பகுதி 6 : உற்பத்திக்கு உச்சவரம்பு வைக்க முடியாத உலகம் – ஜெனீவா பேச்சுவார்த்தை (INC 5.2) ஒப்பந்தம் இல்லாமல் முடிவடைந்தது

பிளாஸ்டிக் மாசுபாடு இன்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதன் பாதிப்புகள் சூழலை மட்டும் அல்லாமல், மனிதர்களின் உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) வெளியிட்ட அறிக்கைகள், மற்றும் 'தி லான்செட்' இதழில் வெளியான ஆய்வுகள், பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்களால் உலகளவில் ஆண்டுதோறும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (அதாவது 126 டிரில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல்) உடல்நலம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைக் குலைக்கும் ரசாயனங்களான பிஸ்பினால் A (BPA), பித்தலேட்டுகள் (phthalates), பெர்- மற்றும் பாலி-ஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS- Forever Chemicals) போன்றவை புற்றுநோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு நோய், குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகள் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணமாகி அதற்கான சிகிச்சைகளில், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றன. சர்வதேச மருத்துவ அமைப்பான 'தி எண்டோக்ரைன் சொசைட்டி' இதை உறுதிப்படுத்துகிறது.
பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மகப்பேறு குறைபாடுகள், மன வளர்ச்சி சிக்கல்கள் (உதா: ஆட்டிஸம் autism) மற்றும் மரபணுவில் (DNA) ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல தலைமுறைகளை பாதிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. மேலும், மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களான நுண்துகள்கள் (microplastics) மனித ரத்தம், நுரையீரல், மூளை, நஞ்சுக்கொடி, தாய்ப்பால் போன்ற பல உடல் பாகங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் நாளமில்லா சுரப்பிகளின் சீர்கேடு, கல்லீரல் பாதிப்பு, மற்றும் நரம்பியல் குறைபாடுகள் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இத்தகைய கடுமையான விளைவுகள் இருந்தாலும், பிளாஸ்டிக் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 1950 ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்தி 200 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2060-க்குள் அது மேலும் மூன்று மடங்கு உயரும் என்றும் Global Plastics Outlook: Policy Scenarios to 2060 என்ற தனது அறிக்கையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development-OECD) எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி இதே வேகத்தில் அதிகரித்தால், அது சுகாதாரச் செலவுகளைப் பன்மடங்கு பெருக்குவதுடன், வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்ககூடுவதாக இருப்பதால், சர்வதேச அளவில் வலுவான சட்டப்பூர்வ பிணைப்பு ஒப்பந்தம் இல்லையெனில், இந்தப் பாதிப்புகள் அடுத்த தலைமுறையினரை ஆபத்தில் ஆழ்த்தும் என தெரிவிக்கிறது.
இந்த உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியைத் தீர்க்க, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ், சர்வதேச பேச்சுவார்த்தை குழு (INC- Intergovernmental Negotiating Committee) சுமார் மூன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டப்பூர்வ பிணைப்பு கருவியான ஒப்பந்தத்தை உருவாக்கும் இலக்குடன், INC 1 முதல் INC 5.2 வரையிலான, ஆறு அமர்வுகள் – பூண்டா டெல் எஸ்டே, பாரிஸ், நைரோபி, ஒட்டாவா, பூசன், ஜெனீவா போன்ற நகரங்களில் தொடர்ச்சியாக சர்வதேச பேச்சுவார்த்தை குழுவின் (INC) அமர்வுகள், ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றன.
