தன்னாசி டீ'யின் இரண்டாவது மடக்கை உறிஞ்சவும் கழுதை போஸ்டரை கடித்து இழுக்கவும் சரியாக இருந்தது. டீயோடு கையில் இருந்த டம்ளரை வலது கையில் பிடித்துக்கொண்டே 'ஆய்...ஆய்...' என சத்தம் போட்டுக்கொண்டே சைக்கிள் அருகே ஓடினார். ஓடும் போது கைக்கு குச்சி போன்று ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என தேடினார். எதுவும் கிடைக்கவில்லை. கழுதையின் அருகே சென்று வெறும் கையையே குச்சி போல் பாவித்து ஓங்கி ஓங்கி விரட்டினார். கழுதை, தன்னாசியை கண்டும் காணததுமாக மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது. கழுதையை பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் தன்னாசி டீயை உறிஞ்சிக்கொண்டே கழுதையை பார்த்துக்கொண்டிருந்தார்.
தன்னாசி 15 வயதில் முருகன் தியேட்டரில் வேலைக்குச் சேர்ந்தார். தியேட்டரில் படம் மாற்றினால் சுற்று வட்டாரங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டுவது தான் தன்னாசியின் முக்கிய பணி. அதிகாலை 4 மணிக்கெல்லாம் பக்கெட்டில் பசையை ஊற்றி சைக்கிள் கேரியரில் வைத்து போஸ்டர்களை தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவார். போஸ்டர் ஒட்டிய பின் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது, லேட்டாக வருபவர்களுக்கு சீட் தேட டார்ச் அடிப்பது போன்ற சிறு சிறு வேலைகளை செய்வார். மற்ற தியேட்டர்களை போல முருகன் தியேட்டரும் மூடு விழா கண்டதால் வெவ்வேறு வேலைகளுக்கு சென்று பார்த்தார். 30 வருடங்களாக மைதாவில் காய்ச்சிய பசையுடனும் போஸ்டர் பேப்பர்களுடனுமே இருந்தவர். அவற்றின் வாசனை அவருக்கு ஒரு வித போதையை தந்தது என்றும் கூட வைத்துக்கொள்ளலாம். தன்னாசியால் மற்ற வேலைகளை செய்ய முடியவில்லை எனினும் வயிற்று பிழைப்புக்காக எதோ கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்தார்.
இப்போது தன்னாசிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் என்றே சொல்லலாம். தமிழகத்தின் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் இறந்த பிறகு நிறைய அரசியல் கட்சிகள் தோன்றின. ஒரே கட்சிக்குள் நிறைய அணிகள் தோன்றின. அந்த கட்சிகளும், அணிகளும் அடிக்கடி எதாவது போஸ்டர் அடித்துக்கொண்டே இருந்தன. போஸ்டர் என்றால் கட்சி பாகுபாடு இன்றி அனைவரது நினைவுக்கும் வருபவர் தன்னாசி தான். எனவே எந்த கட்சி அல்லது அணி போஸ்டர் அடித்தாலும் அவற்றை ஊர் முழுக்க ஒட்டும் பொறுப்பு தன்னாசியிடம் தான் வரும். ஆரம்பத்தில் ஆர்வ கோளாறில் அந்தந்த அணிகளை சார்ந்தவர்களே போஸ்டர்களை ஒட்டிக்கொண்டு இருந்தனர். பின் போஸ்டர் ஓட்டுவதால் தங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என நினைத்தார்களோ என்னவோ தன்னாசியிடமே போஸ்டர் ஒட்டும் வேலையை கொடுத்து விட்டார்கள்.
