ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026இல் முதல் பரிசு பெற்ற சிறுகதை
அவனது வானம் - எழுதியவர்: ரிஸ்வான்
அவன் தலையை நிமிர்த்தி தொலைந்து போன தனது வானத்தைத் தேடிக் கொண்டிருந்தான். வெறும் நீலநிறத்தை வானமாக அவன் மனது ஏற்றுக் கொள்வதே இல்லை. வரண்ட கந்தல் மேகங்களாவது இல்லையென்றால் வாழ்க்கையைத் தேடி அலையும் பறவைக் கூட்டமாமாவது, வழி தவறி விட்ட ஒரு பறவையாவது வானில் அவன் கண்ணில் படும் வரையில் அவன் தொலைந்து போன தனது வானத்தை தேடிக் கொண்டுதான் இருப்பான்.
ஏழை நாட்டில் அதிலும் ஏழையாகப் பிறந்தவன் எரித்திரியா(ஹபஷ் ) மண்ணில் பிறந்த அனாதை ஹபஷி.
அவன் வயிறு உணவுக்காகவும் தாகத்திற்கு ஏங்கும் பொழுது அவைகளைத் தேடி அலைவான். மற்றபடி
இந்த பூமியில் எதையும் எப்போதும் அக்கறையாக தேடியதில்லை, தேடிய எதுவும் அவனுக்குக்
கிடைத்ததுமில்லை.
அவன் பார்த்து மகிழும் அவனோடு திரியும் வானமும் வெப்ப பாலைவனமும் ஓட்டகங்களும் ஆடுகளும்தான் அவனது சிறிய உலகம். அவனது வானத்தை அவன் மிகவும் நேசித்தான். அவன் போகிற இடங்களுக்கெல்லாம் அதுவும் அவனுடன் முணுமுணுத்துக் கொண்டே வழித் துணைக்கு வருவதாகவும், நடக்கும் போது கூரையாகவும், படுத்து உறங்கும் போது போர்வையாகவும், பாதுகாப்புத் தருவதாக நினைத்துக் கொள்வான்.
சுலைமான் பதோவிக்கு ஒட்டகங்கள் ஆடுகள் போல் ஹபஸியும் ஒரு கால்நடை, விற்பதற்கும் அடித்து துன்புறுத்துவதற்கும். சுலைமான் பதோவி அரேபியாவின் பது இனத்தை சேர்ந்த காட்டு அரபி. அவனிடத்தில் முரட்டுமூர்க்க சுபாவத்தை தவிற வேறு எதுவும் இருப்பதில்லை. கிழவன் சுலைமானின் ஆடுகளையும், ஒட்டகங்களையும் பாலைவனத்தில் மேய்க்கும் பொறுப்பாளி அவன்தான்.
ஆடுகள் பாலைவனத்துத் தைம் புதர்களில் ஊசி இலைகளை முட்கள் குத்தாமல் லாவகமாக மேய்ந்து கொண்டிருந்தன. ஸம்ர் மரத்தின் கிளைகளில் நீண்டு காய்த்து தொங்கிக் கொண்டிருக்கும் காய்களையும் இலைகளையும் ஒட்டகங்கள் தங்களது தடித்த மஞ்சள்பூத்த பற்களால் கவ்விப் பிடித்து இழுத்து ஆவேசமாக வேகவேகமாகத் தின்று கொண்டிருந்தன.
வெப்பசலனக் காலத்து புழுக்கம் அவனது
தடித்த ஒட்டகத் தோலை உரித்து உப்பை தடவிக்கொண்டிருந்தது. வெப்பக் காலத்து புழுக்கத்தில்தான்
பேரிச்சைக் குலைகள் சிவந்து பழுக்கும் அறுவடைக்காலம்.