கடந்த ஆகஸ்ட் 5 முதல் 15, 2025 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் (பலாய்ஸ் டெஸ் நேஷன்ஸில்), நாடுகளை சட்டப்பூர்வமாக பிணைக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான, ஐந்தாவது அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் இரண்டாம் அமர்வின் INC-5.2 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டபூர்வமான பிணைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்த அமர்வில் 184 நாடுகளைச் சேர்ந்த 1,400 பிரதிநிதிகள், 400-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 1,000 பார்வையாளர்கள், 70 அமைச்சர்கள், மற்றும் 30-க்கும் மேற்பட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகள், ஆகஸ்ட் 15, 2025 அன்று அதிகாலை 6:30 முதல் 9:00 மணி வரை நடந்த இறுதி அமர்வுடன் முடிவடைந்தன. இருப்பினும், பிளாஸ்டிக் உற்பத்திக்கு வரம்பு நிர்ணயிப்பது, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கட்டுப்படுத்துவது, மற்றும் நிதி ஆதாரங்களை திரட்டுவது போன்ற முக்கியமான அம்சங்களில், நாடுகளிடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஒப்பந்தத்தின் இறுதி உரை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மிகுந்த எதிர்பார்ப்புடன், உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் (INC-5.2) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆகஸ்ட் 5, 2025 அன்று தொடங்குவதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 4, 2025 அன்று, பிராந்திய ஆலோசனை கூட்டங்கள் (Regional Consultations) நடைபெற்றன. இது அரசியல் களத்தை அமைக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த நாளில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP – United Nations Environment Programme) தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், INC-ன் தலைவர் (Chair) மற்றும் நிறைவேற்றுச் செயலாளர் (Executive Secretary) ஆகியோர் இணைந்து, பல்வேறு பார்வையாளர் அமைப்புகளுடன் உரையாடல்களை நடத்தினர். இதில் சுற்றுச்சூழல் குழுக்கள், பழங்குடி மக்கள், இளைஞர்கள், கழிவு சேகரிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சுவிட்சர்லாந்து அரசும் ஒரு பலதரப்பட்ட பங்குதாரர் மன்றத்தை (Multi-stakeholder Forum) நடத்தியது. இந்த உரையாடல்கள், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் ஒப்பந்தத்தின் செயல்பாடு குறித்த சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படையாகப் பதிவு செய்ய உதவின. ஆகஸ்ட் 4-இல் நடந்த ஆலோசனைகளில், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த அனைத்து அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டு, அடுத்த நாள் தொடங்கவிருந்த முறையான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தன.

அந்த நாளின் அரசியல் மேடையில், பிளாஸ்டிக் உற்பத்தியை சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி, நாடுகளை தெளிவாக இரு அணிகளாகப் பிரித்தது. ஒரு புறம், பிளாஸ்டிக் மாசுபாட்டை 2040-க்குள் முழுமையாக ஒழிக்க வேண்டுமென வலியுறுத்திய நாடுகள் இருந்தன. இந்த அணியின் முன்னணியில் நார்வே மற்றும் ருவாண்டா இருந்தன. இவர்கள் தலைமையில், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், பெரு, செனெகல், மற்றும் சில பசிபிக் தீவு நாடுகள் இணைந்து “உயர் லட்சியக் கூட்டமைப்பு” (High Ambition Coalition to End Plastic Pollution – HAC) எனப்படும் வலுவான கூட்டமைப்பை உருவாக்கின. 65-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்று, பிளாஸ்டிக் மாசுபாட்டை அதன் மூலத்தில் தடுக்க வேண்டும் என்பதையே தங்கள் அடிப்படை நோக்கமாகக் கொண்டன.
இதற்கு மாறாக, அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, இந்தியா போன்ற பெட்ரோகெமிக்கல் உற்பத்தி நாடுகள் அடங்கிய ஒத்த மனப்பான்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு (Like-Minded Group - LMG) முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தது. இக்கூட்டமைப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டை “கழிவு மேலாண்மைச் சிக்கல்” எனக் கருதி, உற்பத்தி கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதையே தீர்வாக வலியுறுத்தியது.
உயர் லட்சியக் கூட்டமைப்பு நாடுகளின் (HAC) “உயர்ந்த லட்சியம்” மற்றும் ஒத்த மனப்பான்மை கொண்ட நாடுகளின் (LMG) “பொருளாதார நியாய வாதம்” எனும் இரு துருவங்களின் மோதலே ஜெனீவா அமர்வின் (INC-5.2) உண்மையான கருவாக அமைந்தது. உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் எந்தத் திசையில் செல்லும் என்பது இம்மோதலிலோ அல்லது சமரசத்திலோ தீர்மானமாகும். உயர் லட்சியக் கூட்டமைப்பு (HAC) நாடுகள், பிளாஸ்டிக் உற்பத்தியிலிருந்து அதன் முழு வாழ்க்கைச் சுழற்சி வரை கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வமான உலகளாவிய ஒப்பந்தம் உருவாக்குவதை மைய நோக்கமாக கொண்டிருந்தன. இந்த 'வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை' அடிப்படையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர, உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் (High-Ambition Coalition) ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
முதலாவது, பிளாஸ்டிக் உற்பத்திக்கு உலகளாவிய உச்சவரம்பு (global production cap) விதிக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும். மறுசுழற்சி மூலம் மட்டும் பிளாஸ்டிக்கின் மாசுபாட்டைக் குறைக்க முடியாது என்றும், அதன் மூல வேரான உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் அக்கூட்டணி வலியுறுத்துகிறது. மேலும், பிளாஸ்டிக் தயாரிப்பு என்பது எண்ணெய், எரிவாயு, நாப்தா (Naphtha) போன்ற புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருவதால், இது காலநிலை மாற்றத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தியைக் குறைப்பது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் உதவும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இரண்டாவது கோரிக்கையாக, புதியதாகப் பயன்படுத்தப்படும் முதன்மை பிளாஸ்டிக்கின் (virgin plastic) பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டைக் கட்டாயமாக்குதல் (recycled content mandate) இருக்க வேண்டும் என்று உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன. இதைச் சட்டத்தால் கட்டாயமாக்குவது அவர்களது மையப்புள்ளி. இந்த நடவடிக்கை மூலம் மறுசுழற்சி மையங்கள், பிளாஸ்டிக் சேகரிக்கும் அமைப்புகள் மற்றும் இரண்டாம் சுற்று சந்தைகள் ஆகியவை பொருளாதார ரீதியாக வலுப்பெறும் என்று கருதப்படுகிறது.
