ஐந்து விரல்கள் - ரிதன்யா ஷங்கர்

கதையின் தலைப்பு "ஐந்து விரல்கள்" என வைக்கக் காரணம், நம் வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திப்போம். சிலர் நல்ல குணத்துடன் இருப்பார்கள்; சிலர் நல்லதும் கெட்டதும் கலந்திருப்பார்கள்; இன்னும் சிலர் முழுவதுமாகத் தீய குணத்துடன் இருப்பார்கள். சிலரோ தங்களுக்குத் தேவையானவர்களிடம் மட்டும் நல்லவர்களாகவும், மற்றவர்களிடம் தீயவர்களாகவும் நடந்துகொள்வார்கள்.

இந்த "தேவையானவர்கள்" யார் என்று பார்த்தால், அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போடுபவர்கள். உண்மையைச் சொல்லி, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல நினைப்பவர்கள் அவர்களுக்குத் தேவையில்லாதவர்களாகி விடுகிறார்கள்.

நான் சில மாணவர்களிடம் இப்படிப்பட்ட குணங்களைக் கண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி ஒரு கதை மூலம் பார்ப்போம்.

கதைக்குள் செல்வதற்கு முன் தேவதைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். தேவதைகள் வானத்தில் இருந்து வருவார்கள், மாயாஜாலம் செய்வார்கள் என்று பல கற்பனைகள் உண்டு. ஆனால் உண்மையில் தேவதைகள் நம்முடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, ஆசிரியர்களே! ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கத் துடிக்கும் அவர்களின் அன்பு தூய்மையானது.

ஆனால் இந்தக் கதையில் வரும் சில மாணவர்கள், ஆசிரியர்களின் அன்பையும் அவர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு நண்பர் கூட்டத்தை அமைத்துக்கொண்டு, சரி எது தவறு எது என்று சுட்டிக்காட்டக்கூடத் தெரியாமல், எதற்கெடுத்தாலும் ஜால்ரா போடுவார்கள். ஆசிரியரை ஏமாற்றுவதாக நினைத்து, தங்களையே ஏமாற்றிக்கொண்டு, வாழ்க்கையில் உருப்படாமல் போனவர்களே அதிகம். 



மனோஜ் என்றொரு மாணவன் இருந்தான். அவனது பெற்றோர் நன்கு படித்தவர்கள். அதனால் சிறு வயதிலிருந்து பள்ளி முடியும் வரை அவன் ஒரே பள்ளியில்தான் படித்தான். ஐந்தாம் வகுப்பு வரை நல்ல நண்பர்களுடன் பழகி, நல்ல குணத்துடன் நன்கு படித்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆறாம் வகுப்பு வரும்போது, அவனது நண்பர்கள் அதிகக் கட்டணம் காரணமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள்.

மனோஜ் ஆறாம் வகுப்பிற்குச் சென்றான். அங்கு அனைவரும் புது நண்பர்கள். யாருடன் சேர்வது என்று தெரியாமல் பயத்துடன் எப்போதும் முதல் வரிசையில் அமரும் மனோஜ், அன்று கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அங்கு ஏற்கெனவே மூன்று மாணவர்கள் வேறு பள்ளியிலிருந்து குழுவாக வந்திருந்தனர். மனோஜைத் தனியாகப் பார்த்த அந்த மூவரும், "இவன் தனியாக இருக்கிறான். இவனை நம்முடன் சேர்த்துக்கொண்டால் நால்வர் ஆவோம்" என்று நினைத்து, அவனைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள்.

ஆனால் மனோஜுக்கு ஆரம்பத்திலிருந்தே அவர்கள் மீது ஒரு பதற்றம் இருந்தது. 'இவர்கள் நல்ல நண்பர்கள்தானா?' என்று அவனுக்குள் சந்தேகம் எழுந்தது. இருப்பினும் அவர்களுடன் சேர்ந்துவிட்டான்.

அந்த மூவரும் எல்லா ஆசிரியர்களைப் பற்றியும் கேலி கிண்டல் செய்தார்கள். இதைப் பார்த்த மனோஜ், "ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "நீ உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டாய். இப்படிப் பேசினால்தான் மாஸ். அப்போதுதான் எல்லாரும் நம்மை மதிப்பார்கள்" என்று கூறினார்கள்.