அவனது தோளில் இருந்து சரேலென்று சரிந்து இறங்கி தொங்கிக் கொண்டிருக்கும் தடித்து, அடர்ந்த நீண்ட ஜலபியா எனும் அங்கியில் வியர்வை உப்பு கிறுக்கிய வரி ஓவியங்கள் படிந்திருக்கும். அந்த அங்கி அவனுடனே பிறந்து அவனுடனே வளர்ந்தது போல் இருக்கும். தோளில் தொங்கி கொண்டிருந்த கர்பா எனும் தோல் பையை எடுத்து அதில் உள்ள தண்ணீரை சரித்து உலர்ந்து உப்பு பூத்துப்போன தனது உதடுகளை நனைத்துக் கொண்டான்..
அரேபிய மண்ணில் ‘பது’ இனத்தவர்தான் பழங்குடியினர், சஹாரா மண்ணுக்கு சொந்தக்காரர்கள். அவர்களின் வாழ்வாதாரமும் இனத்தொழிலும் செல்வமும் ஆடுகளும் ஓட்டகங்களும்தான். சுலைமான் கிழவன் ஒட்டகங்களையும், ஆடுகளையும் ‘மெஹர்’ ஆக (பெண்ணுக்கு ஆண் கொடுக்கும் வரதட்சிணை) கொடுத்து ஏற்கனவே இரண்டு பதுப்பெண்களை திருமணம் முடித்திருந்தான். சுலைமானுக்கு ஒட்டகங்களும் ஆடுகளும் பெண்களுக்கான பண்டமாற்று பொருட்கள்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அவன் தேடிக் கொண்டிருந்த வானம் அவனுக்கு தென்பட்டது. சில பறவைகள் உஸ் என்ற சப்தத்துடன் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. அவன் பறவைகளைப் பார்த்து மெல்லியதாக சிரித்தான். அவனது வானம் தொலைந்து போய் திரும்பக் கிடைத்த சந்தோஷமாக இருக்கலாம். மண்ணில் சாவகாசமாக உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருந்த ஒட்டகத்தின் மீது சாய்ந்து தனது தோளில் மாட்டியிருந்த தண்ணீர் உள்ள தோல்பை மீது லேசாக தட்டித் தட்டி தனது முரட்டுக் குரலால் பாட ஆரம்பித்தான்.
வறண்டுபோன எனது பூமி
தாய்ப்பாலுக்காக ஏங்கி அழும்
சப்தம் உனக்கு கேட்பதில்லையா
தாகத்தால் உப்பு பூத்த
நிராகரித்து விட்டு செல்கிறாய்
நாங்கள் மரணிக்கும் முன்
மழைத் தூறல்களில்
ஒரு துளியாவது எங்கள்மீது
தூவி விட்டுப் போ
வறண்டுப்போன
உயிர்களில் ஈரமான
புன்னகை மலர் ஒன்று பூக்கட்டும்”
வானத்தில் மேகங்களைப் பார்க்கும் போது பாடப்படும் எரித்ரியா நாட்டு கிராமிய பாடல் நினைவுக்கு வந்தது. கர்பாவை சாய்த்து சிறிது நீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு உதடுகளை நாவால் தடவிக் கொடுத்து ஈரமாக்கினான்.
அவன் எழுந்து தழைகளை அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்த ஒரு ஒட்டகத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அதன் முதுகில் இருந்த பருத்த திமிலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தனது வலதுகாலால் லேசாக வயிற்றில் தட்டினான். ஒட்டகம் எழுந்து நின்றது. எக்காளாமிடுவது போல் வாய்க்கு அருகில் கைகளைக் குவித்து வைத்து முகத்தை உயர்த்தி கட்டைக் குரலில் சப்தமிட்டான்.
தைம் முட்புதர்களில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளும் ஒட்டகங்களும் அவனைப் பின் தொடர்ந்தன. ஒட்டகக் குழுவினருக்கு வழிகாட்டும் குழு தலைவனாக தன்னை மனதுக்குள் நினைத்து நெஞ்சை நிமிர்த்தி சிரித்துக் கொண்டான்.