மூன்றாவது, பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான இரசாயனங்களுக்கான உலகளாவிய கட்டுப்பாடு ஆகும். தற்போதைய தரவுகளின் படி, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் தயாரிப்பில் 16,000-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன; இதில் சுமார் 4,200 ரசாயனங்கள் மனித உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என PlastChem Report (2023) குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில், உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் (High Ambition Coalition) பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் பாலிமர்கள் மீது, ஐரோப்பிய ஒன்றியத்தின் REACH (Registration, Evaluation, Authorisation and Restriction of Chemicals) விதிமுறை போன்று, ஒரு கடுமையான உலகளாவிய கட்டுப்பாட்டு முறைமை அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன.
நான்காவது கோரிக்கை, பிளாஸ்டிக்கின் முழு வாழ்க்கைச் சுழற்சிக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதாகும். எந்தெந்த நாடுகள் எவ்வளவு பிளாஸ்டிக் தயாரிக்கின்றன, அவற்றை எங்கே ஏற்றுமதி செய்கின்றன, அவற்றில் என்னென்ன ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, சுற்றுச்சூழலுக்குள் எந்த அளவில் கசிகின்றன போன்ற தகவல்களை, உலகளாவிய அளவில் பின்தொடரக்கூடிய ஓர் ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை (integrated database) உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
ஐந்தாவது, அனைத்து நாடுகளும் சட்டபூர்வமான தேசிய பிளாஸ்டிக் இலக்குகளை (legally binding national targets) உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்களுடைய உற்பத்தி, இறக்குமதி, மறுசுழற்சி விகிதங்கள் மற்றும் கழிவு குறைப்பு இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். இது வெறும் "தன்னார்வ முயற்சி" அல்ல, சட்டபூர்வமான கட்டாயப் பொறுப்பு (legally binding obligation) என்று உயர்-லட்சியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
ஆறாவது கோரிக்கை, கழிவு ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகும். பெரும்பாலான உயர் வருமான நாடுகள் தங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது சுற்றுச்சூழல் நீதிக்கு எதிரானது. எனவே, உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை (plastic waste trade ban) உறுதிப்படுத்தும் ஒரு வலுவான ஒப்பந்தப் பிரிவைச் சேர்க்கக் கோருகின்றன.