முதலில் அவர்களின் கேலி கிண்டலுக்கு மயங்காமல் இருந்த மனோஜ், ஒரு கட்டத்திற்கு மேல் சிரிக்க ஆரம்பித்தான். அதுமட்டுமல்ல, நல்ல மதிப்பெண் வாங்கிக்கொண்டிருந்த அவன், படிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டான். படிக்காமல் இருந்தால்தான் சக மாணவர்களிடையே கெத்தாக இருக்க முடியும் என்று அந்த மூன்று நண்பர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டான்.

பள்ளி ஒரு கோவில் போன்றது; ஆசிரியர்கள் கடவுளைப் போன்றவர்கள். மனிதர்கள் தவறு செய்யும்போது கடவுள் சும்மா இருப்பாரா? அதேபோல் மனோஜின் வகுப்பு ஆசிரியையான சுவாதி, அவன் குறைந்த மதிப்பெண் எடுப்பதைக் கண்டார்.

மனோஜ் நன்கு படிக்கும் மாணவன் என்பது அவருக்குத் தெரியும். எனவே மனோஜை அழைத்து, "ஏன் குறைந்த மதிப்பெண் வாங்குகிறாய்?" என்று கேட்டார். மனோஜ் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். "இனிமேல் நன்கு படிப்பேன்" என்று சொல்லிவிட்டு, தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

அவன் மனதுக்குள் ஒரு போராட்டத்துடன் அமர்ந்திருந்தபோது, திடீரென ஒரு புது மாணவன் அவர்களின் வகுப்புக்கு வந்தான். அவன், மனோஜின் மூன்று நண்பர்களின் நெருங்கிய நண்பன். அந்த மூவரும் அவனை உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.

அந்தப் புது மாணவன் வந்த பிறகு, மனோஜிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். மனோஜே அவர்களிடம் சென்று, "ஏன் என்னுடன் பேச மாட்டீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள் சிரித்துக்கொண்டே, "நாங்கள் ஒற்றைப்படை நண்பர் கூட்டத்தை வைத்திருக்கிறோம். ஒருவர் இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து உன்னைச் சேர்த்துக்கொண்டோம்" என்று கூறினர்.

மனோஜின் மனம் உடைந்து போனது. என்ன செய்வது என்று தெரியாமல் நடந்ததை அவன் பெற்றோரிடம் கூறினான். அவர்கள் கோபப்படாமல், "மனோஜ் செல்லமே, வாழ்க்கையில் தெரியாமல் தவறு செய்வது பொதுவானதுதான். நீ இதை உணர்ந்ததே போதும். இனிமேல் இந்தத் தவறைச் செய்யாமல் நன்கு படி" என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட மனோஜ் தனது தவறை உணர்ந்து, மனம் திருந்தி நன்கு படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றான்.

அன்று அவன் ஒரு முடிவை எடுத்தான்:
"நண்பர்களுடன் சேர்ந்தால் நல்ல நண்பர்களுடன் சேர வேண்டும். இல்லையென்றால் தனியாகவே இருக்கலாம்."

ஆம், அதுதான் உண்மை. நம் கைகளில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. அதில்:
முதல் விரல் – அம்மா,
இரண்டாவது – அப்பா,
மூன்றாவது – ஆசிரியர்,
நான்காவது – கடவுள்,
ஐந்தாவது – நண்பர்கள்.

இவர்கள் ஐந்துபேரும் நம் வாழ்வில் முக்கியமானவர்கள்.

கடவுள் நம் வேலையைச் சுலபமாக்கிவிட்டார். தாய், தந்தை, ஆசிரியர், கடவுள் ஆகியோரை நாம் எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால், ஐந்தாவது விரலான நட்பை நாம் தான் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

மனோஜ் முதலில் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்தான். பிறகு அதை உணர்ந்து, வாழ்க்கையின் லட்சியப் பாதையில் செல்லத் தொடங்கினான். ஆனால் அந்த மூன்று மாணவர்களோ தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு, முன்னேறாமல் போயினர்.

2 comments: