*****(பகுதி 4) கயாவில் என்ன செய்தோம்****
அலகாபாத்திலிருந்து கிளம்பி மீண்டும் பேருந்தில் பயணத்தைத் தொடங்கினோம். நேரு பிறந்த இடத்துக்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு அமையவில்லை. அங்குள்ள சாலைகள் பழுது பார்த்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து வசதி இல்லை என்று எங்கள் வழிகாட்டி தெரிவித்தார்.
பேருந்து கயாவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. தேநீர் கடையில் நின்றிருந்த பெண்மணி, “சாயா பாஞ்ச் ரூபே” என்றார். மண் டம்ளரில் தேநீர் ஊற்றித் தந்தார். பிளாஸ்டிக் கப், பேப்பர் கப் போன்றவற்றைத் தவிர்த்திருந்தது பாராட்டுக்குரியது. நம் ஊர் கடைகளிலும் இந்த மண் டம்ளர் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தோன்றியது. இந்தக் கடையில் மட்டும் தேநீர் விலை பத்து ரூபாய். குறைந்த விலையில் சுவையான தேநீர் அருந்திய திருப்தியுடன் பயணத்தைத் தொடர்ந்தோம்.
இரவு 11.45 மணிக்கு விடுதிக்குச் சென்று சேர்ந்தோம். அறைக்குச் செல்லும் முன் ஜெயகுமார் சார் எங்களை அழைத்து, “காலையில் பிண்டதானம் கொடுக்கச் செல்கிறோம். அதனால் விரைவில் குளித்து தயாராகி வாருங்கள். காலை உணவை முடித்து கிளம்பலாம்” என்றார்.
அறைகள் வசதியாக இருந்ததால் நாங்களும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டோம். காலை ஏழு மணிக்கு அனைவரும் தயாராகி காலை உணவை முடித்து மீண்டும் பேருந்தில் பயணித்தோம். செல்லும் வழி எங்கும் செங்கல் சுவர்களுடன் கூடிய கட்டிடங்கள், வெளிப்புற சிமெண்டு பூச்சே இல்லாமல் நின்றன. காரணம் என்ன என்று வழிகாட்டியிடம் கேட்டபோது,
“சிமெண்டு பூச்சு பூசினால் வரி கட்ட வேண்டும். கட்டிடம் முழுமை பெற்றால்தான் வரி விதிக்கப்படும். அதனால் மக்கள் கட்டிடங்களை முழுமையாக முடிப்பதில்லை” என்றார். வரி கூட கட்டயியலாத வறுமை நிலையில் அந்த மக்கள் இருக்கிறார்கள்.
இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் விவசாயத்தை விட சுற்றுலாவை அதிகம் சார்ந்துள்ளது. வழியெங்கும் மூங்கில் மரங்கள் தென்பட்டன. தென்னை மரங்கள் ஒன்றையும் காண முடியவில்லை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் சாணி வரட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவர்களில் வரட்டி தட்டிய அடையாளங்களும் காணப்பட்டன. இவ்வாறு வேடிக்கை பார்த்துக்கொண்டே கயாவைச் சென்றடைந்தோம்.
கோயிலுக்கு அருகே பேருந்து செல்ல இயலாததால் அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐந்து முதல் எட்டு பேர் வரை அமர்ந்து செல்லும் வசதியுள்ள ஆட்டோக்கள் அதிகமாக இருந்தன. ஒருவருக்கு கட்டணம் முப்பது ரூபாய், திரும்பி வரவும் அதே தொகை. இதுவே அதிகபட்ச கட்டணம். பெரும்பாலும் பேட்டரி ஆட்டோக்கள்தான் இயங்கின.
தற்போதைய விஷ்ணுபாத் கோயில் கி.பி. 1787-ஆம் ஆண்டு இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் அவர்களால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. கயாசுரன் என்ற அசுரனிடமிருந்து வந்த பெயரே கயா என்றும், விஷ்ணு தன் பாதத்தால் அவனை அடக்கியதால் இந்த இடம் விஷ்ணுபாத் கோயிலாக விளங்குகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.
கயாவில் பிண்டதானம் செய்தால் பித்ருக்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நாங்கள் படிக்கட்டுகள் ஏறி சமதளத்தில் நடந்து கோயிலின் உள்ளே நுழைந்தோம். நூறு அடி உயரமுள்ள கோபுரம் பிரம்மாண்டமாகத் தெரிந்தது.
பிண்டதானம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்தவர்களை சடங்குகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்று வரிசையாக அமர வைத்தார்கள். இங்கு சடங்குகளைச் செய்யும் புரோகிதர்கள் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக இந்தப் பணியை செய்து வருகிறார்கள் என்று வழிகாட்டி கூறினார்.
புரோகிதர் மந்திரங்களைத் தெளிவாகச் சொல்லி, கலந்து கொள்பவர்களையும் திரும்பச் சொல்ல வைத்து வழிபாட்டை நடத்தினார். இறந்த முன்னோர்களின் ஆன்மா அமைதியடைய கயாவில் பிண்டதானம் செய்வதன் சிறப்பைச் சொல்லி விளக்கினார்.