ஏழாவதாக, நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அவசியம் என்பதை உயர் லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துவதும், மாற்றுப் பொருட்களை உருவாக்குவது, திறம்பட்ட மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது, ஆகிய அனைத்தும் பெரிய முதலீடும் தொழில்நுட்ப திறனும் தேவைப்படும் பணிகளாகும். இத்தகைய முயற்சிகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொள்வதால், அவர்களுக்கு சர்வதேச அளவில் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் என உயர் லட்சிய கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இதற்காக “பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் உலகளாவிய நிதி அமைப்பு” (Global Financial Mechanism to End Plastic Pollution) உருவாக்கப்பட வேண்டும்; அது பிளாஸ்டிக் மாசுபாடு ஒப்பந்தத்தின் கீழ் செயல்பட்டு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் மாற்றுத் துறைகளுக்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
ஆனால், ஒத்த மனப்பான்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு (Like-Minded Group - LMG) முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தது. உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது என்பது, பல வளரும் நாடுகளின் வளர்ச்சி உரிமையை மீறுவதற்கு ஒப்பாகும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது. மேலும், மருத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளுக்கு பிளாஸ்டிக் ஒரு மலிவான, அத்தியாவசியமான பொருள் என்றும், இதை முழுமையாகத் தடை செய்ய இயலாது என்றும் அவை வலியுறுத்தின. ஐரோப்பிய ஒன்றியம் கோரும் முழு வாழ்க்கைச் சுழற்சி (Full Life Cycle) கட்டுப்பாடுகள் தங்களது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் என்றும் LMG நாடுகள் வாதிட்டன. பிளாஸ்டிக் உற்பத்தி மூலத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், கழிவு மேலாண்மை, மறுசுழற்சி மற்றும் கடல் மாசுபாடு தடுப்பு போன்ற பின்நிலை நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை LMG நாடுகள் வலுவாக வலியுறுத்தின. இந்த அணுகுமுறை பிளாஸ்டிக் தொழிலின் வளர்ச்சிக்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் செல்வதை உறுதிசெய்யும். இதைத் தவிர, ஐ.நா.வின் ஒப்பந்த முடிவுகள் அனைத்தும் ஒருமித்த கருத்து (Consensus) அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ரீதியாகச் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளைக் கொண்டிருந்தாலும், LMG குழு ஒரு பெரிய தடையாக உருவெடுத்தது. ஏனெனில், ஓர் ஒற்றை நாடு கூட ஒப்புதல் அளிக்காவிட்டால், உயர் லட்சிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்பாடுகள் (HAC வலியுறுத்தும் உற்பத்திக் கட்டுப்பாடு போன்றவை) பலமுறை நிறைவேறாமல் போவதற்குக் காரணமாக அமைந்தது.
ஆகஸ்ட் 5, காலை 10 மணிக்குத் தொடங்கிய ஐ.நா. தலைமையிலான பிளாஸ்டிக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஒரு புதிய, முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்தது. இதற்கு முந்தைய நாட்களில் அனைவருக்கும் திறந்த முழு அமர்வுகள் (open plenary) இருந்தபோதிலும், அமர்வின் பெரும்பாலான நேரம், ஐக்கிய நாடுகளின் (UN) பன்னாட்டுக் கூட்டங்களில் பின்பற்றப்படும் ஒரு உத்திசார்ந்த நடைமுறையான ரகசியமான ‘மூடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு’ (closed negotiation phase) ஒதுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5 முதல் 15 வரை, இந்தப் பேச்சுவார்த்தைகள் தினமும் இரவு 8 மணி வரை நீடித்து, சில நாட்களில் நள்ளிரவு 2 மணி வரையும் தொடர்ந்தன. இங்கு பங்கெடுப்போர் குறைவாகவும், விவாதங்கள் தீவிரமாகவும் இருந்தன.
அதிகாரப்பூர்வமாக, இந்த மூடப்பட்ட கட்டம் "தொடர்பு குழுக்கள்" (Contact Groups) எனப்படும் சிறிய குழுக்களின் வடிவில் நடைபெற்றது. வெளியுறவுப் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் (NGOs) இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதன் முக்கிய நோக்கம், பொது அரங்கில் சாத்தியமில்லாத ஆழமான மற்றும் நுணுக்கமான சட்டப்பூர்வ உரையாடலை (legal textual negotiation) நிகழ்த்துவதே ஆகும். ஒவ்வொரு குழுவும் ஒப்பந்தத்தின் வெவ்வேறு பிரிவுகளைப் பற்றிச் செறிவாக விவாதிக்க உருவாக்கப்பட்டது — சிலர் பிளாஸ்டிக் உற்பத்தி வரம்பு குறித்தும், சிலர் நச்சு சேர்மங்கள் (chemicals of concern) குறித்தும், மற்றோர் குழுக்கள் நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் செயலாக்கத்தின் சட்டபூர்வ அம்சங்களைப் பற்றியும் விவாதித்தனர். இந்தக் குழுக்களுக்குள், நாடுகள் தங்கள் நலன்களையும், சிவப்புக் கோடுகளையும் (red lines) உறுதியாகப் பதிவு செய்தன.