அவன் தலைநிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். வானம் அவன் போகும் இடமெல்லாம் அவனுடன் வந்து கொண்டிருந்தது. எப்பொழுதாவது பூக்கும் பாலைவனப் பூவைப்போல மனதுக்குள் ஏதோ சந்தோஷ ஈரம் கசிந்தது. அவன் தனது கூடாரத்தை நெருங்கும்போது சுலைமான் கிழவன் தனது வாகனத்தின் பின்புறம் இருந்த பெரிய தண்ணீர்த் தொட்டியில் இருந்து ஒட்டகங்கள் தண்ணீர் அருந்தும் தொட்டியில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தான். கிழவனைக் கண்டதும் ஹபஷி பயத்தில் ஓட்டகத்தின் மேலிருந்து கீழே குதித்து முழங்கால்களில் நின்றான்.
தூரத்தில் ஹபஷி ஒட்டகத்தின் மீது வருவதைக் கண்டு கோபத்தில் சுலைமான் தலையில் சுற்றிக் கட்டி இருந்த கருப்பு வடக் கயிற்றை கழற்றிக் கொண்டு அவனை அடிக்க ஓடினான்.
“வேசியின் மகனே” என்று கத்தியபடியே சுலைமான் கிழவன் ஹபஷியின் முகத்திலும் முதுகிலும்
வட்டால் ஆத்திரம் தீர மிருகத்தனமாக ஓங்கி ஓங்கி அடித்தான். ஹபஷியின் கன்னங்களும் உதடுகளும் கிழிந்து ரத்தம் கசிந்தது. மண்ணில் சுருண்டு கிடந்த ஹபஷியைக் காலால் எட்டி உதைத்தான்.
சுலைமான் கிழவன் ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் உணவுக்காக கொண்டு வந்த உலர்ந்து போன பழைய அரேபிய ரொட்டிகள் நிறைந்த மூட்டைகளை வாகனத்தின் பின்னாடி இருந்து நெட்டிக்கீழே தள்ளி விட்டு ஆத்திரத்துடன் விர்ரென்று மணல்மேடுகளில் புழுதி பறக்க வாகனத்தில் சென்று விட்டான் கோபத்துடன்.
மண்ணில் சுருண்டு கிடந்த ஹபஷி மல்லாந்து படுத்து தனது வானத்தை தேடினான். வானத்தில்
தேய்ந்து உடைந்த சின்ன நிலாத்துண்டும் நட்சத்திர மின்மினிகளும் முளைக்க ஆரம்பித்துக்
கொண்டிருந்தன அவனுக்காக.
“நான் துயரப்படும் போதெல்லாம் நீதான் ஒரு தாயைப் போல என்னை அரவணைத்து முத்தமிடுகிறாய் எனது வானமே” அவன் வலியை மறந்து லேசாக வானத்தைப் பார்த்து சிரித்தான்.
ஹபஷி மெதுவாக எழுந்து தனது கூடாரத்தினுள் சென்று படுத்துக் கொண்டு கூடாரத்தின் திறப்பின் வழியாக தெரியும் அவனது வானத்தை பார்த்துக் கொண்டே வலிகளை மறந்து மெதுவாகத் தூங்க முயற்சித்தான். நிலவும் நட்சத்திரங்களும் உலர்ந்த வெள்ளை மேகங்களுமாக அவனது வானம் தொலைந்து போகாமல் விடியும் வரை அவனுடனே தங்கி இருந்ததன. அவன் அமைதியாக உறங்கிப் போனான்.
மறுநாள் சுலைமான் கிழவன் திரும்பவும் வந்தான். ஹபஷி ஒருவேளை கூடாரத்தை விட்டு ஓடிப்போய் இருப்பானோ என்ற சந்தேகமாக இருக்கலாம். ஹபஷி உறங்கிக் கொண்டிருந்தான்.
“கழுதையே..இன்னுமா உறங்குகிறாய் நாயின் மகனே” என்று கத்திக் கொண்டே ஆத்திரத்துடன் காலல் எட்டி எட்டி உதைத்தான். ஹபஷி அரண்டு போய் எழுந்து நின்றான்.
