பயிற்சியாளராக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பள்ளிக்கு அழைக்கப்படும்போது, அவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் நான் செல்வேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் நிறைய கற்றுக் கொண்டு தான் திரும்புகிறேன் — மாணவர்களிடமிருந்து, ஆசிரியர்களிடமிருந்து, அல்லது அங்கு வேலை செய்பவர்களிடமிருந்தும். செக்யூரிட்டி முதல் செக்ரெட்டரி வரை, பழகும்பொழுது அவர்களின் ஏதாவது ஒரு செயல் நம்மை ஈர்க்கும். அந்த பாதிப்பு சில நாட்கள் நம்முடன் இருக்கும். பின்பு எப்போதாவது மெல்லிய நினைவுகளாய் தோன்றி மறையும்.
அப்படி சேலத்தில் ஒரு ரோட்டரி சங்கம் நடத்திய புதிய உறுப்பினர்களுக்கான ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டேன். பசி நேரத்தில் 40 நிமிடம் அனைவரையும் அங்கும் இங்கும் திரும்பாமல் அமர வைப்பது சவால் — ஆனால் சவாலே சமாளினு முடிச்சாச்சு.
நிகழ்ச்சியின் முடிவில் உறுப்பினர்கள் என்னிடம் வந்து கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். நானும் அந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் என்னிடம் வந்து “எனது பள்ளிக்கு நீங்கள் அவசியம் வர வேண்டும்” என்று தன்னுடைய விசிட்டிங் கார்டையும் என்னிடம் கொடுத்துவிட்டு, “நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன்” என்று கூறிச் சென்று விட்டார்.
ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், பலர் "உங்களை கண்டிப்பாக அழைக்கிறேன்" என்று சொல்வார்கள். ஆனால் ஊருக்குச் சென்ற பிறகு, அவர்களுடைய வேலைப்பளுவில் என் நினைவு இருக்காது. அப்படி என்னை நினைவில் வைத்திருக்கின்ற சிலர் தவறாமல் அவர்கள் ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து விடுவர்.
"பள்ளிக்கு உங்களை அழைக்கிறேன்" என்று கூறிய அந்த ரோட்டரி நண்பர், இரண்டு வாரங்கள் கழித்து ஒரு தேதியை குறிப்பிட்டு 9, 10, 11, 12 படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மோட்டிவேஷன் வேண்டும் என்று அழைத்திருந்தார்.
நான் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்ட உடனே கூகுளில் சென்று, அந்தப் பள்ளியின் புகைப்படம் மற்றும் அந்த நிகழ்ச்சி நடத்துகின்ற அரங்கத்தின் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது வழக்கம். அதே மாதிரி இந்தப் பள்ளியின் பெயரை தேடிப்பார்த்தேன். அது ஒரு சிறிய தனியார் பள்ளியாக இருந்தது.
அதன் பிறகு அதைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அந்த நாளும் வந்தது. பள்ளியின் தாளாளர் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை “எங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு அது கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது.
எதற்கு இத்தனை முறை அழைத்து கேட்கிறார்? ஒருமுறை இந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து விட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமது பள்ளிக்கு வந்து விடுவார் என்பது அவருக்கு தெரியுமே. பின் எதற்காக இப்படி கேட்கிறார் என்று புரியவில்லை.
பள்ளியின் நுழைவுவாசலை அடைந்ததும், ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவம் நடக்கும். நாம் காரிலே வந்தாலும் சரி, கோட் சூட் அணிந்து வந்தாலும் சரி, செக்யூரிட்டி எப்பொழுதும் முறைத்துக் கொண்டே தான் காருக்கு அருகில் வருவார். எந்தப் பள்ளியிலும் காரைப் பார்த்தவுடன் கேட்டை திறப்பதில்லை — அது பாதுகாப்புக்காக நல்ல விஷயம்தான்.
ஆனால் நம் மனதில் சிறப்பு விருந்தினராக வருகிறோம், வந்தவுடன் கேட் திறக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன நப்பாசை இருக்கும். ஆனால் அது நடக்காது. நடக்கவும் கூடாது.
பேசாம மரத்து நிழலை நோக்கி திருப்பிட்டேன். (செக்யூரிட்டி மைண்ட் வாய்ஸ்: “ஹ்ம்ம்ம்… அது சரி.”)
பள்ளி அலுவலகத்திற்குள் நுழைகிறேன். ஒரு கோவிலுக்குள் செல்வது போல ஒரு உணர்வு. நவராத்திரி கொலுவுக்காக பொம்மைகளை அடுக்கி இருந்தனர். பழம், தேங்காய், ஊதுபத்தி, மாலைகள், பூக்கள், மற்றும் சாம்பிராணி புகை என அவர்கள் சொல்லாமலேயே காலணிகளை வெளியே விட்டு விட்டு தாளாளர் அறையை நோக்கி நகர்ந்தேன்.
நுழையும் பொழுதே பள்ளி முதல்வர் அன்பாக வரவேற்று புன்சிரிப்புடன் “We are very much privileged to have you here, sir. Thanks for coming.” என்று உபசரித்து உடன் வந்தார். “First impression is the best impression.”