இந்தத் தொடர்புக் குழுப் பேச்சுவார்த்தைகள் பொதுமக்கள் பார்வையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதால், என்ன விவாதிக்கப்படுகிறது, எந்த நாடுகள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன, அல்லது சமரசம் செய்ய யார் முயற்சிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே வெளிவந்தன. குறிப்பாக, எண்ணெய் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் சில நாடுகள், பிளாஸ்டிக் உற்பத்தி வரம்பு போன்ற கடுமையான சட்டப்பூர்வ தீர்மானங்களை எதிர்த்ததாக அறிக்கைகள் பின்னர் வெளிவந்தன. இருப்பினும், அந்த அறிக்கைகள் அதிகாரபூர்வமானவை அல்ல; மாறாக, வெளியேறிய குறிப்புகள், பங்கேற்பாளர்களின் கூற்றுகள் அல்லது கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அறிக்கைகள் மூலமாகவே உலக சமூகம் இப்பேச்சுவார்த்தையின் போக்கை அறிந்துகொள்ள முடிந்தது.
இந்தக் குழுக்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்னர் "சட்ட வடிவமைப்பு குழுக்களுக்கு" (Legal Drafting Groups) அனுப்பப்பட்டன; இவை அந்த விவாதங்களைச் சட்ட ரீதியாகத் துல்லியமான ஒப்பந்த மொழியாக வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றன. அதாவது, தொடர்பு குழுக்கள் விவாதத்தின் திசையை நிர்ணயம் செய்ய, சட்ட வடிவமைப்பு குழுக்கள் அந்த விவாதத்தைச் சட்ட ஒப்பந்த வடிவமாக மாற்றின.
இந்த "மூடப்பட்ட பேச்சுவார்த்தை" (closed negotiation) என்ற நடைமுறை, பிளாஸ்டிக் ஒப்பந்தம் போன்ற உலகளாவிய, அரசியல் நுணுக்கம் மிக்க விவகாரங்களில் நாடுகள் நேர்மையாகவும் நுட்பமாகவும் பேசும் சூழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஆனால் மறுபுறம், இது வெளிப்படைத்தன்மை பற்றாக்குறை கவலையை எழுப்புகிறது. ஏனெனில் இத்தகைய மூடப்பட்ட குழுக்களில் என்ன தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன, எந்த நாட்டின் நலனுக்காக எவை மாற்றப்படுகின்றன என்பதில் உலகப் பொதுமக்களுக்குத் தெளிவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP) வழங்கிய “பார்வையாளர் விளக்க அமர்வுகள்” (observer briefing) மட்டுமே வெளியிலிருந்து பின்பற்றும் மக்களுக்கு தகவல் அளித்தன. ஆனால் அவை பொதுவாக விளக்கக் கூட்டங்களாக இருந்தன; உண்மையான பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் அங்கே வெளிப்படவில்லை. ஆகவே, ஆகஸ்ட் 5 முதல் தொடங்கிய அந்தப் பேச்சுவார்த்தை, பிளாஸ்டிக் ஒப்பந்த வரலாற்றில் "மூடப்பட்ட கதவுகளுக்குள் நடந்த முக்கியமான திருப்புமுனை நாட்கள்" என்று பலரும் வர்ணித்தனர். உலக நாடுகள் மெல்ல மெல்ல தங்கள் உள் நோக்கங்களை வெளிக்கொணரும் வகையில் பேசிக்கொண்டிருந்தன; ஆனால் அந்த உரையாடல்கள் பக்கங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உலகிற்கு அவை கதைகளாக மட்டுமே வந்தடைந்தன.