ஒட்டகங்களும் ஆடுகளும் தண்ணீர்த் தொட்டியில் நீர் அருந்திக் கொண்டிருந்தன வழக்கமாக விடிவதற்கு முன் மந்தைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விடுவான். இரவு முழுவதும் வலியால் அடிக்கடி உறக்கம் கலைந்து போனதில் விடியலில் தூக்கம் கண்களை அப்பிக்கொண்டது. ஹபஷி என்றுமே தன் பொறுப்பில் உள்ள ஆடுகளையும் ஒட்டகங்களையும் பசியோடு இருக்க விட்டதில்லை.
சுலைமான் கிழவன் நன்றாகக் கொழுத்த செம்மறி ஆடுகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டான். ஹபஷி சுலைமான் ஒட்டகங்களுக்காக கொண்டு
வந்த உலர்ந்த அரேபிய ரொட்டித் துண்டு ஒன்றை எடுத்து தின்று விட்டு தண்ணீர்த் தொட்டியில் ஒட்டகங்களுடன் அவனும் வாயை வைத்து தண்ணீரை உறிஞ்சிக்
குடித்தான். வழக்கம்போல் மந்தையை மேய்ச்சலுக்கு
ஓட்டிச் சென்றான். பாலைவனத்து வெப்பக் காற்று
உரசி காயங்களுக்கு எரிச்சலூட்டியது.
”எனது வாழ்நாள் முழுக்க உங்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். .நான் மரணிக்கும் முன் மனிதர்களிடம் நிறைய பேச வேண்டும் என்கிற ஆசையுடன் வாழ்கிறேன். மனிதர்கள் என்னையும் ஒரு மனிதனாக மதித்து நான் பேசுவதை உங்களைப்போல் அமைதியாக அமர்ந்து கேட்க வேண்டும். புதினா தழைகள் மிதக்கும் சுலைமானி தேநீரை சிறிய கண்ணாடி கோப்பைகளில் ஊற்றி உறிஞ்சி குடித்துக் கொண்டே அவர்கள் என்னுடன் பேசி மகிழ வேண்டும் இடையிடையே நான் “ இஸ்மா அன குல்தளக்” (கேளுங்கள் உங்களிடம் நான் பேசுகிறேன்) என்று நான் இடை மறித்துப் பேச வேண்டும். எனது இடையூறுக்கு அவர்கள் மதிப்பு தந்து அவர்கள் பேசுவதை நிறுத்தி விட்டு எனது பேச்சிற்கு மரியாதை கொடுத்து கவனித்துக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த பூமியில் மனிதர்கள் நிலைக்கு நானும் உயர்ந்து விட்டதாக கருதி மகிழ்வேன்” என்று சொல்லி விட்டு ஹ ஹா என்று ஓட்டகங்களை பார்த்து சிரித்தான்.
அவன் நிமிர்ந்து தனது வானத்தை தேடினான். இப்பொழுதெல்லாம் ஒரு சிறு பறவையாவது வானத்தில் பறந்து சென்று அவனது வானத்தை தொலைந்து விடாமல் பார்த்துக் கொண்டது. மாலை நெருங்கியதும் ஒட்டகங்களையும் ஆடுகளையும் அழைத்துக் கொண்டு கூடாரத்தை நோக்கி நடந்தான். ஹபஷி தண்ணீர் தொட்டியில் நீர் பருக அவைகளை அழைத்து சென்றான்.
கூடாரத்தின் முன்பு சுலைமான் வாகனத்துடன் இன்னொரு வாகனமும் நின்று கொண்டிருந்தது. சற்றுத் தள்ளி நிற்கும் வாகனத்தில் ஒரு பெண் கருப்பு அங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். ஹபஷி ஒன்றும் புரியாமல் ஓட்டகங்களை தடவி கொடுத்தபடி சுலைமான் கிழவனை பார்த்துக் கொண்டிருந்தான்.