இறந்த நெருங்கிய உறவினர்களுக்குத் திதி கொடுக்கும்போது (கணவன், மனைவி, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள்…) ஒவ்வொருவராக வரிசையாகச் சொல்லச் சொல்ல, சிலரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. திதி கொடுத்த பிறகு, நமக்குப் பிடித்த காய்கள், பழங்கள், இலைகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விடச் சொல்லி புரோகிதர் கூறுகிறார். (இந்தப் பிண்டதானத்தில் கலந்து கொள்ளாதவர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களை விட வேண்டியதில்லை.)
அதன் பிறகு பிண்டங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம். அங்கே கல்பாறையின் மீது ஒற்றைக் கால்தடம் பதித்து இருந்த விஷ்ணுவின் பாதத்தில் கொட்டி விட்டு, அவரின் பாதம் தொட்டு வழிபட்டு வெளியே வந்தோம். இங்கு பல கோயில்களில் விஷ்ணுவும் சிவனும் ஒரே வளாகத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிண்டம் செலுத்தி வந்த பிறகு, வழிபாட்டுக்குப் பயன்படுத்திய நீரையும், பிரசாதமாகக் கொடுத்த வாழைப்பழத்தையும் எடுத்துக்கொண்டு, கோயிலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு செய்து, அந்த நீரை மரத்திற்கு ஊற்றி, வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொன்னார் புரோகிதர்.
பித்ரு பூஜை முடித்து நாங்கள் வணங்கிய ஆலமரம் நித்திய பலன் தருவதாக நம்பப்படுகிறது. அதற்கான ஒரு கதையும் கூறினார்கள். ராமாயண காலத்தில் தசரத மஹாராஜா மோட்சத்திற்கு செல்வதற்காக பிண்டம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ராமர், இலக்குவன் அங்கேயில்லை. அவர்கள் வர காலதாமதமாகிறது, தசரதர், சீதையிடம் நீயே எனக்கு பிண்டம் வை, எனக்கு உடனே மோட்சம் போக வேண்டும் என்னால் இங்கே இருக்க முடியவில்லை என்று கேட்டுக் கொண்டதால், சீதாதேவி, தசரதருக்கு பிண்டம் வைத்து விடுகிறார். தசரதர் மோட்சம் சென்று விடுகிறார். திரும்பி வந்த ராமர், சீதையிடம் நான் வருமுன் நீ ஏன் பிண்டம் வைத்தாய்? என்று கேட்க, சீதாதேவி, தசரதர் கேட்டுக் கொண்டதால் தான் பிண்டம் வைத்தாக கூறுகிறார். அதை நம்ப மறுக்கிறார் ராமர். சீதா அங்கிருந்த துளசி செடியை உதவிக்கு அழைத்துக் கேட்க, நான் பார்க்கலை என்று துளசி செடி பொய் சொல்லி விடுகிறது. பல்குனி நதியிடம் கேட்க அதுவும் நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்லி விடுகிறது. அங்கிருந்த ஆலமரம் மட்டும் நடந்த உண்மைகளை சொல்கிறது. ராமர் சமாதானம் அடைகிறார் என்று விளக்கினார்கள். அதனால், கணவரை இழந்த பெண்கள் தங்கள் கணவருக்கு இங்கே பிண்டதானம் கொடுக்கலாம் என்று கூறினார்கள்.
பொய் சொன்னதால் இந்த ஊரில் துளசி செடி வளர்வதில்லை என்றும், பல்குனி ஆற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் முழங்கால் அளவுக்கு மேல் நீர் உயர்ந்ததில்லை என்றும் வழிகாட்டி கூறினார். இங்கு விஷ்ணுவின் பாதம் மட்டுமே வழிபடப்படுகிறது. கோயிலின் உள்ளே கைப்பேசி அனுமதி இல்லை.
வழிபாடு முடிந்தபின் அங்கிருந்து கிளம்பி அறைக்கு வந்து மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். அதன் பின்னர், எங்களை 80 அடி உயர புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இந்தச் சிலை Great Buddha என்று அழைக்கப்படுகிறது. 1982-ல் கட்டுமானம் தொடங்கி, 1989-ல் 14-ஆம் தலையங்கமான தலாய் லாமா அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் உயரமான சிலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.
பெரிய புத்தர் சிலை அழகும் அமைதியும் நிறைந்த ஆன்மீக அனுபவத்தை வழங்கியது. புத்தரின் முக்கியமான பத்து சீடர்களின் சிலைகளும் அங்கே நிறுவப்பட்டிருந்தன. கோயிலைச் சுற்றிலும் பசுமையான மரங்கள், செடிகள், கொடிகள் இன்னும் அழகாக காட்சியளித்தன.
கோயிலுக்கு வெளியே வந்ததும் வணிகக் கடைகளில் புத்தர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பாசி மணிமாலைகளும் கிடைத்தன. முதலில் விற்கும் பொருட்களுக்கு அதிக விலை சொல்வார்கள், குறைத்துக் கேட்டாலும் கொடுக்கிறார்கள்.