தாளாளர் எங்களை வரவேற்று காபி, பிஸ்கட் கொடுத்து, இந்த பள்ளி துவங்கிய வரலாறு, அதனுடைய வளர்ச்சி, கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தடுமாற்றம், பின்பு சமீபத்தில் இவரது தலைமையின் கீழ் பள்ளி வந்தது, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர இவருடைய உழைப்பு, அந்தப் போராட்டத்தில் சற்றும் தளராத மன உறுதி, மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தாலும் கல்வி வழங்கும் தரத்தின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளும் விதம் — என 15 நிமிட உரையாடலில் மலைக்க வைத்து விட்டார்.
ஓ… இதுக்குத்தான் நான் எங்கே வந்து கொண்டிருக்கிறேன் என்று அடிக்கடி அழைத்து கேட்டாரா? நல்லவேளை நான் குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன். இல்லையென்றால் அவர் என் மீது வைத்திருந்த மதிப்பீடு கொஞ்சம் குறைந்திருக்கும்.
நிகழ்ச்சி துவங்கியது. மிகச் சிறப்பான மாணவர்கள். அவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் அதே புத்துணர்ச்சியுடன் பயிற்சி எடுத்துவிட்டு வெளியே வரும் பொழுது, தாளாளர் "சரி, உணவுக்கு செல்லலாம், வாருங்கள்" என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.
இரண்டு நாள் முன்னரே நான் சைவமா, அசைவமா என்று கேட்டு தெரிந்து கொண்டார். அதனால் சைவம் தான் இருக்கும். அதுவும் பள்ளியிலேயே சமைத்த உணவு என்பதால் சூடாகவும் சுவையாகவும் இருக்கும் என்கின்ற ஆவலில் சென்று அமர்ந்தேன்.
உணவு பரிமாறும் பொழுது எனக்கு வைத்த சாதத்தின் நிறமும் தாளாளருக்கு வைத்த சாதத்தின் நிறமும் வேறாக இருந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் சாப்பிடத் துவங்கினேன். பின்பு எனக்கு வைத்த பொறியலும் அவருக்கு வைத்த பொறியலும் வேறாக இருந்தது. இதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை.
ஆனால் இதை எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பரிமாறிய பெண்ணிடம் தாளாளர், "ஏமா, அவருக்கும் அந்த பொரியல் கொஞ்சம் வையுங்க" என்றார். இதுதான் சமயம் என்று நான் கேட்டே விட்டேன் "இது என்னங்க சார் பொரியல்?"
"சார், இங்க ரொம்ப பிரமாதமாக சமைப்பார்கள், தெரியும். என் பையனும் விடுதியில் தங்கிப் படிக்கிறான். என் மகளும் சென்னையில் விடுதியில் இருக்கிறார். நானும் என் மனைவியுமே இல்லத்தில். நான் மதியம் பள்ளியிலே சாப்பிடுகிறேன் என்று சொன்னால், அவர்கள் தான் ஒருத்திக்கு மட்டும் என்ன சமைப்பது என்று ஒழுங்காக சாப்பிடுவதில்லை. அதனால் வேண்டுமென்றே 'எனக்கும் கொடு மதிய உணவை' என்று கேட்டு அவர்களை செய்ய வைத்து வாங்கி வந்து விடுவேன். அவர்கள் மதிய உணவை மறக்காமல் எடுத்துக் கொள்வார்கள். நான் இங்கே வந்து வீட்டு சாப்பாடு கொஞ்சம், பள்ளிக் கேண்டீன் சாப்பாடு கொஞ்சம் கலந்து சாப்பிட்டுக் கொள்வேன்."
"என்ன சார் பண்றது, வீட்டையும் பாக்கணும் இல்ல!"என்று சிரிப்புடன் சொல்லிமுடித்தார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துப் போனேன். "ஆஹா… எப்படி, ஒரு மனிதன்! பொது வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, தொழில், குடும்பம் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்!" என்று வியந்து போனேன்.
மனைவி மீது பிரியமாய் இருப்பவர்கள் பற்றித் தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் இப்படி ஒன்று இருப்பதை அன்றுதான் உணர்ந்தேன். நிச்சயம் இந்த பள்ளி மென்மேலும் வளர்ச்சியடையும். நல்ல தலைமையின் கீழ் இந்த பள்ளி இயங்குகிறது என்கிற எண்ணத்துடன் மகிழ்ச்சியுடன் விடை பெற்று வந்தேன்.
ஈரோட்டிற்குத் திரும்பி வரும் வழி நெடுக இவரது துபாய் கார்ப்பரேட் வாழ்க்கை, எப்படியாவது சொந்த ஊருக்கு திரும்ப வரவேண்டும் என்கிற எண்ணம், தற்சயலாகக் கல்விப்பணியில் நுழைந்த தருணம், மகன் மகளை வளர்க்கும் விதம், மனைவி மீது வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதை, பள்ளி ஆசிரியர்களை வழிநடத்தும் பண்பு என அனைத்தையும் அசை போட்டு கொண்டே வந்தேன்.
வீடு வந்து சேர்ந்ததும் அந்த நாளின் அயர்ச்சியைக் கொஞ்சம் திசைதிருப்ப தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன். மனைவி சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழியே வரும் கணவன் அங்கு கிடக்கும் அரிவாள்மனையை பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லும் காட்சி வந்தது. அதனுடன் "உனக்காக பொறந்தேனே எனதழகா..." என்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

No comments:
Post a Comment