அயா ஒவ்வொன்றாக தொட்டுத் தடவிப் பார்த்து கொழுத்த ஐந்து ஓட்டகங்களையும் ஒன்பது ஆடுகளையும் அவள் வந்த வண்டியில் ஏற்றச் சொல்லிவிட்டு சுலைமான் கிழவனிடம் வந்து “உனது மஹரை எனது சகோதரன் முஹசின் சாட்சியாக ஏற்றுக் கொண்டேன் இந்த நிமிடம் முதல் எனது ஆண் துணையாக உன்னை ஏற்கிறேன்”. என்று சொல்லி விட்டு கிழவனின் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சுலைமான் பது ஹபஷியிடம் வந்து “இவள் எனது மூன்றாவது மனைவி அயா” என்று சொல்லிவிட்டு கிழவன் ஒட்டகத்தின் சாயலில் சிரித்தான்.
வண்டியில் இருந்த இறைச்சி உணவையும் பழங்களையும் எடுத்து ஹபஷியிடம் கொடுத்து விட்டு, ”மாமிச உணவு சாப்பிடு ஹபஷி நாயே எனது புது மனைவியின் வருகையால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றபடியே சுலைமான் கிழவன் தனது மூன்றாவது மனைவி அயாவுடன் புறப்பட்டு சென்றான். வண்டியின் பின்நோக்கு கண்ணாடி வழியாக அயா ஹபஷியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹபஷி கொஞ்சமாக உண்டுவிட்டு மீதமுள்ள உணவையும் பழங்களையும் ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்கும் கொடுத்தான்.
சில நாட்களுக்குப் பிறகு சுலைமான் கிழவனின் போக்குவரத்து குறைந்து போயிருந்தது. ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்கும் குடிதண்ணீர் தட்டுப்பாடு வந்தது. அயாவின் சகோதரன் முஹ்ஸின் சுலைமான் கிழவனின் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி விட்டு சென்றான்.
ஒரு நாள் அயா பெரிய ட்ரக் ஒன்றை கொண்டு வந்து நிறுத்தி ஒட்டகங்களையும் ஆடுகளையும் அதில் ஏற்றிக் கொண்டிருந்தாள். ஹபஷி ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவளது சகோதரன் முஹ்ஸின் உடன் இருந்தான்.
ஆட்டுச்சந்தையில் ஆடுகளும் ஒட்டகங்களும் ஏலத்தில் நல்ல விலை போயின. ரியால்களை கட்டாக எண்ணிக் கட்டிக்கொண்டாள்.
பழைய காலத்து அரேபிய வீடு. வீட்டின் முன் அடர்த்தியான இலைகளுடன் இலந்தை மரங்கள் இருந்தன. அயா சாவியைக் கொண்டு முன் கதவைத் திறந்தாள். முஹ்சின் வீட்டிற்குள் நுழைந்து திண்டின் மீது அமர்ந்து கொண்டான். ஹபஷி வெளியே நின்று கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் இருந்து கிழவன் பலமாக இருமிய படி அயாவிடம் ஏதோ சத்தமிட்டுக் கத்திக் கொண்டிருந்தான். கொஞ்சநேரம் கழித்து அயா ஹபஷியை உள்ளே அழைத்து சென்றாள். சுலைமான் பதோவி உடலுக்கு முடியாமல் கட்டிலில் படுத்து இருந்தான். படுக்கையில் கழிவுகளின் நாற்றம் எடுத்தது.
“ஹபஷி நாயே சீக்கிரம் சுலைமான் கிழவனை சுத்தம் செய்” என்று கத்தினாள் அயா.
“சுலைமான் கிழவனை பராமரிப்பதுதான் இனி உன்வேலை” என்று அதிகாரமாக சொல்லி விட்டு ஹபசியை சுர்ரென்று ஒரு பார்வையால் முறைத்து விட்டு முஹ்ஸினுடன் சென்று விட்டாள். மனிதர்களுடன் பேசுவதற்கும் வாழ்வதற்கும் இன்னொரு உலகம் கிடைத்து விட்டதாக ஹபஷி நினைத்து மகிழ்ந்து கொண்டான்.