பொருட்களை கைகளில், வைத்துக் கொண்டு விற்பனை செய்பவர்கள் விற்பனை இல்லாத சூழலில் “சாப்பிட ஏதாவது கொடுங்கள்” என்று இரந்து கேட்கிறார்கள். அவர்களின் வறுமை மனதை கனக்க வைத்தது. எங்கள் கையில் இருந்த கடலை மிட்டாயைக் கூட வாங்கிக்கொண்டு ஓடும் சிறுவர்களை நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டே அவ்விடத்தை விட்டு கிளம்பினோம்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் படித்த புத்தர் ஞானம் பெற்ற இடத்தை பார்க்கப் போகும் ஆவல் எங்களுக்கு அதிகமாக மேலிட்டது. புத்தர் வரலாற்றுப்படி கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் அவர் கயாவிற்கு வந்து ஞானம் பெற்றார் என்று வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அசோகர் காலத்துக்கு முன்பே பௌத்த மதம் தோன்றியிருந்தாலும், அசோகர் காலத்தில் தான் அது அரசு ஆதரவுடன் உலக அளவில் பரவி வளர்ந்தது என்று வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாபோதிக் கோயில் சார்ந்த பகுதிகள் 2002- ல்UNESCO உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பௌத்த வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் இந்த இடம் முக்கிய பங்காற்றுகிறது. நாங்கள் சென்றிருந்த நேரத்தில் உலகெங்கிலும் இருந்து வந்த புத்த பிட்சுகள் அங்கே கூடி இருந்தார்கள்.
மஹாசூத்திர வாசிப்பு மஹாபோதிக் கோயிலில் நடைபெற்று வந்தது. புத்த பாரம்பரிய நூல்கள் முழுவதையும் வாசிக்கும் நிகழ்ச்சி அது. பலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு மைக்கில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான புத்த பிக்குகள் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
நாங்கள் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டே புத்தர் ஞானம் பெற்ற மஹாபோதிக் கோயிலுக்குச் சென்றோம். அங்கே நின்றவர்களின் வரிசையில் நாங்களும் நகர்ந்து கோயிலினுள் நுழைந்தோம். கோயிலின் உயரம் 55 மீட்டர். இது இந்தியாவில் பழமையான முழுமையான செங்கல் கோயில் கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அசோகர் காலத்தில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் சிறிய ஆலயமாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் குப்த பேரரசு காலத்தில் (5–6 ஆம் நூற்றாண்டு) இன்றைய வடிவில் கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. கருப்பு பாசாணக் கல்லில் பால பேரரசுக் காலத்தில் புத்தர் சிலை உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோயிலினுள் நுழையும் போதே மனதுக்குள் அமைதியும் அன்பும் பரவுவதை உணர முடிந்தது. புத்தரின் சிலை தங்கத்தால் வடிக்கப்பட்டது போல் பாதிக் கண்களை மூடிய நிலையில் சாந்த சொரூபமாக இருந்தது. அவரது கண்களில் பேரமைதி பிரதிபலித்தது. சிலையை வணங்கி வெளிச்சுற்றுப் பிரகாரத்தைச் சுற்றினோம். புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் போதிமரம் அங்கே மிகப் பெரியதாக, கிளை பரப்பி தடிமனாக வளர்ந்து நின்றது.
வெளிநாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான புத்த பிட்சுகள் அமர்ந்தும், நின்றும் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பிரகாரம் சுற்றிய இடங்களில் நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நமஸ்காரம் செய்யும்போது கைகளுக்கும் முழங்கால்களுக்கும் துணிகளை வைத்து மீண்டும் மீண்டும் படுத்து எழுந்து வணங்கினார்கள். பலமுறை இவ்வாறு செய்வதால் கைகால்களுக்கு வலி வராமல் இருக்கத் துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். நமஸ்காரம் செய்வதை மரியாதை, கருணை மற்றும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வணக்கமாக கருதுகிறார்கள். நாங்களும் போதிமரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தோம்.
இங்கே புத்த பூர்ணிமா, உலக அமைதி பிரார்த்தனை, திபெத்திய பௌத்த விழா, பிக்குகள் தானம் பெறும் நாள் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த விழாக்களில் கலந்து கொள்ள உலகெங்கிலுமிருந்து பௌத்தமதத்தை சார்ந்தவர்கள், துறவிகள் வருகிறார்கள் என்று செய்திகள் பகிர்கின்றன. இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இங்கே இருக்கும் புத்தர் இருப்பிடம் குறித்த சர்ச்சைகளும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை நாம் செய்திகளில் கேட்டும் வாசித்தும் வருவது நினைவுக்கு வந்தது.
கயாவின் சுற்றுலா அனுபவங்களை நிறைவாகக் கொண்டு அங்கிருந்து கிளம்பி அறைக்கு வந்தோம். இரவு உணவை முடித்துவிட்டு....
இனி நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் காசிக்குப் போகலாமா?
தொடரும்…



No comments:
Post a Comment