இன்று ஒட்டுவதற்காக எடுத்து வந்திருக்கும் போஸ்டர் கூட அடுத்த வாரம் ஆரம்பிக்கப்போகும் ஒரு புதிய கட்சியின் போஸ்டர்கள் தான். காலை நான்கு மணிக்கு ஆரம்பித்தவர் ஏழு மணி வரை ஒட்டிவிட்டு தேநீர் இடைவெளிக்காக டீ கடைக்கு வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாகவே போஸ்டர் ஒட்டும் வேலையை காலை நான்கு மணிக்கு ஆரம்பித்து எட்டு மணிக்குள் முடித்து விட்டு ஒன்பது மணிக்கெல்லாம் பந்தல் போடுவது, லைட் கட்டுவது, பெயிண்ட் அடிப்பது என வேறு வேலைகளுக்குச் சென்று விடுகிறார். இப்படி ஒருவாரமாக தன்னாசி அரக்கபரக்க வேலைக்கு செல்ல காரணம் உள்ளது.
தன்னாசி உயிருக்கு உயிராக நேசிக்கும் தன் ஒரே மகள் ரம்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை சேகரோடு திருமண ஏற்பாடு செய்து இருந்தார். தன் மகளின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மாப்பிள்ளை வீட்டார் கூறியபடி பத்து பவுன் நகையும், சீர் வரிசையுமாக எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே தன்னாசியின் குறிக்கோள். அதற்காக எந்த நேரத்திலும், யார் என்ன வேலை சொன்னாலும் செய்யக் கூடிய நிலையில் தன்னாசி இருந்தார்.
ஆனால் பிழைகள் நிறைந்த தன் வாழ்க்கையை நினைத்து, தன்னாசி மிகுந்த கவலையில் அவ்வப்பொழுது ஆழ்ந்து விடுவது உண்டு. குடிப்பழக்கத்தால் பணத்தை சேமிக்க முடியாமல், மனைவியை அடித்து வேதனைப்படுத்தியதை நினைத்து, இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவரை அவரே நொந்து கொள்வார். “30 வருஷமா வேலை செய்கிறேன். மதுவுக்கு அடிமையாகி சில வருஷம் சம்பாதிச்ச பணம் எல்லாம வீணாக, திருந்திய பின்பும் வேலை சரியாக கிடைக்கலையே!" என்ற எண்ணம் அவரின் மனதை வாட்டவே செய்தது.
தன்னாசியின் வாழ்க்கையை திசை திருப்பியவள் – அவரின் அன்பு மகள் ரம்யா. ரம்யா பிறந்த பிறகே தன்னாசி கொஞ்சம், கொஞ்சமாக குடியை விட்டு விலகினார். மகளின் சிரிப்பு, தன்னாசியை விட்டு விலகாத அவளின் நெருக்கமான பாசம், நேசம் அனைத்தும் அவரை மெதுவாக மாற்றியது. தன்னாசியின் மனைவி சித்ரா மறைந்தபின் ரம்யா மட்டுமே வாழ்க்கையின் மிக முக்கியத்துவம் நிறைந்தவளாக மாறி இருந்தாள்.
ரம்யா அரசு பள்ளியில் படித்து, தன் முயற்சியால் எம்.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடித்து இருந்தாள். ஒரு வருடமாக மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஒரு பெண்ணாக, தன் அப்பாவை வாழ்வில் திருத்திய பெருமை அவளுக்கே உரித்தானது.
தன்னாசி தன் பிள்ளை பெரியவள் ஆக, ஆக மறைந்த மனைவி சித்ராவை நினைத்து அவரை அவரே சபித்துக் கொள்வார். அவளிடம் செய்த தவறுகள், கொடுத்த காயங்கள் ஒவ்வொன்றையும் தினமும் நினைத்துப் பார்த்துக் புலம்பிக் கொண்டே இருப்பார். 'நான் என் மனைவிக்கு இப்படி கொடுமையை செய்தேன், என் மகளுக்கு யாராவது இப்படிச் செய்தால்?' என்ற பயம் அவரை பாடாய்படுத்தியது. ரம்யா பத்து வயதாக இருக்கும்போதே அவள் அம்மா சித்ரா இறந்து விட, அப்போது இருந்தே அவளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தவர் தன்னாசிதான்.