அயாவின் பார்வை சுரீர் என்று இறங்கி அவனுக்குள் எதையோ தேடியது. நரம்புகளில் வெப்ப சலனக் காலத்து குமைச்சல். இப்பொழுதெல்லாம் ஹபஷி தனது வானத்தை தேடுவதில் அக்கறை எடுத்துகொள்வதில்லை. வானத்தின் நினைவு வரும்போதெல்லாம் அயாவின் கண்களின் சுரீர் என்ற மின்னல் வெளிச்சம் அவனது வானத்தை மறைத்து மூடிக்கொள்கிறது. இதுவரையில் அவன் உணராத உணர்வு. ஆதாம் ஏவாளைத் தேடவைத்த உணர்வாக அல்லது ஈரப்பாக இருக்கலாம்.
அயா அம்மாவின் வீட்டில் தங்குவதும் சுலைமான் கிழவனை வந்து பார்ப்பதுமாக இருந்தாள். அயா வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஹபஷி வீட்டிற்கு வெளியே இலந்தை மரநிழலில் வந்து அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பான்.
சுலைமான் கிழவனை சுத்தப்படுத்திப் படுக்கை விரிப்புகளை மாற்றும் பொழுது அயாவும் உடனிருப்பாள். ஹபசியின் மனதுக்குள் தீப்பிடிக்க ஆரம்பித்தது. அடிக்கடி அயாவும் இரவு நேரங்களில் சுலைமான் பதோவியின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தாள். ஹபசி இலந்தை மரத்தின் கீழே படுத்து கிடப்பான்.
சுலைமான் கிழவன் கட்டிலில் சாய்ந்து உட்காரும் நிலைக்குத் தேறினான். இப்பொழுதெல்லாம் அயா ஹபஷியை அதிகாரம் செய்வதில்லை. அவனைப் பார்த்து மெல்லியதாக சிரிக்க ஆரம்பித்தாள். அவன் மனதுக்குள் இதமாக பூக்கள் பூத்தன.
ஒருநாள் வழக்கம் போல் அயா அம்மா விட்டிலிருந்து வந்திருந்தாள். சுலைமான் பதோவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அயா மெதுவாக வெளியே வந்தாள். ஹபஷி முழங்காலுக்கு மேல் கைகளை கட்டிக் கொண்டு நிமிர்ந்த படியே இலந்தை மரத்தின் இல்லைகளுக்கு நடுவே கந்தல் கந்தலாக தெரிந்த வானத்தைப் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“வீட்டுக்குள் வா கோவேறு கழுதையே” என்று அயா ஹபஷியை செல்லமாக அழைத்தாள்.
சுலைமான் கிழவனுக்கு உதவி தேவையாக இருக்கும் என்று நினைத்து ஹபசி ஒன்றும் விளங்காமல் அயாவின் பின்னால் சென்றான். அயா அவனை உள்ளே அழைத்து சென்று கதவைத் தாழிட்டாள். திண்டில் சாய்ந்து கொண்டு ஹபஷியை அருகில் அமரும்படி சொன்னாள். ஹபஷி தயங்கி தயங்கி நின்றான். அயாவின் வாசனை அவனுக்குள் சென்று அவனை நிலைதடுமாற வைத்தது.
அவள் சிரித்தபடியே அவனை ஏளனமாக ஊடுருவிப் பார்த்தாள்.
“ம்ம்ம். எனது ஏழ்மையான கிராமத்தில் நல்ல உணவுகளை உண்ணவோ கண்ணால் பார்பதோ எளிதானதல்ல. அதனால் பிடித்த உணவு வகைகளின் பெயர்களை எங்கள் பெயர்களோடு இணைத்து இட்டு கட்டி அழைப்பார்கள்” அவன் தடுமாறித் தடுமாறி ஒவ்வொரு வார்த்தையாக சிரமப்பட்டு கொச்சையான உச்சரிப்பில் பேசினான்.
