர் இனிப்புகள் நிரம்பிய பெரிய
பாத்திரத்தை தலையில் தூக்கி கொண்டு சென்றார்கள். கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும்
சிறு அட்டைப்பெட்டியில் இனிப்புடனே வந்தார்கள்.
ஆடல்,பாடல், ஆர்பரிப்பு என்ற கூட்டத்தோடு நாமும் அவர்களுடன்
குதுகலமான மனநிலைக்கு மாறி விடுகிறோம். கோவிலின் கருவறையின் உள்ளே பாதாளத்தில் படுத்தநிலையில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நாம் படிக்கட்டு வழியாக கீழ் இறங்கிச் சென்று வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயரை மறைக்கும் அளவுக்கு துளசிமாலையும், நம்ம ஊரில் துலுக்கமல்லிப் பூ என்று சொல்லக்கூடிய மாலைகளும் நிறைந்து இருந்தன. அவர்கள் கொண்டு வரும் இனிப்பு வகைகளை ஆஞ்சநேயர் சிலை அருகே வைத்து கும்பிட்டு எடுத்து
வருகிறார்கள். அந்த மூங்கில் கம்புகளை வெளிப்பிரகாரம் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள். நாங்களும் பாதாள ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டுவிட்டு வெளியில் வந்தோம். ஜெய் ஸ்ரீராம்,
ஜெய் அனுமன் என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஆஞ்சநேயரை வழிபட்டு பேருந்தில் ஏறி, நாங்கள் தங்கும்
விடுதிக்கு வந்தோம். சூடான உணவு, வடை பாயாசம் சாம்பார் என மதியம் சுவையான உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டு
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சக்திதேவி பீடம் கோவிலுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள்.
கோவிலில் உருவவழிபாடு இல்லை டோலி வழிபாடு. நீளமாக மரத்தில்
தொங்கவிடப்பட்ட ஊஞ்சல் இருக்கிறது. அதைத்தான்
வழிபடுகின்றனர். பிரகார தெய்வங்களாக ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட சிலைகள் இருந்தன. அங்கே
தரிசனம் செய்து முடித்து அறைக்கு வந்தோம். பிறகு, அந்த மண்டபத்தில் இருந்து கிளம்பி
கயா செல்ல பயணப்பட்டோம்.
கயாவில் நாங்கள் என்ன செய்தோம்?
(தொடரும்)
No comments:
Post a Comment