ரம்யா, தன்னைக் கண் போல காத்துக்கொள்ளும் அப்பாவை விட்டு விலகவே மாட்டாள். கல்யாணம் பற்றி பேசும்போதும், "நான் கல்யாணம் ஆகி போய்ட்டா உங்களை யார் பார்த்துக்குவாங்க? நாம கடைசி வரை இப்படியே இருக்கலாம்ப்பா" என்று கூறுவாள்.
ஆனால் தன்னாசி “நான் எத்தனை நாளைக்கு உன்னை பார்த்துக்க முடியும்?. உன்ன நல்ல மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கக்கணும். உன் அம்மாவை நான் கஷ்டப்படுத்துன மாதிரி உன்னை யாரிடமும் அப்படிக் கஷ்டப்பட விட மாட்டேன்” என்று சொல்லி ஒவ்வொரு நாளும் சாமியைவேண்டிக் கொண்டே இருப்பார்.
தன்னாசியின் சிந்தனையெல்லாம் அவரின் மகளை குறித்தே இருக்க, அவரின் வாழ்நாளில் செய்த தவறுகளை குறித்து தன் மகளிடம் தினமும் பகிர்ந்து கொள்வார். மதுவின் பிடியில் சிக்கிய ஏராளமான குடும்பங்களைப் பார்த்து “நான் அதிலிருந்து தப்பிச்சேன். மகாலட்சுமி மாதிரி நீ என் பிள்ளையா பொறந்ததால் தான்” என சொல்லிக் கொண்டே இருப்பார். அதே பிழை மீண்டும் நிகழாமல் இருப்பதில் முழு கவனமாக இருந்தார்.
போஸ்டர் ஒட்டும் வேலையை முடித்த பின் வேறொரு கட்சியினர் கொடுத்திருந்த கொடிகள் கட்டும் வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு வந்து சேர்ந்தார் தன்னாசி.
சிறு வீடாக இருந்தாலும் நேர்த்தியாக வைத்திருப்பாள் ரம்யா. அவளின் பேச்சும், செயலும், உடை அணியும் விதமும் நேர்த்தியானதாகத்தான் இருக்கும். தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மகளுடன் சற்று நேரம் பேசினால் தான் தன்னாசிக்கு அந்த நாள் முழுமையடைந்தது போல் இருக்கும். இன்றும் வழக்கம் போல தனது புலம்பலை ஆரம்பித்த தன்னாசியை இடைமறித்து "நீங்கள் திருந்தி வந்துட்டீங்க. உங்கள மாதிரி இருக்கறவங்கள நீங்க மாத்திடனும்" என ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து கைபேசி அழைப்பு வர, எடுத்துப் பேசிய தன்னாசிக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.
அப்பாவின் முகம் மாறியதையும் அவருக்கு வியர்த்துக் கொட்டியதையும் கவனித்த ரம்யா, "அப்பா யார் போன்ல? என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள்.
"அது ஒன்னும் இல்லமா..மாப்பிள்ளை வீட்ல இருந்து..." என்று இழுத்தார்.
"என்ன சொன்னாங்க அப்பா?" என்று ரம்யா திரும்ப அழுத்தமாக கேட்டாள். எதையோ மூடி மறைப்பது போல.
"அது ஒன்னும் இல்லம்மா. நான் பார்த்துக்கிறேன். நீ போய் வேலையை பாரு" என்று எதையும் சொல்லாமல் தவிர்க்க முற்பட்டதை உணர்ந்த ரம்யா,
"இல்ல ஏதோ இருக்கு. என்னன்னு இப்பவே சொல்லுங்க" என்று அதட்டினாள்.
தன்னாசி எதுவும் பேசாமல் இருந்தார். மௌனம் காத்த தந்தையிடம்,
"இப்ப சொல்றீங்களா இல்லையா?" என கோபத்தோடு கேட்டாள்.
"சரி மா நான் சொல்றேன் ஆனா நீ..."
" முதல்ல சொல்லுங்கப்பா" என்றாள் ரம்யா.
"மாப்பிளையோட அப்பாவுக்கு திடீர்னு காலையில நெஞ்சுவலியாம்"
"அச்சச்சோ இப்ப எப்படி இருக்கார்? எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்?"