அயா தனது கருப்பு அங்கியைத் தளர்த்தினாள். முதல் முறையாக ஒரு பெண்ணின் மர்ம தேசம். துர்ஷி நிலை தடுமாறினான். துர்ஷியை இழுத்து தன்மீது சரித்துக் கொண்டாள்.
அயா பரவசத்தால் கண்களை மூடித்திறக்கும் போது, சுலைமான் பதோவி தட்டுத் தடுமாறி கையில் இருந்த ஊன்று கோலால் அயாவையும், துர்ஷியையும் வெறியோடு தாக்கினான். இருவருக்கும் தலையிலும் முகத்திலும் காயம் பட்டு ரத்தம் கசிந்தது. அயா ஆத்திரத்துடன் எழுந்து சுலைமான் பதோவியை நெட்டித் தள்ளினாள்.
சுலைமான் கிழவன் நிலைத் தடுமாறி கீழே விழுந்தான். துர்ஷி ஒன்றும் விளங்காமல் அசந்துபோய் நின்று கொண்டிருந்தான். அயா சுலைமான் பதோவியை உசுப்பினாள். சுலைமான் பதோவி இறந்து கிடந்தான். நிலைமையை உணர்ந்த அயா அரைகுறை ஆடையுடன் வாசலுக்கு வந்து சத்தம் போட்டு அலறினாள். ஹபஷி ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கூட்டம் கூடி நின்றது. சரசரவென்று நுழைந்த போலீஸ் அயாவையும்.துர்ஷியையும்
வண்டியில் ஏற்றிக் கொண்டு சைரன் அலறலுடன் பறந்தது.
அயா உலர்ந்து போன அவனது பூமியின் மீது முதன்முதலில் விழுந்த சிறுபனித்துளி. துர்ஷி மறுப்பு இல்லாமல் குற்றத்தை ஏற்றுக் கொண்டான்.
ஃகைசுமா பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே கூட்டம் சேர்ந்தது. பின்பக்கம் கைகள் கட்டப்பட்டு கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் போலீசார் துர்ஷியை கைபிடித்து அழைத்து வந்து நான்கு சாலைகள் கூடும் இடத்தின் நடுவில் முழங்கால் இட்டு அமரச்செய்தனர்.
“துர்ஷி எனப்படும் ஹபஸ் நாட்டை சேர்ந்த இவன் சுலைமான் பதோவியின் மனைவியுடன் வன்முறை உறவு கொண்டதாலும் தடுக்க வந்த பதோவியை உயிர் சேதம் செய்ததாலும் இவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது.” என்று மெகா போனில் அறிவிப்பு செய்தனர்.
கையில் நீண்ட உறைவாளுடன் இருந்த அரபி ஒருவன் உரையிலிருந்து வாளை உருவினான். ஒருவன் தூர்ஷியின் அருகில் சென்று அவனது தலையைக் குனிய வைத்து வெட்டுவதற்குத் தோதாக கழுத்துக்கு கீழே துர்ஷியின் ஆடையை முதுகு தெரியும் வரை சுருட்டி வைத்தான்.
துர்ஷி “உங்களிடம்தான் பேசுகிறேன் சகோதரர்களே கேளுங்கள்” என்று சத்தமிட்டுக் கத்தினான்.
கச்சக் எனும் சத்தத்துடன் கழுத்து வெட்டப்பட்ட உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு அடிக்க மண்ணில் சாய்ந்தான் துர்ஷி எனும் ஹபஷி.
கடைசி நேரத்தில் ஹபஷி மனிதர்களிடம் பேச வேண்டும் என்கிற ஆசையில் அழைத்தானா அல்லது “எனது கண்களை திறந்து விடுங்கள்.மரணத்திற்கு முன் எனது வானத்தை தேட வேண்டும் “ என்று சொல்ல நினைத்திருந்தானா..
துர்ஷிக்காக வானத்தை நிமிர்ந்துப் பார்த்தேன். அது தொலைந்து போயிருந்தது.

No comments:
Post a Comment