அதே சமயம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வளாகத்திற்கு முன், கனடியக் கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான, பென்ஜமின் வான் வாங் (Benjamin Von Wong), எஸ்.எல்.எஸ். இல்லுஷன்ஸ் (SLS Illusions) என்கிற கனடிய வடிவமைப்பு குழுவுடன் இணைந்து, 6 மீட்டர் (20 அடி) உயரமுள்ள "சிந்தனையாளரின் சுமை" (The Thinker's Burden) என்ற கலை நிறுவலை அமைத்தார். இந்தக் கலைப் படைப்பில் உள்ள சிந்தனையாளர், வெறுமனே சிந்தனையில் ஆழ்ந்திருக்காமல், ஒரு கையில் பாதுகாக்கப்பட வேண்டிய குழந்தையையும், மறு கையில் நசுக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலையும் ஏந்தி, கவலையடைந்த பூமித்தாயின் மீது அமர்ந்திருந்தார். மேலும், பிளாஸ்டிக்கின் நச்சு இரசாயனங்களுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையேயான தொடர்பைக் குறிக்கும் இரட்டைச் சுழல் 'டிஎன்ஏ'ஆல் (DNA) சுற்றப்பட்டிருந்தார். உள்ளூர் கழிவு பிளாஸ்டிக்குகளாலும், நிலைத்தன்மை வாய்ந்த பொருட்களாலும் கட்டப்பட்ட இந்த நிறுவல், பேச்சுவார்த்தைகள் நீடிக்கும் போது பிளாஸ்டிக் கழிவுகளால் தினமும் சூழப்பட்டு, வளர்ந்தது. இது எதிர்கால சந்ததியினர் மீதான — நெறிமுறை, சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல சுமையின் அதிகரிப்பைச் சுட்டிக் காட்டியது. இந்தச் சுமையைத் தணிக்க கொள்கை, புதுமை மற்றும் கூட்டு விருப்பம் தேவை என்று வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தின் கலாச்சார மற்றும் சமூக அவசரத்தை ஆழப்படுத்தியது.
ஜெனீவா அமர்வில் "சட்ட வடிவமைப்பு குழுக்கள்" (Legal Drafting Groups) வேலை செய்யத் தொடங்கியபோது, பேச்சுவார்த்தையின் மொழி (language of negotiation) படிப்படியாகத் தளர ஆரம்பித்தது. இதுவே முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தது. ஆரம்ப வரைவில் இருந்த "shall" (செய்யவேண்டும்) என்ற கட்டாயச் சட்ட வார்த்தை, சமரச அழுத்தங்களால் பல இடங்களில் "should" (செய்யலாம்) அல்லது "encourage" (ஊக்குவிக்கப்படுகிறது) போன்ற மென்மையான சொற்களாக மாற்றப்பட்டது. இதனால், நாடுகளின் சட்டபூர்வமான கட்டாயப் பொறுப்பு (legal obligation) “விருப்பமான நடவடிக்கை” போல மாறியது. "plastic production reduction" (பிளாஸ்டிக் உற்பத்தி குறைப்பு) என்ற நேரடிச் சொல்லுக்குப் பதிலாக, "management of plastic lifecycle" (பிளாஸ்டிக் வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை) என்ற பொதுவான சொல் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. இதன் மூலம், உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதிலிருந்து கவனம் கழிவு மேலாண்மைக்கு (waste management) மாறியது. அதேபோல், "legally binding measures" (சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள்) என்பது சில இடங்களில் "policy approaches" (கொள்கை வழிமுறைகள்) என மாற்றப்பட்டு, சட்டத்தின் வலிமை குறைக்கப்பட்டது. இந்த மாற்றப்பட்ட தளர்வான மொழியை உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் நிராகரித்தன. ஏனெனில், ஒரு வலுவான ஒப்பந்தத்தால் மட்டுமே, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அவர்கள் உறுதியாக இருந்தனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் (Global Plastic Pollution Treaty – INC-5.2) இறுதி நாளான ஆகஸ்ட் 15, 2025 அன்று, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்ட அறிக்கையில், “இந்த சந்திப்பு ஒருமித்த கருத்து எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது” (“This meeting adjourned without consensus.”) என்று குறிப்பிடப்பட்டது. அதே நேரத்தில், UNEP தலைவர் இங்கர் ஆண்டர்சன் (Inger Andersen) தனது அறிக்கையில், “இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருக்க விரும்புகின்றன” (“However, one thing remains clear: despite these complexities, all countries clearly want to remain at the table.”) எனக் கூறினார். இதன் பொருள், ஒப்பந்தத்தின் மீதான ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படாதிருந்தாலும், அனைத்து நாடுகளும் தீர்வை நோக்கி உரையாடலைத் தொடர விரும்புகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது .
பிளாஸ்டிக் மாசு எல்லைகளைத் தாண்டி கடலையும் காற்றையும் மாசுபடுத்தி, மனித உடலுக்குள் நுழைகிறது. ஆனால் தீர்வுகள்? ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள், நிதி ஆதரவு என அரசியல் எல்லைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன. பிளாஸ்டிக் மாசு, காலநிலை மாற்றத்தின் நிழல்; அது எல்லை நாடகங்களைப் பார்க்காது. பசுமை எதிர்காலம் எல்லை தெரியாத ஒரு கனவு. அதை நனவாக்க, எல்லை மீறிய ஒற்றுமை தேவை.
No comments:
Post a Comment