"இல்லம்மா அது சாதாரண நெஞ்சு வலி தானாம். வீட்டுக்கு வந்துட்டாங்களாம். ஆனா 'கல்யாணம் இப்ப வேண்டாம்' அப்படின்னு சொல்றாங்கம்மா"
"இப்ப வேண்டாமா..இல்ல இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்றாங்களா?"
"எனக்கும் அதுதாம்மா ஒன்னும் புரியல"
"நம்ம நேர்ல போய் பார்த்து பேசிட்டு வருவோம்ப்பா"
"நீ வர வேண்டாம்மா. நான் காலைல போய் பார்த்து பேசிட்டு வரேன்"
"இல்லப்பா. நான் உங்கள தனியா அனுப்ப தயாரா இல்லை. நானும் வரேன். இப்பவே போகலாம் வாங்க"
என்ன செய்வதென்று புரியாத குழப்பத்துடன் ரம்யாவுடன் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றார் தன்னாசி.
வீட்டு வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து யூ டியூப் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த சம்பந்தி இவர்கள் வரவை எதிர்பார்க்கவில்லை. இவர்களை பார்த்ததும் யோசனை கலந்த முகத்தோடு தனது மனைவியை அழைத்தார்.
"ஓ நீங்களா..அதான் நான் போன்ல சொல்ல வேண்டியதை சொல்லிட்டேனே" என்றார் சம்மந்தியம்மா. உடனே ரம்யா அப்பாவை கோபத்தோடு பார்த்துவிட்டு "சரி தாங்க..நாங்க சொல்ல வேண்டியதை சொல்லிரனும் இல்லையா..இங்க பாருங்க..நேத்து துணி தைக்கும் போது என் கையில ஊசி குத்திருச்சு. அதனால எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் இதை சகுன தடையா நினைக்கிறேன். அடுத்தது பெண் வீட்டு காச வச்சு பொழப்பு நடத்த நினைக்கிற உங்க குடும்பத்துல நான் வாழ விரும்பல. எவன் ஒருத்தன் அவன் உழைப்பை நம்பி 'ரெண்டு பேரும் உழைச்சு முன்னேறலாம்' அப்படின்னு நினைக்கிறவரை , பெரியவங்க சொன்னா தலையாட்டனுங்குற தேவை இல்லாம பகுத்தறிவோட நடந்துக்கிற ஆம்பளைய நான் தேடிக்கிட்டு இருக்கேன். அப்படி ஒருத்தரை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். அதனால எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்".
மாப்பிள்ளை வீட்டார் எதுவும் பேசாமல் அமைதி காக்க ரம்யா தொடர்ந்தாள்.
"நீங்க உங்க பையன வேற எங்காவது 20 பவுனுக்கோ, இல்ல 30 பவுனுக்கோ, இல்ல ரொக்கத்துக்கோ, இல்ல ஒரு புது பைக்குக்கோ, ஒரு காருக்கோ விக்கிறதுக்கு முயற்சி செய்யுங்க. நான் பொருள் இல்ல. என்ன வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது".
இப்படி கட கட கடவென பேசி முடித்தவளை கண்கள் விரிய விரிய பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தி வீட்டு அம்மா 'நல்லவேளை. இப்படி வாய் பேசுறவ என் வீட்டுக்கு வரல' என்று ஏதோ சாதித்ததாய் நினைத்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டு வீட்டில் நுழைந்தார்.
"வாங்கப்பா போகலாம்" என்று தன் தந்தையை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள் ரம்யா.
கல்யாணம் நின்று போனதை நினைத்து ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் தன் மகள் அவளுக்காக அவளே பேசியதை நினைத்து பெருமிதத்தோடு அவள் கையைப் பிடித்து தன்னாசி நடக்கத் தொடங்கினார். தெரு முனையில் தன்னாசி ஒட்டிய போஸ்டரையே பார்த்துக்கொண்டு நின்றது ஒரு கழுதை.
(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் மூர்த்தி, கௌசல்யா ஞானேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

No comments:
Post a Comment